Saturday, April 23, 2005

புலிக்குப் பிறந்தது பூனையானதா?

பொதுவாக நான் விஜய் போன்றவர்களின் படங்களைப் பார்ப்பதில்லை. தமிழ்ச் சினிமாவின் தரத்தை முன்னேற்றவிடாமல், வணிக நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தி பின்னுக்கிழுப்பதில் ரஜினிகாந்த், விஜய் போன்றவர்கள் முக்கியமானவர்கள். (ரஜினிகாந்தைப் பற்றி தனியானதொரு கட்டுரையை பின்னாளில் எழுதுகிறேன்) என்றாலும் 'சச்சின்' என்கிற விஜய்யின் திரைப்படம் ஆரம்பிக்கப்படும் போது படத்தின் இயக்குநரைப் பற்றி கேள்விப்பட்ட போது ஆச்சரியமாக இருந்தது. நான் பெரிதும் மதிக்கும் டைரக்டர் மகேந்திரனின் மகன் (ஜான்) அவர்.

திரைப்படத் துறைக்கு வந்த பிறகும் நாடகங்களின் பாதிப்பில் இருந்து மீளாமல் மூலைக்கு மூலை நான்கு பேரை நிறுத்தி படம் எடுத்துக் கொண்டிருந்த பாலச்சந்தர் போன்றவர்களின் நடுவில் ஒரு கதையை கேமரா மூலம் எப்படி சொல்வது என்கிற திறமை அபாரமாக வாய்க்கப் பெற்றவர்களில் முக்கியமானவர்கள் மகேந்திரனும், பாலுமகேந்திராவும். தமிழ்ச்சினிமாவை ஒரு புது உலகிற்கு கையை பிடித்து அழைத்துச் சென்றவர்களில் இவர்களின் பங்கு மிக அதிகம். 'தங்கப்பதக்கம்' போன்ற வணிக படங்களில் மகேந்திரன் புழங்கியிருந்தாலும் அந்த மாயவலையில் சிக்கிக் கொள்ளாமல் 'உதிரிப்பூக்கள்' 'மெட்டி' பான்ற சர்வதேச தர படங்களை கொடுத்தவர். 'முள்ளும் மலரும்' மூலம் ஒரு புதிய ரஜினிகாந்த்தை நம் கண் முன் நிறுத்தியவர். இவர் கடைசியாக எடுத்த NFDC-யால் தயாரிக்கப்பட்ட 'சாசனம்' திரைப்படம் என்னவாயிற்று என்றே தெரியவில்லை.

இப்பேர்ப்பட்டவரின் மகன் தமிழ்ச் சினிமாவில் ஒரு படம் இயக்கப் போகிறார் என்றதும் என்னுள் ஏதோ நம்பிக்கை பிறந்தது. மகேந்திரனின் படங்களை பார்த்தே சில விஷயங்களை கற்றுக் கொண்ட பிற்கால துரோணர்களே சில நம்பிக்கையான படங்களை கொடுத்திருந்த போது, அவருடனே அதிகம் பழக நேர்ந்திருக்கிற ஜான் அதே மாதிரியான பாதையில் செல்வார் என்று தோன்றியது. 80 களில் தமிழ்ச்சினிமாவில் ஒரு புதுக்காற்று வீச காரணமாக இருந்த மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா, ருத்ரையா, ஜான் ஆபிரகாம் போல, இப்போது மசாலா படங்கள் என்னும் பாதாள சாக்கடையில் வீழ்ந்திருக்கிற தமிழ்ச்சினிமாவை மீட்டெடுப்பதற்கு இவர் படம் ஒரு ஆரம்பமாக இருக்கும் என்று நம்பினேன்.

ஆனால் படத்தின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் பிரசுரமானபோது அந்த நம்பிக்கை சற்று தளர்ந்து போனது. என்றாலும் புகைப்படங்களை வைத்து மட்டும் முடிவு செய்யக்கூடாது என்றும் தோன்றியது. ஆனால் படம் வெளிவந்து அதனுடைய விமர்சனங்களின் மூலம் படத்தின் வரைபடத்தை அறிய நேர்ந்த போது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. இந்தப் படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை என்றாலும் (தமிழ்ச்சினிமாக்களை கடுமையாக விமர்சித்துக் கொண்டே சூப்பர் ஸ்டார்களின் படம் வந்தவுடன் முதல் நாளே பார்த்து விட்டு மறுபடியும் திட்ட ஆரம்பிப்பவர்களை புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருக்கிறேன்) ஏறக்குறைய குஷி படத்தை சற்றே மாறுதல்களுடன் தந்திருக்கிறார் என்பதை ஊகிக்க முடிகிறது. அதில் ஊறுகாயாக மும்தாஜைப் போல இதில் பிபாஷா பாசு. பாடல்களும் இப்போதைக்கு வெளியாகிற டப்பாங்குத்துகளுக்கு சவால் விடுகிறாற் போன்ற எரிச்சலூட்டும் பாடல்கள்.

ஆக ... இப்போதைக்கு தமிழ்ச் சினிமா உருப்பட வாய்ப்பே இல்லை போலிருக்கிறது.

suresh kannan

19 comments:

Anonymous said...

நாங்கள் நம்பிக்கை வைக்க வேண்டிவைகள் வேற எங்கயோதான் இருக்குப் போல.
சநதிர முகிக்கு நடக்கிற ஆலாபனையப் பாக்கப் பயமாயிருக்கு.
பேசாமல் நாங்களும் அதப்போற்றித் துதித்து ஒரு தோத்திரம் பாடாட்டி பைத்தியக்காரப் பட்டம் கட்டப் படுவோமோ தெரியாது.

Anonymous said...

மகேந்திரன், பாலு மகேந்திரா என்ற பெயர்களை கேட்கும் பொழுதே ஒரு நாஸ்டால்ஜியா வந்து ஆட்கொள்கிறது. பெருமூச்சு விட்டுக்கொள்ளத்தான் முடியும், இன்றைய நிலையை நினைத்து.

Anonymous said...

மகேந்திரனின் மகன் என்றவுடன் எனக்கும் பெரிய நம்பிக்கை விழைந்தது உண்மை. விஜய் கதையின் அவுட்லைனைச் சொன்னபோதே அந்த நம்பிக்கை விழுந்துவிட்டது. ஜான் வணிக வெற்றிக்காகக் குறி வைத்திருக்கிறார். சச்சின் அந்த வகையில் வெற்றி பெறும் போலிருக்கிறது. மகேந்திரன் பாலுமகேந்திராவின் தொடர்ச்சியைத் தமிழில் காணாமுடியாததை நினைக்கும்போது கலவரமாய்த்தான் இருக்கிறது.

-ஹரன்பிரசன்னா

By: Haranprasanna

Anonymous said...

நம்பிக்கைதான் வாழ்க்கை, கவலைப்படாதீங்க, கட்டாயம் சரியான ஆட்கள் வருவார்கள். ஆனால் எந்த வாரிசுகளிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

Anonymous said...

அது நாந்தேன்
-காசி

-/பெயரிலி. said...

மகேந்திரன்-ஜானி, பாலுமகேந்திரா-ரெட்டைவால்குருவி+நீங்கள்கெட்டவை, பாரதிராஜா-கொடி பறக்குது என வர்த்தகநோக்கிலே வெற்றிபெற்றபடங்களும் வந்தனதான். சச்சினை நான் பார்க்கவில்லை (இலவசமாகக் கிடைக்காதவரை பார்க்கும் எண்ணமுமில்லை). ஆனால், முழுமையாக மாற்றுத்திரைப்படங்களுக்குத் தம்மை ஒதுக்கிக்கொண்ட எவருமே தமிழிலே வரவில்லை (ஓரிரு படங்களுக்குமேலே கொடுக்கவிரும்பின் வரமுடியாது என்பதுதான் நடைமுறை :-()

பார்க்கும்போது, குறும்படங்களிலேதான் தமிழிலே எண்ணும் எறியத்தினையும் வீச்சத்தினையும் பெறலாமென்று தோன்றுகின்றது.

By: -/பெயரிலி.

Anonymous said...

what you are telling is absolutely correct!
i too had mostly influenced by mahendran sir and mr.john absolutely failed too learn from his father and make the tamil cinema further worse by making such third class films. i am not clear what is happening in that
film. criminal waste of time and money, also his fathers respect toooooooooooo

Anonymous said...

சச்சினை நான் பார்க்கவில்லை (இலவசமாகக் கிடைக்காதவரை பார்க்கும் எண்ணமுமில்லை). :)) இப்படி சில புத்தகங்களை நான் வைத்திருக்கிறேன், இலவசமாகக் கிடைத்தால்தான் பார்க்கலாம் என்று.

சுரேஷ் தன் ஆரம்ப வரிகளில் ரஜினியையும் விஜயையும் பற்றிச் சொல்லியிருப்பதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. பாலுமகேந்திரா, பாரதிராஜா உட்பட அனைவருமே வணிக வெற்றிக்காகத் திரைப்படம் எடுத்தவர்கள்தாம். ரஜினி விஜயை நாம் குறை சொன்னாலும், யாரையும் பாராட்டி விட முடியாது. கமல் ஒரு கனவுப் படம் எடுத்தால் ஒரு வணிக வெற்றிக்காகக் காத்திருக்கிறார். இதுதான் யதார்த்தம்.

அப்பால் தமிழில் இருக்கும் குறும்படங்களைப் பார்த்தேன். அவற்றில் விலாசத்தில் வசனத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இணையத்தில் கிடைக்கும் குறும்படங்கள் நீங்கலாக, தூர்தர்ஷனில் குறும்படங்கள் பற்றிய நிகழ்ச்சியொன்று வருகிறது. புதுமுக இயக்குநர்கள், அவர்களது கல்லூரியில் ப்ராஜெட்டிற்காகச் செய்யும் குறும்படங்களையும் காண்பிக்கிறார்கள். சில தரத்துடன் இருக்கின்றன. பல, மெதுவாகச் சென்றால் கலைப்படம் என்ற ரீதியில் புரிந்துகொள்ளப்பட்டு எடுக்கப்பட்டவையோ என்கிற சந்தேகத்தை அளிக்கின்றன. விலாசம் குறும்படத்தில் கூட இரண்டு மூன்று கேமரா கோணங்கள் குறும்படத்திற்கு ஒவ்வாதவையாக, திரைப்படங்களுக்கு ஏற்றவையாக உள்ளனவோ என்கிற எண்ணம் எனக்கு எழுந்தது. குறும்படங்கள் எளிமையாகவும், எதார்த்தமாகவும், திரைப்படங்களில் அலச முடியாத கருத்துகளை, தர்க்கங்களை முன்வைப்பதாகவும் இருப்பது பலம்.

-ஹரன்பிரசன்னா

Anonymous said...

அன்பில் கண்ணன்,

//தமிழ்ச் சினிமாவின் தரத்தை முன்னேற்றவிடாமல், வணிக நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தி பின்னுக்கிழுப்பதில் ரஜினிகாந்த், விஜய் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.//

வணிக நோக்கும், பொருள் நோக்கும் (materialism) என்பவை இப்போது எல்லாவற்றிலும் விரவி இருக்கும்போது, எதற்கு திரைப்படங்களை குறை சொல்ல வேண்டும்? காலமும் மாறிக் கொண்டிருக்கிறது. பொதுவாக, 99.9% பேர் சினிமாவை பொழுதுபோக்கின் அம்சமாகவே பார்க்கிறார்கள் என்பது தான் உண்மை. மீதி உள்ள 0.1% க்காக எதற்கு படம் எடுத்து நட்டமடைய வேண்டும் ? ரஜினி / விஜய் படங்கள் மக்களால் அங்கீகரிக்கப்படுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம் அல்லவா ?

//திரைப்படத் துறைக்கு வந்த பிறகும் நாடகங்களின் பாதிப்பில் இருந்து மீளாமல் மூலைக்கு மூலை நான்கு பேரை நிறுத்தி படம் எடுத்துக் கொண்டிருந்த பாலச்சந்தர் போன்றவர்களின் நடுவில் ஒரு கதையை கேமரா மூலம் எப்படி சொல்வது என்கிற திறமை அபாரமாக வாய்க்கப் பெற்றவர்களில் முக்கியமானவர்கள் மகேந்திரனும், பாலுமகேந்திராவும்.//

பாலச்சந்தர் (நீங்கள் விரும்பும் வகையில்!) கேமரா மூலம் கதை சொல்பவர் அல்லர். அவரது பலம், கதைக்களமும், அவர் வெளிக் கொணரும் அவர் பாணி நடிப்பும் மற்றும் வித்தியாசமான வீச்சும் (different treatment) ஆகியவை சார்ந்தவை. இதனால், மகேந்திரனையும், பாலுமகேந்திராவையும் குறைத்து மதிப்பிடவில்லை. "முள்ளும் மலரும்" is my all time favourite :-) பாலு மகேந்திராவும் "சதி லீலாவதி" என்று ஒரு படம் எடுத்தார் தானே!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

By: அன்புடன் பாலா

Anonymous said...

தந்தையினுடைய சாதனைகள் மகன் மீது ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குவது உங்கள் உள்ளத்திலே மட்டும் தானே தவிர, ஜான் தன் மேல் அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்ளாமல் தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணித்தால் அதில் ஒன்றும் தவறிருப்பதாக நினைக்கவில்லை.

Anonymous said...

நண்பர்களுக்கு,

ஒரு துறையில் புகழ்பெற்றவரின் வாரிசு அதே துறையில் இறங்கும் போது எதிர்பார்ப்புகள் ஏற்படுவது இயற்கையே. அதுவும் அந்தத்துறை ஒரே மாதிரியான வணிக போக்கில் சென்றிருக்கும் போது இவர் மூலமாவது ஏதாவது மாற்றம் ஏற்படுத்தக்கூடிய படைப்புகள் வெளிப்படாதா என்பதுதான் அந்தத்துறையை நேசிக்கிற ஒரு பார்வையாளனின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும். அவரும் நம் நம்பிக்கையை பொய்யாக்குகிற விதத்தில் செயல்படும் போது ஏற்படுகிற அதிருப்தியைத்தான் என் பதிவில் வெளிப்படுத்தினேன். இதற்காக அவரை நான் குறை சொல்லவில்லை.

அரசியலும், போட்டியும் நிறைந்த சினிமா உலகில் தன்னை ஸ்தாபித்துக் கொள்வது எவ்வளவு சிரமமென்பதை நான் அறிந்திருக்கிறோம். அவ்வாறு தம்மை நன்றாக ஸ்தாபித்துக் கொண்டு நிறைய பொருளீட்டிய நபர்களே சினிமாவின் தரத்தை பற்றி கவலைப்படாத போது ஒரு புதுமுக இயக்குநரிடம் அதை எதிர்பார்ப்பது அதிகமே என்பதையும் நான் உணர்ந்தே இருக்கிறேன்.

நான் குறிப்பிட்டிருந்த இயக்குநர்கள் சில சிறந்த படங்களை கொடுத்திருந்தாலும் வணிக நோக்கில் சமரசப்படுத்திக் கொண்டு மோசமான படங்களையும் கொடுத்திருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. சமீபத்தில் நான் கலந்து கொண்ட கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாலுமகேந்திரா பேசும் போது 'வீடு, சந்தியாராகம் போன்ற படங்கள் தவிர்த்து நான் நிறைய நேரத்தை விரயமாக்கியிருக்கிறேன்' என்று வருத்தத்துடன் ஒப்புக் கொண்டார். அதே மாதிரியான மற்ற இயக்குர்களும் இதே மாதிரி உணரக்கூடும்.

பெயரிலி கூறின மாதிரி, முழுவதும் மாற்றுப்படங்களுக்கென தம்மை அர்ப்பணித்துக் கொண்ட இயக்குநர்கள் வங்காளத்திலும், மலையாளத்திலும் உள்ளது போல் தமிழில் இல்லாதது துரதிர்ஷ்டமே.

முக்கியமாக மக்களின் மனப்போக்கும் மாற வேண்டும். எத்தனை நாளைக்குத்தான் தாம் ஒரே மாதிரியான மசாலாக் கதைகளை வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு நடிகர்கள் மூலமாக பார்க்கப் போகிறோம் என்பதை அவர்கள் யோசிக்க வேண்டும்.

அவ்வாறான நிலைமையில், நுகர்வோனுக்கேற்றாற் போல் வியாபாரிகளும் மாறித்தானாக வேண்டும்.

- suresh kannan

Anonymous said...

நன்றி, சுரேஷ் கண்ணன், தங்களின் நிதானமான நீண்ட விளக்கத்திற்கு.

என்றென்றும் அன்புடன்
பாலா

By: அன்புடன் பாலா

Anonymous said...

அன்பு பாலா,

உங்கள் கருத்துக்கான மறுமொழி விடுபட்டுவிட்டது.

/////வணிக நோக்கும், பொருள் நோக்கும் (materialism) என்பவை இப்போது எல்லாவற்றிலும் விரவி இருக்கும்போது, எதற்கு திரைப்படங்களை குறை சொல்ல வேண்டும்? //////


பெரும்பாலான துறைகள் வணிகநோக்குடன் செயல்படுவது உண்மைதானெனினும் சில துறைகளுக்கென்று சில சமூக கடமைகள் உள்ளன. குறிப்பாக கலைஞர்களுக்கு.

மற்ற துறைகளில் உள்ளவர்களை விட, எழுத்தாளர்கள், ஓவியர்கள், திரைப்பட மற்றும் நாடக இயக்குநர்கள் ஆகிய கலைஞர்களை பொதுமக்கள் தங்களுடன் நெருங்கியவர்களாக உணர்கிறார்கள். அவர்களின் கருத்தை ஆராயாமல் வேதவாக்காக எடுத்துக் கொள்வோரும் உண்டு. (எனவேதான் பெரும்பான்மையான நடிகர்கள் முதல்வர் ஆகின்ற கனவுகளுடன் உலாவுகின்றனர்.) அண்மையில் நடந்ததொரு ஆய்வில் தற்கால இளைஞர்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்படுவதற்கான காரணங்களில் முதன்மையாக இருந்தது, அவர்களின் அபிமானத்துக்குரிய நடிகர்கள் புகைப்பிடிப்பதான காட்சிகளில் திரைப்படங்களில் தோன்றுவதே என்று கூறப்படுகிறது.

எனவே இவ்வாறான கலைஞர்கள் தாங்கள் தான் சார்ந்திருக்கின்ற துறையின் பொறுப்பினை உணர்ந்து சமூகப் பொறுப்புள்ள படங்களை தயாரித்தல் வேண்டும். மக்களின் ரசனை மேம்படுவதில் அவர்களின் பங்கும் மிக முக்கியம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

- Suresh Kannan

Anonymous said...

அருமையான பதிவு சுரேஷ். அப்பவை போல் மகனும் படம் எடுப்பான் எதிர்பார்ப்பு இருப்பது சகஜம் தான். இருந்தாலும் லாபநோக்கு என்று வந்து விட்டால் அதெல்லாம் எதிர்பார்க்க முடியாது. மகேந்திரனுக்குள் கனன்று கொண்டிருந்த வெறி, பட்ட கஷ்டங்களை மகனிடம் எதிர்பார்க்க முடியாது தான்.

உதிரிப்பூக்களை பற்றிய ஒரு செய்தி. அந்த படம் வெளிவந்த உடன் ரஷ்ய அரசாங்கம் அதனை பணம் கொடுத்து வாங்கி ரஷ்யா எங்கிலும் திரையிட்டது.

//NFDC-யால் தயாரிக்கப்பட்ட 'சாசனம்' திரைப்படம் என்னவாயிற்று என்றே தெரியவில்லை//

முதலில் கதையை மாற்ற சொல்லியிருக்கிறார்கள். பிறகு ரஷ் பார்த்து விட்டு படம் நினைத்த மாதிரி கமர்ஷியல் ஹிட் ஆகாது என்று NFDC காசு கொடுப்பதை நிறுத்தி விட்டது. போஸ்ட் ப்ரொக்டஷன் பாதி ஆன நிலையிலேயே தொங்கிக் கொண்டிருக்கிறது. மகேந்திரம் எப்படியாகிலும் அந்த படத்தை வெளியிட வேண்டுமென நினைக்கிறார். ஆனால் அது ஆறிய பண்டம்.

//80 களில் தமிழ்ச்சினிமாவில் ஒரு புதுக்காற்று வீச காரணமாக இருந்த மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா, ருத்ரையா, ஜான் ஆபிரகாம் போல, இப்போது மசாலா படங்கள் என்னும் பாதாள சாக்கடையில் வீழ்ந்திருக்கிற தமிழ்ச்சினிமாவை மீட்டெடுப்பதற்கு இவர் படம் ஒரு ஆரம்பமாக இருக்கும் என்று நம்பினேன்.//

இது கொஞ்சம் ஓவர் கன்பிடெண்ட். பொறுத்திருப்போம்.

Anonymous said...

Your pre-review is awesome!!!. I still wonder how you can write a review with out expectations. In the beginning lines you mentioned you won’t watch Rajini/Vijiay movies, but latter you are contracting yourself by saying the movie is like “Kushi”

Anonymous said...

Your pre-review is awesome. I still wonder how you can write a review with out expectations. In the beginning lines you mentioned you won’t watch Rajini/Vijiay movies, but latter you are contracting yourself by saying the movie is like “Kushi”

Anonymous said...

ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் நண்பரே,

நான் 'சச்சின்' திரைப்படத்தை எந்தவிதமான நேரடி விமர்சனமும் செய்யவில்லை. பத்திரிகைகளின் விமர்சனங்களின் மூலம் நான் படத்தைப் பற்றி உணர்ந்ததை வெளிப்படுத்தியிருக்கிறேன். மேலும் இந்தப் பதிவின் ஆதாரக்குரலாக, சிறந்த இயக்குநரின் மகனின் திரைப்படம் என்பதால் எனக்கேற்பட்ட எதிர்பார்ப்பையும் பின்பு எழுந்த ஏமாற்றத்தையும்தான் மையப்படுத்தி எழுதியிருந்தேனேயன்றி இந்தப் படத்தைப் பற்றி அல்ல.

நான் *பொதுவாக* ரஜினி மற்றும் விஜய் போன்றோர்களின் திரைப்படங்களை பார்ப்பதில்லை என்றுதான் குறிப்பிட்டு இருக்கிறேனே ஒழிய அவர்களின் எந்தப் படங்களையும் பார்ப்பதில்லை என்று குறிப்பிடவில்லை. குஷி திரைப்படம் அந்தப் பட இயக்குநர் சூர்யாவின் திறமையான இயக்கத்திற்காக பிடித்திருந்தது. "இதுதாம்ப்பா கதை" என்று ஆரம்பித்த அந்தத் துணிச்சலும், சாமர்த்தியமாக அமைத்திருந்த அந்த திரைக்கதையும் பிடித்திருந்தது.

சுரேஷ் கண்ணன் said...

ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் நண்பரே,

நான் 'சச்சின்' திரைப்படத்தை எந்தவிதமான நேரடி விமர்சனமும் செய்யவில்லை. பத்திரிகைகளின் விமர்சனங்களின் மூலம் நான் படத்தைப் பற்றி உணர்ந்ததை வெளிப்படுத்தியிருக்கிறேன். மேலும் இந்தப் பதிவின் ஆதாரக்குரலாக, சிறந்த இயக்குநரின் மகனின் திரைப்படம் என்பதால் எனக்கேற்பட்ட எதிர்பார்ப்பையும் பின்பு எழுந்த ஏமாற்றத்தையும்தான் மையப்படுத்தி எழுதியிருந்தேனேயன்றி இந்தப் படத்தைப் பற்றி அல்ல.

நான் *பொதுவாக* ரஜினி மற்றும் விஜய் போன்றோர்களின் திரைப்படங்களை பார்ப்பதில்லை என்றுதான் குறிப்பிட்டு இருக்கிறேனே ஒழிய அவர்களின் எந்தப் படங்களையும் பார்ப்பதில்லை என்று குறிப்பிடவில்லை. குஷி திரைப்படம் அந்தப் பட இயக்குநர் சூர்யாவின் திறமையான இயக்கத்திற்காக பிடித்திருந்தது. "இதுதாம்ப்பா கதை" என்று ஆரம்பித்த அந்தத் துணிச்சலும், சாமர்த்தியமாக அமைத்திருந்த அந்த திரைக்கதையும் பிடித்திருந்தது.

Anonymous said...

புலிக்குப் பிறந்தது பூனையானதா?
இந்தகேள்விக்கு விடை நிச்சயமாக ஆமாம். பார்க்க: http://penathal.blogspot.com/2005/04/blog-post_30.html

குட்டி போல மனதையும் பாதிக்கவில்லை, கில்லி போல கேளிக்கையும் காட்டவில்லை.

பல முதல் பட இயக்குநர்களிடம் காணப்படும் "சேர்த்துவைத்த திறமை"யும் இல்லை.

படம் பார்த்து வெறுத்துப்போன

சுரேஷ்.