Wednesday, June 03, 2009

குழந்தைமையை மறுக்காதீர்கள்

பொதுவாக இப்போதுள்ள குழந்தைகள் சற்று வளர்ந்தவுடன் அவர்களுக்கேயுரிய பிரத்யேக குழந்தைத் தன்மையை விரைவிலேயே இழப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். தங்களுடைய கள்ளங் கபடங்களை அவசரமாக இழந்து பெரியவர்களின் உலகத்தில் விரைவில் நுழையவே அவர்கள் முயல்கிறார்கள். பல சமூகக் காரணங்கள் இதற்குப் பின்னால் இருக்கலாம் என கருதுகிறேன்.

நகர வாழ்க்கையில் கூட்டுக் குடித்தன முறை உடைந்து போனதால் பாட்டி, தாத்தா போன்ற வயதானவர்களின் அருகாமையையும் ஆதரவையும் இழத்தல், பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்வதால் ஏற்படும் தனிமை, பெரிய மனிதத் தோரணையோடு 'சித்தரிக்கப்படும்' சினிமாக் குழந்தைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் பல மறைந்து போய் கணினியோடும் தொலைக்காட்சியோடும் அதிக நேரத்தை செலவழிப்பது, பெற்றோரின் சண்டையை அருகில் கவனிப்பது, பொருளாதார நோக்கில் ஒற்றைக்குழந்தை, எப்போதும் கதவு மூடியிருக்கும் தீப்பெட்டி அபார்ட்மெண்டுகள்... போன்ற பல காரணங்களைச் சொல்லலாம். அதிகப்பிரசங்கித்தனமாக பெரியவர்களுடன் சரிக்கு சமமாக உரையாட முயலும் குழந்தைகளும் பிராக்ரஸ் ரிப்போர்ட்டில் அதிக மதிப்பெண்களை பெறும் குழந்தைளே புத்திசாலிக் குழந்தைகளாக இன்று மதிக்கப்படுகிறார்கள்; கொண்டாடப்படுகிறார்கள்.

குழலின் இனிமையை விட மழலையின் இனிமை அதிகம் என்கிறார் பல்லவன் பேருந்துகளில் இலவசமாகவே பயணம் செய்பவர். (ஆனால் இவர் எழுத்துக்கள் மெல்ல மறைந்து போய், உதடு ஒட்டும்; ஒட்டாது போன்ற பொன்மொழிகள் தென்படுகின்றன. அடப்பாவிகளா! உதடு ஒட்டுவதில் ஆரம்பித்துத்தானே இந்தியாவின் மக்கள் தொகை சீனாவோடு போட்டி போடும் நிலைமையில் இருக்கிறது. இந்நிலையில் உதடு ஒட்டாவிட்டால்தான் என்ன.)

குழந்தைகளே இப்படியிருக்கும் போது பெரியவர்களின் நிலை பற்றிக் கேட்கவே வேண்டாம். பணி அழுத்தம், வேகமான உலகத்தோடு போட்டி போட நேர்வதால் ஏற்படும் சலிப்பு... என்று பலருக்கு வாரத்திற்கு ஒரு முறை மாத்திரமே சிரிப்பதற்கு நேரம் கிடைக்கிறது. கடைசி வரையிலும் தன்னுடைய குழந்தைமையின் சொச்சங்களை இழக்காமல் இருப்பவர்கள் கடவுளால் பிரத்யோக ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகவே எனக்குத் தோன்றுகிறார்கள். பாரதி கூட சக்தியை நோக்கி வேண்டும் போது 'ஒரு குழந்தையின் ஹிருதயம் வேண்டும்' என்று வேண்டுகோள் வைக்கிறான்.

ச. தமிழ்ச்செல்வன் எழுதிய 'கருப்பசாமியின் அய்யா' என்றொரு சிறுகதை. கருப்பசாமி என்கிற சிறுவனின் தந்தையான இசக்கி முத்து என்பவரைப் பற்றின கதை. அவருடைய விளையாட்டுக் குணத்தால் எல்லோராலும் கிண்டலாகவும் வெறுப்பாகவும் அணுகப்படுபவர், பின்னர் ஒரளவு 'திருந்தி' (?!) வாழ முற்படும் காலத்திலும் கூட தன்னுடைய விளையாட்டுத்தனத்தை இழக்காமலேயே இருக்கிறார். இம்மாதிரியான 'பெரியவர்களை' நீங்கள் கூட கவனித்திருக்கக்கூடும். இறுக்கமான பெரியவர்கள் இவர்களிடமிருந்து விலகியிருந்தாலும் குழந்தைகள் மிக விருப்பமுடன் இவர்களுடன் பழகுவார்கள். என்னால் இயலும் போதெல்லாம் இத்தகைய மனநிலையோடுதான் செயல்படுகிறேன்; எப்போதும் இதை இழக்கமாலிருக்கவும் விரும்புகிறேன்.

()

எப்படி குழந்தைகளுக்கான இலக்கியத்தை எழுதுவது மிகச் சிரமமானதோ அவ்வாறே குழந்தைகளுக்கான திரைப்படத்தையும் உருவாக்குவது. நம்முள் உள்ள பெரியமனித தோரணைகளையெல்லாம் கழற்றி வைத்து விட்டு செயல்பட்டால்தான் அது சாத்தியமாகும். சமீபத்தில் வெளியான தமிழப்படமான 'பசங்க'ளை குழந்தைகள் திரைப்படம் என்று என்னால் வரையறை செய்யவியலாது. அதில் வரும் குழந்தைகள் யதார்த்தமாக அல்லாது மிகையான உணர்ச்சிகளை பெரிதும் வெளிப்படுத்துபவர்களாக அமைந்திருக்கிறார்கள். (ஆனால் உயிர்மை ஜூன் 09 இதழில் சாரு இந்தத் திரைப்படத்தை 'தமிழில் முதல் குழந்தை சினிமா' என்று அதிகமாகவே சிலாகித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரங்கள் குறித்து அவர் எழுதியிருப்பது பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியவையே. ஆனால் பைத்தியம்,கிரிமினல்கள் என்று குறிப்பிட்டிருப்பதெல்லாம் குரூரம். எப்படி இதை மனுஷ்யபுத்திரன் அனுமதித்தார் என்று தெரியவில்லை).

Photobucket

அண்மையில் விஷால் பரத்வாஜின் "The Blue Umbrella' என்கிற திரைப்படத்தைப் பார்த்தேன். எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தப் பதிவே இந்தத் திரைப்படத்தைப் பார்க்கத் தூண்டியது. ரஸ்கின் பாண்டின் நாவலை விஷால் பரத்வாஜ் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார். குழந்தைகளுக்கான திரைப்படத்திற்கு ஒரு அருமையான உதாரணம்.

இமாச்சால்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம். அங்குள்ள ஒரு சிறுமிக்கு மிக அழகானதொரு நீலக்குடை கிடைக்கிறது. மிக மகிழ்ச்சியுடன் அதை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் அலைகிறாள். பார்க்கும் அனைவரையுமே அந்தக் குடை கவர்ந்துவிடுகிறது. அந்த ஊரில் பெட்டிக்கடை வைத்திருக்கும் முதியவரான நந்துவிற்கு (பங்கஜ் கபூர்) இந்தக் குடையின் மீது பெரிதான மயக்கம். சிறுமியிடம் கேட்டுப் பார்க்க அவள் மறுத்து விடுகிறார். அதே போன்றதொரு குடையை அவர் எடுக்கும் முயற்சிகள் தோற்கின்றன. இந்நிலையில் அந்தக் குடை சிறுமியிடமிருந்து காணாமற் போகிறது. அதே சமயம் நந்து சிறுமி வைத்திருந்தது போலவே ஒரு குடையை, ஆனால் சிவப்பு நிறத்தில் வைத்துக் கொண்டு ஊரெல்லாம் பெருமை காட்டுகிறார். தன்னிடமுள்ள மிகப்பெருமையையும் ஊராரின் கவனத்தையும் இழந்ததற்காக வருத்தப்படும் சிறுமி, நந்து தன்னுடைய குடையை திருடியிருப்பாரோ என்று சந்தேகம் அடைந்து காவலரிடம் புகார் தெரிவிக்கிறாள். காவல்துறை நந்துவை கைது செய்கிறது. திருடனான நந்துவை ஊரே ஒதுக்கி வைக்கிறது. அவரின் நிலையை கண்டு பரிதாபப்படும் சிறுமி தாமே முன்வந்து குடையை நந்துவிடம் கொடுக்கிறாள்.

இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது வயதான நந்துவாக நடித்திருக்கும் பங்கஜ் கபூரின் சிறப்பான நடிப்பைப் பற்றி. சர்வதேசதரம். அவருடைய கதாபாத்திரம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அவரும் அதை உணர்ந்து நடித்திருக்கிறார். எந்தவொரு இடத்திலும் அவருடைய பாத்திரம் அதன் பிரத்யேக இயல்பை இழந்து வேறு பாதையில் பிசகிச் செல்வதில்லை.

குடை ஒரு குறியீடு போலவே இந்தப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அதுவரை நந்துவை மதிக்காமலிருக்கும் ஊர்காரர்கள், அவரிடம் அழகான குடை இருப்பதை கண்டவுடன் மல்யுத்தப் போட்டியை தலைமை தாங்க அழைக்கின்றனர். பின்னர் அது திருடப்பட்டது என்பதை அறிந்தவுடன் அந்த பெருமை எதிர்மறையாக மாறிப்போகிறது.

இந்தப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் மிக இனிமையாக இருக்கின்றன. ஏற்கெனவே வெற்றிகரமான இசையமைப்பாளாராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் விஷால் (இவரது இசையமைப்பில் வந்த முதல்படம் 'மாச்சீஸ். 'ஷப்பா ஷப்பா.. என்கிற பாங்கரா பாணி பாட்டு நினைவிருக்கிறதா?) இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக தன் பங்களிப்பை தந்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் இந்தப்படத்தின் ஒளிப்பதிவு. இமாச்சல் பிரதேசத்தின் பனிசூழ்ந்த பின்னணியும் சிறுமியின் உற்சாகமும் அந்த நிலப்பரப்பும் மிக அற்புதமாக பதிவாக்கப்பட்டிருக்கின்றன. இதில் வரும் குழந்தைகள் அவர்களுக்கேயுரிய குழந்தைத் தனத்தோடுதான் இருக்கிறார்கள். எந்தஇடத்திலும் பெரிய மனிதர்களின் முகமுடிகளை அணிவதில்லை. எந்தவொரு இடத்திலும் இத்திரைப்படம் பாதை மாறி பெரியவர்களின் சினிமாவில் நுழைவதில்லை.

வாய்ப்பு கிடைத்தாலோ அல்லது அதை ஏற்படுத்திக் கொண்டோ கண்டிப்பாக இந்தத் திரைப்படத்தை - குறிப்பாக குழந்தைகளுடன் - பாருங்கள். 2006-க்கான குழந்தைகளுக்கான சிறந்த படத்திற்கான தேசிய விருது இந்தத் திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது.

suresh kannan

14 comments:

Unknown said...

’’உங்கள் குழந்தைமையை மறுக்காதீர்கள்"

குழந்தைகள் குழந்தைகள்தான்.

நேற்று நடந்த உண்மை நிகழ்ச்சி:-

பெரிய பையன்:”9th stdலேந்து புல் பேண்டுதான் போடணும்.ஹாஃப் பேண்ட் கிடையாது.

சின்ன பெண்(4 வய்து): “ஆமாம் இல்லேன்னா ”மெயின் பாயிண்ட்” அசிங்கமா வெளியத் தெரியும்...

சென்ஷி said...

பகிர்விற்கு நன்றி சுரேஷ் கண்ணன்!

Anonymous said...

Her complaint is not based on a suspicion. He stole that blue umbrella and died to red color. Watch the movie again...

I don't know...all your writings are irritating me even though most ideas/concepts are acceptable to me. I think its because of your "i-know-everything-rest-all-are-assholes" attitude.

You should stop copying "Sujata like" style and read some writings from other languages. Watch the videos of some great people (writers/scholars/directors) and see how humble they are...even when they criticize others.

--Kannan

Unknown said...

தமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்
. தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .
மேலும் படிக்க

http://tamil10blog.blogspot.com/2009/06/10_02.html

Anonymous said...

மிகச் சிறப்பான விவரிப்பு. குழந்தைகளின் வாழ்க்கையை கலைப் படைப்புகளில் பதிவு செய்யும் பாங்கு குறித்து எனது கருத்துகளை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். சினிமா, இலக்கியம் போன்ற கலை வடிவங்களில் சமூகத்தில் வழக்கத்துக்கு மாறான வாழ்க்கைகளையே மிகுதியாக பதிவு செய்ய படைப்பாளிகள் விரும்புகின்றனர். உதாரணமாக, நூறு இயல்பான மனிதர்களில் சற்றே வித்தியாமான குணாதிசயங்கள் கொண்ட ஒருவரையே தங்கள் படைப்புகளில் எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். அந்த வகையில் தங்களைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள் இயல்பு மீறாமல் இருக்கையில், அந்தக் குழந்தைகளில் சற்றே வித்தியாசமான குழந்தைகளையே படைப்புகளில் பதிவு செய்ய விரும்புகின்றனர் போலும். குழந்தைத் தன்மை இயல்பு மீறாத குழந்தைகளை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்ற அத்தகைய படைப்பாளிகள் விரும்புகிறார்கள் என்றே நினைக்கிறேன். அமீர்கானின் தாரே ஜமீன் பர் படத்தை எடுத்துக் கொள்வோம். அதுவும் ஒரு வகையில் குழந்தைகள் உலகத்தைக் காட்டும் படம்தான். அதில் நூற்றுக் கணக்கான குழந்தைகள் வலம் வந்தாலும், கதைப் படி மையப்படுத்தப்பட்டதும், பார்வையாளர்கள் கவனிக்கும் கதாப்பாத்திரமும் டிஸ்லெக்ஸியா குறைபாடு கொண்ட அந்தக் குழந்தைதான். இயல்பானவற்றை காட்டுவதைக் காட்டிலும், இயல்புக்கு சற்று மீறியவற்றையே காட்ட படைப்பாளிகள் முனைகின்றனர் என்றே கருதுகிறேன்.

நமது பள்ளி வாழ்க்கையிலும் அனுபவப்பட்டிருப்போம். ஒரு வகுப்பில் 40 மாணாக்கர்கள் இருக்கையில், அதில் ஒன்றிரெண்டு மாணவர்கள் முசுடு போன்று தோற்றமளிப்பதையும் செயல்படுவதையும் கண்டிருப்போம். உண்மையில் அதுவும் ஒரு வகை குணாதிசயமே. வயதுக்கு மீறிய மன முதிர்ச்சியே இதற்கு காரணமாக அமைகிறது. நீங்கள் சொல்வது போல் சமூகச் சூழல் அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்குகிறது.

//குழந்தைமை//

குழந்தைத் தன்மையை குறிக்கும் சொல்லாக 'குழந்தைமை'யை பயன்படுத்தியிருக்கிறீர்கள். எனக்கு தமிழ் இலக்கணம் எல்லாம் முழுமையாக தெரியாது. எனினும், குழந்தைமையை மறுக்காதீர்கள் என்று தலைப்பில் தெரிவிப்பது ஒரு விதத்தில் நெருடலை உருவாக்குகிறது என்றே உணறுகிறேன். மெய்யெழுத்துக்கு அடுத்து வரும் எழுத்து உயிர்மெய்யெழுத்தாக இருந்தால்தான் 'மை' வகையறாக்கள் மீது ஓர் ஈர்ப்பு வருகிறது என்றே உணருகிறேன். உதாரணம்... பெண்.. பெண்மை, தாய்... தாய்மை என்பன போல. தாய்மை என்று சொல்லும் போது குழந்தைகளை சேய் என்று அழைக்கிறோம். ஒருவேளை சேய்மை என்று அழைத்தால் நன்றாக இருக்குமோ? கண்டிப்பாக தெரியவில்லை. மறுபடியும் சொல்கிறேன் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர் எனக்கு இலக்கணம் எல்லாம் முழுமையாக தெரியாது.

vetrida puridal said...

thanks for sharing

கையேடு said...

//மிகையான உணர்ச்சிகளை பெரிதும் வெளிப்படுத்துபவர்களாக அமைந்திருக்கிறார்கள்.//

சிறு நகர மற்றும் கிராமப் புற பள்ளிகளுக்குள் இந்த மிகைதான் குழந்தைகளின் யதார்த்தம் என்று கருதுகிறேன்.

குழந்தைத்தன்மையின் முதல் பண்பே உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்துதல் என்று கருதுகிறேன்.

உணர்ச்சிகளைப் பற்றி ஒப்பிடும்போது கதைச்சூழலையும் கருத்தில் கொள்ளவேண்டும்னு கருதுகிறேன்.

பிச்சைப்பாத்திரம் said...

கே.ரவிஷங்கர்,சென்ஷி, வெற்றிட புரிதல், கையேடு:

நன்றி.

அனானி:

//He stole that blue umbrella//

இதைப் பதிவிலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.

//all your writings are irritating me //

இது இயல்பானதுதான். எனக்கு அவ்வாறாக சில பதிவர்களின் பதிவுகள் மிகுந்த எரிச்சலைத்தரும். ஒன்று அந்த முரண் உணர்ச்சியோடும் எரிச்சலோடும் தொடர்ந்து படிப்பேன். அல்லது அந்த மாதிரியான பதிவுகளை முற்றாகத் தவிர்த்து விடுவேன்.

//rest-all-are-assholes//

அந்த மாதிரியான பிரக்ஞையோடு நிச்சயம் எழுதுவதில்லை. அல்லது அது இயல்பாகவே வெளிப்படுகிறதோ என்று தெரியவில்லை. மேலும் சகமனிதனிடமிருந்து ஒரு அங்குலம் உயர்த்திக் காட்டும் முயற்சிகள்தானே இந்த எழுத்து,கலை, மலையில் ஏறுதல் போன்றவை...

//Watch the videos of some great people (//

முயல்கிறேன். பின்னூட்டத்திற்கு நன்றி.

globen:

//எனக்கு இலக்கணம் எல்லாம் முழுமையாக தெரியாது.//

எனக்கும் தெரியாது. 'குழந்தைமையை' என்கிற வார்த்தை உச்சரிப்பதற்கு நெருடலாகத்தான் இருக்கிறது என்பது எனக்கும் தெரிகிறது. இதிலுள்ள தவற்றை தமிழை இன்னும் நன்றாகப் பழகியவர்கள்தான் கூறமுடியும்.

தாரே ஜமீ்ன் பர் - சிறந்த குழந்தைகள் திரைப்படம்.

குப்பன்.யாஹூ said...

Thanks for sharing a good film.

யாத்ரீகன் said...

Malli thiraipadam paarthurukeengala ? Yelvo thaediyum kedaikavey illa ..

கோபிநாத் said...

பார்க்க தூண்டும் விமர்சனம்..;)

பூமகள் said...

நல்லதொரு பதிவு..

நீலக் குடை படம் எப்படியாவது பார்க்க வேண்டுமென்ற ஆவல் வந்துவிட்டது.

பாராட்டுகள்.

Anonymous said...

சுரேஷ்,
நானும் விஷால் பரத்வாஜின் விசிறி தான். இன்று தான் இந்த திரை படத்தை பார்க்க முடிந்தது...
பசுமையாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி :)

deepika said...

Hello u told na pasanga movie is bad 1.. sterday it got 3 national award ya..