Monday, September 13, 2010

தமிழ் சினிமா: அசலும் நகல்களும்


தமிழ் சினிமா vs plagiarism பற்றின விவாதம் நீண்ட காலமாகவே நடந்து வருவதுதான் என்றாலும் தற்போதைய இணையச் சூழலில் அது சற்று மேலெழும்பி வந்திருப்பதால், ஒரு சினிமா பார்வையாளனாக (விமர்சகன்'னு சொன்னாலே இப்பல்லாம் அடிக்கறங்கப்பா) என்னுடைய 'கருத்தையும்' பதிவு செய்து 'கந்தசாமி'யாக விருப்பம்.

சினிமா பற்றி தனக்கு அதிகம் தெரியாது என்று ஒருபுறம் சொல்லி்க் கொண்டே so called சினிமா விமர்சகர்களை விட மிக நுட்பமான அவதானிப்புகளை முன்வைக்கும் ஜெயமோகன் சமீபத்தில் இவ்வாறாக எழுதினார்.

அறிவுஜீவி பாவனையுடன் எழுதப்படும் பல ’அதீத’ விமரிசனங்களையும் வாசிப்பதுண்டு, சினிமாவை கொஞ்சம் தெரிந்தவர்கள் நகைச்சுவைக்காக அவற்றை வாசிக்கலாம். எண்பது தொண்ணுறுகளின் சினிமாக்கூட்டமைப்புகளின் காலத்திலேயே இத்தகைய மூளைச்சிலும்பல்கள் சகஜம். இந்திரா பார்த்தசாரதியின் தந்திரபூமி நாவலில் டெல்லியில் அரசு குமாஸ்தாவாக இருக்கும் ஒரு ’சினிமா அறிவுஜீவி’யை வேடிக்கையாகச் சித்தரித்திருப்பார்.

பார்த்த உலகத்திரைப்படங்களை தமிழ்ப்படங்களுடன் ஒப்பிட்டு ’இதான்யா அது’ என்பதே அதிகமும் வாசிக்க நேரும் சினிமா பேச்சு. நான் நெடுங்காலமாகவே ’சினிமா பாரடைஸ்’ படத்தை ஒட்டி வசந்தபாலனின் ‘வெயில்’ எடுக்கப்பட்டிருக்கிறது என வாசித்து இருக்கும்போல என நம்பிக்கொண்டிருந்தேன். சமீபத்தில் சினிமா பாரடைஸ் படத்தைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. முற்றிலும் வேறு படம் இது. உண்மையிலேயே சினிமாபாரடைஸை நம்மவர்கள் இப்படித்தான் புரிந்துகொண்டார்களா?

வெயிலில் முருகேசன் ஒரு திரையரங்கில் பணியாற்றுகிறான், அந்த திரையரங்கு இடிக்கப்படுகிறது. அதேபோல ஒரு காலாவதியான கிராமத்திரையரங்கு சினிமா பாரடைஸில் வருகிறது. இவ்வளவுதான் ஒற்றுமை. ‘அதிலும் தியேட்டர் இதிலயும் தியேட்டர்’ என்ற அளவுக்குத்தான் நம்மவர்கள் உலகசினிமாவை புரிந்துகொள்கிறார்கள் என்று தோன்றுகிறது.

வெயில் படத்தைப் பார்க்கும் எவருக்கும் ஏன் அதில் சினிமா வருகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். முருகேசன் காலாவதியான ஒரு மனிதன். ஆகவே காலவாதியான ஒரு தொழிலை அவன் செய்யவேண்டும். மக்களுக்கு அது காலாவதியானது என்று தெரிந்த, காட்சியாக காட்டக்கூடிய இயல்புகொண்ட இரு தொழில்கள் டூரிங் தியேட்டரும் கட்டை அச்சும். கட்டை அச்சு அச்சகம் ஏற்கனவே சேரனால் அவரது ’தவமாய் தவமிருந்து’ படத்தில் காட்டப்பட்டுவிட்டது. ஆகவே வேறு வழியில்லை. இந்தமாதிரி ‘மூலம்’ கண்டுபிடிப்பதில் ஒரு பெரும்படையே ஈடுபட்டிருக்கிறது. ஒரு படத்தின் கருவோ சில காட்சிகளோ இன்னொன்றுபோல் இருந்தால் ’அடிச்சுட்டான்யா’ என்ற உற்சாகம். ‘மூலத்தையே பார்த்தவன்யா நான்’ என்ற பெருமிதம்

எந்தெந்த தமிழ் சினிமாக்கள், எந்தெந்த உலகத் திரைப்படங்களிலிருந்து நகல் செய்யப்பட்டவை என்று அதிஉற்சாகமாக தயாரிக்கப்படும் பட்டியல்களை முன்னர் நானும் பார்த்து வாய் பிளந்திருக்கிறேன். 'த்தா.. எல்லாத்தையும் காப்பி அடிச்சுடறாங்கடா" என்று உற்சாகமாக உரையாடியிருக்கிறேன். ஆனால் உண்மையாகவே அவ்வாறான பட்டியல்களில் உள்ள திரைப்படங்களை பார்த்து ஒப்பிடும் போது ஏமாற்றமாகவும் ஆயாசமாகவும் இருந்தது. நகல் என்பதின் அடிப்படை புரிதல் கூட இல்லாமல் ஏதோ ஒரு சாயலை, காட்சிக் கோர்வையை, உடல்மொழியை, ஆடை வடிவமைப்பை, தற்செயலான ஒற்றுமையை மாத்திரம் வைத்துக் கொண்டு 'படம் முழுவதுமே இதிலிருந்து அது நகலெடுக்கப்பட்டது' என்ற எளிய முடிவிற்கு உடனே வந்துவிடுகிறார்கள். இது நம்மிடையே உள்ள தாழ்வு உணர்ச்சியின் இன்னொரு வகை வெளிப்பாடே. . 'வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தாம்பா' என்ற,  உலகின் எந்த சிறந்த விஷயமென்றாலும் அது மேற்குலகில் 'அதிவீர்ய' மூளைக்காரர்களின் தயாரிப்பாகத்தானிருக்க முடியும் என்கிற முன்முடிவுக்கு உடனே வந்துவிடுவது. 

நிற்க. நான் ஏதோ உண்மையாகவே அப்பட்டமாக 'காப்பியடிக்கும்' தமிழ் சினிமா இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் வக்காலத்து வாங்க முனைவதான ஒரு தோற்றம் வருவதால் இங்கு அதை தெளிவுபடுத்தி விடுகிறேன். அதுவல்ல என் நோக்கம். இந்த அறிவுசார் சொத்துத் திருட்டென்பது உலகெங்கும் பரவலாக உள்ளது போல இங்கும் பழைய தமிழ் சினிமாக் காலங்களிலிருந்தே உருவாகி விட்டது. சினிமா என்கிற நுட்பம் வடக்கிலிருந்து தெற்கை நோக்கி பிரபலமாகும் போது இங்கே அப்போதிருந்த தெருக்கூத்தும் புராண அடிப்படை நாடகங்களும் அப்படியே எவ்வித மாற்றமுமில்லாமல் திரைக்கு நகர்ந்தன. பின்னர் அதுவும் சலித்துப் போன போது மிகச்சிறந்த ஹாலிவுட் டிராமாக்கள், இந்தியாவின் மற்ற மாநில குடும்ப டிராமாக்கள் (குறிப்பாக வங்காளம்) 'தமிழ்ப்படுத்தப்பட்டு' வெளியாகின.

இப்பவும் நீங்கள் பிலிம் நியூஸ் ஆனந்தன், அறந்தை மணியன் நாராயணன் போன்றவர்கள் எழுதிய பழைய சினிமாக் கட்டுரைகளை படித்துப் பார்த்தால் "----------- படம் அந்த தயாரிப்பாளருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. இதை தமிழில் எடுத்தால் நிச்சயம் கையைச் சுடாது என்று தோன்றியது. உடனே ---------- நடிகருக்கு இதைப் போட்டுக் காட்டி அவரின் ஒப்புதலைப் பெற விரும்பினார்.' என்று பல சமயங்களில் படங்களின் பெயரைக் குறிப்பிடாமலேயே எழுதப்பட்டிருக்கும். இந்தியாவிற்குள் உருவாக்க்ப்பட்டிருக்கும்  திரைப்படம் என்றால் சமயங்களில் முறையான மறுஉருவாக்க உரிமையை சட்டரீதியாகப் பெற்றிருப்பார்கள். இல்லையென்றால் அதை காப்புரிமை சட்டத்திலிருந்து தப்பிக்கும் வகையில் கதையின் போக்கை மாற்றியமைப்பார்கள். இரண்டு படைப்புகளுக்குமிடையே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஒற்றுமையான அம்சங்கள் இருந்தால்தான் அது 'திருட்டு' என்று காப்புரிமைச் சட்டம் கூறுகிறது. இரண்டு தனி நபர்களுக்கும் ஒரே மாதிரியான கற்பனை இருந்திருக்க வாய்ப்புண்டு என்கிற benefit of doubt அடிப்படையில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி பல கதை / திரைக்கதையாசிரியர்கள் தங்கள் கைவண்ணத்தை காண்பித்து வருகிறார்கள்.

இவ்வாறு நகலெடுக்கப்படுவதில் பல வகைகளை என்னால் காண முடிகிறது. முழுதிரைப்படத்தையும் காட்சி, காமிரா கோணம், ஆடை வடிவமைப்பு, உடல்மொழி என்று அப்படியே காப்பியடிப்பது. இல்லையென்றால் படத்தின் பிரதான மையத்தை, முடிச்சை மாத்திரம் எடுத்துக் கொண்டு அதை அப்படியே உள்ளூர் கலாசாரத்தில் போட்டுப் பிசைவது. அல்லது குறிப்பிட்ட காட்சிகளை, திரைக்கதை பாணியை என்று ஏதோ ஒரு சிறப்பான அம்சத்தை  மாத்திரம் 'தம்முடைய'  படைப்பில் உபயோகிப்பது. சமயங்களில் எதனுடைய மூலம் எதுவுடையது என்பதை கண்டுபிடிப்பதே சிக்கலாகவும் அதனுடைய தொடர்ச்சியோடு நூல்பிடித்து பின்னோக்கி பயணிப்பதாக அமைந்துவிடும்.

பொதுவாக நடிகைகள் பேட்டியளிக்கும் போது  'கவர்ச்சியாக நடிப்பேன். ஆபாசமாக நடிக்க மாட்டேன்' என்று மழுப்புவார்களே, அவ்வாறு இன்ஸ்பிரேஷனுக்கும் இமிட்டேஷனுக்கும் துல்லியமான வேறுபாடு இருக்கிறதா என்றால் இருக்கிறது. மேற்கண்ட வழிகளில் உருவாக்கப்படுவது இமிட்டேஷன் என்றால், ஒரு படைப்பினால் அகவுணர்வு சார்ந்த பாதிப்பை அல்லது படைப்பின் மையத்திலிருந்து ஒரே ஒரு துளியை தொட்டுக் கொண்டு அதை அசலிலிருந்து முற்றிலும் விலகி தம்முடைய சுய கற்பனை வண்ணங்களின் மூலம் கேன்வாஸி்ல் ஓவியமாக தீடடுவதை இன்ஸ்பிரேஷனாக சொல்லலாம். இவ்வாறு செய்யப்படுவதை சம்பந்தபட்ட படைப்பாளியே முன்வந்து சொன்னால்தான் சமயங்களில் நம்மால் கண்டுபிடிக்க இயலும். அப்படிச் சொன்னாலும் கூட நம்மால் பெரிதாக எந்தவொரு வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க இயலாது. உதாரணமாக புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை' குறுநாவலின் பாதிப்பினால்தான் 'உதிரிப்பூக்களை' உருவாக்கினதாக இயக்குநர் மகேந்திரன் குறிப்பிடுகிறார். ஆனால் இரண்டு படைப்புகளிலும் பெரிதாக எந்தவொரு ஒற்றுமையும் இல்லை என்பதே விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. இது படைப்பாளிகளின் தார்மீகமான உணர்ச்சி சம்பந்தப்பட்டது.

மற்ற படைப்பாளிகள் இவ்வாறு ஒப்புக் கொள்ளாததற்கு காரணமாக சட்டரீதியான சிக்கல்களோ, முதலீட்டின் ஒரு பகுதியை ஒதுக்குவது குறித்த கஞ்சத்தனமோ, மற்றவரின் படைப்பு என்று ஒப்புக் கொள்ள முடியாத ஈகோ பிரச்சினையாகவோ இருக்கலாம். எப்படியிருந்தாலும் ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் இது மகா பெரிய தவறுதான். நம்முடைய இலக்கியங்களிலிருந்தோ, இலக்கியவாதிகளின் ஒத்துழைப்புடனோ பல நல்ல கதைகளை திரைப்படமாக உருவாக்கலாம். ஆனால் சூப்பர் ஸ்டார்களுக்கு கோடிக்கணக்கிலும் நாயகிக்கு சில்லி சிக்கன் வாங்க ஐம்பது கிலோ மீட்டருக்கு பெட்ரோல் செலவு செய்யத் தயங்காத நம் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் எழுத்தாளருக்கு பணம் தர வேண்டுமானால் மாத்திரம் இந்த 'சிக்கன்வாதிகள்' உடனே சிக்கனவாதிகளாக மாறி விடுவார்கள். இது மாத்திரமல்லாமல் பெரும்பாலான தமிழ் இயக்குநர்களுக்கு ஒரு பெரிய வியாதி இருக்கிறது. அது கதை, திரைக்கதை, பாடல்கள், எடிட்டிங், ஒளிப்பதிவு, தயாரிப்பு, இசை, டைரக்ஷன், போஸ்டர் ஒட்டுதல், சவுண்ட் மிக்ஸிங், தயாரிப்பு நிர்வாகம்,  என ஒரு பெரிய பட்டியலையே டைட்டில் கார்டில் போட்டுக் கொள்ள விரும்பும் மோகம்தான் அது. இதனாலேயே மற்ற படங்களிலிருந்து காப்பியடித்ததை ஒப்புக் கொள்வதில்லை. மேலும் யாராவது கண்டுபிடித்து சுட்டிக்காட்டினாலும் மறுத்து சுட்டிக் காட்டியவர் மீதும் பாய்வது.

உலக சினிமாக்களிலிருந்து நகலெடுக்கப்பட்ட தமிழ் சினிமாக்கள் என்ற பட்டியலைப் பற்றி ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன் அல்லவா? அதில் சில சதவீத உண்மையிருந்தாலும் மற்றவை எவ்வாறு அரைகுறை புரிதலோடு இடம் பெற்றிருக்கிறது என்பதைப் பார்ப்போம். மணிரத்னத்தின் ஆய்த எழுத்து, Amores perros என்கிற மெக்சிகன் திரைப்படத்தின் அப்பட்டமான நகல் என்று நீண்ட ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

ஒரு சம்பவத்தை மையமாக்கி அதன் மூலம் சம்பந்தப்பட்ட பல தனி நபர்களின் வாழ்க்கை நிகழ்வுகள்  பின்னோக்கி சொல்லப்பட்டிருக்கிறது என்கிற திரைக்கதை உத்தி  மாத்திரமே இரு படத்திற்குமான ஒற்றுமை. முழுத்திரைப்படமும் அல்ல. அரசியலை அரசியல்வாதிகளை மேம்போக்காக குற்றஞ்சொல்லிக் கொண்டிருக்காமல் அதை ரவுடிகளிடம் ஒப்படைக்காமல் படித்த மாணவர்கள் அரசியலில் பங்குபெற முன் வர வேண்டும் என்பதுதான்ஆய்த எழுத்து திரைப்படத்தின் மையம். Amores Perros-ல் இப்படியான மையமே கிடையாது. பல தனி நபர்களின் சம்பவங்கள் அதன் போக்கில் அதற்கான வன்முறையின் உக்கிரத்தோடு சொல்லப்படுகின்றன.

தமிழ்ப்படங்கள் ஆங்கிலம் அல்லது மற்றமொழிகளிலிருந்துதான் நகலெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற தீர்மானமான முன்முடிவைப் பற்றியதற்கும் ஓர் உதாரணத்தை பார்த்து விடலாம்.

சாமுவேல் ஜாக்சனின் ONE EIGHT SEVEN என்கிற திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது அதிர்ச்சி. அது பெரும்பாலும் கமலின் 'நம்மவரின்' காட்சிகளை ஒத்திருந்தது. ஆஹா! கமல் இதையும் உருவி விட்டார் போலிருக்கிறதே என்று நினைத்தேன்.

ஆனால் விவரங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது நம்மவர் 1995-ம் ஆண்டும்
ONE EIGHT SEVEN 1997-ம் ஆண்டும் வெளிவந்திருக்கின்றன. நம்மவரின் இன்ஸ்பிரேஷன்,  Sidney Poitier நடித்து வெளிவந்த 1967-ல் வெளிவந்த To Sir, with Love ஆக இருக்கலாம். ஆனால் ONE EIGHT SEVEN 'நம்மவரில்' இருந்து நகலெடுக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் (கமலுக்கும் - கரணிற்கும் கழிவறைக்குள் நிகழும் அந்த ஈகோ மோதல் உட்பட) அந்தப் படத்திலிலேயே உள்ளன. ஆனால் நம்மவரை விட ஆங்கிலப்படமே சிறப்பாகவும் யதார்ததமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்லி விடுகிறேன். சாமுவேல் ஜாக்சன், கமல் போல் 'பிளேடு பக்கிரி' சண்டையெல்லாம் போடுவதில்லை.

கமல் Mrs.Doubtfire மாதிரி பல ஹாலிவுட் படங்களை அப்படியே ஸ்வாகா செய்திருப்பது வேறு விஷயம். ஹேராம் கூட ர.சு. நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்' என்கிற புதினத்தை பெரும்பாலும் ஒத்திருக்கிறது என்ற சர்ச்சையும் உண்டு. ஆனால் இவ்வாறு நகலெடுப்பதில் அவர் தனிமனிதர் அல்ல. நாம் தமிழ் சினிமாவின் பிதாமகர்கள் என்று போற்றும் இயக்குநர்கள் உட்பட பெரும் படையே உள்ளது.

கெளதம் மேனன், சசி போன்று சில இயக்குநர்கள் தங்களுக்கு பாதிப்பை ஏற்படு்த்தின படைப்பின் மூலத்தை டைட்டில் கார்டிலேயே சமீபத்தில் குறிப்பிட்டு வருவது ஆரோக்கியமான விஷயம். முன்னரே சொன்னது போல தமக்கான கதைகளை டிவிடிகளில் தேடாமல் தமிழ் அல்லது மற்ற மொழி இலக்கியங்களிலிருந்தும் எழுத்தாளர்களிடமிருந்தும் அவற்றுக்கான முறையான ஒப்புதலோடு தேடினால் பல நல்ல தமிழ் சினிமாக்கள் உருவாகும்.


suresh kannan

28 comments:

Prathap Kumar S. said...

// காட்சிக் கோர்வையை, உடல்மொழியை, ஆடை வடிவமைப்பை, தற்செயலான ஒற்றுமையை மாத்திரம் வைத்துக் கொண்டு 'படம் முழுவதுமே இதிலிருந்து அது நகலெடுக்கப்பட்டது' என்ற எளிய முடிவிற்கு உடனே வந்துவிடுகிறார்கள்.//

இதைத்தான் நானும் சொல்கிற்ன...ஒரே மாதிரி கதாபாத்திரங்கள் இருவேறு படங்களில் வந்தால் அதை காப்பி அடித்திருக்கிறார்கள் என்று சொல்வது சிரிப்பை வரவழைக்கிறது.

ஒரு கருவை எடுத்து அதை நமக்கு தகுந்தாமாதிரி தயாரித்து கொடுப்பதிற்கெல்லாம் காப்பிரைட்ஸ்
வாங்க கிளம்பினால் உலகஅளவில் ஒரு மொழியிலும் படங்கள் வெளிவராது...எல்லாமே ஒன்றொடன்றின் பாதிப்பில் எடுக்கப்படுவைதான்.

Prathap Kumar S. said...

பகிர்ந்துக்கொண்டதற்கு
நன்றி சுரேஷ் ஜீ...

Jackiesekar said...

நல்லா பொறுமையா சொல்லி இருக்கிங்க...நன்றி

சென்ஷி said...

//

கமல் Mrs.Doubtfire மாதிரி பல ஹாலிவுட் படங்களை அப்படியே ஸ்வாகா செய்திருப்பது வேறு விஷயம். ஹேராம் கூட ர.சு. நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்' என்கிற புதினத்தை பெரும்பாலும் ஒத்திருக்கிறது என்ற சர்ச்சையும் உண்டு. ஆனால் இவ்வாறு நகலெடுப்பதில் அவர் தனிமனிதர் அல்ல. நாம் தமிழ் சினிமாவின் பிதாமகர்கள் என்று போற்றும் இயக்குநர்கள் உட்பட பெரும் படையே உள்ளது.
//நான் கூட கமலுக்கு உலக நாயகன் பட்டம் இப்படி நிறைய வெளிநாட்டு படங்களை காப்பியடிச்சு நடிச்சதால கிடைச்சுதுன்னு நினைச்சுட்டேன் சு.க. :))

Mohan said...

மிகவும் விரிவாக அலசியிருக்கிறீர்கள். மிகவும் நன்றாக இருந்தது!

chandramohan said...

அன்புள்ள சுரேஷ்..
இணையத்தில் கருந்தேள் கண்ணாயிரமும், மயில்ராவணன் - கோகுலும் இதை பற்றி விவாதம் செய்கிறார்கள். கமலின் பெரும்பான்மையான படங்கள் நேர்மையாக சொல்லப்போனால் inspired படங்கள். அதற்கான சான்றை நான் பலமுறை படித்திருக்கிறேன். படங்களை பார்த்து உறுதி செய்தும் இருக்கிறேன். இது குறித்து நம்முள்ளே நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. கமல் மட்டும் அல்ல இந்தியாவின் பெரும்பான்மையான திரைக்கலைஞர்களும் இந்த 'குற்றசாட்டின்' கீழ் வருவார்கள். எத்தனை சதவீதம் என்பதில் தான் இங்கு வேறுபடுத்தி பார்க்கவேண்டும். கமல் தான் நடிக்கும் படங்களின் Ghost Director ஆக பணிபுரிவதால் (!) பெரும்பாலும் படத்தின் வெற்றி (தோல்விகள்) மற்றும் தரம் பற்றிய விமர்சனங்கள் அவரை நோக்கியே வைக்கப்படுகின்றன. நன்றாக கவனித்தீர்கள் என்றால் அவர் பெரும் அளவில் ஈடுபாட்டோடு செய்த படங்களில் எண்பது சதவீதம் inspired or copy or whatever else (இது ஒரு பதிவர் எழுதி எனக்கு பிடித்த வாசகம்) படங்கள். மிக சிறந்த நடிகர் தான் என்றாலும் அவரை உலக அளவிலான அளவீட்டில் பார்க்கப்போனால் சற்று சங்கடமாக தான் இருக்கிறது. அந்த அளவுக்கு அவர் originality இல்லாமல் இருக்கிறார். அதற்காக உலக அளவில் குறிப்பாக ஹாலிவுட்டில் தயாராகும் படங்கள் ஒரிஜினல் தான் என்று யாரும் சொல்ல முடியாது. ஸ்பீல்பெர்க்கின் E.T. நமது சத்யஜித் ரே எழுதிய Alien என்ற கதையின் தாக்கத்தில் உருவானது என்று உங்களுக்கு தெரியும். அந்த கதையை ஆங்கிலத்தில் படமாக்க ரே திட்டம் வைத்திருந்தார் என படிக்கையில் ஆச்சர்யம் அடைந்தேன். உலகின் பலருக்கு ஆதர்சமான அகிரா குரோசோவா விடம் இருந்து ஹாலிவுட் நிறைய கற்று கொண்டது என்பதும் நமக்கு தெரிந்தவை தான்.

ஒரு கலைஞன் , படைப்பாளி கண்டிப்பாக எதோ ஒன்றில் இருந்து inspire அடைபவன் தான். ஏற்கனவே சொன்னது போல் எத்தனை சதவீதம் தன் உண்மையான படைப்பை தருகிறான் என்பதில் தான் அவனுடைய தரம் நிச்சயிக்கப்பட வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
நம் அனைவருக்கும் விருப்பமான இளையராஜாவும் தன ஆரம்ப கட்டத்தில் ஆங்கில பாடல்களை காப்பி செய்தவர் தான் என்றாலும், அவரின் சாதனைகள் அவர் செய்த அற்புதங்களுக்கு முன்னால் அவை மிக சிறும் அளவே. தேவாவை அப்படி நாம் பார்ப்போமா? கமல் நம் மண்ணின் இலக்கியங்களை உள்வாங்கி அவற்றை தான் கற்ற தொழில் நுட்பத்தோடு வெளிக்கொண்டு வந்தார் என்றால் அவர் உண்மை கலைஞன். சரி கௌதம் மேனன் எந்த படத்தில் ஒரிஜினலுக்கு கிரெடிட் கொடுத்தார்? எனக்கு தெரியாததால் கேட்கிறேன்.

எனக்கு பெரும் விருப்பமான எழுத்தாளர் என்றாலும் ஜெ,யின் சினிமா பற்றிய பார்வையில் பெரிதும் முரண்படுகிறேன்.

பின்னோக்கி said...

பதிவை முழுவது இன்னும் படிக்கவில்லை. ஆய்த எழுத்து படித்த உடன் பகிர்ந்து கொள்ள ஆசை.

//ஆய்த எழுத்து ... திரைக்கதை உத்தி மாத்திரமே

மணிரத்தினத்திற்கு நாம் தந்த அல்லது தந்துகொண்டிருக்கும் க்ரியேட்டர் என்ற சிம்மாசனம் எதற்காக ???. இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர். மணிஜி சொன்னா, அடுத்த நாள் அவர் படத்துல நடிக்க ரெடியா இருக்கேன்னு எல்லாரும் பேட்டி (அது உண்மையான்றது ரெண்டாவது விஷயம்), அயல்நாட்டு விழாக்களில் இராவணனுக்கு “எல்லாரும் எழுந்து நின்று கைதட்டுவது”, இவ்வளவு பேரு அவருக்குக் கொடுப்பது, “புதியதாக” எதாவது செய்தார் அல்லது செய்வார் என்ற நம்பிக்கை தானே ?. அதைவிட்டு.. அவர் திரைக்கதை வடிவத்தை **மட்டுமே** எடுத்தார் என்பதால் பரவாயில்லை என்பது எனக்கு சரியாகத் தோன்றவில்லை.

அல்லது மணிரத்தினம், கமல் போன்றவர்கள் எதையும் புதியதாக, சிந்தித்து எடுத்தார்கள்/எடுப்பவர்கள் என்ற எண்ணத்தில் இருந்த என் அறியாமையை வேண்டுமானால் நான் நொந்துகொள்ளலாம் அல்லது “நீ அவங்கள அந்த மாதிரி நினைச்சுக்கிட்டு இருந்ததுக்கு நாங்க ஒண்ணும் பண்ணமுடியாது” என்ற பதில் எனக்கு கிடைக்கலாம்.

பின்னோக்கி said...

படம் வெளிவரும் வருடத்தை வைத்து ஒரு முடிவுக்கு வர இயலாது என்றே நினைக்கிறேன் :).

எந்திரன் படத்தை கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளாக (??!!) யோசித்து வைத்தேன் என்று சங்கர் சொல்லியிருக்கிறார். பார்ப்போம்.

Aranga said...

சு.க,

அவதாரையும் ஜெவின் பனிமனிதன் நாவலையும் தொடலாம் இந்த தொடரில் . ஜேம்ஸ் கேமரூன் ஜெயமோகனிடமிருந்து சுட்டார் என்று நாமும் சொல்லியிருக்கலாம் - பனிமனிதன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டிருந்தால் , ம்ஹீம் , :)

ஜெய் said...

அருமையான பதிவு சுரேஷ்... மிக மிக நல்ல அலசல்...

இன்ஸ்பிரேஷனுக்கும் இமிடேஷனுக்கும் துல்லியமான வித்தியாசம் இருக்கிறது என்றாலும், அந்த வித்தியாசத்தை ஒவ்வொருவரும் வேறுமாதிரி புரிந்துகொளவதே விவாதத்தின் அடிப்படையாக இருக்கிறது...

திரு.சந்திரமோகனின் கருத்தும் நன்று..

Akash said...

@chandramohan:

//சரி கௌதம் மேனன் எந்த படத்தில் ஒரிஜினலுக்கு கிரெடிட் கொடுத்தார்? எனக்கு தெரியாததால் கேட்கிறேன். //

பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் கெளதம் மேனன் கிரெடிட் கொடுத்து இருந்தார்.

BADRINATH said...

நான் உங்களிடம் வேறு படுகிறேன்...doubt fire படத்தை இரண்டு முறை பார்த்திருக்கிறேன்... அவ்வை சண்முகி டவுட் பயரின் ஒன் லைன் storyதானே தவிர.. எடுக்கப் பட்டிருக்கும் விதம் வேறு.. நம்ம ஊர் சாதிப் பிரச்சனையை ஊடே கமல் அதை எடுத்திருக்கிறார் Brahmin Vs Nonbrahmin என்ற ரீதியில்.. சீனுக்கு சீன் காப்பி என்பதை ஏற்க மாட்டேன்

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர்களுக்கு நன்றி.

அன்புள்ள சந்திரமோகன்,

plagiarism எனும் சமாச்சாரம் உலகம் பூராவும் நிகழ்ந்து கொண்டிருப்பவைதாம் என்பதை என் பதிவிலியே குறிப்பிட்டிருக்கிறேன். ஹாலிவுட்களில் இந்தக் குற்றச்சாட்டு நிருபீக்கப்பட்டால் மிக அதிக நஷ்டஈடு தரப்பட வேண்டும் என்பதால் அங்கு குறைவு. சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடமிருந்தே இதற்கான உரிமையை வாங்கி விடுவார்கள். இங்கு அது குறித்த விழிப்புணர்வு குறைவாகவும் அலட்சிய மனோபாவம் அதிகமிருப்பதால் பொதுவி்ல் யாரும் இதை விவாதிப்பதில்லை. மேலும் அசல்-நகல் குறித்தான இந்த மாதிரியான விவாதங்களும் உரையாடல்களும் உலக சினிமா பார்வையாளர்கள்' எனும் மிகச்சிறிய குழுமத்தில் நிகழ்வது குறித்து அவர்களை அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. இதைப் பற்றி ஒன்றும் அறியாத வெகுஜன பார்வையாளர்களோடு ஒப்பிடும் போது இந்த வட்டம் மிகச் சிறிது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இதுவிஷயத்தில் கமல்ஹாசனை மாத்திரம் மையப்படுத்தி உரையாடுவது சரியல்ல. பெரும்பாலான இயக்குநர்கள் இதுவிஷயமாக குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர்களே. ஆனால் ஆஸ்கர் போன்ற உலகத்தரமான விருதுகள் பெரிதும் கமல்ஹாசனை சம்பந்தப்படுத்தி பேசுவதாலும், இந்தியாவின் மிகச் சிறந்த சினிமா கலைஞனாக கமல் மதிக்கப்படுவதாலும்,அவர் இந்த விஷயத்தில் சற்று வெளிப்படையாகவே நடந்து கொள்வது நல்லது.

கமல் கோஸ்ட் டைரக்டராக சில படங்களில் பணிபுரிந்திருப்பதாக கூறியிருக்கிறீர்கள். மிகச்சரி. ஆனால் ஏன் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு என்பது எனக்குப் புரியவில்லை. ஏதேனும் தவறு நிகழ்ந்தால் பலியாடுகள் தேவை என்பதற்காக இவ்வாறு நிகழ்கிறது அல்லது வணிக ரீதியான காரணங்கள் ஏதேனும் உள்ளனவா என்பது யோசிக்கப்பட வேண்டியது. இன்ஸ்பிரேஷன், இமிட்டேஷன் சர்ச்சை காலங்காலமாக நிகழ்வதுதான். சம்பந்தப்பட்ட கலைஞர்கள் தங்களின் மனச்சாட்சியோடு இயங்க வேண்டிய தளமிது. இன்னொருவரின் திறமைக்காக நம்மை யாராவது புகழும் போது அதை முழுவதும் அனுபவிக்க முடியாமல் ஏற்படுத்தும் உறுத்தல்தான் இதற்கான தண்டனையாக இருக்க முடியும்.

பின்னோக்கி: மணிரத்னம் செய்வதை நான் ஆதரிக்கவில்லை. ஒரு உத்தியை நகலெடுப்பதின் மூலம் முழுப்படத்தையுமே நகல் என்று சொல்வது தவறான புரிதல். அதைத்தான் இந்தப் பதிவின் மையமாக சொல்ல முயன்றிருக்கிறேன்.

சென்ஷி, அரங்கசாமி: :-)

Anonymous said...

//இது நம்மிடையே உள்ள தாழ்வு உணர்ச்சியின் இன்னொரு வகை வெளிப்பாடே//---> nice.

கிருஷ்ண மூர்த்தி S said...

ஒரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுக்கும்போது சொல்வார்கள், மொத்தமே 43 வகைக்குள்தான் அவை அடங்கிவிடும் என்று!

உத்தம புத்திரன் படம் கூட அலெக்சாண்டர் டூமாவின் The man in the iron mask கதையைத் தழுவியது தான்!

இப்போது நடக்கும் விவாதங்களில் உண்மையான பிரச்சினை, மிக நேர்த்தியான நகல் எது, மிக மோசமான நகல் எது என்பதில் தான் என்று தோன்றுகிறது.

கமலைப் பொறுத்தவரை, சினிமா என்ற மீடியத்தை நன்றாகப் புரிந்து கொண்டவர், பரீட்சார்த்தமாக எதையாவது செய்து பார்த்துக் கொண்டே இருப்பவர் என்ற வகையில் மிக மோசமான நகல்களைத் தயாரிப்பவர்கள் அல்லது ஆராதிப்பவர்கள் விமரிசிப்பது புதிது ஒன்றுமில்லைதான்!

தமிழ் சினிமா என்று மட்டுமில்லை, எந்த மொழி சினிமாவானாலும் அது வியாபாரம்! ஒரு மினிமம் காரன்டியை எதிர்பார்க்கும்போது, ரிஸ்க் எடுக்கத் தயங்குவதும், ஏற்கெனெவே ஹிட்டான அதே அரைத்தமாவையே திரும்பத் திரும்ப அரைத்துக் கொண்டிருப்பதும் தமிழுக்கு மட்டும் உண்டான குணமில்லை.

இதில் கமல் தலையை எதற்காக உருட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் எனக்குப் புரியவில்லை!

R. Gopi said...

\\முன்னரே சொன்னது போல தமக்கான கதைகளை டிவிடிகளில் தேடாமல் தமிழ் அல்லது மற்ற மொழி இலக்கியங்களிலிருந்தும் எழுத்தாளர்களிடமிருந்தும் அவற்றுக்கான முறையான ஒப்புதலோடு தேடினால் பல நல்ல தமிழ் சினிமாக்கள் உருவாகும்.\\

சரியா சொன்னீங்க.

கீழே நான் சொல்வது எல்லாம் என் கருத்தே.

சில சமயம் அது சொதப்பி விடுகிறது. மோக முள் நாவல் அளவிற்குப் படம் இல்லை. சொல்ல மறந்த கதை நன்றாக எடுக்கப்பட்டிருந்தது (நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள்). நேற்று ஒரு படம் பார்த்தேன். ஜப்பான் மனைவி (The Japanese Wife) என்கிற வங்க மொழிப்படம். கதையாகப் படித்ததில்லை. ஆனால் படம் பார்த்த பிறகு இப்போது கதையும் படிக்கத் தோன்றுகிறது.

உங்கள் பழைய பதிவு ஒன்றில் நாயி நெரலு என்ற படத்தைப் பற்றிப் பார்த்தேன் (மூலக் கதை, பைரப்பா).

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

Anonymous said...

நம்மவர் படம் சிவாஜியின் இளையதலைமுறையின் மறுபதிப்பு. இந்தியன் படம் சிவாஜியின் நாம் பிறந்த மண்ணின் பதிப்பு.இரண்டும் இயக்குனர் யோகானந்த்தின் படைப்புகள்

Annamalai Swamy said...

நல்ல சொன்னீங்க. இதைப் பற்றி நான் ஒரு பதிவிடலாம என்று நினைத்து கொண்டிருந்தேன், நீங்கள் இட்டு விட்டீர்கள். இதற்கு முன் குமுதம் இதுபோல் ஒரு பட்டியல் இட்டிருந்தது, அதை ஒட்டி நான் ஒரு பதிவிட்டிருந்தேன். முடிந்தால் படிக்கவும் http://manipuram.blogspot.com/2009/08/blog-post_07.html

Unknown said...

கமலை, மணிரத்னத்தை இதர படைப்பாளிகளைத் திட்டமுன் ஒரு கேள்வி...
‘சினிமா’ என்கிற சமாச்சாரத்தை, அதாவது ஒரு சம்பவத்தை அல்லது கதையை முதன் முதலாக வீடியோ மூலம் சொன்ன நபரைத் தவிர மற்ற எல்லாரும் திருடர்கள்தானே?

Sridhar Narayanan said...

// இவ்வாறு நகலெடுப்பதில் அவர் தனிமனிதர் அல்ல. நாம் தமிழ் சினிமாவின் பிதாமகர்கள் என்று போற்றும் இயக்குநர்கள் உட்பட பெரும் படையே உள்ளது.//

மிகச் சரி. அந்த பட்டியலில் பாலுமகேந்திரா, பாரதிராஜா முதலிய பெரிய படைப்பாளி வரிசை உண்டு.

இதற்கு காரணம் பேப்பரில் எழுதுவதற்கும் திரையில் எழுதுவதற்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அதனால் நேரடியாக திரையில் அமைக்கப்பட்ட கதையை அப்படியே சுவீகரித்துக் கொள்வது இலாபகரமான வழி.

தமிழில் எனக்குத் தெரிந்து ‘ஒரிஜினல்’ கதையை திரையில் வெற்றிகரமாக அமைத்தவர் பாக்யராஜ். இந்திய அளவில் கூடச் சொல்லலாம்.

chandramohan said...

நான் சொல்ல நினைத்ததை நண்பர் சுரேஷ் கண்ணன் மிக சிறப்பாக எழுதி இருக்கிறார். ஹாலிவுட் போன்ற பெரிய சினிமா உலகில் காப்பி என்பது மிக அரிதானது. அப்படி செய்து கண்டுபிடிக்கப்பட்டால் பெரிய அளவில் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி வரும். ஆனால் அங்கு ரீமேக் உண்டு. பல classics ரீமேக் செய்யப்பட்டவை. என் பள்ளி நாட்களில் Shaft என்ற படம் முதலில் எழுபதுகளில் வந்து பின்பு ரீமேக் செய்யப்பட்டது என்று படித்து நான் ஆச்சர்ய பட்டேன். பொதுவாக ஒரு படம் வேற்று மொழியில் இருந்து ரீமேக் செய்யப்படுவது நாம் அறிந்தது தான். ஒரே மொழியின் பழைய படங்கள் புதிதாய் உருவாக்கப்படுவது என்பது இப்போது இங்கு (மலையூர் மபட்டியான், நான் அவனில்லை) சகஜமாகி வருகிறது. ஆனால் யாருக்கும் தெரியாது என்று வேற்று மொழியில் இருந்து படங்களை தழுவி இங்கு மகத்தான படைப்பாக வெற்றி காண்பவர்கள் நிச்சயம் கடும் விமர்சனத்துக்கு உரியவர்கள். சில அடிப்படை விஷயங்களை சொல்லியாக வேண்டும் என்று நினைக்கிறேன். வேற்றுமொழி , முக்கியமாய் ஆங்கிலத்தில் இருந்து நிறைய படைப்புகள், மூலக்கரு போன்றவற்றை எந்த வித உரிமையும் பெறாமல் இங்கு உருவாக்கி பெரிய ஜீனியஸ் என்று புகழ் பெற்றவர்களில் முக்கியமானவர்கள் கமலும், மணிரத்னமும். இவர்களின் முதல் கூட்டணியில் வெற்றி பெற்ற 'நாயகன்' (யார் என்ன சொல்லி மழுப்பினாலும் ) Coppola வின் Godfather ஐ அப்பட்டமாக , காப்பி அடித்து எடுக்கப்பட்ட படம். எப்படி அது படு மட்டமாக காப்பி அடிக்கப்பட்டது என்பதற்கு உதாரணம் , கமல் பேசும் தமிழை ஹிந்தியில் மொழி பெயர்த்து சொல்ல டெல்லி கணேஷ் என்ற interpreter பாத்திரம். கமல் பம்பாய், தாராவியில் தன சிறுவயதில் இருந்து வளர்ந்து வந்தாலும் அவருக்கு ஹிந்தி பேச வராது. கேட்டால் அது தமிழர்களின் பகுதி என்று சொல்லி தப்பிக்க பார்ப்பார்கள். அது சிறிதளவுக்கு கூட சாத்தியம் இல்லை என்பதை தமிழகத்தை தாண்டி வேறு மாநிலங்களில் வாழும் தமிழர்கள் உணர்ந்திருப்பார்கள். இந்த அபத்தத்தின் மூலத்தை ஆராய்ந்தால் , Godfather இல் அல் பாசினோ சிறிது காலம் வேறு நாட்டில் (சிசிலி) இருக்கும்போது மொழி தெரியாமல் இன்னொருவரின் துணையோடு அங்கிருப்பவர்களிடம் உரையாடுவார். அதை எந்த வித அடிப்படை அறிவும் இல்லாமல் நகலெடுத்து பெரிய அளவில் பெயர் வேறு பெற்றனர், இருவரும். டைம்ஸ் பத்திரிக்கை உலகின் சிறந்த நூறு படங்களில் ஒன்றாக நாயகனை தேர்வு செய்தபோது எனக்கு சிரிப்பதை தவிர வேறெதுவும் தெரியவில்லை. இது போல் பல அபத்தங்களை இருவரும் அதிகமாக செய்தார்கள். ஆனால் கமலுக்கோ மணிரத்னதுக்கோ அதை பற்றி இம்மி கூட குற்ற உணர்வு இல்லை. கமல் ஒரு முறை Tom Hanks நடித்த Forrest Gump படத்தை பார்க்கும்போது தனக்கு சிப்பிக்குள் முத்தின் நினைவு வருவதாக சொன்னார். (இங்கிருந்து அங்கு 'போய்விட்டதாம்!') அவரது விக்ரம் படத்தின் சாயலுடன் James Cameron இன் True Lies வந்த போது ஆச்சர்யமாக தான் இருந்தது. ஆனால் அது சுஜாதா செய்த தழுவல் என்று பிற்பாடு தெரியவந்தது. மிக முக்கியமாக எந்திரன் புகழ் ஷங்கர் கைவண்ணத்தில் உருவான 'இந்தியன்' திரைப்படம் ,சிவாஜி , கமல் நடித்த 'நாம் பிறந்த மண்' மற்றும் 'பாலம்' புகழ் கார்வண்ணனின் , மறைந்த நடிகர் முரளி நடித்த ' எதிர்காற்று' என்ற இருபடங்களின் கலவை என்று நிறைய பேருக்கு தெரியாது. ரஜினியை பொறுத்தவரை அவர் அமிதாபின் தமிழ் நகல் எனும் அளவுக்கு அவரது படங்களின் ரீமேக் படங்களில் நடித்தவர். எனவே அவர் 'எதிலும் சேராதவர்'. கமலுக்கு கிடைக்கும் புகழ் அவரது நடிப்புக்காக தான் இருக்க முடியுமே தவிர (அதிலும் மாறுபட்ட கருத்துகள் உண்டு!) அவரது படைப்புகளுக்காக அவரை எக்காலத்திலும் புகழ முடியாது. எத்தனை படங்கள்! எனக்கு மிகவும் பிடித்த அவரது 'மகாநதி' யின் மூலக்கரு 'Innocent Man' என்ற ஆங்கில படம். நிறைய சொல்லலாம். பட்டியல் நீண்டு கொண்டே தான் போகும்.

chandramohan said...

சுரேஷ் மிக முக்கியமான கருத்து ஒன்றை சொன்னார். கமல் தனக்கு மிகவும் நெருக்கமான சிங்கீதம் சீனிவாசராவ், சந்தான பாரதி ஆகியோரை 'இயக்குனர்கள்' என்று சொல்லி , தானே படங்களை இயக்கினார். அதற்கு என்ன காரணம் என்று எனக்கும் புரியவில்லை. தோற்றால் பழியை அவர்கள் தலையில் போட நினைத்தாரோ என்னவோ.
அவரை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்காமல் 'தட்டிக்கொடுக்கும்' விகடன் அவர் படங்களை விமர்சனம் செய்யும்போது மருந்துக்குக்கூட படத்தின் 'இயக்குனர்' பெயரை குறிப்பிடாது. மாறாக , கமல் இப்படி எடுத்திருக்கிறார், அப்படி எடுத்திருக்கிறார் என்று எல்லா புகழையும் கமல் தலையில் தான் வைக்கும் அந்த பத்திரிக்கை. அதில் உண்மை இல்லாமல் இல்லை என்பதால் யாரும் அதை பெரிது படுத்துவதும் இல்லை. சமீபத்தில் 'அன்பே சிவம்' பெரும்பகுதி கமலால் எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுவது உண்மை இல்லை என்று குஷ்பு-சுந்தர்.சி. தம்பதி புலம்பியதை படித்திருக்கலாம். தமிழை விட ஹிந்தியில் வரும் படங்கள், இசை ஆகியவை மிக அதிகமாக வெளிநாட்டு படங்கள், ஆல்பங்களில் இருந்து காப்பி அடிக்கப்படுகின்றன. மகேஷ் பட் முதல் கொண்டு கரன் ஜோகர் வரை இதில் கரை கண்டவர்கள். உண்மையில் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் நொடியில் ஒரு படத்தின் 'மூலத்தை' நம்மால் கண்டறிய முடிகிறது. நம் நடிகர்கள், இயக்குனர்கள் இவற்றை தான் ஆரம்ப காலத்தில் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். உதாரணத்துக்கு பாலு மகேந்திரா வின் 'மூடுபனி' , ஹிட்ச்காக்கின் புகழ் பெற்ற சைக்கோ படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். பாசிலின் ' பூவிழி வாசலிலே' Witness , (Horrison Ford , Predator-2 புகழ் Danny Glover நடித்தது) படத்தின் தழுவல் என்று நாம் ரசித்த நிறைய படங்கள் ஆங்கில மூலங்களை தழுவி எடுக்கப்பட்டவை எனில் சற்று ஏமாற்றமாக இருப்பது உண்மை தானே.
இந்த கட்டுரையே சுரேஷின் கட்டுரைக்கு ஒரு பதிலாக எழுதப்பட்டது என்றாலும் பெருந்தன்மையுடன் எனது தளத்தில் விவாதத்தில் அவர் பங்கேற்பது மகிழ்ச்சி தருகிறது.

Anonymous said...

have you seen the film last tango in paris (directed by Bernardo Bertolucci)?

if not please download that movie from here and see it...i want you to write an essay about this movie...

http://www.torrentz.com/search?q=last+tango+in+paris

வருண் said...

***தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இதுவிஷயத்தில் கமல்ஹாசனை மாத்திரம் மையப்படுத்தி உரையாடுவது சரியல்ல. ***

***கமல் Mrs.Doubtfire மாதிரி பல ஹாலிவுட் படங்களை அப்படியே ஸ்வாகா செய்திருப்பது வேறு விஷயம்.**

SK: Have you ever looked at yourself? May be you could not, as you cant see your back. Let me tell you! You are covering Kamalahasan's bottom pretty well here! Kamal Hassan is the king of "plagiarism" in Tamil cinema. . Why are you being so gentle on him???

You write your article in such a way that he is "not guilty" by covering all worthless garbage so that you can make Kh look better?!

Have you ever discussed about his "stealings" from Hollywood in any or your writings? Give me the link if you have talked about Kh's plagiarism

e.g, Bourne identity, 9-5, Mrs. Dobtfire, What about bob and many more.

Why are you doing this- being very gentle on the biggest culprit?

Do you love him so much?

It does not matter how much you like him, he is the WORST of ALL when it comes to stealing some others plot!

You are defending him by talking about all kinds of CRAP! So, dont you ever claim that you are being "neutral" or you are being "fair" YOU are NOT!

You like some people and you dont like some others just like any other human being. You love Kh and so you cover him pretty well

* You are NOT being fair SK!

* You are covering the bottom of people you love even if the are are worst of all!

You better learn about yourself from others who can see your weaknesses!

PRABHU RAJADURAI said...

தெரியும், உங்களிடமிருந்தும் இப்படி ஒரு சப்பைக்கட்டு வரும் என்று!

காப்பி என்று இங்கு பலராலும் குறிப்பிடப்படுவது, சட்டரீதியில் குற்றமாகக் கூடிய அல்லது தார்மீக ரீதியில் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு அறிவுத்திருட்டு மட்டுமல்ல.

சிறுசிறு காட்சியமைப்புகளை, நுட்பங்களை தழுவுவதும்தான். இவர்களை குற்றவாளிகளாக நிறுத்தவில்லை. செய்யாதே என்று கூறவுமில்லை. சொந்தமாக சிந்திக்கத் தயங்கும் இவர்களை எப்படி உங்களைப் போன்றவர்களால் கூட படைப்பாளிகள் என்று கொண்டாட முடிகிறது என்பதுதான் என் ஆதங்கம்.

உதாரணத்துக்கு மாட்ரிக்ஸ் படத்தில் ஹீரோ கால்களை மடித்து அமர்ந்திருக்கும் காட்சி, சிவாஜி என்று நினைக்கிறேன் அப்படியே தமிழ்படத்தில் வந்தது. மாட்ரிக்ஸ் இயக்குஞர் யாரை காப்பியடித்து அப்படி ஒரு ஸ்டைலை உருவாக்குகிறார். ஏன் இவர்கள் அவரது உருவாக்கத்தை காப்பியடிக்க வேண்டும்?

இளையராஜா டார்லிங் டார்லிங் பாடலில் போனி எம்மின் சன்னி பாடலில் இருந்து உருவியது 'I love you' என்ற பதம் மட்டும்தான். மற்றபடி முற்றிலும் வேறானா மிக இனிமையான அந்தப் பாடலுக்கு விருது கொடுத்தால் விடுவீர்களா?

தேவா, சங்கர் கணேஷ் காப்பியடிப்பது யாருக்கும் கவலையில்லை. அவர்களை யாரும் கொண்டாடுவதில்லை. ரஹமான் ஒருவரி காப்பியடிக்க முடியுமா?

நேற்று ஹிந்துவில் ஜாஸ் படம் வந்து 30 வருடங்கள் ஆகிறது என்று சிறு செய்தி வந்தது. அதற்குப் பின்னர் சுமார் அரை டஜன் ஜாஸ்கள் வந்துவிட்டன. அவற்றின் இயக்குஞர்களை நீங்காள் அறிவீர்களா?

ஜெயமோகனுக்கு சினிமா இயக்குஞர்களை தூக்கிப் பிடிக்க வேண்டிய கட்டாயாம உள்ளது. நீங்களே சொந்தமாக எழுதுங்கள்:-)

Anonymous said...

Hi SK,

My wishes for a good article. Kamal has to be seen as an actor rather than a director or whatever. As he has done that 99% of his career, it is unfair if you call see him as something other than an actor. This is my kind opinion.

Thanks,
SMA

கிருஷ்ண மூர்த்தி S said...

அறிவுசார் சொத்து, திருட்டு என்று சட்டப் பிரச்சினையா இங்கே பேசப்படுகிறது என்று எனக்கே கொஞ்சம் சந்தேகம் வருகிற அளவுக்கு, பிரபுராஜதுரை, விவாதத்தைக் கமலிடமிருந்து, இளையராஜா வரை கொண்டுபோய் விட்டார்!

பிரச்சினையின் தன்மை, இந்த நகலெடுக்கிற அல்லது திருடுகிற வேலை என்பது மனிதன் கலை இலக்கியம், திரைப்படம் என்று போன நாட்களில் இருந்தே ஆரம்பித்தது தான்.

இதில் கமலை மட்டுமே குற்றம் சாட்டிப் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்பது முதல் கேள்வி.

காப்பியடிப்ப்தைக் கூட ஒழுங்காகச் செய்யத் தெரியாதவர்கள் தான் கமலைக் கைகாட்டித் தங்களுடைய கையாலாகாத பலவீனத்தை மூட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களோ என்பது அடுத்து வரும் கேள்வி.

எரிகிற கொள்ளியில், (மொத்தமுமே திருட்டுக் கும்பலாக இருக்கும் இடத்தில்) எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்கிற மாதிரிக் கேட்பது எதற்காக என்பது அடுத்த கேள்வி!

வஜ்ரா said...

காப்பியடிக்கும் தமிழ் சினிமா பற்றி உருப்படியான கட்டுரை இது.

நம்ம இயக்குனர்கள் கதையை நம் இலக்கியத்திலிருந்து எடுத்தால் நல்லது என்கிறீர்கள்.

சில இலக்கியங்களே அப்பட்ட காப்பியாக இருக்கும் போது என்ன செய்வது ?