Thursday, December 16, 2004

நானும் என் வலைப்பதிவும்

எந்தவித முன்தீர்மானங்களோ, முன்னேற்பாடுகளோ இல்லாமலேயே என் வலைப்பதிவை ஆரம்பித்துவிட்டேன்.

'இதோ பார்யா இந்தாள்லாம் ப்லாக் தொடங்கிட்டான்' என்று மிக டென்ஷனாகி வாந்தியெடுக்க ஆரம்பித்த நம்பியும், அதைத்தொடர்ந்து ஓங்காரமிட்டு ஒலிக்கத் தொடங்கிய (ஆசிப்) சாத்தானின் வேதமும், நிர்மலா டீச்சரின் எண்ண அலைகளும் எனக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுத்தன. ஆக்கப்பூர்வமாகவோ, இல்லையோ, நான் ஆரம்பித்த விஷயம் சிலரை பாதித்திருக்கிறது என்னும் வகையில் உவகையே கொள்கிறேன்.

நான் இதுநாள் வரை எழுதியதை பின்னோக்கிப் பார்க்கையில் எனக்கே திருப்திகரமாக இல்லை. சில நண்பர்கள் பெருந்தன்மையுடன் மனமுவந்து 'நன்றாக இருக்கிறது' எனும் போது குற்றஉணர்ச்சி என்னை ஆட்கொள்கிறது. நான் எழுதிய கட்டுரைகளை மீண்டும் படித்துப்பார்க்கும் போது, பிச்சைக்காரன் தன் பாத்திரத்தில் எடுத்த வாந்தி மாதிரி இருப்பதை உணர முடிகிறது. (இரண்டு வலைப்பதிவுகளின் பெயர்கள் இந்த வாக்கியத்தில் வந்துவிழுந்ததை கவனித்தீர்களா?) இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்று தோன்றினாலும் நேரமின்மை ஒரு பூதாகரமான பிரச்சினையாக இருக்கிறது.
சில எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய படைப்புகளை பலமுறை திருத்தியும், மறுமுறை எழுதுவதுமாக இருப்பார்கள் என்று படித்திருக்கிறேன். அவர்களின் பொறுமையை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. நான் எழுதியவற்றை ஒரு முறைக்கு மேல் என்னால் படிக்க இயலவில்லை.

சரி போகட்டும்.


இந்த நேரத்தில் சில பேருக்கு நன்றி சொல்ல வேண்டியது என் கடமையாகிறது.

1) முதலில் ப்லாக்கர்.காம்மிற்கு.

பிரபஞ்சவெளியைப் போல் பரந்துகிடக்கும் இணைய உலகில் எழுதுவோர்களுக்கு ஊக்கம் தருகிறாற் போல், அவர்களுக்கென்று ஒரு இடத்தைத் தந்ததற்கு. (ஆனால் பின்னால் காசு கேட்பார்களோ என்கிற மிடில்கிளாஸ் மனப்பான்மை உடைய கேள்வியை தவிர்க்க இயலவில்லை)

2) பா.ராகவனுக்கு

பாரா. வலைப்பூவின் ஆசிரியராக இருந்த போது, இவர்கள் ஏன் இன்னும் வலைப்பதிவு ஆரம்பிக்கவில்லை? என்கிற மாதிரி கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த சில பேரில் நானும் ஒருவன். அப்போதைக்கு அதை படித்துவிட்டு மறந்து போயிருந்தாலும், அந்த விஷயம் என் ஆழ்மனதில் போய் ஒளிந்திருந்ததோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது. சில இணைய நண்பர்களும் தொடர்ந்து இந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டு என் மனதிற்குள் இருந்த சாத்தானை காம்ப்ளான் ஊட்டி வளர்த்துக் கொண்டிருந்தனர்.

3) தமிழ்மணம் காசிக்கு

அவர் எழுதிய இ-சங்கம கட்டுரைகளைப் பற்றி முன்னமே குறிப்பிட்டு இருந்தேன். அதை படிக்கப் போய்தான், வலைப்பதிவு தொடங்க வேண்டும் என்கிற ஆவலே எழுந்தது. அந்த கட்டுரைத் தொடரை பூர்த்தி செய்ய வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.

4) கே.வி. ராஜாக்கும், பத்ரிக்கும்.

திருமணக்கனவுகளில் மிதந்து கொண்டிருக்கும் நண்பர் ராஜாவை சிவபூஜை கரடியாக மின்னஞ்சல் மூலம் தொந்தரவுப்படுத்தியதில், அவர் சில எழுத்துரு மாற்றங்களை ஏற்படுத்தித்தந்தார். நடைபெறவிருக்கும் அவர் திருமணத்திற்கு நான் போனால், 'இந்தாளுக்கு சாப்பாட்டை போட்டு சீக்கிரம் வெளியே அனுப்புங்கப்பா, அப்புறம் கமெண்ட் பாக்சை பத்தி ஒரு டவுட் இருக்குன்னு ஆரம்பிச்சிடப் போறார்' என்று அவர் டென்ஷனாகக்கூடிய அளவிற்கு அவரை தொந்தரவுப்படுத்தியிருக்கிறேன். :)

'சன்நீயூஸ் டி.வி. ஜெயா டிவி புகழ்' பத்ரி, தன் தொடர்ச்சியான வேலைகளுக்கிடையிலும், வருகையாளர்கள் தங்கள் எண்ணங்களை தொழில்நுட்ப இடைஞ்சல்கள் இல்லாமல் பதிய, சில மாற்றங்களை ஏற்படுத்தித்தந்தார். வலைப்பதிவென்று ஆரம்பித்தால் இவரைப் போல் (உள்ளடக்கத்தில் இல்லையென்றாலும்) தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். அந்தவிஷயத்தில் என் ரோல்மாடல் இவர்தான்.

5) வருகையாளர்களுக்கு

வலைப்பதிவுகள் பற்றி சுஜாதா ஆனந்தவிகடன் கட்டுரையில் முன்பு குறிப்பிட்டிருந்தது வலைப்பதிவுலகில் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. நான் இந்த விஷயத்தில் வெட்கமே இல்லாமல் ஒப்புக்கொள்வேன். நான் அந்த 15 நிமிஷப் புகழ் கிடைக்குமா என்றுதான் எழுதுகிறேன். நல்லதோ, கெட்டதோ எதிர்வினையே இல்லாமல் தொடர்ந்து எழுதுவது என்னால் இயலாத காரியம். எந்தவொரு பதிவுக்கும் எதிர்வினைகள் வராத பட்சத்தில் சோர்ந்து போகிறேன். அதைக்குறைக்கும் வகையில் வருகை தந்த, தரப்போகிற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

யாராவது விடுபட்டுப் போயிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். இதெல்லாம் தேவையா என்று சிலர் கருதலாம். அழைத்த நேரத்தில் உதவியவர்களுக்கு நன்றி சொல்வதை என் கடமையாகவே நான் நினைக்கிறேன்.

எந்நன்றி கொன்றார்க்கும்.....

வேண்டாம் விட்டுவிடுகிறேன். நீங்கள் டென்ஷனாவது தெரிகிறது.

() () ()

இவர்கள் வலைப்பதிவு ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் என்று பாரா என் போன்றவர்களை குறிப்பிட்டு சொன்னது போல் நான் சில பேரை குறிப்பிட்டு சொல்ல ஆசைப்படுகிறேன்.

1) திருமலை

ராயர் காப்பி கிளப்பில் எழுதும் நண்பர். அங்கே நானொருமுறை 'எழுதுகிற விஷயங்களுக்கு யாரும் எதிர்வினை செய்ய மாட்டேன்கிறீர்களே' என்று அழுதுபுலம்பி மூக்கைச் சிந்திப் போட, அதை காணச் சகியாமல் எழுத வந்தவர். மணிரத்னம் படத்திற்கு ஒருவேளை இவர் வசனம் எழுதப் போனால் மிகச் சிரமப்படுவார் என்று எண்ணுமளவிற்கு நீ.......ளமான பதில்கள் எழுதி பிரமிக்க வைப்பவர். அவரின் கடிதங்களைப் படிக்கும் போது பழைய விஷயங்களையெல்லாம் எப்படி மறக்காமல் ஞாபகம் வைத்திருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கும். வெளியூரில் இருந்தாலும் தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை மிக உன்னிப்பாக கவனிப்பவர்.

2) ஆனந்த்ராகவ்

நான் இணையத்தில் நுழைந்த போது ஒரவிற்கு தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தார். நானாக இருந்தால் பாங்காக்கில் இருக்கும் முக்கியமான 'அயிட்டங்களை' கவனித்துக் கொண்டிருப்பேன். ரசனையில்லாத இந்த மனிதரோ வெகுஜன இதழ்களுக்கு தன் சிறுகதைகளை அனுப்பி, முதற்பரிசுகள் பெறும் வேண்டாத பழக்கத்தை கொண்டிருக்கிறார். இவர் எழுதின நீச்சல்குளம் என்கிற நகைச்சுவை படைப்பை அலுவலகத்து தரையில் உருண்டு சிரித்து படித்தேன். வெளிநாட்டில் இருந்தாலும் தமிழ் மீது பற்று மாறாத இவரைப் போன்றவர்களைக் கண்டால் உற்சாகமாக இருக்கிறது.

3) மஸ்கட் சுந்தர்.

'ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே' என்று சைக்கிளை உருட்டிக் கொண்டு செல்வதற்கு மிகச் சரியான மனிதர். இவர் எழுதுகிற நினைவலைகள் மரத்தடியில் மிக பிரசித்தம். பாடல் பெற்ற ஸ்தலம் போல, சுஜாதா தன் கட்டுரையில் குறிப்பிடும் அளவிற்கு சுஜாதா ரசிகர். சமாதானப் புறா.

4) ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்

மடற்குழுக்களுக்கு எழுதுவதை முழுநேரமாகவும் குடும்பத்தலைவியாக இருப்பதை பகுதிநேரமாகவும் வைத்திருப்பவர். மரத்தடியின் சீத்தலைச்சாத்தனார் என்பது இவருக்கு நான் வைத்திருக்கும் செல்லப்பெயர். தமிழில் பிழை கண்டால் தன் தலையில் குட்டிக் கொள்ளாமல், தனி மின்னஞ்சல் அனுப்பி மற்றவர்கள் தலையில் குட்டுபவர்.

பட்டியலிட்டால் பதிவு இன்னும் நீண்டுக் கொண்டே போகும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். சந்தர்ப்பம் வாய்க்கும் பட்சத்தில் தொடர்வேன்.

மேற்குறிப்பிட்டவர்களையும் வலைப்பதிவர்கள் உலகத்தில் வந்து ஐக்கியமாகுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

(நட்புடனான உரிமை எடுத்துக் கொண்டு சிலரை கிண்டலடித்திருக்கிறேன். ஏதேனும் தவறிருந்தால் பொறுத்தருளவும்.)

suresh kannan

4 comments:

Anonymous said...

சோதனை பதிவு.

By: suresh kannan

Anonymous said...

<< நான் எழுதியவற்றை ஒரு முறைக்கு மேல் என்னால் படிக்க இயலவில்லை. >>

கவலைப்படாதப்பு. முக்கி முக்கி அடைகாத்தாலும் முட்டைக்குள்ள இருந்து முசலா வரப்போகுது.

ஹா ஹா ஹா.


By: சிங்குச்சான்

Nirmala. said...

சுரேஷ், இப்படித்தான் நம்மளைச் சுற்றி இருக்கறவங்க கிட்ட எதாவது பாதிப்பை ஏற்படுத்திட்டுப் போறோம், நமக்கே தெரியாமல். அதனால நிறைய எழுதுங்க. உங்கள் எழுத்து எங்கேயாவது யாருக்காவது எதாவது செய்யலாம்.

உங்க 'பார்த்திபன்' வலைப்பதிவு கூட (லேட்டா!) எனக்குள்ள சில கேள்விகளை கேட்குது!

Anonymous said...

எல மக்கா,
பின்னால ஊட்டு, முன்னால ஊட்டுல்லாம் நமக்கு எதுக்குலே?
நீ பாட்டுக்கு எழுதிக்கிட்டே இரு. 'நான் நடிச்சதயெல்லாம் திரும்பிப் பாத்தா
எனக்கே திருப்தியில்ல'ன்னு பீலா வுடுவானுஙக. நீயும் ஏன்யா அது மாதிரி
எனக்கே திருப்தியில்லன்னெல்லாம் புலம்புத. இப்படில்லாம் சொல்லி மிரட்டுனாலாவது கொஞ்ச பேரு வேதம் ஓதாமஓடிட மாட்டாங்களான்னு பாக்கியா?
அதெல்லாம் நடக்காது அண்ணாச்சி!! :-)

By: Asif Meeran