Showing posts with label எழுத்தாளர்கள். Show all posts
Showing posts with label எழுத்தாளர்கள். Show all posts

Thursday, June 23, 2022

பெங்களூர் இரவிச்சந்திரன் சிறுகதைகள் - மீள்பிரசுரம் - முன்னுரை


பெங்களூர் இரவிச்சந்திரனின் சிறுகதைகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு தொகுக்ககப்பட்டு ஒரு புதிய பதிப்பாக வெளிவந்திருக்கிறது. அந்த நூலுக்கு நான் எழுதிய முன்னுரை இது.

oOo


நண்பர்களே….

எழுத்தாளர் இரவிச்சந்திரனை அறிந்து கொள்ளுங்கள். பெங்களூர் இரவிச்சந்திரன் என்றால், எண்பதுகளில் இலக்கியம் வாசித்த அன்பர்கள் சிலருக்கு சட்டென்று ஞாபகம் வரக்கூடும். அவர்களின் நினைவுகளில் இரவிச்சந்திரனின் பெயர் இன்னமும் கூட மங்காமல் பசுமையாக இருக்கக்கூடும்.

மற்றபடி தமிழ் நவீன இலக்கிய எழுத்தாளர்களின் வரிசையில், காலத்தில் புதைந்து போன, அவசியம் மீட்டெடுத்தே ஆக வேண்டிய, சமகால வாசகர்களால் அறிந்து கொள்ளப்பட வேண்டிய ஏராளமான நல்ல எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் இரவிச்சந்திரன் முக்கியமானவர். ‘மிடில் சினிமா’ மாதிரி, வெகுசன எழுத்தின் சுவாரசியமும் இலக்கியத்தின் மெல்லிய ஆர்வமும் கொண்ட வசீகரமான கலவைதான் இரவிச்சந்திரனின் எழுத்து

எழுத்தாளர் சுஜாதாவின் பாதிப்பால் எழுத வந்த இளம் எழுத்தாளர்கள், தமிழ்நாட்டில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேராவது இருப்பார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோனோர், சுஜாதாவின் எழுத்துப் பாணியை தேசலாக நகலெடுக்க முயன்று அந்த ஸ்டைலில் சிக்கி தேங்கி மறைந்து போயிருப்பார்கள். தனக்குப் பிடித்த ஆதர்சமான எழுத்தாளனை பின்பற்றுவது வேறு; அவனை நகலெடுக்க முயன்று தொலைந்து போவது வேறு. இந்த நோக்கில் பார்த்தால் சுஜாதாவின் பாதிப்பால் எழுத வந்தாலும் தனக்கென்று ஒரு பிரத்யேகமான பாதையை கண்டுபிடித்து அமைத்துக் கொண்டவர் இரவிச்சந்திரன். சுஜாதாவின் ஏறத்தாழ அதே துள்ளலான நடையும், பாய்ச்சலும், வேகமும், சுவாரசியமும் இருந்தாலும் இரவிச்சந்திரனின் எழுத்து வேறு விதமான ருசியைத் தரக்கூடியது.

சுஜாதாவின் நாவல்களில் வரும் ‘கணேஷ் மற்றும் வசந்த்’ பாத்திரங்களைப் பற்றி நமக்குத் தெரியும். சுஜாதாவிற்குள் ஒளிந்துள்ள இரண்டு எதிர்முனை ஆளுமைகளின் பிரதிபலிப்பு அது. கணேஷ் புத்திசாலி; விவேகமானவர். கணேஷிற்கு நிகராக வசந்த்தும் புத்திசாலிதான். ஆனால் தனக்கேயுரிய குறும்புகளைக் கொண்டவன். “டேய் சும்மா இர்ரா’ என்று கணேஷால் அவ்வப்போது அதட்டப்படும் அளவிற்கு பெண்களைக் கிண்டலடிப்பவன்; பின்தொடர்பவன். வசந்த் என்கிற இந்தப் புனைவுப்பாத்திரம் ஒருவேளை சிறுகதை எழுத வந்தால் அது இரவிச்சந்திரனைப் போல் இருக்குமோ என்று எனக்குள் தோன்றுவதுண்டு. அந்த அளவிற்கு துள்ளலான நகைச்சுவை இவரது எழுத்தில் உத்தரவாதமாக இருக்கும்.

oOo

இரவிச்சந்திரனின் ஊர் மல்லேஸ்வரம். தாய்மொழி தெலுங்கு. என்றாலும் பல தமிழர்களே வெட்கப்படும் அளவிற்கு இந்த மொழியை அத்தனை லாகவமாகப் பயன்படுத்தியவர். ‘தமிழை கற்றுத் தந்தது கவிஞர் புவியரசு’ என்று தன்னை கவிஞரின் மாணவனாக சொல்லிக் கொள்ளும் இரவிச்சந்திரன், ‘தமிழைப் பழக்கியது சுஜாதா’ என்கிறார். ‘இந்தத் தொகுப்பு மட்டுமல்ல, இனி வரவிருக்கும் அனைத்துத் தொகுப்புகளும் சுஜாதாவிற்கு சமர்ப்பணம்” என்று ஒரு முன்னுரையில் விசுவாசமாக எழுதுகிறார். அத்தனை உயர்வான நட்பையும் மரியாதையையும் சுஜாதா மீது வைத்திருக்கிறார்.

நானறிந்த வரை, இதுவரை வெளிவந்திருக்கும் இரவிச்சந்திரனின் சிறுகதைத் தொகுப்புகள் நான்கு. இந்திராகாந்தியின் இரண்டாவது முகம், சிந்து சமவெளி நாகரிகம், இந்திய பாஸ்போர்ட், இனி ஒரு விதி செய்வோம். இதில் முதல் இரண்டு தொகுப்புகளின் அனைத்துக் கதைகளையும் இந்த நூலில் நீங்கள் வாசிக்க முடியும். இது தவிர, ‘இன்று கொலை நாளை விலை’ என்றொரு நாவலையும் இரவிச்சந்திரன் எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது.

‘பிரபலம் தரும் போதைக்காகத்தான் எழுதுகிறேன். தமிழில் சிறுகதைகள், நாவல்கள் இன்னமும் குப்பையாகத்தான் இருக்கின்றன. அதற்கு என் எழுத்தே சாட்சி’ என்று தன்னைப் பற்றி இரவிச்சந்திரன் சுயபரிசீல நேர்மையுடன் சொல்லிக் கொள்கிறார். இன்னொரு பக்கம் அவரே ‘எதுவெல்லாம் இரண்டாம் முறை வாசிக்கத் தூண்டுகிறதோ, அவையெல்லாம் இலக்கியம்’ என்றும் சொல்கிறார். பிந்தைய அளவுகோலின்படி இரவிச்சந்திரனின் சில சிறுகதைகள் உன்னதமானவை என்று சொல்ல முடியும். எண்பதுகளில் எழுதப்பட்ட இந்தச் சிறுகதைகளை இன்றைய தேதியில் வாசித்தாலும் அத்தனை இளமையாகவும் புத்துணர்ச்சி தருவதாகவும் இருக்கிறது. வாசித்த பிறகு நீங்களும் என்னுடன் உடன்படுவீர்கள் என்கிற நம்பிக்கையுண்டு.

oOo

‘மத்தியதர வாழ்க்கையின் பிரச்சினைகளைப் பற்றி விதம் விதமாக எழுதிப் பார்க்கிறேன்’ என்று ஆசிரியர் சொல்லிக் கொண்டாலும், இந்த நூலில் உள்ள இரவிச்சந்திரனின் கதைகள் வெவ்வேறு வண்ணங்களில், விதங்களில், பாணிகளில் இருப்பது சுவாரசியமூட்டுவதாக இருக்கிறது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் பற்றிய பல்வேறு பிம்பங்களை நாம் அறிந்திருந்தாலும் சட்டென்று நினைவுக்கு வருவது ‘எமர்ஜென்சி’ என்கிற கசப்பான காலக்கட்டம்தான்.  என்றாலும் அந்த இரும்புப் பெண்மணிக்குள் பூ மாதிரி இருக்கிற இன்னொரு பிம்பம், ‘இந்திரா காந்தியின் இரண்டாவது முகம்’ என்கிற சிறுகதையில் சிறப்பாக பதிவாகியிருக்கிறது. கணவரை இழந்த ஒரு பெண், நாட்டின்  பிரதமரை சந்திக்கச் செல்லும் சூழலை மிகுந்த நம்பகத்தன்மையுடன் உருவாக்கியிருக்கிறார் இரவிச்சந்திரன். கதையின் இறுதி வரியை வாசிக்கும் போது உங்கள் மனதில் தன்னிச்சையான சலனமும் நெகிழ்வும் ஏற்படக்கூடும்.

ஒரு வளரிளம் சிறுவனின் சாகசங்கள், விடலைக் காதல்கள் என்கிற வகையில் சில சிறுகதைகள் சுமாராக பயணிக்கும் போது அதன் எதிர்முனையில் ‘சிந்து வெளி நாகரிகம்’ என்கிற கதை முற்றிலும் வேறு வகையிலான பின்னணியில் இயங்கி ஆச்சரியமூட்டுகிறது. ‘கோதை பிறந்த ஊர்’ என்பது இன்னொரு வசீகரமான கதை. ‘சந்திரலேகா’ நிச்சயம் பெண்ணியவாதிகளுக்கு ஆட்சேபம் ஏற்படுத்தக்கூடிய விவகாரமான கதை. அப்துல்ரகுமானின் புதுக்கவிதையுடன் துவங்கும் ‘சுயம்வரம்’ கதையில் நிச்சயம் ஒரு அட்டகாசமான மின்சாரம் இருக்கிறது.

தமிழ் ஈழப் பிரச்சினை என்பது எண்பதுகளில் கொதிநிலையுடன் இருந்த ஒரு துயரம். அந்தத் துயர ஆவேசத்தில் தமிழகத் தமிழர்களும் உணர்வுபூர்வமாக இணைந்திருந்தார்கள். இதன் ஆத்மார்த்தமான பிரதிபலிப்பை ‘காத்திருந்தார்கள்’ என்று ஒற்றை வார்த்தையுடன் துவங்கும் ‘சொந்தச் சகோதரர்கள்’ என்கிற கதையில் காண முடியும். ‘முற்றிலும் இந்திய அரசுக்குச் சொந்தமானது’ என்கிற கதையில் நாம் பலமுறை பழகியிருக்கும் ஒரு அழகான துரோகம் வெளிப்படுகிறது.

சுஜாதா சொன்னது மாதிரி இரவிச்சந்திரனிடம் அடுத்த வார்த்தையில் அனைத்தையும் சொல்லி விட வேண்டும் என்கிற துடிப்பும் பாய்ச்சலும் இருக்கிறது. இந்த மாயத்தை அவரது எழுத்தால் அநாயசமாக நிகழ்த்தி விட முடிகிறது. இதுவே இரவிச்சந்திரனின் ஆதாரமான பலம். இளம் எழுத்தாளர்களுக்கு அவசியப்படுவதும் கூட.

oOo

எனக்கு இரவிச்சந்திரன் அறிமுகம் ஆகியது, சுஜாதாவின் வாசகர் ஒருவரின் மூலம். சுஜாதாவைப் பற்றி அவரிடம் சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது ‘எனில் இரவிச்சந்திரனை வாசித்திருக்கிறீர்களா? உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்’ என்று இந்திய பாஸ்போர்ட் தொகுப்பை கையில் திணித்தார். வாசித்தேன். எனக்கு உடனே உடனே பிடித்து விட்டது. (இப்படி இரண்டு ‘உடனே’வை போடுவது இரவிச்சந்திரனின் ஸ்டைல்).  ‘இந்தப் பையனிடம் ஒரு ஸ்பார்க் இருக்கு’ என்று எங்கோ சுஜாதா குறிப்பிட்ட நினைவும் இருக்கிறது. சுஜாதா அடையாளம் காட்டிய பெரும்பாலோனோர் சோடை போனதில்லை. அதற்கான தடயத்தை இரவிச்சந்திரனிடம் அழுத்தமாக காண முடிகிறது.

2006-ம் ஆண்டு என் வலைப்பதிவில் இரவிச்சந்திரனைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகத்தை எழுதி, அவருடைய அற்புதமான சிறுகதையான ‘சமூகம் என்பது கலகக்காரர்கள் மட்டுமே’ என்கிற படைப்பை மெனக்கெட்டு தட்டச்சி இட்டேன். அதை அப்போது நூறு பேர் கவனித்திருந்தால் என் அதிர்ஷ்டம். (கவனிக்க, வாசித்திருந்தால் என்று எழுதவில்லை). பிறகு நினைவு வரும் போதெல்லாம் இவரைப் பற்றி இணையத்தில் எழுதிக் கொண்டிருப்பேன்.

இன்றைக்கும் கூட இணையத்தில் இவரைப் பற்றி தேடிப் பார்த்தால் சொற்பமான குறிப்புகளே கிடைக்கும். ஜீவானந்தன், ஆர்.பி.ராஜநாயஹம் உள்ளிட்ட சிலர்தான் இரவிச்சந்திரனைப் பற்றிய குறிப்புகளை ஆங்காங்கே எழுதி வைத்திருக்கிறார்கள். மற்றபடி தமிழ் கூறும் நல்லுலகம் இவரை ஒட்டுமொத்தமாக மறந்து போனதாகவே தோன்றுகிறது.  

க்ளப்ஹவுஸ் என்கிற App-ல் ‘சிறுகதை நேரம்’ என்கிற அறையில், செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான ஃபாத்திமா பாபு, தினமும் ஒரு சிறுகதையை வாசித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக இந்த இலக்கியப் பணியை அவர் செய்து வருகிறார்.  அந்த அறையில் ‘சமூகம் என்பது கலகக்காரர்கள் மட்டுமே’ சிறுகதையை பரிந்துரை செய்து வாசிக்க வைத்தேன். அதைப் பற்றிய கலந்துரையாடலும் பிறகு நடைபெற்றது. இப்படியாக இரவிச்சந்திரனை மீண்டும் சமீபத்தில் உயிர்பெற வைத்தேன்.

அதைத் தொடர்ந்து, ‘இரவிச்சந்திரனின் சிறுகதைகள் தொகுப்பாக வந்தால் நன்றாக இருக்கும்’ என்று சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு குறிப்பு எழுதி வைத்தேன். அது பதிப்பாளர் அசோக் சாய் ரமணா தம்புராஜின் கண்களில் பட்டது என்னுடைய அதிர்ஷ்டம். மளமளவென வேலைகள் ஆரம்பமாகின. என்ன செய்தாரோ, தெரியாது. மின்னல் வேகத்தில் செயல்பட்டு இரவிச்சந்திரனின் இரண்டு தொகுப்புகளை மீள்பிரசுரம் காண்பதற்கு ஏற்பாடு செய்து விட்டார். புதைந்து போயிருக்கும் நல்ல எழுத்துக்களை வெளிக்கொணர வேண்டும் என்கிற அவரின் தீராத ஆர்வம்தான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். அதற்காக அவருக்கு நன்றி. சிறப்பாக வடிவமைத்திருக்கும் நண்பர் பொன்.வாசுதேவனுக்கும் நன்றி.

oOo

‘என் புத்தகங்கள் நூறு வருஷம் வரை முக்கி முனகி தாக்குப் பிடிக்கும் என்பது என் கணிப்பு’ என்று ஒரு முன்னுரையில் எழுதியிருக்கிறார் இரவிச்சந்திரன். ஆனால் முப்பது வருடங்களை கடப்பதற்கு முன்பாகவே அவை மங்கிப் போய் விட்டன. சினிமாவை சுவாசிக்கும் தமிழ்நாடு போன்ற பிரதேசங்களில் இப்படி நடக்காவிட்டால்தான் அது ஆச்சரியம். இப்படி காலத்தில் புதைந்து போன எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் தமிழில் உள்ளார்கள். இரவிச்சந்திரனுக்கு அத்தகைய விபத்து நடக்காமல் ஜெய்ரிகி பதிப்பகம் காப்பாற்றியிருக்கிறது.

இந்தக் கதைகளை வாசியுங்கள். இரவிச்சந்திரனின் இதர எழுத்துக்களையும் தேடி வாசிக்க வேண்டும் என்கிற ஆவல் உங்களுக்குள் ஏற்படும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு. இந்தத் தொகுதியை வாசிக்கப் போகும் உங்களுக்கு என் நன்றியும் அன்பும்.

 
வெப்பம் தகிக்கும் சென்னையின் ஒரு மாலை

28 மே 2022                                                                                  

 சுரேஷ் கண்ணன்                





Monday, January 15, 2018

விட்டல் ராவ் நேர்காணல் - பேசும் புதிய சக்தி - ஜனவரி 2018 இதழ்


இந்த புத்தக கண்காட்சியில் ‘பேசும் புதிய சக்தி’ ஜனவரி 2018 இதழை எங்கு கண்டாலும் உடனே வாங்கி விடுங்கள். இயன்றால் அதற்கு சந்தாவும் கட்டி விடுங்கள். காரணமாகத்தான் சொல்கிறேன்.

ஜனவரி 2018 இதழில் எழுத்தாளர், ஓவியர் என்று பன்முகம் கொண்ட விட்டல்ராவின் அற்புதமான நேர்காணல் வெளியாகியுள்ளது. மிகவும் ரசித்துப் படித்தேன்.

விட்டல்ராவின் இளமைக்கால நினைவுகள், அகிலனுக்கு ஞானபீட விருது கிடைத்த அரசியல் அவலம், விருது மேடையில் கநாசு அகிலனை எதிர்கொண்ட விதம், காலவெளி நாவல், எழுதிய படைப்புகள், அன்னாகரீனா திரைப்படம் குறித்து அசோகமித்திரன் கொண்ட முரண், சிவாஜியின் ஓவர் ஆக்டிங், பானுமதி, உன்னத சினிமாவின் அடையாளம், பிடித்த எழுத்தாளர்களின் வரிசை, கையெழுத்துப் பிரதியாக உள்ள ‘நிலநடுக்கோடு’ நாவல் பற்றிய தகவல்கள் என்று பல சுவாரசியமான, உபயோகமான செய்திகள் இந்த நேர்காணலில் உள்ளன.

**

விட்டல்ராவ் ஓர் அற்புதமான எழுத்தாளர். சினிமா பற்றிய நூல்களையும் எழுதியள்ளார். ‘நவீன கன்னட சினிமா’, ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்’ போன்ற நூல்கள் மிக அரிதான பதிவுகளைத் தாங்கியவை. (இதையும் கண்காட்சியில் தேடி வாங்கி விடுங்கள்). தமிழக கோட்டைகளைப் பற்றி அவர் எழுதிய நூலொன்றின் பழைய பிரதி, திருவல்லிக்கேணி நடைபாதைக் கடையில் கிடைத்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

140 சிறுகதைகள், 7 குறுநாவல்கள், 10 நாவல்கள், 8 கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை அவர் எழுதியிருப்பதாக நேர்காணல் தெரிகிறது. அவரது வாழ்கை அனுபவங்களையொட்டிய, தமிழக அரசியல்வரலாறு ஊடுருவுகிற புதிய நாவல், சினிமாக்கட்டுரைகள் என்று இன்னமும் கூட தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.

பதிப்பாளர்களை நான் கும்பிட்டுக் கேட்கிறேன். இவரது படைப்புகள் அனைத்தும் மொத்தமாக தொகுத்து வெளியிடப்படுவது அவசியம்.

பெங்களூரில்தான் வசிக்கிறார். இயன்ற நண்பர்கள் தேடிச் சென்று உரையாடுங்கள். சினிமா, ஓவியம், இலக்கியம் பற்றிய தரவுகளின் அபூர்வமான சுரங்கம் இவர்.

**

இலக்கிய அரசியல்களின் அற்பத்தனங்கள் பற்றி இவர் எழுதிய நாவல் ஒன்றைப் பற்றி முன்னர் எழுதிய பதிவு இது. 

*



தேரோடும் வீதி' என்றொரு நாவலை சில வருடங்களுக்கு முன் நீல.பத்மநாபன் எழுதினார். எழுத்துலக/பதிப்புலக அரசியல் குறித்து ஓர் எழுத்தாளரின் பார்வையில் எழுதப்பட்ட நீண்ட நாவல் அது. அந்த நூலை வம்பிலக்கியம், எழுத்தாளரின் வெற்றுப் புலம்பல், மன மாச்சரியங்கள், புறம்பேசுதலை செய்யும் நூல் என்றெல்லாம் தூற்றியவர்களும் உண்டு.

தொடர்புள்ளவர்களின் பெயர்கள் நேரடியாக குறிப்பிடப்படாமல் கிசுகிசு பாணியில் அந்த நாவல் எழுதப்பட்டிருந்தாலும் அம்மாதிரியான எழுத்துக்களும் தேவை என்றுதான் சொல்வேன். அவற்றை வெகுசன பத்திரிகைகளில் வாசகர்களை கிளுகிளுப்படைவதற்காக எழுதப்படும் சினிமா வம்புகளோடு, கிசுகிசுக்களோடு  ஒப்பிட முடியாது.

எல்லாத்துறைகளிலும் உள்ள அரசியலைப் போலவே எழுத்துலகிலும் நிலவும் அரசியலைப் புரிந்து கொள்ள இது போன்ற எழுத்துகள் உதவும். மட்டுமன்றி ஒரு சமூகத்தில் எழுத்தாளனுக்கு எந்த மாதிரியான இடம் தரப்பட்டிருக்கிறது, அது குறித்த அவனது அங்கலாய்ப்புகள், அவநம்பிக்கைகள் என்ன  என்பதை அறியவும் முடியும்.

இந்த நாவலை வாசித்த அனுபவத்தைப் பற்றி சில வருடங்களுக்கு முன்பு இந்தப் பதிவில் எழுதியுள்ளேன்.

[http://pitchaipathiram.blogspot.in/2006/03/blog-post.html]

*

தற்போது விட்டல் ராவின் 'மூலவரும் உற்சவரும்' என்ற நூலை வாசித்து முடித்தேன். இப்போதைய இளம் வாசகருக்கு விட்டல் ராவ் என்ற எழுத்தாளரைப் பற்றி எத்தனை தூரம் தெரியும் என்று தெரியாது. பிறப்பால் கன்னடராக இருந்தாலும் தமிழ் வழிக் கற்றலின் காரணமாக தமிழ் எழுத்தாளராக உருவாகி வந்தவர். அடிப்படையில் இவர் ஓவியரும் ஆவார். அது தொடர்பான நூல்களையும் எழுதியுள்ளார். நதிமுலம், போக்கிடம், காலவெளி, வண்ணமுகங்கள் போன்றவை இவர் எழுதிய நூல்கள்.

மட்டுமன்றி சினிமா தொடர்பாக இவர்  எழுதியுள்ள கட்டுரைகளும் அரிதானது மட்டுமன்றி சிறப்பானதும் கூட.. 'தமிழ் சினிமாவின் பரிமாணங்கள், நவீன கன்னட சினிமா ஆகிய இவரது சினிமா நூல்கள் முக்கியமானவை.

*

நீலபத்மநாபனின் தேரோடும் வீதியைப் போலவே விட்டல் ராவும் ஒரு நூலை எழுதியுள்ளார். மூலவரும் உற்சவரும் என்பது அந்நூலின் தலைப்பு.  எழுத்துலக அனுபவங்களையும் அதிலுள்ள அரசியல்களையும் புனைவு மொழியில் அந்த நூல் பேசுகிறது. கதை சொல்லி எவரோ மூன்று நபர்களிடம் தன்னுடைய கதையை எழுதச் சொல்லுவதைப் போல இந்த நூல் விரிகிறது. சில பெயர்கள் நேரடியாக குறிப்பிடப்பட்டாலும் புனைவு பாவனையில் குறிப்பிடப்படும் சில பெயர்களை உடனே எளிதாக யூகிக்க முடிகிறது. யோசனைக்குப் பின் சில பெயர்கள் பிடிபடுகின்றன. இன்னும் சிலவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை.

எழுதுவதோடு மட்டுமல்லாமல் அதைப் பிரசுரம் காணச் செய்வதற்காக எழுத்தாளன் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள், அதிலுள்ள அவமதிப்புகள், அரசியல், புகழுரைகள், போலிப் பெருமிதங்கள் போன்றவற்றை இதன் நாயகன் 'சோமசன்மா' புனைவாக சொல்லிச் செல்கிறார்.

எழுத்துலக அனுபவம் மற்றும் அது தொடர்பான அரசியல் சார்ந்து சுவாரசியமான நூல் இது.

( மூலவரும், உற்சவரும் - அம்ருதா பதிப்பகம் - 376 பக்கங்கள் - ரூ.300·-)

**

pic courtesy: https://www.facebook.com/gkuppuswamy62/posts/1182795928490077

 

suresh kannan

Sunday, December 28, 2014

பெருமாள் முருகனும் போலி கலாசார காவலர்களும்




சில நாட்களுக்கு முன் பெருமாள்முருகனின் 'மாதொரு பாகன்' புதினத்தை வாசித்தவுடன் முதலில் தோன்றியது இதுதான்.

'இந்த நூலில் உள்ள ஒரு விவகாரமான சமாச்சாரம் ஏன் போலி கலாசார காவலர்களின் கண்களில் இன்னமும் ஏன் படவில்லை?' அப்படியாவது எழுத்தாளரின் மீதும் அவரின் படைப்புகளின் மீதும் மேலதிக கவனம் குவியாதா என்கிற நப்பாசைதான் அதற்கு காரணம். நம்முடைய கலாசார தொன்மங்களின் பண்பாட்டு வழக்கங்களின் சொச்சங்களை  திணிக்கப்பட்டதின் மூலம் அறிகிறோம் அல்லது கண்மூடித்தனமாக பின்பற்றுகிறோமே ஒழிய அதை ஆய்வு நோக்கில் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக எவ்வித ஆர்வத்தையும் காட்டாத அதில் ஈடுபடாத ஓர் உழைப்பற்ற, சொரணையற்ற சமூகமாகத்தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். மிகுந்த உழைப்பிற்கும் ஆர்வத்திற்கு பின்னும் எழுதப்படும் ஆய்வுகள் அதன் மீது அமைந்த புதினங்களும் கவனிக்கப்படாமலேயே மறைந்து போகின்றன. ஆய்வாளர்களுக்கு சோர்வளிக்கின்றன.

ஆனால் இவைகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் தங்களின் அடிப்படைவாத கண்ணாடிகளின் மூலமே மேம்போக்காக தெரிந்து கொண்டு அவைகளை சர்ச்சையாக்கும் எதிர்க்கும் கும்பலும் இருக்கிறது. அப்படியாக திருச்செங்கோட்டில் இந்த நாவலை எரித்தும் தடைசெய்யக் கோரியும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டம் செய்திருக்கும் தொடர்பான செய்தியை வாசித்தேன். சிலர் எழுத்தாளரின் வீடு தேடி சென்று மிரட்டியதாகவும் தெரிகிறது. எழுத்தாளர் பெருமாள் முருகன் தம்முடைய குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக காவல்துறையிடம் மனுவொன்றையும் அளித்திருக்கிறார்.

பெருமாள் முருகன் கொங்கு சமூகம் சார்ந்து பல ஆய்வுகளையும் அதன் கலாசாரக் கூறுகள் விரவிக் கிடக்கும் புதினங்களையும் எழுதியிருக்கும் பண்பட்ட எழுத்தாளர். கொங்கு வட்டாரச் சொல்லகராதி ஒன்றை தொகுத்தளித்திருக்கிறார். முனைவர் பட்டம் பெற்றவர். அரசுக் கல்லூரியல் பேராசிரியராக பணியாற்றுகிறவர். கண்டனம் தெரிவித்திருக்கும் கும்பல் இவரின் இந்த அரிய பணிகளுக்காக இதற்கு முன் ஒருமுறையாவது பாராட்ட முன்வந்திருக்குமா என்று தெரியாது. அதைச் செய்ய வேண்டுமென்றால் எழுத்தாளர் எழுதிய நூல்களை எல்லாம் படித்திருக்க வேண்டும். அது கடினமான விஷயம். அதை விடவும் ஒரு நூலின் ஒரு பகுதியை மாத்திரம் தவறாக வாசித்து விட்டு அல்லது வேண்டுமென்றே தவறாக சித்தரித்து கும்பலில் கத்துவதும் நூலை எரிப்பதும் அதன் மூலம் அரசியல் செய்வதும் எளிதான விஷயம். இம்மாதிரி செய்வதில் எந்த மதத்தின் அடிப்படைவாதிகளின் முட்டாள்தனங்களும் விதிவிலக்கல்ல. சாத்தானின் வேதமும் லஜ்ஜாவும் டாவின்சிகோடும் ஆழிசூழ்உலகும் உதாரணங்கள்.

பெருமாள் முருகனின் நாவலில் அப்படி என்னதான் பிரச்சினை? ஆங்கிலேய ஆட்சியின் இறுதிக் காலக்கட்டத்தின் கொங்கு சமூக பின்புலத்தில் இயங்கும் இந்த நாவலில் குழந்தைப் பேறு இல்லாத ஒரு தம்பதியினரின் சிக்கல்கள் மிக விஸ்தாரமாக விவரிக்கப்படுகின்றன. இவ்வாறு குழந்தைப் பேறு இல்லாத பெண்களின் குறையைப் போக்குவதற்காக அச்சமூகத்தின் பண்பாட்டுக்கூறுகளிலேயே ஒரு தீர்வு உள்ளது. அதன்படி ஒரு திருவிழாவின் 13 வது நாளில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் எந்தவொரு ஆணும் பெண்ணும் பரஸ்பர விருப்பத்தின் பேரில் பாலுறவு கொள்ள முடியும். அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் சாமி தந்த பிள்ளைகள் என்பது ஐதீகம். இதில் பங்கேற்கும் ஆண்கள் சாமிகளாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.

இந்த விஷயத்தை தமது நாவலில் மிகுந்த கலையுணர்வுடனும் அழகியலுடனும் மிக ஜாக்கிரதையாக கையாண்டுள்ளார் எழுத்தாளர் பெருமாள்முருகன். நாவலை பரபரப்பாக்குவதற்காக ஆபாசமாக கையாளவில்லை என்பது நாவலை வாசிப்பவர்கள் உணர முடியும். நாவலில் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் பகுதியை எழுத்தாளர் ஏதோ கற்பனை செய்து எழுதவில்லை. தாம் மேற்கொண்ட ஆய்வுகளில் வெளிப்பட்ட விஷயத்தை வைத்தே எழுதியுள்ளார். மேலும் எழுத்தாளர் இது போன்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவதன் மூலம் கவனஈர்ப்பு பெறும் மலினமான உத்திகளை கையாள்வதில் நம்பிக்கை கொண்டவரில்லை என்பதை முன்னுரையின் இந்தப் பகுதியை வாசித்தாலே விளங்கும்.
என் நாவல்கள் பற்றிய பரபரப்புகளை உருவாக்குவதில் எப்போதுமே நான் முனைவதில்லை. முந்தைய என் நாவல்கள் மிக மெதுவாகவே வாசகர்களிடம் சென்று சேர்ந்திருக்கின்றன. 'கங்கணம்' வெளியாகி மூன்றாண்டுகளுக்குப் பின் இப்போதுதான் பரவலாக கவனம் பெறுகின்றது. எனக்கும் ஒன்றும் அவசரமில்லை. இந்நாவல் தொடர்பாகவும் அதே மனநிலையில்தான் இருக்கின்றேன்.


வருகிற புத்தக கண்காட்சியில் இந்த நூலின் விற்பனையைப் பெருக்குவதற்காகத்தான் இந்த சர்ச்சை ஊதிப்பெருக்கப்படுகிறது என்று பெருமாள் முருகனின் மீது அபாண்டமாக குற்றஞ்சாட்ட முயல்கிறவர்கள் இந்த நூலையோ அல்லது எழுத்தாளரின் முந்தைய பணிகளின் மூலமோ அவரைப் புரிந்து கொள்ள முயல்வது நல்லது. கலைப் படைப்புகளின் மீது தொடர்ந்து நிகழ்த்தப்படும் இம்மாதிரியான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியன. ஒரு பத்திருபது பேர் கொண்ட அமைப்பு இணைந்து இம்மாதிரியான ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தி விடுவதின் மூலம் எத்தனை பதற்றத்தையும் கவனஈர்ப்பையும் செய்து விட முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. இவர்களால் ஒரு திரைப்படத்தின் வெளியீட்டை தடுத்து விட முடிகிறது, சென்சார் ஆனதிற்குப் பின்னரும் அதை தாங்கள் பார்த்தபின்தான் அனுமதியளிக்க வேண்டும் என்று சாதிக்க முடிகிறது, அதன் பின் தங்களின் பேரங்களையும் அரசியல் ஆதாய லாபங்களையும் பெற்றுக் கொள்ள முடிகிறது என்பது போன்ற செயல்களெல்லாம் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள்தான். இம்மாதிரியான போலியான நபர்களின் போராட்டங்கள் குறைந்த பட்சம் கூட வெற்றி பெறுவதை அனுமதிக்கவே கூடாது. இம்மாதிரியான நபர்கள் செய்யும் மலினமான போராட்டங்களின் மூலம் இவர்களின் ஒட்டுமொத்த அமைப்பையும் பொதுச்சமூகம் கேலியாகத்தான் பார்க்கும் என்கிற எளிய உண்மையையாவது இவர்கள் உணர்வது நல்லது.

திருவள்ளுவரின் காமத்துப் பாடல்களிலிருந்து சங்கப்பாடல்கள்,, ஆண்டாளின் ஏக்கங்களில் வழிந்த அற்புதப்பாடல்கள் என்று காமத்தைக் கொண்டாடின கலாசார தொடர்ச்சியின் சமூகம் நாம். ஆனால் அதையெல்லாம் இடையில் பாசாங்குகளால் மூடிவிட்டு தங்களை பண்பாட்டு காவலர்களாக சித்தரித்துக் கொண்டு ஒருபுறம் பாலியல் வறட்சியால் துன்புற்றுக் கொண்டு இருட்டுப் பிரதேசங்களில் பெண்களின் மீதான பாலியல் வன்முறை நிகழ்த்திக் கொண்டு எத்தனை போலித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

எழுத்தாளர் பெருமாள் முருகனின் மீது நிகழும் இந்த கருத்து மற்றும் பெளதீக ரீதியான தாக்குதல்களும் தரப்படும் மனஉளைச்சல்களும் அறிவுசார் சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். ஓரணியாக இணைந்து அவருக்கு ஆதரவு தர வேண்டும். மாதொருபாகன் நாவலின் முன்னுரையில் "இந்த ஆயவில் கிடைத்திருக்கும் தரவுகளை வைத்து விரிவானதொரு ஆய்வு நூல் எழுதவிருக்கும் திட்டத்தைப் பற்றி" எழுத்தாளர் தெரிவித்திருந்தார். ஆனால் இது போன்ற எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் அந்த முயற்சிகளை ஒருவேளை சோர்வடையச் செய்ய வைக்கக்கூடும் ஆபத்துக்களையும் நாம் கவனிக்க வேண்டும். அதன் மூலம் ஏற்படும் கலை இழப்புகள் இச்சமூகத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்தும்.

இந்தப் பதிவை வாசிக்கும் நண்பர்களிடம் நான் வேண்டிக் கொள்வது இதுதான். மாதொருபாகன் புதினத்தின் தொடர்ச்சியாக அதன் இரு வேறு பரிமாணத்தில் இரண்டு புதிய புதினங்களை பெருமாள்முருகன் எழுதியுள்ளதாக தெரிகிறது. வருகிற புத்தக கண்காட்சியில் அவை வெளியாகலாம். மாதொருபாகன் நுலோடு இணைத்து இந்த இருநூல்களையும் நண்பர்கள் வாங்கி வாசிக்க வேண்டும் என்பதுதான். இதன் மூலம்தான் எழுத்தாளருக்கு ஆதரவு தருவதோடு இதன் எதிர்ப்பாளர்களுக்கு நாம் தரும் பதிலாகத்தான் அது அமையும்.

என்னுடைய இந்த வேண்டுகோளை பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன்.

(பின்குறிப்பு: இந்தியர்களின் இணையத் தேடல்கள்கள் தொடர்பாக நிகழ்ந்த ஒரு ஆய்வின் முடிவின் படி இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் முதன்மையிடத்தைப் பிடித்துள்ளவர் பார்ன் வீடியோக்களில் நடித்துள்ள தோழர் சன்னி லியோன். இந்த தேடலில் மதஅடிப்படைவாதிகளுக்கும் கலாசார காவலர்களுக்கும் பங்கிருக்காது என நம்புகிறேன். ஏனெனில் அவர்கள் மானஸ்தர்கள்).


suresh kannan

Friday, April 22, 2011

அஞ்சலி : ர.சு. நல்லபெருமாள்


 பைண்டிங் செய்யப்பட்டிருந்த அந்த தொடர்கதைப் புத்தகம் எப்படி, யாரால் எங்கள் வீட்டிற்கு வந்தது என்பதும் பின்பு எப்படி மறைந்து போனது என்பதும் என்று எதையுமே நான் அறிந்திருக்கவில்லை அல்லது நினைவில் இல்லை. ஆனால் அம்புலிமாமா, ராணி, கல்கண்டு, குமுதம் வகையறா துணுக்குகளைத் தாண்டி சுமார் 15  வயதில் நான் வாசித்த முதல் முழு புதினம் என்கிற வகையில் அந்த நூல் என் நினைவில் இன்னமும் பசுமையாகவே உள்ளது. ரங்கமணி, திரிவேணி, தீட்சிதர், வெங்கி, சர்தார், கமலா... என்று அந்தப் புதினத்தின் பாத்திரங்கள் இன்னமும் என் மூளையின் நியூரான்களில் பத்திரமாக உள்ளனர்.

கல்கியில் தொடராக வந்து, அந்த நாவல் போட்டியில் முதல் பரிசை வென்ற 'கல்லுக்குள் ஈரம்' புதினத்தின் வார சேகரிப்பு தொகுப்பு நூல்தான் அது.

சுதந்திரப் போராட்ட காலத்தின் பின்னணியில் இயங்கும் அந்தப் புதினத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் வன்முறையில் தம் உறவுகளை இழந்த ரங்கமணி, அவர்களைப் பழிவாங்க வன்முறையை கையாள முயல்வான். காந்தியவாதியான திரிவேணி மெல்ல மெல்ல அவனின் வன்முறை எண்ணங்களை திசைமாற்ற முயல்வாள். இறுதியில் அவளின் மரணத்தில்தான் அது சாத்தியமாகும். இடையில் ரங்கமணி, திரிவேணி, முன்னாள் காதலி கமலா என்கிற முக்கோணக் காதல்  நிகழ்வுகளுடன் புதினம் சுவாரசியமாக இயங்கும். இலட்சியவாத எழுத்து வகைமையில் இந்த நாவல் இயங்கினாலும் ஒரு சுவாரசியமான திரைப்படத்தின் ஸ்கிரிப்ட்டுக்குண்டான கச்சிதங்களுடனும் சுவாரசியங்களுடனும் அமைந்திருந்த காரணத்தினால் பல முறை இந்தப் புதினத்தை வாசித்திருக்கிறேன். (இதையே நடிகர் கமலும் பல முறை வாசித்திருக்கலாம் என்பது 'ஹேராம்' வெளிவந்த போது உணர முடிந்தது. ரங்கமணி காந்தியைக் கொல்லப் போகும் சம்பவங்கள் முதற்கொண்டு அவன் வாழ்க்கையில் குறுக்கிடும் இரண்டு பெண்கள் என்பது வரை புதினத்தின் பல பகுதிகள் திரைப்படத்தோடு ஒத்துப் போகும். இதையொட்டி புதினத்தின் ஆசிரியரே எழுப்பிய ஆட்சேபணையை கமல் ஏற்றுக் கொண்டாரா என்பது தெரியவில்லை).

கல்லுக்குள் ஈரம் ஏற்படுத்திய சுவாரசியமே பிற்பாடு என் வாசிப்பு ஆர்வம் கூடியதற்கு ஒரு வித்தாக அமைந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. அதுவே இந்தப் புதினத்தின் மீது காரணம் சொல்ல முடியாத ஒரு பிரியத்தை ஏற்படுத்துகிறது. பிறகு இந்த ஆசிரியர் எழுதிய மற்ற நாவல்களை  தேடினேன். 'மாயமான்கள்' என்று ஞாபகம். சாமியார்களின் போலித்தனங்களைப் பற்றியது. அவை போலியானவை என்றாலும் மக்களின் நம்பிக்கையும் அது தரும் நிவாரணமும் காரணமாக இந்த போலித்தனங்களும் சமூகத்தின் ஒரு தேவையான பகுதிதான் என்பது போல் அந்த புதினத்தின் சாரம் அமைந்திருக்கும்.

'கல்லுக்குள் ஈரம்' புதினத்தின் ஆசிரியரான ர.சு.நல்லபெருமாள் மறைந்த செய்தியை அறிந்த போது தன்னியல்பாக வருத்தம் எழுந்தது. அவருக்கு என் அஞ்சலி. 



suresh kannan

Monday, January 17, 2011

2011 புத்தகக் காட்சி அனுபவம் (2)

முந்தைய பதிவின் தொடர்ச்சி

தேகம் நாவல் குறித்து நான் எழுப்பிய கேள்விக்கு மனுஷ்யபுத்திரன் பதிலளிக்கத் துவங்கினார். (நினைவில் தங்கியிருப்பதைக் கொண்டு கோர்வையாக எழுத முயன்றிருக்கிறேன். இதில் மனுஷ்யபுத்திரன் சொல்லாத அல்லது அவர் சொன்னதிலிருந்து விலகியிருக்கும்  கருத்துப் பிழை ஏதேனும் இருக்குமானால் அது என் பிழையாகத்தான் இருக்கும்).

"ஓர் எழுத்தாளன் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக எழுதி ஒரு தகுதியான இடத்திற்கு வந்து சேர்கிறான். அந்த அனுபவம், அடிப்படையான அறம், தார்மீக உணர்வு, சுயபொறுப்பு  போன்றவற்றை அவனுடைய எழுத்தில் படியச் செய்கிறது. ஒரு பதிப்பாளனாக அந்த எழுத்தாளனின் படைப்பில் தலையிட நான் விரும்புவதில்லை. உதாரணம் சொல்கிறேன். நான் முன்னர் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்த பத்திரிகையில் நாஞ்சில் நாடனின் சிறுகதை ஒன்றை பத்திரிகை உரிமையாளர்கள் பிரசுரிக்க மறுத்தார்கள். உண்மையில் நான் அதை வாசிக்காமலேயே பிரசுரத்திற்கு அனுப்பி விட்டேன். 'ஒரு எடிட்டராக இருந்து கொண்டு எப்படி ஒரு படைப்பை வாசிக்காமல் அனுமதிக்கலாம்?' என்ற கேள்வி என் முன் வைக்கப்பட்டது. இலக்கியப்பரப்பில் நாஞ்சில் நாடனின் இடம் என்ன என்று எனக்குத் தெரியும். அவரும் அதை உணர்ந்து அந்தப் பொறுப்போடுதான் எழுதியிருப்பார். படைப்பாளிகளின் மீது இந்த நம்பிக்கையை வைப்பதும் அவர்களின் எழுத்துச் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதும்தான் பதிப்பாளனாக நான் செய்ய விரும்புவது. இதே அளவுகோல்தான் சாருவின் படைப்பிற்கும்.

'தேகம்' புதினம் பெரும்பாலும் அது எழுதப்பட்ட விதத்திலிருந்து அதன் எதிர்திசையிலிருந்தே பெரும்பாலோனாரால் புரிந்து கொள்ளப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இன்றைய சூழ்நிலையில் வதை என்பது ஏதோ காவல்நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டவனின் உடல் மீது நிகழ்த்தப்படுவது மாத்திரமல்ல. அது எல்லாத்தரப்பு மக்களிடமும் எல்லாச் சமயங்களிலும் வெளிப்படுகிறது. இந்தச் சூழல் பீதியூட்டுகிறது. இதில் வரும் தர்மா கையாளும் வதையின் பின்னணி பலவற்றின் தொடர்ச்சியாக பல தளங்களில் இயங்குகிறது"

நான் குறுக்கிட்டு "ஆனால் நாவலின் சில பக்கங்களில் மாத்திரமே நீங்கள் சொல்லும் வதையின் கட்டங்கள் வருகின்றன. ஆனால் ஒட்டுமொத்த நாவல் இந்த மையத்திலிருந்து விலகி திசைமாறியிருக்கின்றனவே' என்கிறேன்.

மனுஷ்யபுத்திரன் மீண்டும் நாவல் இயங்கும் விதத்தைப் பற்றியும் சமூகத்தில் வதையின் பங்கு பற்றியும் அற்புதமாக விளக்கினார்.

உரையாடலின் இறுதியில் எனக்குத் தோன்றியது இதுதான். "பேசாமல் இந்த நாவலை இவரே எழுதியிருக்கலாம்." நாவலின் பின்னட்டையில் படைப்பின் மையம் (?!) குறித்து மனுஷ்யபுத்திரன் எழுதியிருக்கும் ரத்தினச் சுருக்க வாசகங்களும் இதையே நிருபிக்கிறது.

எங்களின் உரையாடலின் இடையில் நடுத்தர வயதுள்ள உயிர்மை வாசகி ஒருவர் குறுக்கிட்டு ம.பு.விடம் உரையாடினார் "அட்டை டூ அட்டை வாசிச்சிடுவேங்க. சாரு எழுதற திரை விமர்னமெல்லாம் ஏங்க இப்படி இருக்கு? ஒண்ணு, எந்திரனை அப்படியே தாழ்த்தி எழுதறாரு. நந்தலாலாவ அப்படி புகழறாரு".

நான் அந்த பெண்மணியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அதிகப்பிரசங்கித்தனமாக அதில் நுழைந்தேன். 'சாரு எப்படி எழுதணும்றீங்க" "நடுநிலைமையா எழுதலாமே?" "நடுநிலைமைனு ஒரு விஷயம் கெடையாதுங்க மேடம். எல்லாத் தரப்பு வாசகனுக்கும் செளகரியமா எழுதம்ணு நெனச்சா  வெகுஜன பத்திரிகைள்லதான் எழுதப் போகணும்."

மனுஷ்யபுத்திரன் அந்த பெண்மணிக்கு சமாதானமாக ஏதோ சொல்கிறார். "பாத்துக்கங்க. ரெண்டாவது சில ஓவியம்லாம் வல்கரா இருக்குதுங்க" என்றார் அந்த பெண்மணி. அவர் சென்ற பிறகு மனுஷ்யபுத்திரனிடம் உயிர்மையில் வெளிவந்து ஆரம்பக்கட்ட சிறுகதைகள் ( உதா: ஜே.பி.சாணக்கியா) பாலியல் சார்ந்தே வெளிவந்தனவே?" என்று கேட்கிறேன்.

"இப்பவும் உயிர்மைக்கு எழுதணும்னு விரும்பறவங்க எந்த மாதிரி இருக்கணும்னு கேட்கறாங்க. நான் அப்படியெல்லாம் எந்த வரையறையெல்லாம் கட்டுப்பாடும் வைததுக் கொள்ளவில்லை. எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அது இலக்கியம் என்னும் தகுதியோடு இருந்தால். போதும்."

சுமார் பதினைந்து நிமிடங்கள் நீடித்த எங்களின் இந்த உரையாடலின் இடையில் சில நண்பர்கள் ம.பு.விற்கு முகமன் கூறிச் செல்கின்றனர்; சிலர் நூல்களைப் பற்றி விசாரிக்கின்றனர். அத்தனைக்கும் பதில் சொல்லி விட்டு பொறுமையாக என்னிடம் உரையாடலைத் தொடர்ந்த மனுஷ்யபுத்திரனுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்னேன். தனது வாசகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த சாருநிவேதிதாவும் எங்களின் அருகே இரண்டொரு முறை வந்து சென்றார். "நான்தான் சாருநிவேதிதா" என்று என்னிடம் அறிமுகம் செய்து கொள்வார் என்று எதிர்பார்த்தேன். வரலாற்றில் இடம்பிடிக்கும் விருப்பம் அவருக்கு இல்லை போலும், அவ்வாறு விசாரிக்கவில்லை.  :-)

திரும்பும் போது அந்த உயிர்மை வாசகி திரை விமர்சனம் பற்றிச் சொன்ன புகாரை நினைவு கூர்ந்தேன். சாருவின் சில மனச்சாய்வுகளின் எதிரொலிகளைத் தவிர சாரு எழுதும் வடிவத்தில் எனக்கு எந்தப் புகாருமில்லை. உண்மையில் அவர் அவ்வாறு எழுதுவது மிகவும் பிடித்திருந்தது. நான் எழுதும் திரைப்பார்வைகளில் கூட அதன் தடயங்களை நீங்கள் காண முடியும்.

ஒரு சினிமா பற்றிய விமர்சனக் கட்டுரையில் அதை எழுதினவனின் தனித்தன்மை துல்லியமாக வெளிப்பட வேண்டும் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். உலகத்தில் வேறு எவராலும் அந்தக் கட்டுரை எழுத சாத்தியப்பட்டிருக்கக்கூடாது. அந்தளவிற்கு எழுதினவனின் ஆன்மாவும் பிரத்யேக நுண்ணுணர்வகளும்  அந்தக் கட்டுரையோடு கலந்திருக்க வேண்டும். எல்லா வாசகர்களின் மனநிலையையும் பிரதிபலிப்பது போல் கூலிக்கு மாரடிக்கும் விமர்சனங்களை வணிகப் பத்திரிகைகளில்தான் எதிர்பார்க்க வேண்டும்.

அதே போல் மனுஷ்யபுத்திரன் சொன்னதையும் நினைவு கூர்ந்தேன். எழுத்தாளனின் சுதந்திரத்தில் பதிப்பாளன் தலையிடாமல் இருப்பது ஒருவகையில் சரிதான். (ஆனால் தேகம் நாவலிலியே பதிப்பாளன் எழுத்தாளனுக்கு ஆலோசனை கூறுவது போல் ஒரு இடம் வருகிறது). அதே சமயத்தில் பதிப்பாளனின் கடமையையும் சரிவர நிறைவேற்ற வேண்டும். எப்படி ஓர் எழுத்தாளன் தொடர்ச்சியான தரமான படைப்புகளின் மூலம் வாசகர்களிடம் ஒரு தகுதியான இடத்தை அடைகிறானோ, அவ்வாறே பதிப்பகங்களும் தரமான படைப்புகளை மாத்திரம் வெளியிடுவதன் மூலம் ஓர் இடத்தை அடைகின்றன. அரைகுறையான, தரமற்ற படைப்புகளை வெளியிடுவதன் மூலம் ஒரு பதிப்பகமும் அதன் நம்பகத்தன்மையை இழக்கிறது. நான் சமயங்களில் அறிமுகமமில்லாத எழுத்தாளர் என்றாலும் வெளியிட்ட பதிப்பகத்தின் மீது நம்பிக்கை கொண்டு வாங்குகிறேன். இன்னொன்று. மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலான படைப்புகளின் இறுதி வடிவத்தை அதன் எடிட்டரே தீர்மானிக்கிறார். எழுத்தாளர்களுக்கு இணையான புகழுடன் உள்ள எடிட்டர்கள் உள்ளனர். இதன் மூலம் அந்தப் படைப்பு இன்னும் மெருகேருகிறது. ஒரு வார்த்தையை நீக்கினாலும் சிணுங்கும் இங்குள்ள மனோபாவம் அங்கில்லை. நல்ல எடிட்டர்களை எழுத்தாளர்களே தேடி தம் படைப்புகளை தருகின்றனர். தேவையற்ற பகுதிகளை நீக்குவதால் படைப்பு இன்னும் மேன்மையடைகிறது என்பதை எழுததாளர்கள் புரிந்து வைத்துள்ளனர்.

(வரும்) 
suresh kannan

Thursday, January 13, 2011

2011 புத்தகக் காட்சி அனுபவம் (1)


எனது இந்த வலைப்பதிவு குறித்து நானே பெருமையாயும் ஆச்சரியமாயும் நினைக்குமளவிற்கு புத்தகக்காட்சியில் சில சம்பவங்கள் நடந்தேறின.(?!) 'நீங்கள் புத்தகக்காட்சி அனுபவம் குறித்து ஏன் இன்னும் எழுதவில்லை' என்றும்,  என் பெயரையும் வலைப்பதிவின் பெயரையும் சொன்ன மாத்திரமே "ஓ... நீங்கள்தானா அது? தொடர்ந்து வாசிக்கிறேன்" என்றும் அங்கு சுமார் 2000000 அல்லது 3000000 நபர்கள் விசாரி்த்தனர். (கபில் சிபிலின் ஸ்பெக்ட்ரம் தர்க்கத்தின் படி பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை என்பதால் தாராளமாக போட்டிருக்கிறேன். ஏறத்தாழ கூட்டி கழித்துக் கொண்டு வாசிக்கவும்).

ஒவ்வொரு வருடமும் ஏற்படுவது போல் இம்முறையும் புத்தகக்காட்சிக்கு செல்வதற்கு சில மனத்தடைகள் இருந்தன. நான் எப்போதுமே மந்தையிலிருந்து விலகி ஓட விரும்பும் ஆடு. இப்போது புத்தகக்காட்சிக்கு செல்வதென்பது, கடுமையான விதிகள் பல நீர்த்துப் போனதொரு சமகால சபரிமலை பயணம் போல் ஒரு பேஷனாகி விட்டதோ எனத் தோன்றுகிறது. ஆன்மீகத்திற்கு ஆன்மீகமும் ஆயிற்று, சுற்றுலாவிற்கு சுற்றுலாவும் ஆயிற்று, தான் ஒரு பக்திமான என்று சமூகத்திற்கு நிருபித்தது போலவும் ஆயிற்று என்பது போல் தன்னை வாசிப்பாளனாகவும் காட்டிக் கொண்டு சமையல், ஜோதிடம், போலி ஆன்மீக புத்தகங்களை வாங்கிக் கொண்டு கேண்டீனில் புத்தக பட்ஜெட்டுக்கு அதிகமான செலவில் ஒரு வெட்டு வெட்டி விட்டுத் திரும்பினால் முடிந்தது ஒரு சமூகக் கடமை. சமையலும் ஜோதிடமும் மாத்திரம் புத்தகங்களில்லையா என்ற கேள்வி வாசிப்பவருக்கு எழக்கூடும்.  தவறில்லை. ஆனால் நம்முடைய லெளதீகத் லெளகீகத் தேவைகளை பூர்த்தி செய்யும் விஷயங்கள் தொடர்பான எல்லையோடு நின்றுவிடும் அந்த மேலோட்டமான தேடல்தான் சலிப்பூட்டுகிறது. அதையும் தாண்டி பரந்து கிடக்கிற பல விஷயங்களை தாண்டிச் செல்லும் அந்த அலட்சியமும். இந்தக் கூட்டத்தோடு நாமும் சேர வேண்டுமா என்று உள்ளுக்குள் ஈகோ அதிகபட்ச டிகிரியில் அலறியது.  (இப்படியெல்லாம் இந்தப் பதிவில் எழுதாவிடில் வாசிக்கவரும் பல்ர் ஏமாந்து விடுகிறார்கள் என்பதால் இதை எழுத வேண்டியிருக்கிறது).

கட்டாயம் செல்ல வேண்டும் என்கிற மனஉந்துதல் இல்லாததாலும் ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களே 99.9% இன்னும் வாசிக்கப்படாமல் இருப்பதாலும் (வாங்கின புதிதில் புரட்டிப் பார்த்ததால் ஒரு 0.1சதவீதத்தை கழித்து விட்டேன்) முந்தைய வருடங்களைப் போல் எதை வாங்க வேண்டும் என்கிற கறாரான திட்டம் எதுவும் பெரிய அளவில் இல்லாமல் ஒர் அனுபவமாக இருக்கட்டுமே என்று கிளம்பினேன்.

()

புத்தகக்காட்சியின் வெளியே குறைந்த விலையில் இலக்கியச் சேவை செய்து கொண்டிருந்த விளிம்புநிலைக் கடைகளை (நடைபாதைமுனையில் கடைகள்) முதலில் பார்த்தேன். எது எடுத்தாலும் ரூ.20,30,50 என்று காப்பிரைட், ராயல்டி பிரச்சினையில்லாமல் கச்சாமுச்சாவென்று பல புத்தகங்கள். கீழ்கண்ட புத்தகங்களை  வாங்கினேன். 'பத்து பர்சென்ட் டிஸ்கவுண்ட் இருக்குன்னு சொன்னாங்களே' என்று கடைக்காரரை கலாய்க்க முயன்றால் 'தோ...டா' என்றார் அருமையான சென்னை வழக்கில்.

1) STARLIGHT STARBRIGHT - THE EARLY TAMIL CINEMA - RANDOR GUY
2) கநாசு 90 -  தொகுப்பு சா.கந்தசாமி
3) சென்னைச் சிறுகதைகள்


உயிரைக் கூட பொருட்படுத்தாமல் அபாயமாக சாலையைக் கடந்து புத்தகக் காடசிக்கு சென்று கொண்டிருந்த மக்களின் புத்தகார்வத்தை பார்க்க கண்ணீர் மல்கியது. 'எங்கடா தம்பி வந்த?" என்று பிளெக்சில் இருந்து எழுத்தாள பெருந்தகைகள் பெரிய சைஸில் வாசலிலேயே மிரட்டுகிறார்கள். உம்மாச்சியை வேண்டிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு  ஓடிச் சென்று அனுமதிச்சீட்டை வாங்கினேன். (அஞ்சு ரூபா சில்லறையா கொடுங்க' என்று பத்து பேரை நிறுத்தி வைத்திருந்தார்கள்).

இங்கிபிங்கிபாங்கி போட்டு இடது பக்கத்தை தேர்வு செய்து (நான் எப்போதுமே இடது சார்பாக்கும்) சென்றேன் துவக்கத்திலேயே தினத்தந்தி அரங்கம். தினத்தந்தி நாளிதழை வழக்கமாக இடது கையால் புரட்டிப் படிக்கும் நான் பா.ராகவனின் அழுத்தமான பரிந்துரை காரணமாக எந்த யோசிப்புமில்லாமல் 'வரலாற்றுச் சுவடுகள்' நூலை வாங்கினேன். பிரித்துப் பார்க்க முடியாதபடி 'சரோஜாதேவி புக்' பேக்கிங்.

என்னுடைய இரண்டு வயதில் பக்கத்து வீட்டிலிருந்த வெள்ளிக் கரண்டியை எடுத்து விழுங்கி விட்டேனாம். Born with neighbour's silver spoon. இந்த முக்கியமான வரலாற்றுத்தகவல் மாத்திரம் இந்த  நூலில் இல்லாவிட்டால் பாராவிடம்  சண்டை போட்டாவது ரூ.270/- ஐ திரும்ப வாங்க உத்தேசம். பெயர், முகவரி எல்லாம் வாங்கிக் கொண்டு புத்தகத்தை கொடுத்தார்கள். அதிர்ஷ்டமிருந்தால் அடுத்த பதிப்பில் என் வீட்டு முகவரியும் வரக்கூடும் போலிருக்கிறது. ஆனால் இந்தப் புத்தகத்தை வாங்கத் திட்டமிடுபவர்கள் இதை கடைசியாக வைத்துக் கொள்வது உததமம். ஜீன்ஸ் பட காலத்து ஐஸ்வர்யாவை முதுகில் சுமந்துச் செல்வது போல் புத்தகத்தின் எடை இன்பச் சங்கடமாக இருக்கிறது. முன்பெல்லாம் அமெரிக்க நூலகத்தில் இருந்து இப்படிப்பட்ட தடிமனான புத்தகமாக தேடி எல்லோருக்கும் தெரியும்படி பேருந்தில் பெருமையாகச் செல்வேன். கைக்குழந்தை போல் இதைத் தூக்கிக் கொண்டே மற்ற அரங்குப் புத்தகங்களை பார்க்க இம்சை. வில்லன் பொன்னம்பலம் சைஸில் உதவியாள் அழைத்துச் செல்வது இன்னும் உத்தமம்.

ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் புரட்டிப் பார்த்தது முதலில் இதைத்தான். (மூடி வைத்திருந்தாலே அதீத ஆர்வம் வருவது இயற்கைதானே). அருமையான பைண்டிங்கில் வழவழ மேப்லித்தோ பேப்பரில் 864 பக்கங்களும் வண்ணமயம். இரண்டாம் உலகப் போரில் துவங்கி ரகுமான் இரண்டு ஆஸ்கர் வாங்கினது வரை தேதி வாரியாக. புரட்ட புரட்ட டைம் மெஷினில் பயணம் செய்யும் பரவச அனுபவம். ரூ.270/-க்கு விலை கொள்ளை மலிவு. இதுவே ஆங்கிலப் பதிப்பகங்களாக இருந்தால் ஆயிரத்திற்கு குறையாமல் விலை நிர்ணயித்திருப்பார்கள். இந்த நூலை மிக அழுத்தமாக பரிந்துரை செய்கிறேன். தவறாமல் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

உயிர்மை ஸ்டாலை கண்டவுடன் சந்தாவை புதுப்பித்துக் கொண்டேன். மனுஷ்யபுத்திரன் ஒரு வாசகரிடம் உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்தார். இயல்பிலேயே கூச்ச சுபாவமுடைய நான் (நம்புங்க) சுயஅறிமுகம் செய்து கொண்டு உரையாட விரும்பும் எழுத்தாளர்கள் மிகக் குறைவு. அவர்கள் என்னை ஆத்மார்த்தமாக ஈர்த்திருந்தால் ஒழிய அதைச் செய்ய மாட்டேன். கவிதை எனும் வடிவத்தை காலால் நடக்க ஆரம்பித்த பருவத்திலிருந்தே என்னால் விரும்பமுடியவில்லை என்றாலும் மனுஷயபுத்திரன் உரைநடை எனும் சமாச்சாரத்தை கையாளும் லாவகத்திற்கு ரசிகன் நான். உயிர்மையில் முதலில் நான் வாசிப்பது தலையங்கமே. வாக்கியங்களை அத்தனை கச்சிதமான சொற்களுட்ன் அவர் அமைப்பதை பல முறை வியந்திருக்கிறேன். பொதுவாக கவிஞர்களுக்கு கைவராத சமாச்சாரம் இது. உதாரணமாக வைரமுத்து எழுதும் உரைநடையைப் பார்த்தால் கவிதைக்கும் உரைநடைக்கும் நடந்த திருட்டுக் கல்யாணம் போலிருக்கும். எனவே மனுஷ்யபுத்திரனை அணுகி உரையாடுவதில் எனக்கு பெரிதளவில் தயக்கம் ஏற்படவில்லை. " சார் வணக்கம். நான்... இந்த பெயரில் எழுதுகிறேன்.."  "வாசிச்சிருக்கேன்" என்றார். "உங்க நூல் விழா பற்றியெல்லாம் திட்டி எழுதியிருக்கேங்க" " இருக்கட்டும் அப்படியும் இருந்தால்தானே ஒரு சுவாரசியமிருக்கும்".

முதலில் நான் அவரிடம் வியந்த உரைநடை அம்சம் பற்றியே கேட்டேன். பாரதி, லா.ச.ரா., சு.ரா., சுஜாதா ஆகியோர்களை ஆதர்சமாகக் கொண்டிருப்பதால் இது அமைந்திருக்கலாம் என்றார். "திரும்பத் திரும்ப எடிட் செய்வீர்களா?" என்றேன். " ஒரு விஷயம் உங்களை அதிகஅளவில் பாதித்தால் அதனை எழுதுகிற வடிவம் முழுதும் ஏறத்தாழ மனதிலேயே உருவாகி விடுகிறது. எனவே முதன் முறையிலேயே அதை எழுதி விடுவேன். பெரும்பாலும் மீண்டும் வாசித்து திருத்துவதில்லை" என்கிற ரீதியில் சொன்னார்.

அடுத்த வில்லங்கமான கேள்வியை கேட்டேன். "ஒரு பதிப்பாளராக சாருவின் தேகம் நாவல் உங்களுக்கு திருப்தியை அளித்ததா?. கண்காட்சிக்கு கொண்டு வரவேண்டுமென்றே அவசர கதியில் அரையும் குறையுமாக உருவாக்கப்பட்ட பிரதியென்று நான் கருதுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

(வரும்)

image courtesy: original uploader

suresh kannan

Friday, January 07, 2011

நாஞ்சில் நாடன் பாராட்டு விழா (3)

பகுதி 1   |   பகுதி 2   |  பத்ரியின் வீடியோ பதிவு 

எழுத்தாளர் ராஜேந்திர சோழன்
அதுவரை இறுக்கமாக இருக்கும் அரங்கு சில பேச்சாளர்கள் ஆரம்பித்தவுடன் இறுக்கம் தளர ஆரம்பிக்கும் அல்லவா? எழுத்தாளர் ராஜேந்திர சோழனின் பேச்சு அவ்வாறாக இருந்தது. பேச்சின் இறுதியில் மக்கள் போராளியான மருத்துவர் பினாயக் சென்னுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனை மீதான கண்டனத்தை பதிவு செய்தது முக்கியமானது. 'எழுத்தாளர்கள் சமகால அரசியலில் இருந்து விலகி இருக்கக்கூடாது' என்கிற ஞாநியின் கருத்தை இவரும் எதிரொலித்தார்.

ராஜேந்திர சோழன் பேச்சின் ஒரு பகுதி குறித்து யோசித்தேன். 'தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கம் என்பதின் செயல்பாடுகள் அதீதமாகி (பகுத்தறிவு வேண்டாமென்று சொல்லவில்லை) எல்லாவற்றையும் மூடநம்பிக்கை என்கிற பெயரில் மறுத்து தம்முடைய தொன்மங்களிலிருந்தும் பழங் கலாசாரங்களிடமிடமிருந்தும் தமிழன் துண்டிக்கப்பட்டு கிடக்கிறான்' என்பது இவர் பேசியது. வீடு திரும்பும் வழியில் இது பற்றி சிவராமனிடம் இதுபற்றி பேசிக் கொண்டிருந்தேன். ராஜேந்திர சோழனின் தமிழ் தேசியப் பின்னணி ஆர்வம் குறித்து சிவராமன் விளக்கினார். (இது பற்றி மாத்திரமல்லாமல் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதச் சொல்லி அவரைக் கேட்டுக் கொண்டேன். செய்வார் என நம்புகிறேன்). 

எழுத்தாளர் கண்மணி குணசேகரன்
விழாவின் இறுதியில் ஜெயமோகன் உட்பட பார்க்கிறவர்களிடமெல்லாம் கண்மணி குணசேகரனின் பேச்சை வியந்தேன். தானே இயற்றிய பாடலொன்றை கணீரென பாடிய குணசேகரன் தென் ஆற்காட்டின அசலான வட்டார மொழியில் கிராமத்து வெகுளித்தனத்துடன் உரையாடியது மிகவும் ரசிக்கும் படி இருந்தது. அவரின் பேச்சு, எழுத்தாளன் என்கிற நிலையைத் தாண்டி ஒரு சம்சாரியின் பேச்சு என்பதாகத்தான் கொள்ள வேண்டும். வெளியில் தரப்படும் விருதுகளை விட வீட்டில் (மனைவியிடம்) வாங்கும் விருது பிரதானமானது என்றதோடு பரிசு குறித்த அவரது எதிர்பார்ப்புகளும் பொருளாதாரம் சார்ந்த எளிய வேண்டுகோள்களாக இருந்தன. 'நாஞ்சில் நாடனுக்கு ஏன் எங்கும் பேருந்தில் பயணம் செய்யக்கூடிய சலுகையை வழங்கக்கூடாது' என்றார். (குணசேகரன் போக்குவரத்து கழகத்தில் பணிமனை ஊழியராக பணிபுரிவது குறிப்பிடத்தக்கது). சாகித்ய அரசு விருதின் பரிசுத் தொகை குறைவாக இருப்பதையும் குறிப்பிட்டார்.

'ஏதோ பாக்கறதுக்கு முன்சொட்டை விழுந்து சாதாரணமா இருக்கறேன்னு நெனச்சுடாதீங்க. நானும் விஷயம் உள்ளவன்தான். மூணு கவிதத் தொகுதி, நாலு புதினம், ஒரு அகராதின்னு... அடிச்சுன்னு போயிட்டே இருப்பேன். நிக்காது. என்கிற போது அவரின் அசாத்திய தன்னம்பிக்கை இயல்பாக வெளிப்பட்டதும் ரசிக்கும் படி இருந்தது. விழா முடிந்தவுடன் வெளியில் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்த அவரிடம் சென்று சுயஅறிமுகம் செய்து கொண்டு 'பட்டாசு மாதிரி வெடிச்சுட்டீங்களே' என்றேன். "ஆமாம். கலக்கிட்டேன்ல' என்று அவரும் இணைந்து யாரையோ பாராட்டுவது போல மகிழ்ந்து சிரித்தார். சில ஆண்டுகளுக்கு முன் வாசித்திருந்த அவரின் 'கோரை' நாவல் பற்றிய சிறு அறிமுகத்தை இங்கு சேமித்திருக்கிறேன்.

எழுத்தாளர் ஜெயமோகன்
ஜெயமோகன் தனது உரையில் நாஞ்சில் நாடனின் படைப்புலகம் பற்றியும்  குறிப்பாக நாஞ்சில் நாடனின் உணவின் மீதிருக்கும் காதலைப் பற்றியும் பேசினார். 'உப்புமா சாப்பிட்டேன்னு சொல்ல மாட்டார். உளுத்தம்பருப்பு தாளிச்சு கருவேப்பிலை போட்ட உப்புமா சாப்பிட்டேன்னுதான் சொல்வார்".

எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் ஏற்புரை.

 'இந்த வெளிச்சம் கூச்சமா இருக்கு' என்று ஆரம்பித்து பேசி்க் கொண்டிருந்தவரிடம் எந்த நேரத்தில் கும்பமுனி உள்ளே புகுந்தாரோ தெரியாது. சாகித்ய அகாதமி மீது காட்டமான விமர்சனம் வைத்தார். ஏற்கெனவே அவரின் கட்டுரைகளில் எழுதியவைதான். அவர் கண்மணி குணசேகரனின் பேச்சை ரொம்பவும் ரசித்தார் என்பதை கவனித்தேன். விழா முடிவில் மாப்பிள்ளை விநாயகர் போன்று அமர்ந்திருந்த அவரிடம் 'உங்களுக்கு விருது கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம் சார்' என்று உள்ளபடியே என்னிடமிருந்த மகிழ்ச்சியை அவரிடம் வெளிப்படுத்தினேன். 'விருதை விட வாசகர்களின் இத்தனை அன்பும் ஆதரவுமே தம்மை நெகிழ்ச்சியடைய வைப்பதாக' சொன்னார்.

சுல்தானுக்கு நினைவுப்பரிசு
விழாவில் நாஞ்சில் நாடனின் இணையத்தளத்தை நடத்தும் சுல்தானை நினைவுப்பரிசளித்து கெளரவப்படுத்தினார்கள். ஓர் எழுத்தாளரின் எழுத்துக்களை இத்தனை ஆர்வமாக தேடிச் சேர்க்கும் இவர் நிச்சயம் இளைஞராகத்தான் இருப்பார் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு நடுத்தர வயது மனிதரைக் காண ஆச்சரியமாக இருந்தது. அதனால் என்ன, மனதால் இளமையானவர் போலும். அவரை தேடிச் சென்று அவரின் உழைப்பையும் ஆர்வத்தையும் பாராட்டினேன்.

தனது பிரத்யேக டிரேட் மார்க் புன்னகையோடு வந்த பத்ரியிடமும் கண்மணி குணசேகரனின் பேச்சை வியந்தேன். 2 மணி நேர வீடியோ எடுத்திருப்பதாக சொன்னார். இயன்றால் அன்றிரவே வலையேற்ற முயலுமாறு கேட்டுக் கொண்டேன்.'பல்வேறு தலைப்புகளில் 'கிழக்கு' பதிப்பகத்தின் புயல் வேக வெளியீடுகளை கவனிக்கும் போது 'மூன்றாம் உலகப் போர்' பற்றிய புத்தகம் கூட டிராஃப்டில் இருக்கும் போலிருக்கிறதே?" என்றேன். மனிதர் ரசித்து வெடித்துச் சிரித்தார்.

பாலுமகேந்திராவை பத்திரமாக அழைத்துச் சென்று கொண்டிருந்த சுகா என்கிற சுரேஷ் கண்ணனிடம் அவசர ரகசியமாக 'படம் எப்ப வருது?" என்றேன். 'வர்ற பிப்ரவரில வரும். சொல்றேன்' என்றார். பாலுவிடம் உதவி இயக்குநராக இருந்த இவர் 'படித்துறை' என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். 'வேணுவனம்' என்கிற வலைப்பதிவில் திருநெல்வேலி நகைச்சுவை கமழும் இவரது கட்டுரைகளை வாசித்து ரசிக்கலாம். அப்படியே சொல்வனத்தில் இவரது அருமையான இசைக்கட்டுரைகளையும். (இவரது திரைப்படம் அனைத்துப் பணிகளும் முடிந்து திரையரங்கு கிடைக்காமல் காத்திருப்பதை இன்னொருவரிடம் அறிய நேரும் போது வருத்தமாக இருந்தது. எத்தனை படைப்பாளிகளின் திரைக்குழந்தைகள் இப்படி கருவறையிலேயே மூச்சு திணறிக் கொண்டிருக்கிறதோ?).

தனது அட்டகாசமான 'பைப்' இல்லாத காரணத்தினால் குறிப்பிட்ட சதவீத கவர்ச்சியை இழந்திருந்த பாரதி மணியிடம் சில நிமிடங்கள். அவரின் மிகச் சுருக்கமான உரையைப் பற்றி விசாரிப்பு. "இத்தனை நிமிஷத்துக்குள்ள பேசிடணும்னு சொல்லிட்டாலே எனக்கு மண்டைக்குள்ள மணியடிக்க ஆரம்பிச்சுடும். அதனால 'நாஞ்சில் நாடனை மற்றவர்கள் பாராட்டுவதை ரசிக்கவே வந்திருக்கிறேன்' என்று சொல்லி அமர்ந்து விட்டேன்" என்றார். "ஆனா நெறைய பேசணும்னு வந்தேன்" என்றவரிடம் "அதனால என்ன, எல்லாத்தையும் எழுதுங்க சார்" என்றேன். தான் ஒரு எழுத்தாளர் என்பதை அழிச்சாட்டியமாக ஏற்க மறுக்கிறார். 'நாடக நடிகர்' என்கிற அடையாளமே போதுமாம். எழுத்துக் கூட்டி எழுத தெரிந்து விட்டாலே தம்மை எழுத்தாளன் என்று எண்ணிக் கொள்ளும் நபர்களுக்கு இடையில் 'சுஜாதா' பாராட்டிய இவர் இப்படி.

இசை விமர்சகர் ஷாஜியிடம் அவரின் மலேசியா வாசுதேவன், மற்றும் ஸ்வாணலதா கட்டுரைகள் பற்றியும் அதன் மொழிபெயர்ப்பு பற்றியும் சில நிமிடங்கள் பேச்சு. 'இணையததில் உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வாசிக்கிறீர்களா?' என்றேன். "ஆம். நெறைய பேரு லிங்க் அனுப்பி வைக்கிறாங்க. அதெல்லாம் ரொம்ப பெரிசா எடுத்துக்கறதில்ல" என்றார்.

நண்பர்கள் சிலரை சில ஆண்டுகள் கழித்து சந்திக்கிறேன். அவர்களிடம் ஒரிரு வார்த்தைகள் பேச முடிந்தது. அவ்வாறு சந்தித்த எழுத்தாளர் கம் வலைப்பதிவர்களின் பட்டியல் ஒரு ஞாபக சேமிப்பிற்காக.

விழியன் (photography), ஜ்யோவ்ராம் சுந்தர், உருப்படாதது நாராயணன், சங்கர், நிர்மலா, மதுமிதா, ராமச்சந்திரன் உஷா, சிறில் அலெக்ஸ், அரவிந்த், அண்ணா கண்ணன, கே.ஆர்.அதியமான், உண்மைத் தமிழன், அதிஷா. குறிப்பாக 'கலையாளுமை' அரங்கசாமி எனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கியது என் வாழ்வின் பெரும் பேறு.

விழாவில் 'நாஞ்சில் நாடனின்' சமீபத்திய சிறுகதைகளின் தொகுதியான 'கான்சாகிப்' என்கிற நூலும் வெளியிடப்பட்டது. பாலுமகேந்திரா வெளியிட பாரதிமணி பெற்றுக் கொண்டார்.  முன்பே குறிப்பிட்டது போல் இந்த விழா எனக்கு பெரும் மனவெழுச்சியை அளித்தது. 'எழுத்தாளன் என்பவன் ஒரு சாதாரண அங்கீகாரத்திற்காக தன் இறுதிக்காலம் வரை (அதுவும் அதிர்ஷ்டமிருந்தால்தான்) காத்திருக்க வேண்டிய தமிழக சூழல் எரிச்சலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்களின் பணியை செய்து கொண்டிருக்கும் படைப்பாளிகளின் உழைப்பும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

பரவலாக கவனிக்கப்படாமலும் தகுதிக்குரிய அங்கீகாரம் பெறாமலும் ஒதுங்கியிருக்கும் சிறந்த தமிழ் எழுத்தாளர்களை தேடிச் சென்று 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்' கெளரவிக்க வேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக இங்கு முன்வைக்கிறேன்.

image courtesy: http://picasaweb.google.com/vishnupuram.vattam

suresh kannan

நாஞ்சில் நாடன் பாராட்டு விழா (2)


விழா நிகழ்வு உரையாடல்களைப் பற்றின குறிப்புகள் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் நினைவில் இருப்பதை வைத்துக் கொண்டு பிற்பாடு எழுதுவது சற்று சிக்கலான வேலை. பேச்சாளர்கள் சொல்லாத ஒன்றை அல்லது அவர்கள் சொன்ன கான்டெக்ஸ்டை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வேறொரு அர்த்தம் வரும் வகையில் எழுதி விடுவோமோ என்ற நெருடல் எனக்கு இருந்துக் கொண்டேயிருக்கும். அதற்காகத்தான் ஜாக்கிரதையாக disclaimer எல்லாம் போட்டுக் கொள்வது. :)

குறிப்புகள் எடுத்துக் கொள்ளாமலிருப்பதில் இன்னொரு செளகரியமும் இருக்கிறது. கட்டிங் அடித்து விட்டுப் படுத்தாலும் கூட தேவையற்ற செய்திகள் மூளையிலேயே வடிகட்டப்பட்டு நாம் அவசியமானவை என்று நினைப்பதுவே மறுநாள் மீதியாக தங்கும். அதுவே போதும்.

இந்த மாதிரியான சங்கடங்கள் எதுவும் தேவையில்லாமல் விழா பற்றிய வீடியோ தொகுப்பை நண்பர் பத்ரி அவரது தளத்தில் வலையேற்றியிருக்கிறார். கேமிராக் கோணம் ஹீரோ அறிமுகக் காட்சி போல் லோ ஆங்கிளில் இருந்தாலும் ஒலியும் ஒளியும் தரமாக உள்ளது. ஆகவே என்னுடைய இடையூறின்றி நீங்களே நேரடியாக அதைக் காணலாம். அவருக்கு நன்றி.

எனவே பேச்சாளர்களின் உரையைத் தவிர்த்து விட்டு விழா பற்றிய என்னுடைய அவதானிப்புகளையும் இன்னபிற விஷயங்களையும் பற்றி எழுத உத்தேசம்.

* விழா நிகழ்ந்த ருஷ்ய கலாச்சார மையத்திற்கு நான் வருவது இதுவே முதன்முறை. இங்கு நிகழும் திரைப்பட வெளியீடுகள் பற்றின அறிவிப்பை அவ்வப்போது பத்திரிகைகளில் கண்டாலும் நானிருக்கும் வடசென்னையிலிருந்து இந்த இடத்திற்கு வருவது குறித்த அடையாள குழப்பங்களால் தயங்கி நின்று விடுவேன். இதற்குக் கூட நண்பர் சிவராமனின் உதவியோடுதான் வர முடிந்தது. சிறிய அரங்கு என்றாலும் எங்கிருந்து பார்த்தாலும் மேடை தெளிவாக தெரியுமளவிற்கு இருக்கை அமைப்பு இருந்தது. திரைப்படம் பார்ப்பதற்கு கச்சிதமான இடம்.

விழா ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அரங்கம் நிரம்பி பார்வையாளர்கள் நிற்க வேண்டியிருந்தது. மணிரத்னம் வந்திருந்து பின்வரிசையில் தயக்கமாக நின்றிருந்தார். விழா அமைப்பாளர்கள் அலறியடித்து முன்வரிசையில் அமர வைத்தனர். மணிரத்னம் வந்ததை புளகாங்கிதமாக சொல்லவரவில்லை. நிகழ்ச்சி நிரலில் தம்முடைய பெயர் இல்லாவிட்டாலும் முன்னணி இயக்குநர்கள் இலக்கிய விழாக்களுக்கு வருவது ஆரோக்கியமான அடையாளமாக தெரிகிறது. தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் சினிமாவிற்கும் உள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் அளவிற்கான இடைவெளி குறித்து பல ஆண்டுகளாக பேசிக் கொண்டிருக்கிறோம்.

புதுமைப்பித்தன் ஒரு ஆரம்பமாக தமிழ் சினிமாவிற்குச் சென்றார். அவர் அதை புரட்டிப் போடும் ஆவேசத்துடன் செல்லவில்லை. அதன் மூலம் தம்மை அரித்துக் கொண்டிருந்த வறுமையிலிருந்தும் காசநோயிலிருந்தும் தப்பிக்க முயன்றார். ஆனால் அதன் ஆரம்பத் துளியை சுவைப்பதற்குள் செத்துப் போனார். ஜெயகாந்தனால் குறிப்பிடத்தக்க சில முயற்சிகளை செய்ய முடிந்தது. ஆனால் நுண்ணுணர்வு மிக்கவர்கள் அங்கு தாக்குப்பிடிக்க முடியாது போலிருக்கிறது. "போங்கடா" என்று வந்து விட்டார். இதற்குப் பிறகு சுஜாதா, பாலகுமாரன் போன்ற வெகுஜன எழுத்தாளர்களைத் தவிர சிற்றிதழ் சார்ந்த வேறு எவரும் பெரிய அளவில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் தற்போது மறுபடியும் அதற்கான ஆரோக்கியமான அடையாளங்களைப் பார்க்க முடிகிறது. எஸ்.ரா., ஜெயமோகன் போன்றோர் சினிமாவில் நுழைந்திருக்கிறார்கள். 'காவல்கோட்டம்' நாவலை வசந்தபாலன் திரைப்படமாக உருவாக்குகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் இலக்கிய, நூல் வெளியீட்டு விழாக்களில் பங்கேற்கிறார்கள்.

நிற்க. கூட்டு முயற்சியால் உருவாக்கப்படும் சினிமாவில் இம்மாதிரியான சொற்ப நம்பிக்கைகளால் தமிழ் சினிமாவே ஏதோ 80-களின் கேரளம், வங்கம் போல ஆகிவிடும் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி நம்புவதும் அபத்தம். அதற்கு ஒட்டுமொத்த தமிழக ரசனையும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும்  மாறவேண்டும். அதுவொர் ஆகாயக் கனவு. ஆனால் அம்மாதிரியான நம்பிக்கைகள் தொடர்ந்து கொண்டிருப்பது ஆசுவாசத்தைத் தருகிறது.

பேச்சாளர்களின் உரையை வீடியோவில் நீங்களே காண முடியுமென்றாலும் அதிலிருக்கும் சில விஷயங்களை அடிக்கோட்டிட்டு குறிப்பிட விரும்புகிறேன்.

ஞாநி பேசியதில் முக்கியமானதொன்றை குறிப்பிட மறந்து விட்டேன். தி.ஜானகிராமன் உத்தியோக காரணங்களுக்காக பல ஆண்டுகள் டெல்லியில் வசித்தாலும் அவரது படைப்புகளில் டெல்லியின் வாசமோ தடயமோ இருந்ததிலலை. அதிலிரு்நதது முழுக்க முழுக்க தஞ்சையின் மணமும் கலாச்சாரமுமே. ஆனால் நாஞ்சில் நாடனின் படைப்புகள் அப்படியல்ல. அதில் நாஞ்சிலின் கலாச்சாரத்தோடு அவரது புலம்பெயர் பிரதேசமாக இருந்த மும்பையின் சூழல்களையும் காணமுடியும்.

ஒரு படைப்பாளிக்கு இது முக்கியமான விஷயமென்று நான் நினைக்கிறேன். தமிழ் இணையப் பதிவர்களில் பலர் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வசித்தாலும் அவர்களது பதிவுகளும் அவதானிப்புகளும்  பெரும்பாலும் தமிழ் சினிமா, அரசியல், வம்பு, கிசுகிசு போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன. கணினி வழியாக அவர்களது மனம் தமிழகத்தையே சுற்றி வருகிறது. இதன் மூலம் தங்களின் 'ஹோம் ஸிக்னெஸ்ஸை' போக்கிக் கொள்ள முயல்கிறார்கள் என நினைக்கிறேன். மாறாக தாங்கள் வசிக்கும் பிரதேசத்தின் கலாச்சாரம், கலை, உணவு, வாழ்க்கை முறை போன்ற விஷயங்களையும் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

(மேலும்)

image courtesy: http://picasaweb.google.com/vishnupuram.vattam/NanjilFunctionChennai#

suresh kannan

Tuesday, January 04, 2011

நாஞ்சில் நாடன் பாராட்டு விழா (1)



2010-ன் சாகித்ய அகாதமி விருதிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நாஞ்சில் நாடனை பாராட்டும் விதமாக விழா ஒன்று சென்னை, ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ('சூடிய பூ சூடற்க' என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது). விழா அமைப்பாளர்களில் ஒருவரான அரங்கசாமி இதற்காக மின்னஞ்சலில் என்னை அழைத்த போது 'நான் அழைக்கப்படாவிட்டால் கூட இந்த விழாவிற்கு வருவேன். அது நாஞ்சில் நாடன் என்கிற படைப்பாளிக்காக' என்று பதில் அனுப்பியிருந்தேன்.

நாஞ்சில் நாடனுக்கு விருது கிடைத்த செய்தியை முதன்முதலாக செல்வேந்திரனின் டிவிட்டர் செய்தியின் மூலம் அறிந்த போது ஏதோ எனக்கே விருது கிடைத்ததைப் போன்று அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்தளவிற்கு என் மனதிற்கு நெருக்கமான படைப்பாளி அவர். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பழைய புத்தகக்கடையில் யதேச்சையாக கிடைத்த மேலட்டை பாதி கிழிந்து போன 'என்பிலதனை வெயில்காயும்' என்கிற புதினத்தோடு எனக்கு நாஞ்சில் நாடனின் அறிமுகம் ஆகியது. அப்போது அவரின் பெயரைக் கூட நான் அறிந்திருக்கவில்லை. அன்னம் பதிப்பகம் தரமான எழுத்தாளர்களின் நூற்களைத்தான் வெளியிடும் என்கிற தன்னுணர்வின் உந்துதலால்தான் அந்த நூலை வாங்கினேன். நாஞ்சில் நாட்டின் வட்டார வழக்குச் சொற்கள் முதலில் என்னை தடுமாற வைத்தாலும் நூலின் இயல்புத்தன்மையும் சுவாரசியமும் மொழியின் சிக்கல்களைக் கடந்து தரிசனம் தருகிற படைப்பாளியின் ஆன்மாவும் பின்பு என்னை வழிநடத்திச் சென்றன. பின்பு அவரது சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் என்று பலவற்றையும் தேடித் தேடி வாசித்தேன்.

அவரது புதினங்களுள் முதன்மையானது 'சதுரங்கக் குதிரை' என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். திருமணமாகாத ஒரு முதிர்இளைஞனின் புலம்பெயர் தனிமையை இத்தனை நுட்பத்துடன் சொன்ன வேறெந்த புதினத்தையும் இதுவரை நான் வாசிக்கவில்லை. அவரது அபுனைவுகளில் தென்படும் சமூகக் கோபங்களும் நையாண்டிகளும் நக்கல்களும் அவைகளை மீறி நிற்கும் ஆழமான விமர்சனங்களும் உணர்ந்து வாசிக்கத்தக்கவை. இவரது படைப்புகளைப் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் உரையாடுவோம்.

இனி விழா பற்றி.

தனிப்பட்ட வகையில் இந்த விழா எனக்கு பெருத்த மனவெழுச்சியை தந்தது. ஒட்டுமொத்த விழாவுமே மிக திருப்திகரமாகவும் ஆத்மார்த்தமாகவும் அமைந்திருந்ததை குறிப்பிட வேண்டும். எனக்கு மிகவும் பிடித்த படைப்பாளி குறித்த பாராட்டு விழா என்கிற காரணத்தைத் தாண்டி 'தரம் வாய்ந்த படைப்பாளன் இச்சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டியவன்' என்கிற செய்தி மீண்டுமொரு முறை நிறுவப்பட்டது. எந்தவொரு நிறுவன அமைப்பு பின்னணியல்லாமல் அரசியல் நுழையாமல் வாசகர்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே இதை தாமாகவே முன்னெடுத்துச் சென்றது மிகச் சிறந்த முன்னுதாரணம்.  

விழாவின் ஆகச் சிறந்த பேச்சு கண்மணி குணசேகரனுடையது என்பதில் பலருக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதைத் தவற விட்டவர்கள் அபாக்கியவான்கள் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. (பத்ரி இந்த விழாவின் வீடியோவை வலையேற்றுவதாகச் சொல்லியிருக்கிறார். கண்டிப்பாக அதைக் காணத் தவறாதீர்கள்). குணசேகரனின் பேச்சைப் பற்றி பின்வரும் பத்திகளில் எழுதுகிறேன்.

விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் அமைப்பு இளைஞர்கள் இந்த விழாவை சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். நாஞ்சில் நாடன், ஜெயமோகன் உட்பட இந்த அமைப்பைச் சார்ந்தவர்களும் பெரும்பாலும் வேட்டி, சட்டையில் வந்திருந்தது, குடும்ப விழா ஒன்றினுள் அமாந்திருக்கும் உணர்வை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன் சென்னை வந்திருந்த அரங்கசாமி என்னைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கும் போது அவரிடம் இந்த அமைப்பின் பெயர் குறித்த சங்கடத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். 'ராஜாதி ராஜா ரஜினி ரசிகர் மன்றம் மாதிரி .. என்னங்க இப்படி ஒரு பேரு'.

இதே அமைப்பு இதற்கு முன்னதாக எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு விருது வழங்கின நிகழ்ச்சி குறித்து இணையத்தில் ஒரு சர்ச்சை எழுந்தது. 'ஜெயமோகனின் நூலின் பெயரால் அமைந்த ஒரு விருதை ஓரு மூத்த படைப்பாளிக்குத் தருவது அவரை அவமானப்படுத்துவதற்கு ஒப்பானது' என்கிற ரீதியில் அது அமைந்திருந்தது. 'அலைபாயுதே' மாதவனைத்தவிர வேறு எவரையும் அறிந்திராத குளுவான்கள் கூட இது குறித்த தங்களின் பொன்னான கருத்துக்களை போகிற போக்கில் வீசிச் சென்றனர். இப்படி ஒரு விருது அறிவிக்கப்படும் வரைக்கும் இப்படியொரு எழுத்தாளர் இருப்பதே பல பேருக்குத் தெரிந்திருக்காது. மாத்திரமல்ல, ஆ.மாதவனுக்கு இதுவரை எந்தவொரு நூல் வெளியீடோ, பாராட்டு விழாவோ இதுவரை நடந்திருக்கவில்லை.

பிருஷ்டங்களை அசைக்காத சோம்பேறித்தனத்துடன் தானும் எந்தவோர் ஆக்கப்பூர்வமான முயற்சிகளை செய்யாமலிருப்பது ; அப்படிச் செய்யப்படும் பணிகளையும் அதே பிருஷ்டங்களை அசைக்காமல் டீக்கடை பெஞ்சில் அமர்ந்து வம்பு பேசும் மனோபாவத்துடன் நக்கலடிப்பது தமிழனின் பிரத்யேக குணங்களுள் ஒன்று.

என்னையே உதாரணமாகக் கொள்கிறேன். நாஞ்சில் நாடனின் படைப்புகளை பல வருடமாக வாசித்து வந்திருந்தாலும் அவரைப் பாராட்டி இதுவரை ஒரு கடிதம் கூட அவருக்கு போட்டதில்லை. சாருவின் நூல் வெளியீட்டு விழாவில் மூத்திரப்புரையின் முனையில் அவரை நேரில் சந்தித்த போது கூட 'சொல்ல மறந்த கதை' படமாக்கப்பட்ட விதத்தில் உங்களுக்கு திருப்தியுண்டா' என்கிற அபத்தமான கேள்வியோடு திரும்பி விட்டேன். என் பதிவிலியே கூட அவரின் படைப்புகளைப் பற்றி அதிகம் எழுதினதில்லை. 'எழுத்தாளனைக் கொண்டாடாத சமூகம் நடைப்பிணத்திற்குச் சமமானது' என்பதில் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டிருக்கிற நானே இப்படி வாளாவிருக்கிற போது, அதைச் செய்கிறவர்களை - அதுவும் இளைஞர்களை - அவர்களது அமைப்பின் பெயரைக் காரணம் காட்டி குறை சொல்வது போன்றதோர் அநியாயம் எதுவும் இருக்க முடியாது.

இந்நிலையில் இந்த விழாவை ஏற்பாடு செய்த இந்த அமைப்பை மனப்பூர்வமாக பாராட்டுவதோடு, அரங்கசாமியிடம் முன்னர் தெரிவித்திருந்த என் கிண்டலையும் இதன் மூலம் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

நாஞ்சில் நாடனின் இந்த பாராட்டு விழாவில் உரையாடியவர்களின் மையக் கருத்தாக இரண்டைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

1) வழக்கமாக எந்தவொரு விருது அறிவிக்கப்படும் போதும் அதன் கூடவே அது குறித்தான சர்ச்சைகளும் விவாதங்களும் தொடர்ந்து வரும். ஆனால் இம்முறை எந்தவொரு முணுமுணுப்புக் குரல் கூட கேட்கவில்லை. எனில் தகுதி வாய்ந்த ஒருவருக்கு இவ்விருது வழங்கப்பட்டிருப்பது குறித்து அனைவருக்கும் திருப்தியாகவே உள்ளது.

2) இம்மாதிரியான விருதுகள் ஓய்வு பெறும் வயதில் அல்லாமல் உரிய காலத்திலேயே அந்தப் படைப்பாளியை ஊக்குவிக்கும் விதமாக அவன் அதிக படைப்பூக்கத்துடன் இயங்கும் தருணத்திலேயே வழங்கப்பட வேண்டும். மேலும் விருதுகளின் பின்னால் உள்ள அரசியல் காரணமாக தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டும் மூத்த படைப்பாளிகள் கூட இன்னும் புறக்கணிக்கப்பட்டும் இருக்கிற அபத்தமான நிலை மாற வேண்டும்.

(இனி விழா உரையாடல் பற்றி சுருக்கமாக, நினைவிலிருந்து)

நாஞ்சிலின் படைப்புகளைப் பற்றி இலக்கிய வட்டத்தைச் சார்ந்த வாசகர் ராஜகோபாலன் பேசினார். இம்மாதிரியான மேடைகளை பொதுவாக எழுத்தாளர்களும் விஐபி என்கிற அந்தஸ்தில் எழுத்துக்குச் சம்பந்தமில்லாதவர்களுமே அடைத்துக் கொள்ளும் வழக்கமான காட்சிகளிலிருந்து விலகி எழுத்தாளன் அல்லாத வாசகனின் குரலும் மேடையில் ஒலிப்பது ஆரோக்கியமான முன்னுதாரணம்.

ஒரு மூத்த படைப்பாளிக்கு அளிக்க வேண்டிய மரியாதையோடும் அடக்கத்தோடும் எஸ்.ராமகிருஷ்ண்ன் சுருக்கமாக தன் உரையை முன்வைத்தார்.

"நாஞ்சில் நாடன் எங்கு சென்றாலும் அவரது நாஞ்சில் கலாச்சாரத்தை சுமந்துச் செல்வார். கோணங்கி ஒரு முறை மும்பையில் சென்று அவரை சந்தித்த போது  'அது மும்பையில் வசிக்கும் ஒருவருடான சந்திப்பாக இல்லாமல் நாகர்கோவிலில் வசிக்கும் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற அனுபவத்தைத் தந்தது' என்று என்னிடம் கூறினார். அமெரிக்காவிற்குச் செல்லும் ஒரு ஆர்மெனியன் தன் நாட்டின் கலாச்சார குறியீடான மாதுளம்பழத்தையும் தன்னோடு எடுத்துச் செல்வான். ஆனால் அது விமானநிலையத்தில் மறுக்கப்படும். எனவே அதை அங்கேயே தின்று தன் உடம்போடு எடுத்துச் செல்வான். ஒரு திரைப்படத்தின் காட்சியிது. அதைப் போலவேதான் நாஞ்சில் நாடனும். மரபிலக்கியம் குறித்தான அவரது பண்பட்ட அறிவு வியப்பேற்படுத்துவது."

இயக்குநர் பாலுமகேந்திரா.

"ஓர் இலக்கிய உபாசகன்' என்கிற வகையில்தான் இந்த மேடையில் நிறகிறேன். சினிமா எனது மொழி. எந்தவொரு இலக்கியப்படைப்பையும் சினிமா மொழியில் மாற்றும் போது அதன் உள்ளடக்கம் மற்றும் வடிவத்தைத்தான் பிரதானமாக கணக்கில் எடுத்துக் கொள்வேன். நான் தொலைக்காடசியில் 'கதை நேரம்' இயக்கிய போது "ஏன் நீங்கள் நாஞ்சில் நாடன் உள்ளிட்ட பல இலக்கியவாதிகளின் படைப்புகளை கையாளவில்லை?' என்று சிலர் அப்போது கேட்டார்கள். எத்தனை முயன்றாலும் சில படைப்புகளின் ஆன்மாவை திரையில் கொண்டு வர முடியாது. அதை தூர நின்று வணங்கவே விரும்புகிறேன். நாஞ்சில் நாடனின் படைப்புகளும் அவ்வாறானவை."

பத்திரிகையாளர் ஞாநி:

"நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்த நிகழ்வையும் தாண்டி சிலவற்றைப் பேச வேண்டியிருக்கிறது. அவருக்கு விருது கிடைத்ததை முன்னிட்டே இங்கு கூடியிருக்கிறோம். மரியாதை செய்கிறோம். எனில் விருதிற்கு முந்தைய நாஞ்சில் நாடன் பாராட்டப்படத் தேவையில்லாதவரா அல்லது மரியாதை செய்யப்படத் தேவையில்லாதவரா, விருதிற்கு தரப்படும் மரியாதையை விட படைப்பாளியே அதிகம் கொண்டாடப்பட வேண்டியவன். தனியார் அமைப்புகள் தரும் விருதுகளை விட அரசு அமைப்பு தரும் விருதுகள் அதிகம் கவனிக்கப்படுகின்றன. சாகித்ய அகாதமி அமைப்பை ஜவஹர்லால் நேருவும் அந்த நோக்கிலேயே  துவங்கினார். ஆனால் இந்த அகாதமியின் தென்னிந்திய மண்டல அலுவலகம் முன்பு சென்னையில் இருந்த போது  அரசியல் காரணமாக பெங்களூருக்கு துரத்தியடிக்கப்பட்டது. இப்போதிருக்கும் கிளை அலுவலமும்  துரத்தியடிக்கப்படும் நிலையில்தான் சமகால் அரசியல் சூழல் நிலவுகிறது.எந்தவொரு எழுத்தாளனும் தன் சமகாலத்தின் அரசியல் குறித்த விமர்சனங்களைப் பற்றி எதுவும் உரையாடமலிருப்பது முறையற்றது.

மக்கள் அதிகம் புழங்கின இடங்களுக்கென்று தன்னிச்சையாக ஒரு மணமும் குணமும் ஏற்பட்டு விடும். சென்னையின் பல பகுதிகளில் வாழ்ந்திருக்கிறேன். திருவல்லிக்கேணி போன்ற பகுதிகள் அதன் பிரத்யேக கலாச்சாரத்தின் வாசனை கொண்டது. ஆனால் தற்போது நான் வாழும் புறநகர் அவ்வாறான எதுவுமில்லாமல் வெறுமையாக இருக்கும். நாஞ்சிலின் படைப்புகள் இதைப் போன்றே அவரது கலாச்சாரத்தின் பிரத்யேக மணத்தையும் பின்னணிகளையும் கொண்டது"

(மேலும்)

தொடர்புடைய பதிவு:

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது

suresh kannan

Tuesday, October 05, 2010

ஜி.நாகராஜன் - கடைசி தினம் - சி.மோகன்



ஜி.நாகராஜன் என்றதோர் எழுத்தாளரின் பெயர், பெரும்பான்மையான தருணங்களைப்  போலவே சுஜாதாவின் 'கணையாழியின் கடைசிப்பக்கத்தில்'தான் அறிமுகமாகியது. ஜி.நா.வின் 'குறத்தி முடுக்கு' 'நாளை மற்றொரு நாளே' போன்றவற்றை அவசியம் வாசிக்க வேண்டிய படைப்புகளென' என அவர் பரிந்துரைத்திருந்த ஞாபகம். அவர் விவரித்ததலிருந்து ஜி.நா., என் அலைவரிசைக்கு ஒத்த எழுத்தாளராக இருப்பார் என்று ஏனோ தோன்ற, காலச்சுவடு அப்போது வெளியிட்டிருந்த 'ஜி.நாகராஜனின் படைப்புலக' தொகுதியை வி.பி.பி-யில் வரவழைத்தேன். சுமார் 22 வயதில் ஒரு நிறுவனத்தில் கடைநிலை ஊழியனாக பணிபுரிந்துக் கொண்டிருந்த எனக்கு, அந்த நூலின் விலை அப்போதைய என் சம்பளத்தின் கால் பங்குக்கு ஈடாக இருந்தது. மேலாளரிடம் கடன் வாங்கி தபால்காரரிடமிருந்து நூலைப் பெற்றுக் கொண்ட போது 'ஏண்டா இதெல்லாம் உனக்குத் தேவையா' என்கிற பார்வைகளையும கேள்விகளையும் எதிர்கொண்டது நினைவில் உள்ளது.

நானறிந்தவரை நவீன தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் விளிம்பு நிலை மனிதர்களை தன் படைப்புகளில் சித்தரித்தவர்  புதுமைப்பித்தன். அவருக்குப் பிறகு ஜி.நாகராஜன்தான் அவர்களின் இருண்ட பிரதேசங்களின் மீது இலக்கிய வெளிச்சமிட்டுக் காட்டியவர். பின்னர் ஜெயகாந்தன். புதுமைப்பித்தனாவது நடுத்தர வர்க்க மனிதர்களுள் ஒருவராக சற்று உயர்ந்த இடத்தில் நிற்பதான தோற்றத்துடன் அடித்தட்டு மக்களைப் பற்றி எழுதினார். ஜி.நாகராஜனோ விளிம்பு நிலை மனிதர்களுள் ஒருவராகவே வாழ்ந்தவர். சுந்தரராமசாமி அவரது நினைவோடை நூலிலும் அசோகமித்திரன் ஒரு கட்டுரையிலும் ஜி.நா -வை சற்றுப் பதட்டத்துடனும் எரிச்சலுடனும் எதிர்கொண்ட அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுடைய நிலையில் அது புரிந்து கொள்ளக்கூடியதே.

அதிகம் பேசப்படாத, கவனிக்கப்படாத  பழைய புதினங்களைப் பற்றி, எஸ்.ராமகிருஷ்ணன் உயிர்மை இதழில் எழுதி வரும் தொடரில் 'குறத்தி முடுக்கு' புதினத்தைப் பற்றிய கட்டுரையை வாசித்த போது, அதே புதினத்தை நான் பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த போது எத்தனை நுட்பமான விஷயங்களைக் காணத் தவறியிருக்கிறேன் என்பதும் எந்தவொரு முக்கியமான புதினத்தையும் தகுந்த இடைவெளியில் மீள்வாசிப்பு செய்ய வேண்டியதின் அவசியத்தையும் அக்கட்டுரை எனக்கு உணாத்திற்று.


ஜி.நாகராஜனின் 'நாளை மற்றொரு நாளே' எனும் புதினம் க்ரியா ராமகிருஷ்ணனி்ன் பங்களிப்புடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி (Tomorrow one more day) எனும் நூலாக பெங்குவின் பதிப்பகம் மூலம் வெளியாகியிருக்கிறது. இந்த நூல் வெளியீட்டில் பேசியது குறித்து தீராநதி அக்டோபர் 2010 இதழில் சி.மோகன் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். அக்கட்டுரையில் உள்ள கீழ்க்கண்ட, எனக்கு மிகவும் பிடித்ததொரு பத்தியை கீழே பகிர்ந்துள்ளேன். ஜி.நாவின் இலக்கியச் சித்திரத்தை மிகக் கச்சிதமான வார்த்தைகளில் வெளிக்கொணர்ந்துள்ள பத்தியிது எனக் கருதுகிறேன்.

.......ஜி.நாகராஜனைப் பற்றிப் பேசுவதும் அவருடைய எழுத்தைப் பற்றி பேசுவதும் வேறு வேறானவை அல்ல. நவீன தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளைப் புதிய திசைகளில் விஸ்தரித்தவர் ஜி.நாகராஜன். அதுவரையான தமிழ் எழுத்து அறிந்திராத பிரதேசம் அவருடைய உலகம். வேசிகளும் பொறுக்கிகளும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான சகல நியாயங்களோடும் கெளரவத்தோடும் வாழும் உலகமது. தனிமனித இயல்புணர்ச்சிகளின் வெளிப்பாடுகளில் வாழ்வின் அழகு பூரணமாக விரிவடைவதைக் கொண்டாடும் முதல் தீர்க்கமான குரல் ஜி.நாகராஜனுடையது. சமூகக் கட்டுப்பாடுகளும் அழுத்தங்களும் அதன் சம்பிரதாய ஒழுக்க நியதிகளும் பாலியல் கட்டுப்பாடுகளும் வாழ்வின் சிறகுகளைக் கத்தரித்து யந்திரரீதியான இயக்கத்தைக் கட்டமைத்திருக்கின்றன. இந்நிலையில், வாழ்வின் மீதான சகல பூச்சுக்களையும் வழித்துத் துடைத்து, வாழ்வை நிர்வாணமாக நிறுத்தி அதன் இயல்பான அழகுகளிலிருந்து தனதான தார்மீக அறங்களைப் படைத்திருக்கும் கலை மனம் ஜி.நாகராஜனுடையது. பூச்சுகளில் சவ விகாரங்களையும் நிர்வாணத்தின் உயிர்ப்பின் அழகுகளையும் கண்ட படைப்பு மனம் இவருடையது. விளிம்புநிலை மனிதர்களிடம் சுபாவமாக இயல்புணர்வுகள் மொக்கவிழ்வதைக் கண்டதும் அவ்வுலகை அற்புதமாகப் படைப்பித்ததும்தான் ஜி.நாகராஜனின் தனித்துவம். இதன் அம்சமாகவே விலைப்பெண்கள், அத்தான்கள், உதிரிகள் இவருடைய படைப்புலகை வடிவமைத்தனர். .....

ஜி.நாகராஜன் உயிர் நீத்த கடைசி தினத்தில் அவருடனான அனுபவங்களையும் இக்கட்டுரையில் சி.மோகன் பகிர்ந்துள்ளார். அதையே கட்டுரையின் தலைப்பும் சுட்டுகிறது.

ஆங்கில நூல் சுட்டி. :
http://www.penguinbooksindia.com/category/Classic/Tomorrow_Is_One_More_Day_9780143414124.aspx

suresh kannan

Monday, October 04, 2010

ஜெமோ மீதான ம.பு.வின் பகடி

உயிர்மை இதழைப் பிரிக்கும் போதெல்லாம் நான் பெரும்பாலும் உடனே வாசித்துவிடுவது மனுஷ்யபுத்திரனின் தலையங்கத்தை. நவீன தமிழிலக்கியத்தில் உரைநடையை சுவாரசியமாக கையாள்வதில் மபுவும் முக்கியமானவர் என்பது என் அவதானிப்பு. அவருடைய தலையங்கங்கள் விஜய்காந்த், பாகிஸ்தான் தீவிரவாதிகளை காலால் உதைக்கும் தீவிரத்தனத்துடனும் சிவாஜி கணேசன் நீண்ட வசனத்தை பேசும் நெகிழ்ச்சித்தனத்துடனும் இருக்குமென்றாலும் இறுக்கமான அவருடைய மொழிக்காகவே தலையங்கத்தை உடனே வாசித்துவிடுவேன்.

ஆனால் உயிர்மைஅக்டோபர் 2010 தலையங்கத்தோடு உள்பக்கங்களில் கூடவே இன்னும் அதிவேகமான துடிப்பான இன்னுமொரு விஜய்காந்த் காத்திருந்தார். வழக்கமான இறுக்கத்திற்கு மாறாக மபுவின் பகடியான மொழியை நான் முதன் முதலில் சந்தித்த அனுபவமிது. 'தேனீர் கோப்பையில் பெய்த மழை' எனும் அந்தக் கட்டுரையில் மபு வைத்திருக்கும் நுட்பமான கிண்டல்களும் விமர்சனங்களும் சட்டென்ற புன்னகையையும் சிரிப்பையும் ஏற்படுத்துபவை. குறிப்பாக ஜெயமோகன் குறித்த கிண்டல்கள் ஒருசில அதீதம் என்றாலும் பெருஞ்சிரிப்பை வரவழைப்பவை. ஜெமோ குறித்து தனது அடிப்பொடிகள் வாயிலாக மபு உயிரோசையில் வெளியிட்டு வந்த காழ்ப்புணர்ச்சியான கட்டுரைகளைத் தாண்டி வெளிப்படையாக நேரடியாக முன்வைக்கும் கிண்டல் இதுவே என நினைக்கிறேன். படைப்புகளைக் காட்டிலும் இம்மாதிரியான வம்புகளே அதிகம் முன்நிறுத்தப்படுகிறதென்றாலும் இலக்கியம் ஜவீத்திருக்க இவையும் மறைமுக காரணிகளே எனக் கருதுகிறேன்.

...கூட்டத்திற்கு முன்னதாகப் பல்வேறுவிதமான யூகங்களைக் கிளப்பும் பதிவுகளை அக்கூட்டத்திற்குப் பேச அழைக்கப்பட்டிருந்த ஜெயமோகன் தனது வலைப்பதிவில் எழுதி வந்தார். உயிர்மை கூட்டத்தில் தான் ஏன் பங்கேற்கிறேன் என்று அவர் எழுதிய விளக்கம் மிகவும் சுவாரசியமானது. உலகெங்கும் உள்ள தனது கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்ப்பை சமாதானப்படுத்தி 'கவலைப்படாதீர்கள்... இது ஷாஜியின் நட்புக்காக.. மனுஷ்யபு்த்திரனுக்கு இனி என் வாழ்க்கையில் இடமில்லை என்று வாக்குறுதி அளித்துக் கொண்டிருந்தார். (அருண்மொழி நங்கைக்கு அடுத்தபடியாக எனக்கும் ஜெயமோகனின் வாழ்க்கையில் இடமிருந்தது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது). ஜெயமோகனின் பார்வதிபுர இல்லத்தின் முன்பும் நாகர்கோவில் ஜங்ஷனிலும் ஜெயமோகன் உயிர்மை கூட்டத்திற்குப் போகக்கூடாது என்று அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஜெயமோகன் விமானம் மூலமாக சென்னை வரவேண்டியதாயிற்று....
மனுஷ்யபுத்திரனை புன்னகையுடன் கண்டிக்கிறேன். :)

suresh kannan

Friday, July 16, 2010

சாருவின் நள்ளிரவு சைக்கோ லீலைகள்

எச்சரிக்கை: இந்தப்பதிவில், சிலர் ஒருவேளை  வாசிக்க சங்கடப்படுமளவிற்கான ஆபாச வார்த்தைகள் உள்ளன. தவிர்க்க விரும்புபவர்கள் மேற்கொண்டு தொடராமலிருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

நேற்று 15.07.10 நள்ளிரவு.  சாருவின் தளத்தில் இரண்டு அமர காவியங்கள் எழுதப்பட்டன.. மன்னிக்கவும் படைக்கப்பட்டன. அவற்றை வாசிக்கத் தவறியவர்கள் அபாக்கியவான்கள். அவ்வாறான, தங்களின் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தை தவறவிட்ட அஞ்ஞானிகள், ஞானத்தை அடைய நள்ளிரவில் எழுதப்பட்டு சில மணிநேரங்களில் நீக்கப்பட்ட அந்த இரு பதிவுகளை நகலிடுகிறேன்.

இடுகை 1

வா வா வா பார்த்துவிடலாம்...

திரு. சாரு,
உங்கள் வலைதளத்தைத் தொடர்ந்து படித்துவருகிறேன். நீங்க எப்பப் பார்த்தாலும் ஜெயமோகனை திட்டறீங்க. ஜெயமோகனும் தொடர்ந்து உங்களைத் திட்டறாரு. இது உங்களுக்கே கேவலமாக இல்லையா? எதற்காக இப்படி சின்னபுள்ள மாதிரி சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க. அவன் கிள்ளிட்டான். அவன் நொள்ளிட்டான் என்று சொல்லி சண்டைபோட்டுக்கிட்டு இருக்கீங்க. உலகம் எங்கேயோ போய்கிட்டு இருக்கு. பெரிய எழத்தாளர் நீங்க. உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்லை. உடையறதவிட வளையறது மேலு.
இது உங்களுக்கு மட்டுமில்ல. ஜெயமோகனுக்கும் சேர்த்துதான்.

(பெயர் நீக்கப்பட்டுள்ளது)

திரு …க்கு

உண்மையில் உங்களைப் போன்றவர்கள் தான் இந்த சமூகத்துக்கும் கலாச்சார சூழலுக்கும் விரோதிகள் என்பது என்னுடைய அசைக்க முடியாத கருத்து. உண்மையில் நீங்கள் ஜெயமோகனையும் என்னையும் சேர்த்தே அவமானப்படுத்துகிறீர்கள். சரி, ஜெயமோகனுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் அவர் தன்னுடைய உயிரையும் ரத்தத்தையும் கொடுத்து எழுதிய விஷ்ணுபுரம் நாவலைப் படித்திருக்கிறீர்களா? சத்தியமாகப் படித்திருக்க மாட்டீர்கள். அப்படிப் படிக்காமல் இப்படி ஒரு கடிதம் எழுதத் து்ணிந்திருந்தால் உங்களை செருப்பால்தான் அடிக்க வேண்டும். உங்களைப் போன்ற மத்தியஸ்தர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை அது தான். சரி, இது போன்ற மத்தியஸ்தர்களைப் பற்றித்தான் நான் 300 பக்க நூல் ஒன்றை எழுதியிருக்கிறேன். தாந்தேயின் சிறுத்தை என்பது அந்தப் புத்தகத்தின் பெயர். அதையும் நீர் படித்திருக்க மாட்டீர். இப்படி ஜெயமோகனையும் படிக்காமல், சாரு நிவேதிதாவையும் படிக்காமல் இருவருக்கும் அறிவுரை சொல்ல வந்த நீர் யார்? உமக்கு இந்த அறிவுரையைச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது? இரண்டு எழுத்தாளர்களையும் படிக்காமல் இரண்டு பேருக்கும் அறிவுரை சொல்ல வந்திருக்கும் அற்பப் பதரே, நீ எங்களைப் படிப்பதை விட சீக்குப் பிடித்த வேசியின் யோனியை நக்கலாம்…

15.7.2010.

11.27 p.m. 

இடுகை 2

தெருநாய்களுக்கு ஒரு எச்சரிக்கை..

ஏய் அறிவுக் கொழுந்தே

எனக்கும் ஜெயமோகனுக்கும் என்ன பிரச்சினை என்று உனக்குத் தெரியுமா? எங்கள் எழுத்தை ஒரு பக்கமாவது நீ படித்திருக்கிறாயா? சுமார் 20 ஆண்டுக் காலமாக ஜெயமோகனை நான் விமர்சித்து வருகிறேன். அந்த வரலாறு உனக்குத் தெரியுமா? நீ யார்? 20 ஆண்டுக் கால விமர்சன பாரம்பரியம் தொகுக்கப் பட்டிருக்கும் தாந்தேயின் சிறுத்தை என்ற 300 பக்க நூலின் ஒரு பக்கத்தையாவது நீ படித்திருக்கிறாயா? இலக்கிய விவாதத்தில் உன்னைப் போன்ற தெருநாய்களெல்லாம் நுழையக் கூடாதுடா…

15.7.2010.

11.46 p.m.

விளிம்புநிலை மனிதர்களுக்காக எழுதுவதாக தொடர்ந்து சாரு செய்யும் அதீத பாவனை,  தன்னுடைய வன்மத்தின் மூலமாகவே அம்பலப்பட்டுப் போனது துரதிர்ஷ்டம்தான். மற்ற நேரங்களில் நாகரிகக் கனவானாகவும், மாட்டிக் கொள்ளும் போதெல்லாம் தன்னை விந்து விற்றவன், ஜேப்படித்திருடன் என்று விளிம்புநிலை மனிதனாக சித்தரித்து தற்காத்துக் கொள்ளும் சாருவிற்கு சக விளிம்புநிலை மனித வேசியின் யோனி கேவலமான ஒன்றாக தெரிவதும் வசவாக அதை பயன்படுத்துவதும் நகைமுரண். தன்னுடைய வளர்ப்பு பிராணிகளைக் கூட பெயரிட்டு அழைக்கும் அவைகளை நாய் என்று சொல்லாத முதிர்ச்சியுடைய சாரு, ஒரு சகமனிதர்களை, வாசகர்களை, தன்னை விமர்சித்து கேள்வி கேட்கிறார்கள் என்கிற காரணத்திற்காக, 'தெருநாய்கள்' என்று விளிப்பதையும் என்ன சொல்வது?

இது நொட்டை, அது நொள்ளை என்று ஊரில் உள்ள அனைத்து விஷயங்களையும் நபர்களையும் சக எழுத்தாளர்களையும் இவர் திட்டிக் கொண்டேயிருப்பாராம். "ஏம்ப்பா இப்படி சின்னப்புள்ளத்தனமா நடந்துக்கறே" என்று யாராவது கேட்டால் அவர் மீது வன்மத்துடன் சைக்கோத்தனமாக பாய்வாராம்.இத்தனை வருட இலக்கியப் பயிற்சியும்  சுழற்சிமுறை சாமியார்களிடம் கற்ற தியானமும் இவருக்கு இதைத்தான சொல்லித் தந்திருக்கிறது போலும்.

உணர்சசி வேகத்தில் எதையோ எழுதிவிட்டு, பின்னர் மனம் மாறியோ, கோழைத்தனத்துடனோ, திருந்தியோ சாரு நீக்கியதை, இப்படி அம்பலப்படுத்த வேண்டுமா என சிலருக்குத் தோன்றலாம். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. இந்தப் பதிவுகளை வாசித்தவுடன்  எனக்கு முதலில் சாருவின் மீது தோன்றியது அனுதாபம்தான். சாலையில் செல்வோரையெல்லாம் ஆபாசமாக திட்டும் மனநோயாளியின் மீது ஏற்படும் அனுதாபத்தைப் போன்றதுதான் அது. ஆனால் சாரு இவ்வாறு சைக்கோத்தனமாக எழுதுவதும் பிறகு அதை சாமர்த்தியமாக அழித்துவிடுவதும் முதன்முறையல்ல. சமீபத்தில் கூட சக எழுத்தாளரின் அப்பாவி குடும்ப உறுப்பினரை 'மனநோயாளி' என்று எழுதப்பட்ட பதிவை (இதை இவரோ அல்லது இவரது அல்லக்கைகளில் ஒருவரோ எழுதியிருக்க்க்கூடும்) தன்னுடைய தளத்தில் இட்டு அதை சிலாகித்து மகிழ்ந்தவர். சில நாட்களிலேயே அந்த இடுகைகளை நீக்கி விட்டது மட்டுமன்றி,  அவ்வாறு எழுதப்பட்ட மூல வலைப்பதிவையே பிறகு காணோம்.

மனிதர்கள் உணர்ச்சிவசப்பட்டு தவறிழைப்பதும் மோசமான மொழியில் கடிந்து கொள்வதும் சகஜமான ஒன்றுதான். நான் கூட இதை விட ஆபாசமான வார்த்தைகளை நேர்ப்பேச்சுகளில் சண்டைகளில் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் டாஸ்மாக்கில் கட்டிங் விட்டு சாலையில் புரளுபவனுக்கும்  தன்னை நோபல் பரிசு பெறும் தகுதியுள்ள ஒலக எழுத்தாளனாக பாவனை செய்பவருக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டல்லவா? பொதுவில் ஒன்றை எழுதும் போது அதற்கான பொறுப்புணர்ச்சியோ, முதிர்ச்சியோ ஒரு எழுத்தாளனுக்கு அடிப்படையான தேவையில்லையா? இந்த பிரகஸ்பதியெல்லாம் மனநோய், பாஸிஸம் என்று பதிவு எழுதுவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம். 

தன்னுடைய இணைய எழுத்தின் பெரும்பகுதியை சக எழுத்தாளர்களின் மீதும் இணையப்பதிவர்களின் மீதும் வன்மத்தோடு பாய்வதிலேயே செலவழித்து விட்டு திடீரென்று 'நாங்கல்லாம் எழுத்தாளங்கடா' என்று பாசம் காட்டுவதும் வாசகரின் மீது பாய்வதும் .... பள்ளிக்கூடச் சிறுவர்களின் சண்டை கூட இவர்களை விட முதிர்ச்சியாக இருக்கும் போலும்.

இந்தப் பதிவை வாசித்துவிட்டு சாரு என் மீதும் இதை விட அதிக வன்மத்துடன் பாயலாம். பார்ப்போம். இதையெல்லாம் மீறி (பழைய) சாருவை அவருடைய பாசாங்கில்லாத இலக்கிய எழுத்துக்காகவும் சில பிரத்யேக நகைச்சுவைகளுக்காகவும் நேசிக்கிறேன் / வாசிக்கிறேன்.

சம்பந்தப்பட்ட பகுதிகள் சாருவால்தான் எழுதப்பட்டதற்கு என்ன ஆதாரம் என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்காக இந்த SCREEN SHOTS.

இடுகை 1     /    இடுகை 2
suresh kannan

Saturday, February 13, 2010

எழுத்தாளர் ஜெயந்தன் : அஞ்சலி

பிடித்தமான எழுத்தாளர் இறந்துவிடும் போது அவரை இதுவரை சந்தித்திருக்காவிட்டால் கூட நம்முடைய சுற்றங்களில் ஒருவரை இழந்துவிட்ட துக்கத்தையே நாம் அடைகிறோம் என்று தோன்றுகிறது. பலவிதமான எழுத்தாளர்களில் எப்படி ஒருசிலரை குறிப்பாக நமக்கு மிகவும் பிடித்துவிடுகிறது என்று யோசித்துப் பார்த்தேன். அந்த எழுத்தாளனின் சிந்தனைகளும் எண்ணங்களும் வாசகனுடனான அதே அலைவரிசையோடு இணைந்து ஒத்துப்போகிற அந்தப் புள்ளிதான் அதனுடைய துவக்கமாக இருக்கக்கூடும்.

ஓர் உதாரணம். நெரிசலான பேருந்தில் பால் வித்தியாசங்களில்லாமல் மனித உடல்களுடன் கரைந்துப் போய் ஆக்டோபஸீக்கு சிக்கன்குனியா வந்த போஸில் எசகுபிசகாக எரிச்சலுடன் நின்று கொண்டிருப்போம் அல்லவா? சினிமா பாடல் காட்சிகளில் வருவது போல் திடீரென்று மற்ற அனைவரும் மறைந்து போய் நாம் மட்டும் காலியான பேருந்தில் அதே போஸில் நின்று கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? நான் நினைத்து நினைத்து சிரிக்கும் என்னுடைய இந்த அபத்தமான நகைச்சுவையை எழில்வரதனின் ஏதோ ஒரு சிறுகதையில் அப்படியே சந்திக்கும் போது எனக்கு எழில்வரதனை அந்தக் கணமே பிடித்துப் போயிற்று. எனக்குப்பிடித்த எழுத்தாளர்களின் வரிசையில் எழில்வரதனும் இயல்பாகவே இணைந்து விட்டார்.


ஜெயந்தனை நான் இணைத்துக் கொண்டதும் இதே மாதிரியான தருணமொன்றில்தான். 'வெள்ளம்' என்றொரு சிறுகதை. காமத்தைப் பற்றின நுட்பமான சித்திரங்களைக் கொண்ட சிறுகதையது. மனைவி ஊருக்குப் போயிருக்கும் ஒரு மதிய வேளையில் மழை பெய்ய ஆரம்பிக்க அதன் தொடர்ச்சியாக பாலுறவு கிளர்ந்த எண்ணங்களுடன் படுத்திருக்கும் ஒருவன், மழைக்கு வந்து ஒதுங்கும் வெவ்வேறு வயதுடைய மூன்று பெண்களைப் பார்க்கும் உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தும் சிறுகதை. அந்தக் கணமே ஜெயந்தனை மிகவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

அவரது சிறுகதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேடியதில் மிகச் சிரமப்பட்டே அடைய முடிந்தது. திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடையொன்றில் மேய்ந்து கொண்டிருந்த போது ஜெயந்தனின் சிறுகதைத் தொகுதியான 'மனச்சாய்வு' கண்ணில்பட்டது. இன்ப அதிர்ச்சியுடன் அதை எடுக்க முனைவதற்குள் பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு நபரும் அதே புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். அடுத்தவர் தேர்வு செய்திருப்பதை வாங்கத் துடிப்பதுதானே தமிழ் மரபு? அசுவாரசியமாக புரட்டிப் பார்த்து அவர் தூக்கிப் போட்ட அந்த நூலை கைப்பற்றியவுடன்தான் ஆசுவாசமாக இருந்தது. பின்னதான புத்தக கண்காட்சியின் போது அவருடைய மொத்த சிறுகதைகளையும் இரண்டு பாகங்களாக பதிப்பித்திருந்ததை (ராஜராஜன் பதிப்பகம்) கண்டு அவற்றை வாங்கின பிறகுதான் மற்ற சிறுகதைகளையும் வாசிக்க முடிந்தது. (இப்போது வம்சி பதிப்பகம் எல்லாச் சிறுகதைகளையும் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்).

()

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இலக்கியக்கூட்டம் ஒன்றில் ஜெயந்தனை சந்தித்தேன்.

புகைப்படத்தில் ஏற்கெனவே பார்த்திருந்தபடியால் அவரைப் பார்த்த போது உடனே அடையாளங்கண்டு கொள்ள முடிந்தது. இயல்பாகவே எனக்குள்ள கூச்ச சுபாவம் காரணமாக அவரை அணுகி உரையாடுவதற்கு தயக்கமிருந்தாலும் பிடித்த எழுத்தாளர் என்பதால் கூச்சத்தை உதறி பேச ஆரம்பித்தேன். அவரின் சிறுகதையொன்றை சிலாகித்து பேசினதை கேட்டுக் கொண்டார். இன்னொரு  சிறுகதையில் வந்திருந்த சம்பவமொன்று திரைப்படமொன்றில் பயன்படுத்தப்பட்டிருந்ததைப் பற்றியும் கூறிக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களே இந்த உரையாடல் நீடித்தது. பிறகு என்ன நினைத்தாரோ, உரையாடலிலிருந்து திடீரென்று விலகி என்னிடமிருந்து பிய்த்துக் கொண்டு இன்னொருவரிடம் பேச ஆரம்பித்தார். என்னை அவர் அவமானப்படுத்திவிட்டதாக உணர்ந்தேன். அப்போது இளைஞன்தானே? ஆத்திரம் பொங்கியது. 'இந்த எழுத்தாள மயிராண்டிகள் எல்லாம் இப்படித்தான்' என்று குரோதமாக எண்ணிக் கொண்டேன். பிறகு அவருடைய சிறுகதைகளை வாசிக்கும் போது 'இன்னாத்த கிழிச்சுட்டான். இந்த மாதிரி ஆயிரம் கதை நான் எழுதுவேன்' என்று நினைத்துக் கொண்டேன். 'ஒரு எழுத்தாளரின் மறுபக்கம்' என்கிறதோர் கட்டுரையை ஜெயந்தனின் பெயர் குறிப்பிடாமல் எழுதி அப்போது உறுப்பினராக இருந்த 'ராயர் காப்பி கிளப்' மடற்குழுமத்தில் இட்டேன்.

இப்போது யோசிக்கையில் அனைத்துமே சிறுபிள்ளைத்தனமாகவும் கிறுக்குத்தனமாகவும் தோன்றுகிறது. அப்போது இவை தோன்றாமைக்கு அந்த வயதுக்குரிய நியாயங்கள் இருக்கத்தான் செய்தன. ஒரு எழுத்தாளரிடம் ஏற்படும் தனிப்பட்ட கசப்புகள் அவருடைய படைப்புகளுடனான வாசிப்பனுபவத்தை பாதிப்பதின் அபத்தத்தைப் பற்றியும் மேற்சொன்ன  கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

இந்த அஞ்சலிக் கட்டுரையை எழுதுவதை முன்னிட்டு மேலே குறிப்பிட்டிருந்த 'வெள்ளம்' சிறுகதையை தேடி வாசித்தேன். சில கதைகள் அப்போது ஏற்படும் பரவசத்தை சில வருடங்கள் கழித்து ஏற்படுத்துவதில்லை. ஆனால் 'வெள்ளம்' சிறுகதை இப்போதைய வாசிப்பிற்கும் அந்த உணர்ச்சியை பாதுகாப்பாக தருவதில் வெற்றி பெற்றது. 'மனச்சாய்வு' 'அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்' 'முனுசாமி' 'ஞானக்கிறுக்கன் கதைகள்' போன்ற சிறுகதைகள் மிகச் சிறந்த படைப்புகளாக உடனடி நினைவுக்கு வருகின்றன. தொகுதியை மீள்வாசிப்பு செய்துவிட்டு அவற்றைப் பற்றி எழுத முயல்கிறேன். இடதுசாரி சிந்தனைகளை உள்ளடக்கிய அவரது எழுத்து எந்தவித அலங்காரமுமில்லாத எளிமையானது. சாவசகாசமாக சம்பவங்களை விவரிப்பது. ஆனால் வாசிப்பின் நிறைவில் வலுவான பாதிப்பை ஏற்படுத்துவது.

ஜெயந்தனுக்கு என்னுடைய அஞ்சலி.

(ஜெயந்தனின் புகைப்படம் தொகுதியின் பின்னட்டையில் இருந்து எடுக்கப்பட்டது).


தொடர்புடைய பதிவுகள்:

தினமணி செய்திக் குறிப்பு

ஜெயந்தனின் சிறுகதையொன்றை வாசிக்க

இன்னொரு வாசக அனுபவமும் அஞ்சலியும்

ஜெயமோகனின் அஞ்சலி

ஜெயந்தனின் குறுநாவல் குறித்தான விமர்சனம்

suresh kannan

Wednesday, February 03, 2010

அஞ்சுவண்ணம் தெரு

தோப்பில் முஹம்மது மீரானின் இன்னுமொரு சுவாரசியமான புதினம்.

நாஞ்சில் நாட்டின் பிரத்யேக வட்டார மொழியும் இசுலாமியச் சமூகப் பின்னணியில் இயங்குகிற காரணத்தால் ஆங்காங்கே இரைந்திருக்கிறஅரபிச் சொற்களும் வாசகனை ஒரு வேளை ஆரம்பத்தில் திணறடிக்கலாம். ஆனால் அது அதிகாலை குளிர் குளத்தில்  நீராடுவதைப் போலத்தான். மனதைத் திடப்படுத்தி முதல் முங்கை போட்டுவிட்டால் பிறகு எழுந்திருக்க மனதே வராத ஆனந்தத்தை மீரானின் புதினத்தின் மூலமாக அனுபவிக்க முடிகிறது.

கடலோர கிராமத்தின் கதை,  சாய்வு நாற்காலி, துறைமுகம்... என்று மீரானின் படைப்புகளில் தொடர்ச்சியாக இதை உணர்கிறேன். வழக்கமான கடலோர மனிதர்களைத் தவிர்த்து தறி நெசவுத் தொழிலில் ஈடுபடும் மனிதர்கள் இருந்தாலும் இந்தப் புதினத்தின் மையம் அவர்களைப் பற்றியல்ல. தொன்மங்களும் நம்பிக்கைகளும் நவீன காலத்தின் பரிணாமத்தில் மெல்ல சிதறுண்டுப் போவதை இந்தப் புதினம் விவரிக்கிறது. தான் ஒரு சிறந்த கதை சொல்லி என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார் மீரான். இந்தச் சமூகப் புதினத்தை துப்பறியும் நாவல் போல் மிகுந்த சுவாரசியத்துடன் வாசித்து முடித்தேன்.


மலையாளத்து மகாராஜா சோள (?) பாண்டிய நாட்டிலிருந்து ஐந்து நெசவுக் குடும்பங்களை தருவித்து அவர்களுக்கான நிலத்தையும் ஒதுக்கி குடியமர்த்துகிறார். எனவேதான் அந்தத் தெருவின் பெயர் இயல்பாக 'அஞ்சு வண்ணம் தெரு'வாகிறது. 'அடக்கம் செய்யப்பட்ட தாய்'தான் அந்தத் தெரு மனிதர்களுக்கு தெய்வமாக இருக்கிறது. நாட்டார் மரபில் சிறு தெய்வங்கள் தோன்றும் அதே பின்னணிதான். மகாராஜா உலாவரும் போது அவரை மறைந்திருந்து பார்த்த தஞ்சாவூர் தாயும்மாவின் (ஹாஜரா) அழகில் மயங்கி மணம் முடிக்க தூது அனுப்புகிறார். ஒரு காபிருக்கு இசுலாமிய பெண்ணை மணம் முடிப்பதாவது? தந்தை கேட்கிறார் " மன்னன் உன்னை மனைவியாக்கி விடுவான். நீ காபிராக இறக்கப் போகிறாயா? ஈமானுள்ள முஸ்லிமாக இறக்க விரும்பிறியா?" மகள் சொல்கிறாள் "ஈமானுள்ள முஸ்லிமாக". "அப்படியானால் இந்த குழியில் இறங்கம்மா". மதத்திற்காக உயிருடன் புதைக்கப்படுவதை விரும்பி ஏற்றுக் கொள்ளும் அவள் 'அடக்கம் செய்யப்பட்ட தாய்' ஸ்தானத்தை அடைந்த புராதன நிகழ்வு அஞ்சுவண்ணம் தெருவின் ஆதி வரலாறு தெரிந்தவரான பக்கீர் பாவா சாகிப் மூலமாக வாப்பாவிற்கும் தெரிவிக்கப்படுகிறது.

அஞ்சுவண்ணம் தெருவில் ஜரிகை தாவணியும் அங்கவஸ்திரமும் பட்டு வேட்டியும் நெய்யக்கூடிய ஒரே தறிக்காரனான அப்பாஸ் முதலியின் மண்வீட்டை இடித்து ஷேக் மதார் சாகிப் 'நபீசா மன்ஸிலை' கட்டுகிறார்.  அந்தத் தெருவிலுள்ள தைக்கப்பள்ளியை விட அந்தக் கட்டிடம் உயரமாக இருப்பது ஆபத்து என்று பள்ளிவாசலை பராமரிக்கும் மைதீன் பிச்சை மோதீன் முதற்கொண்டு தெருவாசிகள் அனைவரும் சொல்கின்றனர். ஆனால் இதற்கொரு பரிகாரமுண்டு. தைக்காப்பள்ளியின் மேலே ரெண்டு மினாராக்கள் கட்டிக்கொடுப்பதுதான் அது. ஆனால் தொழில் சுணங்கியிருப்பதாலும் ஷேக் மதாப் சாகிப்பிற்கு விருப்பமில்லாததாலும் அதை நிறைவேற்ற முடிவதில்லை. தொழில் நொடித்து வீட்டில் அமீனா புகும் நிலை ஏற்படுகிறது. தெய்வத்தின் சாபம் என்றே தெருவாசிகள் இதைக் கருதுகின்றனர்.

பிறகு பாழடைந்த அந்த வீட்டினுள் பெண் தற்கொலையொன்று நிகழ்வதாலும் பேய்கள் இருப்பதாலும் யாரும் அதனருகே செல்வதில்லை. மகளுக்காக வீடொன்றை வாங்க முயலும் 'வாப்பா' எதிர்ப்பையும் மீறி அதை வாங்கி வீட்டின் பெயரை 'தாருல் சாஹினா' வாக மாற்றினாலும்  அவருடைய மகளும் மருமகனும் அதிருப்தியோடும் தெருக்காரர்கள் கிளப்பிவிடும் பீதியுடனும் அங்கு வாழ்கிறார்கள். இந்த இடத்திலிருந்து புதினம் நிகழ்காலத்தில் இயங்கத் துவங்குகிறது. அதன் பின்னர் அஞ்சுவண்ணம் தெருவில் ஏதேதோ சம்பவங்கள் நடக்கின்றன. மதத்தின் புராதனத்தன்மையும் நவீனத்தன்மையும் மோதிக் கொள்கின்றன. தைக்காப்பள்ளி கவனிப்பாரின்றி பாழாகிறது. 'அடக்கம் செய்யப்பட்ட தாய்க்கு' விளக்கேற்றவோ சந்தனத்திரி கொளுத்துவதற்கோ ஆளில்லை. மைதீன் பிச்சை மோதீன் மர்மப்பாம்பு கடித்து பள்ளிவாசலிலேயே இறக்கிறார்.

()

மீரான் இயல்பான வட்டார மொழியில் காலத்தை முன்னும் பின்னுமாக கடக்கின்ற உத்தியோடு இந்தப் புதினத்தை நகர்த்திச் செல்கிறார். மத நம்பிக்கைச் சார்ந்த ஆனால் பகுத்தறிவிற்கு ஒட்டாத விஷயங்களை தன்னுடைய மேதமையை நுழைக்காமல் அதனின் இயல்பிலேயே விவரித்திருப்பது நன்றாக இருக்கின்றது. பள்ளி வாசலை பராமரிக்கிற பாவப்பட்ட பாத்திரமொன்று மீரானின் படைப்புகளில் தொடர்ந்து சித்தரிக்கப்படும். இதிலும் அது 'மைதீன் பிச்சை மோதீனாக' வருகிறது. தைக்காப்பள்ளியில் தொடர்ந்து விளக்கு எரிவதற்கு தெருவாசிகளிடம் இரந்து கொண்டேயிருக்கிறார். "அடக்கம் செய்யப்பட்ட தாய் இன்னு இருட்டிலையாக்கும்" மம்முதம்மா என்றொரு பாத்திரம் இதில் முக்கியமானதும் சுவாரசியமாக சித்தரிக்கப்பட்டதுமாகும். அஞ்சுவண்ண தெருவின் பெரும் சண்டைக்காரியாக குழாயடியை கைப்பற்றியிருக்கும் அவள் தெருவாசிகளின் அந்தரங்கங்களை சண்டையில் போட்டு உடைக்கிறாள். 'எப்படி இவளுக்குத் தெரிந்தது' என்று தெருவாசிகள் திகைப்படைகிறார்கள்; ஆச்சரியப்படுகிறார்கள்; ஜின்னுவின் துணையுடன்தான் இது சாத்தியமாகும். அவளுடைய வரலாறு மைதீன் பிச்சை மோதீன் மூலமாக வாப்பாவிற்கு தெரியப்படுத்தப்படும் போது நமக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திரத்திற்காவும் தன்னுடைய மதத்திற்காகவும் உயிரை முன்வந்து இழந்த ஒரு தியாகியின் மகள். வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களில் இவ்வாறு ஆயிரக்கணக்கான சித்திரங்கள் உள்ளன.  

பொதுவாக எல்லாப் படைப்புகளிலும் பிரதியை உருவாக்குகிற ஆசிரியனும் ஒரு பாத்திரமாக உள்நுழைந்திருப்பான். அப்படியாக இதில் 'வாப்பா'வரும் பாத்திரம் நூலாசிரியர் மீரானாக இருக்கக்கூடும் என யூகிக்கிறேன். இசுலாமிய மதத்தின் சில கூறுகளை அறியாமையில் ஏற்பட்டிருக்கிற மூடத்தனம் என்ற புரிதல் இவருக்கு இருக்கிறது. தைக்காப்பள்ளிக்கு மினாராக்கள் கட்டிக் கொடுக்காததால்தான் வீட்டில் துன்பங்கள் நிகழ்கின்றன என்று தீவிரமாக நம்பும் மகளையும் மருமகனையும் இவர் தெளிவுப்படுத்த முயன்று கொண்டேயிருக்கிறார். அவர்கள் தரும் எரிச்சலையும் சலிப்பையும் அறிவின் துணையுடன் கடக்கிறார். அதன்படியே அந்தக்குடும்பம் முதலில் சில பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டாலும் பின்னர் நல்ல நிலைமைக்கு ஆளாகிறது.

நாவலின் பிற்பகுதி கசப்பான வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது. மதத்தை நவீனப்படுத்துவதாகச் சொல்லும்   ஒரு கூட்டத்திற்கும் மரபின் மீதான நம்பிக்கைவாதிகளும் மோதல் நிகழ்கின்றன. இரு குழுக்களின் மோதலில் வேம்படி பள்ளி நீதிமன்றத்தின் கைக்குப் போகிறது. நீதிமன்றத்தின் சார்பாக ரீசிவராக நியமிக்கப்படுபவர் ஓர் இந்து. எல்லா வரவு செலவுகளையும் அவரிடம் ஒப்படைக்கவும் எந்தவொரு அனுமதிக்கும் அவரை நம்பியிருக்கவும் வேண்டியிருக்கிறது. இதிலுள்ள முரண்நகையை பூடகமாகச் சொல்லியிருக்கிறார் மீரான். எந்தவொரு வன்முறைச்சம்பவத்திற்கும் அப்பாவி இசுலாமியர்கள் பலிகடாக்களாக முன்நிறுத்தப்படுவதையும் சில நிகழ்வுகள் சொல்லிச் செல்கின்றன.

தறியின் நெசவு போலவே புரானத்தோடும் மத ஆன்மீகத்தோடும் இயைந்து இயைந்து கதை சொல்லியிருக்கும் மீரானின் படைப்புத் திறமைக்காகவும் வட்டார மொழிச் சுவைக்காகவும் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய புதினம் - அஞ்சுவண்ணம் தெரு.

அஞ்சுவண்ணம் தெரு,(நாவல்) அடையாளம் வெளியீடு, 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம்,621310 , முதல் பதிப்பு , 2008, விலை ரூ.130/ -

நாவல் குறித்த  ஜெயமோகனின் பதிவு
                                
                                 அ.ராமசாமியின் பதிவு
                           
                                 களந்தை பீர்முகம்மதுவின் பதிவு

மீரானின் 'துறைமுகம்' நாவல் குறித்த பதிவு

suresh kannan