Saturday, September 13, 2008

மிஸ்டர் பொதுஜனமும் புதன்கிழமையும்


இந்தியத் திரைப்படங்களுக்கே உரித்தான, கலவையான அம்சங்களுடன் கூடிய திரைக்கதையை தவிர்த்து நேர்கோடான திரைக்கதையைக் கொண்டு வரும் திரைப்படங்கள் மிக சொற்பமானது. அவ்வகையான படங்கள் தற்போது இந்திப்படவுலகில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இருமாதங்களுக்கு முன் Aamir என்கிற திரைப்படத்தைப் பார்த்தேன். அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிவரும் டாக்டர் ஒருவர் மதவன்முறையாளர்களிடம் சிக்கித் தவிக்கும் சில மணிநேரங்களை பரபரப்பையூட்டும் அற்புதமான திரைக்கதையைக் கொண்டு சிறப்பாக அமைந்திருந்தார்கள். அதே வகையில் நேற்று பார்த்த இன்னொரு இந்திப்படம் 'A Wednesday'. டைம்ஸ் ஆ·ப் இந்தியா இதற்கு நான்கு நட்சத்திரங்களை அளித்திருந்தது. நமீதா அம்மணி தனது clevage-ஐ காட்டாமல் நடிப்பது போன்று இது மிக அபூர்வமானது.

பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து உயிர்ச் சேதம் அதிகமாக இருக்கும் போது, பொது ஜனங்களாகிய நாம் பொதுவாக என்ன செய்கிறோம்? பீதியுடன் அரசின் கையாகாலாததனத்தை விமர்சிக்கிறோம்; உறவினர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்று விசாரித்துக் கொள்கிறோம்; தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் வரும் இரத்தக்களறியான படங்களை செயற்கையான பரபரப்புடன், குரூரத்துடன் ரசிக்கிறோம்; வெட்டியாக விவாதிக்கிறோம். சுருக்கமாக, நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் எந்தவித பிரச்சினை இல்லையெனில் (இருந்தாலும் கூட) சிறிது காலத்திற்கு பேசிப் புலம்பி விட்டு மறந்து விடுகிறோம். அவ்வாறான தேசியக்குணத்தை நோக்கி அழுத்தமாக ஒரு கேள்வி கேட்பதுதான் "A Wednesday". ஆனால் கேள்வி கேட்கும் முறையில்தான் வித்தியாசப்பட்டு நிற்கிறது இந்தப்படம்.

()

தனது பர்ஸைக் காணோம் என்று காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருகிறார் ஒரு பெரியவர். (நஸ்ருதீன் ஷா) வந்தவர் ஒரு பொ¢ய பையை காவல்நிலைய கழிப்பறைக்குள்ளே ஒளித்து வைக்கிறார். பின்பு போலீஸ் கமிஷனரை (அனுபம் கெர்) அழைத்து நகரத்தின் முக்கிய ஐந்து இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் தன்னுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அவைகளின் இடத்தை தெரிவிப்பதாகவும் போதெரிவிக்கிறார். அவரின் கோரிக்கை என்னவென்றால், மத வன்முறையை தூண்டும் பொருட்டு நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் ஈடுபட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, நான்கு பயங்கர குற்றவாளிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

அவர் யார்? அவர் திட்டத்தின்படி குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டார்களா அல்லது காவல்துறை ஜெயித்ததா என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

()

வங்கி அதிகாரி மாதிரி கண்ணியமான தோற்றத்துடன் அறிமுகமாகும் நஸ்ருதீன் ஷா எதையோ ஒளித்து வைப்பதில் ஆரம்பிக்கும் பரபரப்பான திரைக்கதை ஏறக்குறைய பட இறுதியின் வரையில் நீடித்து இருக்கையின் நுனியில் நம்மை அமர வைத்து ஒரு சிறந்த காண்பனுபவத்தை வழங்கியிருக்கிறது. மாத்திரமல்லாமல் வன்முறைச் சக்திகள் குறித்து நமக்குள் ஒரு கேள்வி எழுப்புவதின் மூலம் சலனத்தையும் உருவாக்குகிறது. நஸ்ருதீன் மற்றும் அனுபம் கெர் என்கிற இரு பெரும் தலைகளும் போட்டி போட்டு நடித்து படத்தை முழுக்கவும் தாங்கி நிற்கின்றனர். சிறிது கூட பதட்டமே இல்லாமல் தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றும் ஷா ஒரு புறம் கலக்குகிறார் என்றால் வழக்கமான அரசியல் தாமதங்களுக்கு ஈடுகொடுத்து மிகப் பெரிய சதியை முறியடிக்க டென்ஷனுடன் அனுபம் திட்டமிடும் வேகமும் மிக அழகாக பொருந்திப் போயிருக்கின்றன. போலீஸ் கமிஷனர் பாத்திரம்தான் என்றாலும் வழக்கம் போல் அல்லாமல் காய்கறி வாங்க வந்த மாமா மாதிரி பைஜாமாவிலேயே அனுபமை காண்பித்திருப்பது மாறுதலான ஆறுதலாக இருக்கிறது.

நிகழ்வுகள் உருவாகும் வரை பொறுமையில்லாமல் 'செய்திகளை உருவாக்கும்' நிறுவனங்களையும் அவர்களின் பொறுப்பின்மையையும் கூட இந்தப்படம் கிண்டலடிக்கிறது.

()

படத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே நஸ்ருதின் ஷாவின் திட்டத்தை என்னால் யூகிக்க முடிந்துவிட்டாலும் அதையும் மீறி படத்தை பரபரப்புடன் பார்க்க வைத்தது, படுவேகமான திரைக்கதைதான். ஒரு அழகான சிறுகதையைப் போல சில மணிநேரங்களே படத்தின் நிகழும் காலம். கிளைமாக்சில் விஜய்காந்த் போல நஸ்ருதின் ஷா ஒரு லெக்சர் அடித்தாலும் அவர் சொல்வதில் உள்ள நியாயம் நமக்குள் உறைக்கிறது. வித்தியாசமான காட்சிக் கோணங்களும் திறமையான எடிட்டிங்கும் இந்தப்படத்தை உயரத்தில் அமர்த்தி வைக்கின்றன. (திரைப்படங்களின் மகாஅபத்தமான விஷயமான பாடல்கள் இதில் கிடையாது). லாஜிக் ஓட்டை உட்பட சில குறைகளும் உண்டுதான். படம் அரைமணி நேரத்திற்கு முன்னதாக முடிந்துவிடுகிறது. நஸ்ரூதினின் தரப்பை விளக்க அதை இழுத்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநரான நீரஜ் பாண்டே முதல்படத்திலேயே தனது வருகையை மிக அழுத்தமாக பதித்திருக்கிறார். பாராட்டுகள்.

நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம். I recommend.

suresh kannan

4 comments:

முரளிகண்ணன் said...

நல்ல விமர்சனம்.

சமீபத்தில் சரோஜா படத்துக்கு **** டைம்ஸ் வழங்கியதாக நினைவு

சென்ஷி said...

விமர்சனத்திற்கு நன்றி... லிஸ்ட்ல ஏத்திக்கிட்டேன்...

சென்னையில் ஒரு குரூப் இந்த படத்தின் தலைப்பை பார்த்துவிட்டு ஆங்கிலபடம் என்ற நினைப்பில் பார்த்துவிட்டு வந்ததாம் :))

பிச்சைப்பாத்திரம் said...

//சரோஜா படத்துக்கு **** //

முரளி:

ஆம். இதையும் குறிப்பிட வேண்டுமென்று நினைத்தேன். தொடர்பில்லாமல் இருக்குமோ என்று நினைத்து விட்டு விட்டேன்.

சென்ஷி:

:-)

லேகா said...

வழக்கமான மசாலா பாணி திரைப்படங்களுக்கு இடையே இது போன்ற திரைப்படங்கள் தற்பொழுது ஹிந்தியில் வெளிவர தொடங்கி உள்ளது.இத்திரைப்படத்தின் முன்னோட்டம் பார்த்த பொழுதே உணர முடிந்தது நஸ்ருதின் ஷா மற்றும் அனுபம் கேரின் நடிப்பு திறனுக்கு ஏற்ற தீனி உள்ள படம் என்று.விமர்சனத்திற்கு நன்றி :-))