- இந்தியாவில் எத்தனையோ வணிக முதலாளிகள் சிறுஅளவில் இருந்து இன்று உயர்ந்த நிலைக்குப் போயிருக்கிறார்கள். 'எந்திரன்' முதலாளிகளின் மீது மட்டும் ஏன் இத்தனை காழ்ப்புணர்ச்சி?
- சினிமாவின் மூலம் சம்பாதிப்பது அத்தனை பெரிய தவறா? ஏவிஎம் முதல் ஆர்.பி.செளத்ரி வரை யாரும் செய்யாததையா எந்திரன் முதலாளிகள் செய்து விட்டார்கள்?
- ஏன் எந்திரன் போன்ற திரைப்படங்களுக்கும் ரஜினி போன்ற வணிக கதாநாயகர்களுக்கும் மட்டும் இத்தனை எதிர்ப்பு?
- நீ உன் சொந்த வாழ்வில் அத்தனை யோக்கியமானவனா? இவர்களைக் கேள்வி கேட்க உனக்கு என்ன அருகதை?
- என்னுடைய பணம். என்னுடைய மகிழ்ச்சிக்காக அதை செலவு செய்வதில் உனக்கு ஏன் இத்தனை எரிச்சல்?
இந்த மாதிரியான கேள்விகள் பல விதங்களில் தொனிகளில் இணையத்திலும் பொதுப்புத்திகளிடமிருந்தும் எழுப்பப்படுவதைக் காண்கிறேன். இதற்கான விடை பலருக்குத் தெரிந்திருந்தும் நடிகர்களின் மீதுள்ள கண்மூடித்தனமான அபிமானத்தால் சிலரும் வலதுசாரி சிந்தனைக்காரர்கள் பலரும் தெரியாதது போல் பூசி மெழுகிறார்கள். அவர்களை விட்டுவிடுவோம். இதிலுள்ள அபாயம் குறித்த அறியாமையுடன் ஒரு பெரும் சமூகமே இருக்கிறது. அதற்காகத்தான் இந்தப் பதிவு.
இனி..
உலகமயமாக்கம், தாராளமயமாக்கம் போன்ற கொள்கைகளை ஏற்றுக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் பணம் என்பது ஒரு மதமாகவே ஆகி விட்டது. நம்மைச் சுற்றி நிகழும் பொருளாதாரச் சமநிலையின்மையை நாம் கண்டும் காணாமல் இருக்கிறோம். ஒரு கிலோ தக்காளியை ரூ.50/- அநியாய விலை கொடுத்து நான் வாங்கும் போது அதே விலையைச் சந்திக்க நேரும் வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ள மக்கள் என்ன செய்வார்கள் என்று எனக்கு மனம் பதைக்கிறது. அடுத்த வேளை உணவிற்காக போராடும் பெரும்பான்மையான சதவீதத்திற்கு மத்தியில் ஒரு திருமணத்திற்காக பல கோடி ரூபாய் செலவு செய்வதும் இங்கு நிகழ்கிறது. தனது நீண்ட கால லட்சியமான சொந்த வீட்டிற்காக ஒருவன் தன் வாழ்நாளையே வங்கியில் அடமானம் வைக்கும் போது மறுபுறம் ஒரே ஒரு குடும்பம் மாத்திரம் தங்க ரூ.2000 கோடியில் மாளிகை கட்டப்படுகிறது. சர்வதேசவிளையாட்டுப் போட்டி என்ற பெயரிலும் தொலைத்தொடர்புத் துறையை மேம்படுத்துவது என்ற பெயரிலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் ஊழலாக சுரண்டப்படுகின்றன. ஆனால் இத்தனையையும நாம் வெற்று அரட்டைப் பேச்சுகளின் மூலம் கடந்து வருகிறோம். சமூகத்தின் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கே இது குறித்த மனப்புழுக்கமும் கோபமும் மிகத் தீவிரமாக இருக்கிறது.
இத்தனை நொட்டு, நொள்ளை சொல்கிறாயே, நீ என்ன புரட்சி செய்து விட்டாய்? என்ற தொனியில் சில பின்னூட்டங்களையும் தனிமடல்களையும் காண்கிறேன். வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கிறேன். நான் ஒரு நடுத்தர வர்க்கக் கோழை. அதிகாரத்தின் மூர்க்கத்திற்கு எதிராக களத்தில் இறங்கி ஒரு துரும்பைக் கூட என்னால் கிள்ளிப் போட முடியாது. ஆனால் அதற்காக என்னுடைய சமூகக் கோபங்களை சந்தேகப்படுவதையோ போலி என்று நையாண்டி செய்வதையோ அந்த அளவிலான நேர்மையை சந்தேகப்படுவதையோ நான் வெறுக்கிறேன். என்னால் இயன்றதெல்லாம் இணையம் தந்திருக்கும் இந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி என்னுடைய ஆற்றாமைகளைக் கொட்டுவதுதான். இந்த மனநிலையில்தான் பல இணைய நண்பர்களும் இருக்கிறார்கள் என்பதறிவேன்.
ஆனால்...
இந்த அடிப்படை அறவுணர்ச்சி கூட இல்லாமல் வணிக முதலாளிகளையும் சினிமா நாயகர்களையும் நியாயப்படுத்தி எழுதப்படும் சப்பைக்கட்டுகள் எரிச்சலையே உண்டு பண்ணுகின்றன.
ஏவிஎம் முதற்கொண்டு அம்பானி வரை இன்று வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என்றால் சிறிய அளவிலிருந்து சதவீதம் சதவீதமாக இன்று தங்களின் வளர்ச்சியை எட்டியிருக்கிறார்கள். இதற்காக அவர்களை நியாயவான்களாக முன்நிறுத்த முயற்சிக்கவில்லை. வணிகத்தில் நிகழும் எல்லா சமரசங்களையும் தில்லுமுல்லுகளையும் ஏமாற்று வேலைகளையும் தங்களின் பணபலத்தின் மூலம் அதிகார இயந்திரத்தின் முக்கிய பகுதி முதல் கடைசி உதிரிபாகம் வரை மகிழ்ச்சி்ப்படுத்திதான் அந்த உச்ச நிலையை சாதித்திருப்பார்கள்.
ஆனால் சமகால தமிழகத்தில் குறிப்பாக ஊடகத்துறையில் நடப்பதென்ன? ஒரு குறிப்பிட்ட அரசியல் குடும்பத்தின் வாரிசுகள் பெரும்பான்மையான ஊடகத்துறையை அதிகார பலத்தின் துணைகொண்டு எளிதில் கையகப்படுத்தியிருக்கிறார்கள். நான் முழு நூறு ரூபாய் நோட்டை கண்ணால் பார்த்ததே சுமார் ஏழு வயதில்தான். ஆனால் இன்று அந்தக் குடும்பத்தின் 25 வயது இளைஞன் கூட பலகோடி ரூபாய் முதலீட்டில் திரைப்படம் தயாரிக்க முடிகிறது. எப்படி இது சாத்தியமாயிற்று? ஓர் அரசியல் தலைவரின் அதிகார பலத்தின் துணையுடன் அவரைச் சுற்றியுள்ள நண்டு, சுண்டுகள் எல்லாம் இன்று கோடீஸ்வர அந்தஸ்துடன் உலவுகின்றன. இது கூட பெரிய விஷயமில்லை. எல்லா வணிக முதலாளிகளின் வாரிசுகளுககும் இந்த வாய்ப்புண்டு. ஆனால் இதிலுள்ள முக்கியமான ஆபத்து என்னவென்றால் பொதுமக்களுக்கு சேவை செய்ய அமைக்கப்பட்டிருக்கும் எந்தவொரு பதவியையும் அரசியல் பேரங்களின் மூலம் எளிதில் பெற்று அதன் மூலம் தாம் நினைப்பதையெல்லாம் ஒரே நாளில் சாதிக்க முடிவது என்பதுதான்.
எந்திரன் முதலாளிகளும் அவர்களின் கூட்டாளிகளும் இன்று ஒட்டுமொத்த சினிமாத்துறையைக் கைப்பற்றியுள்ளனர். சினிமா மாத்திரமல்ல தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி என்று ஒட்டுமொத்த ஊடகத்துறையையுமே சக போட்டியாளர்களை மிரட்டி அப்புறப்படுத்தி ஆட்சி செய்கின்றனர். இதன் மூலம் அவர்கள் நினைக்கும் 'செய்தியை' உருவாக்கி அதுதான் உண்மை என்று சமூகத்தை நம்ப வைக்க முடியும். இதிலுள்ள அபாயம் நமக்குப் புரிகிறதா இல்லையா? இந்த அபாயத்தினால்தான் இது போல் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கே ஊடகத்துறையின் பல பிரிவுகளுக்கான அனுமதி தருவது சில மேற்கத்திய நாடுகளில் மறுக்கப்படுகிறது. ஆனால் இதற்கும் ஒரு குறுக்கு வழியை கண்டுபிடித்துவிடுவார்கள் நம் அரசியல் விஞ்ஞானிகள்.
இது போல் மற்ற துறைகளில் பொருளீட்டுவதற்கும் கலைத்துறைக்கும் பெரிய வித்தியாசமுண்டு. அதிலாவது சமூகத்திற்கு நியாயமாக சென்று சேரவேண்டிய பொருள் பறிபோகும் அபாயம் மாத்திரமேயுண்டு. ஆனால் கலைத்துறையை கைப்பற்றுவதன் மூலம் ஒரு சமூகத்தின் சிந்தனையை, அடையாளத்தை, கலாச்சாரத்தை, சுயயோசிப்புத் திறனை கைப்பற்ற முடியும். ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தரும் செய்தியைத்தான், சினிமாவைத்தான், பொழுதுபோக்கைத்தான், நூலைத்தான், சிந்தனையைத்தான் நாம் பெற முடியும் என்பது எத்தனை அபாயகரமான சூழல்?.
'எந்திரன்' திரைப்படத்தின் மூலம் தமிழக மக்களின் மீது ஒரு கலாச்சாரப் போரே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பொய்யை மறுபடியும் மறுபடியும் சொன்னால் அதை உண்மையாக்கி விடலாம் என்கிற தத்துவப்படி அதைப் பற்றியான மிகைச் செய்திகளை ஊதிப் பெருக்கி தொடர்ந்து மூளைச் சலவை செய்யப்படுகிறது.. இதற்கு 'சமூகத்தைக் காக்க வந்த அவதாரமாக' பாவனை செய்யும் வணிகக் கதாநாயகர்கள் முதல் பெரும்பாலான சினிமாத் துறையினர் வரை ஆதாயம் கருதியோ இதை வெளிப்படுத்த முடியாத கொதிப்புடனோ துணை போகின்றனர்.
இது ஒரு மோசமான சூழல். இந்த அபாயங்களுக்காகத்தான் இத்திரைப்படத்தை நாம் புறக்கணிப்பதும் எதிர்ப்பதும் நம் சமூகக் கடமையும் பொறுப்புமாகிறது. இந்நிலை தொடரும் பட்சத்தில் சிறு முதலீட்டுத் திரைப்படங்களும் புதிய முயற்சிகளும் தமிழ் சினிமாவில் சாத்தியமேயில்லாமல் போய்விடும். உலகத்திலேயே இரண்டாவது இடத்தில் ஹாலிவுட்டுக்கு அடுத்தபடியாக சினிமா தயாரிக்குமிடத்தில் இருக்கும் இந்தியா, தர அடிப்படையில் சர்வதேச அரங்குகளில் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் நிலைக்குக் கூட அனுமதிக்கப்படாமல் போகும் அவமானகரமான சூழ்நிலைக்குத் தள்ளப்படும்.
ஒரு சினிமா ஆர்வலனாக இதை உங்கள் முன்வைப்பது என் கடமையும் விருப்பமும். முன்பொருமுறை டிவிட்டரில் நான் சொன்னதுதான். ஊடகங்களில் வணிகம் பிழையில்லை. ஒட்டுமொத்த ஊடகமே வணிகமாக மாறுவது ஆபத்து. இதைத்தான் இந்தப் பதிவில் சொல்ல முயன்றிருக்கிறேன். இதை ஒரு குறிப்பிட்ட அரசியல் குடும்பத்தின் மீதான தாக்குதலாகவும் பொச்சரிப்பாகவும் திசை திருப்பாமல் அதிகாரத்தையும் சமூகச் சிந்தனைகளையும் மூர்க்கமாக கைப்பற்ற முயலும் எந்தவொரு சக்திக்கும் எதிரானதாக பாவித்து வாசிக்க வேண்டுகிறேன்.
இதிலுள்ள சிறு பிழைகளைப் புறக்கணித்து என் ஆதங்கம் குறித்தான ஆதார மையத்தைப் பற்றி உரையாடுமாறும் வேண்டுகிறேன்.
தொடர்புடைய பதிவு:
சிவாஜி திரைப்படம் தோற்க வேண்டும்
suresh kannan
33 comments:
உங்கள் ஆதங்கம், கவலை மிகவும் நியாயமானதே!
புரிந்துகொள்கிறேன், ஆதரிக்கிறேன்!
//ஒரு பொய்யை மறுபடியும் மறுபடியும் சொன்னால் அதை உண்மையாக்கி விடலாம்//
உண்மைங்க.
/ஆனால் கலைத்துறையை கைப்பற்றுவதன் மூலம் ஒரு சமூகத்தின் சிந்தனையை, அடையாளத்தை, கலாச்சாரத்தை, சுயயோசிப்புத் திறனை கைப்பற்ற முடியும்/
அப்படித்தான் அண்ணாத்துரை, எம்ஜியார்,கருநாநிதி போன்ற வஞ்சகர்கள் தமிழர்களை மூளைச்சலவை செய்து விட்டனர்.இன்னும் இதைப் போல நூறு இடுகைகள் இடப் படவேண்டும்.
மாற்றுக் கருத்தாளர்கள் உள்ளிட்ட நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள். தனிநபர் சார்ந்த வசவுகளை,அவதூறுகளை பின்னூட்டமாக இடுவதை தவிர்க்கவும். அவை பதிவின் நோக்கத்தை திசை திருப்பலாம். சில பின்னூட்டங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. புரிதலுக்கு நன்றி.
exactly true post.....
சரியான பார்வை கண்ணன்
ஒரு நிறுவனத்தை எதிர்க்க வேண்டும் என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது. அதற்காக ஒரு வேளை அதே நிறுவத்தினடமிருந்து , நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு தரமான படம் வெளிவந்தால் கூட அந்தப் படத்தைக் குப்பை என்று ஒதுக்குவீர்களா? நீங்கள் சன் பிக்சர்ஸை நிராகரிப்பதைக் குறித்து யாருக்கும் கவலை இருக்க முடியாது. ஆனால் அவர்கள் தயாரித்துள்ளார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஷங்கர்,ரஜினி,ரகுமான் எல்லோருடைய உழைப்பையும் நிராகரிக்கச் சொல்வதுதான் பொருந்தாமல் உள்ளது. மற்றொன்று படம் குப்பை என்றால் மக்கள் நிராகரிக்கத்தான் போகிறார்கள்(உதா: பாய்ஸ்,பாபா,குசேலன்). படம் வெளிவரும் முன்னரே இந்தப் படத்தை நிராகரிக்க வேண்டுமென்ற இத்தகைய ஆர்ப்பாட்டம் தேவையா?
fantastic article.i agree with you
சுரேஷ் அப்பட்டமான உண்மையை எழுதியுள்ளீர்கள் எந்தவித தளுக்கோ, சாதூர்யமோ இல்லாத உள்ளடக்கம். பொதுபுத்தியில் உள்ள மரமண்டைகளுக்கு இது புரியாது.. அதைப்பற்றி நீங்கள் கவலைபடவும் வேண்டாம்...தொடர்ந்து எழுதுங்கள் நல்ல எழுத்து,நல்ல சினிமா, நல்ல இசைக்கான மக்கள் ஆதரவு எப்பொழுதும் சிறுபான்மையே..அதுவும் அநீதிக்கான கோபங்கள் எப்பொழுதும் ஏழையினுடதாகவே இருக்கிறது..ஆதலால் உங்கள் கோபங்கள் பொதுபுத்தியில் பரிகசிக்கத்தான் படும். விட்டுத்தள்ளுங்கள்..
உங்கள் பார்வை மிக்கச் சரி
I agree with you too.
I agree with Mohan's comment. Rajini , AR and Shankar they came to this level only because of their hard work and effort. If your argument hold good.. We shouldn’t be using this site it self...Do you think Google is doing social service. Aren’t we exploited here? We cannot reject candy just because of its cover.
அம்பானியின் முன்னேற்றத்துக்கும் கலாநிதியின் முன்னேற்றத்துக்கும் பெரிதும் வித்தியாசமில்லை என்பதை எண்பதுகளில் வெளிவந்த எக்ஸ்பிரஸ் நாளிதழ்களை தொடர்ந்து படித்தவர்கள் அறிவார்கள்.
எந்திரன் படத்தயாரிப்பில் பாதியளவு செலவில் தயாரிக்கப்பட்ட சிவாஜி வெளிவந்த பொழுது கூட ரசிகர்களை வெறியேற்றும் வண்ணம் பில்டப் கொடுக்கப்பட்டது. அதைப் பற்றிய எனது பதிவு http://marchoflaw.blogspot.com/2007/08/blog-post.html
ஏன், ரஜினியே முன்பு தனது ஒவ்வொரு பட வெளியீட்டுக்கும் முன்னால் ஏதாவது அரசியல் பேசி பரபரப்பு ஏற்ப்படுத்திய மார்கெட்டிங்கும் இந்த வகைதான்.
அப்பொழுதே நீங்கள் ஆதங்கப்பட்டிருந்தால் உங்களது ஆதங்கத்தினை புரிந்து கொள்ள ஏதுவாக இருந்திருக்கும்.
கிட்டத்தட்ட இதே கருத்துடன் போன எந்திரன் மார்க்கெட்டிங் பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை நீஙக்ள் இன்னும் வெளியிடவில்லை.
அதில் unparliamentary வார்த்தைகள் இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதை மட்டும் நீக்கிவிட்டு வெளியிடவும்.
இது போன்ற மீடியா consolidation எந்த விதத்திலும் நாட்டிற்கு நல்லதில்லை. நீங்கள் சொல்வது போல், இது எந்த தனிப்பட்ட நிறுவனத்திற்கும் எதிராக இல்லை. நாளை வேறு ஒரு நிறுவனம் இதே போல் வந்தாலும் அது தவறு தான்.
உங்கள் கருத்துக்களை முழுமையாக ஆதரிக்கிறேன்
சு.க....உங்களோட எல்லாப் பதிவிலும் ஒருவித மேட்டிமைத்தன்மையோடு பதிவிட்டிருப்பீர்கள்... ஆனால் இப்பதிவு சத்தியமான உண்மை...இதே ஆதங்கத்தோடுதான் ஏகப்பட்ட பேர். என்ன நீங்களாவது பதிவு போடுறீங்க.. நான் பின்னூட்டமாவது போடுறேன்... ஆனா அது கூட முடியாம நிறையப்பேர்... :-(
sariyana alasal sir.
நண்பர் சுரேஷ் கண்ணன்,
எவ்வளுவு கோடி கொட்டி படம் எடுத்தாலும் ஈரானிய படங்கள் போல ஒரு படமும் எடுக்கக நம்மால் முடியாது.
அருமையான இடுகை சுரேஷ் கண்ணன். வாக்கப்பட்ட அடிமைகள் சிந்திக்க மறுத்தாலும் ஊதுற சங்கை ஊதிக்கொண்டே இருந்தால்தான் மாறுதலுக்கான ஒளிக்கீற்று அணையாமலிருக்கும்.
அண்ணே.. சிவாஜி வரும்போது இதே மாதிரி நீங்க ஒரு பதிவு எழுதியதைப் படித்துத் தெரிந்து கொண்டேன். தசாவதாரம் வரும்போதும் இதே மாதிரி எழுதினீங்களாண்ணே?
ஒரு நல்ல மனிதருக்கு என் காலை வணக்கம்!(வேறு என்ன சொல்வது!)
நாடு மிக வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறது..கீழ் நோக்கி!
பிரெஞ்ச் புரட்சி போல ஒன்று நம் நாட்டில் வந்தால் ஒழிய இதற்கு தீர்வு கிடையாது.அது இங்கு வரவும் வராது.
மற்றபடி நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு எழுத்தும்,புள்ளியும் உண்மை,சத்தியம்!
நோக்கும் திறமையும் அற்ற , ஆனால்,மிகப் பிரசித்த பெற்ற, நல்ல குணம் வாய்ந்த ஒன்றை,மிகவும் நோக்குடைய, திறமையுள்ள ,ஆனால்,
துர்க்குணம் வாய்ந்த ஒன்று பயன்படுத்திக்கொண்டிருக்கிறது!
விளைவு:எந்திரன்
நாட்டை கடவுள் காப்பாற்றட்டும்.
(அவரை இதுவரை யாருக்கும் விலை போகாதிருந்தால்!)
நடிகர்களும் இயக்குனர்களும் தமது கடின உழைப்பால் முன்னேறியவர்களே , வசீகரம் இல்லாமல் யாரும் யாரையும் கவர முடியாது, ஆனால் சினிமா என்பது முற்றிலும் வணிக நோக்கம் மட்டுமே கொண்டது. நீங்கள் பெரிய குடும்பத்தின் வாரிசாக இருந்தால் நீங்களும் ஒரு ஊடகத்தின் வாயிலாக பணம் பண்ணி கொண்டு இருப்பீர்கள். இந்திய பொதுவில் கலப்பு பொருளாதார நாடு அதனால் முதலாளித்துவத்தை தவிர்க்க முடியாது,வணிகம் அனைத்து இடங்களிலிலும் நடக்கதான் செய்கிறது , சிறிய அளவில் இருந்து பெரிய அளவில் வரை , ஒருவர் வணிகம் செய்வது மூலம் எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள் என்பதயும் நினைவில் கொள்ளுங்கள் , நீங்கள் 2 1/2 நேரம் ரசிக்கின்ற அல்லது வெறுக்கின்ற திரைபடத்தின் பின்னால் பாதிக்கப்பட போவது தயாரிப்பாளர் என்ற ஒருவர் மட்டுமே, அதனால் நல்ல வியாபாரிகள் தயாரிப்பாளர் ஆகும் போது அதனை திறம்பட செய்கிறார்கள் . எங்கு எல்லாம் மனிதர்கள் உண்டோ அங்கெல்லாம் வியாபாரிகள் உண்டு , வேண்டுமென்றால் ஒரு வியாபாரம் செய்து பாருங்கள் .
அன்புள்ள சுரேஷ் கண்ணன்,
கலை மற்றும் சமூகம் பற்றிய உங்கள் பார்வையில் உள்ள எதிர்கால விளைவுகளை குறித்த பதற்றம் சில நண்பர்களுக்கு புரிவதில்லை. குற்றமும் அவர்கள் மேல் இல்லை. அவர்களுக்கு வாசிப்பு, சமுதாயம் குறித்த பார்வை, பெரும் ஊழல்கள் பற்றிய கவலை அறவே இல்லை. ரசனை பற்றி நாம் நிறைய விவாதித்தும் விட்டோம். ஆனால் அதற்கு கிடைக்கும் எதிர்வினைகளை பாருங்கள்.
தவிர ஊடங்களை கையில் வைத்திருக்கும் அரசியல் கட்சிகள் தங்கள் வாரிசுகளை , எல்லா இடங்களிலும் பரப்பி நிலை கொள்ள செய்தும் விட்டார்கள். திறமை இருக்கிறதோ , வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ , பெரிய அளவில் அவர்களின் 'புகழ்' பரப்பபடுகிறது. நீங்கள் மிக சரியாக சொன்னது போல் ஆளுங்கட்சியினரின் அடிப்பொடிகள் இப்போது சினிமா போன்ற ஊடங்களில் நுழைந்து அட்டகாசம் செய்கிறார்கள். அவர்களும் 'யதார்த்த சினிமா' உலகில் நுழைந்து அதன் அடிநாதத்தை குலைக்கிறார்கள். நல்ல படம் தந்த இயக்குனர் ஒருவரின் அடுத்த படம் அரசியல் வாரிசு ஒன்று நடித்து வறட்டு தனமாய் வெளிவந்தது ஒரு பதம். ஷங்கர் மீது எனக்கு இருக்கும் மதிப்பு, ஒரு தயாரிப்பாளராய் சில நல்ல முயற்சிகளை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தது. நான் முன்பே குறிப்பிட்டது போல் , ரஜினிக்கு சினிமா மேல் எந்த காதலும் இல்லை. இத்தனை வயதுக்கு பிறகும் தலையில் விக்கை மாட்டிக்கொண்டு ,சாதாரண சண்டை காட்சிகளில் கூட டூப் வைத்துகொண்டு நடிக்கிறார். ரசிகர்கள் அவர் உண்மை வயது கதாபத்திரத்தில் நடித்தால் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று அவர்கள் மேல், பழியை போட்டு விடுவார்கள். உலகில் மிகவும் அப்பாவிகள் யார் என்றால் நான் ரஜினி ரசிகர்கள் தான் என்று சொல்வேன். ஊடகம் முன் நாம் பலி கடாவாக்கப்படுகிறோம்; பரிகசிக்கப்படுகிறோம் என்று கூட யோசிக்க முடியாத அளவுக்கு அவர்கள் , தங்களை மறந்து ரஜினியின் 'பிம்பத்துக்கு' பாலாபிஷேகம் செய்து குதூகலிக்கிறார்கள்.
இந்த விஷயத்தில் மிக பெரிய அல்பங்கள் சன் குழுமத்தினர் தான். என்னவோ இது தான் உலகிலேயே முதன்முறை தயாரிக்கப்படும் சினிமா என்பது போல் அவர்கள் செய்யும் ஆபாசமான கூத்துகளை கண்டால் வாந்தி தான் வருகிறது. இந்த படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தால் கூட , 'சூப்பர் ஹிட் திரைப்படம்' என்ற அருவெருப்பூட்டும் அறிவிப்போடு தங்கள் தொலைக்கட்சியிலேயே ஒளிபரப்புவார்கள். உங்கள் பதிவுகள் மிக அவசியமானவை. தொடருங்கள்.
ம்ம்ம்ம்
அடிப்படையில் நீங்கள் monopoly ஐ எதிர்க்கிறீர்கள். சந்தைப் பொருளாதாரத்தில் எந்த ஒரு தொழிலும் ஒரே நிறுவனத்தின் monopoly யாக இருப்பது ஆபத்தானது.
தமிழகத்தில் "அரச" குடும்பம் மட்டுமே வரும் நாட்களில் தொழில்கள் அனைத்தும் செய்யும் நிலை உருவாகிவருகிறது. இந்த ஆபத்தைப் பற்றி எந்த ஊடகமும் பேசுவதில்லை. ஏனென்றால்
எல்லா ஊடகமுமே அவிங்க தானே நடத்துறாய்ங்க.
+1 to Dinesh Ramakrishnan and Mugilan
யோவ் டுபாக்கூரு உன்னை போல ஒருவன்னு ஒரு மொக்கை படம் வந்த போது அதுக்கு என்னமா ஜால்ரா போட்டே..அந்த படமும் சென்னையில் 15 தியேட்டரில் போட்டு மத்த படத்தை எல்லாம் காலி செய்தாங்க. அதோடு என்ன காமேடின்னா நீரு அந்த படத்தோடு பாட்டு எல்லாம் சூப்பரப்புன்னு தனியா கமல் பொன்னுக்கு விளம்பரம் வேற போட்டிரீரு.
நீரு கமல் ரசிகர்ன்னு எல்லாருக்கும் தெரியும். அதக்காக தான் ரஜினியை திட்டி உம் வயித்தெரிச்சலை கொட்டிகிற..நல்ல டைம் பாஸ்.
//எவ்வளுவு கோடி கொட்டி படம் எடுத்தாலும் ஈரானிய படங்கள் போல ஒரு படமும் எடுக்கக நம்மால் முடியாது//
அதே போல எவ்வளவு கோடி கொட்டினாலும் இந்திய படங்கள் போல ஈரானியர்களால் ஒரு போதும் படம் எடுக்க முடியாது :)
Really Good post..
Greetings..
Though, I Like Rajni.
உங்களின் சினிமா பற்றிய புரிந்துணர்வு மிகவும் குழப்பமுற்ற நிலையில் இருப்பது மிகத் தெளிவாக தெரிகிறது.
அதாவது நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றால், கலைப்படைப்புகள் மட்டுமே சினிமாவாக இருக்க வேண்டும் என்கிறீர்கள். அதை படைப்பவன் அதனால் பைசா பிரயோஜனம் பெறக்கூடாது.
உண்மையை சொல்லப் போனால் சினிமா உலகின் அபத்தங்களை விட, மாற்று கருத்து வைக்கிறேன் பேர்வழி என்று சொல்லித் திரியும் உங்களைப் போன்றவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள்...
அருமையான கட்டுரை சுரேஷ் கண்ணன்...... வாழ்த்துக்கள் உங்கள் சமூக அக்கறைக்கு
அருமையான கட்டுரை சுரேஷ் கண்ணன்.
இங்கு பின்னோட்டியுள்ள நண்பர்களுக்காக..
மாற்றுக்கருத்து வைப்பவர்களை ஆபத்தானவர்களாக சித்தரிப்பவர்கள், தாங்கள் வைக்கும் இத்தகைய கருத்துக்கள் எத்தனை ஆபத்தானவை என்பதை புரிந்துகொள்வதில்லையோ?
சினிமா கலைப்படைப்பா? வியபார படைப்பா? ஊடகமா? பொழுதுபோக்கா? போன்ற வாதங்கள் எல்லாம் இன்னுமா வைக்கப்படுகிறது? சினிமாக்களைவிட சினிமா பற்றி எழுதுபவர்களின் அபத்தங்கள்தான் அதிகமாக உள்ளது. இக்கட்டுரை அந்த அபத்தங்களைச் செய்யவில்லை.
எந்திரன் வெளிவருவதற்கு முன்பே அதனை ஓடவைக்க இத்தனை ஆர்ப்பாட்டங்கள் செய்யலாமாம், ஆனால் எதிர்கருத்து உள்ளவர்கள் அந்த படத்தை புறக்கணிக்க சொல்லக்கூடாதாம். அது தனிமனித சுதந்திரத்தை மறுக்கிறதாம். ஜனநாயகம் இல்லையாம்.
நல்ல படம் ஓடும், இல்லாவிட்டால் மக்கள் புறக்கணிப்பார்கள் என்றால். படத்தை வாயை பொத்திக்கொண்டு வெளியிடலாமே? மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று. தன்னம்பிக்கை இல்லை.. காசை கொட்டிவிட்டு அச்சம்.. அதனால்தான் இத்தனை ஆர்ப்பாட்டம்.. ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் என்று அதனை கேட்காமல் இங்கு வந்து பொச்சரிப்பு போறாமை என்று புலம்பவது ஏன்?
அப்புறம் நடுநிலையான விமர்சனங்கள் என்பதெல்லாம் ஹம்பக்தான். அது ஒரு ஏமாற்றுவேலை. படம் அதனை சுற்றிப் பின்னப்படும் வலை இதுதான் இங்கு பிரச்சனை. ரஜனிக்கு கமல் எதிர்வாக முன்வைக்கப்படுவதும் ஒரு வியபார தந்திரம்தான்.
எந்திரன் வெற்றியடைவதும் வெற்றியடையாததும் ஒரு விஷயமே அல்ல. காரணம் தமிழில் ஆட்டுக்கார அலமேலு, ஜகன் மோகினி, அம்மன் போன்ற படங்கள்கூட வெற்றிபெற்று வசூலை அள்ளியவைதான். வெற்றிபெற்ற ஆடும் தியேட்டருக்க தியேட்டர் வலம் வந்ததையும் பார்த்தோம்.
“வெற்றிபெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை. புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றிக் காண்பதில்லை” - கண்ணதாசன்.
”இது ஒரு மோசமான சூழல். இந்த அபாயங்களுக்காகத்தான் இத்திரைப்படத்தை நாம் புறக்கணிப்பதும் எதிர்ப்பதும் நம் சமூகக் கடமையும் பொறுப்புமாகிறது. ” ஆஆத்தி பயமா இருக்கே...!! நீங்க சிவாஜிக்கு பதிவு போட்டுதான் படம் படு தோல்வி அடைந்து இரண்டு நாளில் பொட்டி க்கு போச்சுன்னு தெரியாம போச்சே.
அவன் ஆயிரம் விளம்பரம் போடட்டும்..விமர்சனம்.. நண்பர்கள்னு சொல்லுரத வச்சு பிடிச்சா..100 ரூபாய் செலவு பண்ணி பாருங்க இல்லன்னா..போழப்ப பாருங்க.500 ஆயிரம் னு வெட்டி செலவு செய்யாதிங்கடா.. ன்னு சொல்லுங்க அது நியாயம். அத விட்டு.. எதோ உலகம் அழியப்போற எஃபட் தேவையா?
Post a Comment