Friday, March 12, 2010

ஆஸ்கர் நாமினேஷன் -4 (அப் இன் தி ஏர்)

முதலாவது  |  இரண்டாவது  | மூன்றாவது 

இந்த வரிசையில் நான்காவது திரைப்படம் UP IN THE AIR.

பதின்ம வயதுகளில் ஏற்படும் பாலியல் விழைவு வேகம் காரணமாக திருமணத்தின் மூலமாவது எதிர்பாலின உடல் கிடைக்குமா என மனம் அலைபாயும். கலாசாரப் பாசாங்குகள் மிகுந்த இந்தியா போன்ற சமூகங்களில்,  பாலியல் தேவைகளுக்கான நுகர்வுச் சமாச்சாரங்கள் அசட்டப்பூர்வமானதாகவும் அந்தக் காரணத்தினாலேயே அசெளகரியமானதாகவும் இருப்பதால் 'பால்ய விவாகம் என்கிற முறை ஒழிக்கப்படாமலிருந்தால் கூட தேவலை' என்கிற அளவிற்கு அந்த வேகம் இருக்கும். ஒரு வழியாக திருணமாகி விட்ட புதிதில் சர்ரவுண்டு சவுண்டு ஸ்பீக்கர் இணைக்கப்பட்ட அதிநவீன கணினி உபயோகிப்பது போல் வாழ்க்கை சுகமாகவே கழிந்தாலும்  இந்த வசந்தமெல்லாம் சொற்ப காலத்திற்குத்தான். (எனவேதான் இதை சிற்றின்பம் என்றழைக்கிறார்களா என்று தெரியவில்லை).

மயக்கம் தெளிந்து அதுவரை மறைந்திருந்த குறைகளும் வித்தியாசங்களும் பூதாகரமாகத் தெரிந்து போர்க்களக்காட்சிகளும், வெள்ளை கொடிகளும், எதிர்காலம் குறித்த பயமும், பணியிடத்து அழுத்தமும், குழந்தைகள் சார்ந்த பொருளாதாரத் தேவைகளின் அதிகரிப்பும்... என மன உளைச்சலுக்கு ஆளாகிற போது.. ‘திருமணமே செய்யாமலிருந்தால் வாழ்க்கை நன்றாகவே இருந்திருக்குமோ’ என்று அலுத்து உட்கார்கிற போது முடிந்து போன இரவு சினிமா போல ரொம்பவே தாமதமாகியிருக்கும்.


இந்த திரைப்படத்தின் நாயகன் ரியான் பிங்ஹாமும் இதையெல்லாம் முன்கூட்டியே யூகித்துத்தான் மிக புத்திசாலியிருக்கிறான். ‘சுமைகளை உதறுங்கள்” என்பதுதான் இவனது தாரக மந்திரம்.  

“நீங்கள் இந்நிறுவனத்திற்கு இனி தேவைப்பட மாட்டீர்கள்” என்று செய்தியை முதலாளிகளின் சார்பில் இனிப்பு பூசப்பட்ட வார்த்தைகளில் சொல்லி அவர்களை வயிற்றெரிச்சலுடன் வீட்டுக்கு அனுப்பச் செய்யும் ஓரு நிறுவனத்தில் பணிபுரியும் இவன் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கும் பறந்து கொண்டேயிருக்கிறான். இவ்வாறு விமானங்களில் பறப்பதும்,  ஹோட்டல் வாசமும்... என தொடர்ந்து பயணம் செய்து கொண்டேயிருப்பது அவனுக்கு மிகவும் பிடித்தமானதாயிருக்கிறது. குடும்பம் என்கிற அமைப்பிற்குள்ளோ உறவுகள் என்ற பெயரில் அன்புச் சிறைகளிலோ வாழ்வதில் இவனுக்கு ஒப்புதல் கிடையாது. மாத்திரமல்லாமல் பத்து மில்லியன் மைல்களுக்கும் மேலாக விமானப்பயணம் செய்து அதற்கான கெளவர அந்தஸ்தை அடைவது என்பது இவனுக்கு கனவுடன் கூடியதொரு  லட்சியமாக இருக்கிறது.

இவனைப் போலவே அதிகம் விமானத்தில் பறக்கும் பெண்ணொருவரோடு பழக்கம் ஏற்படுகிறது. இவனது குணத்தைப் பற்றி அறிந்திருக்கும் அவள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லையென்பதால் இருவருக்குமான பழக்கம் எவ்வித குற்றவுணர்வுமின்றி காமமாகவும் நீள்கிறது.

ரியானின் நிறுவனத்தில் புதிதாக பணிக்குச் சேரும் இளம் பெண் ஒருவர், அதிகமான பிரயாணங்களால் நிறுவனத்திற்கு ஏற்படும் நிதிச்சுமையைக் குறைக்க 'நேரில் சென்று  செய்யும் வேலையை கணினி மூலமாக செய்யலாம்' என்கிற யோசனையை முன்வைக்கிறாள். நிறுவனத் தலைவரும் அதை ஒப்புக் கொள்கிறார். தீராத பயணத் தாகத்துடன் இருக்கும் ரியானுக்கு இது எரிச்சலைத் தருகிறது. மாத்திரமல்லாமல், இது மனித உணர்வுகளைக் கையாள வேண்டிய பணியாக இருப்பதால் இதை இயந்திரமயமாக்கினால் சரியாக இருக்காது என்று வாதிடுகிறான். எனவே இது குறித்து அதிகம் அறிந்து கொள்ள அந்த இளம் பெண்ணும் ரியானுடன் பயணங்களுக்கு அனுப்பப்படுகிறாள்.

உணர்வுப்பூர்வமான அந்த இளம் பெண்ணும், உறவுகளையும் உணர்வுகளையும் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாத நடுத்தரவயது ரியானும்... என்று இந்த இரு துருவங்களும் அவ்வப்போது விவாதிக்கிறார்கள்; மோதிக் கொள்கிறார்கள். ஒரு எஸ்எம்எஸ் செய்தியின் மூலம் தன்னை தன் காதலன் நிராகரித்துவிட்டான் என்று விமான நிலையத்தின் நடுவிலேயே ஓவென்று அழுகிறாள் அந்த இளம் பெண். ரியானும் அவனது பயணக் காதலியும் அவளைத் தேற்றுகிறார்கள்.

இடையில் ரியான் தன்னுடைய சகோதரியின் மகள் திருமணத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது. மணமகன் முந்தைய நாள் திடீரென்று திருமணம் செய்ய தயங்குகிறான். ரியான் அவனை மெல்ல விசாரிக்கும் போது “இந்தத் திருமணம் எதற்கு? எனக்குப் பிள்ளைகள் பிறப்பார்கள்.. அவர்களுக்கும் திருமணம் நடக்கும். அவர்களுக்கும் குழந்தைகள் பிறக்கும்.. எதற்கு இது? ஏன்?... என்று வாழ்க்கை குறித்த தத்துவ விசாரணையில் இறங்கி விடுகிறான். அவனை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வைக்க வேண்டிய நிலையிலிருக்கும் ரியானுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை. ஏனெனில் ஏறக்குறைய அவனும் மணமகன் சிந்திக்கும் அந்தப் புள்ளியிலேயேதான் நீண்ட காலமாக நின்று கொண்டிருக்கிறான். என்றாலும் எப்படியோ அவனை சமாளிக்கும் ரியான் மனதளவில் தானும் அந்த மாற்றத்தை உணர்கிறான். துணை என்று ஒன்றிருப்பதின் அருகாமை குறித்த தேவை குறித்து அவன் சிந்தித்து திடீரென்று தீர்மானத்து தன்னுடைய காதலியின் வீட்டுக்குச் சென்று இறங்குகிறான். அங்கு.....

"What's In Your Backpack?" என்கிற தலைப்பில் சுயமுன்னேற்ற பேச்சாளராகவும் பணியாளர்களை நீக்கும் பணியை விருப்போ வெறுப்போ இல்லாமல் செய்யும் ரியானாக George Clooney அற்புதமாக நடித்திருக்கிறார். வழக்கம் போல் ஸ்டைலிஷான நடிப்பு. (இவரின் ஹேர்ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்) பயணங்களை ஒரு காதலியைப் போல மிக ஆசையாக அணுகுவதும் வாழ்க்கை குறித்த தன்னுடைய கருத்தின் மீது எவ்வித தடுமாற்றமுமில்லாமல் இயங்குவதும் என சிறப்பான பாத்திரப்படைப்பு. (இவர் பயணத்திற்கான உடைகளை மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கும் போது ஜெயமோகனின் கட்டுரைகளின் மூலம் கிடைத்த நாஞ்சில் நாடனின் பிம்பமே நினைவுக்கு வந்தது. (தன்னுடைய முதலிரவின் போது கூட நாஞ்சில் நாடன் உடையை நேர்த்தியாக அடுக்கி வைக்கும் காட்சியொன்று அசட்டுத்தனமாக என் மனதில் விரிந்த போது சிரிப்பாக வந்தது. நாஞ்சில் என்னை மன்னிப்பாராக).

ரியானுடன் பணிபுரியும் துறுதுறு சிடுசிடு இளம் பெண்ணாக Anna Kendrick நன்றாக நடித்திருக்கிறார். பணியாளர்களிடம் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவதான தகவலைச் சொல்லும் போது அவர்கள் மிகுந்த உணர்ச்சிக் கொந்தளிப்புடன் விவாதிப்பதையும் சண்டையிடுவதையும் திட்டுவதையும் திகைப்பும் வியப்புமாக பார்க்கிறாள். அதில் ஒரு பெண்மணி மிக அமைதியாக தொனியுடன் “சர்க்கரை தடவப்பட்ட உங்கள் விளக்கமெல்லாம் வேண்டாம். என்னை பணிநீக்கம் செய்தால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று அலட்டாமல் சொல்கிறாள். வழக்கமாக மிகுஉணர்ச்சி நபர்களையே பார்த்துவந்த இளம் பெண்ணால் இதைத் தாங்க முடிவதில்லை. ‘அவள் தற்கொலை செய்து கொண்டு விடுவாளா?’ என்று ரியானிடம் மிகுந்த குற்ற உணர்வோடு கேட்கிறாள். (படத்தின் இறுதியில் உண்மையாகவே அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ளும் தகவல் கிடைக்கும் போது இவள் பணியிலிருந்தே விலகி விடுகிறாள்).

ரியானும் அவளது பயணக் காதலியும் மிகப் பொருத்தமான ஜோடியாக இருப்பதைக் கண்டு ரியானின் குணத்தைப் பற்றித் தெரிந்தும்  “ஏன் அவளை திருமணம் செய்துக் கொள்ளக்கூடாது” என்று கேட்க ரியான் தன்னுடைய பிரத்யேகமான தத்துவத்தைச் சொல்லும் போது “போய்யா.. புண்ணாக்கு’ என்று வெடிக்கும் காட்சிக் கோர்வை மிகு சுவாரசியம். 'Best Supporting Actress' பிரிவில் இவர் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் விருதை வெல்ல முடியவில்லை.

()

கடந்த வருடங்களில்  JUNO திரைப்படத்திற்காக ‘சிறந்த இயக்குநர்’ பிரிவில் அகாதமி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட Jason Reitman இத்திரைப்படத்தை மென்மையாக ஓடிக் கொண்டிருக்கும் நதியின் போக்கைப் போல சுவாரசியமாக உருவாக்கியுள்ளார். நல்லதொரு நாவலைப் படித்த அனுபவத்தைத் தந்தது இத்திரைப்படம். பிறகுதான் தெரிந்தது, இதே பெயரில் வால்டர் கிம் எழுதின நாவலை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது, என்பது. அமெரிக்காவின் சமீபத்திய recession எதிரொலியையும் இந்தத் திரைப்படத்தில் காணமுடிகிறது. பணியிழந்தவர்கள் எதிர்காலம் குறித்தும் தன்னுடைய குழந்தைகளைக் குறித்தும் கலங்கும் போதும் அழும் போதும் அந்தப்பதட்டம் நம்மையும் தொற்றிக் கொள்வது. (இதற்காக உணமையாகவே பணியிழந்த நபர்கள் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள்).

மனிதன் கூடிவாழும் ஒரு விலங்கு. பொறுப்புகளின் காரணமாக  இயற்கையின் ஆதார நோக்கத்திற்கு மாறாக மனித உறவுகளைச் சுமையாகக் கருதி வாழ்வது ஆரம்பத்தில் சுகமாக இருந்தாலும் நிலையான நிம்மதியைத் தராது என்பதை அடிநாதமாக இத்திரைப்படம் சொல்கிறது.

நாஞ்சில் நாடனின் ‘சதுரங்கக் குதிரை’ என்கிற நாவலையும் இத் திரைப்படம் நினைவுப்படுத்தியது. தமிழின் சிறந்த நாவல்களுள் அதுவுமொன்று. ஏதோவொரு காரணங்களால் திருமணச் சூழ்நிலை அமையாதிருக்கும் ஒருவன் ஒருநிலையில் தனிமையின் கொடுமையை உக்கிரமாக அனுபவிப்பதை அழுத்தமாக அந்நாவலில் சொல்லியிருப்பார் நாஞ்சில் நாடன்.

அமைதியான திரைக்கதையுடன் மென்மையான காட்சிகளோடு நகரும் திரைப்படங்களை ரசிப்பவர்களுக்கு இத்திரைப்படம் பிடிக்கக்கூடும்.  'சிறந்த திரைப்படம்' உட்பட அகாதமி விருதின் ஆறு பிரிவுகளில் இத்திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் எப்பிரிவிலும் விருது வாங்கவில்லை.

suresh kannan

8 comments:

கே.என்.சிவராமன் said...

நாஞ்சில் நாடனின் நாவலுடன் படத்தை தொடர்புபடுத்தியது பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டது.

திரைப்படம் குறித்த உங்கள் பார்வையை - விமர்சனத்தை - தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள் என்று சொன்னால், அது க்ளிஷேவாகிவிடும். எனவே அதை தவிர்க்கிறேன் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Unknown said...

அற்புதமானதொரு உணர்வு... முதல் 2 பத்தியிலேயே.. ஆம்..மனிதன் கூடி வாழும் விலங்குதான்...(அந்த பத்தியும்)

Life is relationship ஞாபகம் வந்துபோகிறது.(someone said: jk or osho...leave it)

ரம்மியமான மாலைபொழுதில் ஒரு சூடான தேநீரும் பக்கத்தில் பிடித்த தோழியுடனும் கண்களால் பேசிக்கொண்டிருந்தது போல இருந்தது இப்பதிவு.

முடிவில் படம் பார்க்கும் ஆவலும் சதுரங்க குதிரையின் மீது நாட்டமும் ஏற்பட்டது.

keep writing like this :)

லேகா said...

சுரேஷ்,

திரைப்படத்தை பார்க்கும் ஆவலோடு நாஞ்சில் நாடனின் நாவலை வாசிக்கவும் தூண்டும் விமர்சனம்.

ஜான் குலோனி ,பெண்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவர்..:-)) Veryyy Stylish n Stunning!!

Toto said...

திரும்ப‌த் திரும்ப‌ ப‌டித்துக்கொண்டிருக்கிறேன், முத‌ல் இர‌ண்டு ப‌த்திக‌ளை. ரொம்ப‌ பிர‌மாதாமாக‌ எழுதியிருக்கீங்க‌ ஸார்.

ஸ்ரீவி சிவா said...

//திருமணத்தின் மூலமாவது எதிர்பாலின உடல் கிடைக்குமா என மனம் அலைபாயும்//
//....அலுத்து உட்கார்கிற போது முடிந்து போன இரவு சினிமா போல ரொம்பவே தாமதமாகியிருக்கும்.//

'ஜார்ஜ் க்ளூனி'யின் பாத்திர மனோநிலையை விவரிக்கும் சாக்கில், நிதர்சனமான ஒன்றை அழகாய் சொல்லி விட்டீர்கள். உடன்படுகிறேன்.

உங்கள் விவரிப்பு படம் பார்க்கத் தூண்டுகிறது.
பகிர்வுக்கு நன்றி சுரேஷ் கண்ணன்.

KKPSK said...

வழக்கம்போல்..கலக்கல்..
உறுபசி-கருத்துக்கள்.

Balaji K said...

சுரேஷ்,

இது என்னோட முதல் ப்ளாக். சினிமா பற்றி. டைம் இருக்கப்போ படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.

http://worldmoviesintamil.blogspot.com

Yogi said...

Ungal sol korvai miga arumai...ungal pathivuhalai eppoluthum aavaludam ethirparkiren..

YOge