என்னுடைய வலைப்பதிவை பின்பற்றும் 92 ·பாலோயர்களுக்கும் google reader-ல் உள்ள முந்றூற்றுச் சொச்சம் நபர்களாகிய அனைத்து புண்ணியாத்மாக்களுக்கும் நான் தெரிவிக்க நினைப்பது என்னவென்றால்...
பாடப்பாடத்தான் ரோகம்.. ச்சீ.. ராகம் என்கிறார்கள் பெரியவர்கள். எழுத எழுதத்தான் வேகம் என்கிறார்கள் நண்பர்கள். இதனால் எழுத்தின் தரம் கூடுகிறதோ இல்லையோ, தளத்தின் ஹிட் கூடுமல்லவா? இன்றைய அவசர யுகத்தில் 'ஷிட்டுக்களை' தந்துதான் 'ஹிட்டுக்களை' பெறமுடியும் என்று ஆலோசனை சொல்கிறார் நண்பர். எனவே இன்றிலிருந்து 'கச்சா முச்சா அல்லது மூச்சா'வென்று எதையாவது எழுதி மொக்கை பதிவுகளாக எழுதி எழுதி போட்டுக் கொண்டே இருக்கப் போகிறேன். 'அப்ப இது வரை எழுதியதையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது?' என்று முணுமுணுப்பவர்கள் சாருவின் சாபத்திற்கு ஆளாகக் கடவது. (பயப்படாதீர்கள்! அது சும்மா.. லுலுவாய்க்கு என்கிறார் சாரு. அவரைப் பற்றி எழுதினால்தான் அதிக ஹிட் கிடைக்கிறதாமே. எனவே அவரையும் அவ்வப்போது தடவிக் கொள்ளப் போகிறேன். ஆஹா! அவரைப் பற்றி எழுதும் போதே எப்படியெல்லாம் வார்த்தைகள் வந்து விழுகிறது!).
சரி. மொக்கையை ஆரம்பிப்போமா?
()
கடந்த ஏதோ ஒரு நாளில் கந்தசாமியின் ஆடியோ ரிலீஸ் விழாவை நேரடி ஒளிபரப்பாக தொலைக்காட்சியில் பார்த்தேன். மகா மகா எரிச்சல். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அந்த இளைஞனை அறையலாம் போலிருந்தது. அவ்வளவு சொதப்பல். ஏதோ குரங்காட்டி போல பார்வையாளர்களை "ஆட்றா ராமா" என்று ஒன்றுமில்லாததற்கெல்லாம் கைதட்டச் சொல்லி கேட்டுக் கொண்டேயிருந்தார். நிகழ்ச்சியை மிக சுவாரசியமாக தொகுத்தளிப்பதற்கு மிகுந்த சமயோசித புத்தியும் நகைச்சுவை உணர்வும் மேலாக சின்சியரான ஹோம் ஒர்க்கும் வேண்டும். இந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்தவர் நடிகர் விவேக். ஏதோ ஒரு பாலச்சந்தர் பட விழாவில் பாலச்சந்தரை டிராகுலாவுடன் ஒப்பிட்டு ரஜினி, கமல் என்று ஒருவரையும் விடாமல் மிக சுவாரசியமாக அதே சமயம் யாரையும் காயப்படுத்தாமல் கலாய்த்தார். மற்றவர்களை விட இவர் அதிகம் பேசமாட்டாரா என்றிருந்தது.
'கந்தசாமி' படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், ஒரே மாதிரியான டெம்ப்ளேட்டில் இசையமைக்கிறார் என்று தோன்றுகிறது. இதனால்தான் தெலுங்கில் அவரைக் கொண்டாடுகிறார்களோ என்னமோ? கந்தசாமியின் பாடல்கள் மகா கேவலமாக இருந்தன. இந்த லட்சணத்தில் 'நீண்ட வருடங்களுக்குப் பிறகு கதாநாயகனே அனைத்துப் பாடல்களையும் பாடியது இந்த படமாகத்தான் இருக்கும்' என்று பில்டப் கொடுத்ததில் என்னடா இது விக்ரமையும் தியாகராஜ பாகவதர் வகையறாக்களையும் ஒரே தராசில் அமர்த்திவிட்டார்களா என்று ஆச்சரியமாக பாடல்களை செவிமடுத்தால் ஒரு பாடல் முழுக்க "போடி.. போடி.." என்று நாயகியை அடித்தொண்டையில் கத்தி விரட்டிக் கொண்டேயிருக்கிறார் விக்ரம். இதையெல்லாம் பாடுவது என்று லிஸ்டில் சேர்த்தால் கழிவறையில் முக்குகிறவர்களைக்கூட பாடகர்கள் லிஸ்டில் சேர்த்துவிடலாம். இந்த நிகழ்ச்சியில் 30 கிராமங்களை தத்தெடுக்கிறேன் என்று 30 கிராமத்தைச் சேர்ந்தவர்களையும் மேடையில் ஏற்றிவிட்டதில் .. எப்படியும் குறைந்தபட்சம் இவர்களாவது படம் பார்த்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது. மிகுந்த அட்டகாசத்துடன் தொடங்கப்பட்டிருக்கிற இந்ததிட்டம் எப்படி நடைமுறையில் செயல்படுத்தபடப்போகிறது என்று தெரியவில்லை. ஏ.ஆர்.ரஹ்மானை தத்தெடுக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கச் சொல்லி அழைத்திருந்தனர். பாவம் அவர். ஆப்ரிக்க பழங்குடி மக்களின் இடையில் மாட்டிக் கொண்ட சாப்ட்வேர் ஆசாமி போல் விழித்துக் கொண்டிருந்தார்.
()
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருக்கிறது என்று பா.ம.கவும் அதிகமுவும் புலம்பியிருக்கிறது. பழைய படி வாக்குச் சீட்டில் முத்திரை குத்தி ஓட்டளிக்கும் முறையையே திரும்பவும் அமைக்கச் சொல்லுகிறது. தே.தி.மு.க., ஒருபடி மேலேயே போய் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கும் போட்டிருக்கிறது. நல்ல வேளையாக இன்னும் பின்னால் போய்... யாருக்கு யானை மாலை அணிவிக்கிறதோ அவரே முதலமைச்சர் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு குறித்து ஏற்கெனவே ஜெயலலிதா புலம்பிய போது அந்த இயந்திரத்தை உருவாக்கிய குழுவில் இருந்த எழுத்தாளர் சுஜாதா நடைமுறையில் அது சாத்தியமேயில்லை என்று தெளிவாகவே எழுதியிருந்தார். இருந்தாலும் இந்த அரசியல்வாதிகள் ....
()
இளையராஜாவின் 'வால்மீகி' பாடல்களைக் கேட்டேன். மனிதர் மறுபடியும் ஒரு ரவுண்டு வர தயாராகிவிட்டார் என்று தெரிகிறது. 'Bela Shinde' பாடிய 'என் கூட வருவியா'... அசத்தலாக இருக்கிறது. ஷ்ரேயா கோஷலின் பாடலும். தாய்ப்பாலுக்கு ஈடாக ராஜாவின் பாட்டுக்களை கேட்டே வளர்ந்த எனக்கு ராஜாவின் இந்த மீள்வருகை மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் வம்படியாக தன்னுடைய குரலிலேயே சில பாடல்களை பாடியே தீருவதை அவர் நிச்சயம் தவிர்க்க வேண்டும். இசையை உருவாக்குபவராக அவரை உயரத்தில் வைத்துப் பார்த்தாலும் அவரின் சில தனிமனிதக் குணங்களுக்காக வருத்தமே பட நேர்கிறது.
இந்தப்படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் ராஜா இயக்குநர் மிஷ்கினின் மீது பாய்ந்துவிட்டார். 'ஒவ்வொரு இயக்குநரும் ஒருபடமாவது ராஜாவுடன் பணியாற்ற வேண்டும்' என்று மிஷ்கின் ராஜாவை பெருமையாக பேசுவதாக நினைத்து பேசப்போக, பின்னால் பேசிய ராஜா, 'எனக்கு யாரும் சிபாரிசு செய்யத் தேவையில்லை. யாரும் எனக்குத் தேவையில்லை. மிஷ்கின் ஏதோ என்னுடைய மீடியேட்டர் போல செயல்படுகிறார்' என்கிற ரேஞ்சில் பேசியிருக்கிறார். இதனுடைய பின்னணிக் காரணங்கள் எதுவாக இருந்தாலும் ஒரு மூத்த படைப்பாளி தன்னுடைய மன மாச்சரியங்களை இப்படி பொது மேடையில் வாந்தியெடுப்பது எரிச்சலாக இருக்கிறது. இப்படி சகபடைப்பாளிகளுடன் மோதிக் கொள்வது ராஜாவிற்கு புதிதல்ல. புதிய இயக்குநர்களை எதையும் பேச விடாமல் 'தான் போட்டுக் கொடுத்ததுதான் பாட்டு, சரியா இருக்கும் போ உனக்கு எதுவும் தெரியாது..' என்று விரட்டி விடுவார்' என்று திரையுலகைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். அஜீத் நடித்த 'முகவரி' படத்தில் கூட இப்படியொரு காட்சியமைப்பு வைக்கப்பட்டது, ராஜாவை குறித்தே என்கிறார்கள்.
மேலும் ரஹ்மானுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிற சர்வதேச அங்கீகாரம் குறித்து ராஜாவிற்கு நீண்டநாட்களாகவே ஒரு பொச்சரிப்பு இருக்கிறது என்பது இலைமறை காயாக தெரிகிறது. ரஹ்மானின் இசை பற்றி அவர் மிக அரிதாகவே பாராட்டிப் பேசியிருக்கிறார். ராஜாவின் இசையில் வெளிவந்திருக்கிற 'அழகர் மலை'யில் ஒரு பாட்டு கேட்டேன். .
.உலகம் இப்போ எங்கோ போகுது.. எனக்கிந்த அன்னை பூமி போதும்... இங்கு பிறந்தவரும் எங்கோ போகிறார். எனக்கிந்த சொந்த நாடு போதும்....என்று போகிறது அந்தப் பாட்டு.
இளையராஜாவை விமர்சித்து எழுதியதால் பின்னூட்டங்கள் எப்படி வரப்போகின்றன என்பதை இப்போதே யூகிக்க முடிகிறது. தீராநதி பேட்டியில் எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் 'இளையராஜா இசை பற்றிய விமர்சனத்துக்கு மிக ஆபாசமான கடிதங்களும் கொலை மிரட்டல்களும் வந்தன' என்கிறார். சாருநிவேதிதாவும் இதே போன்றதொரு கசப்பான அனுபவத்திற்கு ஆளாகியிருக்கிறார் என்பது தெரிகிறது.நமக்குப்பிடித்த கலைஞனை இன்னொருவருனுக்கும் பிடித்தேயாக வேண்டும் என்று ஏன் அவ்வளவு தீவிரமாக எதிர்பார்க்கிறோம் என்று தெரியவில்லை. இன்னொருவரின் மாற்றுக் கருத்தையும் ஏற்றுக் கொள்கிற சகிப்புத் தன்மை எப்போது நமக்கு வரும் என்றும் தெரியவில்லை.
(மொக்கை தொடரும்)
suresh kannan