Monday, March 22, 2010

ஸ்மித்தைப் பற்றி

ஜாக் நிக்கல்சன் ஏற்கெனவே ஒரு நடிப்பு ராட்சசன். இம்மாதிரியானதொரு offbeat பாத்திரமென்றால் விட்டு வைப்பாரா என்ன? அறுபது வயதைக் கடந்தவர்கள், குறிப்பாக பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் எம்மாதிரியான மனநிலைகளுக்கு, சூழ்நிலைகளுக்கு ஆளாவார்கள் என்பதைப் About Schmidt திரைப்படம் காட்சிகளாக நம்முடன் உரையாடுகிறது.

"வீட்ல சும்மாதானே இருக்கீங்க?" -

தீவிரமாக உழைக்கும் மற்ற வயதுக்காலங்களில் மிகச் சாதாரணமாக ஒலிக்கும் இந்த வசனம், பணிஓய்வு பெற்றவுடன் ஈட்டி போல் நெஞ்சில் பாயும் வார்த்தைகளாக இருக்கும். அதுவரை 'குடும்பத்தலைவர்' என்கிற பெருமையுடனும் அதிகாரத்துடனும் உலாவந்த நபர், ஒரே நாளைக்குள் பால்கனியில் வைக்கப்பட்டிருக்கும் பழைய டயருக்கு ஈடாக மதிக்கப்படுவது சோகம்தான். ''ஒரு காப்பி போட்டு எடுத்து வர்றதுக்கு எவ்ளோ நேரம்" என்று அதட்டி பந்தா காட்டப்பட்ட மனைவி தன்னுடைய இத்தனை வருட வன்மங்களையெல்லாம் பழிதீர்த்துக் கொள்ளும் சமயமும் இதுவே.


இன்ஸீரன்ஸ் கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்று மாலை மரியாதையுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் வாரன் ஸ்மித், ஒரே நாளில் தானொரு செல்லாக்காசாக மாறிப்போவதை வேதனையுடன் உணர்கிறார். 42 வருடங்களாக 'பெயருக்கு' வாழ்ந்து வந்த தாம்பத்தியமும் சில நாட்களிலேயே மனைவி இறப்பதுடன் முடிவடைகிறது. இருக்கும் ஒரே மகளும் தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் காதலுனுடன் வேறொரு ஊரில் வசிக்கிறாள். 'சில நாட்களுக்காவது என்னுடன் தங்கேன்' என்பதற்கு தன்னுடைய இயலாமையைத் தெரிவிக்கிறாள். மனைவியின் பொருட்களை ஒழிக்கும் போது அவள் காதலருக்கு எழுதிய பழைய கடிதங்கள் கிடைக்கிறது. அந்தக் காதலர் ஸ்மித்தின் நண்பர்தான். வெறுத்துப் போகும் ஸ்மித் நண்பருடன் சண்டையிடுகிறார்.

மனைவியின் நினைவுகள் கூட எதிரியான சூழ்நிலையில்... தனிமையின் முழு உக்கிரத்தையும் அனுபவிக்கிறார். அதிலிருந்து விடுபட தான் வாழ்ந்த பழைய இடங்களுக்கு பயணப்படுவதும் தன்னுடைய மகள் திருமணத்தில் கலந்து கொள்ள செல்வதுமாக பின்னரான காட்சிகள் விரிகின்றன.

நின்று சிறுநீர் கழித்தால்  மனைவி ஆட்சேபிப்பதின் காரணமாக அமர்ந்து சிறுநீர் கழிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளும் ஸ்மித், மரணமடைந்த மனைவியின் பழைய காதல் தெரிந்தவுடன் ஏற்படும் முழுவெறுப்பு காரணமாக நின்று கொண்டே வன்மத்துடன் கழிவறை முழுவதும் சிறுநீர் கழிக்கும் காட்சி... ஒன்று போதும். ஜான் நிக்கல்சனின் அசாத்திய நடிப்பைப் புரிந்து கொள்ள.

இத்தனை வருடங்கள் ஆசையாய் வளர்த்த மகளை எவனோ ஒரு குறுந்தாடிக்காரன் கவர்ந்து செல்வதை அவரால் பொறுக்கவே முடிவதில்லை. தன்னுடைய விளையாட்டுப் பொருள் கைவிட்டுப் போவதை கண்டு பதைக்கும் ஒரு குழந்தை உணர்வையே அவரிடம் காண முடிகிறது. பெற்றோராக, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பெற்றோராக இருப்பவர்கள்தான் இதை பரிபூரணமாக உணர முடியும்.

பொய் சொல்லியாவது இந்தத் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று ஸ்மித் இறுதிவரை போராடுவதும் கையும் களவுமாக மாட்டிக் கொண்டு மகள் முன் ஆத்திரத்துடன் விவாதிப்பதும்... என இது முழுக்க ஜாக் நிக்கல்சன் ஏரியா. மனிதர் அசத்தியிருக்கிறார்.

இதே பெயரில் அமைந்த நாவலிலிருந்து உருவாகியிருக்கும் இத்திரைப்படம் வயதானவர்களுக்கு மட்டுமான படமல்ல; வயதாகப் போகிறவர்களுக்குமானது. 

suresh kannan

11 comments:

Vijayashankar said...

மிகவும் சமீபத்தில் HBOவில் About Schmidt பார்த்த போது என்னுள் நடந்த மன விளைவுகளை, அப்படியே நீங்களும் படமாக்கியுள்ளீர்கள் எழுத்தால். நம் இருவருக்கும் ஒரே வயதிருக்கலாம்... இந்த எண்ணம் வர!

Ashok D said...

உத்துப்பாத்தாக்க(வாழ்க்கையை) ஆண் ஒரு பரிதாபமான ஜீவராசியை போலத்தான் தெரிகிறது...

ரா.கிரிதரன் said...

நடிப்பு ராட்சசன் - சரியான டைட்டில் :)

அறிமுகத்துக்கு நன்றி. Arthur Miller எழுதிய Death of a Travelling Salesman நாடகமும் இதே கருவைக் கொண்டதே.

பிச்சைப்பாத்திரம் said...

//நம் இருவருக்கும் ஒரே வயதிருக்கலாம்..//

சினிமா பற்றி எழுதுவதில் இப்படியெல்லாம் ஓர் ஆபத்து இருக்கிறதா? :) நான் ரிடையர் ஆக இன்னும் இருபத்தைந்து வருடங்கள் உள்ளன அய்யா! :)

எனிவே உங்கள் பாராட்டிற்கு நன்றி.

butterfly Surya said...

நன்றி சுரேஷ்.

மிகவும் அருமையான பதிவு. இதுவரை இந்த படம் பார்க்கவில்லை. கண்டிப்பாக பார்க்க வேண்டும்.


ஆனால் இன்னும் ஐந்து வருடத்தில் ரிடையராக வேண்டும் என்பதே என் அவா. (வயதால் அல்ல)

உண்மைத்தமிழன் said...

ஓகே பிரதர்.. பார்த்திரலாம்..!

ஆபிதீன் said...

//பால்கனியில் வைக்கப்பட்டிருக்கும் பழையடயருக்கு //
'அதப்போயி அவ்ளோ ஒசரத்துலெயா வப்பாஹா?' என்று கேட்கிறாள் அஸ்மா.

- ஆபிதீன் -

DREAMER said...

பார்க்க தூண்டும் பரிந்துரை... நன்றி..!

-
DREAMER

Subbaraman said...

நல்ல அறிமுகம், சுரேஷ் கண்ணன். ஜாக் நிக்கல்சனுக்கு சரியான அடைமொழி :)

லேகா said...

//ஜாக் நிக்கல்சன் ஏற்கெனவே ஒரு நடிப்பு ராட்சசன்//

:-)

Tnx for sharing!!

Shankar Ayyachamy said...

Pls also see As good as it gets and share your thoughts....