Monday, December 13, 2004

கணையாழியும் நானும்கணையாழி என்ற பத்திரிகையின் பெயரை முதன்முதலில் சுஜாதாவின் கட்டுரைகளில்தான் பார்த்தேன். சிற்றிதழ்களில் மட்டுமே புழங்கும் பல எழுத்தாளர்களின் பெயர்கள் அவர் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமாயிற்று. பல சிற்றிதழ்கள் ஆரம்பமாகி நின்று போனாலும் இன்றும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பழைய இதழ்களில், கி.கஸ்தூரி ரங்கனால் ஆரம்பிக்கப்பட்ட கணையாழி மிக முக்கியமானது. இன்றைக்கு இலக்கியகர்த்தாக்களாக்க அறியப்படும் பல எழுத்தாளர்களின் பயணம் இங்கிருந்துதான் தொடங்கியது. 'கணையாழியின் பரிணாம வளர்ச்சி' என்று அந்த பத்திரிகையிலேயே வெளியான, திரு.வே.சபாநாயகத்தால் எழுதப்பட்ட கட்டுரைத் தொடரின் மூலம் அந்த இதழைப் பற்றிய பழைய செய்திகளை அறிந்து கொள்ள முடியும்.

() () ()

1994 என்று ஞாபகம்.

வெகுஜன பத்திரிகைகள் போன்று கணையாழி சுலபத்தில் கிடைக்கக்கூடிய ஒன்றாக இல்லை. சென்னையின் சில முக்கியமான பகுதிகளில் மட்டுமே அந்த இதழ் கிடைத்துவந்தது. பழைய இதழ்களைப் பெற வேண்டி எங்கோ கிடைத்த ஒரு இதழின் மூலம் அதன் முகவரியை அறிந்து கொண்டு, அந்தப் பத்திரிகை அலுவலகமிருந்த திருவல்லிக்கேணி பகுதிக்கு சென்றேன். பெல்ஸ் ரோட்டில் உள்ள ஒரு டொக்கு வீட்டில் அது அமைந்திருந்தது. அப்போது கணையாழி, ஆனந்தவிகடன் புத்தக அளவில் வந்து கொண்டிருந்தது. இப்போது அமுதசுரபி, கலைமகள் அளவில் வந்து கொண்டிருக்கிறது. அசோகமித்திரன் தொடங்கி கவிஞர் யுகபாரதி வரை பல பேர் அந்தப்பத்திரிகையின் ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள்.

பழைய இதழ்களை வாங்கிக் கொண்டிருந்த போது உத்தம சோழன் என்கிற எழுத்தாளரை சந்தித்தேன். அவர் என்னை பத்திரிகைகளில் எழுதுமாறு ஊக்கப்படுத்தினார். அன்றிலிருந்து நானும் கணையாழியின் தொடர்ந்த வாசகனாகிப் போனேன்.

இந்த இதழின் ஆரம்ப கால கட்டங்களில் எழுத்தாளர் சுஜாதா, sriரங்கம் எஸ்.ஆர் என்ற பெயரில் கடைசி பக்கங்களில் எழுதிவந்ததை, கணையாழியின் கடைசிப்பக்கங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. வெகுஜன எழுத்தாளர் சுஜாதா போலல்லாமல் அவரின் வேறு ஒரு முகத்தை அங்கு பார்க்க முடிந்தது. அவர் படிக்கின்ற புத்தகங்களைப் பற்றியும், பார்த்த திரைப்படங்கள் பற்றியும், நல்ல கவிதைகளைப் பற்றியும், சங்கபாடல்களை ஆங்கிலத்தில் திறமையாக மொழிபெயர்த்த ஏ. ராமானுஜத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. அவர் எழுதின சில விஷயங்களால் மிகுந்த பரபரப்பும், சர்ச்சைகளும் எழுந்தது.உதாரணத்திற்கு ஒரு முறை சாகித்ய அகாடமி விருது பற்றி அவர் சொன்ன விமர்சனத்திற்கு துணைவேந்தர்களிமிருந்து கண்டனங்கள் வந்தன. ஒவ்வொரு மாதமும் வாசகர் கூட்டம் நடத்தி, அதில் கவிதைகளைப் பற்றியும், பல்வேறு இலக்கிய வடிவங்கள் பற்றியும் பல மூத்த எழுத்தாளர்கள் வாசகர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

() () ()

தி.ஐ¡னகிராமன் நினைவு குறுநாவல் பரிசுப் போட்டியின் மூலம் பல நல்ல எழுத்தாளர்களையும், படைப்புகளையும் அறிந்து கொள்ள முடிந்தது. சுப்ரமணியம் ரவிச்சந்திரன், எஸ்ஸார்சி, ஜானகி விஸ்வநாத், அழகிய சிங்கர், பொ. கருணாகர மூர்த்தி போன்றவர்களின் குறுநாவல்களை வாசிக்க முடிந்தது.
பல இலக்கிய சர்ச்சைகள், விவாதங்கள் இந்த இதழ்களில் நடந்துள்ளன.

இன்று உயிர்மை, தீராநதி போன்று பல இலக்கிய இதழ்கள் வந்துவிட்டாலும், இலக்கிய வரலாற்றில் அழிக்க முடியாத தடங்களை பதிவு செய்ததில் கணையாழிக்கும் முக்கிய பங்கு உண்டு.

suresh kannan

4 comments:

Jsri said...

நான் இன்னும் கணையாழி எல்லாம் கண்ணாலயே பாத்ததில்லை. ஆனா நீங்களும் மரத்தடிலயும் நிறைய அறிமுகம் கொடுத்திருக்காங்க. படிக்கணும்.

கொடுமை என்னன்னா, இந்தப் பதிவுக்கு ஒரு பின்னூட்டம் கூட வரலை. அடுத்த பதிவுக்கு அவ்ளோ வந்திருக்கு. அரங்கேற்றம் படத்துல வர்ற ஒரு காட்சிதான் நியாபகத்துக்கு வரது. என்னத்த சொல்ல!

Kannan said...

1993ல், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்புக்குச் சேர்ந்த போது தான், தொகுப்பாக வந்த கணையாழியின் கடைசிப் பக்கம் படித்து முடித்திருந்தேன். பல்கலைக் கழக நூலகத்தில் கணையாழி அப்போதுதான் முதன்முறையாகப் பார்த்தேன். கடைசிப் பக்கம் படித்திருக்காவிட்டால் கணையாழியை எனக்குத் தெரிந்தே இருக்காது. குமுதம், விகடன் ஆகியவற்றைத் தாண்டி எதையும் வாசித்திராத எனக்கு, இந்த இதழின் வடிவம் மற்றும் உள்ளடக்கம் உடனே பிடித்துப் போனது. நூலகத்தில் இருந்த பழைய இதழ்களை உடனே படித்துத் தீர்த்தேன். நல்ல வாசிப்பு என்பதை எனக்கு அறிமுகப் படுத்தியது கணையாழியே. அப்போதிலிருந்து கணையாழி வாங்கத் துவங்கினேன். இரண்டு வருடம் காத்துச் சேர்த்தவற்றை நண்பனிடம் படிக்கக் கொடுத்து, அவர்கள் வீட்டில் ஏதோ சுத்தம் செய்யப் புறப்பட்ட அவர்கள் இதையெல்லாம் பாத்திரக் காரருக்கோ, வேறு எங்கோ கொடுத்து, அதன் பக்கங்கள் காப்பித் தூளோ, பூண்டோ, ஸோன் பப்டியோ பொட்டலம் கட்டப் போய்விட்டது. இப்போதும் 96க்கு மேல் மூன்று வருடப் பிரதிகள் இருந்தாலும், கணையாழியின் சிறிய வடிவமே எனக்குப் பிடித்திருந்தது. அதில் ஒன்று கூட மிஞ்சியில்லை என்று எனக்கு மிகுந்த வருத்தமே.

Anonymous said...

யோவ் சுரேசு,
யாருய்யா அந்த உத்தம சோழன்?
அவரு முகவ்ரி குடும்.'ஆட்டோ' அனுப்பத்தான் :-)

சாத்தான்குளத்தான்

மாயவரத்தான் said...

'உத்தம சோழன்'....திருத்துறைப்பூண்டியிலே இருக்காரு.! வருவாய்த்துறையிலே வேலை பார்க்கிறாருன்னு நினைவு! (இப்போ ரிட்டையர் ஆகியிருப்பாரோ?!)...நெறய எழுத்து மேல ஆசை! அவரோட முதல் தொடர்கதை 'விகடனிலே' 92-ம் வருஷம் வெளிவர இருந்த போது அதற்கான விளம்பரத்துக்காக புகைப்படம் வாங்கி வர்றதுக்காக 60 கிலோமீட்டர் கொடூரமான ரோட்டிலே பயணம் செஞ்சு போய் பார்த்து வாங்கிட்டு வந்தேன். கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் என்னையும் 'கதை எழுதுங்க...கதை எழுதுங்க'ன்னு பாடா படுத்தினார்! நல்லவேளை...அவரோட அந்த அறிவுரையை நான் கேட்காததால தமிழ் இலக்கிய உலகம் பொழச்சது போங்க!