சில வருடங்களுக்கு முன் மதுரையில் வாக்கிங் சென்ற ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் அதன் பின்னணியில் ஒரு மூத்த அரசியல்வாதியின் மகன் இருந்ததாக பெரும்பான்மையோரால் நம்பப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதும் பின்னர் நீதிமன்றத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதும் நமக்கு தெரியும். அவர்களின் பெயர்களை நம்மால் கூற முடியும். ஆனால் அந்தக் கொலையை நிகழ்த்திய மனிதர்களைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அவ்வாறான நிழல் மனிதர்களை ரத்தமும் சதையுமாக நம் முன் உலாவ விடுகிறது 'சுப்பிரமணியபுரம்'.
தமிழ்ச்சினிமாவின் வரலாற்றில் அது வரை புழங்கிக் கொண்டிருந்த புராண, சமூகப் படங்களிலிருந்து மாற்றாக 1980-களில் ஒரு புதிய அலை தோன்றியது. மகேந்திரன், பாலுமகேந்திரா, ருத்ரையா, போன்றவர்கள் யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான திரைப்படைப்புகளை உருவாக்கினர். தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று இந்த காலகட்டம் சினிமா விமர்சகர்களால் கருதப்படுகிறது. பிறகு வணிக சினிமாக்களின் பிடியில் நீண்ட வருடங்கள் சிக்கியிருந்த தமிழ்சினிமா, தற்போதைய காலகட்டத்தில்தான் நம்பிக்கை தரும் புதிய இயக்குநர்களின் மூலம் வணிகப்பிடியிலிருந்து மெல்ல தன்னை விடுவித்துக் கொண்டு வருகிறது. சுப்பிரமணியத்தின் பிரதான கதை நிகழும் காலகட்டமும் 1980 என்பது இதற்கு மிக இசைவான பொருத்தமாகும்.
இந்தப்படத்தின் கதைச்சரடு மிக மெல்லியது. அதை அழுத்தமான திரைக்கதையின் மூலமும் பாத்திரங்களையும் காட்சிக் கோர்வைகளையும் பெரும்பாலும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதின் மூலம் நெடுங்காலம் பார்வையாளர்களால் பேசப்படக்கூடிய ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் சசிகுமார்.
சசிகுமார். பரமன், அழகர், காசி, டோப்பா, டும்கன் என்கிற ஐவர் சுப்பிரமணியபுரத்தின் சில்லறை ரவுடிகள். கடைசி இருவரைத்தவிர மற்றவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. அந்த ஊரில் இருக்கும் சோமு என்கிற முன்னாள் கவுன்சிலர் இழந்து போன தன்னுடைய பெருமையை மீட்கத் துடிக்கிறார். அவரின் தம்பி கனகு இதற்கான பின்னணியில் இயங்குகிறான். இவர்களின் தங்கை துளசியும் அழகரும் மெளனக்காதல் புரிகின்றனர். சோமு எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாவட்ட செயலாளர் பதவி இன்னொருவருக்கு போக கோபமுறும் கனகு, புதிய மா.செவை கொலைசெய்ய அழகர் குழுவை மறைமுகமாக தூண்டுகிறான். அவர்களுக்காக கொலை செய்யும் அழகரும், பரமனும் பிறகு எந்தவித உதவியும் செய்யப்படாமல் கனகுவால் புறக்கணிக்கப்படுகின்றனர். கோபமுறும் இருவரும் ஜெயிலில் உள்ள ஒருவரின் உதவியால் வெளியே வந்து அந்த நன்றிக்கடனுக்காக ஒரு கொலையை செய்கின்றனர். கனகுவை வீழத்த இருவரும், இவர்களை வீழ்த்த அவனும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குப் பிறகான காட்சிகள் மிக அழுத்தமாகவும் எதிர்பாராத திசையிலும் பயணிக்கிறது.
கனகு அழகருக்கும் பரமனுக்கும் செய்யும் துரோகம், துளசி அழகருக்கு செய்யும் துரோகம், காசி பரமனுக்கு செய்யும் துரோகம்... என இந்தக் கதையின் மையச்சரடு துரோகத்தினால் பின்னப்பட்டிருக்கிறது. Oldboy என்கிற கொரிய திரைப்படம், பழிவாங்குதலை ஆதாரமாக கொண்டிருக்கிறதென்றால் இந்தத் திரைப்படம் துரோகத்தின் நிகழ்வுகளால் இயங்குகிறது.
()
தற்கால படங்களிலிருந்து மிகுந்த மாறுதலைக் கொண்டிருக்கும் இந்தப்படத்தின் முக்கியமான சுவாரசியமான விஷயம் பிரதான கதை நிகழும் காலம். 1980-ன் காலம் மிக அருமையாக இதில் நிறுவப்பட்டிருக்கிறது. டார்ட்டாய்ஸ் கொசுவர்த்தி சுருள் சுவர் விளம்பரங்கள், ரூ.2.25 சினிமா டிக்கெட், குழாய் வடிவிலான ஒலிபெருக்கிகள், நெளிவான 20 பைசா நாணயம், கோடீஸ்வரர்களாக விரும்புவர்கள் நாடும் கே.ஏ.சேகர் லாட்டரி நிறுவன விளம்பரம், டயனோரா தொலைக்காட்சி, கோலி சோடா, பெல்பாட்டம் பேண்ட், (யானைக்கால் வியாதியஸ்தர்கள் தங்கள் குறையை மறைக்க போடுவது என்றொரு கிண்டல் அப்போது உலவியது) பெரிய காலர் வைத்த சட்டை, ஸ்டெப் கட்டிங் தலை.... என கலைஇயக்குநர் ரெம்கோனின் நேர்த்தியான பங்களிப்பின் மூலம் பார்வையாளர்கள் அந்தக் காலகட்டத்திற்கே சென்று விடுகின்றனர். (வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்ட மாநகர பேருந்து மாதிரியான சில நெருடல்களை தவிர்த்து விடலாம்). 80-களில் அடித்தட்டு இளைஞர்கள் லுங்கி கட்டுவதே ஒரு தினுசாக இருக்கும். லுங்கியை பாதியாக மடிக்காமல், தொடைப்பகுதியில் லுங்கியை பிடித்து தூக்கி இடுப்பின் மேலாக முடிச்சிடுவதில் லுங்கி முக்கால்பாகம் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த சமாச்சாரம் கூட மிக நுணுக்கமாக இந்தப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இளைஞன் ஒருவனுக்கு அந்த வயதில் மிகுந்த பரவசத்தையும், போதையையும் தருவது, அவன் காதலிக்க விரும்பும் பெண்ணின் கடைக்கண் பார்வையாகத்தான் இருக்க முடியும். துளசியின் அடிக்கண் பார்வையும் அழகரின் அசட்டுச் சிரிப்பும் இளையராஜாவின் பொருத்தமான பின்னணி பாட்டுக்களோடு அவ்வப்போது மோதிக் கொள்வதின் மூலம் இந்த விஷயம் உயர்ந்த பட்ச கலையம்சத்துடன் இந்தப் படத்தில் பதிவாகியிருக்கிறது, தன்னுடய காதலை நண்பனிடம் நிரூபிக்க முயல்வதில் கர்வமடைவது உட்பட. (ஆனால் இந்தக் காட்சிகள் உடனுக்குடன் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருப்பது சற்றே சலிப்பைத் தருவதையும் சொல்ல வேண்டும்)
கஞ்சா கருப்பு தவிர அத்தனை கதாபாத்திரங்களையும் இயக்குநர் புதிதாக பயன்படுத்தியிருப்பதால் புகழ்பெற்ற நடிகர்களின் கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் நினைவுக்கு வந்து தொலையாமல் காட்சிகள் மிகுந்த நம்பகத்தன்மையோடு இயங்குகின்றன. அழகராக ஜெய்யும், பரமனாக இயக்குநர் சசிகுமாரும், கனகுவாக இயக்குநர் சமுத்திரக்கனியும், காசியாக கஞ்சா கருப்புவும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கின்றனர். இவர்களைத் தவிர பிரதான பாத்திரங்கள் அல்லாதவர்களில் கால் ஊனமுற்றவராக வரும் டும்கனும், துளசியின் அப்பாவாக வரும் நபரும் மிகுந்த யதார்த்தமாக நடித்திருக்கின்றனர். எதிரிகளால் துரத்தப்படும் அழகர் ஒரு இடத்தில் பதுங்கி பயத்தின் பீதியில் உறைந்திருக்கும் காட்சியும், கனகுவின் தலையை துண்டிக்கும் போது பரமனின் முகத்தில் வெளிப்படும் குரூரமும் சிறப்பான முகபாவங்களோடு வெளிப்பட்டிருக்கின்றன.
()
இந்தப்படத்தின் சிறப்பான உருவாக்கத்திற்கு ஒளிப்பதிவு இயக்குநர் கதிரின் பங்கு மகத்தானது. மதுரையின் இரவு நேரத்தை மிக நெருக்கமாக பதிவு செய்திருக்கும் படத்தின் ஆரம்பக்காட்சிகள், மாவட்ட செயலாளரை போட்டுத் தள்ளிவிட்டு மூவரும் நிலாவின் மெளன சாட்சியின் பின்னணியில் ஒருவர் பின் ஒருவராக ஒடும் காட்சிகள், சுப்பிரமணியபுரத்தின் சந்து பொந்துகளில் எதிரிகளால் துரத்தப்படும் போது அழகரின் வேகத்தோடும் லாவகத்தோடும் கேமராவும் பின்தொடரும் காட்சியும் சிறந்த உதாரணங்கள்.
இயக்குநர் சசிகுமாருக்கு இசை ஆசிரியாராக இருந்த - தொலைக்காட்சி தொகுப்பாளாராக நாம் பெரிதும் அறிந்திருக்கும் - ஜேம்ஸ் வசந்தன் இந்தப்படத்தின் இசையை அமைத்திருக்கிறார். ராஜாக்களும் ரஹ்மான்களே கதி என்றிருக்கும் தமிழ்த் திரையிசையின் போக்கில் இவ்வாறான புதிய காற்று வீசுவது அவசியமானது. ஆரம்ப சில காட்சிகளைத் தவிர பிற்பாதியில் மிக இறுக்கமாக திரைக்கதையை கொண்டிருக்கும் இந்தப்படத்திற்கு பாடல்கள் தேவையில்லை என்பதே என் கருத்து. ஆனால் "கண்கள் இரண்டால்" போன்ற அருமையான பாட்டு கிடைத்திருக்காது. பரமன் கனகுவின் தலையை துண்டித்து ஒரு பையில் எடுத்துச் செல்லும் காட்சியில் பலத்த மெளனத்தையே பின்னணி இசையாக உபயோகித்திருப்பதின் மூலம் அந்தக் காட்சியின் குருரத்தை பலக்க எதிரொலிக்கச் செய்திருக்கிறார் வசந்தன். 'சுப்பிரமணியபுரம் எங்கள் தலைநகரம்' பாடலும் காட்சியமைப்புகளும் மணிரத்னத்தின் ஆய்த எழுத்தில் வரும் 'டோல் டோல்'-ஐ நினைவுப்படுத்துகிறது.
சில நெருடல்களும் இந்தப்படத்தில் இல்லாமல் இல்லை. துளசி மற்றும் காசியின் துரோகங்களுக்கான பின்னணியோ அதற்கு முன்னோட்டமான காட்சிகளோ மிக அழுத்தமாக இந்தப்படத்தில் நிறுவப்படவில்லை. பார்வையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவை லேசான செயற்கைத்தனத்தோடு அமைந்திருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. (படத்தின் ஆரம்பக்காட்சியில் மாத்திரம் டோப்பாவும், டும்கனும் காசியிடம் மொக்கச்சாமி குறித்து உரையாடும் போது "ஏண்டா அவரு உங்க இனம்தான்றதால சப்போட் பண்றியா" என்று கேட்பதை கடைசிவரை நினைவு கொள்வது சிரமம்). துரத்தப்படும் அழகர் தான் ஒளிந்திருக்கும் வீட்டுப் பெண்ணின் காலில் விழுவது யதார்த்தமாக இருக்கிறதென்றால் கனகு தனது தங்கையின் காலில் விழுவது நாடகத்தன்மையோடு அமைந்திருக்கிறது. 'Infactuation' என்ற வார்த்தையை 1980-ன் ஒரு மதுரை கல்லூரிப் பெண் உபயோகிப்பது, அடித்தட்டு மக்களின் நெருக்கமான நண்பனாக பீடியே இருந்த காலகட்டத்தில் அழகரும் பரமனும் சிகரெட்டுகளாக ஊதித்தள்ளுவது, பெரும்பாலான காட்சியில் பேண்ட் அணிந்திருப்பது, 28 வருடங்களுக்குப் பிறகும் பரமனின் நண்பர்கள் காசியை கொல்ல வன்மத்தோடு அலைவது... இவைகள் படத்தின் மிகச் சிறிதான நெருடல்கள்.
()
ஒரு காலகட்டம் வரை வில்லன்களை தமிழ்ச்சினிமா மிக விநோதமாக உருவகப்படுத்தி வைத்திருந்தது. சண்டைக் காட்சிகளின் போது கீழே விழுவதற்கு தோதாக அட்டைப்பெட்டிகள் அடுக்கப்பட்டிருக்கும் அறைகள், பல வண்ணங்களுடான பாட்டில்களில் உள்ள திரவத்தை வில்லனும் அடியாட்களும் அருந்தி மகிழும் போது கவர்ச்சியாட்டம் போடும் வில்லனின் காதலி, சுவிட்சை அழுத்தியவுடன் இரண்டாக பிளக்கும் அறை.. ஏதோ அவர்கள் வேறு உலகத்திலிருந்த வந்த தீயசக்திகள் என்பது போலவே தமிழ்ச்சினிமா இயக்குநர்கள் சித்தரித்து வைத்திருந்தனர். அவ்வாறில்லாமல் வில்லன்கள் நம் சமூகத்தில் நமக்கு நடுவே நம்மைப் போலவே வாழ்பவன்தான் என்பதை - நான் அறியும் வரை - மணிரத்னத்தின் 'பகல் நிலவு' மாற்றியமைத்தது. ஒரு முதியவர் பயபக்தியுடன் சாமி கும்பிடுவதான காட்சியுடன்தான் சத்யராஜின் அறிமுகம் அமைந்த ஞாபகம். அதைப் போலவேதான் அடியாட்கள் என்கிற பாவப்பட்ட ஜென்மங்களும். வில்லன் கைகாட்டினவுடன் நாயகனிடம் வரிசையாக வந்து அடிவாங்கி கீழே விழுந்து துடிக்கும் நபர்கள்.
தான் தெய்வமாக நினைக்கும் அரசியல் தலைவனாலேயே கொல்லப்படும் ஒரு அப்பாவித் தொண்டனை நெருக்கமாக சித்தரித்திருந்த படம் பாரதிராஜாவின் 'என்னுயிர்த் தோழன்'. வடசென்னையின் அழுத்தமான பின்னணியுடன் இயங்கிய இந்தப்படத்திற்கு பிறகு அரசியலால் தன் வாழ்வையே இழக்கும் அடித்தட்டு மக்களைப் பற்றின யதார்த்தமான படம் இதுதான் என்று தோன்றுகிறது.
()
தமிழ்ச்சினிமாவின் வழக்கமான சில சம்பிதாயங்களை இயக்குநர் சசிகுமார் கைவிட முடியாமல் தவித்திருப்பது தெரிகிறது. பாடல்காட்சிகளும், கஞ்சா கருப்புவின் ஆரம்ப நகைச்சுவைக் காட்சிகளும் சில உதாரணங்கள். இந்தக் கட்டாயங்களிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இந்தப்படத்தை உருவாக்கியிருப்பார் என்றுதான் தோன்றுகிறது. ஒரு திரைப்படத்தின் அடிப்படை விஷயமான கதையை/திரைக்கதையை பலவீனமாக வைத்துக் கொண்டு தொழில்நுட்பங்களையே பிரதானப்படுத்தி முழங்கும், முழுக்க வணிக நோக்கில் எடுக்கப்படும் தற்கால படங்களோடு ஒப்பிடும் போது 'சுப்பிரமணியபுரம்' தமிழ்ச்சினிமாவை தரத்தின் அடுத்த படிக்கு மெல்ல நகர்த்தியிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். சசிகுமார் தன்னுடைய அடுத்த படத்தை எந்த தடைகளுமில்லாமல் உயர்ந்த பட்ச கலை அம்சங்களுடன் படைக்க என் வாழ்த்துகள்.
இந்தப்படத்தை பார்த்து முடித்த சில மணி நேரங்கள் வரை 'சுப்பிரமணியபுரத்தின்' தாக்கத்திலிருந்து என்னால் வெளிவர இயலவில்லை. திரைப்பட ரசிகர்கள் இந்தப்படத்தை கொண்டாடியதற்கு காரணமும் அதுவாகத்தானிருக்கும் என்று தோன்றுகிறது.
suresh kannan
35 comments:
//(வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்ட மாநகர பேருந்து மாதிரியான சில நெருடல்களை தவிர்த்து விடலாம்). //
அண்ணே,
எங்கூரூலே அப்போல்லாம் அந்த கலருலே தான் பாண்டியன் போக்குவரத்து கழக பஸ்'ல்லாம் இருக்கும்.... :)
அப்புறம் அவங்க அடிக்கிற சிகரெட் "கத்திரி - சிசர்"...
அப்போல்லாம் அது 20 பைசாதான்.. :)
இந்தப்படத்தை பார்த்து முடித்த சில மணி நேரங்கள் வரை 'சுப்பிரமணியபுரத்தின்' தாக்கத்திலிருந்து என்னால் வெளிவர இயலவில்லை. திரைப்பட ரசிகர்கள் இந்தப்படத்தை கொண்டாடியதற்கு காரணமும் அதுவாகத்தானிருக்கும் என்று தோன்றுகிறது.
thats right answer
//பாண்டியன் போக்குவரத்து கழக பஸ்'ல்லாம் இருக்கும்.... //
அன்புள்ள இராம்,
தெளிவுபடுத்தியதற்கு நன்றி. நான் சென்னையைச் சேர்ந்தவன்.80-களில் சென்னை மாநகர பேருந்துகள் சிவப்பு நிறத்தில் இருந்த ஞாபகம்.
இதுபற்றி நண்பர்களிடம் பேசி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றிருந்தேன். விடுபட்டு விட்டது.
Ram,
I did not see the movie so I do not know what Suresh meant by white paint
In 80's Pandiyan Trns. Corp busess in Madurai never had any paint. They are left as it is (Natural aluminum plate color) .
**
Pl. excuse my English comment...
Ram,
I did not see the movie so I do not know what Suresh meant by white paint
In 80's Pandiyan Trans. Corp buses in Madurai never had any paint. They are left as it is (Natural aluminum plate color) .
**
Pl. excuse my English comment...
//They are left as it is (Natural aluminum plate color) . //
ஆகா! இந்த பஸ் கலர் விவகாரத்துல திரும்ப திரும்ப மாட்டிக்கறனே. :-)
கல்வெட்டு: நீங்கள் கூறியபடி பேருந்து அலுமினிய நிறத்தில்தான் இருந்தது. அப்படியென்றால் அது நெருடல் அல்ல, நான் எழுதியதுதான். :-)
சுரேஷ் கண்ணன் அருமையான விமர்சனம். பாண்டியன் போக்குவரத்துக்கழகம் அலுமினிய பாடியுடன் நடுவில் இரண்டுபக்கமும் மீன் சின்னம் பொறிக்கப்பட்டு அட்டகாசமாய் இருக்கும். இப்போது எத்தனையோ கலர்களில் பேருந்துகள் விட்டாலும் அப்போது சொல்லிக்கொண்டதுபோல டேய் பாண்டியன் போய்ட்டானாடா?? திருவள்ளுவர் என்னடா இன்னிக்கி வெள்ளன வந்துட்டான்..என்ற வசனங்களையும் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும். ஜெயக்குமார்
கல்வெட்டு & சுரேஷ்,
அலுமினிய கலரை நாமே வெள்ளை கலருன்னுதானே சொல்லுவோம்... :)
இன்னமும் மதுரையிலே அலுமினிய கலரு பஸ்'லாம் ஓடிட்டுதான் இருக்கு...
excellent review... whatever i felt small mistakes in film, u just portraied in ur review...bus colour matter(it was aluminium colour till 90's) ok.. like that cigarette also they might use scissors or panama... i thought that 'subramaniyapuram thalainagaram' song should be avoided. it didnt add any colour to movie. i understood the 'thurokam' of kasi ('inappatru') and also one more scene shown that kasi never spend money to others...
just for email follow up
கண்கள் இரண்டால் என்ற இனிமையான பாடலை பாடிய பாடகர்கள் இருவரும் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்பாடகரின் பெயர் பெள்ளிராஜ், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்.
கண்கள் இரண்டால் பாடலை பாடியவர்கள்:
பெள்ளிராஜ், தீபா மரியம்.
புதுமுகங்கள்.
சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு,
உங்களுடைய ப்ளாக்கை இப்போ சில மாதங்களாதான் படித்து வருகிறேன். சுஜாதா, சாரு போல ஒரு நெருக்கமான writing style உங்களுக்கு வசப்பட்டிருக்கிறது. உங்கள் சுப்பிரமணியபுரம் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. ஆனால் இங்கே(மொரீசியஸ்) தமிழ் படங்கள் கிடைப்பதில்லை.
ஜெயமோகன் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடும் சுரேஷ் கண்ணன் நீங்கள்தானா?
நீங்கள் நான் கடவுள் படத்தில் பணியாற்றிவருகிறேர்களா?
தொடர் கொலைகளை செய்தது யார்?
ஜெயராமசாமி,மொரீசியஸ்
நல்ல விமர்சனம்.
//துளசி மற்றும் காசியின் துரோகங்களுக்கான பின்னணியோ அதற்கு முன்னோட்டமான காட்சிகளோ மிக அழுத்தமாக இந்தப்படத்தில் நிறுவப்படவில்லை. பார்வையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவை லேசான செயற்கைத்தனத்தோடு அமைந்திருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.//
எனக்கு இது தான் நிறை என்று தோன்றுகிறது. 1. இப்படி நிறுவுவது துரோகத்தை எதிர்ப்பார்க்க வைத்து, அதன் அதிர்ச்சித் தன்மையைக் குறைத்து இருக்கும். 2. படத்தைப் பார்வையாளனின் பார்வையில் பார்க்கும்போது தான் நாம் ஒவ்வொருவரும் எதை ஏன் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முற்படுகிறோம். ஆனால், பாத்திரங்களின் பார்வையில் அவர்கள் மற்ற பாத்திரங்களைப் புரிந்து கொள்ளாததால் தான் அந்தத் துரோகத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். நிகழ்வாழ்வில் துரோகங்களில் மாட்டிக் கொண்ட பிறகும் ஏன் துரோகம் செய்தார்கள் என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவர்களிடம் துரோகத்துக்கான அறிகுறிகள் முன்பு தோன்றி இராததைப் பார்க்கலாம். படத்தின் மற்ற பாத்திரங்களையும் சக பாத்திரங்களின் பார்வையூடாக காட்டியிருந்தால் படம் சரி தான். 3. துளசிக்கும் அழகருக்கும் இடையில் உள்ள காதல் பருவக் கோளாறு போன்றே உள்ளது. தன் குடும்பத்துக்கு ஒரு தீங்கு, முடிவெடுக்க இயலாத வயது, குடும்ப அழுத்தம், சித்தப்பனே காலில் விழுவது போன்ற காரணங்கள் காட்டிக் கொடுக்க மிகப் போதுமானவையே. அதே போல் அழகர்-பரமன் நட்பு போல் காசி-பரமன்-அழகர் நட்பு ஆத்மார்த்தமான ஒன்றாக எப்போதுமே காட்டப்படவில்லை. சும்மா சேர்ந்து சுத்துகிறார்கள் என்றே புரிந்து கொள்ள முடியும். இத்தகைய நட்புகளில் காசு, இனம் போன்ற காரணங்களுக்காக காட்டிக் கொடுப்பது புரிந்து கொள்ளத்தக்கதே. ஏன், "பரமனைக் காட்டிக் கொடுக்காவிட்டால், உன்னைக் கொன்று விடுவோம்" என்று மிரட்டிக் கூட பணிய வைத்திருக்கலாம். காட்டிக் கொடுத்த பின் பணமும் தந்திருக்கலாம்.
இது வரை எந்த விமர்சனத்திலும் கேட்காத கேள்வி - காசி எப்படி சிறைக்குப் போனான்? அதுவும் மூவர் கொலைக்காக? பணத்தையும் கொடுத்து பின்னாளில் பிரச்சினை வரக்கூடாது என்று அவனை சிறையில் தள்ளிவிட்டார்களா?
படத்தைப் பார்த்த பிறகும் அவரவர் கருத்துக்கேற்ப ஊகிக்க வைப்பது போல் இருப்பதும் நல்ல திரைக்கதை தான்
**
கனகு தங்கைக் காலில் விழுந்தான் என்று எழுதி இருக்கீங்க. தன் அண்ணன் மகள் காலிலேயே விழுந்தான். அப்புறம், அவன் காலில் விழுவது செயற்கைத் தனமாகத் தோன்றவில்லை. திட்டமிட்ட குள்ளநரித்தனமாகவும் இருக்கலாம். இது போல் காலில் விழுகிறேன் என்று சொல்லியே சாதிக்கும் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு emotional blackmail tactics.
//இவர்களின் தங்கை துளசியும் அழகரும் மெளனக்காதல் புரிகின்றனர்//
துளசி பெரியவரின் மகள். கனகுவை அப்பா/சித்தப்பா என கூப்பிட்ட ஞாபகம்.
//80-களில் அடித்தட்டு இளைஞர்கள் லுங்கி கட்டுவதே ஒரு தினுசாக இருக்கும். லுங்கியை பாதியாக மடிக்காமல், தொடைப்பகுதியில் லுங்கியை பிடித்து தூக்கி இடுப்பின் மேலாக முடிச்சிடுவதில் லுங்கி முக்கால்பாகம் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.//
இப்பவும் அப்படித்தானே இருக்கிறது???
வணக்கம் சுரேஷ் கண்ணன்
பொதுவாக நீங்கள் திரைப் படத்தை கொஞ்சம் தமாதமாக பார்த்துவிட்டு எழுதுவது வழக்கம். இந்த முறை நீங்கள் சுட சுட எழுதியதற்கு வாழ்த்துகள்.
நேற்று சாருவும் உங்கள் கருத்தை பிரதிபலித்தார் என்று சொல்லாம்.
டிவிடி வர இன்னும் ஒரிரு மாதம் ஆகலாம், அதுவரை பொறுத்துதான் ஆக வேண்டும்!
நீங்கள் எழுதிய Party படம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை!
மயிலாடுதுறை சிவா...
மயிலாடுதுறை சிவா...
மிகவும் விளக்கமான, நேர்த்தியான விமர்சனம்.
இறுதி காட்சியில் கஞ்சா கருப்பு நடந்து வரும் காட்சியே இயக்குனரின் புதுமையான சிந்தனையை வெளிப்படுத்துகிறது.
இம்மாதிரி படங்களும், இந்த மாதிரி விமர்சனங்களும் கண்டிப்பாக தமிழ் சினிமாவை மீண்டும் பொற்காலத்திற்கு கொண்டு சேர்க்கும்.
மிக மிக அற்புதமாக எழுதி இருக்குறீர்கள், உங்கன் நெருடல் மட்டும் ஏற்க் கொள்ள முடியாதது. படத்தில் கிளிஷே காட்சிகள் இருப்பினும் படத்தில் காட்சியமைப்பில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதே என் எண்ணம்
//நான் சென்னையைச் சேர்ந்தவன்.80-களில் சென்னை மாநகர பேருந்துகள் சிவப்பு நிறத்தில் இருந்த ஞாபகம். //
ஆஹா... சென்னையை வைத்தே தமிழ்நாட்டை அளக்கும் சராசரி சென்னைமீடியாக்காரராகிட்டீங்க சுரேஷ்கண்ணன்:)
//ஆகா! இந்த பஸ் கலர் விவகாரத்துல திரும்ப திரும்ப மாட்டிக்கறனே. :-)//
:))))
அருமையான விமர்சனம் நன்றி
சுரேஷ் கண்ணன்,
உங்கள் விமர்சனம் மிகவும் அழகாக இருக்கிறது. நீங்கள் சொல்லும் சில விஷயங்கள் எனக்கும் உறுத்தலாகத் தான் தெரிகிறது.
முக்கியமாக,
1. 1980ல் மதுரை கல்லூரி பெண்கள் Infatuatiஒன் என்ற மணிரத்னம் ஸ்டைல் வார்த்தையை உபயொகிப்பது. அவர்களுக்கி ஆங்கிலம் தெரியாது என்று அல்ல. இன்பாசுவேஷன் போன்ற வார்த்தைகள் 1990ல் கூட அதிகம் உபயோகிப்படாத வார்த்தைகள். (எங்கடி உன்னொட ஆள இன்னும் கானோம்.. நம்ம ஊருக்கு புதுசா வர்ற கலெக்டர் அவர் தானோ? இது மதுரை பிராண்ட நக்கல்!)
2. துளசியின் துரோகத்தை கூட என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. (ஏனெனில் மதுரையில் வாழ்ந்தவன் என்ற முறையில் சில உண்மை நிகழ்ச்சிகள் எனக்கு தெரியும். பல காதல்களின் கடைசி முடிவு, துரோகம் என்பதாக தான் உள்ளது. ஆக, அதில் ஆச்சரியம் இல்லை.)
ஆனால், காசி ஏன் துரோகம் செய்தான் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. பண்மா? ஜாதியா? இல்லை தான் உயிர் பிழைக்க எடுத்த முடிவா? எனக்கென்னவோ, அவன் உயிர் பிழைக்க எடுத்த முடிவாக தான் தெரிகிறது.
நீங்கள் சொன்னது போல், காதல் காட்சிகளை குறைத்திருக்கலாம். இருவர் சைட் அடிப்பதை பல முறை பார்க்கும்போது போரடித்தது. (என்னதான் அவர்களுக்கு அது கவிதையாக இருந்தாலும், எனக்கு எரிச்சல் தான் வந்தது!).
மற்றபடி, படம் சூப்பர். படத்தின் இயக்குனர் சசி குமார், ப்ரடியூசரிகளில் ஒருவராம். தனது சொந்த பணத்தில், புது முகங்களை வைத்து எடுத்த அவரது தன்னம்பிக்கையும், தைரியமும அபாரம்!!
////நான் சென்னையைச் சேர்ந்தவன்.80-களில் சென்னை மாநகர பேருந்துகள் சிவப்பு நிறத்தில் இருந்த ஞாபகம். ////
18D பஸ்ஸை ப்ளூ கலரில் பார்த்த நினைவு.
விமர்சனத்தின் அளவு ரொம்ப ரொம்ப பெருசா இருப்பது மட்டும் தான் குறை.
i thought, i made a detailing point by point review on the same.. but you made an excellent one..
Great!
narsim
narsim-panarsim.blogspot.com
Thanks dear dude.
Thanks dear dude.
எனக்கு காசி ஜெயிலுக்கு போன இடம் குழப்பமா இருந்தது அதுபற்றி பின்னூட்டம் இங்க பார்த்ததும் தான் நிம்மதி .. நாம் சரியாத்தான் பாத்திருக்கோம்ன்னு..:) ரவிசங்கர் போட்ட பின்னூட்டத்தை அப்படியே வழிமொழியலாம்..
காசி ஒரு சமயம் நம்ம "பொழப்புக்கு"ன்னு ஒரு வார்த்தை பயன்படுத்துவான் அப்ப கதாநாயகன் கோபமா திரும்ப கேப்பான் பொழப்பா? ன்னு ஏன்னா அவன் அதை பழக்கத்துக்கு செய்தவன்.. கவனிச்சா அப்பவே காசி பொழைப்பாகவும் ... இன்னோரு சமயம் பணத்துக்கு ஆசைப்பட்டு ரவியிடம் பணம் வாங்குவதையும்... வைத்து அவனுடைய நட்பின் தரம் முதலிலேயே லேசா கோடு காட்டப்பட்டிருக்கிறது.
நல்ல விமர்சனம். நல்ல படத்தில் சில குறைகள் போல, உங்கள் நல்ல விமர்சனத்தில் சில குறைகள் (அப்பதானே எங்களுக்கு cheap thrill) இதோ:
1. யதார்த்தமான வில்லன்கள் (தினவாழ்வில் நாம் சந்திக்கக்கூடிய) M.R.ராதா உருவில் எப்போதோ வந்துவிட்டார்கள். மற்றபடி பிளவிலிருந்து தோன்றும் நம்பியார் ரக வில்லன்கள் இன்னமும் குருவி முதல் கழுகு வரை வந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.
2. வித்யா சாகர், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் எல்லாம் நீங்கள் கேள்விப் படவில்லையா. தமிழ் சினிமா இப்போதெல்லாம் ராஜா மற்றும் ரஹ்மானை மட்டும் நம்பி இல்லை. ஜேம்ஸ் வருகை நல்லதே. பிற துறைகள் போல தமிழ் சினிமா இசையிலும் இளைஞர்கள் பலர் வரும் சூழல் நல்லதே.
3. என்னுயிர்த்தோழனை விட இப்படம் 'சத்யா' அருகில் உள்ளது - அரசியலால் அடிமட்ட மக்களின் வாழ்வு தொலைந்து போவதை சித்தரிப்பதில். இரண்டுமே, அடி ஆட்களாகி, ஆயுதமெடுத்து அழிந்தவர்கள் கதை. எ.தோழன் இன்னும் சிறப்பாக எடுக்கப்பட்ட கதை. வெகு நுட்பமான துரோகம்.
4. தமிழ் சினிமாவின் பொற்காலமென 80களை சொல்லுகையில், பாரதிராஜாவை எங்ஙனம் மறக்க இயலும்.
யோசிக்கையில் இவைகள் உங்கள் பட விமர்சனத்தில் குறைகள் அல்ல. நான் எவ்வாறு உங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறேன் என்று சொல்லவே.
ஒரு மிக நேர்மையான, விரிவான (லக்கிலுக் குறைப்பட்டுக் கொண்டாலும்) விமர்சனத்துக்கு நன்றி.
அனுஜன்யா
பி.கு. : Infatuation spelling சரி செய்து விடுங்கள்.
நிறைய பின்னூட்டங்கள்.
சிலவற்றை தெளிவுபடுத்திய, குறைகளை சுட்டிக் காட்டி சரிசெய்த,தங்கள் பார்வைகளை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
//ஜெயமோகன் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடும் சுரேஷ் கண்ணன் நீங்கள்தானா?//
ஜெயா ராமசாமி: நான் அவரில்லை. அவரும் என் நண்பர்தான்.
ரவிசங்கர்: உங்கள் பார்வையும் சரியானது போல தோன்றினாலும் நான் கன்வின்ஸ் ஆகவில்லை. :-)
//சென்னையை வைத்தே தமிழ்நாட்டை அளக்கும் //
காசி: தெரியாம எழுதிட்டேங்க. விட்டுறுங்க. ப்ளீஸ். :-)
//18D பஸ்ஸை ப்ளூ கலரில் பார்த்த நினைவு.//
லக்கிலுக்: நீங்க எந்த கலரை பாத்தீங்களோ? :-)
//என்னுயிர்த்தோழனை விட இப்படம் 'சத்யா' அருகில் உள்ளது//
அனுஜன்யா: ஆகா! சத்யா அருமையான,இந்த சப்ஜெக்ட்டுக்கு நெருக்கமான படமாச்சே! எப்படி மறந்து போனேன். நினைவுப்படுத்தியதற்கு நன்றி்.
//ஒரு காலகட்டம் வரை வில்லன்களை தமிழ்ச்சினிமா மிக விநோதமாக உருவகப்படுத்தி வைத்திருந்தது. சண்டைக் காட்சிகளின் போது கீழே விழுவதற்கு தோதாக அட்டைப்பெட்டிகள் அடுக்கப்பட்டிருக்கும் அறைகள், பல வண்ணங்களுடான பாட்டில்களில் உள்ள திரவத்தை வில்லனும் அடியாட்களும் அருந்தி மகிழும் போது கவர்ச்சியாட்டம் போடும் வில்லனின் காதலி, சுவிட்சை அழுத்தியவுடன் இரண்டாக பிளக்கும் அறை.. ஏதோ அவர்கள் வேறு உலகத்திலிருந்த வந்த தீயசக்திகள் என்பது போலவே தமிழ்ச்சினிமா இயக்குநர்கள் சித்தரித்து வைத்திருந்தனர்.//
:))
//(படத்தின் ஆரம்பக்காட்சியில் மாத்திரம் டோப்பாவும், டும்கனும் காசியிடம் மொக்கச்சாமி குறித்து உரையாடும் போது "ஏண்டா அவரு உங்க இனம்தான்றதால சப்போட் பண்றியா" என்று கேட்பதை கடைசிவரை நினைவு கொள்வது சிரமம்). //
Mokkasamiyin jathikkum, kanagu kkum, kasi yin drogathukkum, irukkurae sambantham puriyalaiyae? Ennoda kanippu padi, panathukkaga kaatti kudathanane vachukkalam.
Mokkasamiyin Jathiyum, Thulasi yin jathiyum ondru endru engum niruvapadavillai yenbathey ennoda karuthu!!! Naan miss panni irunthal please let me know.
க்ளாஸ்.!
ரவிசங்கருக்கு ஒரு ரிப்பீட்டு.!
?//சில வருடங்களுக்கு முன் மதுரையில் வாக்கிங் சென்ற ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் அதன் பின்னணியில் ஒரு மூத்த அரசியல்வாதியின் மகன் இருந்ததாக பெரும்பான்மையோரால் நம்பப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதும் பின்னர் நீதிமன்றத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதும் நமக்கு தெரியும். அவர்களின் பெயர்களை நம்மால் கூற முடியும். ஆனால் அந்தக் கொலையை நிகழ்த்திய மனிதர்களைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அவ்வாறான நிழல் மனிதர்களை ரத்தமும் சதையுமாக நம் முன் உலாவ விடுகிறது 'சுப்பிரமணியபுரம்'//
யார் கொலை பண்ணான்னு பேரை சொல்லுங்க . ரஜினியை போட்டு தாளிக்கிறது. அரசியல்வாதின்னா பயம்.
திட்டுறதுக்கும், கொட்டுறதுக்கும் ரஜினிதான் உங்களுக்கு சுலபமா மாட்டுவார்.
நடத்துங்க.
Nice review, Suresh!
I too loved the art direction.
This film gets rave reviews everywhere. But IMO, this film is good, but not that good. "Aalai illadha oorukku iluppaippoo" syndrome, I think!
Do see my review at http://awardakodukkaranga.wordpress.com/2008/08/28/சுப்ரமணியபுரம்-subramaniapuram/
NALLA THAAN IRUKKU ANAA romba periya review samy.'
kuppukutty
Post a Comment