Sunday, July 08, 2012

வேளச்சேரி - குறும்படம்

'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் சற்று நேரம் முன்னர் ஒரு குறும்படத்தைப் பார்த்தேன்.

நண்பரொருவர் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருந்ததால் அவர் சென்ற பின்னர் இடையிலிருந்துதான் அந்தப் படத்தைப் பார்க்க முடிந்தது. அதனால் படத்தின் தலைப்பும் தெரியவில்லை. ஆனால் பார்த்த உடனே இதைப் பற்றி சிறு குறிப்பொன்றை இட வேண்டும் என்கிற உத்வேகத்தை தந்ததுதான் இக்குறும்படத்தி்ன் பலம் என்று சொல்ல வேண்டும்.

படத்தின் ஆரம்ப, இடைக்காட்சிகள் 'காதல்' திரைப்படத்தை நினைவுப்படுத்துவது போல் அமைந்திருந்தாலும் இறுதிக் காட்சியில்தான் படம் இன்னொரு பரிமாணத்தில் அசத்தியிருக்கிறது.

தான் காதலிக்கிற பெண்ணை ஊரிலிருந்து அழைத்துக் கொண்டு நண்பனை நம்பி நகரத்திற்கு வந்து விடுகிறான் ஓர் இளைஞன். அவனை உடனே தொடர்பு கொள்ள முடியாததால் பீச், ஹோட்டல் என்று நேரத்தைக் கழிக்கிறான். நண்பன் சொன்னபடி இரவு 10.30 மணிக்கு பொதுதொலைபேசியிலிருந்து அவனை அழைக்கிறான். 'not reachable' என்றே வருகிறது. காதலியை ஒரு ஹோட்டலில் அமர வைத்து விட்டு நண்பன் இருக்கும் இடத்திற்கே செல்கிறான். ஆனால் அங்கிருக்கும் ஒரு வடநாட்டு இளைஞன் (இதை கவனத்தில் கொள்ளுங்கள்) மொழிக்குழப்பத்தினால் இவனை துரத்தி விடுகிறான்.

ஆனால் இவனும் விடாப்பிடியாக கதவைத்தட்ட இன்னொரு தமிழ் இளைஞன் வந்து இவனுக்கு உதவுகிறான். உதவுகிற இளைஞன் தருகிற மொபைல் மூலம் நண்பனிடம் பேசின பிறகுதான் தான் தவறான முகவரிக்கு வந்திருப்பதை உணர்கிறான். குழப்பமெல்லாம் சரியாகி உதவின இளைஞனுக்கு நன்றி சொல்லி வெளியே செல்ல கதவைத் திறக்கிறான்.

இங்குதான் படம் இன்னொரு திறப்பிற்குள் செல்கிறது.

கதவைத் திறக்கிற இளைஞன் எதனாலோ தாக்கப்படுவதோடு காட்சி blackout ஆகிறது. பிறகான காட்சியில் அந்த அறையில் இருக்கும் அனைத்து இளைஞர்களும் காவல் துறையினரால் சுடப்பட்டிருப்பதாக காட்டப்படுகிறது. தான் சுட்ட இளைஞர்கள் அனைவரும் அப்பாவிகள் மாதிரிதான் தெரிகிறார்கள் என்பதை காவல்துறை அதிகாரியே தன்னுடைய உயர் அதிகாரிக்கு தெரிவிக்கிறார். என்றாலும் வேறு வழியில்லை. தான் தேடி வந்த வங்கிக் கொள்ளையர்கள் அவர்கள்தான் என்பதை 'வழக்கம் போல' ஊடகங்கள் உதவியுடன் காவல்துறை நிறுவுகிறது.

அந்தப் பெண் ஹோட்டலில் மேஜையில் தலைகவிழ்ந்து இன்னும் காத்திருப்பதுடன் படம் நிறைகிறது.
 
சில மாதங்களுக்கு முன் வேளச்சேரியில் சில வடநாட்டு இளைஞர்கள் 'வங்கிக் கொள்ளைக்காரர்கள்' என்று காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை இக்குறும்படம் விமர்சிப்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதிகார வர்க்கத்தினர் தவறாகவோ அல்லது தவறான பாவனையில் எடுக்கும் முடிவுகள் எப்படி ஒரு சாமானியனை நேரடியாக அல்லது மறைமுகமாக பாதிக்கும் என்பதை இதை விட அருமையாக சொல்லி விட முடியாது.

அந்தக் காதலர்கள் கடற்கரையில் பதட்டத்துடன் பாவமாக அமர்ந்திருக்க சுற்றியுள்ள மற்றவர்கள கடற்கரை சூழலை சந்தோஷத்துடன் கொண்டாடும் அந்த contrast நன்றாக பதிவாகியுள்ளது. Protagonist  ஆன நடித்துள்ள இளைஞன் சிறப்பாக நடித்துள்ளான்.

தொடர்புள்ள நிகழ்ச்சியில் 'Cop Story' வகையில் உருவாக்கப்பட வேண்டிய படம் போல. அந்த விஷயத்தை படம் தவற விட்டதையும் அதை எப்படி subtle ஆக உபயோகத்திருக்கலாம் என்பதை இயக்குநர் பிரபுசாலமன் குறிப்பிட்டது  பொருத்தமாகவும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் இருந்தது.

சொல்ல வந்த செய்தியை ஒரு shocking உடன் சொன்ன வகையில் சிறப்பான குறும்படம்.  அழுத்தமாக பரிந்துரைக்கிறேன். இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் குறும்படத்தின் பெயரை பகிர்ந்து கொண்டால் நன்றி.

suresh kannan

8 comments:

பைத்தியக்காரன் said...

சுக,

குறும்படத்தின் பெயர் தெரியவில்லை.ஆனால், இதற்கு ஸ்கிரிப்ட் எழுதியவரை தெரியும். நீங்களும் அவரை அறிவீர்கள்.

யெஸ், இந்த குறும்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் -

நம்ம அதிஷா ;-)

வாழ்த்துகள் அதிஷா

சுரேஷ் கண்ணன் said...

தகவலுக்கு மிக்க நன்றி சிவராமன். கதை,திரைக்கதை,வசனம் நம்ம அதிஷா என்று அறிய மிக்க மகிழ்ச்சி. அதிஷா இன்னும் பல உயரங்களை அடைய என் வாழ்த்துகள்.

Baby ஆனந்தன் said...

நண்பரே, குறும்படத்தின் பெயர் "ஆருயிரே"...

மணி ஜி. said...

பிரபு சாலமன் சொன்ன பாயிண்ட் மிகச்சரி.. போலிஸ் வாகனங்களின் ஒலி மற்றும் பூட்ஸ் கால்களின் சரசரப்பு இவற்றின் மூலம் ஒரு திகிலை மெல்ல கிளப்பியிருக்கலாம்...

அதிஷா said...

என் படத்திற்கான முதல் விமர்சனம்.. அதுவும் சுகவிடமிருந்து.. ஆஹா... கௌரப்படுத்தியதற்கு நன்றி தலைவரே

chandru said...

story, screenplay & dialogue-Athisha.... mmmm.... ena thalaivare elamea neenga dhan pola...:)

சுரேஷ் கண்ணன் said...

நன்றி ஆனந்தன்.


மணிஜி: பிரபு சாலமன் குறிப்பிட்டது அந்தப்படம் cop story என்கிற பிரிவில் வைத்துப் பார்த்த போது பொருத்தமான குறிப்புகள்தான். ஆனால் படத்தின் மிகப் பெரிய பலமே அந்த shocking கிளைமாக்ஸ்தான். இடையிலேயே காவல்துறையினரின் புலனாய்வை காண்பித்திருந்தால் இறுதிக் காட்சிகள் இந்தளவிற்கான அழுத்தத்துடன் அமைந்திருக்காது என்பது என் பார்வை.

மீண்டும் வாழ்த்துக்கள் அதிஷா. கலக்குங்க. :)

குரங்குபெடல் said...

சமீபத்தில் மக்கள் தொலைக்காட்சி நடத்திய

குறும்படபோட்டியில் பரிசு பெற்ற நேருக்குநேர்

என்ற திரைபடத்தை காண நேரிட்டது . .

அதுவும் போலி மோதல் படுகொலைகளை பற்றியதே . .

வடநாட்டவர் ரூமை சுத்தம் செய்ய வந்த சலவை ஆள்

போலீசாரால் கொல்லப்பட்டு பின் அவர் தமிழர் என்று அறிந்து

அவர் கையில் குத்தியிருந்த பச்சை நெருப்பு மூலம்

அழிக்கபடுவது போல் முடித்திருந்தனர் . . .

பகிர்வுக்கு நன்றி

வாழ்துகள் அதிஷா