சற்று அபத்தமானதுதான். சிறிது நேரத்திலேயே புதிர் விடுபட்டு விடும் என்று தெரிந்திருந்தாலும் இந்த விளையாட்டை ஆடிப் பார்க்கலாம் என்று தோன்றியது. irreversible (2002) என்கிற திரைப்படத்தைப் பற்றின பார்வையை அதன் பாணியிலேயே முயன்று பார்த்தேன். இடது கையால் எழுத நேர்ந்த கட்டாயத்தைப் போல் தடுமாற்றமும் சுவாரசியமுமாக இருந்தது. ஒருநிலையில் தவறுகளைத் திருத்துவதையும் விட்டுவிட்டேன். அபத்தத்தில் பிழை கண்டுபிடிப்பது போன்ற அபத்தம் வேறுண்டா என்று தோன்றியது.
முந்தின பதிவை வாசிக்க (?!) நேர்ந்த போது உங்களுக்குள் எழுந்த எரிச்சலும் அசெளகரியமும் திகிலைத் துரத்துகிற சுவாரசியமும் உள்ளுக்குள் பொங்குகிற குரோதமும் (சில பின்னூட்டங்களை கவனியுங்கள்) திரைப்படத்தை பார்க்கின்ற போது எனக்கும் தோன்றியது. அதையே உங்களுக்கும் கடத்த வேண்டும் என்று தோன்றியதில் இந்தப் பதிவு. வெற்றி பெற்றிருக்கிறேன் என்று தோன்றுகிறது.
சரி. இப்போது முந்தைய பதிவின் சரியான வடிவத்தை வாசியுங்கள். கூடவே இன்னும் சிலதையும் சேர்த்திருக்கிறேன்.
காகம்-வடை-நரி கதையை, நரி வடையை கவ்விக் கொண்டு போவதிலிருந்து ஆரம்பித்துச் சொன்னால் எப்படியிருக்கும்? அப்படித்தானிருக்கிறது இந்த அப்பட்ட நான்-லீனியர் திரைப்படமும். "பழிவாங்குதல் உன்னுடைய உரிமை" என்பது இப்படத்தின் ஒரு வசனம். படம் முழுக்கவும் இதை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கிறது, ஆனால் தலைகீழாக.
தன்னுடைய காதலியை வன்புணர்ச்சி செய்து ஏறக்குறைய பிணமாக்கினவனை பழிவாங்க நண்பனுடன் ஆவேசமாய் தேடிப் போகிறான் ஒருவன். படம் முடிகிற காட்சியில்தான் துவங்குகின்றது. துவங்குகின்ற காட்சியில்தான் முடிகின்றது. இதைப் புரிந்து கொள்ள தலைகீழாய் நிற்க வேண்டுமென்கிற அவசியமில்லை. காட்சிக் கோர்வைகளை chronological order-ல் புரிந்து கொண்டால் போதும்.
இயக்குநர் Gaspar Noé-ன் முந்தையப் படமான I Stand Alone-ன் தொடர்ச்சியோடு இந்தப் படம் துவங்குகிறது. அங்கிருந்து விலகுகிற காமிரா கே க்ளப்பிலிருந்து (gay club) காவல் துறையால் கைது செய்யப்பட்டு கொண்டுவரப்படும் இருவரை காண்பிக்கிறது. அவர்கள் கூடவே பின்னோக்கி ஓடினால்தான் முழுத்திரைப்படத்தையும் நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியும்.
ஏறத்தாழ ஒன்பது நிமிடங்கள் நீடிக்கின்ற ஒரு குத வன்புணர்ச்சிக்காட்சியை இதில் பார்த்து அதிர்ந்து போனேன். மிகக் குரூரமான திரைப்படம் எனக் கருதப்படும் பசோலினியின் Salò, or the 120 Days of Sodom (1975) திரைப்படத்தை விட இந்தக் காட்சி அதிக பாதிப்பை என்னுள் ஏற்படுத்தியது. பெண்ணாகப் பிறந்திருக்கிற காரணத்தினாலேயே அந்த உடல் படுகிற பாட்டை கண்டு பரிதாபமாகவும், நல்ல வேளையாக நான் பெண்ணாக பிறக்கவில்லை என்கிற சுயமகிழ்ச்சியுடன் கூடிய குரூரமும் ஒருசேர எழுந்தது. அப்படியும் மகிழ்ந்துவிட முடியாது. எம்மதமும் சம்மதம் என்பதைப் போல் எந்த துவாரமாக இருந்தாலும் திணிக்கத் துடிக்கும் மனநோயாளிகள் வாழும் இந்தச் சமூகத்திற்குள்தான் வாழ வேண்டியிருக்கிறது. திரை விழாவின் போது இந்த குறிப்பிட்ட காட்சியை காணச் சகிக்காமல் அரங்கிலிருந்து பல பார்வையாளர்கள் வெளியேறினார்கள். ஒரு மனிதன் குரூரமாக சாகடிக்கப்படும் இன்னொரு காட்சியையும் இத்தோடு இணைக்க வேண்டும்.
போதைப் பொருள் உட்கொண்டவனின் பித்தம் தலைக்கேறிய உன்மத்தோடு நிகழும் அரை மணி நேர ஆரம்பக் காட்சிகளை பொறுமையுடன் கடந்தால்தான் உங்களால் படத்திற்குள் நுழைய முடியும். இதற்கு துணைபுரியும் திட்டமிட்ட அபத்த குழப்ப இசையால் (low-frequency sound) உங்களுக்கு தற்காலிக பைத்தியம் கூட பிடிக்கலாம்.
மனதின் சமநிலையை கலைத்துப் போடும் குரூரமான காட்சிகள் இருப்பதால் மென்மையான மனதுடையவர்கள் இத்திரைப்படத்தைப் பார்க்காமலிருப்பது நல்லது.
()
வாழ்வின் சில கசப்பான நிமிடங்களைப் பற்றி பின்னால் யோசிக்கும் போது தவிர்த்திருக்கலாமே என்று தோன்றும். ஆனால் அவ்வாறு செய்ய முடியாததில்தான் வாழ்க்கையைக் குறித்த வசீகரமே அடங்கியுள்ளது. காட்சிக் கோர்வைகளை பின்னிலிருந்து நகர்த்திச் சென்றதுதான் இந்தப் படத்தின் மிக முக்கிய விஷயம். அதனாலேயே இந்தப் படத்தில் வெளிப்படும் வன்முறையும் குரூரமும் நமக்குள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி அதைப் பற்றி சிந்திக்க வைக்கின்றன.
ஒவ்வொரு காட்சிக் கோர்வைகளுக்கும் உண்டான இடைவெளியை காமிராக் கோணம் விட்டம் நோக்கி சுழல்வதிலிருந்து நாம் முந்தைய காட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. பல காட்சிகள் ஒரே ஷாட்டில் எடுத்தது போல பிரமையை தந்தாலும் தனித்தனியான தொழில்நுட்பத்தின் மூலம் திறமையாக ஒருங்கிணைக்கப்பட்ட காட்சிகளே என்றொரு தகவல் சொல்கிறது. படத்தின் கலவரமான ஒளிப்பதிவும் (இயக்குநரே) இந்த நான்-லீனியர் படைப்பிற்கு பெரிதும் துணை செய்கின்றது.
யாரை பழிவாங்க வேண்டும் என்று மார்க்கஸீம் பியர்ரியும் ஆவேசமாக தேடிச் செல்கிறார்களோ, அவனை விட்டுவிட்டு இன்னொருவனை கொல்கின்றனர். நாம் வாழ்க்கையில் பெரும்பாலும் செய்யும் அபத்தங்களும் இதைப் போன்றதுதானே?
குரூரமாக கற்பழிக்கப்படும் அலெக்ஸ் என்கிற பெண்ணாக மோனிகா பெல்லூச்சி (Monica Bellucci) நடித்துள்ளார். பெரும்பாலோனோர் ஏற்கத் தயங்கும் பாத்திரமிது. படத்தின் பின்னோக்கிய காட்சிகளில் (அதாவது முந்தைய காட்சிகள்) அலெக்ஸ், அவளது முன்னாள் கணவன், இந்நாள் காதலன் .. என்று மூன்று நபர்களும் ஓடும் ரயிலில் பாலியல் உச்சத்தைப் பற்றியும் அது தொடர்பாக அவர்களுக்குள் நிகழ்நதவைகளைப் பற்றியும் உரையாடும் காட்சி சுவாரசியமானது.
ஒரு சிறந்த நான்-லீனியர் படைப்பை உருவாக்குவது அத்தனை எளிதானதல்ல என்பதை இந்தப் படம் உணர்த்தினாலும் இதில் நிறைந்திருக்கும் வன்முறை மற்றும் குரூரம் காரணமாகவே இதையொரு 'சிறந்த படமாக' என்னால் ஏற்க முடியவில்லை. ஆனால் பார்வையாளனிடம் ஏதோவொரு பாதிப்பை ஏற்படுத்துகின்ற வகையில் இத்திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது.
suresh kannan
15 comments:
ஒன்னும் சொல்ல தோனலங்க...
நல்லபையனாக மாற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் :)
கண்டிப்பா தவிர்த்துவிடுவேன்...
up in the Air.. பார்த்தேன்.. முடிவு எனக்கு உடன்பாடில்லைதான்.. உங்கள் விமர்சனத்தை படிக்காமல் அப்படத்தை பார்த்துயிருப்பேனா என்பது சந்தேகம்தான். முக்கால்வாசி படம் நைஸ்.
>>>> திரைப்படத்தை பார்க்கின்ற போது எனக்கும் தோன்றியது. அதையே உங்களுக்கும் கடத்த வேண்டும் என்று தோன்றியதில் இந்தப் பதிவு.
வாவ் நல்ல ஐடியா! வெற்றி பெற்றுவிட்டீர்கள்தான்!! :)))
-டைனோ
நிச்சயம் இந்த மாதிரிப் படங்கள் எல்லாம் என்ன வகையில் சேர்த்தி? யாருக்காக எடுக்கப் படுகிறது?
குரூரம் என்ற வகையில் பர்த்தால் தமிழில் வரக்கூடிய எல்லாப் படங்களும் லீனியர் அல்லது நான் லீனியர் வகைப் படங்கள்தான்.. பாக்குற ஒவ்வொருத்தனையும் நொங்கெடுத்து அனுப்புறாய்ங்கல்ல.. அப்படியும் நம்ம படமும் பாத்து விமர்சனமும் போடுறோம்ல..
:-)
குறிப்பு:-
நான் லீனியர், லீனியர், ஜூனியர், சீனியர் குறித்தெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.
இந்த படத்தை பார்க்கும் எண்ணம் இல்லை, ஆனாலும் இந்த படத்தின் narrativeக்காவே ஒருதடவை பார்க்கலாமோ என தோன்றுகிறது. ஆனாலும் உங்க முதல் பதிவு சூப்பர்... ;)
Non-liner வகையில் நான் பார்த்தவற்றில் Momento ஒரு வித்தியாசமான படமாக இருந்தது. ஆனாலும் இப்படியான alternating narratives வகையறாபடங்கள் தமிழில் சாத்தியப்படாது (அல்லது வெற்றிபெறாது) என்பதால் தான் அதை தழுவிய (கதாபாத்திரத்தை மட்டுமாவது) கஜினி ஒரு தெளிவான கதையோட்டத்துடன் வந்தது என நினைக்கிறேன்.
பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
இதே போல பழைய தமிழ் படங்கள் குறித்தும் பதிவு இடுங்களேன், சிவாஜி, பீம் சிங், பாலய்யா, ரங்காராவ் படங்கள்.
" மிகக் குரூரமான திரைப்படம் எனக் கருதப்படும் பசோலினியின் Salò, or the 120 Days of Sodom (1975)"
if this comment is not justified with its context, it may give a falsified impression of the movie and deny the historical importance of the film. the movie is an allegary of facism and it brings de-sade's book in to the age of facism. yamuna rajendarn
எல்லாக் கதையையும் பின்னாலிருந்து சுவாரசியமாகச் சொல்லிவிட முடியாது.. அதற்கேற்ற கதைகளைத்தான் சொல்ல முடியும். அப்படிச் சொல்வதிலும் ஒரு சுவாரசியம் இருக்கிறது.
தமிழில் முன்னொரு காலத்தில் வந்த அந்த நாள் திரைப்படத்தை நான் - லீனியர் முறையில் எடுத்த ஒரே தமிழ்ப்படம் என்று நான் சொல்வேன். (கொஞ்சம் நெளிவுதட்டியிருந்தால்).
ரொம்ப நாளா பாக்கணும்னு நினைச்ச படம்.. நீங்க சொல்லிட்டீங்க இல்ல.. பாத்துட வேண்டியதுதான்..
உங்களை "Love, Sex aur Dhoka (Hindi)" பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன்..
ஓராண்டுக்கு முன்னர் வால்பையன் எழுதிய விமர்சனத்தை படித்த பிறகு இந்த படத்தைப் பார்த்தேன்.
சில காட்சிகள் குரூரமாகவே இருக்கும், ஆனால் கதைக்கு தேவையான காட்சிகள் என்றே நினைக்கிறேன்.
இப்படத்தில் வரும் குதப்புணர்ச்சி மட்டுமே 9 நிமிடங்கள்,ஒரே காட்சியா என்ற சந்தேகத்தில் திரும்ப திரும்ப பார்த்தும் துண்டாடி தொகுக்கப்பட்டது போல் தோன்றவில்லை.குறிப்பிட்ட அந்த மொத்த பாலியல் வன்முறை காட்சியும் கிட்டத்தட்ட 20 நிமிடம் வந்ததாக நினைவு.Vincent Cassel நடித்த Read my lips எனக்கு பிடித்திருந்தது.கிடைத்தால் பாருங்கள்.
120 days of sadom ம் சமீபத்தில் தான் பார்த்தேன்.இது குறித்து எனக்கு குழப்பம் இருக்கிறது.In the realm of senses/passion,Baise-moi,Anti christ என வரிசையாக பாலியல்/வன்முறை படங்களாக பார்த்து தொலைக்கிறேன்.ஏதோ ஒரு விதத்தில் பார்வையாளனை இப்படங்கள் பாதிக்கின்றன என்றாலும் எந்த விதத்தில் என்பது யோசிக்க வேண்டியதாக இருக்கிறது.
Requiem for a Dream பார்த்து விட்டீர்களா? அவசியம் இப்படம் குறித்து எழுதுங்கள்.
((((படம் முடிகிற காட்சியில்தான் துவங்குகின்றது. துவங்குகின்ற காட்சியில்தான் முடிகின்றது. இதைப் புரிந்து கொள்ள தலைகீழாய் நிற்க வேண்டுமென்கிற அவசியமில்லை))))
நல்லவேள முதல்லையே சொன்னிங்க!
அருமையான விமர்சனம்....பகிர்வுக்கு நன்றி !!
முதல் முறையாக உங்கள் பதிவுகளைப் படித்தேன்.
நீங்கள் சுஜாதா பற்றி எழுதியிருந்த பதிவுகள் அற்புதம்.
உங்களைப் போலவே எனக்கும் சம கால இலக்கியம் பற்றி அறிய முடிந்தது சுஜாதா மூலம் தான்.
நிறைய நேரம் உங்கள் பதிவுகளில் மேய்ந்தேன்.
உங்கள் எழுத்து நடை அழகாக இருக்கிறது.
கடுமையாக உழைத்திருக்கிறீர்கள். நான் உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
தொடர்ந்து வசிக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
jekay
I'm (irregularly)regular reader of your blog. Your STYLE made me to visit quite often. //பெண்ணாகப் பிறந்திருக்கிற காரணத்தினாலேயே அந்த உடல் படுகிற பாட்டை கண்டு பரிதாபமாகவும், நல்ல வேளையாக நான் பெண்ணாக பிறக்கவில்லை என்கிற சுயமகிழ்ச்சியுடன் கூடிய குரூரமும் ஒருசேர எழுந்தது. அப்படியும் மகிழ்ந்துவிட முடியாது. எம்மதமும் சம்மதம் என்பதைப் போல் எந்த துவாரமாக இருந்தாலும் திணிக்கத் துடிக்கும் மனநோயாளிகள் வாழும் இந்தச் சமூகத்திற்குள்தான் வாழ வேண்டியிருக்கிறது.// Good work.
I am astounded to see your work, not only on this movie but for each articles of yours. Please give me/us list of movies (like this)to watch.
Recently I watched the Telugu movie "Vedam" (Directed by Krish, director of Gamyam).
As soon as i saw it i wished to write a review but after reading all your reviews/views on movies i wish to have the review of vedam by you. can you?
I feel vedam is one of the out of the box movies from Tollywood.
By the way, how could you manage with your time to write this much? Great. (Unga ponnunga ivlo time kodukkurangala ungalukku?)
Post a Comment