Thursday, January 23, 2020

'ஹீரோ' (2019) - மோசமான திரைக்கதைதான் இதன் வில்லன்




பி.எஸ். மித்ரன் இயக்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘ஹீரோ’ என்கிற திரைப்படத்தைப் பார்த்தேன். படத்தின் தலைப்பு ‘ஹீரோ’வாக இருந்தாலும் திரைக்கதைதான் இதன் வில்லன் என்று சொல்ல வேண்டும்.  இதில் இருந்த அபத்தமான ‘சினிமேட்டிக்’ தனங்களை கழித்து விட்டுப் பார்த்தால் இந்தப் படம் சொல்ல வரும் ஆதாரமான செய்தி சமகாலத்திற்கு அவசியமானதே.

அதற்கு முன் சில விஷயங்கள்.

சில வருடங்களுக்கு முன் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஒரு விநோதமான சத்தத்தை கேட்டேன். சைக்கிளில் இடியாப்பம் விற்றுக் கொண்டிருந்தவரிடமிருந்து அந்தச் சத்தம் சிறிய ஸ்பீக்கரில் இருந்து ‘இடியோப்பம்… இடியோப்பம்.’ என்று தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. அந்தச் சமயத்தில் எனக்கு எழுந்த மனவெழுச்சி சொல்லில் அடக்க முடியாததாக இருந்தது. வாசிக்கும் சிலருக்கு இது நகைப்பாக, சாதாரணமானதாக கூட தோன்றலாம். ஆனால் எனக்கு அது அவசியமான ‘கண்டுபிடிப்பாக’ தோன்றியது.

சற்று யோசித்துப் பாருங்கள். சாலை வழியாக வீடு வீடாக பொருட்களை விற்றுச் செல்லும் சிறு வணிகர்கள் தங்களின் உரத்த குரலில் தாங்கள் விற்கும் பொருட்களை கூவிக் கொண்டே செல்ல வேண்டும். வீட்டினுள் இருக்கும் இல்லத்தரசிகளின் காதில் விழுமாறு உரக்க கூவினால்தான் அவர்களின் பிழைப்பு நடக்கும். இப்படி தினமும் வருடக்கணக்கில் கூவுபவரின் தொண்டை என்னவாகும்? எத்தனை காலமாக இவர்கள் இப்படி அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள்? ஆனால் ஒரு சிறிய கண்டுபிடிப்பு அவர்களின் பெரும் சுமைகளில் ஒன்றை இறக்கி வைத்திருப்பது எத்தனை மகத்தான விஷயம்?!

எளிய சமூகத்தின் மக்களுக்கு உபயோகமாகும், அன்றாட வாழ்வில் நாம் சிரமப்பட்டு செய்யும் விஷயங்களை எளிதில் கடக்க உதவும் ‘கண்டுபிடிப்புகள்’ உன்னதமானவை என்று எப்போதும் எனக்குத் தோன்றும். ரோபோட்டும் செயற்கைக்கோளும் மட்டும் விஞ்ஞான வளர்ச்சியில்லை. இளநீரை எப்படி எளிதாக துளையிட்டு பயன்படுத்துவது என்பது போன்ற சாதாரண ‘கண்டுபிடிப்புகளும்’ என்னளவில் முக்கியமானவையே.

நாம் பத்திரிகைகளில் அவ்வப்போது வாசித்திருப்போம். ‘+2 படிக்கும் மாணவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்தார்’ என்பது போன்று பல செய்திகள்.. அதற்குப் பிறகு அந்தக் கண்டுபிடிப்புகளும் அவர்களும் என்னவானார்கள் என்கிற தகவலே நமக்குத் தெரியாது. அந்தக் கண்டுபிடிப்புகள் நடைமுறைக்கு வந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். ஆனால் வராது.

இந்தத் திரைப்படத்தில் சித்தரிக்கப்படுவது போல சம்பந்தப்பட்ட மாணவர்களை ‘கார்ப்பரேட்’ ஆசாமிகள் கடத்தி கண்ணில் ஊசி போட்டு முடக்கி விடுவார்கள் என்றெல்லாம் ‘சினிமாத்தனமாக’ நம்ப நான் தயாரில்லை. அவர்களின் ஆர்வத்தை வளர்த்தெடுக்கவோ, பொருளுதவி செய்து ஆதரிக்கவோ எவரும் இருந்திருக்க மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தமாக இருந்திருக்கக்கூடும். அவர்கள் அப்படியே முடங்கிப் போய் வேறு திசையில் சென்றிருப்பார்கள்.

**

இந்தத் திரைப்படத்தில் அழுத்தமாகவும் தொடர்ந்தும் சுட்டிக்காட்டப்படுவது போல நமது கல்விமுறையானது, சுயசிந்தனையற்ற, மனப்பாடக்கல்வியில் மூழ்கிய ‘ஆட்டுமந்தைகளைத்தான்’ பெரும்பான்மையாக உருவாக்குகிறது. ‘நான் டாக்டராகி ஊருக்கு சேவை செய்வேன்’ என்று இளமைப்பருவத்தில் மெய்யான ஆவலுடன் சொல்லுகிற சிறுவர்கள், வளர்ந்து சம்பந்தப்பட்ட கல்வியைக் கற்ற பிறகு அதே சேவை மனப்பான்மையுடன் பெரும்பாலும் இருப்பதில்லை. மாறாக தமது கல்வியைப் பயன்படுத்தி எப்படி அதிக பொருள் ஈட்டுவது என்கிற எண்ணம் தோன்றி அது ஒரு கட்டத்தில் அடங்காத வெறியாவும் பேராசையாகவும் மாறி விடுகிறது.

‘எந்தப் படிப்பில் படித்தால் அதிகம் சம்பாதிக்க முடியும்?” என்கிற சூழல்தான் பெரும்பாலான மாணவர்களின் எதிர்காலக்கல்வியை தீர்மானிக்கிறது. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அப்படித்தான் வழிநடத்துகிறார்கள். ஏறக்குறைய பங்குச் சந்தை நிலவரத்திற்கு ஒப்பான சூதாட்டம் இது. மாணவர்களின் தனித்தன்மை, திறமை, ஆர்வம் போன்வற்றிற்கு எவ்வித மதிப்பும் இல்லை.

ஒரு மாணவனின் தனித்திறமைகளை ஆரம்பக்கட்டத்திலேயே தொடர்ந்து கவனித்து அது தொடர்பான கல்விக்குள் அவனை வழிநடத்துவது தொடர்பான கல்விமுறை மேலைய நாடுகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவ்வாறான அணுகுமுறை என்பது இங்கு துளியும் இல்லை.

அரசியல் நீக்கம் செய்யப்பட்ட, துளியும் சமூக அக்கறை இல்லாத, சுயநலத்தில் மூழ்கிய தலைமுறையினர்தான் பெருகி வருகிறார்கள். அபூர்வமாக, தியாகமும் பொதுநலமும் கொண்டு உருவாகி வருகிறவர்கள் எள்ளலாகவும் மலினமாகவும் பார்க்கப்படுகிறார்கள்; தனிமைப் படுத்தப்படுகிறார்கள்.


**

இந்தச் செய்தி ‘ஹீரோ’வில் மிக அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. இவை சில காட்சிகளில் கூர்மையான வசனங்களாகவும் வெளிப்படுகிறது.

ஆனால் இதிலுள்ள மிகையான சினிமாத்தனங்கள், இந்த ஆதாரமான செய்தியை அமுக்கி ஒரு சலிப்பான அனுபவமாக மாற்றி விடுகிறது. இளம் திறமைகள் அடையாளம் காணப்படாததும் வளர்த்தெடுக்கப்படாததும் என்பது ஒரு சமூகப் பிரச்சினை. ஆனால் அதை இயல்பான, நம்பகத்தன்மையுடனான காட்சிகளாக சித்திரிக்காமல் பழைய கால நம்பியார், வீரப்பன் மாதிரி ‘கார்ப்பரேட் வில்லன்’ வழியாக சித்தரித்தது மோசமான கற்பனை.

தங்களின் லாபவெறிக்கு தடையாக உள்ள அனைத்தையும் கார்ப்பரேட்தனம் என்பது விழுங்கி ஏப்பம் விட்டு விடும் என்பது உண்மைதான். ஆனால் அது இந்தத் திரைப்படத்தில் மிகையான வணிகத்தனத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. அதுவே இதை ஒரு முக்கியமான சினிமாவாக ஆகி விடாத விபத்தைச் செய்திருக்கிறது.

பொதுவாக தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு இரண்டாவது படம் என்பது ‘கண்டம்’ என்பார்கள். இதுவொரு கற்பிதம் அல்லது மூடநம்பிக்கை. ஆனால் மித்ரனும் இந்தக் கண்டத்தில் விழுந்து விட்டார் என்றுதான் தோன்றுகிறது.

இன்றைய தொழில்நுட்பம் என்பது எத்தனை மாய வலைகளை, டிஜிட்டல் படுகுழிகளை உருவாக்கி வைத்திருக்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வை, ஜனரஞ்சகமான மொழியில் தன் முதல் திரைப்படத்தில் (இரும்புத்திரை) சொல்லியிருந்தார் மித்ரன். (தோழி சமந்தா நடித்திருந்ததும் ஒரு கூடுதல் சிறப்பம்சம்). 😃 ஆனால் இரண்டாவது திரைப்படத்தில் இந்த ஜனரஞ்சகமான திரைமொழி சரிவர அமையவில்லை.

‘சூப்பர் ஹீரோ’ என்பவன் வானத்தில் இருந்து குதித்து நம்ப முடியாத சாகசங்களைச் செய்பவன் அல்ல. தம்மைச் சுற்றி நிகழும் அநீதியைத் தட்டிக் கேட்டு அதற்காகப் போராட முனையும் எந்தவொரு சாமானியனும் ஹீரோதான்’ என்கிற செய்தியைச் சொல்வதற்காக பல்வேறு நம்பமுடியாத திருப்பங்களையும் வணிக அம்சங்களையும் இயக்குநர் பயன்படுத்தியிருப்பது திகட்ட வைக்கிறது.

“மக்களுக்கு கல்வி தர்றதுக்காக கொள்ளையடிக்க ஆரம்பிச்சேன்” என்று ‘ஜென்டில்மேன்’ கதையை அர்ஜுனின் பிளாஷ்பேக்கில் உபயோகித்தது மட்டுமல்லாமல் அதையும் அவரின் வாயாலேயே வசனமாக சொல்ல வைத்தது நல்ல நகைச்சுவை. உண்மையில் இந்தத் திரைப்படத்தை ஷங்கரின் பாணியில்தான் மித்ரன் நகலெடுக்க முயன்றிருக்கிறார். இறுதியில் பெய்யும் பணமழை (சிவாஜி’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் இது) முதற்கொண்டு பல தடயங்கள் தெரிகின்றன.

இத்தனை தீவிரமான செய்தியை சொல்ல வரும் இந்தத் திரைப்படத்தின் ஆரம்பக் கணங்கள் ஒரு மட்டமான சினிமாவின் பாணியில் இருக்கின்றன. நாயகியோடு (இயக்குநர் பிரியதர்ஷனின் மகளாமே?!. செம க்யூட்!) சிவகார்த்திகேயன் அடிக்கும் ‘ரொமான்ஸ்’ லூட்டிகள் ஆரம்பத்திலேயே சோர்வை ஏற்படுத்துகின்றன. ஒரு கட்டத்தில் துணைநடிகரின் நிலைக்கு சிவகார்த்திகேயன் சென்று விடுகிறார்.

“மிஸ்டர். லோக்கல் திரைப்படத்தின் பயங்கரமான தோல்விக்குப் பிறகு ‘நம்ம வீட்டு பிள்ளை” சிவகார்த்திகேயனுக்கு சற்று கைகொடுத்தது. ஆனால் அவர் ‘ஹீரோ’வில் மீண்டும் சறுக்கியிருப்பது துரதிர்ஷ்டம்.

**

மாணவர்களின் சுயசிந்தனையை வளர்க்காத சமூகச் சூழல்தான் இந்தத் திரைப்படத்தின் அடிப்படை. அப்படி விதிவிலக்காக மீறியெழுகிற இளைஞர்களும் சமூகத்தின் அவலமான சூழலால் காயடிக்கப்படுகிறார்கள். “நான் கண்டுபிடிச்சத மாத்திச் சொல்லி என்னையே திருடி’ன்னு சொல்லிட்டாங்க” என்கிற மனஉளைச்சலில் வருத்தப்பட்டு சாகிறாள் இதில் வருகிற ஓர் இளம்பெண்.

வெளிவந்த பிறகு, இந்தப் படமும் அதே போன்றதொரு சர்ச்சையில் சிக்கித் தவித்ததை அவல நகைச்சுவை என்றுதான் சொல்ல வேண்டும்.




suresh kannan

No comments: