இந்த வரிசையில் மூன்றாவது திரைப்படம் Inglourious Basterds.
1978-ல் இதே பெயரில் வெளிவந்ததொரு இத்தாலியத் திரைப்படத்தின் தலைப்பால் கவரப்பட்டு அந்த பெயரையே சற்று மாற்றி உபயோகித்துக் கொண்டார் க்வெண்டின் டாரண்டினோ. இதற்கான விளக்கத்தை பத்திரிகையாளர்கள் கேட்ட போது முதலில் விளக்கமளிக்க மறுத்த அவர், பின்னர் நியோ-எக்ஸ்பிரசனிஸ ஒவியரான Jean-Michel Basquiat-ன் பாதிப்பில் இந்தத் தலைப்பில் மாற்றம் செய்ததாக தெரிவித்தார்.
க்வெண்டின் டாரண்டினோ - ஓர் அசலான திரைக்கலைஞனின் இந்தப் பெயர் மாத்திரமே அவர் திரைப்படங்களின் முகவரியாக அமைந்து எந்தவொரு விளக்கத்திற்கும் தேவையில்லாமல் செய்துவிடும். அநேர்க்கோட்டு முறையில் திரைக்கதை அமைந்த அவரின் பல்ப் பிக்ஷன் திரைப்படம் இன்றளவும் அதனுடைய திரைக்கதை உத்திக்காக பெருமளவில் சிலாகிக்கப்படுகிறது.
ஹிட்லர் x யூதர்கள் என்கிற வரலாற்றுப் பகையுடனான படுகொலைகளைப் பற்றி எத்தனை படைப்புகள் வந்தாலும் அதன் முழுமையான வன்முறையை வெளிப்படுத்தி விடமுடியாது என்பது தவிர அவற்றுக்கான தேவைகளும் தொடர்ந்து கொண்டேயிருப்பதும் அதன் உக்கிரத்தை யூகிக்க வைக்கிறது. வரலாற்றை புனைவிற்காக மாற்றியமைக்கும் சுவாரசியமான உத்தியை டாரண்டினோ இந்தப் படத்தில் திறமையாக பயன்படுத்தியுள்ளார்.
பிரான்சின் ஒரு கிராமத்தில் தம்முடைய குடும்ப உறுப்பினர்களை நாஜிப்படையினர் படுகொலை செய்து விடுவதால் ஷோசன்னா அங்கிருந்து பாரிஸ் நகரத்திற்கு தப்பி பெயரை மாற்றிக் கொண்டு உறவினரின் திரையரங்கை நிர்வகிக்கின்றார்.
இத்தாலியில் உள்ள பிராட்பிட் தலைமையிலான அமெரிக்க-யூத கொரில்லா படைக்குழு ஒன்று 'இயன்ற அளவிற்கு நாஜிப்படையினரை கொல்வது' என்ற நோக்கத்துடன் இயங்கிவருகிறது. இந்தக் குழுவின் உறுப்பினர்கள்தான் 'Basterds' என்று அறியப்படுகின்றார்கள்.
போரில் பலரைக் கொன்ற காரணத்திற்காக 'கதாநாயகனாக' புகழ்பெற்றுள்ள Frederick Zoller என்கிற நாஜிப்படை வீரன் கிராமத்திலிருந்து தப்பிவந்த யூத நங்கையான ஷோசன்னாவால் கவரப்படுகிறான். அவன் செய்த வீர சாகசங்களை அடிப்படையாக வைத்து 'தேசத்தின் பெருமை' என்ற திரைப்படத்தை கோயபல்ஸ் உருவாக்குகிறார். வேறொரு அரங்கில் திரையிடப்படுவதாக இருந்த அந்தத் திரைப்படத்தை ஷோசன்னா மீதுள்ள காதலால் தம்முடைய செல்வாக்கைப் பயன்படுத்தி அவளுடைய அரங்கில் திரையிடப்படுவதற்கு ஏற்பாடு செய்கிறான். நாஜிப் படையினரின் உயர்மட்ட தலைவர்கள் பலர் அந்தத் திரைப்பட வெளியீட்டிற்கு வருவதான தகவல் தெரிந்ததும் ஷோசன்னா நாஜிகளை பழிவாங்க இதுவே சிறந்த தருணம் என்பதை உணர்கிறார். படம் ஓடிக் கொண்டிருக்கும் போது திரையரங்கை மொத்தமாக எரித்துவிடுவது என்பது அவளது திட்டம்.
இன்னொரு பக்கம் இன்னுமொரு குழு இதே திட்டத்துடன் இறங்குகிறது. திரைப்பட வெளியீட்டை அறிந்து கொள்ளும் இங்கிலாந்தின் உளவுத்துறை, திரையரங்கில் நாஜி அதிகாரிகளை கொல்ல தம்முடைய ஆட்களை அனுப்புகின்றனர். இரட்டை ஏஜெண்ட்டான ஜெர்மனிய நடிகையும் 'Basterds' குழுவினரும் அவர்களுக்கு உதவுவார்கள். கடைசி தருணத்தில் ஹிட்லரும் அந்தத் திரைப்பட வெளியீட்டிற்கு வருவதாக முடிவு செய்யும் போது பரபரப்பு அதி உச்சத்தை எட்டுகிறது.
தனித்தனியாக திட்டமிடப்படும் இந்த சதித்திட்டங்கள், அவற்றிற்கான சம்பவ நிகழ்வுகள், அவற்றின் பின்னடைவுகள், எக்கச்சக்கமாக நிகழும் கிளைமாக்ஸ் ... என்று ஒவ்வொன்றிலும் டாரண்டினோவின் பிரத்யேக முத்திரை பதிந்துள்ளது. கூர்மையான வசனங்கள் டாரண்டினோவின் பிரத்யேக பலம். எந்த நேரத்திலும் துப்பாக்கி வெடிக்கலாம் என்கிற இறுக்கத்தை வன்முறையின் அழகியலோடு இணைத்து உருவாக்குவதில் திறமையானவர் என்பதை அந்தக் மதுக்கூட காட்சிக் கோர்வைகள் தெரிவிக்கின்றன. அதுவரை திகிலும் பரபரப்புமாக அமர்ந்திருக்கும் பார்வையாளன் காட்சியின் இறுதியில் பீர் குடித்த மூத்திரக்காரன் கழிவறையில் அடையும் ஆசுவாசத்தை அடைகிறான்.
படத்தின் துவக்கத்திலிருந்தே டாரண்டினோவின் வசீகரம் துவங்கி விடுகின்றது. தன்னுடைய வீட்டை நோக்கி வரும் நாஜிப் படையினரைக் கண்டு அதிர்ச்சியடைந்தாலும் சுதாரித்துக் கொண்டு அவர்களை எதிர்கொள்வதற்கான மனநிலையை வரவழைத்துக் கொள்கிறான் அந்தப் பண்ணையாளன். நாஜிப் படையின் அதிகாரி எதிரே அமர்ந்து தமது சாதுர்யமான உரையாடலினால் அவனாகவே 'யூதக்குடும்பத்தை ஒளித்து வைத்திருப்பதை' கண்ணீரோடு ஒப்புக் கொள்ள வைக்கும் காட்சிகள் அபாரம். Hans Landa என்கிற அந்த அதிகாரியாக நடித்திருக்கும் Christoph Waltz படம் முழுவதும் தம்முடைய திறமையான அலட்டிக் கொள்ளாத நடிப்பினால் பார்வையாளர்களை பிரமிக்கச் செய்கிறார். அதனால்தான் அகாதமி விருதின் Best Supporting Actor பிரிவில் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விருதை நிச்சயம் வெல்வார் என நம்புகிறேன்.
Frederick Zoller தாம் எதிரிகளைக் கொன்ற சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படத்தின் வன்முறைக்காட்சிகளை அவனே ரசிக்க முடியாத போது ஹிட்லரும் கோயபல்ஸீம் விழுந்து விழுந்து குரூர சிரிப்புடன் ரசிக்கின்றனர். கோயபல்ஸ் கூட ஒரு தருணத்தில் கண்ணீர் விடுகிறார்.
அப்போது அவர்களை கொல்வதான திட்டங்கள் நிறைவேறாத சூழ்நிலையை நோக்கி காட்சிகள் பயணித்த போது நான் மிகுந்த பதட்டமடைந்தேன். ஹிட்லர் குழுவை டாரண்டினோ சாகடிக்காமல் விட்டிருந்தால் நான் அவரை மன்னித்திருக்கவே மாட்டேன். அந்தச் சமயத்தில் நானும் ஒரு யூதனாகவே மாறியிருந்தேன். ஷோசன்னாவின் ஏற்பாட்டின் படி ஒருபக்கம் திரையரங்கம் பற்றியெரிய ஆரம்பிக்க மறுபுறம் பிராட்பிட்டின் ஆட்கள் மீதமுள்ளவர்களை துப்பாக்கியால் துளைக்கும் போதுதான் என்னுள் அதுவரை உச்சத்திலிருந்த பதட்டம் தணிய ஆரம்பித்தது. ஆனால் அப்போதைய என் மனநிலை ஹிட்லரின் குருரத்திற்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல என்கிற அபத்த உணர்வு பிறகுதான் உறைத்தது.
டாரண்டினோ-வின் திரைப்படங்களில் எப்போது துப்பாக்கி வெடிக்கும் என எதிர்பார்க்கவே முடியாது என்று மேலே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அதற்கு மிகச்சரியான உதாரண காட்சி இறுதியில் நிகழ்கிறது.
திரையரங்கை எரிப்பதற்கான இறுதி பரபரப்பில் ஷோசன்னா இயங்கிக் கொண்டிருக்கும் போது, தாம் சண்டையிட்டுக் கொன்ற காட்சிகளை தன்னாலேயே ரசிக்க முடியாத Frederick Zoller ஆறுதலுக்காக ஷோசன்னாவை தேடி ஆபரேட்டர் அறைக்கு வருகிறான். அவனை அங்கு எதிர்பார்க்காத ஷோசன்னா அதிர்ச்சியடைந்தாலும் தம்முடைய பதட்டத்தை நிதானமாக மறைத்துக் கொண்டு அன்பாக பேசி அவனை அப்புறப்படுத்த முயல்கிறாள். நடக்கவிருக்கும் கொலைச்சதியை அறிந்திராத அவன், ஏன் இவள் தன் காதலை வெளிப்படுத்தாமலே வெறுப்பேற்றுகிறாள்? என்று புரியாமல் சற்று முரட்டுத்தனமாக அறைக்குள் பாய்கிறான்.
தன்னுடைய இறுதிச் செயலை நிறைவேற்ற முடியாமல் குறுக்கே நிற்கும் அந்தக் காதலனை என்ன செய்வது என்று அவள் சற்றும் யோசிப்பதில்லை.
()
அநேர்க்கோட்டு திரைக்கதையமைப்பிற்காக சிலாகிக்கப்படும் டாரண்டினோ, இந்தத் திரைப்படத்தை நேர்க்கோட்டு முறையிலேயே தன்னுடைய வழக்கமான பாணியில் அத்தியாயம் அத்தியாயமாக பிரித்துச் சொல்கிறார். என்றாலும் அவர் அமைத்திருக்கும் அபாரமான திரைக்கதை காரணமாக பார்வையாளனுக்கு அது எவ்வித ஏமாற்றத்தையும் தரவில்லை. எனவேதான் இது சிறந்த படம், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் அகாதமி விருதுகளின் பரிந்துரைப் பட்டியலில் உள்ளது. இதற்கான திரைக்கதையை 1998-லேயே அவர் எழுதியிருந்தாலும் இப்போதுதான் உருவாக்க முடிந்திருக்கிறது.
பிராட்பிட் எவ்வித கதாநாயக அதீதங்களும் அல்லாமல் ஒரு பாத்திரமாகவே வந்து போகிறார். அவரது ஒப்பனையும் உடல் மொழியும் மார்லன் பிராண்டோவை நினைவுப்படுத்துகிறது.
சிறந்த இயக்குநராக டாரண்டினோவும் சிறந்த துணைநடிகராக Christoph Waltz-ம் சிறந்த ஒரிஜினல் திரைக்கதை விருதையும் இத்திரைப்படம் பெறும் என எதிர்பார்க்கிறேன்.
சன்னாசியின் பதிவு
suresh kannan
9 comments:
எனக்கு உங்களது திரைவிமர்சனங்கள் ரொம்பப் பிடிக்கும்.. அதிலும் நீங்களாக தற்குறிப்பேற்றிச் சொல்லும் வாக்கியங்கள் இப்போதெல்லாம் நன்றாக அமைகின்றன.. உதாரணத்திற்கு ஒன்று..
//அதுவரை திகிலும் பரபரப்புமாக அமர்ந்திருக்கும் பார்வையாளன் காட்சியின் இறுதியில் பீர் குடித்த மூத்திரக்காரன் கழிவறையில் அடையும் ஆசுவாசத்தை அடைகிறான். //
நல்ல விமர்சனம்.. ப்ளைண்ட் சைட் நேற்றுதான் பார்த்தேன். மிக நல்ல படம். ஆனால் அதை எப்படிப் பார்த்திருக்க வேண்டும் எனபதி உங்கள் விமர்சனம் சொன்னது.
வாழ்த்துக்கள்
படத்தை பாதி தான் பார்த்தேன். முழுவதும் பார்க்க வேண்டும். இன்றோ அல்லது நாளையோ பார்த்துவிடுவேன்.
ஆரம்பக் காட்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
உங்கள் விமர்சனம் எப்பவும் போல கச்சிதம்.
நேர்த்தியான பதிவு சுரேஷ்,
அந்த இரு பிரிவுகளிலும் விருதுகள் கிடைக்கும் என்றே நம்புகிறேன். பாப்போம்.
படத்தின் பக்கபலமாய் அவர் உபயோகித்திருந்த எனியோ மோரிக்கொனின் இசையும் படத்தோடு நன்றாக பொருந்தி வந்தது.
அருமையான பகிர்வு. மிக்க நன்றி.
சுவையான பதிவு சுரேஷ்.
நன்றி
1.பீரும்
2. அபத்த உணர்வும்
:)
//அகாதமி விருதின் Best Supporting Actor பிரிவில் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விருதை நிச்சயம் வெல்வார் என நம்புகிறேன். //
Brain Dead right! :-)
ரொம்ப பேசுராங்க தல :-))
அவர் படத்துல துப்பாக்கி வெடிக்குரதுக்கு பெரிய உதாரணம் kill bill ஆரம்பக்காட்சி அந்த டைலாக்முடியும் போது வரும் அந்த துப்பாக்கி சத்தம் வாய்ப்பே இல்ல போங்க
நானும் சன்னாசி அவர் பதிவுல படிச்சுத்தாங்க இந்தப்படத்த பாத்தேன்.
அய்ஸ் சொன்னமாதிரி புனைவின் உச்சம் இந்தப்படம்
ஆற்றுப்போக்கில் செல்லும் இலை போல ரசிகனும் மனமும் கதையோடு பிரயாணிக்கிறது.
அதை நன்கு உணரமுடிந்தது.
Post a Comment