Monday, December 06, 2004

ஒரு மென்மையான திரைப்படம்

ஒரு ஏகாந்தமான மனநிலையில், வீட்டின் யாருமற்ற தனிமையில், திரைப்படம் ஒன்றை பார்க்க நேரிட்டது.

இருங்கள்... நீங்கள் பாட்டுக்கு நீலக்கலரில் உள்ள படங்களை அர்த்தம் செய்துக் கொள்ளப் போகிறீர்கள்.

அது மணிரத்னம் இயக்கிய மெளனராகம்.

எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத அந்தப் படத்தை, அதன் சாமர்த்தியமான திரைக்கதைக்காகவும், இளையராஜாவின் பிரமிக்க வைக்கும் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்காகவும் மீண்டுமொரு முறை பார்த்தேன். இத்தனைக்கும் இது மணியின் இரண்டாவது படம். மேலும் அவர் எந்த இயக்குநரிடம் உதவியாளராக கூட இருந்ததில்லை. ஆனால் இந்தப் படத்தின் எந்தவொரு இயக்குநரின் பாணியின் சாயலுமில்லாத காரணத்திற்கு அதுவே ஒரு காரணமாயிருந்திருக்கும் என்று யூகிக்கிறேன். வழக்கம் போல், இது ஒரு ஆலிவுட் படத்தின் தழுவல் என்று குற்றஞ்சாட்டுவோரும் உண்டு.

O

இன்றைய தமிழ்ப்பட கதாநாயகிகளின் உடைகள் போல கதை சின்னதுதான். ஏற்கெனவே காதலித்தவனை, அவன் இறந்து போன நிலையிலும் மறக்க முடியாமல் மனதில் சுமந்திருப்பவள், தன்னை திருமணம் செய்து கொண்டவனை முதலில் ஏற்க மறுப்பதும், பின்பு மெல்ல மனசு மாறுவதும்தான் கதை.
முக்கியமான இரண்டே (மோகன், ரேவதி) கதாபாத்திரங்களை வைத்து, சுவாரசியமாக தமிழில் திரைக்கதை அமைப்பது சிரமமான விஷயம். அந்த இரண்டு பாத்திரங்களுக்கு மிகப் பொருத்தமானவர்களை அமைத்தது, இயக்குநரின் தீர்க்க தரிசனத்தை காட்டுகிறது. ரேவதியின் சிறுவயது புகைப்படங்களோடு படத்தை தொடங்கியது, நல்லதொரு தொடக்கமாக இருக்கிறது.

ஆனால் மிக குறும்புத்தனமான பெண்ணாக ரேவதி காட்டப்படும் போது, அவளின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது என்றாலும், தன்னைக்காதலித்தவன் காவல் துறையினரால் கொலை செய்யப்பட்டதை பார்த்த பெண்ணால் இவ்வளவு உற்சாகமாக இருக்க முடியுமா என்ற கேள்வியையும் தவிர்க்க இயலவில்லை. என்றாலும் கல்லூரிப் பெண்ணாக நடிக்கும் போது உற்சாகத்தையும், திருமணமான பிறகு சோகத்தையும், பின்னர் ஏற்படும் மாற்றங்களையும் தன் சிறப்பான முகபாவங்களால் வெளிப்படுத்தியிருந்தார் ரேவதி.

அடுத்து மோகன். 'இவ்வளவு பெருந்தன்மையான புருஷன் மாதிரி தனக்கும் அமைய வேண்டும்' என்று ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படுகிறமாதிரியான ஒரு கதாபாத்திரம். பொதுவாகவே மோகனை எனக்குப் பிடிக்கும். மென்மையான, இயலாமையுடன் கூடிய அசட்டுத்தனமான மிடில்கிளாஸ் கதாநாயகன் என்றால் அவரை நம்பிப் போடலாம். இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பதுடன், அந்த வெள்ளை சுரிதார் உடையும் அவருக்கு மிகப் பாந்தமாக பொருந்தியிருக்கிறது.

மிக முக்கியமான சிறப்பம்சமாக குறிப்பிட வேண்டியது இளையராஜாவின் இசை. ஒரு நல்ல இசையமைப்பாளருக்கு எங்கே பின்னணி இசை அமைக்க வேண்டும் என்பதை விட, எங்கே அமைக்காமல் மெளனமாக விட வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். அது ராஜாவிற்கு தெளிவாகத் தெரிந்திருக்கிறது. பல இடங்களில் காட்சிகளுடன் இழையும் அவரின் இசை பார்வையாளனின் மனதை வருடுகிறது. தமிழின் மெலடி பாட்டுக்களின் வரிசையில் 'நிலாவே வா' என்றும் இருக்கும்.

இதன் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம். இருட்டில் படமெடுப்பவர் என்று மணியின் மீது ஒரு பொதுவான குற்றச்சாட்டு உண்டு. அஞ்சலியில், மதுஅம்பாட்டின் ஒளிப்பதிவின் மூலம் சில காட்சிகளில் இருண்மை அதிகமிருக்கிறதென்றால், அந்த மனவளர்ச்சியற்ற குழந்தையும் முகபாவங்களுக்கு அந்த லைட்டிங்தான் சிறப்பாக இருந்திருக்கும் என்பதை அவர் யூகித்திருக்க வேண்டும். கற்பனை செய்து பாருங்கள். பல்லாயிரக்கணக்கான வாட்ஸ் திறனுடைய விளக்கொளியில் ஒரு இரண்டரை வயது குழந்தையை மனவளர்ச்சியற்ற குழந்தையாக காட்ட முடியுமா?

என்னைப் பொருத்தவரைக்கும் ஒளிப்பதிவில் ஒரு புதிய பாணியையே கையாண்டவர் ஸ்ரீராம். இயக்குநரின் புதுமையான சிந்தனையும், ஒத்துழைப்பும் இல்லாமல் அது சாத்தியமாகியிருக்காது. ஆக்ராவில் தாஜ்மகாலை பார்வையாளருக்கு எதிர்பாராத ஒரு கணத்தில், கோணத்தில் இவர் அறிமுகப்படுத்தும் போது ரேவதியைப் போலவே நாமும் அந்தப் பிரமிப்பில் அயர்ந்து போய் உட்கார்ந்து விடுகிறோம்.

O

இந்தப்படத்தின் வசனகர்த்தா மணிரத்னத்தையும் நான் மிக ரசித்தேன். மிக கூர்மையான, அதே சமயத்தில் நாடகத்தனமில்லாத மிக இயல்பான வசனங்கள்.

நினைவில் இருந்து சில:

(ஆரம்பத்தில் ரேவதியை பெண் பார்த்துவிட்டு மாப்பிள்ளை வீட்டார் சென்று விட்ட பிறகு)

எனக்கு கல்யாணம் வேணாம். நான் படிக்கணும்.

சின்னக்குழந்த மாதிரி பேசாதம்மா.

அப்ப என்ன சின்னக்குழந்த மாதிரி நடத்தாதீங்க

(திருமணமாகி விட்டு டெல்லியில் மோகன் வீட்டில் முதல் உரையாடல்)

இது செங்கல்யும் சிமெண்ட்டினாலும் கட்டப்பட்ட ஒரு இடம். அவ்வளவுதான். இத வீடா மாத்த வேண்டியது உன் கிட்டதான் இருக்கு

எனக்கு சிமெண்ட்டும் செங்கல்லும் போதும்.

(கார்த்திக் ரேவதியிடம்)

உனக்குப் பயம். என் மேல பயம். எங்க என் அழகில மயங்கிடுவியோன்னு பயம்.

அதெல்லாம் கிடையாது.

அப்ப நிரூபி

எப்படி?

என்கூட ஒரு கப் காப்பி சாப்பிடு

O

வி.கே.ராமசாமி சம்பந்தப்பட்ட அந்த அசட்டு காமெடி காட்சிகளை நீக்கிவிட்டால் இது எங்கள் தமிழ்ப்படம் எந்த சர்வதேச அரங்கிலும் தைரியமாக திரையிடலாம் என்றே தோன்றுகிறது. இது திரைப்படமாக வெளியாகி வெற்றிகரமாக ஓடியும், சில பல முறைகள் தொலைக்காட்சிகளில் திரையிடப்பட்டும் கூட, சமீபத்தில் இது சென்னை பிலிம் சேம்பரில் திரையிடப்பட்ட போது நூற்றுக்கணக்கானவர்கள் அமைதியாக உட்கார்ந்து ரசித்ததே இந்தப்படத்தின் சாகாவரத்திற்கு சாட்சி.

தமிழ்ச்சினிமா தொடங்கி இதுவரை ஆயிரக்கணக்கான திரைபடங்கள் வெளியாகியும் கூட, இதுபோன்ற மென்மையான, தரமான திரைப்படங்கள் எவை என்று பட்டியலிட்டால், அது சொற்ப அளவிலே இருப்பது வருத்தத்துக்குரியது.



suresh kannan

10 comments:

PKS said...

My views about your writings and blog is available at http://pksivakumar.blogspot.com/2004/12/blog-post_06.html - Thanks and regards, PK Sivakumar

பரி (Pari) said...

இன்றைய தமிழ்ப்பட கதாநாயகிகளின் உடைகள் போல கதை சின்னதுதான்.
>>>
ரொம்ப குசும்பு உங்களுக்கு :-)

என்னங்க வி.கே.ராமசாமி அசட்டு காமெடியா? என்னமோ போங்க பெருசு :-))

சரி சரி இன்னும் வரவேற்பே சொல்லலியே, வாங்க வாங்க. இன்னும் நிறைய லேகியம் பண்ணுங்க..சே!! இலக்கியம் பேசுங்க :)

Anonymous said...

In that movie's, only irritant was Karthik. He was never tired in doing the same sterotyped 'Chandramouli' in n number of his movies. I treat this as one the best of Mani Ratnam's.

S.T.R

mavurundai said...

மணிரத்தினத்தின் மூன்றாவது படம் மெளனராகம். பகல்நிலவு, இதயக்கோயிலை தொடர்ந்து மெளனராகம்!

Anonymous said...

யோவ் சுரேஷ¤,

உமக்கு மோகனைப் புடிக்குறதுக்கு 'மெனக்கெட்ட' காரணங்கள் இருக்கு.
இந்தப் படத்துல எனக்கு அவரைப் புடிச்சதுக்கு ஒரே காரணம் அவர் 'மைக்கைப்'
புடிச்சிக்கிட்டு பாடாததுதான். 'நிலாவே வா' அவர் வாய்சைப்புல வந்ததை நெனைக்கும்
போதெல்லாம் நிலவு மேல பரிதாபமா இருக்குவே!! :-)

ஆசிப் மீரான்

அபுல் கலாம் ஆசாத் said...

thalaivaa,

kalakkungka.

inthap padam namakkum favourite thaan.

anbudan
Azad

சன்னாசி said...

மாவுருண்டை: அந்த இரண்டு படங்களுக்கும் முன்பே மணிரத்னம் கன்னடத்தில் 'பல்லவி அனுபல்லவி' எடுத்துவிட்டார் - அதுதான் அவரது முதல் படம் (அனில் கபூர், லட்சுமி).

Anonymous said...

kilichinga ellaruma serndhu....Mouna ragam is a eee-adichaan copy of "nenjaththai killathae'..poi padatha paarungappa...

வசந்தன்(Vasanthan) said...

மணிரத்தினத்தின் இறுமாப்பும் வீம்பும் கூடப் பிடிக்கும். "பம்பாய்" "கன்னத்தில் முத்தமிட்டால்" என்று படமெடுக்க யார் துணிவார்கள்?

Anonymous said...

hi

Views about the movie and the way u analysed,every thing is fine,u hv hv specified everybody where u left Karthik in that movie, those 20 mins is the one which holds the entire movie,those 20 mins what every actor wanted to do in his life as a guest role , i thought this is a miss in ur review