Friday, January 07, 2011
நாஞ்சில் நாடன் பாராட்டு விழா (2)
விழா நிகழ்வு உரையாடல்களைப் பற்றின குறிப்புகள் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் நினைவில் இருப்பதை வைத்துக் கொண்டு பிற்பாடு எழுதுவது சற்று சிக்கலான வேலை. பேச்சாளர்கள் சொல்லாத ஒன்றை அல்லது அவர்கள் சொன்ன கான்டெக்ஸ்டை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வேறொரு அர்த்தம் வரும் வகையில் எழுதி விடுவோமோ என்ற நெருடல் எனக்கு இருந்துக் கொண்டேயிருக்கும். அதற்காகத்தான் ஜாக்கிரதையாக disclaimer எல்லாம் போட்டுக் கொள்வது. :)
குறிப்புகள் எடுத்துக் கொள்ளாமலிருப்பதில் இன்னொரு செளகரியமும் இருக்கிறது. கட்டிங் அடித்து விட்டுப் படுத்தாலும் கூட தேவையற்ற செய்திகள் மூளையிலேயே வடிகட்டப்பட்டு நாம் அவசியமானவை என்று நினைப்பதுவே மறுநாள் மீதியாக தங்கும். அதுவே போதும்.
இந்த மாதிரியான சங்கடங்கள் எதுவும் தேவையில்லாமல் விழா பற்றிய வீடியோ தொகுப்பை நண்பர் பத்ரி அவரது தளத்தில் வலையேற்றியிருக்கிறார். கேமிராக் கோணம் ஹீரோ அறிமுகக் காட்சி போல் லோ ஆங்கிளில் இருந்தாலும் ஒலியும் ஒளியும் தரமாக உள்ளது. ஆகவே என்னுடைய இடையூறின்றி நீங்களே நேரடியாக அதைக் காணலாம். அவருக்கு நன்றி.
எனவே பேச்சாளர்களின் உரையைத் தவிர்த்து விட்டு விழா பற்றிய என்னுடைய அவதானிப்புகளையும் இன்னபிற விஷயங்களையும் பற்றி எழுத உத்தேசம்.
* விழா நிகழ்ந்த ருஷ்ய கலாச்சார மையத்திற்கு நான் வருவது இதுவே முதன்முறை. இங்கு நிகழும் திரைப்பட வெளியீடுகள் பற்றின அறிவிப்பை அவ்வப்போது பத்திரிகைகளில் கண்டாலும் நானிருக்கும் வடசென்னையிலிருந்து இந்த இடத்திற்கு வருவது குறித்த அடையாள குழப்பங்களால் தயங்கி நின்று விடுவேன். இதற்குக் கூட நண்பர் சிவராமனின் உதவியோடுதான் வர முடிந்தது. சிறிய அரங்கு என்றாலும் எங்கிருந்து பார்த்தாலும் மேடை தெளிவாக தெரியுமளவிற்கு இருக்கை அமைப்பு இருந்தது. திரைப்படம் பார்ப்பதற்கு கச்சிதமான இடம்.
விழா ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அரங்கம் நிரம்பி பார்வையாளர்கள் நிற்க வேண்டியிருந்தது. மணிரத்னம் வந்திருந்து பின்வரிசையில் தயக்கமாக நின்றிருந்தார். விழா அமைப்பாளர்கள் அலறியடித்து முன்வரிசையில் அமர வைத்தனர். மணிரத்னம் வந்ததை புளகாங்கிதமாக சொல்லவரவில்லை. நிகழ்ச்சி நிரலில் தம்முடைய பெயர் இல்லாவிட்டாலும் முன்னணி இயக்குநர்கள் இலக்கிய விழாக்களுக்கு வருவது ஆரோக்கியமான அடையாளமாக தெரிகிறது. தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் சினிமாவிற்கும் உள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் அளவிற்கான இடைவெளி குறித்து பல ஆண்டுகளாக பேசிக் கொண்டிருக்கிறோம்.
புதுமைப்பித்தன் ஒரு ஆரம்பமாக தமிழ் சினிமாவிற்குச் சென்றார். அவர் அதை புரட்டிப் போடும் ஆவேசத்துடன் செல்லவில்லை. அதன் மூலம் தம்மை அரித்துக் கொண்டிருந்த வறுமையிலிருந்தும் காசநோயிலிருந்தும் தப்பிக்க முயன்றார். ஆனால் அதன் ஆரம்பத் துளியை சுவைப்பதற்குள் செத்துப் போனார். ஜெயகாந்தனால் குறிப்பிடத்தக்க சில முயற்சிகளை செய்ய முடிந்தது. ஆனால் நுண்ணுணர்வு மிக்கவர்கள் அங்கு தாக்குப்பிடிக்க முடியாது போலிருக்கிறது. "போங்கடா" என்று வந்து விட்டார். இதற்குப் பிறகு சுஜாதா, பாலகுமாரன் போன்ற வெகுஜன எழுத்தாளர்களைத் தவிர சிற்றிதழ் சார்ந்த வேறு எவரும் பெரிய அளவில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் தற்போது மறுபடியும் அதற்கான ஆரோக்கியமான அடையாளங்களைப் பார்க்க முடிகிறது. எஸ்.ரா., ஜெயமோகன் போன்றோர் சினிமாவில் நுழைந்திருக்கிறார்கள். 'காவல்கோட்டம்' நாவலை வசந்தபாலன் திரைப்படமாக உருவாக்குகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் இலக்கிய, நூல் வெளியீட்டு விழாக்களில் பங்கேற்கிறார்கள்.
நிற்க. கூட்டு முயற்சியால் உருவாக்கப்படும் சினிமாவில் இம்மாதிரியான சொற்ப நம்பிக்கைகளால் தமிழ் சினிமாவே ஏதோ 80-களின் கேரளம், வங்கம் போல ஆகிவிடும் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி நம்புவதும் அபத்தம். அதற்கு ஒட்டுமொத்த தமிழக ரசனையும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் மாறவேண்டும். அதுவொர் ஆகாயக் கனவு. ஆனால் அம்மாதிரியான நம்பிக்கைகள் தொடர்ந்து கொண்டிருப்பது ஆசுவாசத்தைத் தருகிறது.
பேச்சாளர்களின் உரையை வீடியோவில் நீங்களே காண முடியுமென்றாலும் அதிலிருக்கும் சில விஷயங்களை அடிக்கோட்டிட்டு குறிப்பிட விரும்புகிறேன்.
ஞாநி பேசியதில் முக்கியமானதொன்றை குறிப்பிட மறந்து விட்டேன். தி.ஜானகிராமன் உத்தியோக காரணங்களுக்காக பல ஆண்டுகள் டெல்லியில் வசித்தாலும் அவரது படைப்புகளில் டெல்லியின் வாசமோ தடயமோ இருந்ததிலலை. அதிலிரு்நதது முழுக்க முழுக்க தஞ்சையின் மணமும் கலாச்சாரமுமே. ஆனால் நாஞ்சில் நாடனின் படைப்புகள் அப்படியல்ல. அதில் நாஞ்சிலின் கலாச்சாரத்தோடு அவரது புலம்பெயர் பிரதேசமாக இருந்த மும்பையின் சூழல்களையும் காணமுடியும்.
ஒரு படைப்பாளிக்கு இது முக்கியமான விஷயமென்று நான் நினைக்கிறேன். தமிழ் இணையப் பதிவர்களில் பலர் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வசித்தாலும் அவர்களது பதிவுகளும் அவதானிப்புகளும் பெரும்பாலும் தமிழ் சினிமா, அரசியல், வம்பு, கிசுகிசு போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன. கணினி வழியாக அவர்களது மனம் தமிழகத்தையே சுற்றி வருகிறது. இதன் மூலம் தங்களின் 'ஹோம் ஸிக்னெஸ்ஸை' போக்கிக் கொள்ள முயல்கிறார்கள் என நினைக்கிறேன். மாறாக தாங்கள் வசிக்கும் பிரதேசத்தின் கலாச்சாரம், கலை, உணவு, வாழ்க்கை முறை போன்ற விஷயங்களையும் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
(மேலும்)
image courtesy: http://picasaweb.google.com/vishnupuram.vattam/NanjilFunctionChennai#
suresh kannan
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ஜெயமோகனே பரவாயில்லை , 2 நாள் ஆனாலும் ஒரே பதிவாக எழுதிவிடுவார் ,:)
\\ஒரு படைப்பாளிக்கு இது முக்கியமான விஷயமென்று நான் நினைக்கிறேன். தமிழ் இணையப் பதிவர்களில் பலர் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வசித்தாலும் அவர்களது பதிவுகளும் அவதானிப்புகளும் பெரும்பாலும் தமிழ் சினிமா, அரசியல், வம்பு, கிசுகிசு போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன. கணினி வழியாக அவர்களது மனம் தமிழகத்தையே சுற்றி வருகிறது. இதன் மூலம் தங்களின் 'ஹோம் ஸிக்னெஸ்ஸை' போக்கிக் கொள்ள முயல்கிறார்கள் என நினைக்கிறேன். மாறாக தாங்கள் வசிக்கும் பிரதேசத்தின் கலாச்சாரம், கலை, உணவு, வாழ்க்கை முறை போன்ற விஷயங்களையும் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.\\
இந்த வகையில் நாஞ்சில் நாடனின் எழுத்துகள் எனக்கு மிகவும் பிடிக்கும். தலைகீழ் விகிதங்கள் முழுக்க முழுக்க நாகர்கோவிலைச் சுற்றிச் சுற்றி வரும். மிதவை மும்பையை. சதுரங்கக் குதிரையில் கொஞ்சம் தமிழ்நாடு, கொஞ்சம் மகாராஷ்டிரா என்று வரும்.
அவருடைய கட்டுரைகளில்தான் பார்த்திருக்கும் ஊர்கள், அந்த மக்களின் வாழ்க்கை சூழல் பற்றியும் எழுதியிருப்பார் (உதாரணம், பெங்களூரில் வாழும் software professionals பற்றி ஆனந்த விகடனில் எழுதி இருக்கிறார்).
அரங்கசாமி: ஜெயமோகனால் முடியும். மற்றவர்களிடம் எழுத்து எழுத்தாக அடிக்கும் கீபோர்டு இருக்கிறதென்றால் அவரிடம் வாக்கியம் வாக்கியமாக அடிக்கும் கீபோர்டு இருக்கிறதாமே? :-) (நன்றி அராத்து டிவிட்).
ஆனால் நாஞ்சில் நாடனின் படைப்புகள் அப்படியல்ல. அதில் நாஞ்சிலின் கலாச்சாரத்தோடு அவரது புலம்பெயர் பிரதேசமாக இருந்த மும்பையின் சூழல்களையும் காணமுடியும்.
எங்கள் அய்யனார் பல பதிவுகளில் தான் வசிக்கும் அரேபிய நாட்டை பற்றி, அங்குள்ள பழக்க வழக்கங்கள் பற்றி எழுதி உள்ளார், எழுதி வருகிறார்.
படிச்சாச்சு... லிங்குக்கு நன்னி :)
http://jeyakumar-srinivasan.blogspot.com/2007/10/blog-post_05.html
கத்தார் பற்றிய சிறு அறிமுகம். 2007ல் எழுதியது
நன்றாக இருந்தது உங்களின் அவதானிப்பு. கடைசி இரண்டு பாராக்கள் சிந்திக்க வைத்தது. நன்றி சுரேஷ் கண்ணன்.
Post a Comment