Friday, March 05, 2010

ஆஸ்கர் நாமினேஷன் -1 (தி ஹர்ட் லாக்கர்)

மார்ச் 7ந்தேதி ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படவுள்ள சூழ்நிலையிலும் ஆஸ்கர் சுரத்தின் உச்சத்தில் பத்திரிகைகளும் இதழ்களும் ரசிகர்களும் பல்வேறு கணிப்புகளையும் புள்ளிவிவரங்களையும் அள்ளித் தெளிக்கும் பரபரப்பான தற்போதைய நிலையிலும்,  2010 அகாதமி விருதுகளின் நாமினேஷன் பட்டியலில் உள்ள “சிறந்த திரைப்படங்களின்” பிரிவில் உள்ளனவற்றைப் பற்றி ஒவ்வொன்றாக எழுத உத்தேசம்.

இந்த வரிசையில் முதல் திரைப்படம் THE HURT LOCKER.

'இந்த நாடு அந்த நாட்டை வென்றது: இது அதை வென்றது' என்று உலகப் போர்களைப் பற்றி பாடப் புத்தகங்களில் படித்துவிட்டு மதிப்பெண்களுக்குப் பிறகு மறந்துப் போகிறோம். 'எல்லையோரப் படைக்காவலர்களுக்கும் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுக்கும் நடந்த சண்டையில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்' என்கிற ஒரு காலம் பத்திரிகைச் செய்தியை கா·பி அருந்தியபடி ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு சினிமா பக்கத்திற்கு தாவி விடுகிறோம். இரு நாடுகளுக்கிடையில் சிறிதான ஒரு பிரச்சினை ஏற்பட்டால் கூட "அவங்களக் விட்டுருக்கக்கூடாது சார். மிலிட்டிரிய அனுப்பியிருக்கணும்" என்று ஓடும் பேருந்தின் நெரிசலில் நின்று கொண்டே சர்வதேச அரசியல் பேசுகிறோம்.

ஆனால் ஒரு போரை அதன் உக்கிரத்தை, கொடுமையை யதார்த்தமாக உணராமல் அதன் வலியை அதை எதிர்கொள்ளாத நாட்டு மக்களால் புரிந்து கொள்ளவே முடியாது. இன்னொரு பக்கம் போர் வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், உயிர் மீதான பயம், குடும்பத்தினரைப் பிரிந்திருக்கும் ஏக்கம், கண்ணெதிரே சக நண்பன் தசைக்கூழாக கிடப்பதை பார்க்க வேண்டிய வேதனை, இது தொடர்பான உளவியல் பிரச்சினைகள் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். போர்ப் படங்கள் என்றாலே அது வீடியோ கேம்ஸின் அடிப்படை உத்தியோடும் சஸ்பென்ஸ்களான காட்சிகளோடும் எதிரிகளை அழித்த வெற்றிக் களிப்போடும் நிறையும். பார்வையாளர்களும் தானே அந்த வெற்றியை அடைந்த திருப்தியோடு இருக்கையிலிருந்து நகர்வார்கள்.


ஆனால் சில வருடங்களுக்கு முன் பார்த்த Das boot என்றொரு ஜெர்மானியப்படம் இதிலிருந்து வேறுபட்டிருந்தது. மிகுந்த ஆரவாரத்தோடும் தனிமனித சோகங்களுடன் பயணிக்கும் அந்த நீர்மூழ்கி கப்பலின் வீரர்கள் சுற்றிலும் கடல் சூழந்திருக்கும் தனிமையோடும், இயற்கையின் சீற்றங்களுடனும் எதிரியை எதிர்நோக்கி பயணிக்கிறார்கள், பயணிக்கிறார்கள், பயணித்துக் கொண்டேயிருக்கிறார்கள். இதிலும் நான் பார்த்தது uncut version வேறு. எப்போது நம்மை மரணம் எதிர்கொள்ளும் என்று தெரியாமலும் அப்படியே ஜலசமாதி ஆகிவிடுவோமோ என்ற பயத்துடனும் ஒவ்வொரு வீரர்களின் வெளிப்பாடும் ஒவ்வொரு விதமாக இருக்கும். பெரும்பாலான பகுதிகள் கப்பலின் உள்ளேயே நிகழ்வதால் அவர்களுக்கிடையே ஏற்படும் சோர்வு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

எப்படியோ எதிரிக் கப்பலொன்றை வீழ்த்தி விட்டு அவர்கள் திரும்பும் போது ... சரி படத்தைப் பாருங்கள்.


இதே போல The Hurt Locker-ம், போர்வீரர்களின் பிரச்சினைகளை உளவியல் ரீதியாக அணுகுகிறது. அமெரிக்கத் துருப்புகள் ஈராக்கில் நுழைந்த 2004-ல் படத்தின் நிகழ்வு துவங்குகிறது. சுற்றிலும் வெறுப்புடன் பார்க்கும் மக்களிடமும் ஆங்காங்கே குண்டுகளை ஒளித்து வைக்கும் தீவிரவாதிகளின் இடையில் எப்போதும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டிய சூழல்.

குண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் (Explosive Ordnance Disposal) ஒரு குழுவில் குண்டு வெடிக்கப்பட்டு தாம்சன் இறந்து விட அவரின் இடத்தில் பணிபுரிய வருகிறான் வில்லியம் ஜேம்ஸ் (Jeremy Renner). உயிர் குறித்த பயமோ நடுக்கமோ இல்லாமல் அவன் குண்டுகளை விளையாட்டுப் பொம்மை போல் கையாள்வது சக வீரர்களை வியப்புடனும் திகைப்புடனும் பார்க்க வைக்கிறது. மாத்திரமல்லாமல் அனைவரும் பதைபதைப்புடன் சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது இவன் குழுவிடனுனான உரையாடல் தொடர்பை துண்டித்துக் கொண்டு தனியாக செயல்படுவதும் அவர்களை எரிச்சல் கொள்ள வைக்கிறது. மற்றவர்களுக்கு வெடிகுண்டென்பது மரணத்திற்கான அழைப்பாக தெரியும் போது ஜேம்ஸ் அதை ஒரு விளையாட்டில் வெற்றி கொள்ளும் விருப்பத்தோடு அணுகுகிறான். தான் செயலிழக்கும் குண்டுகளின் பாகங்களையெல்லாம் அடையாளச் சின்னமாக வைத்துக் கொள்கிறான்.

Bravo என்கிற இந்தக்குழு பாக்தாத் நகரத்தில் ஒளிக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் காட்சிகள் அனைத்தும் பரபரப்பாகவும் டாக்குமெண்டரி பாணியில் அதிகபட்ச நம்பகத்தன்மையுடனும் உருவாக்கப்பட்டிருக்கிறது. வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையேயுள்ள பதட்டமான பகடைக்காய் விளையாட்டு போலவே இந்தக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

தீவிரவாதிகள் கட்டிடததிலிருந்து திடீரென்று தாக்கும் தருணத்தில் வெட்ட வெளியில் நிற்கும் இவர்கள் ஒளிந்து கொள்ளக் கூடிய போதிய வசதியில்லாமல் இருக்கும் பாறைகளின் பின்னால் அமர்ந்து கொண்டு தீவிரவாதிகளை மிகுந்த சிரமத்திக்கிடையில் சுட்டு வீழ்த்துவதும் எல்லோரும் இறந்து விட்டார்களா எனத் தெரியாமல் மணிக்கணக்கில் அவர்களின் அசைவிற்காக தாகத்துடன் காத்திருக்கும் காட்சிகளும் போர்க்களத்தின் தீவிரத்தை உக்கிரமாக வெளிப்படுத்தக் கூடியவை. இந்தக் காட்சியையே தீவிரவாதிகளாக கருதப்படுகிறவர்களின் பார்வையில் இருந்து நோக்கினால் வேறொரு சித்திரம் வெளிப்படக்கூடும்.

படத்தின் இறுதிக்காட்சியொன்றில் தீவிரவாதிகளால் உடலெங்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டு எளிதில் அதை எடுக்க முடியாதபடி பூட்டுக்களால் இணைக்கப்பட்டிருக்கும் அப்பாவியான ஒரு பொதுஜனம் உயிருக்காக அமெரிக்க ராணுவத்தினரிடம் கதறுவதும் குண்டு வெடிக்கவிருக்கும் கடைசி விநாடிகள் வரை அவரை மீட்க வில்லியம் ஜேம்ஸ் போராடுவதும் இயலாத நிலையில் அவரிடம் மன்னிப்பு கேட்வதும் அற்புதமான காட்சிகள். தாம் நிச்சயமாக இறக்கப் போகிறோம் என்று தெரிந்த அந்த பொதுஜனம் அது வரை கூப்பாடு போட்டிருந்ததை நிறுத்தி கடைசி தருணத்தில் அமைதியான முகபாவத்துடன் இறைவனை வழிபடும் காட்சியை என்னால் மறக்கவேயியலாது.

முன்னர் குறிப்பிட்டது போல வீரர்களுக்கிடையே நிகழும் உளவியல் ரீதியான பிரச்சினையும் இதில் சிறப்பாக அணுகப்பட்டிருக்கிறது. குழுவிலுள்ள மற்றவர்கள் பதட்டத்தடன் செயல்படும் போது ஜேம்ஸ் அது குறித்தான சுவடே இல்லாமல் விளையாட்டுணர்வோடு இருப்பது இவர்களை வெறுப்பேற்றுகிறது. கைப்பற்றப்பட்ட குண்டுகளை யாருமில்லாத மணற்பகுதியில் வைத்து வெடிக்கும் ஒரு சூழ்நிலையில்,  ஜேம்ஸ் தன்னுடைய கையுறைகளை குண்டுகளிருக்கும் பகுதியில் மறந்து வைத்து விட்டதாக கூறி எடுத்து வர புறப்படுகிறான். அவன் அபாயப் பகுதியில் இருக்கும் போது சக வீரனான Sanborn, ‘இப்போது குண்டை வெடிக்க வைத்து விட்டு விபத்து நேர்ந்ததாக ரிப்போர்ட் எழுதி விடலாம்’. என்கிறான்.

அந்தக் கணத்தின் வெறுப்பில் அவன் அதை விளையாட்டாகக் கூறுகிறான் என்பதை யூகிக்க முடிந்தாலும் ஜேம்ஸ் மீது அவனுள் பதிந்திருக்கும் எரிச்சலுணர்வை வெளிப்படுத்தும் காட்சியாக எடுத்துக் கொள்ளலாம். முரட்டுத்தனமாக சித்தரிக்கப்படும் இவன் இறுதிக் காட்சியில் தொடர்ந்து மரணத்தை நெருக்கமாக பார்க்க நேரும் தொழிலை நினைத்து கதறி அழுகிறான். "இந்த ஒப்பந்தத்தோடு இதை தொடரப் போவதில்லை ஜேம்ஸ். எனக்கென்று ஒரு மகன் வேண்டும். அதற்காகவாவது நான் உயிரோடு இருக்க வேண்டும்".

இன்னொரு வீரனான Eldridge-ன் பகுதிகளும் சுவாரசியமானது. தாம்சனின் மரணத்தைக் கண்ட பதட்டவுணர்வோடு அலையும் இவனை கவுன்சலிங் செய்ய வரும் ஒருவரை "களத்தில் சண்டையிட்டால்தான் அது உனக்குப் புரியும்" என அலட்சியப்படுத்துகிறான். இவனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு களத்திற்கு வரும் அவர் வெடிகுண்டுப் பையின் மீது காலை வைத்து வெடித்துச் சிதற, Eldridge-ன் பதட்டமும் குற்றவுணர்வும் அதிகமாகிறது. இறுதிக்காட்சியில் காயமடையும் இவன் "நீ ஒரு வெறி பிடித்தவன்" என்று ஜேம்ஸை திட்டிவிட்டுச் செல்கிறான்.

ஒப்பந்த நாட்கள் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் ஜேம்ஸ், திரும்பவும் களத்திற்குச் செல்ல முடிவு செய்து அதற்கு முன் தன்னுடைய சிறிய மகனிடம் உரையாடும் காட்சி அற்புதமானது. "இந்த வயதில் அற்புதமாகத் தோன்றும் விளையாட்டுப் பொருட்கள் அனைத்தும் நீ வளர்ந்தவுடன் அற்பமானதாகிவிடும். இன்னும் பெரியவனாகும் போது அப்படி அற்பமாகும் பொருட்களின் எண்ணிக்கை அதிகமாகி அற்புதமாகத் தங்கும் விஷயங்கள் ஒன்றோ அல்லது இரண்டோதான் மீதமாகும். அப்படி எனக்கு அற்புதமாகத் தேங்கியிருக்கும் விஷயம் ஒன்றேயொன்றுதான்".

அவன் பாம் ஸ்குவாட் உடையுடன் நடக்கும் அடுத்த காட்சியில் அந்த அற்புதம் என்னவென்று நம்மால் உணர முடிகிறது. குண்டுகளை வெற்றிகரமான எடுப்பதில் உள்ள ஆர்வம் மாத்திரமல்ல அது. அதன் மூலம் பல அப்பாவி மக்களை காப்பாற்றும் வாய்ப்பும் அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியும்தான் அந்த அற்புதம் என்பதாக படம் நிறைகிறது.

()

அவ்தார் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவியான Kathryn Bigelow இத்திரைப்படத்தை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார். 'அவ்தார் திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைக்கலாம்' என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அவரது முன்னாள் மனைவியின் இந்தத் திறமையான உருவாக்கம் கடுமையான போட்டியாக நிற்கும் நிலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகாதமி விருதில் ஒன்பது பிரிவுகளில் நாமினேஷன் பட்டியலில் இருக்கும் இந்தத் திரைப்படம்தான் 'சிறந்த திரைப்பட' பிரிவில் வெல்லும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பாகவும் விருப்பமாகவும் உள்ளது. அதற்கு முன்னோட்டமாக சிறந்த படம் உள்ளிட்ட ஆறு விருதுகளை BAFTA-வில் பெற்றுள்ளதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். வில்லியம் ஜேம்ஸாக நடித்த Jeremy Renner சிறந்த நடிகருக்கான பட்டியலில் உள்ளார். ஒலிப்பதிவு பிரிவிலும் இத்திரைப்படத்திற்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.  

suresh kannan

7 comments:

அகல்விளக்கு said...

அருமையான விமர்சனம்...

இப்படத்திற்கு ஆஸ்கார் நிச்சயம் கிடைக்கும்..

பினாத்தல் சுரேஷ் said...

படம் நல்ல படம்தான், சந்தேகமே இல்லை, அருமையான விமர்சனமும் கூட.

போன வருடம் வந்திருந்தால் ஆஸ்கார் வாங்கியிருக்கலாம்.

ஆனால் அவதாரோடு போட்டி போட்டால், என்னைப்பொறுத்தவரை, சாரி!

லேகா said...

சுரேஷ்,

சுவாரஸ்யமான பகிர்வு.

தொடர்ச்சியாய் நல்ல திரைப்படங்களை அறிமுகம் செய்கின்றீர்கள்,மிக்க நன்றி.

உண்மைத்தமிழன் said...

காத்திருக்கிறேன் படத்திற்காக..!

Subbaraman said...

Nice review, Suresh kannan.Sometime back Quentin Tarantino, Martin Scorsese praised this movie and told this will win Oscar.

Ashok D said...

:)

மதன் said...

நேற்றுதான் தரவிறக்கம் செய்தேன் இந்தப் படத்தை. இன்று உங்கள் பதிவு.. :) நன்றி சுரேஷ்.