Saturday, July 14, 2012

பில்லா 2-ம் ஆட்டு மூளைகளும்


பில்லா 1 -ஐ இன்னும் நான் பார்க்கவில்லை (நயனதாராவின் அந்த புகழ்பெற்ற பிகினி காட்சி தவிர்த்து) என்கிற அதிமுக்கிய குறிப்போடு இந்தப் பதிவை துவங்க  விரும்புகிறேன்.

உள்ளடக்கம் எதுவாக இருக்கும் என்கிற தெளிவான யூகத்தை வைத்துக் கொண்டே இது போன்ற வணிகநோக்குத் திரைப்படங்களை படம்வெளிவந்தவுடனேயே அடித்துப் பிடித்து பார்த்துவிட்டு பின்பு அதில் நொட்டை & நொள்ளை சொல்லிக் கொண்டிருப்பதில் உள்ள ஆர்வம் எனக்கு எப்போதோ விட்டுப் போயிற்று. அதையெல்லாம் கடந்து வந்து விட்டேன். ஆனால் பாருங்கள். விதி வலியது. பில்லா -2ஐ ஓசியில் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. இலவசமென்றால் ஓட்டை விழுந்த ஆணுறையைக் கூட ஒன்றுக்கு இரண்டாக வாங்கி வைத்துக் கொள்கிற தமிழ் மரபிலிருந்து வந்த காரணத்தினால் சற்றும் யோசிக்காமல் ஒப்புக் கொண்டேன். அது மட்டுமில்லாமல் அஜித் குமார் மேல் எப்பவுமே எனக்கொரு சாப்ட் கார்னர் உண்டு. இந்த ஆளின் ஸ்மார்ட்மெண்ட்ஸ் மேல் ஒரு ரகசியக் காதல் உண்டு. 'வெள்ளையாய் இருக்கறவன் பொய் சொல்ல மாட்டாண்டா' என்கிற பொதுப்புத்தி சார்ந்த கருத்துத் திணிப்புகள் உறைந்த ஆழ்மனதில் 'சிவப்பு அழகு' என்கிற உணர்வு பிரக்ஞையை மீறி தன்னிச்சையாய் மேலெழுவதும் ஒரு காரணமாயிருக்கலாம். (நான் சரியாத்தான் பேசறனா).

ஒரு பக்கா கமர்சியல் படத்தை பார்க்கப் போகிறோம் என்று தெளிவாக தெரிந்திருந்ததாலும்  ஒரு பிரபலநடிகரின் படத்தின் முதல் நாளில் ரசிக கனவான்கள் செய்யப் போகும் உற்சாக அபத்தங்களைப் பற்றி அறிந்திருந்ததாலும் ஒரு கூட்டுக்கலவிக்கு என்னை விரும்பி ஒப்படைப்பதற்கான தயார்ப்படுத்துதலுடனான மனநிலையுடன்தான் சென்றிருந்தேன். படம் எத்தனை திராபையாக இருந்தாலும் அதைப் பற்றி மூச்சு விடக்கூடாது என்கிற உறுதியுடன்தான் இருந்தேன். 'பிரதியில் உறைந்திருக்கும் நுண்ணரசியல். கலையின் அரூபத்தன்மை, கோட்பாடுகளை மீறின கோளாறுகள் என்றெல்லாம் பில்டப்புடன் எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனாலும் பாருங்கள்..... முடியல..

தமிழ்த் திரைப்பட இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களையும் கதை/திரைக்கதை உருவாக்க குழுவினர்களையும் நான் மன்றாடிக் கேட்டுக் கொள்வது...இன்றைக்கு ஒரு சராசரி தமிழ் சினிமா பார்வையாளனுக்கு அடுத்த நிலையில் உள்ளவன் (எனக்குள் இருப்பவனையும் உள்ளிட்டு) கூட சில பல நல்ல திரைப்படங்கள் பார்த்து....முன்னேறி விட்டான் ஐயா. அச்சுப்பிசகாத மசாலா என்றால் கூட அதில் சிறிதாவது புத்திசாலித்தனத்தையும் சுவாரசியத்தையும் ஒரிஜினாலிட்டியையும் எதிர்பார்க்கிறான். இன்னமும் அவனை ஆட்டுக்கு இருக்கிற மூளை கூட இல்லாதவன் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது மிக அநியாயம். உங்களின் அடுத்த கதை விவாதங்களில் இதை சிறிதாவது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுமாறு மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்.

()

பில்லா -2ல் கதை என்று ஒரு சுக்குமில்லை. பரவாயில்லை. கதையை வைத்துக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்கிற பாலபாடத்தை  தாராளமாக மீறிக் கொள்ளலாம். தவறேயில்லை. ஆனாலும் பாருங்கள். இந்த திரைக்கதை என்றொரு சமாச்சாரம் இருக்கிறதே. அதையாவது வலிமையாக சுவாரசியமாக உருவாக்க வேண்டும். உச்சபட்ச உழைப்பை அதற்கு செலுத்த வேண்டும். இப்படி எதற்குமே மெனக்கெடாமல் ஒரு பிரபல நடிகரின் பிம்பத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் வேகாத சப்பாத்தி சுடுவேன் என்று அடம்பிடித்தால் எப்படி?

அஜித் குமார் செம ஸ்டைலாக இருக்கிறார். 'அழுக்குச் சட்டை போட்டாலும் அழகாய்த் தோன்றும் ஆண்மகன் எவனோ அவனே. காதல் மன்னன்' என்று வைரமுத்து எழுதின மாதிரி லுங்கி சட்டையிலும் படு கிளாமராய் இருக்கிறார். மருத்துவர் அறிவுறுத்தலோ அல்லது அடு்த்த படத்திற்கான தயார்ப்படுத்துதலோ என்னவோ... அவர் தாராளமாய் 'வாக்கிங்' போய் உடம்பை திடமாக வைத்துக் கொள்ளட்டும். ஆனாலும் படப்பிடிப்பிலும் நடந்து கொண்டே இருந்தால் எப்படி ஐயா?. சரி விடுங்கள். சில காட்சிகளில் 'தல' ஸ்மார்ட்டாய்தான் இருக்கிறது.

திரையரங்கில் பின்இருக்கையில் இருப்பவரிடம் 'காலை கொஞ்சம் இடிக்காம இருங்க' என்று சொல்லி விட்டுத் திரும்பும் அந்த சொற்ப தருணத்திற்குள், பில்லா திரையில் குறைந்தது சுமார் எண்பது பேரை 'போட்டுத் தள்ளுவதெல்லாம்' சற்று அதீதம்தான். பாப்கார்ன் சமயம் வருவதற்குள் சுமார் ஐநூறு பேராவது பரலோகம் போய்ச் சேர்கிறார்கள். மனித இருப்பின் நிச்சயமின்மை குறித்தும்  அதிகரித்துக் கொண்டே வரும் உலக மக்கள் தொகை குறித்த கவலை சார்ந்த ஆசுவாசமும் ஒரே நேரத்தில் தோன்றுகின்றன.

சோமாலிய கடற்கொள்ளையர்கள் கூட செய்யத் தயங்கும் காரியங்களையெல்லாம் கூட பில்லா அசால்ட்டாக ஏற்றுக் கொள்கிறார். அவர் கூட ரெண்டே ரெண்டு பேர்தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யாராவது இரண்டு மாஃபியா ஆட்கள் ஒரு கஷ்டமான அஸென்மென்டை பற்றி பேசிக் கொண்டிருந்தால் அதை (ஒட்டுக்) கேட்டுக் கொண்டிருக்கும் பில்லா உள்ளே மூக்கை நுழைத்து அதை அசால்ட்டாக தான் ஏற்றுக் கொள்கிறார்.

()

பில்லாவின் இந்த அசகாய சூரத்தனத்தை இப்படியாக கற்பனை செய்துப் பார்த்தேன்.

பாஜகவின் தலைமை அலுவலக முகாம். உயர்மட்ட தலைவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

"என்னய்யா.. இந்த மன்மோகன் சிங்கை கஷ்டப்பட்டு எப்படி கலாய்த்தாலும் சூடு  சொரணையே இல்லாமல் ஏதோ "பெங்காலி ஸ்வீட் சாப்பிடறீங்களா".. ன்னு கேட்டா மாதிரியே மழுப்பலா சிரிக்கிறாரே. இந்த ஆளை என்னதான்யா பண்றது.. நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறா மாதிரி நாலே கேள்வி கேட்கணும். இப்படிச் செய்ய யாருமே இல்லையா?"

பக்கத்திலேயே பான்பூரி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பில்லாவிடம் அவரது வலது கை கேட்கிறார். "என்ன பில்லா.. சும்மா இருக்கீங்க.. எத்தனையோ பாத்துட்டம். ஒத்துக்கங்க".

சற்று யோசித்து விட்டு பில்லா சொல்கிறார். "வேணாம். ரொம்ப கஷ்டம்."

()

என்றாலும் பல அசந்தர்ப்பமான சூழ்நிலைகளில் வலியச் சென்று மாட்டிக் கொள்கிறார். மதியத்திற்கு தயிர்சாதமும் பூண்டு ஊறுகாயும் சாப்பிடும் நடுத்தரவர்க்க குமாஸ்தா மனோநிலை வாய்த்த நாமே பலவற்றை எளிதாக யூகிக்க முடிகிற போது ... இண்டர்நேஷனல் வெப்பன் பிஸினஸ் செய்யத்துணியும் பில்லா இப்படி ஒரு 'கோயிஞ்சாமி'யாய் இருப்பதை பார்க்க பரிதாபமாய் இருக்கிறது. கூடவே இருக்கும் நண்பன் காட்டிக் கொடுப்பது.. முன்னாள் பாஸிடம் இருந்த காதலி துரோகம் செய்வது... என்று பல அபத்தமான கிளிஷேக்கள்...


படத்தில் பாராட்ட வேண்டிய விஷயமே இல்லையா என்றால் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. பாடல் காட்சிகளில் பிரதான நடன நங்கைகள் முதற்கொண்டு சுற்றி ஆடுபவர்கள்.. (ஒரு பிரேமிலேயே மனதைக் கொள்ளையடித்த அந்த பொன்னிற முடியழகி உட்பட) என்று எல்லா கன்னிகைகளும் அளவெடு்த்துச் செய்தது மாதிரி 'நச்'சென்று இருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதம் வைத்து அழகு பார்க்கலாம் போலிருக்கிறது. அதிலும் பில்லாவின் so called நண்பியாக வரும் அரபு - பிரேசில் கூட்டுத்தயாரிப்பான புருனா அப்துல்லா ஸ்கேலில் அளவெடுத்துச் செய்தது மாதிரி நேர்கோட்டு வாளிப்புடன் இருக்கிறார். இவர் பிகினியில் வரும் காட்சிகளில் மூச்சு திணறுகிறது. (மேலேயுள்ள புகைப்படத்தில் அஜித்திற்கு இருபக்கமுமாக நிற்பதில்  இடதுபக்கத்தில் உள்ள, என்னை ஒரு வாரம் தூங்க விடாமல் செய்த சொர்க்கத்தை கவனியுங்கள்)

பார்வதி ஓமனக்குட்டன் என்றொரு பரிதாப ஜீவனும் இதில் நடித்திருக்கிறது. ஏசியாநெட் ரியாலிட்டி ஷோவில் வந்திருந்தால் கூட இன்னமும் அதிக காட்சிகளில் தோன்றியிருக்கலாம்.

கில்லி படத்திலிருந்தே ராஜசேகரின் அதிரடி காமிராவை அதிகம் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன். மனிதர் குறைவைக்கவில்லைதான். ஆரம்பக்காட்சிகளில் கச்சிதமாக திருநெல்வேலித்தமிழ் பேசும் இளவரசு பிள்ளைவாளை இன்னும் கூட பயன்படுத்தியிருக்கலாம். படம் அந்தரத்திலேயே பறந்து கொண்டிராமல் கொஞ்சம் கீழே வந்திருக்கும்.

வசனம் இரா.முருகன்.. "நல்லவங்களைக் கண்டுபிடிக்கறதுதான் கஷ்டம்" "ஆசை இல்ல அண்ணாச்சி. பசி" போன்ற அபூர்வ பஞ்ச்சுக்களில் தியேட்டரில் விசில் பறக்கிறது. "நீ 'போ' ன்னு சொல்லுவேன் -னு முன்னாடியே தெரியும்' போன்ற மயிலிறகுள் ஆங்காங்கே. ஆனாலும் இந்த 'போராளி - தீவிரவாதி' கான்செப்டைத்தான் என்ன முயன்றாலும் விளங்கிக் கொள்ள இயலவில்லை.

படத்தில் வில்லன் துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையே வைத்திருந்தாலும் கூட அதில் ஒன்றையாவது பயன்படுத்தாமல் இன்னமும் டுஷ்யூம் டுஷ்யூம் என்று கையால் சண்டை போடுவது... ஹெலிகாப்டரில் உயிரைப் பணயம் வைத்து தொங்குவது.. போன்ற காமெடிகளையெல்லாம் எப்போதுதான் கைவிடுவார்கள் என்று தெரியவில்லை.

தொழில்நுட்பமே சினிமாவாகி விடாது என்பதை பிடிவாதமாக ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

()

ராமேஸ்வர அகதிகள் முகாமில் படம் துவங்கும் போது சுவாரசியமாக இருக்குமோ என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் "ஹலோ மிஸ்டர்.. நீ பார்ப்பது தமிழ் சினிமா" என்று தலையில் தட்டி உட்கார வைத்து விடுகிறார்கள். ஆனால் அகதிகள் முகாமை ஏதோ சுவாரசியமான டீக்கடை பெஞ்ச் மாதிரி சித்தரித்திருப்பதெல்லாம் அநியாயம். "நாங்கதான் கஷ்டப்படறோம். உங்க அக்காதான் மெட்ராஸ்ல இருக்காங்க இல்ல. நீ அங்க போய் இருக்கலாமே? என்று அஜித்தி்டம் ஒரு பாத்திரம் பேசுகிறது. யதார்த்தத்தில் அகதிகள் முகாமில் இருந்து வெளியேறுவது எல்லாம் இத்தனை எளிதா என்று தெரியவில்லை.

குடும்ப புகைப்பட ஆல்பத்தையும் சில பின்னணிக் காட்சிகளையும் வைத்து நகர்த்தியிருக்கும் அந்த ஆரம்ப டைட்டில் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. 'உனக்குள்ளே மிருகம்' பாடலை ஒரு கிராஃபிக் நாவல் போன்ற தோற்றத்துடன் உருவாக்கியிருப்பது நன்றாக இருந்தது. படத்தின் ஒரே  மெலடியான 'இதயம்...இந்த இதயம்...(ஸ்வேதா பண்டிட் அருமையாக பாடியிருக்கிறார்) படத்தில் காணவில்லை. (ஓமனக்குட்டன் உருகி உருகி பாடியிருப்பாராக்கும்). படத்தின் இசை ஆல்பத்தில் எனக்கு ரொம்ப பிடித்தது....'டான்... டான்... என்று வரும் Gangster பாடல்தான். ஆனால் இதை ஆரம்பத்திலேயே பயன்படுத்தியிருக்கலாம். படத்தின் இறுதியில் யுவன் அஜித்திற்கு போட்டியாக கோட், கண்ணாடி போட்டுக் கொண்டு அசத்தலாக தோன்றுகிறார்.

ஆனால் 'படம் எப்போதடா முடியும்' என்று கொலைவெறியுடன் அவசரமாக கலைந்து செல்லும் ரசிகர்கள் காரணமாக இந்தப் பாடலை சாவகாசமாக பார்க்க முடியவில்லை.

()

படத்தின் இயக்குநர் 'சக்ரி டோலட்டி'. யாரென்று யோசித்தால் 'சலங்கை ஒலி' யில் நடனக்கலைஞர் கமலை சொதப்பலாக படமெடுத்த சிறுவன் என்பது நினைவிற்கு வந்தது. இவர் அப்போதே இப்படித்தான் என்பதையாவது அஜித் சூசகமாக கவனித்திருக்கலாம். (இதை நிச்சயம் கிண்டலாக எழுதவில்லை. இயக்குநரின் அசாத்தியமான உழைப்பு வீணாகிப் போன வேதனையுடன்தான் எழுதுகிறேன்).

"என்னோட வாழ்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும்.. ஏன்.. ஒவ்வொரு நொடியும் நானா.. செதுக்கினதுடா". இது படத்தில் பில்லா பேசும் வசனம்.. சரி 'தல' என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். படத்தை உருவாக்கினவர்கள் சற்றாவது மெனக்கெட்டு ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருந்தால் இந்த மகா சொதப்பலான படம் சற்றாவது உருப்படியாய் அமைந்திருக்கும்.

Final verdict: படத்தில் 'தல' இருக்கிறது.மூளைதான் இல்லை. :)

suresh kannan

25 comments:

Unknown said...

// 'வெள்ளையாய் இருக்கறவன் பொய் சொல்ல மாட்டாண்டா' என்கிற பொதுப்புத்தி சார்ந்த கருத்துத் திணிப்புகள் உறைந்த ஆழ்மனதில் 'சிவப்பு அழகு' என்கிற உணர்வு பிரக்ஞையை மீறி தன்னிச்சையாய் மேலெழுவதும் ஒரு காரணமாயிருக்கலாம். (நான் சரியாத்தான் பேசறனா).//
ஸ்ஸ்ஸ் ஸ பா! :-) ரொம்பச்சரி!

என்னா விமர்சனம் பாஸ்! செம்ம ரகளை! என்னதான் நீங்க நொந்து போனாலும், எங்களுக்காக இப்படியான படங்களை நீங்கள் தொடர்ந்து பாக்கணும் பாஸ்! :-)

நீங்கள் சொல்வது அவ்வளவும் உண்மை! படைப்பாளிகள் பார்வையாளனை ஆட்டு மந்தைகளாகவே நினைத்துக் கொள்வதை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

ம.தி.சுதா said...

படத்தில் வசனகர்த்ததவையே எல்லோரும் குறையின்றிச் சொல்கிறார்கள்.... ஆதுபோல் ஒளிப்பதிவையும் யாரும் கிண்டல் செய்யவே இல்லை...

ஆனால் பாடல்கள் பற்றி அவ்வளவாக கூறவே இல்லை...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

Joe said...

சிட்னி-ல ரெண்டு திரையரங்குகளில் வெள்ளியன்று வெளியானது. நாளைக்கு குடும்பத்தோடு போகலாம்னு நினைத்தேன், திட்டத்தைக் கைவிட்ரலாம்னு யோசிக்க வைச்சிட்டீங்க.

வவ்வால் said...

சுரேஷ் கண்ணன்,

புருனோ அப்துல்லா தூக்கம் கெடுக்கும் அளவுக்கா இருக்கு, ரொம்ப முத்தலா தெரியுதே, நீங்க முகம் தவிர மத்தது பார்த்து மயங்கிட்டிங்களோ :-))

ஹெலிகாப்டரில் எல்லாம் நிஜமா தொங்க முடியாது, பாதுகாப்பு பெல்ட் மற்றும் கேபிள் போட்டு இருந்தாலும், அதன் பிளேடுகள் சுழலும் வேகத்தில் அடிக்கும் காற்றில் எல்லாம் நிற்க முடியாது, படம் ஆக்குவதும் சிரமம், வழக்கம் போல ஹைப் ஏற்ற டூப் போடவில்லை என சொல்லிக்கொள்வது தான்.

மலையாள நடிகர் சத்யன் இப்படித்தான் ஓவர் கான்பிடென்ஸில் ஹெலிகாப்டரில் தொங்க போய் கீழே விழுந்து செத்துப்போனார்னு படிச்சு இருக்கேன், அதற்கு அப்புறம் யாரும் ரிஸ்க் எடுப்பதே இல்லை.

//"நாங்கதான் கஷ்டப்படறோம். உங்க அக்காதான் மெட்ராஸ்ல இருக்காங்க இல்ல. நீ அங்க போய் இருக்கலாமே? என்று அஜித்தி்டம் ஒரு பாத்திரம் பேசுகிறது. யதார்த்தத்தில் அகதிகள் முகாமில் இருந்து வெளியேறுவது எல்லாம் இத்தனை எளிதா என்று தெரியவில்லை. //

அப்படி வெளியில் வரலாம் ,குவாரண்டைன் பீரியடுக்கு அப்புறமாக, ஆனால் சில விதிகள் இருக்கு, புலியா இருக்க கூடாது, இந்திய முகவரி ஒன்று கொடுக்கணும் என்பது போல, அப்படி வெளியில் வந்துவிட்டால்,அரசு உதவிகள் எதுவும் கிடைக்காது, அதற்காகவே பலரும் முகாமில் இருக்கிறார்கள். உறவினர்கள் தமிழ் நாட்டில் அதிகம்ம் இருக்கும் சிலர் வெளியில் வந்து இந்திய குடியுரிமை எல்லாம் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

தாயகம் திரும்பியோர் மீள்குடியேற்ற அலுவலகம்னு ஒன்று முன்னர் , கே.கே நகர் உதயம் தியேட்டர் அருகே இருக்கும் ஹவுசிங்க் போர்ட்டு காம்ப்ளக்சில் இருந்துச்சு , இன்னும் இருக்கா தெரியலை.அரசின் முடிவைப்பொறுத்து தான் முகாம் விட்டு போக முடியும்,ராஜிவ் கொலை வழக்கில் சிக்கிய சாந்தன் சூளைமேட்டிலோ என்னவோ வசித்த போது தானே கைது செய்யப்பட்டார், அப்போ சண்டை உக்கிரமாக இருந்த காலம்,அப்போவே முகாம் விட்டு வர இயலும் என்பதற்கு உதாரணம் .

Doha Talkies said...

விமர்சனம் மிகவும் அருமையாக இருந்தது நண்பரே.
ஆச்சர்யமான விமர்சனம். வேறு மாதிரி எழுதி இருப்பீர்கள் என்று எண்ணி வந்தேன்.
surprise Shock ஆக இருந்தது.

Arun Vaidyanathan said...

சுரேஷ் - உங்களது விமர்சனங்கள் தொகுக்கப்பட வேண்டும். நகைச்சுவை, எள்ளல்...ஆனால், சொல்ல வந்த விஷயத்தில் தெளிவு...சரியாத் தான் பேசறீங்க, எழுதறீங்க ;)

- அருண் வைத்யநாதன்

PRABHU RAJADURAI said...

”மூளையக் கழற்றி பக்கத்தில் வைத்துக் கொண்டு பார்க்க வேண்டிய படம்” இது பில்லா படம் விமர்ச்னத்தில் எழுதப்பட்டது. ஆனால், 30 வருடங்களுக்கு முன்னர் துக்ளக்கில்!
நாம இன்னமும் முன்னேறவேயில்லையோ?

ஹரன்பிரசன்னா said...

தீவிரவாதி போராளி வசனம் தவறானது.

இலங்கைத் தமிழர் ஒரு வார்த்தைகூட இலங்கைத்தமிழ் பேசுவதில்லை. அதிலும் பொறத்தாலன்னா என்ன என்று கேட்கிறார்.

சின்ன வயசில் அக்காவைப் பார்த்தது என்கிறார். அவரிடம் என்ன வாங்கிட்டு வந்த என்று அக்காவின் மகள் கேட்கும்போது, அவனைப் பார்க்கும்போதெல்லாம் இப்படித்தான் எதாவது கேட்கிற என்கிறார் அக்கா. அடுத்த வசனமே மாமா வரவே இல்லைன்னு வருத்தப்பட்டியே, முதல் தடவை வரும்போது ஏன் இப்படிப் பேசுற என்று வருகிறது. குழப்பம்.

அட்டகாசமான மேக்கிங் இப்படி வீணாகிப் போனது சோகம். ஆயுதத்தைக் கடத்துறோம் என்பதோடு இயக்குநர் நின்றுகொண்டு, அதை எப்படி லாஜிக்காக செய்வது என்பதை இரா முருகன் போன்ற எழுத்தாளர்களிடம் விட்டுவிடவேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் மொக்கையாக வரும்.

Rizi said...

சொல்லப்பட்டது யாவும் உண்மை..

நானும் இப்படம் சரியில்லன்னு பதிவு போட்டன்..அப்பப்பா தல ரசிகர்களிடமிருந்து கொலை மிரட்டல் எல்லாம் வருது உங்களுக்கு வரல்லயா அண்ணாச்சி..

//எல்லா கன்னிகைகளும் அளவெடு்த்துச் செய்தது மாதிரி 'நச்'சென்று இருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதம் வைத்து அழகு பார்க்கலாம் போலிருக்கிறது.//
செம செம

நானும் அந்த பாடலை ரொம்ப ரசித்தேன் ஹி ஹி படத்துல அது ஒன்னுதான் உருப்படி..

புருனோ அக்காவ நீங்க குளோசப்பிலோ மேக்கப் இல்லாமலோ பார்க்கவில்லை போலும்.

ananya said...

very interesting to read. laughed for a long time and that too for a long time.......... thanks

குரங்குபெடல் said...

"பில்லா -2ஐ ஓசியில் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. இலவசமென்றால் ஓட்டை விழுந்த

ஆணுறையைக் கூட ஒன்றுக்கு இரண்டாக வாங்கி வைத்துக் கொள்கிற "

முடியல . . . தம்பி


" கருத்துத் திணிப்புகள் உறைந்த ஆழ்மனதில் 'சிவப்பு அழகு' என்கிற உணர்வு பிரக்ஞையை

மீறி தன்னிச்சையாய் மேலெழுவதும் ஒரு காரணமாயிருக்கலாம். "


ஐயோ தாங்க முடியல . . . தம்பி

" கில்லி படத்திலிருந்தே ராஜசேகரின் அதிரடி காமிராவை அதிகம் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன். "

கில்லி காமிரா மேன் கோபிநாத் என்று நெனக்கிறேன்

பிச்சைப்பாத்திரம் said...

நன்றி நண்பர்களே..

கல்வெட்டு: மேலதிக தகவல்களுக்கு நன்றி.

பிரபு ராஜதுரை: இன்னமும் மாறாமலிருப்பதற்கு நாமும் காரணம்தானே? :)

குரங்குபெடல்: கில்லி ஒளிப்பதிவாளர் கோபிநாத் - தான். தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன்.

முல்லை மயூரன் said...

Gangster song 100% copy

கார்க்கிபவா said...

ரணகளம்.. :)))))))

R. Jagannathan said...

Your review made an interesting read! Thanks, - R. Jagannathan

enRenRum-anbudan.BALA said...

சுரேஷ்,

சினிமா விமர்சனத்தை விமரிசையாக அதே சமயம் நேர்த்தியாக செய்வதில் உங்களை மிஞ்ச இங்கு யாரும் கிடையாது என்பதை இன்னொரு முறை நிரூபித்து இருக்கிறீர்கள்! To tell you honestly, ஒரிஜினல் பில்லா, இந்த 2 பில்லாக்களையும் விட பல மடங்கு மேல்! இதை நாஸ்டால்ஜியாவில் எல்லாம் சொல்லவில்லை!

பி.கு: இதை வாசித்த பிறகு, எனக்கு உங்களது “ஏய் - ஒரு ஆய்” என்ற பன்ச் லைன் ஞாபகத்துக்கு வந்தது ;-)

சின்னப்பயல் said...

என்ன இந்தப்பறத்தம் பறத்தீட்டீஹ..?! :-)

சின்னப்பயல் said...

நேரமிருந்தா கொஞ்சம் நான் எழுதினதயும் வாசீச்சுப்பாருங்கோவென்..! :-))

http://chinnappayal.blogspot.com/2012/07/2.html

Anonymous said...

Sir,

Gilli Cinematographer id Gopinath not R.D Rajashekar

Anonymous said...

நான் ஈ பாருங்கள்- ராஜ்குமார்.

Jegadeesh Kumar said...

சுரேஷ் செம ஃபார்மில் இருக்கிறீர்கள். படத்தை பார்த்தவுடன்தான் உங்கள் விமர்சனம் படித்தேன். படம் எனக்குப் பிடித்திருந்தது. அஜித் குமார் மூளை அற்ற ரசிகர்களில் நானும் ஒருவன். ஆனால் உங்கள் விமர்சனம் படத்தை விட நன்றாக இருந்தது.

ரொம்பநாளாயிற்று இப்படி ஒரு பகடியைப் படித்து.

revithambi said...

gilli padaththin cameraman rajasekar alla gobinaath.

Unknown said...

http://superwoods.com/news-id-billa-billa-2-29-07-122316.htm

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வந்தேன்.

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post.html) சென்று பார்க்கவும். நன்றி !

நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி.

Anonymous said...

https://plus.google.com/108095796573485839225/posts/DLqKBtMLwQy#108095796573485839225/posts/DLqKBtMLwQy