Saturday, February 01, 2020

தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி




எழுத்தாளர் இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ நாவலை சமீபத்திய தற்செயல் தேர்வில் வாசித்து முடித்தேன். எத்தனையோ வருடங்களுக்கு முன்பு வாசித்த நூல் இது. அப்போது மிகவும் பிடித்திருந்தது. ஆனால், சமீபத்திய வாசிப்பில் அத்தனை உன்னதமாகத் தெரியாவிட்டாலும் தமிழில் எழுதப்பட்ட ஒரு குறிப்பிடத்தகுந்த வெகுசன நாவல் என்றே சொல்வேன்.

ஒரு காலக்கட்டத்தின்  பின்னணி இதில் உள்ளது. அதே சமயத்தில் எப்போதும் பொருந்திப் பார்க்க முடிகிற நிரந்தரத்தன்மையையும் கொண்டுள்ளது. பாலகுமாரன், ஆதவன் போன்றோரின் வாசனை ஆங்காங்கே வருகிறது.

இந்துமதியின் படைப்புகளில் சிலதை பதின்மங்களில் நான் வாசித்திருக்கக்கூடும். ஆனால் அவை எதுவுமே இப்போது நினைவில் இல்லை. மாறாக இந்த நாவல் மட்டும் நினைவில் மங்கலாகவும் அதே சமயத்தில் இதன் சில விவரணைகள் அழுத்தமாகவும் மனதில் பதிந்துள்ளது. குறிப்பாக நாவலில் விவரிக்கப்படும் ஓரிடம் எப்போதுமே நினைவில் வந்து கொண்டிருக்கும். இந்த நாவலின் ஒரு புள்ளி என்னுள் உறைந்து போன இடம் அது எனலாம்.

மேகங்கள் நகரும் போது நமக்குத் தெரியும் விநோதமான உருவங்களைப் போல,  சுண்ணாம்புச் சுவரில் காரை உதிரும் அது போன்ற உருவங்களை ஏற்படுத்தியிருப்பதை நடைமுறையில் நாம் பார்த்திருப்போம்.  இந்த நாவலிலும் அப்படியொரு சித்தரிப்பு.

சமையல் அறைச் சுவற்றில் இருக்கும் அப்படியொரு உருவம், நடனமாடும் ஒரு பெண்மணியைப் போலவே விஸ்வம் என்கிற கதாபாத்திரத்திற்குத் தோன்றும். ‘போடா கிறுக்குப்பயலே’ என்பது போல அவனுடைய தாயார், இவனின் கற்பனையை சிரிப்புடன் புறந்தள்ளி விடுவார்.

ஆனால் பிறகு இவர்களின் குடும்பத்தில் வந்து இணைகிற விஸ்வத்தின் அண்ணி (பிராமண வழக்கில் மன்னி), இதே கற்பனையை விஸ்வத்திடம் பகிரும் போது அதிலுள்ள ஒற்றுமையைக் கண்டு அவன் திகைத்துப் போய் விடுவான். இருவரின் ரசனையும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளதை மிக சுவாரசியமாக சுட்டிக்காட்டும் இடம் அது.

இப்போதைய மீள் வாசிப்பில் இந்த இடம் எப்போது வரும் என்று காத்திருந்து அது வந்தவுடன் புன்னகைத்துக் கொண்டேன்.

**

இந்த நாவல் எதைப் பற்றியது?

ஒருவனின் இளம் வயது என்பது லட்சியங்களும் கனவுகளும் நிரம்பி பெருகி வளரும் காலக்கட்டம். அந்தக் கனவுகளை நோக்கி பயணப்பட்டு விட முடியும் என்கிற நம்பிக்கை நிறைந்திருக்கிற வயது. ஆனால் கூடவே சந்தேகமும் நிராசையும் இணைந்திருக்கும் பருவம்.

அந்தக் கனவுகளை நோக்கி பயணப்பட விடாமல் யதார்த்தம் என்பது அவனை வேறெங்கோ திசை திருப்பி அலைக்கழிக்கும். வேறு வழியின்றி ஒரு கட்டத்தில் அந்த நிதர்சனத்தை அவன் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். இதுதான் இந்த நாவலின் மையம். இதை எந்தவொரு வளரிளம் இளைஞனின் அனுபவத்துடனும் பொருத்திப் பார்க்கலாம். அதனால்தான் காலத்தின் நிரந்தரத்தன்மை இதில் இருக்கிறது என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

பரசு என்கிற இளைஞன் மேலே படிக்க விரும்பி, ஆனால் குடும்பத்தின் சூழல் காரணமாகவும் தந்தையின் வற்புறுத்தல் காரணமாகவும் அந்தக் கனவை கைவிட்டு பணியில் சேர்கிறான்.

அவனுடைய தம்பி விஸ்வம். இவன்தான் இந்தப் புனைவின் நாயகன் எனலாம். அண்ணனைப் போலவே தானும் ஓர் இயந்திரம் ஆகி விடுவோமோ என்கிற பயமும், அப்படி ஆகி விடக்கூடாது என்கிற பிடிவாதமும் கொண்டிருக்கிறவன். ஆனால் சூழல் அவனைச் சுழற்றியடிக்கும் போது பரசுவின் தொடர்ச்சியாக அவனும் ஓர் இயந்திரமாகத்தான் ஆக வேண்டியிருக்கிறது.

விஸ்வத்தின் பாத்திரம் மிகக் கச்சிதமாகவும் சுவாரசியமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. எண்பது, தொன்னூறுகளில் சிறுபத்திரிகை உலகில் இயங்கும் ஒரு நவீன இளைஞனின் சித்திரம் விஸ்வத்தினுடையது.

அன்றாட லெளகீக விஷயங்களின் மீது வெறுப்பும் எரிச்சலும் கொண்டிருக்கிறவன். இந்த மரபை மீறத் துடிக்கிறவன். இதிலிருந்து தப்பித்து விட முடியாதா என்கிற ஏக்கமும் நிராசையும் கொண்டிருக்கிறவன். பிலிம் சொசைட்டி, சார்த்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி என்கிற அறிவார்த்தமான தேடலைக் கொண்டிருப்பவன். சிறுபத்திரிகை நடத்த முயல்கிறவன். இயந்திரமாக மாறி விட்டிருக்கிற அண்ணன் பரசுவின் மீது வெறுப்பும் பரிதாபமும் ஒருசேர கொண்டிருக்கிறவன்.

வேண்டா வெறுப்பாக அவன் செல்லும் ஒரு நேர்காணலுக்காக ஓர் அலுவகத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கிற போது அங்குள்ள இயற்கைச் சூழலை வியக்கிற விஸ்வத்தின் மனநிலையின் மூலம் அவனுடைய பாத்திரம், நாவலின் துவக்கத்திலேயே மிகச் சரியாக வாசகனுக்குள் கடத்தப்பட்டு விடுகிறது.

**

அண்ணி ருக்மணிக்கும் விஸ்வத்திற்கும் இடையில் ஏற்படும் நேசமும் ரசனை ஒற்றுமையும் மெல்ல திரண்டு எழுவதை இந்த நாவலின் சுவாரசியமான அம்சங்களுள் ஒன்றாகச் சொல்லலாம்.

வழமைகளினால் இருண்டு கிடக்கும் அந்த வீட்டினுள் ஓர் அகல் வெளிச்சம் போல நுழைகிறாள் ருக்மணி. அவளின் செய்கை ஒவ்வொன்றிலும் அவளுடைய ரசனையும் நேர்த்தியும் வெளிப்படுகிறது. ‘இத்தனை அழகு கொண்டவள். தனக்கு மனைவியா?” என்று துவக்கத்திலிருந்தே பிரமிக்கிற பரசு, அந்தப் பேரழகை நெருங்க முடியாமல் தாழ்வுணர்ச்சியுடன் விலகியே நிற்கிறான். எந்நேரமும் சிரித்துக் கொண்டே வளைய வருகிற ருக்மணியைப் பார்த்து விஸ்வத்திற்கு ஆச்சரியமாக இருக்கிறது. அண்ணன் பரசுவின் மீது கோபமாகவும் வருகிறது.

தன் துணிகளை அண்ணி துவைக்கும் போது சங்கடத்துடன் ஆட்சேபிக்கும் விஸ்வம், அவளுள் ஒளிந்திருக்கிற இலக்கிய வாசனையை அறியும் சமயத்தில் அவளுடன் ஒன்றிப் போகிறான். அவர்களுக்குள் ஒரு நாகரிகமான நட்பு உருவாவதற்கு இலக்கிய ரசனையும், அது தொடர்பான உரையாடலும் காரணமாக இருக்கின்றன.

விஸ்வத்தின் தந்தை பாத்திரமும் சரியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சூழல் காரணமாக தன் மகன்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறான சூழலில் தள்ளிக் கொண்டிருக்கிறோமே என்கிற உள்ளார்ந்த வேதனையும் ஆனால் அதனை தவிர்க்க முடியாத கட்டாயத்திலும் அவர் தத்தளிக்கிறார். தந்தையின் கையாலாகாததன்மை குறித்து விஸ்வத்திற்கு அவ்வப்போது எரிச்சல் வந்தாலும் அவருடைய நோக்கில் நின்று பார்க்கும் போது அவனுக்கு நிதர்சனம் புரிகிறது. எரிச்சல் பரிதாபமாகவும் அன்பாகவும் மாறுகிறது.

**

இந்த நாவல், துரை இயக்கி அஜித் நடித்த திரைப்படமான ‘முகவரி’யை எனக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தது. இசைத்துறையில் ஆர்வமும் திறமையும் கொண்ட ஓர் இளைஞன் சினிமாவில் முட்டி மோதி தோற்றுப் போய் குடும்பச் சூழல் காரணமாக இறுதியில் பணிக்குச் செல்லும் கதை. இந்துமதியின் நாவலில் இருந்து துரை தூண்டுதல் பெற்றிருந்தாலும் ஆச்சரியமில்லை. அண்ணன், அண்ணி பாத்திரம் உட்பட திரைப்படத்திற்கும் நாவலுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

இதில் இன்னொரு தற்செயல் ஒற்றுமையும் உள்ளது. இந்த நாவல், தொலைக்காட்சி தொடராக படமாக்கப்பட்ட போது விஸ்வம் பாத்திரத்தில் ரகுவரன் நடித்திருந்தார் என்று நினைவு. ஆனால் ‘முகவரி’யில் நாயகனுக்கு அண்ணனாக, அதாவது பரசு பாத்திரத்தை அவர் ஏற்றிருந்தார்.

நாவலை வாசித்து முடித்தவுடன் எப்போதோ பார்த்த தொடரின் சில காட்சிகளை பார்க்க முடியுமா என்று ஆசைப்பட்டேன். ஆனால் இணையத்தில் எத்தனை தேடியும் கிடைக்கவில்லை. (யாராவது கண்டெடுத்தால் சொல்லுங்கள்). 

இந்துமதி

இந்த நாவலில் மிக முக்கியமானதொரு அம்சத்தைக் கண்டேன்.

அதாவது பொதுவாக பெண் எழுத்தாளர்கள் என்றால் மாமியார் – மருமகள் பிரச்சினை, ஆணாதிக்க கணவனின் பிடியில் பல்வேறு கொடுமைகளை அனுபவிக்கும் ‘அபலை’ மனைவியின் பாத்திரம் என்று சமையல் அறையில் மூக்கைச் சிந்திக் கொண்டே எழுதியிருப்பார்கள் அல்லது இவற்றிலிருந்து மீறியெழுந்து ‘ஓ.. ஒரு தென்றல் புயலாகி வருதே’ என்று ஆவேசமான பெண்ணியக் குரலில், ஆண் குலத்தையே எரித்துச் சாம்பலாக்குகிற மிகையுடன் பொங்கியெழுந்து புரட்சி செய்வார்கள்.

ஆனால், இந்த நாவல் பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டிருந்தாலும் “ஆண் வாசனை’ மிகுந்த படைப்பாக இருப்பதை ஆச்சரியத்துடன் கவனித்தேன். எந்த இடத்திலுமே விஸ்வத்தின் பாத்திரம் தடம் மாறவில்லை. ஓர் ஆணின் மனதில் கூடு பாய்ந்த அதிசயத்தை இந்துமதி நிகழ்த்தியிருக்கிறார் எனலாம்.

விஸ்வத்தின் காதலி ஜமுனா ஒரு சராசரிப் பெண். ஆனால் தன்னை ‘இன்டலெக்சுவலாக’ உணரும் விஸ்வத்தால் அவளுடைய சராசரித்தனத்தை ஏற்க முடிவதில்லை. எரிச்சலுடன் அவ்வப்போது விலகி விடுகிறான். ஆனால் இவனுடைய அண்ணி ருக்மணியால் அறிவார்ந்த சூழலிலும் சரி, சராசரிகளின் உலகிலும் சரி, இரண்டிலுமே சகஜமாகப் புழங்க முடிகிறது. அவளுடைய இந்தக் குணாதிசயம் விஸ்வத்தின் அக உலகில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்துவதோடு இந்த நாவல் நிறைவுறுகிறது.

இந்துமதியை கணிசமாக படித்தவர்கள், அவர் எழுதியதில் இந்த நாவல் மட்டுமே குறிப்பிடத்தக்க படைப்பு என்கிறார்கள். கனவுலகில் மிதந்து திரியும் விஸ்வம், அங்கிருந்து சரிந்து யதார்த்தத்தின் படிகளில் நடந்து செல்லும் வீழ்ச்சியைத்தான் தலைப்பு குறிக்கிறது.

நிச்சயம் ஒருமுறை வாசிக்கத்தகுந்த நாவல்.




suresh kannan

4 comments:

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான விமர்சனம்..அவர் எழுதிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் அதைப் போலவே வாழ நினைத்து சராசரியாகிப்போனவன் என்கிற வகையில் உங்கள் விமர்சனத்தை கூடுதலாக உணர்ந்து படிக்க முடிந்தது...வாழ்த்துகள்..

S.ஜஸ்டின் லியோன் said...

இந்துமதி நாவல் எதுவுமே வாசித்தது இல்லை உங்களின் இந்த பதிவு சிறப்பாக இருக்கிறது வாசிக்கவேண்டும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

முகவரி இக்கதையின் காப்பி என்ற விவாதங்கள் தற்போது இந்துமதி அவர்களின் முகநூல் பக்கத்தில் ஒடிக்கொண்டிருகிறதே. இன்னும் யாரோ ஒருவர் இந்து சுப்ரணிய ராஜுவின் க்தை என்றும் கொளுத்திப்போட்டிருக்கிறார். முகநூலில் என்னவேண்டுமானாலும் பதிவு செய்து விட முடிகிறது. பாலகுமாரன்தான் இப்படத்திற்கு வசனம் எழுதியவர். நேற்றுமுகவரி பார்த்தேன். ஆனால் நாவலில் வரும் அண்ணியைப் போல சித்தரிக்க வில்லை. அன்பானவள் என்பதைத் தவிர கூடுதல் சிறப்பு இல்லை. அண்ணன் பாத்திரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

vasu said...

மறக்க முடியாத நாவல்களில் ஒன்று,படித்து 40 வருடங்களுக்கு மேல் ஆகிறது,ஆனால் இன்றும் நாவலின் பல இடங்கள் ஞாபகத்தில் உள்ளது,விஸ்வம்,வாசலில் அமர்த்து இருப்பான் ஒரு அரிக்கேன் மாட்டிய வண்டி அவனை கடந்து செல்வதை வெகு அழகாக விவரித்து இருப்பார்.அந்த மன்னியின் அழகு,அமைதி ,தவற விடக்கூடத படைப்பு