Friday, April 25, 2008

ஜெயமோகன் - இளையராஜா விருது விழா

இளையராஜா இலக்கியப் பெருமன்றத்தின் பாவலர் விருது விழா, சரியாக என்றால் மிகச் சரியாக மாலை 04.00 மணிக்கு விழா ஆரம்பித்து விட்டது போலிருக்கிறது. வெயில் பட்டையைக் கிளப்பும் இப்போதைய பருவத்தில் 04.00 மணிக்கு இலக்கியக் கூட்டம் நடத்தும் யோசனை வந்த அமைப்பாளர்களை ஹோமோ கொரில்லா இருக்கிற கூண்டுக்குள் அடைத்துவிடலாம் என்றிருக்கிறது. பின்னே? அத்தனை வெயில்.

'ஆரிய பவன்' என்றால் எளிதாக கண்டுபிடிக்கலாம். தெற்கு மாட வீதியில் கோக்குமாக்காக ஒளிந்து கொண்டிருந்த 'பாரதிய வித்யா பவனை', நான் அலுவலகத்து நுகத்தடியிலிருந்து விடுபட்டு கண்டுபிடித்து போவதற்குள் மணி ஐந்தாகி விட்டிருந்தது.

இந்த மாதிரி கூட்டத்திற்கெல்லாம் பிரியாணி பொட்டலம் தந்து லாரியில் அழைத்து வந்தால்தானே அரங்கு நிறையும் என்று அலட்சியத்துடன் உள்ளே நுழைந்தவனை ஆச்சரியப்படுத்தியது உள்ளே அமர்ந்திருந்த பெரும் கூட்டம். "வாங்க சார்" என்று பாசத்தோடு அழைத்த முரட்டு மீசைக்காரர் உடம்பெல்லாம் அன்பாக தடவி உள்ளே அனுப்பி வைத்தார். (அப்துல்கலாம்!) அப்போதுதான் பாரதிராஜா பேசி முடித்திருந்தார். அவர் என்ன பேசியிருப்பார் என்பதை எளிதாக யூகித்துவிடலாம். "இந்த ராசைய்யா... என் நண்பன், is a genius. ஒரு கொட்டாங்குச்சியில கம்பிய கட்டிக்கிட்டு ... இன்னிக்கு எங்கியோ போயிட்டான்.. பார்க்கவே பிரமிப்பா இருக்கு....marvellous...

இளையராஜா பேசும்போது "என் சொந்தப்பணத்தில் இந்த அமைப்பை நிறுவி படைப்பாளிகளை, கலைஞர்களை தேடி கெளரவித்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் உயர்ந்த கருத்துக்களை எழுத வேண்டும் என்று சொல்ல எனக்கு தகுதியோ, அருகதையோ கிடையாது. அவர்களுக்கே தெரியும்" என்றார்.

அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ஜெயகாந்தன் மிருதுவாகவே பேசினார். காலம் அவரை கனிய வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்ட சமயத்தில் ராணி சீதை ஹாலில் நடத்தப்பட்ட பாராட்டு விழா, நடிகர்களின் ரசிகர்மன்ற விழாக்களை நினைவுப்படுத்துவதாகவே எனக்குத் தோன்றிற்று. "என்னுடைய கோபத்தை கண்டு நானே அஞ்சிய காலம் உண்டு. பிறர்களிடமும் நிறைய கோபப்பட்டிருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் மீறி என் மீது நிஜமாகவே அன்பு செலுத்துபவர்களைக் காணும் போது நானும் பதிலுக்கு அன்பு செலுத்தலாம் என்று தோன்றுகிறது. அப்துல்கலாம் பேச்சை கேட்பதற்காக என்னுடைய பேச்சை நேரம் கருதி முடித்துக் கொள்கிறேன்." என்று பேசிவிட்டு தளர்வாக சென்று அமர்ந்து கொண்டார்.

அப்துல் கலாம் பேசும் போது தான் சிறுவயதில் படித்த ஜெயகாந்தனின் 'அக்ரஹாரத்துப் பூனை' என்கிற சிறுகதையை நினைவு கூர்ந்து, அதில் வரும் சிறுவன் கதாபாத்திரத்தின் மூலம் உயிர்வதை கூடாது என்பதை அப்போதே உணர்ந்ததாக கூறினார். காலையில் வெளியிடப்பட்ட ஜெயகாந்தன் குறித்த ஆவணப்படத்தையும் பாராட்டிப் பேசினார். (இயக்கம் : ரவி சுப்பிரமணியன், ஒளிப்பதிவு: செழியன், இசை: இளையராஜா) ஜெயகாந்தனின் கவிதை (?) ஒன்றை படித்து கூட்டத்தினரையும் மறுபடி சொல்ல வைத்தார். (மேடையில் இருந்தவர்களில் பொதிகை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் நடராஜனைத்தவிர வேறு யாரும் சொல்லவில்லை என்பதே நான் கவனித்தது). :-)

பரிசு வாங்கியவர்களின் ஏற்புரை இதற்கு முன்னரே நிகழ்ந்திருக்க வேண்டும் என்றே யூகிக்கிறேன். நல்ல வேளையாக நல்லியும், நடராஜனும் பேசிய பின்னரே நான் சென்றது ஒரு அதிர்ஷ்டமான நிகழ்வு. (இருவரும் கலந்து கொண்ட விழாக்களை எண்ணிக்கையைக் கொண்டு கின்னஸ¥க்கு விண்ணப்பிக்கலாம்). எதனாலோ தாமதமாக ஏற்புரை வழங்க வந்த முனைவர் ம.ரா.பொ.குப்புசாமி பேசத் துவங்கியுடன், பிட்டு முடிந்தவுடன் கிளம்புகிற பரங்கிமலை ஜோதி தியேட்டர் பார்வையாளர்கள் போல் பெரும்பாலானோர் கிளம்பத் துவங்கினர். (தமிழர்களுக்கு நிறைய விஷயங்களில் விவஸ்தை கிடையாது. இதுவும் அதிலொன்று).

ஜெயமோகன் தன்னுடைய ஏற்புரையில் என்ன கூறினார் என்று தெரியவில்லை. அவரின் இணையத்தளத்தில் இதை வெளியிடுவார் என்று நினைக்கிறேன். 'எழுத்தாளர்கள் சிறப்பான பேச்சாளர்கள் அல்ல' என்பது பொதுவானதொரு கருத்து. (சுஜாதா திக்கித்திக்கி பேசுவதை கவனித்திருக்கிறீர்களா) ஜெயமோகனும் இதற்கு விதிவிலக்கல்ல. சுந்தரராமசாமி மறைவையொட்டி நடைபெற்ற நூல்வெளியீட்டு விழாவில் ஜெயமோகன் தாம் எழுதிக் கொண்டு வந்திருந்ததை நீண்ட நேரம் பேசிய (வாசிக்கும்?) போது வந்த நிறைய கொட்டாவிகளை சிரமப்பட்டு அடக்கிக் கொள்ள வேண்டியிருந்தது.

()

'பாலம்' கலியாணசுந்தரம் (இந்த அற்புதமான மனிதரை எத்தனை பேருக்குத் தெரியும்) தங்களுடைய இதழான, ஜெயகாந்தனின் பவளவிழா சிறப்பிதழாக வெளிவந்திருக்கிற 'பாலம்' இதழை விழாவில் அனைவருக்கும் புன்னகையுடன் இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தார். இதற்கும் கூட்டம் முண்டியடித்தது. (இன்னொரு விவஸ்தை).

ஜெயகாந்தன் குறித்த ஆவணப்படம் காலையில் வெளியிட்டு திரையிடப்பட்டதாக தெரிகிறது. இம்மாதிரி இதுவரை வந்திருக்கும் எழுத்தாளர்கள் குறித்த ஆவணப்படங்களில் நான் பார்த்தது அசோகமித்திரனது மாத்திரமே. (இயக்கம் : சா.கந்தசாமி) மா.அரங்கநாதன் குறித்து வந்திருக்கும் ஆவணப்படத்தை கேள்விப்பட்டதோடு சரி. (இதையும் ரவி சுப்பிரமணியம்தான் இயக்கினார் என்று கேள்வி).

இம்மாதிரியான படங்களை மேல்தட்டு மக்களுக்காகவும், விழாக்களில் ஒளிபரப்பவும் என்று இல்லாமல் குறைந்த விலையில் குறுந்தகடுகளாக அடித்தட்டு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே என் அவா.

()

வெளியில் ஜெயகாந்தனுடையதும் இளையராஜா எழுதின நூற்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இளையராஜாவின் நூற்கள் சிலதை படித்திருக்கிறேன். அவர் சிறப்பாக இசையமைப்பதோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம் என்று தோன்ற வைத்தவை அவை. என்றாலும் ஒரு அமைப்பை நிறுவி சிறந்த படைப்பாளிகளை அடையாளம் கண்டு விருதுகள் வழங்கும் விஷயம் நிச்சயம் பாராட்ப்பட வேண்டியது. அதிலும், முத்தமிழ் காவலர், தமிழின் தந்தை என்றெல்லாம் அலங்கார வார்த்தைகளால் வர்ணிக்கப்படும் கருணாநிதியை "இலக்கியவாதி அல்ல" என்று வெளிப்படையாக, காட்டமாக கருத்து தெரிவித்த ஜெயமோகனுக்கு சிறந்த படைப்பாளருக்கான பரிசை (கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் கட்டத்தில்) வழங்குவதும் மிகவும் பாராட்டப்பட வேண்டியதுதான்.

()

விழாவில் சகவலைபதிவர் ஹரன் பிரசன்னா, பி.கே.சிவகுமார், நிர்மலா, மதுமிதா போன்றவர்களோடு 'எண்ணமும் எழுத்தும்' நண்பர்களிடமும் ஒரிரு வார்த்தைகள் பேச முடிந்தது. சிவகுமார் அறிமுகப்படுத்தினதில் பி.ச.குப்புசாமி என்கிற ஜெயகாந்தனின் சமகாலத்து எழுத்தாளருடன் பேச முடிந்தது. (வார்த்தை இதழில் வெளிவந்த இவரின் சிறப்பான கட்டுரையை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்.)

கொல்கத்தாவோடு ஒப்பிடும் போது சென்னை நகரின் சூழல் தம்மை அதிகம் எழுத வைக்கவில்லை என்கிறார் நிர்மலா. (ஏன் அப்படி?)

விழா முடிந்து ரயில் நிலையத்திற்கு விரையும் போது சிறந்த இளம் படைப்பாளிக்கான விருதைப் பெற்ற கவிஞர் (?) இளம்பிறை வியர்வை வடிய நடந்து செல்வதை கவனிக்க முடிந்தது.

suresh kannan

14 comments:

Anonymous said...

//அதிலும், முத்தமிழ் காவலர், தமிழின் தந்தை என்றெல்லாம் அலங்கார வார்த்தைகளால் வர்ணிக்கப்படும் கருணாநிதியை "இலக்கியவாதி அல்ல" என்று வெளிப்படையாக, காட்டமாக கருத்து தெரிவித்த ஜெயமோகனுக்கு சிறந்த படைப்பாளருக்கான பரிசை (கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் கட்டத்தில்) வழங்குவதும் மிகவும் பாராட்டப்பட வேண்டியதுதான். //

இதற்கும் ஜெயமோகனின் படைப்புத் திறனுக்கு விருது கிடைப்பதற்கும் என்ன சம்பந்தம்?

Anonymous said...

பி.ச.குப்புசாமி என்கிற ஜெயகாந்தனின் சமகாலத்து எழுத்தாளருடன் பேச முடிந்தது

இவர் பி.கே.சிவகுமாரின் தந்தைதானே?

இன்னும் சிறிது காலத்திற்காவது
ஜெயமோகன் விருதுகள்/பரிசுகள்
குறித்து ‘அறச்சீற்றம்' கொண்டு
தேர்வுகுழுவினர்,பரிசு வழங்குவோர்
குறித்து அபாண்டமாக எழுதமாட்டோர்
என்று நம்புகிறேன்.

manjoorraja said...

//விழா முடிந்து ரயில் நிலையத்திற்கு விரையும் போது சிறந்த இளம் படைப்பாளிக்கான விருதைப் பெற்ற கவிஞர் (?) இளம்பிறை வியர்வை வடிய நடந்து செல்வதை கவனிக்க முடிந்தது.//

சொல்ல வார்த்தைகள் இல்லை.

ஜீவி said...

Anonymous said...
//பி.ச.குப்புசாமி என்கிற ஜெயகாந்தனின் சமகாலத்து எழுத்தாளருடன் பேச முடிந்தது
இவர் பி.கே.சிவகுமாரின் தந்தைதானே?//

ஜே.கே. அவர்களின் அணுக்கத் தோழர்களில் ஒருவரான பி.ச.குப்புசாமி அன்றைய வ.ஆ.மாவட்ட திருப்பத்தூருக்கு பக்கத்து கிராமத்தில் பள்ளி ஆசிரியராக இருந்தவர்.
நல்லதொரு இலக்கிய விமர்சகர்.
எழுத்தாளர். எழுத்தாளர் வையவன்
அவர்களுக்கும் நெருங்கிய நண்பர்.
அருமையான நண்பர்.

Anonymous said...

"விழா முடிந்து ரயில் நிலையத்திற்கு விரையும் போது சிறந்த இளம் படைப்பாளிக்கான விருதைப் பெற்ற கவிஞர் (?) இளம்பிறை வியர்வை வடிய நடந்து செல்வதை கவனிக்க முடிந்தது"

இதன் மூலம் தாங்கள் விடுக்கும்
செய்தி/நீதி யாதோ?. ஒருவேளை
விருதுடன் குடையும் கொடுத்திருந்தால் பயன்பட்டிருக்குமோ :)

பிச்சைப்பாத்திரம் said...

//இதற்கும் ஜெயமோகனின் படைப்புத் திறனுக்கு விருது கிடைப்பதற்கும் என்ன சம்பந்தம்?//

:-)

ஒரு சம்பந்தமுமில்லை. என்றாலும் அதிகாரத்திற்கு விரோதமானவர்,உடன்படாதவர் என்கிற காரணத்தினாலேயே நியாயமான அங்கீகாரம் மறுக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள் என்கிற பார்வையில் எழுதினது.

பிச்சைப்பாத்திரம் said...

//ஒருவேளை
விருதுடன் குடையும் கொடுத்திருந்தால் பயன்பட்டிருக்குமோ :)//

:-)

அது ஒரு SNAP SHOT. அவ்வளவுதான். அவரவர் பார்வையில் எப்படி வேண்டுமானாலும் அணுகலாம்.

Boston Bala said...

---இதழை விழாவில் அனைவருக்கும் புன்னகையுடன் இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தார். இதற்கும் கூட்டம் முண்டியடித்தது. (இன்னொரு விவஸ்தை). ---

இது உலகப் பொதுமறை.

கணினிப் பொருட்காட்சியின் அரங்கத்தில் இலவசமாக stress ball கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தள்ளுமுள்ளு கூட்டம். 'என் குழந்தைக்கு இன்னொன்னு கிடைக்குமா?' என்று அமெரிக்ககாரரும் விசாரித்துக் கொண்டிருந்தார்.

(நானும் ஒண்ணு எடுத்துக் கொண்டு வந்தேன் :)

ஹரன்பிரசன்னா said...

//கொல்கத்தாவோடு ஒப்பிடும் போது சென்னை நகரின் சூழல் தம்மை அதிகம் எழுத வைக்கவில்லை என்கிறார் நிர்மலா. (ஏன் அப்படி?)
//

கொல்கத்தாவில் யாருக்கும் தமிழ் தெரியாது என்பது காரணமாயிருக்கலாமோ?

ஜெயமோகன் எனி இந்தியன் நடத்திய கருத்தரங்கில் 'பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள்' புத்தகம் பற்றி நன்றாகப் பேசினார். எதைப் பார்த்தும் வாசிக்கவில்லை. :)

நாஞ்சில் நாடனும் வார்த்தை இதழ் வெளியீட்டு விழாவில் சிறப்பாகப் பேசினார். அவரும் எதைப் பார்த்தும் வாசிக்கவில்லை.

நன்றாகப் பேசும் இலக்கியவாதிகளும் இருக்கிறார்கள் போல.

இந்தவிழாவில் ம.ரா.பொ. குருசாமி (குப்புசாமி அல்ல) மட்டுமே ஏற்புரை வழங்கினார். மற்றவர்கள் பேசவில்லை.

Unknown said...

(நானும் ஒண்ணு எடுத்துக் கொண்டு வந்தேன் :)

பாபா

தூத்துக்குடியில கப்பல் நிறைய பொண்டாட்டி வந்திருக்குன்னா...எனக்கு ஒன்னு எங்கப்பாவுக்கு ஒன்னுன்னானாம் :-))

Boston Bala said...

பிரபு... :)))

பிச்சைப்பாத்திரம் said...

Dear S.Ravi,

I regret to inform you that your comment has been rejected.

Anonymous said...

Thanks Mr. kannan for your 'Support'

ஷாலினி said...

”அவர் சிறப்பாக இசையமைப்பதோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம் என்று தோன்ற வைத்தவை அவை.” - என்னே உம் சிந்தனை! வாழ்க நீவீர் எம்மான்!