Wednesday, June 10, 2009

ஹிட்ச்காக்கின் அட்டகாசமானதொரு திரில்லர்


வன்முறை மனித இனத்தால் தவிர்க்கப்பட வேண்டியது என்பதைப் பற்றி நாம் தொடர்ந்து உரையாடிக் கொண்டு வந்தாலும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இன்னொரு உயிரை கொல்லும் இச்சை ஆழமாக புதைந்திருக்கிறது என்பதை நம்முடைய அன்றாட செயல்களின் மூலம் உணர முடிகிறது. தரையில் ஊர்ந்து கொண்டிருக்கும் கரப்பான் பூச்சியை நாம் சுவாதீனமாக அழுத்தி தேய்த்துக் கொல்கிறோம். போகிற போக்கில் செடியின் இலையை பறித்து கசக்கி எறிகிறோம். யாரையாவது அடிக்கும் போது இன்னும் இன்னும்.. என்று நம் மனம் மூர்க்கமாக உறுமுகிறது. விபத்தில் சிக்கி ரத்தவெள்ளத்தில் கிடக்கும் மனித உடலைப் பார்க்க மனம் ரகசிய ஆர்வமாக விரும்புகிறது. ஆனால் உள்ளே ஆழத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் மனிதமும் கற்பிக்கப்பட்டிருக்கிற நாகரிகமும் இதை மழுப்புகிறது. ஹிட்ச்காக்கின் 'Rope' (1948) திரைப்படம் இந்த முரண் உணர்வை திறமையாக வெளிக்கொணர்கிறது.

()

பிராண்டன் மற்றும் பிலிப் ஆகிய இருவர் தங்களுடைய நண்பனான டேவிட்டை கழுத்தை இறுக்கி கொலை செய்யும் 'மங்கலகரமான' காட்சியுடன் திரைப்படம் துவங்குகிறது. ஏன் இந்தக் கொலை? கொலை செய்வதில் உள்ள அழகியலும் அதன் மூலம் கிடைக்கும் திரில்லும் இவர்களை இயக்குகின்றன. மேலும் டேவிட்டை விட தாங்கள் உயர்ந்தவர்கள் எனவும் எனவே அவன் வாழ்வதற்கு தகுதியில்லாதவன் என்று இருவரும் கருதுகின்றனர். பிராண்டன் தன்னுடைய சாகசத்தை எண்ணி ரசிக்கிறவனாக இருக்கிற நிலையில் பிலிப் தன்னுடைய செயலுக்கான பயத்துடனும் குற்ற உணர்வுடனும் இருக்கிறான்.

இந்தக் கொலையை இன்னும் சுவாரசியப்படுத்த ஏற்கெனவே தன்னுடைய அபார்ட்மெண்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நடக்கும் அறையிலேயே பிணத்தை ஒரு பெட்டியில் வைத்து மூடி அதன் மீது உணவு வகைகளை வைக்கின்றனர். 'தங்களை யாராவது சந்தேகப்பட முடியுமா?' என்கிற சவாலே இதை செய்ய அவர்களைத் தூண்டுகிறது. இவர்களின் முன்னாள் ஆசிரியரான ரூபர்ட் என்பவரையும் விருந்துக்கு பிராண்டன் அழைத்திருக்கிறான். எதையும் 'சந்தேகப்படும்' அவரின் குணாதிசயம் தெரிந்தும் அவரை விரும்பி அழைத்திருக்கும் காரணம் இந்த ரகசியமான 'சவால்' உணர்வே. அது மாத்திரமல்லாமல் மாணவர்களாயிருந்த அவர்களிடம் அவர் ஏற்கெனவே "கொலை செய்வதின் அழகியலைப்" பற்றி உரையாடியிருக்கிறார்.

விருந்திற்கு, கொலை செய்யபட்ட டேவிட்டின் தந்தை, அத்தை, மற்றும் டேவிட்டின் காதலி, அவளின் முன்னாள் காதலன் ஆகியோரும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். விருந்திற்கு டேவிட் வராதது குறித்தே அனைவரும் விசாரிக்கின்றனர். பிராண்டன் இதை திறமையாக சமாளித்தாலும் பிலிப் குற்ற உணர்வு காரணமாக நடுங்கிச் சாகிறான். பிராண்டன் தன்னுடைய முன்னாள் ஆசிரியரிடம் 'கொலை செய்வதில் உள்ள அழகியலைப் பற்றின உரையாடலை இடையே ஆரம்பிக்கிறான். இந்த அபத்தத்தை சகிக்க முடியாமல் பிலிப் உணர்ச்சிவசப்படுகிறான். பிராண்டன் தன்னுடைய சவால் உணர்வை இன்னும் சுவாரசியப்படுத்திக் கொள்ள, டேவிட்டின் தந்தைக்கு அவர் எடுத்துச் செல்ல விரும்பின புத்தகங்களை டேவிட்டை கொலை செய்யப் பயன்படுத்திய அதே கயிற்றின் மூலம் கட்டித் தருகிறான். பிலிப் இதைப் பார்த்து முகம் வெளிறிப் போகிறான். ரூபர்டிற்கு மெல்ல மெல்ல டேவிட் கொலை செய்யப்பட்டிருப்பானோ என்றும் பிராண்டனும் பிலிப்பும் இணைந்து இந்தக் கொலையை நிகழ்த்தியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது. பின்னர் தனது திறமையான யூகத்தின் பேரில் அவர் இதை நிருபிக்க முயல...

பிறகு என்ன நிகழ்கின்றது என்பதைப் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

()

ஹிட்ச்காக்கின் முதல் டெக்னிக்கலர் திரைப்படமான இதில் குறிப்பிடத்தகுந்த யுக்தியாக குறிப்பிடப்பட வேண்டியது எல்லாக் காட்சிகளும் மிக மிக நீளமான தொடர்ச்சியான டேக்குகளைக் கொண்டு (மொத்தமே 10 டேக்குகள்தான்) திறமையான திட்டமிடலுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் பெரும்பான்மையான காட்சிகள் விருந்து நடக்கும் அறையிலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன. திறமையான உரையாடல்களின் மூலமும் சுவாரசியமான திரைக்கதையின் மூலமும் புதுமையான காமிரா கோணங்களின் மூலம் ஒரு அற்புதமான அனுபவத்தை தருகிறார் ஹிட்ச்காக். இரு பாத்திரங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போதே இன்னொருவரின் உரையாடலுக்கு காமிராக மிக இயல்பாக தாவுகிறது. 'எப்படி கொலை நடந்திருக்கலாம்' என்று ரூபர்ட் விளக்கிக் கொண்டிருக்கும் போது காமிரா அதற்கேற்றவாறு அந்தந்த இடங்களுக்கு நகர்கிறது.

சிகாகோவில் நடந்ததொரு உண்மைச்சம்பவத்தை மூலமாகக் கொண்டு எழுதப்பட்ட பேட்ரிக் ஹாமில்டனின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இத்திரைப்படம். அந்தக்காலத்தில் இருந்த சென்சார் பிரச்சினை காரணமாக பிராண்டனுக்கும் பிலிப்புக்கும் உள்ள ஒருபால் உறவு மிகவும் பூடகமான முறையில் அமையுமாறு திரைக்கதை மாற்றி எழுதப்பட்டுள்ளது. (உண்மைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஒருபால் உறவினர்). 'முதலில் ஒரு கொலை, பின்னர் கொலையாளி யார்" என்கிற வழக்கமான திரில்லர் பட யுக்திகள் மீறப்பட்டு கொலையாளிகள் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களுக்கு அடையாளம் காணப்பட்டு அவர்களின் குற்றம் வெளிப்படுமா இல்லையா என்கிற பதைபதைப்பை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துவதில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் ஹிட்ச்காக்.

பிராண்டன் மற்றும் பிலிப்பின் பாத்திரங்கள் உச்சபட்சமான திறமையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. படத்துவக்கத்திலேயே நிகழும் கொலை முடிந்தவுடன் சாகசத்தை விரும்பும் பிராண்டன் அறையின் விளக்கைப் போடுகிறான். மதிய நேரத்தின் வெளிச்சத்தில் அறையின் திரைகள் மூடப்படாமலேயே அந்தக் கொலை நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும் என விரும்புகிறான். ஆனால் பயப்படும் பிலிப் 'சற்று நேரம் அப்படியே இருக்கட்டும்' என்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அவகாசம் கேட்கிறான். விருந்தினர்களின் உரையாடலின் போது 'பிலிப் விருந்து தயாரிப்பிற்காக கோழிகளின் கழுத்தை திறமையான நெரித்து கொலை செய்வான்" என்று யதேச்சையாக பிராண்டன் சொல்லப் போக சற்றுமுன் நடந்த கொலை காரணமாக குற்றஉணர்விலும் பயத்திலும் வியர்த்துப் போயிருக்கும் பிலிப் இதை ஆவேசமாக மறுக்கிறான். ஆசிரியர் ரூபர்டின் சந்தேகம் இந்தப் புள்ளியிலிருந்து தொடங்குவதாகச் சொல்லலாம். இவ்வாறான பல நுண்ணிய தகவல்களின் மூலம் படம் நகர்த்தப்படுகிறது.

பிராண்டனாக John Dall-ம் பிலிப்பாக Farley Granger-ம் ரூபர்ட்டாக James Stewart-ம் திறமையாக நடித்திருக்கின்றனர். பிராண்டன்-பிலிப்,இருவருக்குமிடையான முரண்களும் உரையாடல் மோதல்களும் மிகத்திறமையாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. 'புதுமை மன்னனான' ஹிட்ச்காக்கின் கிளாசிக் திரைப்படமான இதை ஹிட்ச்காக் ரசிகர்கள் மாத்திரமல்லாது அனைவருமே கண்டு களிக்க வேண்டும். இத்திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது இதே போல் தமிழ்நாட்டில் நடந்த (நாவரசு கொலை) சம்பவம் ஒன்று நினைவிற்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம் செய்தவராக கருதப்பட்டவரின் பெயர் (ஜான்) டேவிட் என்பது ஒரு சோகமான ஆச்சரியம்.

suresh kannan

18 comments:

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

நல்ல பதிவு. பாராட்டுக்கள்

சென்ஷி said...

அய்யனாரின் உதவியுடன் இந்த படத்தையும் பார்த்தாச்சு :-)

Anonymous said...

An another classic of hitchcok's is 'vertigo'. Hope you'll write about it. Keep rocking.

Anonymous said...

ஹிட்ச்காக் போன்று தமிழில் திரில்லர் படங்கள் வருவதில்லையே என்று நான் ஏங்கியதுண்டு. நமக்கு கிடைப்பதெல்லாம் 'அதே கண்கள்' போன்ற மோசமான திரில்லர்கள்தான்.

யாத்ரீகன் said...

Innaikey paarthudalaam.. idhey maathiri 'Dial M for Murder' padathaiyum romba rasithaen.. but Vertigo avlo kavarala

ராஜ நடராஜன் said...

முதல் பாரா படித்தவுடன் தோன்றியது கடவுள் முக்கால் பாதி மிருகம் கால் பாதி கலவைங்கிறதுதான் மனிதன் என்பது சரியாக இருக்கும்.

ராஜ நடராஜன் said...

சென்னை மெட்ரோவில எல்லாரும் நல்ல நல்ல படங்களா தேடிப் புடிக்கிறீங்க.நாங்கதான் இங்க காஞ்சுகிட்டு கிடக்கோம்.எப்படியோ அனுபவி ராஜா அனுபவி வாழ்த்துக்கள்.

Anonymous said...

நல்லதொரு அறிமுகம். உங்கள் பதிவுகளைப் படிக்கும் போதுதான் இது போன்ற படங்களைத் தேடிப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் அதிகரிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

இந்த டிவிடி எங்க கிடைக்குது.

இத பார்த்த தாத்தாவ கேட்கலாம் என்றால் அவரே போய் சேர்ந்து 10 வருஷம் ஆச்சு. உங்க ரசனைக்கும் கோயில் கட்டணும்.

சாணக்கியன் said...

கரப்பான் பூச்சியை நசுக்குவது ஓ.கே.

/விபத்தில் சிக்கி ரத்தவெள்ளத்தில் கிடக்கும் மனித உடலைப் பார்க்க மனம் ரகசிய ஆர்வமாக விரும்புகிறது./

இது ரொம்ப ஓவர். போறபோக்கில எல்லாருக்குள்ளயும் இருக்குன்னு வேற சொல்லிட்டீங்க... நல்ல டாக்டரா பாருங்க :-)

சுரேஷ் கண்ணன் said...

டொக்டர் எம்.கே.முருகானந்தம், சென்ஷி,யாத்ரீகன்,ராஜநடராஜன்,
சாணக்கியன் மற்றும் அனானிஸ்,

நன்றி.

சாணக்கியன்:

நாம் என்று பொதுமைப்படுத்தியதுதான் தவறுதான். பெரும்பான்மையான என்று இருந்திருக்க வேண்டும்.

சுஜாதாவின் 'அரிசி' என்றொரு சிறுகதை. சாலை விபத்தில் ரத்தம் வழிய இறந்து கொண்டிருக்கும் ஒரு கிழவன்.

"..பஸ்ஸின் ஜன்னல் பூரா முகங்கள்."பிரசன்னா,சீக்கிரம் வந்து பாரு" பஸ்ஸின் உள்ளே ஒரு அழைப்புக் கேட்டது...

என்று அந்தக்காட்சியை நம் கண்முன் நிறுத்துகிறார் சுஜாதா. முழுக்கதையையும் படிக்க:
http://ebookstamil.googlepages.com/

குசும்பன் said...

நல்லது! டெம்ளேட் ஓப்பன் ஆக ரொம்ப லேட் ஆகிறது அய்யா அதை கொஞ்ச கவனியுங்கள்!

சுரேஷ் கண்ணன் said...

//டெம்ளேட் ஓப்பன் ஆக ரொம்ப லேட் ஆகிறது//

தகவலுக்கு நன்றி குசும்பன். related posts என்றொரு blogger widget-ஐ இணைத்ததினால் இந்தப்பிரச்சினை என நினைக்கிறேன். இப்போது நீக்கிவிட்டேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

பிரதீப் said...

நீங்க சொல்ற படம் எல்லாம் ஆன்லைனில் இலவசமாய் கிடைத்தால் பார்க்க வசதியாய் இருக்கும். பதிவை போடும் போது அப்படியே கொஞ்சம் தேடிப் பாத்து உரலை கொடுத்தீங்கன்னா...என்ன, வாழைப்பழத்தை உரிச்சி வாயில....

சுரேஷ் கண்ணன் said...

//நீங்க சொல்ற படம் எல்லாம் ஆன்லைனில் இலவசமாய் கிடைத்தால்//

பிரதீப்,

நான் இந்தப்படத்தை டிவிடியில் பார்த்தேன். ஆனால் டிவிடியில் கிடைக்காத rare படங்கள் கூட இணையத்தில் இலவசமாய் கிடைக்கிறது. torrents பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். (என்ன என்று கேட்காதீர்கள். வகுப்பு எடுக்க நம்மால் ஆகாது ; தெரியாது).

அமெரிக்காவில் கிடைக்கிற அதிவேகமான இணையத்திற்கு தினமும் நாலைந்து படங்கள் கூட தரவிறக்கம் செய்துவிடலாம்.

Anonymous said...

சுரேஷ் கண்ணன்,
அருமையான பதிவு. சமீபத்தில் நானும் ஹிட்ச்காக் பற்றியும் அவருடைய படங்களை (Rope உட்பட) பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறேன். உங்கள் கருத்துக்கு காத்திருக்கிறேன்..

http://balavin.wordpress.com/2009/05/21/%e0%ae%a8%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3/

Anonymous said...

அட்டகாசமான அறிமுகம் சுரேஷ். நீண்ட வருடங்களுக்கு முன் இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். மறுபடியும் பார்க்க வேண்டுமென்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். இந்த மாதிரி பழைய கிளாசிக் திரைப்படங்கள் பற்றி அடிக்கடி எழுதுங்கள். (உங்கள் வயது என்ன? :-)

Anonymous said...

avvaiyAr padathukku vimarsanam ezuthumaru thalmayudan keetukolkiren.