
பாரதி புத்தகலாயம் சார்பில் 'புதிய புத்தகம் பேசுது' என்கிற மாதஇதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த இதழில் பல்வேறு பிரசுரர்களின் புதிய வெளியீடுகளைப் பற்றிய தகவல்கள் அடங்கியிருக்கின்றன. இதனால் என்னென்ன புத்தகங்கள் சமீபத்தில் வெளிவந்திருக்கின்றன என்பதைப் பற்றிய தகவல்களை ஒரே புத்தகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
புதிய படைப்பாக்கங்களைப் பற்றியும், மறுபிரசுரங்கள் பற்றியும் பிரபல படைப்பாளிகள் தங்களுடைய பார்வைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களுடைய நேர்காணல்களும் வெளியாகியிருக்கின்றது.
டிசம்பர் 2004 இதழில் கீழ்க்கண்ட புத்தகங்களைப் பற்றின விமர்சனங்கள் பிரசுரமாகியுள்ளன.
முனைவர் கே. வசந்தி தேவியின் நேர்காணலின் தொகுப்பான (சுந்தரராமசாமி இவருடன் உரையாடியிருக்கிறார்) 'தமிழகத்தில் கல்வி' என்கிற நூலைப்பற்றி 'முகில்' எழுதியிருக்கிறார்.
புகழ்பெற்ற புதினமான மாக்சிம் கார்க்கியின் 'தாய்' நாவலைப் பற்றி எஸ்.ஏ.பெருமாள் எழுதியிருக்கிறார்.I
வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படையினரின் கொடூர வன்முறைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களைப்பற்றி ச.பாலமுருகன் எழுதிய 'சோளகர் தொட்டி' என்கிற உண்மைச்சம்பவங்களின் மீது எழுதப்பட்ட நாவலைப்பற்றி ஜெ.முனுசாமி தன்னுடைய பார்வையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
காமராஜரின் எளிமையான அரசியலைப்பற்றி வீரபாண்டியன் எழுதியிருக்கிற 'ஆகட்டும் பார்க்கலாம்' என்கிற நூலைப்பற்றி திலீபன் எழுதியிருக்கிறார்.
சென்னையில் வருடாவருடம் நடைபெறுகிற புத்தககண்காட்சிக்கு மூலகாரணமாயிருந்த பி.ஐ. நிறுவனத்தின் பொதுமேலாளரான கே.வி.மேத்யூயைப் பற்றி இரா.முத்துக்குமாரசுவாமி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
இந்துத்வா கட்சிகளின் மதவெறிகளைப் பற்றி கே.அசோகன் பல்வேறு காலகட்டங்களில் எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு 'நரபலியும் நரவேட்டையும்'. இந்த நூலைப் பற்றி ஆதவன் தீட்சண்யா மிகவும் செறிவானதொரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.
O
இந்த இதழின் சிறப்பம்சமாக சோலை சுந்தரபெருமாளின் நேர்காணலை குறிப்பிடலாம். அரைப்படி நெல் கூலி உயர்த்திக் கேட்டதற்காக நிலவுடமையாளர்களால் விவசாயிகள் தீ வைத்துக்கொளுத்தப்பட்ட கீழ்வெண்மணி சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 'செந்நெல்' என்கிற நாவலை எழுதின இவரை சூரியசந்திரன் சந்தித்து உரையாடியிருக்கிறார்.
இந்தப் பேட்டியின் ஒரு பகுதி:
எழுத்தாளராவது என்று முடிவு எடுத்த பிறகு நீங்கள் எழுதிய முதல் படைப்பு எது?
1987-ம் ஆண்டு 'கலைமகள்' இதழில் ஒரு குறுநாவல் போட்டி அறிவித்திருந்தார்கள். அதற்கு ஒரு குறுநாவல் எழுதி அனுப்பலாம் என்று முடிவு செய்தேன். கலைமகள் இதழைப் பொறுத்தவரை, மூத்த தஞ்சைப் படைப்பாளிகளின் உள்ளடக்கமே அதன் உள்ளடக்கமாகவும் இருந்தது. நான் அப்படியான ஒரு குறுநாவலை எழுதி பரிசு வாங்கிவிடமுடியும். ஆனால், ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கையை - அவர்களிலும் பெண்கள் ஒடுக்கப்படுவதை கருவாக வைத்து 'மனசு' என்றொரு குறுநாவலை எழுதி அனுப்பினேன். அதற்கு இரண்டாம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. அதுதான் பத்திரிகையில் பிரசுரமான முதல் படைப்பு. 'கலைமகள்' ஆசிரியர் கி.வா. ஜகந்நாதன், 'சென்னை வந்தால் சந்திக்கவும்' என்று ·பார்மாலிட்டிக்காக ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
எழுத்தாளனாகணும் என்கிற ஆர்வலத்திருந்த நான், உடனே சென்னைக்குப் போய் அவரை சந்தித்தேன். அவரின் அணுகுமுறைலிருந்தே அவர் என்னை மேட்டுக்குடிக்காரனாய் இருப்பேனே¦ன்று எதிர்பார்த்திருக்கிறார் என்பதை அறிய முடிந்தது. நான் தலித்தாக பிறக்காவிட்டாலும் தலித்தோடு தலித்தாக வாழ்ந்து கொண்டிருப்பவன். அவர், 'இது போன்ற படைப்பை கலைமகள் வெளியிடுவது இதுதான் முதலும் கடைசியுமாக இருக்கும். உங்களுக்கு ஏற்ற பத்திரிகைகளிலே இனி எழுதிக் கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டார். அப்படி அவர் கூறியதும் எனக்கு ஏற்ற பத்திரிக்கை 'தாமரை'தான் என்கிற எண்ணம் வந்துவிட்டது. அதன் பிறகு தாமரையில் எழுத ஆரம்பித்தேன்.
O
இன்னும் பல புத்தகங்களைப்பற்றின பல்வேறு இலக்கிய திறனாய்வாளர்ளின் சீரிய விமர்சனங்கள். அடுத்த இதழ் 27-வது புத்தக கண்காட்சியைப் பற்றின சிறப்பிதழாகவும் எழுத்தாளர் ஜெயகாந்தனின் நேர்காணலுடனும் வரவிருப்பதாக ஒர் அறிவிப்பு கூறுகிறது.
தனி இதழ் - 10ரூ
ரூ.250/- செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் இந்த இதழை இலவசமாக பெறுவதுடன் சம்பந்தப்பட்ட பதிப்பகத்தின் நூல்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.
தொடர்புக்கு:
பாரதி புத்தகாலயம்2, குயவர் வீதி, ஜோன்ஸ் சாலை, சைதை, சென்னை-600 015. போன்: 24332424இணையத்தளம்: www.tamizhbooks.com மின்னஞ்சல்: info@tamizhbooks.com
suresh kannan
2 comments:
சில காலமாக புத்தக கடைகளில் கண்ணில் பட்டு வருகிறது. வாங்கலாமா வேண்டாம என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில் உங்களின் இந்த கட்டுரையைப் படிக்கிறேன். தகவலுக்கு நன்றி சுரேஷ்.
By: ராஜா
very useful information.
Thanks.
mathi
By: mathi
Post a Comment