Tuesday, December 07, 2004

இதுவரை வெளிவராத பாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு

மகாகவி பாரதியார் ஆங்கிலேய அரசை எதிர்த்து நடத்திய 'விஜயா' என்கிற மாலை நாளேட்டின் சில பிரதிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய பாரதியார் 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 1910 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை எட்டு மாத காலம் 'விஜயா' என்கிற தமிழ் மாலை நாளேட்டை பாண்டிச்சேரியிலிருந்து நடத்தினார். நான்கு பக்கம் கொண்டு இந்த நாளேட்டின் முதல் இதழ் கிருஷ்ண ஜெயந்தி அன்று வெளியானது. இந்த நாளிதழை நடத்தும் போது பாரதியாரின் வயது 28தான்.

ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்த நாளிதழ் வெளிவரவில்லை. மொத்தம் 160 நாட்கள் இந்த நாளிதழ் வெளியிடப்பட்டுள்ளது. நாளிதழின் பெயர் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மேலே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற வார்த்தைகள் தமிழிலும், பிரெஞ்சு மொழியிலும் அச்சிடப்பட்டுள்ளது. முதல் பக்கத்திலும், நான்காம் பக்கத்திலும் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பக்கத்தில் தலையங்கமும், கட்டுரையும் காணப்படுகிறது. மூன்றாம் பக்கத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக பாரதிக்கேயுரிய நடையில் அமைந்த செய்திகள் இடம் பெற்றன.

'விஜயா' நாளேட்டை பாரதியார் நடத்தினார் என்பது தெரிந்த போதிலும், முழுமையான நாளிதழின் பிரதிகள் கைக்கு கிடைக்காமல் இருந்தது. சில பகுதிகள் மட்டுமே கிடைத்து, அவை பாண்டிச்சேரியில் உள்ள அரசு அருங்காட்சியகம் மற்றும் பாரதி நினைவகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பாரதியாரின் படைப்புகள் குறித்து ஆய்வு செய்து வரும் சென்னை மேம்பாட்டு கல்வி நிறுவன இணை பேராசிரியர் ஏ.ஆர். வேங்கடாசலபதி மேற்கொண்ட தீவர முயற்சியின் விளைவாக இந்த பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 160 நாட்கள் வெளியான இந்த நாளிதழின் 20 நாட்களுக்கான பிரதிகள் மட்டுமே மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாளிதழின் தொகுப்புகள் விரைவில் காலச்சுவடு வெளியீடாக வரவிருக்கிறது. மற்ற பிரதிகளும் கிடைக்கும் பட்சத்தில் பாரதியின் போராட்ட ஆளுமையை இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள இயலும்.

O

பல அரிய சங்க நூல்களை அரும்பாடுபட்டு தேடியளித்த உ.வே.சாவைப் போல சலபதியின் இந்த சீரிய முயற்சி பாராட்டத்தக்கது. காலச்சுவடு வெளியிட்டுள்ள புதுமைப்பித்தன் கட்டுரைகளின் மொத்த தொகுப்பாக வந்துள்ள நூலின் அவர் எழுதியிருக்கும் முன்னுரையின் மூலமும் அவர் பட்டிருக்கிற சிரமங்கள் தெரியவருகிறது. உதாரணமாக புதுமைப்பித்தனின் கட்டுரை ஏதாவது கிடைக்குமா என்று அவர் இலங்கையிலுள்ள வீரகேசரி அலுவலகத்திற்கு சென்று பழைய இதழ்களை இரண்டு நாட்கள் ஆராய்ந்துள்ளார். எதுவுமில்லை என்று அறிந்தவுடன் அவர் சோர்வையடையவில்லை. இங்கு எந்த பழைய கட்டுரைகளும் இல்லை என்று நிச்சயித்துக் கொண்டதால் மனமகிழ்ச்சியே ஏற்பட்டிருக்கிறது என்கிறிருக்கிறார்.

suresh kannan

1 comment:

Raj Chandra said...

நல்ல கண்டுப்பிடிப்பு. தகவலுக்கு நன்றி. ஏற்கனவே திரு. சீனி. விசுவநாதன் 'கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதியார் படைப்புகள்' வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். சலபதியும், விசுவநாதனும் இனைந்து பாரதியாரின் மற்ற கானாமல் போன படைப்புக்களை கண்டுபிடிக்கலாம். ஆனால் தொழில் முறையில் அது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன்.