Tuesday, December 14, 2004

பார்த்திபன், நீங்க இப்படி செஞ்சிருக்க வேண்டாம்.....

என்னமோ ஏதோன்னு சூடான மேட்டரான்னு பதறியடிச்சிட்டு ஓடி வந்தவங்களுக்கு என் அனுதாபங்கள். நீங்க இப்பவே அடுத்த பதிவுக்கு போகலாம். இது சூடான மேட்டர் இல்ல. ரொம்ப ஆறிப்போனது. ஆனா என்ன ரொம்ப பாதிச்சதுன்றதால, எப்பவோ யோசிச்சத இப்ப எழுதணும்னு தோணுச்சு.



பொதுவாகவே நடிகர், நடிகையர் சம்பந்தப்பட்ட விவாகரத்து செய்தி என்றால் அன்றைய நாள் பத்திரிகைகளின் சர்க்குலேஷன் கூடிவிடும். நான் இந்தமாதிரியான செய்திகளை கண்டவுடனே கவனம் செலுத்தாமல் அடுத்த பக்கத்திற்கு போய்விடுவேன். தினசரி நூற்றுக்கணக்கான விவாகரத்து வழக்குகள் சம்பந்தப்பட்ட செய்திகளை என் அலுவலகத்திற்கு எதிரே உள்ள உயர்நீதிமன்றத்திற்கு போகும் போது பார்க்க வாய்ப்பு கிடைப்பதாலோ என்னவோ இதில் அதிக ஆர்வமிருப்பதில்லை. நடிக, நடிகையர் லைம்லைட்டில் இருப்பதால் அவர்கள் சம்பந்தப்பட்ட செய்தி மட்டும் உடனே முச்சந்திக்கு வந்துவிடுகிறது.

என்றாலும் என்னை அதிர வைத்தது, பார்த்திபன் - சீதா விவாகரத்து செய்தி.

() () ()

பார்த்திபனை ஆரம்ப கட்டத்தில் இருந்தே கவனித்துவந்திருக்கிறேன். 'பகவதிபுரம் ரயில்வேகேட்' என்றொரு கார்த்திக் நடித்த திரைப்படம் என்று ஞாபகம். அதில் பார்த்திபன், பாகவதர் கிராப்புடன் டிராமா ஆர்டிஸ்டுகளில் ஒருவராக அப்பிராணியாக வருவார். பின்னர் தாவணிக்கனவுகள் திரைப்படத்தில் இரண்டொரு காட்சிகளில் போஸ்ட்மேன் பாத்திரம்.

(இந்தப்படத்தில் நடித்ததை பற்றி பிற்காலங்களில் அவர் பேட்டிகளில் நகைச்சுவையாக சொன்னது: இந்தப்படம் வெளிவந்தவுடன் தியேட்டரில் பார்க்க அவர் டென்ஷனாக உணர்ந்ததால் தன் தம்பியை அனுப்பி, தான் வரும் காட்சிகள் எப்படி இருக்கின்றன, மக்கள் எவ்வாறு ரசிக்கிறார்கள் என்று பார்த்துவர அனுப்பினாராம். தம்பி வந்து சொன்ன பதில்: "மேட்னி ஷோவுக்கு போனேன். நீ எந்த சீன்லயும் வரலே. ஒருவேளை ஈவினிங் ஷோவுலதான் வர்றியோ என்னமோ")

அவரின் முதல்படமான 'புதியபாதை'யை வெளிவந்த சில நாட்களிலேயே பார்த்தேன். கதாநாயகர்கள் பொறுக்கி பாத்திரத்தில் நடித்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று ஆரம்பித்தது இந்தப்படத்திலிருந்துதான் என்று யூகிக்கிறேன். அவர் பேசின மறைமுக ஆபாச வசனங்களை பெண்கள் மேலுக்கு திட்டினாலும் உள்ளுக்குள் ரசித்தார்கள் என்றே தோன்றுகிறது.

எனக்கு அந்தப்படத்தின் டீரிட்மெண்ட் பிடித்திருந்தது. இழுத்து கட்டப்பட்ட கம்பியை போல திரைக்கதை படு ஸ்டராங்காக இருந்தது. முக்கியமாக அவரின் dialouge modulation. இப்போது வரும் நடிகர்கள் இந்த விஷயத்தில் அவரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன். கற்பழித்தவனை தேடிப் போய்க் கல்யாணம் செய்துக் கொள்கிற பிற்போக்குத்தனமான சிந்தனையை படம் உள்ளடக்கியிருந்தது என்றாலும் தன் சாமர்த்தியமாக திரைக்கதை, வசனத்தால் அந்தக்குறை தெரியாதவாறு செய்திருந்தார் பார்த்திபன். பெரும்பாலும் தனது முதல் திரைப்படத்தை ரொம்ப வருஷம் யோசித்து செய்வதினால் வெற்றி பெற்று விடும் இயக்குநர்கள், தன் இரண்டாவது படத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.

டிராக் மாறி விட்டேன் என்று நினைக்கிறேன்...

சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

புதியபாதை படம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் பத்திரிகைகளில் இருவரும் அதை தொடர்ந்து மறுத்துவந்தனர். சீதாவின் அப்பா (இவரும் புதியபாதையில் சீதாவிற்கு அப்பாவாக நடித்திருக்கிறார்) இந்தக் காதலை மறுத்த காரணத்தினால் இருவரும்
இதை ரகசியமாக வைத்துக் கொண்டிருக்க முடிவு செய்தனர்.
பின்பு இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டது தெரிந்த சங்கதிதான். தான் அடிக்கும் பேட்டிகளில் தன் காதல் புராணத்தை பார்த்திபன் சுவைபடக்கூறுவார். சீதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பதாகவும், அவர் பார்த்திபனை 'கறுப்பா' என்று அழைப்பதாகவும் கூறுவார். இது அந்தரங்கமான விஷயமாக இருந்தாலும் அவர் சொல்லுகின்ற தொனியில் இருவருக்குமிடையேயான அன்பு முழுமையாக வெளிப்பட்டிருக்கும்.

திருமணமாகி சில வருடங்கள் கழிந்தும், 'இப்போதும் என் மனைவிக்கு காதல் கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன்' என்று அவர் கூறியது என்னைக் கவர்ந்தது. ஆதர்ச தம்பதிகள் என்றால் இவர்களைப் போலத்தான் இருக்க வேண்டும் என நினைத்தேன். எனக்கு திருமணமாக புதிதில் என் மனைவியிடம் கூட இந்த செய்கையை வியந்து பாராட்டி கூறினேன். இரு மகள்கள் இருந்தும், அவர் மூன்றாதவாக ஒரு அனாதைச்சிறுவனை தத்தெடுத்துக் கொண்டது என்னை நெகிழ வைத்தது. எல்லோரும் இவ்வாறாக ஒரு குழந்தையை தங்கள் வீட்டில் தத்தெடுத்துக் கொண்டால் அனாதை இல்லங்களே இருக்காது என்று அவர் கூறியது எனக்கு நியாயமாகவே பட்டது.

() () ()

அவர் படங்களின் விளம்பரங்களில் இருந்து அவர் மற்றவர்களுக்கு பரிசளிப்பது முதல் எல்லாமே வித்தியாகமாக இருக்கும். கலைஞர் பிறந்தநாள் விழாவில் அனைத்து திரைக்கலைஞர்களும் பங்கு கொண்ட போது, நேரமின்மை காரணமாக அனைவரும் ஒரு நிமிடம் மட்டுமே பேச வேண்டும் என்று அறிவிப்பாளர் தெரிவிக்க, இரண்டு, மூன்று மைக்கள் இருக்கும் அந்த பேச்சாளர் மேடைக்கு வந்த பார்த்திபன்,

'நான் ஒரு நிமிஷம்தான் பேசப் போறேன். ஆனா... ஒவ்வொரு மைக்லயும்'
என்று கூறி அரங்கத்தை அதிர வைத்தார்.

இவரது கிறுக்கல்கள் கவிதைத் தொகுதி கலைஞரால்தான் வெளியிடப்பட வேண்டும் என்று காத்திருந்து, அந்த விழாவை நடத்தினார். மேடைப் பின்னணியாக ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் கொண்டு ஒரு நூல்நிலையம் போல் அமைத்திருந்தது பிரமிப்பாக இருந்தது.

பாரதி திரைப்படம் வெளிவந்த போது கூட, இவருக்கு அதில் சம்பந்தமில்லாவிட்டாலும், அனைத்து தமிழர்களும் அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பு விளம்பரம் இவர் செலவில் வெளியிட்டு திரையுலகினரின் ஆச்சரியம் கலந்த பாராட்டைப் பெற்றார். திருட்டு வி.சி.டி சம்பந்தமாக, தன் சமீபத்திய படமான குடைக்குள் மழை திரைப்பட வெளியீட்டு அன்று உண்ணாவிரதம் இருக்க, அதன் மூலம் அது தீயாகப் பெருகி, எல்லா திரைப்பட சங்கங்களும் அதை தொடர்ந்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு போக, அதற்கொரு தீர்வு காணப்பட, ஆனால் அதற்கான திரையுலகினரின் நன்றியறிவிப்பு விழாவில் மூலகாரணமாக இருந்த இவரை மேடையேற்றாமல் ஒதுக்க, இவர் திரைப்பட சங்க கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து விலகியது ஒரு வருத்தமான செய்தி.

மறுபடியும் டிராக் மாறி விட்டேன் என்று நினைக்கிறேன்.

இவ்வாறான ஆதர்ச தம்பதிகள் விவாகரத்து செய்கிறார்கள் என்கிற பத்திரிகை செய்தியை படித்தவுடன் மிக அதிர்ச்சியடைந்து விட்டேன். இது பொய்யான செய்தியாக இருக்கும் எனப்பட்டது. ஆனால் இருவரும் கோர்ட்டுக்கு வந்த புகைப்படத்தை பார்த்ததும் மிக வேதனைப்பட்டேன். என்ன காரணமாக இருக்கும் என்று தெரியவில்லை என்றாலும், இவ்வளவு முற்போக்காக சிந்திக்கக்கூடிய மனிதர் இதை பேசி தீர்த்துக் கொண்டிருக்கலாம் என்று பட்டது. ஏதோ என்னுடைய குடும்ப உறவினருக்கே இவ்வாறாக ஆகிப் போனது போல் பதறிப் போனேன். ஒருபக்கம், யாரோ ஒரு நடிகருக்காக இவ்வளவு வேதனைப்படணுமா என்றும் தோன்றியது. அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்றும் கேள்வி என்னுள் எழுந்தது.

() () ()

சமீபத்தில் உயிர்மை பதிப்பகத்தினர் நடத்தின சுஜாதாவின் நூல்கள் வெளியீட்டு விழாவில் அவரை மிக அருகில் சந்தித்தேன். இதைப் பற்றி கேட்டுவிட வேண்டும் என்று மனது துடித்தது. ஆனாலும் பரஸ்பர அறிமுகமே இல்லாமல் எடுத்தவுடனே ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கேட்பது நாகரிகமாக இருக்காது என்று விலகிவிட்டேன்.

சில காதல்கள் முறிந்து போகும் போது மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.

suresh kannan

5 comments:

Badri Seshadri said...

சுரேஷ்: நம் சமுதாயத்தில் திருமணத்துக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறோமோ? விவாகரத்து செய்ததால் பார்த்திபனும், சீதாவும் கெட்டவர்களாகி விட்டார்களா என்ன? இருவரும் சேர்ந்து இருப்பதைக் காட்டிலும் பிரிந்து இருந்தால் ஏதோ வகையில் நல்ல நண்பர்களாக இருப்போம் என உணர்ந்து இந்த விவாகரத்தை செய்திருக்கலாம்.

அதற்காக நான் கமல் ரேஞ்சுக்குப் போய் "எனக்குத் திருமணத்தில் நம்பிக்கை இல்லை" என்றெல்லாம் சொல்லவில்லை.

பல நேரங்களில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கப் பிடிக்காமல் ஒரே வீட்டில் இருப்பதைக் காட்டிலும் பிரிந்து இருப்பது எவ்வளவோ மேல் என்பதை நம் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.

பிச்சைப்பாத்திரம் said...

பத்ரி: விவாகரத்து பெற்றதால் அவர்களை கெட்டவர்களாக நான் எங்குமே சொல்லவில்லை. கவிதை போல் வளர்ந்த அந்த அழகான காதல் முறிவடையாமல் தவிர்த்திருக்கலாமோ என்பதுதான் என் ஆதங்கம். மற்றபடி living together என்கிற கலாச்சாரம் நமக்கு வர இன்னும் நிறைய வருஷங்களாகும்.

எம்.கே.குமார் said...

naanum romba varuththappaateen. eennu theriyaama romba naaL athaippaRRiya varuththam irunthathu.
thanks.
mk

எம்.கே.குமார் said...

naanum romba varuththappaateen. eennu theriyaama romba naaL athaippaRRiya varuththam irunthathu.
thanks.
mk

Anonymous said...

You can find the reason for divorce at


http://ozeeya.com/ta/keravan-stories-tamil-archive/2087-director-vs-heroine