Wednesday, September 01, 2010
ஹிட்ச்காக் எனும் கதைசொல்லி
ஹிட்ச்காக்-கை ஒரு மூன்றாந்தர திகில் பட இயக்குநர் என்றே ஏனோ நீண்ட ஆண்டுகளாக நான் எண்ணிக் கொண்டிருந்தேன். தமிழில் 'மாடர்ன் பிக்சர்ஸ்' எனும் சினிமா நிறுவனம் பெரும்பாலும் ஜெய்சங்கரை வைத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் வெளியிடும் அபத்தமான சஸ்பென்ஸ் படங்களையும் ஹிட்ச்காக்கையும் எப்படியோ நானாகவே தொடர்புபடுத்தி ஒரு முன்முடிவுடன் அவரை நிராகரித்து வைத்திருந்தேன். அது எத்தனை பெரிய தவறு என்பது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரிந்தது. பிரிட்டிஷ்காரராக இருந்தாலும் பிற்பாடு பெரும்பாலான படங்களை ஹாலிவுட் நிறுவனங்களின் மூலம் உருவாக்கியதால் 'ஹாலிவுட்டின் சிறந்த கதைசொல்லி' என்று அவரை முதன்மைப்படுத்த விரும்புகிறேன்.
ஹிட்ச்காக்கின் பெரும்பான்மையான படங்கள் 'சஸ்பென்ஸ்' வகையைச் சார்ந்ததாக இருந்தாலும் அவை செயற்கைத்தனமான பரபரப்பையோ, அசட்டுத்தனமான மர்மங்களையோ கொண்டிருப்பதில்லை. மாறாக பாத்திரங்களின் அகவுணர்வு சார்ந்தும் உளவியல் ரீதியானதாகவும் அர்த்தப்பூர்வமான வித்தியாசமான காமிரா கோணங்கள் மூலமும் அழுத்தமான காட்சிகளை கோர்ப்பதின் மூலமும் மிக உயர்ந்த தளத்தில் இயங்குகின்றன. தம்முடைய படங்களில் தொடர்ந்து அவர் பரிசோதனை முயற்சிகளை செய்துவருவதை பார்வையாளர்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக ROPE என்கிற திரைப்படம் முழுவதுமே வெறும் 10 நீளமான காட்சிகளுடன் தொடர்ச்சியான ஒரே காட்சிக்கோர்வை போன்ற பாவனையுடன் உருவாக்கப்பட்டது.
ஹிட்ச்காக் படங்களின் மிகப் பெரிய பலமாக அவரின் திரைக்கதையமைப்பை குறிப்பிடலாம். படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் திரைக்கதையை அதன் ஒவ்வொரு பிரேமிலும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை குறைவான வசனங்களுடன் பெரும்பாலும் காட்சிப்பூர்வமாக மிக கச்சிதமாக சிந்தித்து மிகுந்த திட்டமிடலுக்குப் பின்புதான் படப்பிடிப்பிற்குத் தயாராகிறார். அதற்குப் பிறகு திரைக்கதையை ஒரு தகவலுக்காகக் கூட அவர் பார்ப்பதில்லை. அத்தனையுமே அவர் மூளையில் தெளிவாக பதிவாகியிருப்பதால் எவ்வித தயக்கமுமில்லாமல் மிகுந்த நம்பிக்கையுடன் தம் படைப்பை உருவாக்கிச் செல்கிறார்.
படத்தின் துவக்கத்திலேயே அழுத்தமான ஒரு கொக்கியை பார்வையாளர்களின் மூளைகளில் மாட்டிவிடுகிறார் ஹிட்ச்காக். படம் பூராவும் அந்தக் கொக்கி நம்மை சுவாரசியமாக இழுத்துச் செல்கிறது. இந்த ரோலிங் கோஸ்டர் பயணம் காரணமாக ஒருவேளை நடுவில் ஏற்படும் தொய்வு கூட நம்மை பாதிப்பதில்லை.
ஹிட்ச்காக் படங்களில் நடிகர்கள், குறிப்பாக நாயகிகள், கருப்பு - வெள்ளை திரைப்படத்திலும் அவர்களைக் காதலிக்கத் தூண்டுமாறு பிரத்யேக அழகுடன் உள்ளனர். ஆனால் அவர்கள் வெறுமனே அழகுப்பதுமைகளாக சித்தரிக்கப்படுவதில்லை. அவர்களுககுரிய தனித்தன்மையுடனும் சுயமரியாதை உள்ளவர்களாகவும் ஆபத்துக்காலங்களில் சுயமாக சிந்தித்து போராடுபவர்களாகவும் வெளிப்படுகிறார்கள்.
உண்மையில் நான் இந்தப் பதிவை எழுத ஆரம்பித்ததே ஹிட்ச்காக்கின் 'The Wrong Man' என்கிற திரைப்படத்திற்காக. மாறாக அவரை சிலாகிப்பதிலேயே இத்தனை வரிகளை செலவழித்து விட்டேன். தவறொன்றுமில்லை.
'ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரே ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது' என்பது தேய்ந்து போன வாக்கியமாக இருந்தாலும் அதன் அளவில் மிக அர்த்தப்பூர்வமானது. செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவிப்பதைப் போன்ற கொடுமை எதுவுமே கிடையாது. தண்டனையின் கூடவே சுயஇரக்கமும் சேர்ந்து ஆளையே முழுக்கக் கொன்றுவிடும்.
கொஞ்சம் சுயபுராண பிளாஷ்பேக். சற்று சகித்துக் கொண்டாவது வாசித்து விடுங்கள்.
இலக்கியத்தில் ஆர்வமுள்ள பெரும்பாலானோரைப் போல எனக்கும் கணிதம் என்றால் ஆகாது. பள்ளிப்பருவத்தில் மற்ற பாடங்களை சுமாராகவும் தமிழ்ப்பாடத்தை விருப்பத்துடனும் படித்து விடும் எனக்கு தருக்கத்தின் மிகக் கடினமான வடிவமான கணிதத்துடன் எப்போதும் மல்லுக்கட்டல்தான். 'கணிதத்தில் மட்டும்தான் உங்கள் ஜீரோ மதிப்பெண் வாங்க முடியாது' என்பார் என்னுடைய ஆறாம் வகுப்பு கணித ஆசிரியர் அமலதாஸ். மிகக் கண்டிப்பானவர். ஆனால் அதை ஒரு சாதனையாக செய்து அடிக்கடி அவரை வெறுப்பேற்றிக் கொண்டிருப்பேன். புறங்கையின் மீதான விரல் எலும்புகளின் மீது மரக்கட்டை ஸ்கேல் அமலதாஸின் மூலம் வேகமாக மோதும் போது கணிதத்தின் மீதான வெறுப்பும் ஒவ்வாமையும் இன்னும் கூடவே செய்யும்.
இப்படியாக ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை கணிதத்தின் மூலமாக ஒருபுறமும் அமலதாஸின் மூலமாக இன்னொரு புறமும் தொடர்ந்து கொண்டிருந்த தாக்குதல் பத்தாம் வகுப்பில்தான் முடிவிற்கு வந்தது. ஆனால் படம் முடிந்தும் டிரைலர் முடியவில்லை என்கிற கதையாக பத்தாம் வகுப்பிலும் விதியும் அமலதாஸூம் வேறுவடிவில் நுழைந்தனர். 'எந்தெந்த வகுப்பிற்கு யார் யார் ஆசிரியர்கள்' என்று முதல் நாளில் நாங்கள் ஆவலாக அமர்ந்திருந்த போது நுழைந்தாரய்யா அமலதாஸ். எனக்குள் பயப்பந்து ஒன்று சுருண்டு உருண்டது. ஆனால் அவர் ஆங்கிலம் இரண்டாம் தாளுக்காம். கணிதத்திற்கு அல்லவாம். அப்பாடா ஒரு வகையில் நிம்மதி!.
முதல் நாளே ஒரு ஆங்கிலச் செய்யுளை நடத்திவிட்டு அதை மனப்பாடம் செய்து வரவேண்டும் என்று உத்தரவிட்டு விட்டார் அமலதாஸ். இப்போது எல்.கே.ஜி. படிக்கும் என் மகளின் மொழியில் சொன்னால், 'மிஸ் ரொம்ப ஓவராத்தான் பண்ணிக்கிறாங்க."
ஆனால் குறிப்பிட்ட அந்தச் செய்யுளை ஏற்கெனவே நான் மனப்பாடம் செய்து வைத்திருந்தேன். இங்கே என்னுடைய மூத்த சகோதரரை நினைவு கூர வேண்டும். அமலதாஸின் மிக உக்கிரமான வடிவம் அவர். டியுஷனுக்குச் செல்ல மறந்து விளையாடின மயக்கத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த என்னை தூக்கிப் போட்டு மிதித்த அந்தச் சம்பவத்தினை நினைத்தால் இன்றும் கூட என் முதுகுத்தண்டு சில்லிடுகிறது. ஒன்பதாம் வகுப்பு முடித்து கிடைத்த ஆண்டு விடுமுறையில் கூட என்னை அதிகம் விளையாட விடாமல் அடுத்த ஆண்டிற்கான படிப்பை அப்போதே கட்டாயப்படுத்தி படிக்கச் செய்ததால்தான் என்னால் அந்த ஆங்கிலச் செய்யுளை அப்போதே மனப்பாடமாக எழுத முடிந்தது. இந்த ஒரு தருணத்திற்காகவாவது அவருக்கு நன்றி சொல்லக்கூடிய சம்பவம் அடுத்த நாள் நிகழ்ந்தது.
அமலதாஸின் இரண்டாம் நாள்.
மிக ஞாபகமாக அவர் எல்லோரையுமே அந்த ஆங்கிலச் செய்யுளை எழுதச் சொல்ல, மற்றவர்கள் விரை வீக்கத்திற்காக லாட்ஜ் வைத்தியரைச் சந்திக்கச் சென்றவர்கள் போல தயங்கிக் கொண்டிருக்கும் போது நான் இரண்டே நிமிடத்தில் கிடுகிடுவென்று எழுதி விட்டு கெத்தாக நிமி்ர்ந்தேன். அரையும குறையுமாக எழுதப்பட்டிருந்த ஒவ்வொருவரின் நோட்டுப் புத்தகமாக பார்த்துக் கொண்டு திட்டிக் கொண்டு வந்தவர், என் நோட்டைப் பார்த்து விட்டு திகைத்தார். சந்தேகம் கண்ணில் மின்னிற்று. முந்தைய ஆண்டுகளில், கணித வகுப்புகளில் தொடர்ந்து அடிவாங்குவதின் மூலம் 'நான் ஒரு மக்கு' என்கிற எண்ணம் அவருக்குள் உறைந்திருக்க வேண்டும். 'இவன் எப்படி இதை எழுதியிருக்க முடியும்? என்கிற கேள்வி பள்ளிக்கட்டிடம் அளவிற்கு உயரமாக அவருக்குள் நின்றிருக்க வேண்டும். எனவே நான் புத்தகத்தைப் பார்த்துத்தான் காப்பியடித்திருக்க வேண்டும் என்று முடிவே செய்து விட்டார். மற்றவர்களைப் போல் நானும் தப்புதவறுமாக எழுதியிருந்தால் கூட தப்பித்திருப்பேன். நிமிர்வதற்குள் கன்னத்தில் ஓங்கி விழுந்த அறையில் பொறி கலங்கியது. "போய் போர்டுல இதை அப்படியே எழுதுடா பார்க்கலாம்".
பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு போர்டு அருகே சென்றேன். மொத்த வகுப்புமே என்னை அவநம்பிக்கையாய்ப் பார்த்தது. சாக்பீஸூம் கரும்பலகையும் விநோத சப்தத்துடன் மோதிக் கொள்ளும் அபூர்வமான அனுபவத்துடன் கடகடவென்று எழுதி முடித்தேன். வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த முழு வகுப்பும் அந்த திகைப்பு அடங்குவதற்குள், இதற்கு ஆசிரியரின் எதிர்வினை என்ன, என்று அடுத்த பரபரப்பிற்கு தயாராகி அவரைப் பார்க்க ஆரம்பித்தது. இதை அமல்தாஸ் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. 'சரி' என்றாற் போல் ஏதோ முனகி விட்டு வெளியே சென்றார்.
செய்யாத தப்பிற்கு தண்டனை பெற்ற கழிவிரக்கத்தில் அப்போது அழுதேன் பாருங்கள் ஒர் அழுகை! கண்ணாம்பாவெல்லாம் பிச்சை வாங்க வேண்டும். என் ஜியாமெண்ட்டரி பாக்ஸை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஒன்பதாம் வகுப்பிலிருந்தே நான் பேசாமல் இருந்த சேகர் கூட வந்து 'இட்ஸ் ஓக்கேடா மச்சான். விடு' என்று அமைதிப்படுத்தும் படி ஆயிற்று.
ஆக...
சரி சரி. உங்களுக்கு புரிந்து விட்டிருக்கும்.
()
இப்போது 'The Wrong Man' (1956) -க்கு வருவோம். அப்பாவியொருவன் குற்றவாளியாக தவறாக அடையாளங் காட்டப்படுதலின் மூலம் அவனும் குடும்பமும் அல்லலுறும் கதை. உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
கிளப் ஒன்றில் செலோ இசைக்கலைஞனாக பணிபுரியும் Manny Balestrero தன் மனைவியுடனும் எப்போதும் ஒருவரையொருவர் சீண்டிக் கொண்டிருக்கும் இரண்டு மகன்களுடனும் பணப்பற்றாக்குறையிடையிலும் அமைதியான வாழ்க்கையை வாழ்கிறான். மனைவியின் வைத்தியச் செலவிற்காக இன்ஸூரன்ஸ் பாலிசியின் மீது கடன் வாங்கச் செல்லும் போது பிடிக்கிறது ஏழு மற்றும் அரைச் சனி.
ஹிட்ச்காக்கின் திரைக்கதை சாகசம் இதிலும் வெளிப்படுகிறது. படத்தின் துவக்கத்திலிருந்து இறுதிவரை எங்குமே தடம் மாறுவதில்லை. நூல் பிடித்தாற் போல் செல்கிறது.
இந்த மாதிரியான சஸ்பென்ஸ் படங்கள் தமிழில் ஏன் சாத்தியப்படுவதில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது. அறிந்தோ அறியாமலோ வணிக ரீதியாக வெற்றிகரமான தமிழ்ப்படங்களுக்கென ஒரு வடிவமைப்பு உருவாகி விட்டிருக்கிறது. அது எப்படிப்பட்ட கதையென்றாலும் இரண்டு மூன்று சண்டைக்காட்சிகளும், கவர்ச்சி நடனங்களும், ஒரு சோகப்பாட்டும், திணிக்கப்பட்ட ரொமான்ஸூம் சென்டிமென்ட்டும் இருக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியிருக்கிறது. எனவேதான் மார்பில் குண்டடி பட்ட நாயகன் உடனே ஆஸ்பத்திரிக்கு போய்த் தொலையாமல், அரைமணி நேரம் வசனம் பேசி பிறகு செத்துத் தொலைக்கிறான். நாயகனின் எல்லா கல்யாண குணங்களும் கொண்ட யோக்கியனை அவனுடைய காமாந்தகார நண்பன் வலுக்கட்டாயமாக கிளப் ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறான். அப்போதுதானே ஒரு கவர்ச்சி நடனத்தை நுழைக்க முடியும்?
இப்படியாக திரைக்கதையை அவரவர்களின் அபிலாஷைகளின் படி கொத்து பரோட்டா போட்டால் எப்படி அது ஒரு நல்ல திரைப்படமாக உருவாகும்? தமிழில் நான் கவனித்தவரை அதனளவில் சிறப்பாக உருவாக்கப்பட்ட சஸ்பென்ஸ் திரைப்படங்களாக எஸ்.பாலச்சந்தரின் 'பொம்மை' யையும் கே.பாலச்சந்தரின் 'எதிரொலி'யையும் குறிப்பிட முடியும்.
காவல்துறையின் விசாரணையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி மனிதராக HENRY FONDA மிக அற்புதமாக நடித்துள்ளார்.
ஹிட்ச்காக்கின் சிறுவயதில் அவருடைய தந்தை, இவரின் குறும்புத்தனங்களுக்கு தண்டனை தரும் பொருட்டு அருகிலிருக்கும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சில நிமிடங்கள் லாக்கப்பில் அடைத்து வைக்குமாறு வேண்டிக் கொள்வாராம். சிறுவயதிலேயே காவல்துறையினர் மீது ஆழப்பதிந்த இந்த விநோதமான பயவுணர்வு இந்தப் படத்தின் பல காட்சிகளில் தன்னிச்சையாக வெளிப்பட்டிருப்பதாக ஹிட்ச்காக் ஓர் நேர்காணலில் கூறுகிறார்.
ஹிட்ச்காக் தனது படங்களில் சில விநாடிகளில் ஏதாவது ஒரு அடையாளமில்லா பாத்திரமாக தோன்றி மறையும் CAMEO APPEARANCE மிகப் பிரபலமானது. இதைக் கண்டுபிடிக்கவே சில திரைப்படங்களை மீண்டும் கூர்ந்து பார்த்திருக்கிறேன். இதில் அவ்வாறான சிரமங்கள் ஏதும் தராமல் இயக்குநரே படத்தின் ஆரம்பத்தில் நிழலுருவமாக தோன்றி படத்தின் போக்கைப் பற்றி சுருக்கமாக விவரிக்கிறார்.
ஹிட்ச்காக்கின் ரசிகர்கள் மாத்திரமல்லாது அனைவருமே கட்டாயமாக பார்க்க வேண்டிய படமாக பரிந்துரைக்கிறேன்.
தொடர்புள்ள பதிவு:
ஹிட்ச்காக்கின் அட்டகாசமானதொரு திரில்லர்
suresh kannan
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
வரிக்கு வரி sir என சொல்லாமல் பெயர் சொல்வதிலிருந்தே அவர் மீதான உங்கள் வெறுப்பு புரிகிறது. ஆமாம் உங்கள் கதையை இதற்கு முன் எங்கேனும் சொல்லியிருக்கின்றீர்களா? அதை வைத்துதான் காதல்கொண்டேனில் குறிப்பிட்ட காட்சியை அமைத்தார்களோ என சந்தேகமாக உள்ளது. ஹிட்ச்காக்கின் psycho பார்த்திருக்கிறேன். என்னை அவ்வளவாக கவரவில்லை.
ஹிட்ச்காக் படங்கள் மேல் மிகுந்த ஆர்வம் உண்டு எனக்கு. சைக்கோ இப்பொழுதும் யுனைட்டட் ஸ்டுடியோவில் ஒரு காட்சி நடித்து காண்பிக்கப்படும். கி ராஜேந்திரன் கூட சைக்கோ சாரநாதன் என்று எழுதி பிரபலபடுத்தியிருந்தார்.
அவருடைய படங்களில் நான் முதலில் பார்த்தது ‘The Perfect Murder'. அருமையான கதை. கொலை நிகழ்வது... அதை சாமர்த்தியமாக திசை திருப்புவது... பிறகு துப்பறிந்து கண்டுபிடிப்பது என்று ஆற்றொழுக்காக போகும்.
ஆனால் அவர் படங்கள் வெகு இறுக்கமாக இருக்கும். ஏனோ அவருடைய த்ரில்லர் எனக்கு அதிகம் உவப்பில்லாமல் போய்விட்டது.
எஸ் பாலசந்தரைப் பற்றி சொல்லியிருந்தீர்கள். அவர் காலத்தில் ‘பொம்மை’ பெரிய சாதனைதான். ஆனால் இரண்டரை மணி நேரத்தை நிரப்புவதற்கு பல Filler காட்சிகள் சேர்க்கப்பட்டிருப்பது இப்பொழுது பார்த்தால் இடறுகிறது.
கே பாலசந்தரின் நூற்றுக்கு / நூறு த்ரில்லரில் நல்ல முயற்சி. கச்சிதமான திரைக்கதை என்று சொல்லலாம். ‘அதே கண்கள்’ போன்ற பெருவெற்றிப் பெற்ற படங்கள் எல்லாம் கொஞ்சம் அபத்தமாக இருப்பது போல தெரியும்.
ஹிட்ச்காக்கை மீண்டும் பார்க்க வேண்டும் என நினைக்க வைத்துவிட்டீர்கள்.
கொஞ்சநாள் முன்பு சைக்கோ பார்க்க ஆரம்பித்து டிவிடி பாதிக்குமேல் நகராததால் நிறுத்திவிட்டேன். hitchcock-க்கும் எனக்கும் ராசியில்லை போல.
உங்கள் ஃப்ளாஷ்பேக் நன்றாயிருக்கிறது.
//காவல்துறையின் விசாரணையில் சிக்கித்தவிக்கும் காவலர்களை திகைப்பும் பயமுமாக பார்க்கும் அப்பாவி மனிதராக HENRY FONDA மிக அற்புதமாக நடித்துள்ளார். //
இந்த இடத்தில் ”சிக்கித்தவிக்கும்”-க்கு அப்புறம் ஏதாவது கமா மிஸ் ஆகிறதா? பொருள் மாறுகிறது.
இயக்குநர் சார்லஸ் வலைப்பதிவில் முன்பு படித்த ஹிட்ச்காக் பற்றிய இடுகை கீழே.
http://vaarthaikal.wordpress.com/2010/05/16/hitchcock/
நண்பர்களுக்கு நன்றி.
தர்ஷன்: நீங்கள் சொன்னபிறகு, இப்போது வாசித்துப் பார்க்கும் போது கணித ஆசிரியரை நான் ஏதோ வில்லன் ரேஞ்சிற்கு சித்தரித்திருப்பது புலனாகிறது. எப்படியாவது கணக்கை மாணவர்களின் மூளையில் புகவைத்து விட வேண்டும் என்பதற்காக சற்று அதிக கண்டிப்பு காட்டுவாரே ஒழிய, தாம் செய்யும் பணியில் மிக அர்ப்பணிப்பு உள்ளம் கொண்டவர் அவர். இதை நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும். மற்றபடி சார் என்று குறிப்பிட்டு எழுதினால்தான் மரியாதை என்பதெல்லாம் இல்லை. அதெல்லாம் சினிமா உலகில் மாத்திரம்தான். :)
ஸ்ரீதர் நாராயணன்: 'நூற்றுக்கு நூறு' ஏனோ என்னை கவராத திரைப்படம். வணிகரீதியாகவும் அதுவொரு தோல்வித் திரைப்படம் என்றே கருதுகிறேன். என்றாலும் அந்தச் சூழ்நிலையில் அதுவொரு நல்ல முயற்சியே. ஹிட்ச்காக்கை மறுபடியும் பாருங்கள். :)
சித்ரன்: 'சைக்கோ' ஹிட்ச்காக்கின் சிறந்த உருவாக்கங்களில் ஒன்று. நல்ல குறுந்தகட்டுடன் மீண்டும் பாருங்கள். தவறவிடாதீர்கள்.
காற்புள்ளியை இடாமையினால் நிகழ்ந்த கருத்துப் பிழையைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. திருத்தியிருக்கிறேன்.
உங்கள் தமிழும் அதனை வெளிபடுத்தும் விதமும் மிகவும் அற்புதம் . உங்கள் பார்வையை விட உங்கள் பார்வையை வெளிபடுத்தும் விதத்தை மிகவும் ரசிகின்றேன் .
இப்படத்தைப் பார்த்து..இதன் தாக்கத்தில் mistaken identity மையமாக வைத்து ஒரு நாடகம் எழுதினேன்..
என்னைப் பொறுத்து..அருமையான ஸ்கிரிப்ட்.
ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
நம் மக்கள் ரசனை அப்படி.
''Road to perdition''
உங்களால் முடிந்தால் இந்த (''Road to perdition'') திரைபடத்தை பார்க்கவும் , பிடித்திருந்தால் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதவும் . கட்டாயம் இல்லை , உங்களது எழுத்து நடையில் இந்த திரைபடத்தின் விமர்சனத்தை படிக்க மிக ஆவலாக உள்ளேன் . என்னுடைய பார்வையில் இது அற்புதமான திரைப்படம் .
சுரேஷ் - ஹிட்ச்காக் பற்றி சொல்லிவிட்டு Frenzy,Trouble with Harry சொல்லாமல் விட்டீர்கள். சில வருடங்களுக்கு முன் வரிசையாக அவர் படங்களை வாங்கி பார்க்கத்தொடங்கினேன் - Fenzy, Rope, Birds போலில்லாமல் Trouble with Harry ஒருவித நகைச்சுவைப் படமாகவும் , சஸ்பென்சாகவும் இருந்தது. என் மாமா நாற்பது வருடங்களாக இன்றும் ஹிட்ச்காக் படங்கள் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறார் - பல படங்களில் வருடங்கள் தாண்டி இன்றும் கச்சிதம், காமிரா கோணம், இசை பிரமிக்க வைக்கிறது.
சத்யஜித்ரே,அகிரா குரசவா, ஹிட்ச்காக் என நல்ல டைரக்டர்கள் திறைமையா இசை வல்லுனர்களாக இருப்பது எதனால்? காட்சிக்கோணத்துக்கு தகுந்தார்ப்போல் இசையும், மெளனமும் மிரட்டும்.Ran படத்தில் பார்வையில்லாத சிறுவன் வாசிக்கும் புல்லாங்குழல் அகிராவின் கைவண்ணமாம் - மிகவும் பாதித்த காட்சி.
இப்பதிவை ட்ரெய்லராக மட்டும் கருதி ஹிட்ச்காக் பற்றி மேலும் அதிகமாக எழுதுவீர்கள் என்ற எதிர்ப்பார்புடன்..
சைக்கோவின் காட்சிக்கோணங்களும்,மிரட்டும் பிண்ணனி இசையையும் வெகுவாக ரசித்தேன்.மற்ற ஹிட்ச்காக் படங்களையும் பார்க்க வேண்டும் என்ற உணர்வைத் தூண்டி விட்டது உங்கள் பதிவு.
அது சரி.
கணிதம் கற்றுக் கொள்ளாது விட்டதனால் எதையாவது இழந்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறதா?
-பிரகாஷ்.
As the other poster mentioned, review on "Road to Perdition" would be nice.
நான் ஹிட்ச்ஹாக்கின் ரசிகன். இந்த படத்தில் மதுபாண கிளப்பில் தன் சோகங்களை அடக்கிகொண்டு அவரின் மன நிலைக்கு ஒன்றாத களிப்பூட்டும் கிளப்பில் கிடார் வாசிக்கும் காட்சி மறக்கமுடியாத ஒண்று. அவரின் நார்த் பை நார்த்வெஸ்ட் பாருங்கள்.
Post a Comment