Monday, December 27, 2004

இயற்கையின் அதிர்ச்சி தாலாட்டு

ஞாயிற்றுக்கிழமை என்றால் வழக்கமாக எட்டு மணிக்கு குறையாமல் தூங்கிக்கொண்டிருக்கிற சென்னைவாசியான என்னை காலை ஆறரை மணிக்கே என் மனைவி பதட்டமான குரலுடன், என்னை உலுக்கி எழுப்பினாள். "என்னங்க, என்னங்க, வீடு ஆடுது".

"மும்தாஜ் ஆடினா பாக்கலாம். வீடு ஆடுறத என்னாத்த பாக்கறது" என்று தூக்ககலக்கத்தில் உளறிய என்னை அவள் அன்பாக ஓங்கி அடித்து எழுப்பி, உட்கார்த்தி வைத்தவுடன்தான் அந்த விபரீதத்தை உணர்ந்தேன்.

அட! ஆமாம். நிஜமாகவே நானிருந்த பிளாட் லேசாக ஆடிக் கொண்டிருந்தது. ஐன்னல் கண்ணாடிகள் குளிர்சுரம் வந்தது போல் தடதடத்துக் கொண்டிருந்தன. மூன்றாண்டுகளுக்கு முன்னால் ஏற்கெனவே இதே மாதிரியானதொரு அனுபவத்திற்கு ஆட்பட்டிருந்தமையால் அவ்வளவு பயமாக இல்லை. என் மனைவி தூங்கிக் கொண்டிருந்த மகளை வாரிச்சுருட்டிக் கொண்டு, "வாங்க! கீழே போயிடலாம். ஏற்கெனவே சிலபேர் கீழே போயிட்டாங்க"

'ஓரேயடியாக மேலே போவதை' தவிர்க்க இப்போதைக்கு கீழே போனால்தான் தப்பிக்க முடியும் என்பது மாதிரி பதட்டத்துடன் நின்றிருந்த அவளை அமைதிப்படுத்திவிட்டு சூழ்நிலையை ஆராய்ந்தேன். பால்கனி வழியாக கீழே எட்டிப்பார்க்க சில 'முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள்' கையில் பர்ஸோடு பதட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த மாதிரி சமயத்தில்தான் அசட்டுத்துணிச்சலோடு கூடிய நகைச்சுவை உணர்வு எனக்கு அதிகம்வரும். நகையை எடுத்துக்கலாமா? வீட்டு டாக்குமெண்டுகள் அடங்கிய முக்கிய போல்டரை எடுத்துக்கலாமா என்று அலைமோதிக் கொண்டிருந்த மனைவியிடம், ஒரு சுவாரசிய கொட்டாவியுடன் 'பால் வந்துடுச்சுன்னா காப்பி போடேன். சாப்பிட்டு வேணா கீழே போகலாம்' என்று சொல்ல அவள் என்னைப் பார்த்த பார்வை பூகம்பத்தை விட மோசமாக இருந்தது.

தொலைக்காட்சியில் ஏதாவது செய்தி வருகிறதா என்று ஆவலாக தொலைக்காட்சியை இயக்க, அட! நிஜமாகவே மும்தாஜ் ஒரு 'செமகுத்து' பாடலுக்கு 'கெட்ட ஆட்டம்' போட்டுக் கொண்டிருந்தார். அவர் ஆவேசமாக ஆடுவதினால்தான் ஒரு வேளை பிளாட் அதிர்கிறதோ என்று கூட பைத்தியக்காரத்தனமாக தோன்றிற்று. அக்கம்பக்கத்தில் விசாரிக்க மனைவி கிளம்பிய போதுதான் வயிற்றில் பாலை வார்க்கிறாற் போல் சன் டி.வியில் அந்த ஸ்கராலிங் செய்தி வந்தது. 'சென்னையில் பல இடங்களில் நிலநடுக்கம். பொதுமக்கள் பீதி'.

அப்பாடா! சென்னை முழுக்கவே நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. நம் அபார்ட்மெண்ட்டில் மட்டும் இல்லை, எனகிறமாதிரியான சுயநல ஆறுதலாக ஏற்பட்ட அந்த உணர்வை எவ்வாறு வகைப்படுத்துவது என்றே தெரியவில்லை. சென்னையில் இதர பகுதிகளில் இருக்கிற நண்பர்களுக்கு தொலைபேசியில் பேசி செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டேன். இன்னும் அரைமணி அல்லது ஒரு மணி நேரத்தில் இந்தபதட்டம் அடங்கிவிடும் என்று தோன்றிற்று.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் இரவு எட்டரை மணிக்கு இதே மாதிரியானதொரு நிலையில் சிக்கிய போது, நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர் உடனே எங்களை கீழே வரச் சொல்லி கட்டாயப்படுத்தினார். எல்லோரும் தெருக்களில் நின்று பதட்டமாக பேசிக்கொண்டிருந்த போது நான்சொன்னேன்:

"இதோ 9 மணிக்கு சித்தி சீரியல் ஆரம்பிக்கட்டும். எல்லோரும் உள்ளே போயிடுவாங்க"

நான் சொன்னபடியே ஆயிற்று.

அதே போல்தான் இப்பவும் ஆகும் என்று நம்பி, தொலைக்காட்சியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த போதுதான் அந்த அதிர்ச்சியான செய்தி வந்தது.
திடீரென்று ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் மெரினாவில் கடல்நீர் சாலைவரை புகுந்துவிட்டதாகவும் நடைபயிற்சிக்காக சென்றிருந்தவர்களும், விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளும் அலைகளில் சிக்கி இறந்து போனதாகவும் சடலங்களை பொதுமக்களின் துணையுடன் அப்புறப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் வந்துக் கொண்டிருந்த செய்திகளை என்னால் நம்பவே முடியவில்லை. இயற்கைச்சீற்றங்களினால் பாதிக்கப்படாத பத்திரமான இடத்தில் தமிழகப்பகுதி அமைந்திருப்பதாக நிலவியலாளர்கள் முன்னர் எழுதியுள்ள கட்டுரைகளும், தமிழ்நாட்டின் கரையோரங்களில் மையங்கொள்ளும் புயல்சின்னங்கள் வழக்கமாக ஆந்திராவை நோக்கி வழக்கமாக திசைமாறுவதும் என்னை இந்தச் செய்தியை நம்பவிடாமல் செய்தன.

இதுசம்பந்தமாக அதிர்ச்சிகரமான ஒளித்துணுக்குகளை முதன்முதலில் காட்டி அசத்தியது, வழக்கமாக ஆமை வேகத்தில் செயல்படும் தூர்தர்ஷன்தான். அம்பாசிடர் கார் ஒன்று 'காகித ஓடம் கடலலை மேலே' என்கிற மாதிரி நீச்சல் கற்றுக் கொண்டிருந்தது. என்றாலும் சன் நியூஸ் தொலைக்காட்சிதான் இதைப்பற்றியான தொடர்ச்சியான செய்திகளை (பெஸ்டு கண்ணா பெஸ்டு, விளம்பர இடைவேளைக்கிடையில்) வழங்கிக் கொண்டிருந்தது.

தேர்தல் நேர ஓட்டு எண்ணிக்கை போல இறந்தவர்களின் எண்ணிக்கை மாவட்டவாரியாக நிமிடத்திற்கு நிமிடம் ஏறிக் கொண்டே போக வேதனையாக இருந்தது. தமிழகத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதியாக நாகப்பட்டிணம் விளங்குகிறது.

இதற்கிடையில் முன்னர் இந்தியாவில் நிகழ்ந்த நிலஅதிர்வுகள் எல்லாம் 26-ந் தேதிகளில் நடப்பதில் ஏதோ மர்மம் அடங்கியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

குஜராத்தில் நிலஅதிர்வு ஏற்பட்ட தேதி: 26.01.2001
சென்னையில் கடந்த முறை நிலஅதிர்வு ஏற்பட்ட தேதி: 26.09.2001
சமீபத்திய நிலஅதிர்வு ஏற்பட்ட தேதி: 26.12.2004

இது யதேச்சையான ஒன்றா, அல்லது இதில் ஏதாவது செய்தி அடங்கியிருக்கிறதா என்று தெரியவில்லை. உலகெங்கிலும் நடந்த பூகம்ப சம்பவங்களை ஒப்புநோக்கினால் ஏதாவது தெரியலாம்.

O

எதிர் பிளாட் நண்பர் ஒருவரிடம் இதைப்பற்றி பேசிக் கொண்டிருந்த போது, அவர் சொன்ன காமெடி செய்தி ஒன்று:

'மடத்து பெரியவாள போலீஸ்காரா தொந்தரவு பண்றாளோன்னோ, அதான் தெய்வக்குத்தம் ஆகி கடலே பொங்கிடுத்து.'

அடப்பாவிகளா!

suresh kannan

2 comments:

Anonymous said...

கடைசி வரிகளைப் படிக்கும் போது சிரிப்பு அள்ளிக் கொண்டு போனது. இந்தப் பதிவிற்கு நன்றி.

இளங்குமரன்

By: ilangkumaran

Anonymous said...

யோவ் நேத்து நான் கொடுத்த எதிர்வினை என்ன ஆச்சு ? சீரியஸான மேட்டர காமெடியா எழுதப்படாது

By: sattaampiLLai