ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் திரைப்படம் வெளியானால் போதும், ‘பிடித்தது, பிடிக்கவில்லை’ என்று இரு நேரிடை கோஷ்டிகள் தன்னிச்சையாக உருகி சமூகவலைத்தளங்களில் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஆவேசமாக மோதிக் கொள்கின்றன.
‘படம் மொக்கை.. உனக்கு எப்படிடா பிடிச்சது.. என்று ஒரு தரப்பும் ‘படம் உன்னதம். உனக்குப் பிடிக்கலைன்னா.. பொத்திட்டு போ..’ என்று அதற்கு இன்னொரு தரப்பு பதில் சொல்வதும் என பல ரகளையான காமெடிகள் அரங்கேறுகின்றன. 'சைக்கோ' திரைப்படத்திற்கும் இது நடந்து கொண்டிருக்கிறது. ‘இயக்குநரே ஒரு சைக்கோதான்’ என்கிற நகைச்சுவையான உளப்பகுப்பாய்வு முதல் ‘சைக்கோங்களுக்கு இந்தப் படம் பிடிக்காதுதான்’ என்பது வரை பல சிறுமைத்தனமான அவதூறுகள் எழுதப்படுகின்றன.
‘சைக்கோ’ என்கிற வார்த்தைக்குப் பின்னுள்ள கனத்தை அறிந்தவர்கள், எளிதாக கல்லெறிவது போல அந்த வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்கள். அதன் பின்னுள்ள வாதையும் வேதனையும் சொல்லில் அடங்காதது.
‘அவரவர் ரசனை, புரிதல், அனுபவம் அவரவர்க்கு’ என்கிற முதிர்ச்சியான கலாசாரத்தை நோக்கி நாம் எப்போது நகர்வோம் என்று தெரியவில்லை. ‘ஒரு திரைப்படத்தைப் பற்றிய முதிர்ச்சியான உரையாடல்களை நிகழ்த்துவது என்பது வேறு, என் மதிப்பீடுதான் சிறந்தது’ என்று குடுமிப்பிடி சண்டையிட்டுக் கொள்வது வேறு. இரண்டாவதுதான் அதிகம் நிகழ்கிறது.
**
‘படம் மொக்கை.. உனக்கு எப்படிடா பிடிச்சது.. என்று ஒரு தரப்பும் ‘படம் உன்னதம். உனக்குப் பிடிக்கலைன்னா.. பொத்திட்டு போ..’ என்று அதற்கு இன்னொரு தரப்பு பதில் சொல்வதும் என பல ரகளையான காமெடிகள் அரங்கேறுகின்றன. 'சைக்கோ' திரைப்படத்திற்கும் இது நடந்து கொண்டிருக்கிறது. ‘இயக்குநரே ஒரு சைக்கோதான்’ என்கிற நகைச்சுவையான உளப்பகுப்பாய்வு முதல் ‘சைக்கோங்களுக்கு இந்தப் படம் பிடிக்காதுதான்’ என்பது வரை பல சிறுமைத்தனமான அவதூறுகள் எழுதப்படுகின்றன.
‘சைக்கோ’ என்கிற வார்த்தைக்குப் பின்னுள்ள கனத்தை அறிந்தவர்கள், எளிதாக கல்லெறிவது போல அந்த வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்கள். அதன் பின்னுள்ள வாதையும் வேதனையும் சொல்லில் அடங்காதது.
‘அவரவர் ரசனை, புரிதல், அனுபவம் அவரவர்க்கு’ என்கிற முதிர்ச்சியான கலாசாரத்தை நோக்கி நாம் எப்போது நகர்வோம் என்று தெரியவில்லை. ‘ஒரு திரைப்படத்தைப் பற்றிய முதிர்ச்சியான உரையாடல்களை நிகழ்த்துவது என்பது வேறு, என் மதிப்பீடுதான் சிறந்தது’ என்று குடுமிப்பிடி சண்டையிட்டுக் கொள்வது வேறு. இரண்டாவதுதான் அதிகம் நிகழ்கிறது.
**
புத்தரின் வாழ்க்கையில் கடந்து போன அங்குலிமாலா என்பவரைப் பற்றிய ஒரு கதை அல்லது வரலாறு (சமயங்களில் இரண்டும் ஒன்றுதானே?!) உண்டு. இணையத்தில் தேடி வாசித்துக் கொள்ளுங்கள். ‘இதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன்’ என்று ஒரு நேர்காணலில் மிஷ்கின் சொன்னார். படத்தைப் புரிந்து கொள்ள இந்தக் குறிப்பு மிக அவசியமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
கதைகளை நேரடியாக அப்படியே புரிந்து கொள்வதைப் போன்ற அபத்தம் இருக்கவே முடியாது. அது குழந்தைகள் தங்களின் அறியாப்பருவத்தில் செய்யும் விஷயம். ‘காக்கா எப்படி குடுவைல கல்லைப் போடும்?” என்று பெரியவர்களான பின்னரும் கேட்டுக் கொண்டிருப்பது அறியாமை.
நுட்பமான புனைவுகளை அப்படியே நடைமுறை இயல்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அதுவொரு தனியான உலகம். அதைச் சரியாகப் புரிந்து கொள்ள எழுதியவனுக்கு மட்டுமல்ல, வாசகனுக்கும் நல்ல கற்பனை வளம் வேண்டும். ஒரு நல்ல புனைவு என்பது பல்வேறு உருவகங்கள், குறியீடுகள், புதிர்ப்பாதைகள் என்று பல வழிகளைக் கொண்டிருக்கும். ஆழமானதொரு மையத்தை மறைமுகமாக உணர்த்த விரும்பும். அந்தப் பயணத்தின் வழியே சென்றால் குறிப்பிட்ட புனைவின் ஆன்மாவை அடைய முடியும்.
அங்குலிமாலா கதையின் மையமும் அதுதான். ஒரு ஞானியால் தன் தூய வெளிச்சத்தின் மூலம் கரிய இருளை அகற்ற முடியும். தன் அன்பால், ஞானத்தால், சகிப்புத்தன்மையால் ஒரு கொடூரனை புத்தர் மனம் மாற்றிய கதை அது. இந்த மையத்தையே தன் பிரத்யேக திரைமொழியில் சொல்ல விரும்புகிறார் மிஷ்கின். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் இதிலுள்ள தர்க்கப் பிழைகளை அதிகம் நோண்டிக் கொண்டிருக்க மனம் வராது. அது அவசியமுமில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
“கொலை நிகழும் இடங்களில் சிசிடிவி காமிரா இருக்காதா?” என்பது முதற்கொண்டு இத்திரைப்படம் தொடர்பாக எழும் பல கேள்விகள், தர்க்கப்பிழைகள் போன்றவை இதை இயக்கிய மிஷ்கினுக்குள்ளும் எழாமலா இருந்திருக்கும்? அந்தச் சந்தேகத்தின் பலனை அளிக்க நாம் தயாராகவே இல்லையா?
தன் திரைப்படங்களை தனித்துவமாக உருவாக்க விரும்புகிற ஒரு படைப்பாளி, தன்னுடைய பாணியில் ஒரு பிரத்யேகமான உலகை உருவாக்குகிறார். அதில் அவர் காட்டுகிற சித்திரங்களுக்கு முன்னும் பின்னும் ஆயிரம் விஷயங்கள் நடந்திருக்கக்கூடும். அந்த இடைவெளிகளை ஒரு புத்திசாலியான பார்வையாளன் தன்னிச்சையாக இட்டு நிரப்பிக் கொள்வான் என்கிற துணிச்சலான அனுமானத்தில் அவர் அந்த இடைவெளிகளை விட்டுச் செல்கிறார். ஒரு படைப்பை உருவாக்குகிறவனுக்கும் அதை நுகர்கிறவனுக்கும் உள்ள பரஸ்பர புரிதலும் பகடையாட்டமும்தான் அந்த அனுபவத்தை இன்னமும் உன்னதமாக்குகிறது.
திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிற சிசிடிவி உதாரணத்தையே எடுத்துக் கொள்வோமே! சமகால கண்காணிப்பு சமூகத்தில் எங்கெங்கு காணினும் காமிராக்கள் இருக்கத்தான் செய்கின்றன?! எனில் நடக்கின்ற குற்றங்கள் அனைத்திலும் சம்பந்தப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விடுகிறார்களா? இல்லைதானே?
‘நம்மளை விட சைக்கோ அதிக புத்திசாலி சார்’ என்றொரு வசனம் இந்தப் படத்தில் வருகிறது. காவல்துறை அதிகாரியினாலேயே அது சொல்லப்படுகிறது. எனில் தன் புத்திக்கூர்மையை வைத்து அதற்கேற்ப சாதகமான சூழலை அவன் அமைத்துக் கொண்டான் அல்லது தற்செயல் அதிர்ஷ்டங்கள் அவனுக்குத் துணை புரிந்தன என்கிற கற்பனையை ஏன் நம்மால் மேற்கொள்ள முடியவில்லை?
இப்படி தர்க்கப்பிழைகளை நோண்டி கண்டுபிடிக்கும் சமயத்தில் நம் கண் முன்னாலேயே பல உன்னதமான சித்திரங்கள் திரைப்படத்தில் நழுவிக் கொண்டிருக்கும் அபத்தம் நமக்கு உறைக்கவேயில்லையா?
இந்தத் திரைப்படம் குறித்து என் பார்வையிலும் சில போதாமைகளும் சந்தேகங்களும் இருக்கத்தான் செய்தன. இயக்குநரின் நோக்கில் அதற்கு விடைகள் இருக்கலாம். இவற்றிற்குப் பின்னர் வருகிறேன்.
ஆனால் இந்தப் போதாமைகளைக் கொண்டு நிச்சயம் இந்தப் படத்தை நான் 'ஹெஹ்ஹே' என்று கெக்கலி கொட்டி நிராகரிக்க மாட்டேன். ஏனெனில் பெரும்பாலும் குப்பைகள் நிறைந்திருக்கும் தமிழ் சினிமாவில் தனித்துவமாக செயல்படுகிற ஒரு சில படைப்பாளிகளையும் நாம் அவமதித்து, மலினப்படுத்தி நிராகரிப்பதைப் போன்ற அபத்தம் இருக்கவே முடியாது.
**
இந்தத் திரைப்படத்திலுள்ள உன்னதமான விஷயங்களை முதலில் பார்த்து விடுவோம். தொழில் நுட்பங்களை கையாண்டவர்களின் வரிசையில் நான் முதலில் கைகுலுக்க விரும்புவது ஒளிப்பதிவாளரிடம்.
தன்விர் மிர் மிரட்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கொலையாளி தான் கடத்தி வந்த இளம் பெண்ணை பலிபீடத்தில் கிடத்தி வெட்டுவதற்கான முனைப்புகளை செய்கிறான். வேகமான உடல் அசைவுடனும் அதற்கு எதிர்மாறாக நிதானமான முகபாவத்துடனும் அவன் இந்தக் காரியத்தை செய்யும் போது அவனுடன் காமிரா சுழன்றடிக்கும் காட்சி ஒன்றே போதும், தன்விரின் மேதமையைச் சொல்ல. கொலையாளியின் உளக்கொதிப்பை காமிரா மிகத் துல்லியமாக பிரதிபலித்திருக்கிறது என்றே என்னால் கற்பனை செய்ய முடிந்தது.
இது போல் பல காட்சிகளை உதாரணம் சொல்ல முடியும். மெழுகுவர்த்தி வெளிச்சத்தின் பின்னணியில் மேரிமாதாவின் பின்புலத்துடன் வருகிற அந்த பிரத்யேகமான காட்சிக்கோர்வையை உன்னதம் என்றே சொல்ல வேண்டும். எடிட்டிங்கும் பல இடங்களில் மிக அபாரமான தன் பணியைச் செய்திருக்கிறது.
அடுத்ததாக இளையராஜா. எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ‘குற்றமே தண்டனை’ போன்ற திரைப்படங்களில் இளையராஜாவின் இசை அநாவசியமான இடங்களிலும் மிகையாக ஒலித்துக் கொண்டே இருந்ததாக நான் உணர்ந்தேன். “முன்னணி இசை’ என்று டைட்டில் கார்டில் குறிப்பு போட்டு மிஷ்கின் இதை ‘ரொமான்டிசைஸ்’ செய்ததும் அப்போது எனக்கு நகைப்புக்குரியதாக இருந்தது. (அந்தச் சமயத்தில் இவற்றையெல்லாம் எழுதி பல ராஜா ரசிகர்களின் பகைமையை வேறு சம்பாதித்துக் கொண்டேன்).
ஆனால் இந்தத் திரைப்படத்தில் இளையராஜா ஓர் அற்புதமான மாயத்தை நிகழ்த்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அமைதியாகச் செல்ல வேண்டிய இடங்களில் மெளனத்தை நிரப்பியது ஓர் ஆச்சரியம் என்றால் பரபரப்பான தருணங்களில் ஓர் அருவி போல இசை ஆவேசமாக மேலே எழுந்து அடங்கும் பாணியானது காட்சியின் சுவாரசியத்தைக் கூட்டியதை வியப்புடன் கவனித்துக் கொண்டிருந்தேன். எந்தவொரு இடத்திலும் பின்னணி இசையை நான் இடையூறாக உணரவே இல்லை.
மூன்று பாடல்களுமே அட்டகாசம். ‘உன்னை நெனச்சு..நெனச்சு’ ஏற்கெனவே ஹிட் ஆகி பலரின் இதயத்தை உருக்கிக் கொண்டிருக்கிறது. இது படமான விதம், என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு இருந்தது. (சிங்கம்புலி எப்போதுமே என்னை எரிச்சலூட்டக்கூடிய ஒரு நகைச்சுவை நடிகர். ஆனால் இந்தப் பாடலின் சில கணங்களில் அவர் தருகிற முகபாவம் அத்தனை அற்புதமாக இருந்தது. கீழேயுள்ள படத்தைக் கவனியுங்கள்.
‘தாய் மடியில்’ பாடலுக்கு கைலேஷ் கேர்’ரின் குரலை உபயோகித்தது நல்ல தேர்வு. அவரின் கரகரப்பான குரல்தான் இந்தப் பாடலின் அடிப்படை வசீகரமே. பாடல்கள் உருவானதில் மிஷ்கினின் பங்களிப்பும் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். ‘வெளியே போடா’ன்னு பல சமயங்கள்ல என்னை ராஜா துரத்திடுவாரு. இருந்தாலும் கேட்டு கேட்டு இந்த விஷயங்களை வாங்கினேன்” என்று நேர்காணல்களில் சொல்கிறார் மிஷ்கின்.
போலவே இந்தத் திரைப்படத்தின் ‘சவுண்ட் டிசைனிங்கும்’ அட்டகாசம். இதற்காகவே இது நல்ல ஒலியமைப்பு உள்ள அரங்கத்தில் பார்க்க வேண்டிய படமாக இருக்கிறது. இல்லையெனில் இந்த அனுபவத்தை நிச்சயம் இழப்போம்.
**
டிரைய்லரைக் கண்டபிறகு உதய்நிதியின் மீது எனக்கு கூடுதல் அவநம்பிக்கையாக இருந்தது. மிஷ்கின் படத்தின் கனத்தை அவர் தாங்குவாரா என்பது குறித்து. பல காட்சிகளில் குளோசப் இல்லாமல், கூலிங்கிளாஸ் போட்டு அவர் சமாளித்து விட்டாலும் (அல்லது மிஷ்கினின் உதவியுடன் சமாளிக்க வைக்கப்பட்டாலும்) உதய்நிதியின் நடிப்பில் குறையாக ஏதும் சொல்ல முடியாததே அவரின் சாதனை எனலாம். உதய்நிதியை இப்படி நடிக்க வைத்ததை மிஷ்கினின் சாதனை என்பதையும் இதனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.
ஜலதோஷம் பிடித்த மூக்கு போன்ற அசட்டுத்தனமான சிகப்புடன் இருக்கும் அதிதி ராவின் முகத்தை என்னால் எப்போதும் அத்தனை ரசிக்க முடியாது. ஆனால் இந்தத் திரைப்படத்திற்கு அவர் அத்தனை கச்சிதமாகப் பொருந்தியிருந்தார். ‘அவன் கொலைகாரன் இல்லை. குழந்தை’ என்று ஒரு தேவதையால்தான் சொல்ல முடியும். அந்தத் தேவதைத்தனம் அவரின் தோற்றத்திலும் உடல்மொழியிலும் இருந்தது. (குறிப்பாக கொலைகாரன் பீடத்தில் கிடத்தி இவரை வெட்ட முனைய போது பளிங்கு போன்ற அந்தக் கழுத்தின் வெண்மை எத்தனை அழகாக இருந்தது?! நாயகி சவால் விடாமல் இருந்திருந்தாலும் அவன் வெட்டாமல் நிறுத்தியிருப்பானோ.. என்னவோ! அத்தனை அழகான கழுத்து).
நித்யா மேனனின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது என்றாலும் அந்தப் பாத்திரம் ஏன் அத்தனை ‘சினிக்’தனமாக நடந்து கொள்கிறது என்பது புரியவில்லை. ஒரு விபத்து அவருடைய வெற்றிகரமான வாழ்க்கையை முடக்கிப் போட்டது குறித்தான எரிச்சலும் கோபமும் அவரிடம் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அம்மாவை ‘வாடி போடி’ என்று அழைப்பதும் (நான் முதலில் ரேணுகாவை வேலைக்கார அம்மணி என்றே நினைத்தேன்). பார்ப்பவர்கள் அனைவரிடமும் எரிந்து விழுவதும் என அவரின் பாத்திர வடிவமைப்பு செயற்கைத்தனமாக இருந்தது. (‘அவள் ஒரு தொடர்கதை’ நாயகி ‘கவிதா’வைப் போல. ஆனால் ‘அஒதொ’வில் அதற்கான பின்னணிக்காரணங்களும் நியாயங்களும் இருந்தன.)
போலவே க்ரைம் சீனை பார்வையிடும் அசந்தர்ப்பமான நேரத்திலும் பாட்டை முணுமுணுத்துக் கொண்டேயிருக்கிற காவல்துறை அதிகாரி. தன் கதாபாத்திரத்திற்கு வித்தியாசமானதொரு மேனரிசத்தை தந்து விட வேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்கப்பட்டது போல் தெரிகிறது.
"எப்படியாவது தப்பிச்சிடுங்க சார்" என்று அதிதி ராவ் சாத்தியமில்லாத உபதேசத்தைச் சொல்லும் போது "முடியாதும்மா.. டயர்டா இருக்கு" என்று தன் கையறு நிலையை ஏற்றுக் கொள்ளும் காட்சியில் ராம் கவனத்தைக் கவர்கிறார்.
**
இப்போது இந்தத் திரைப்படத்தில் நான் உணர்ந்த போதாமைகளின் விஷயத்திற்கு வருவோம். முன்பே குறிப்பிட்டபடி இயக்குநரின் நோக்கில் இதற்கான விடைகள் இருக்கலாம். ஆனால் இந்த விஷயங்கள் எனக்கு உறுத்தலாக பட்டன. ஆனால் படத்தின் ஒட்டுமொத்த அனுபவத்தில் இவை பெரிதும் குறுக்கீடு செய்யவில்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்.
காவல்துறையினரின் சாகசங்களை பெருமிதப்படுத்தும் விதத்தில் ‘சாமி சிங்கம்’ போன்ற மிகையான திரைப்படங்கள் ஒரு பக்கம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சமீபத்திய ‘தர்பாரிலும்’ என்கவுண்ட்டர் என்பது பெருமிதத்தின் கூச்சலாகவே இருந்தது. இப்படிப்பட்ட மிகைகள் ஒருபக்கம் என்றால் இந்தத் திரைப்படத்தில் காவல்துறையின் பங்களிப்பு மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தது.
ஒரு கொடூரமான மனிதனை, கண்பார்வையற்ற இளைஞன் தேடிப் பிடிக்க வேண்டும். இது எப்படி சாத்தியம்? இந்த அசாதாரணமான விஷயமும் முரணும்தான் இந்தப் படத்தின் அடிப்படை சுவாரசியம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் அதற்காக உதய்நிதி பாத்திரத்தை மட்டும் பிரதானமாக முன்னிறுத்தி காவல்துறை ஆசாமிகளை ‘டம்மி’யாக்கியிருப்பது சற்று ஏமாற்றமாக இருக்கிறது. அதிலும் சிபிசிஐடி அலுவலகத்தில் இருக்கிற ஒருவரே ‘இந்தப்பா.. சம்பந்தப்பட்ட பைல்.. பல வருஷம் ஆகியும் எங்களால பிடிக்க முடியலை. நீயாவது முயற்சி பண்ணு’ என்று கொடுத்து விடுகிறார். நல்ல வேளை, அடுத்த காட்சியில் ஐ.ஜியே தன் தொப்பியைக் கழற்றி உதய்நிதியின் கையில் கொடுத்து விட்டு ‘நான் ரிசைன் பண்ணிட்டேன். நீ அந்தப் போஸ்ட்டுக்கு அப்ளை பண்ணு’ என்பது போல் காட்சி வந்துவிடுமோ என்று பயமாகி விட்டது.
நித்யா மேனன் சிறப்பாக பணிபுரிந்த ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி. அவர் சமகால அதிகாரிகளோடு பேசி வழக்கு தொடர்பான தகவல்களை வாங்க முடியாதா? இதற்காக உதய்நிதியை சிபிசிஐடி அலுவலகத்தில் திருட அனுப்புவது எல்லாம் அசாதரணமான கற்பனையாக இருக்கிறது. உதய்நிதியை ஆரம்பத்தில் ஒரு சராசரி நபர் என்கிற கோணத்தில் ஒதுக்கித் தள்ளினாலும் ஒரு கட்டத்தில் அவருடைய தேடலில் உள்ள சிரத்தையை காவல்துறையினரும் அறிந்து கொள்கிறார்கள். எனில் தங்களின் விசாரணையில் ஏன் அவரையும் இணைத்துக் கொள்ளவில்லை?
அதிதி ராவ் போகிற இடங்களுக்கு எல்லாம் அவரை பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறார் உதய்நிதி. Stalking என்கிற இந்த விஷயம் எத்தனை ஆபத்தானது என்பதைப் பற்றி தொடர்ந்து பேசுகிறோம். ஆனால் மிஷ்கின் படத்திலேயே இது வருகிறது. ‘உங்க வீட்டு வாட்ச்மேன், வேலைக்காரங்களுக்கு காசு கொடுத்துதான் நீ போற இடங்களை தெரிஞ்சுப்பேன்” என்கிறான் நாயகன். இது போன்ற சில்லறைத்தனமான விஷயத்திற்கே நாயகி அவனை வெறுக்க வேண்டும். ஆனால் காதல் போல் ஏதோ ஒன்று அவளுக்குள் வந்து விடுவது அநியாயம்.
“அவன் என்னைக் காப்பாத்த வருவான்’ என்கிற அசாதாரணமான நம்பிக்கை அதிதி ராவிற்கு வர வேண்டுமென்றால் அவர்களின் காதலும் பரஸ்பர புரிதலும் அழுத்தமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பழகத் துவங்கிய கணத்திலேயே அவள் கடத்தப்பட்டு விடும் போது அவளுக்கு எவ்வாறு அப்படியொரு நம்பிக்கை வரும்? இது சம்பந்தப்பட்ட காட்சிகள் அழுத்தமாக பதிவாகாததால் அதிதி ராவின் நம்பிக்கை மிகையாகத் தோன்ற வைக்கிறது.
கார் ஓட்டத் தெரிந்த ஒரு நபர் கூட இருக்கும் போது உதய்நிதியும், நித்யாவும் ஏன் அந்த சாகசப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்? கொலைகாரனின் குணாதிசயத்தைப் பற்றி நன்கு அறிந்த சிங்கம்புலி, ஏன் எந்தவொரு உதவியும் இல்லாமல் அவனைப் பின்தொடர வேண்டும்..
இப்படி பல கேள்விகள் எனக்கும் தோன்றத்தான் செய்கின்றன. ஆனால்?
**
‘அவன் என்னைத் தேடி வருவான்; காப்பாத்துவான்’ என்கிற அதிதி ராவின் சவாலை ஏற்று கொலைகாரன் சில நாட்கள் அவகாசம் தருவது ஒரு கிளிஷேதான் என்றாலும் அதிலொரு வசீகரம் உள்ளது. காவல்துறை அதிகாரி சொல்வது போல ‘சராசரி நபர்களை விடவும் மனப்பிறழ்வு உள்ளவர்கள் கூடுதல் புத்திசாலித்தனத்துடன் இயங்குவார்கள். எனவேதான் அதிதி ராவ் சொல்வது அவனுக்கு ஒரு சுவாரசியமான விளையாட்டாகப் படுகிறது. எனவேதான் உற்சாகமாக இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு அவளை தற்காலிகமாக சாகடிக்காமல் இருக்கிறான்.
அதே சமயத்தில் உதய்நிதி மெல்ல மெல்ல தன்னை நெருங்கி வருவதை அறிந்து தோல்வியின் வாசனையையும் அவனால் உணர முடிகிறது. ‘கெளதம் வந்துட்டு இருக்கான்” என்று தன் வீழ்ச்சியை ஒப்புக் கொள்கிற இடத்திற்கு அவன் வந்து சேர்வது இந்தப் பாத்திரத்தின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது.
**
மனிதனை அவனிடமிருந்து உற்பத்தியாகிற கீழ்மைகளிலிருந்து விலக்கி, நல்லனவற்றின் பக்கம் தள்ளுவதைத்தான் ஏறத்தாழ அனைத்து மதங்களும் செய்ய முயல்கின்றன. ஆனால் காலப்போக்கில் அதில் நுழைக்கப்படுகிற இடைச்செருகல்கள் நஞ்சை கலந்து விடுகின்றன. சில மத நிறுவனங்களில் ‘காமம்’ என்பது பாவமானது என்கிற விஷயம் தொடர்ந்து விதைக்கப்பட்டு அது தொடர்பான குற்றவுணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுகின்றன. மனிதனின் சில ஆதாரமான இச்சைகள் என்றுமே பாவமாக முடியாது. இது சார்ந்த விசாரணையையும் இந்தத் திரைப்படம் மேற்கொள்கிறது.
பெரும்பாலான மனச்சிக்கல்களின் ஆணிவேருக்கும் காமத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பது உளவியலின் ஆதாரமான கண்டுபிடிப்பு. ‘இயற்கையான உந்துதலால் செய்யப்பட்ட ஓர் இயல்பான காரியம், தவறு என்று கடுமையாக தண்டிக்கப்பட்டதால், அவமானப்படுத்தப்பட்டதால் ஒருவன் மிருகமாக உறுமாறுகிறான். சமூகத்தைப் பழிவாங்கத் துவங்குகிறான்.
கொடூரமான குற்றவாளிகள் வானத்தில் இருந்து குதிப்பதில்லை. இந்தச் சமூகத்தின் உள்ளே இருந்துதான் உருவாகிறார்கள். ஒருவகையில் சமூகம்தான் அவர்களை உருவாக்குகிறது எனலாம். அவர்களின் பங்களிப்பில்லாமல் குற்றவாளிகள் உருவாவதில்லை. குடும்பம், சமூகம், கல்விக்கூடம், அரசு என்று பல நிறுவனங்கள், குற்றவாளிகளின் உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கின்றன. நீங்கள், நான், அவர்கள் என்று நாம் அனைவருமே இதற்கு அறிந்தோ அறியாமலோ காரணமாக இருக்கிறோம்.
எப்போதோ படித்த ஒரு சிறுகதை நினைவிற்கு வருகிறது. தன்னுடைய மாணவன் ஒருவன் பெரும்பான்மையான சமயங்களில் ஆபாச வசைகளை சக மாணவர்களிடம் இறைப்பதை ஓர் ஆசிரியர் தொடர்ந்து கண்டித்துக் கொண்டேயிருக்கிறார். இத்தனைக்கும் அவன் மூன்றாம் வகுப்பு மாணவன்தான். ஆனால் ஆசிரியரின் கண்டிப்பை அலட்சியப்படுத்துகிறான்.
ஒரு கட்டத்தில் மிகவும் கோபமடையும் அவர், சிறுவனை இழுத்துக் கொண்டு அவனுடைய வீட்டுக்குச் செல்கிறார். அவனுடைய பெற்றோர்களிடம் இவனைப் பற்றி புகார் சொல்லி கண்டிக்கச் சொல்ல வேண்டும் என்பது அவரின் நோக்கம். வீட்டை நெருங்கும் போது உள்ளே இருந்து பயங்கர சத்தம். சிறுவனின் பெற்றோர்கள் கர்ணகடூரமான ஆபாச வசைகளை பரஸ்பரம் இறைத்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த ஒரு கணத்தில் ஆசிரியரின் பார்வை முற்றிலுமாக மாறி விடுகிறது. சிறுவனின் ஆபாச பேச்சிற்கு காரணம் அவனல்ல என்கிற உண்மை புரிகிறது. சிறுவனின் மீதுள்ள கோபம் முற்றிலும் மறைந்து ஆசிரியரின் பார்வையில் அவன் அனுதாபத்திற்குரியவனாக அந்தக் கணத்தில் மாறி விடுகிறான்.
இந்த அடிப்படையான விஷயத்தைத்தான் மிஷ்கின் இந்தத் திரைப்படத்தில் ஒரு நேரடி நீதிக்கதையாக அல்லாமல் ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் வடிவத்தில் நுட்பமாக சொல்ல முனைகிறார்.
“அவனைப் பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. தூக்குல போடுங்க சார்” என்று சந்தானத்தின் பாணியில் கூவுவது சராசரிகளின் இயல்பு. ஆனால் அறிவுத்தளம், ஆன்மீகத் தளம் போன்றவற்றின் பின்னணியில் இயங்குபவர்களால் அப்படி எளிதான. செளகரியமான தீர்விற்கு வந்து விட முடியாது. கொடூரமான குற்றவாளிகள் என்றாலும் அவர்களின் இளமைப்பருவ பிரச்சினைகளை, பின்னணிக் காரணங்களை அறிய முற்படும் அனுதாபத்துடன்தான் அவர்களால் இயங்க முடியும். அவர்கள் இந்த மனக்காயங்களுக்கு சிகிச்சையளித்து குற்றவாளிகளை மைய சமூகத்தில் கலக்க வைக்கவே முற்படுவார்கள். ஊரே அச்சத்துடன் வெறுத்து ஒதுக்கிய கொடூரன் அங்குலிமாலாவை புத்தர் தேடிக் குணப்படுத்தியது போல.
இந்தப் புரிதலுக்கும் முதிர்ச்சிக்கும் நாம் வந்தடையாவிட்டால் “ஏம்மா.. ஒரு கொடூரமான கொலைகாரனைப் போய் குழந்தைன்னு சொல்றீங்க?” என்று இந்தத் திரைப்படத்தில் வரும் பத்திரிகையாளர்களைப் போல நாமும் அதிர்ச்சியடைய வேண்டியதுதான்.
சைக்கோவாக நடித்த ராஜ்குமாரின் பங்களிப்பு அபாரம். அவருக்குள் இருக்கும் நல்லியல்பு ஒரு துவக்க காட்சியில் காட்டப்படுவதின் மூலம் ஒரு மனிதனுக்குள் உள்ள மிருகத்தின் அளவின் சதவீதமும் உணர்த்தப்படுகிறது.
மதவெறி பிடித்தவன், ஆணவக்கொலை செய்கிறவன், காதலை மறுத்த பெண்ணின் மீது ஆசிட் அடிக்கிறவன் என்று நம் சமூகத்தில் பல சைக்கோக்கள் உண்டு. உண்மையைச் சொன்னால் நாம் அனைவருமே ஒவ்வொரு வகையில் சைக்கோக்கள்தான். அவற்றின் சதவீதம்தான் மாறுபடுகிறது.
குற்றவாளிகளுக்குத் தரப்பட வேண்டியது தண்டனை அல்ல. மன்னிப்பு. ஏனெனில் அதன் சுமையை அவனால் தாங்கவே முடியாது. மன்னிப்புதான் குற்றங்களின் பங்களிப்பை கணிசமாக குறையச் செய்யும். தண்டனைகள் அல்ல.
suresh kannan
1 comment:
கட்டுரைக்கும், ஆவணப்படத்துக்கும்தான் லாஜிக், சரியான தகவல்கள் அவசியம். எல்லாவற்றுக்கும் தர்க்க நியாயம் பார்த்துக்கொண்டிருந்தால் ஒரே ஒரு பஞ்ச தந்திர கதையைக் கூட நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
நான் 23 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்பட பிலிம் புரொஜக்டர் இயக்கியிருக்கிறேன். அந்த வேலையை செய்த பிறகு சில காலம் எந்த திரையரங்கத்திலும் என்னால் படத்துடன் ஒன்றி பார்க்க இயலவில்லை. இந்த சமயம் ஆப்ரேட்டர் என்ன செய்கிறார், ஒரு புரொஜக்டரில் இருந்து இன்னொன்றுக்கு மாற்றும்போது முழுவதுமாக ஓடி முடிந்த பிறகு சேஞ்ச் செய்தாரா அல்லது ஒரு சில நிமிடங்களை ஏப்பம் விட்டுவிட்டாரா என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்கியது மனது.
கூகுள் புண்ணியத்தில் எல்லா விஷயத்திலும் தேவைக்கு அதிகமாகவே அவசியம் மற்றும் அவசியமற்ற தகவல்கள் நிறையவே தெரிந்து கொள்ள முடிகிறது.
விளைவு, ஒவ்வொன்றிலும் குறை கண்டு பிடிப்பது என்று இருப்பவர்களால் எதையுமே ரசிக்க முடியாமல் போய் விடுகிறது.
படம் என்றால் தொடக்கம் முதல் இறுதி வரை எப்படி இருக்கிறது என்றும், போர் அடிக்காமல் செல்கிறதா என்று மட்டும் பார்த்த காலங்கள் கடந்து விட்டது என்று நினைக்கிறேன்.
இது பற்றி பேசினால் நிறைய பேசிக்கொண்டே இருக்கலாம்.
Post a Comment