Tuesday, September 30, 2008

...த்தா கீழ எறங்குடா.....

மோ.க.காந்தியை தென்னாப்பிரிக்காவில் ரயிலின் முதல் வகுப்பு பெட்டியிலிருந்து கீழே தள்ளிவிட்ட அந்த புகழ்பெற்ற சம்பவத்தை தமிழில் நவீன நாடகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அந்நாடகத்திற்கான தலைப்பு இதுவோ என்று யாரும் தவறாக எண்ணி விடக்கூடாது.

ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி ஒருவர் என்னைப் பார்த்துச் சொன்ன சரித்திரப்புகழ் பெறாத வார்த்தைகள் அவை. கொசுவர்த்தி புகையுடன் இருபது வருடங்கள் பின்னோக்கிச் செல்கிறேன். என்னுடைய பதின்ம வயதுகளின் இறுதியில் +2வை முடித்துவிட்டு பொருளாதாரச்சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர இயலாமல் செளகார்பேட்டையிலுள்ள ஒரு மருந்துக் கடையில் உதவியாளனாக பணிபுரிந்து கொண்டிருந்தேன். வறுமையையும் மீறி என்னுடைய வாழ்க்கையின் மிக இன்பகரமான நாட்கள் அவை. வாளிப்பான சேட்டுப் பெண்களை நாள் பூராவும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். ஏன் இந்த சேட்டுக்களுக்கும் மலையாளிகளுக்கும் மாத்திரம் நிறத்தையும் அழகையும் ஆண்டவன் வாரிக் கொடுத்திருக்கிறான் என்று கடுப்பாக இருக்கும். பாச்சை போல் பரிதாபமாக தோற்றமளிக்கும் சிறுபையனான என்னை நம்பி வாடிக்கையாளர்கள் யாரும் மருந்துச் சீட்டை தரமாட்டார்கள். டாக்டரிடம் தப்பித்து மருந்துக்கடை பணியாளனின் தவறில் உயிர்விடக்கூடாதே என்கிற ஜாக்கிரதை உணர்ச்சியாக இருக்கலாம். நானாக வலியப் போய் கேட்டாலும் 'அவரக் கூப்பிடுப்பா" என்பார்கள் கறாராக. பொதுவாக எல்லா மருந்துக் கடைகளிலும் மருந்துகள் கம்பெனி வாரியாக அடுக்கப்பட்டிருக்கும். ஆனால் நான் பணிபுரிந்த கடையில் albhapetical ஆர்டரில் இருப்பதால் உடனே எடுக்க வசதியாக இருக்கும்.

ஆனால் நாளடைவில் மருந்துகளை எடுத்துத் தருவதில் தேர்ச்சி பெற்று 'நாள் தள்ளிப் போகணுமா' primoulte-n' என்று சொல்லுமளவிற்கு முன்னேறி விட்டேன். மருத்துவர்கள் எழுதும் கோழிக்கிறுக்கல்களையும் ஷார்ட்ஹாண்ட் படிக்காமலேயே புரிந்து கொண்டு இந்த டாக்டர் இந்த மருந்துதான் எழுதிக் கொடுப்பார் என்று சீட்டைப்பார்க்காமலேயே கூட யூகிக்க முடிந்தது. மருந்துக்கடைகளில் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையைப் பெறுவது அவ்வளவு சுலபமல்ல. 'ரெண்டு நாளா ஒரே இருமலா இருக்கு. ஏதாவது மருந்து கொடேம்ப்பா" என்று டாக்டர் செலவை தவிர்க்கும் உத்தேசத்துடன் வருபவரிடம் முகத்தை ஏதோ இருநூறு ஹார்ட் சர்ஜரி செய்தவன் போன்ற கெத்துடன் தீவிரமாக வைத்துக் கொண்டு மருந்துக் கம்பெனி விற்பனை பிரதிநிதிகள் இலவசமாக தரும் மாத்திரைகளை தோல் உரித்து "மூணு வேளை சாப்பிடுங்க. சரியாயிடும்" என்று ஜோசியக்காரன் போல் சொல்லி அனுப்ப வேண்டும். விளக்கெண்ணைய் குடித்தவர் போன்ற முகபாவத்துடன் வருபவர்களை ஓரம் கட்டி ஆணுறை பாக்கெட்டுக்களை கொடுத்தனுப்ப வேண்டும். பெண்களுக்கான மாதவிலக்கு நாப்கின்களை கண்டிப்பாக பேப்பர் உறையிலிட்டு வெளியே தெரியாதவாறு தர வேண்டும். வலி நிவாரண மருந்துகளின் பெயர்களை சரியாக தேர்ந்தெடுத்து கேட்கும் நபர்களை உற்றுப்பார்த்து சந்தேகமான ஆசாமி என்றால் அவர்களை மறுத்து அனுப்ப வேண்டும். மருந்துச்சீட்டில் உள்ள லிஸ்டில் ஏதாவதொன்று ஸ்டாக் இல்லையென்றால் 'இல்லை' என்று திருப்பியனுப்பாமல் 'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்' என்று சற்று தூரத்தில் உள்ள கடையில் வாங்கி வந்து அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். அக்கம்பக்கத்தில் கடை விரித்திருக்கும் மருத்துவர்களுக்கு மருந்துச்சீட்டு இலவசமாக (விளம்பரத்துடன்தான்) அச்சிட்டுத்தர வேண்டும். இப்படியாக நானே ஒரு டாக்டராக பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நிலையில்....

ஆகா! தலைப்புச் சமாச்சாரத்திலிருந்து ரொம்ப விலகி வந்து விட்டேனோ? இப்போது வந்து விடுகிறேன்.

()

என்னுடைய சேட்டு முதலாளிகள் மூன்று சகோதரர்கள். மற்ற இருவரும் ஸ்குட்டர்களில் வர மூத்த சேட்டு மாத்திரம் ரிக்ஷாவில் வெள்ளைக்காரனிடம் மான்யம் வாங்கும் ஜமீன்தார் போல் அசட்டு கம்பீரத்துடன் வந்து இறங்குவார். இந்த சேட்டுக்களையும் சைக்கிள் ரிக்ஷாவையும் பிரிக்கவே முடியாது. சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் ரிக்ஷா ஒழிந்து விட்டாலும் இன்னும் வடசென்னையின் செளகார்பேட்டையில் wwf போட்டிகளில் கலந்து கொள்கிற தகுதியுடன் இருக்கையை நிறைத்துக் கொண்டு பயணிக்கிற சேட்டம்மாக்களை பார்க்கலாம். சினிமாவில் வருவது போல் "நம்பிள்கி நிம்பிள்கி" என்றெல்லாம் இல்லாமல் தெளிவாகவே சென்னைத் தமிழில் பேரம் பேசுவார்கள். சரியாக இரவு 9 மணிக்கெல்லாம் வீடு திரும்ப வண்டி வந்து நிற்கும். சேட் வண்டியில் ஏறுவதற்கு முன்னால் தன்னுடைய துண்டினால் இல்லாத தூசை தட்டுவார் முனியன். (மரியாதை கொடுக்கறாராம்). சேட் ஏறி அமர்ந்து சிறிதும் கூச்சமில்லாமல் பிருஷ்டத்தை தூக்கி அபான வாயுவை வெளியேற்றி விட்டு மந்தகாசத்துடன் கிளம்புவார். நோயாளிகளின் வாதைகளைத் தீர்க்கும் அரும்பணியில் ஈடுபட்டு விட்டு இளைய சேட்டுக்கள் கல்லாப்பெட்டி நிறைந்த களிப்புடனும் நாங்கள் நாளெல்லாம் நின்ற களைப்புடனும் கடையை மூடிவிட்டுக் கிளம்புவோம்.

பெரிய சேட்டு தினமும் ரிக்ஷாவில் வந்து இறங்குவதும் உற்சவர் மாதிரி முனியனின் ஏகப்பட்ட மரியாதைகளுடன் கிளம்புவதும் என்னுடைய அந்த இளமனதில் எதையோ நிகழ்த்தியிருக்க வேண்டும். ஒரு நாள் நானும் இதே போல் ரிக்ஷாவில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் உதயமாகிவிட்டது. நாளடைவில் இது தீவிரமாகி கனவுகளில் கூட ரிக்ஷாவில் பயணிக்கத் தொடங்கினேன். அரிப்பு தாங்காமல் ரிக்ஷாவில் பயணிக்க கட்டணம் எவ்வளவு என்று விசாரித்தேன். 2 ரூபாய். அப்போதைய நிலவரத்தின்படி கையேந்தி பவனில் வயிறார உண்ணக்கூடிய அளவிற்கான பணம். சம்பளம் வாங்கியவுடன் அதிலிருந்து இரண்டு ரூபாயை உருவிக் கொண்டேன்.

என் கனவை நிறைவேற்றும் அந்த சுபமுகூர்த்த நாளும் வந்தது. பணி முடித்து திரும்புகிற அந்த இரவு நேரத்தில் கடையிலிருந்து சற்று தள்ளி நடந்து கொண்டிருக்கும் போது ஒரு ரிக்ஷா என்னை கடந்து போனது. சேட்டு கூப்பிடுகிற மாதிரியே அமர்த்தலாக "யே ரிக்ஷா" என்றேன். உலோகம் உராயும் சப்தத்துடன் வண்டி நின்றது. ரிக்ஷாக்காரர் யாருக்கோ வண்டி கூப்பிட வந்திருக்கிறான் போலும் என்கிற தொனியில் "எங்க போணும்" என்றார். வீட்டுக்கு சற்று முன்னாலிருக்கிற இடத்தை குறிப்பிட்டேன். (ரிக்ஷாவில் போய் இறங்குவதை என் வீட்டில் பார்த்தால் தோலை உரித்து விடுவார்கள்). "எத்தன பேரு?" "நான் ஒருத்தன்தான்". இப்போது ரிக்ஷாக்காரர் என்னை சந்தேகமாக பார்த்தார். ரிக்ஷாவில் பயணிக்கக்கூடிய அந்தஸ்தான தோற்றம் என்னிடம் இல்லை என்பதுதான் அதற்குக் காரணம். "மூன்று ரூபா ஆவும். காசு இருக்குதா". "ரெண்டு ரூபாதானே. நேத்திக்கூட போனேன்" என்றேன் புத்திசாலித்தனமாக. "சரி. ஒக்காரு" என்றார் மரியாதையில்லாத குரலில்.

சரித்திரத்தில் இடம்பிடிக்காத அந்தப் பயணம் வெகு ஜோராகத்தான் தொடங்கியது. கால் மேல் கால் போட்டுக் கொண்டு அல்லது அது போல் அமர முயற்சித்துக் கொண்டு என்னைக் கடந்து போகும் மனிதர்களை அலட்சியமாக நோக்கினேன். ரிக்ஷா வேகமாக ஓடத் துவங்கியது. என்னுடைய பயத்தை ஒளிக்க முயன்றேன். வாயில் பீடியுடன் எம்.ஜி.ஆர் பாடலொன்றை முணுமுணுத்துக் கொண்டே உற்சாகமான பெடலை மிதித்தார் ரிக்ஷாக்காரர். செளகார்பேட்டை வாசனையில் நானும் ஒரு ஹிந்தி பாடலை முணுமுணுத்தேன். ஜர்தா பீடா போட்டு மென்று துப்பிக் கொண்டே வந்தால் இன்னும் மஜாவாக இருந்திருக்குமே என்று தோன்றுகிறது. நானும் என்னை சேட்டு மாதிரி உணர்ந்து கொண்டிருந்தேன் என்று இப்போது தோன்றுகிறது.

என்னுடைய இந்த அலட்டல் இயற்கைக்கே பொறுக்கவில்லையோ என்னமோ, திடீரென்று வானம் sub-woofer எபக்டில் அலறத் துவங்கியது. நிமிர்ந்து பார்த்தேன். கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. மஜா சற்று குறைந்து சீக்கிரம் வீட்டிற்கு போனால் போதும் என்று தோன்றியது. "கொஞ்சம் சீக்கிரமா போப்பா" என்று சொல்ல நினைத்து தயங்கி அடக்கிக் கொண்டேன். 'பொட் பொட்' என்ற சப்தத்துடன் மழைத்துளிகள் விழத் துவங்கின. பலத்து காற்று ரிக்ஷாவின் படுதாவை ரொம்பவும் அலைக்கழித்தது. இன்னும் சற்று நேரத்தில் பலத்தமழை செய்யும் என்று தோன்றியது.

தீடீரென வண்டி பெட்டிக்கடை அருகே நின்றது. ரிக்ஷாக்காரர் என்னிடம் "துட்ட கொடு" என்றார். கடையில் ஏதோ வாங்கப் போகிறார் என்று நினைத்து காசைக் கொடுத்தேன். மறுகணம் "எறங்கி நடந்து போ" என்றார் கடுமையான குரலில். "எங்க வீடு இங்க இல்ல. இன்னும் கொஞ்ச தூரம் போகணும்" என்றேன் பலவீனமாக. அதே கடுமையான குரலில் "நடந்து போ". சின்னப்பையன் என்பதால் ஏமாற்ற முயல்கிறார் என்பதை உணர்ந்து கோபம் வந்தது. கனவுப்பயணம் பாதியிலேயே அறுபடுவதை மனம் ஏற்க மறுத்தது. "இன்னும் கொஞ்ச தூரம்தான். அங்க விட்டுடு" என்றேன் கெஞ்சலாக. அப்போதுதான் இந்தப் பதிவின் தலைப்பிலுள்ள வார்த்தைகளைக் கூறினார் அவர். கையாலாகாத கோபத்துடனும் உள்ளூர அழுகையுமாக வண்டியிலிருந்து இறங்கி மழைத் தூறலில் நடந்து போனேன்.

()

ரிக்ஷாவில் என்னுடைய முதல் மற்றும் இறுதிப் பயணம் அதுதான். முற்போக்கோ, பகுத்தறிவோ அல்லது என்ன எழவோ தெரியாது.. "ஒரு மனுஷன் இன்னொரு மனுஷன சுமந்துட்டு போற அவலம் இந்த ரிக்ஷா பயணம்தான்" என்பதை எங்கோ கேட்டு அது சரி என்பதை உணர்ந்ததால் பின்னர் அது நிகழவேயில்லை. வியர்வை கொப்பளிக்க மிகுந்த சிரமத்துடன் சாலை மேட்டின் மீது ரிக்ஷாவை இழுத்துப் போகும் மனித ஜீவனைப் பற்றி துளியளவும் அனுதாபம் கொள்ளாமல் பிருஷ்டங்கள் அழுந்த அமர்ந்து செல்லும் மாமிச மலைகளை பார்க்கும் போது கோபம் வரும். வண்டி ஓட்டுபவர்கள், பாரம் இழுப்பவர்கள் என்று உடல் உழைப்பு மூலம் பிழைக்கிறவர்களை 'அவன்' என்றும் குளிர்பதனம் செய்யப்பட்ட அறையில் நோகாமல் வேலை செய்பவர்களை 'அவர்' என்றும் அழைக்க இந்தச் சமூகம் நமக்கு சிறுவயதிலேயே கற்றுத் தருகிறது. "ஏய் ஆட்டோ" என்று அழைக்கும் இளம் பிராயத்தினரை யாரும் கண்டிக்கவோ திருத்தவோ முயல்வதில்லை. அது தவறு என்பதே நம் ஆழ்மனதில் இல்லை.

என்னுள் துளிர் விடத் துவங்கிய மேட்டிமைத்தனத்தை தன்னுடைய அகராதியில் உள்ள எளிய வார்த்தைகளின் மூலம் கலைத்துப் போட்ட அந்த ரிக்ஷாக்காரரை நினைத்தால் இப்போது கோபம் வரவில்லை. சிரிப்புதான் வருகிறது.

suresh kannan

28 comments:

லக்கிலுக் said...

வாவ்....

லக்கிலுக் said...

வாசித்துவிட்டு சொக்கிப் போய் நிற்கிறேன். எதுவும் சொல்ல முடியவில்லை. சுவாரஸ்யமான வாசிப்பு தந்ததற்கு நன்றி!

Bee'morgan said...

அருமை..
//
என்னுள் துளிர் விடத் துவங்கிய மேட்டிமைத்தனத்தை தன்னுடைய அகராதியில் உள்ள எளிய வார்த்தைகளின் மூலம் கலைத்துப் போட்ட அந்த ரிக்ஷாக்காரரை நினைத்தால் இப்போது கோபம் வரவில்லை. சிரிப்புதான் வருகிறது.
//
classic finish..

Expatguru said...

அருமையான பதிவு. இதாவது பரவாயில்லை. 70களில் கை ரிக்க்ஷா தமிழகத்தில் இருந்தது தெரியுமா? மாடு மாதிரி மாமிச மலையை கைகளால் இழுத்துக்கொண்டு செல்வார்கள். பார்க்கவே பரிதாபமாக இருக்கும். கை ரிக்க்ஷாக்களை ஒழித்துவிட்டு அதற்கு பதில் சைக்கிள் ரிக்க்ஷாக்களை தமிழக அரசு அப்பொழுது கொண்டு வந்தது. இப்பொழுது கூட கல்கத்தாவில் இந்த பழக்கம் உள்ளது.

இந்த அனுபவத்துக்கு வேறு ஒரு கோணமும் உள்ளது. எல்லோரும் ரிக்க்ஷாக்காரர்கள் மேல் 'பரிதாபப்பட்டு' அந்த வண்டியில் ஏறாமல் இருந்தால் அவர் வயிற்று பிழைப்புக்கு என்ன செய்வார்?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

interesting!

சிவா சின்னப்பொடி said...

http://sivasinnapodi1955.blogspot.com/

Anonymous said...

அருமையான பதிவு அற்புதமான சொல்லாடல்கள்..

பரத் said...

அட்டகாசம்!!
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்

சரவணகுமரன் said...

அருமையான நடை...

பிரேம்ஜி said...

//வண்டி ஓட்டுபவர்கள், பாரம் இழுப்பவர்கள் என்று உடல் உழைப்பு மூலம் பிழைக்கிறவர்களை 'அவன்' என்றும் குளிர்பதனம் செய்யப்பட்ட அறையில் நோகாமல் வேலை செய்பவர்களை 'அவர்' என்றும் அழைக்க இந்தச் சமூகம் நமக்கு சிறுவயதிலேயே கற்றுத் தருகிறது. //

சரியான சொன்னீர்கள்.. அருமையான கட்டுரை.

கல்வெட்டு said...

//வண்டி ஓட்டுபவர்கள், பாரம் இழுப்பவர்கள் என்று உடல் உழைப்பு மூலம் பிழைக்கிறவர்களை 'அவன்' என்றும் குளிர்பதனம் செய்யப்பட்ட அறையில் நோகாமல் வேலை செய்பவர்களை 'அவர்' என்றும் அழைக்க இந்தச் சமூகம் நமக்கு சிறுவயதிலேயே கற்றுத் தருகிறது. "ஏய் ஆட்டோ" என்று அழைக்கும் இளம் பிராயத்தினரை யாரும் கண்டிக்கவோ திருத்தவோ முயல்வதில்லை. அது தவறு என்பதே நம் ஆழ்மனதில் இல்லை.
//


***

true... here are few samples and these guys read and writes lot. Also known as ilakkiyaviyaathi

:-(((

*

************

http://rprajanayahem.blogspot.com/2008/09/blog-post_13.html

//பியூன் வந்தான் .//

//அவன் சொன்ன தொகையை தருவதாக சொல்லி முடிக்கவும் வெராண்டாவிலிருந்து சிக்னல் கொடுத்தான் //

**
//உடனே சிரித்த முகத்துடன் ஹெட் கிளார்க் இருக்கையிலிருந்து எழுந்து கையை நீட்டியபடி கிட்டத்தட்ட ஓடியே என்னிடம் வந்தார் . //

//பணத்தை அவர் கையில் எப்போது வைத்தேன் அதை எப்படி பாக்கெட்டில் வைத்தார்//

//அவரே செல்லானை நிறைவு செய்தார் //

***********************

http://www.sramakrishnan.com/view.asp?id=169&PS=1

//அவை தொடர்ந்து வந்தபடியே இருந்தன. அதனால் எங்கள் வீட்டிற்கு தினமும் தபால்காரன் வருவான். //

//தபால்காரனுக்கு எல்லா குடும்பங்களின் கதையும் தெரியும். பெரும்பான்மை போஸ்ட்கார்டுகளை தபால்காரன் படித்திருப்பான். ஆகவே அவனால் அதைப்பற்றி சொல்வதும் உண்டு.//

பாபு said...

இது போல் நிறைய விஷயங்கள் இருக்கிறன்றன
ஒருவன் பார்க்க அழகாக இருந்தால், அவனை "பார்க்க நல்லவன் போல் இருக்கிறான்" என்று சொல்வதும்,ஒருவன் அழகாக இல்லாமல் இருந்தால் "பார்க்க பொறுக்கி போல் இருக்கிறான்" என்று சொல்வது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
நல்ல கட்டுரை ,வாழ்த்துக்கள்

முருகானந்தம் said...

சூப்பரோ சூப்பர்...

நந்தா said...

நல்லா இருக்கு. அருமையான வாசிப்பனுபவம்.

முரளிகண்ணன் said...

நல்லாயிருக்கு சார்

Anonymous said...

''நாள் தள்ளிப் போகணுமா' primoulte-n'

இதில் இருக்கும் நுண்ணரசியலை யாரும் கவனிக்கவில்லையா :).
Btb மருந்துக் கடையில் வேலை
செய்யாவிட்டாலும் 14/15 வயதில்
எனக்கு(ம்) இது தெரியும்.

தமிழன்-கறுப்பி... said...

நல்லாருக்கு அண்ணன்...

Anonymous said...

என்னுள் துளிர் விடத் துவங்கிய மேட்டிமைத்தனத்தை தன்னுடைய அகராதியில் உள்ள எளிய வார்த்தைகளின் மூலம் கலைத்துப் போட்ட அந்த ரிக்ஷாக்காரரை நினைத்தால் இப்போது கோபம் வரவில்லை. சிரிப்புதான் வருகிறது.

புது விசைக்கு ஒரு சிறுகதையாக எழுதி, இப்படி முடித்திருக்கலாம்.
அதன் மூலம் நீங்கள் ஒரு கலக
எழுத்தளார் என அறியப்பட்டிருக்கலாம்.

விஜய் ஆனந்த் said...

அருமையான எழுத்து நடை...சொற்பிரவாகம்...

ரிஷி (கடைசி பக்கம்) said...

:-))

Anonymous said...

மோ.க.காந்தியை தென்னாப்பிரிக்காவில் ரயிலின் முதல் வகுப்பு பெட்டியிலிருந்து கீழே தள்ளிவிட்ட அந்த புகழ்பெற்ற சம்பவத்தை தமிழில் நவீன நாடகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அந்நாடகத்திற்கான தலைப்பு இதுவோ என்று யாரும் தவறாக எண்ணி விடக்கூடாது

You are giving wrong ideas.Anyway those British were too gentlemen
to use such words.They had faith in
action than in words :).

ILA (a) இளா said...

அருமையான எழுத்துக்களும், நடையும். சுவாரஸ்யமான வாசிப்பு தந்ததற்கு நன்றி!

துளசி கோபால் said...

அருமை.
அட்டகாசம்.

கைரிக்ஷாவுக்கு இந்த சைக்கிள் ரிக்ஷா எவ்வளவோ தேவலை.

நம்ம ஊரில் டாக்ஸி மட்டும்தான். ஆனாலும் கைதட்டிக் கூப்பிட முடியாது.
தொலைபேசினால்தான் வண்டி வரும்.

பரிசல்காரன் said...

!!!!!

அருமையான நடை தோழா!

சுரேகா.. said...

நல்லா இருக்கு!

அதுவும்...உங்க நகைச்சுவை உணர்ச்சிதான் டாப்!

:)

SurveySan said...

:) தூள்!

Bleachingpowder said...

சான்ஸே இல்ல, சூப்பர இருக்கு உங்க கட்டுரை.முடிந்தால் குமுதம், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைளுக்கு அனுப்புங்கள்

Anonymous said...

Nice post.