Tuesday, January 21, 2020

“க்வீன்” – ஆணாதிக்க உலகில் தனித்துப் போராடும் ‘சக்தி’
பிரபலமான ஆளுமைகளைப் பற்றி biopic என்னும் வகைமையில் ஹாலிவுட் துவங்கி உலகெங்கிலும் பல உன்னதமான திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய ‘காந்தி’ (1982) துவங்கி பல உதாரணங்களைச் சொல்ல முடியும். இவைகளில் பெரும்பாலானவை பாராட்டுகளையும் விருதுகளையும் பெறுவதோடு சர்ச்சைகளையும் கூடவே சந்தித்திருக்கின்றன.

தமிழ் சினிமாவிலும் இது போன்ற திரைப்படங்கள் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற சுதந்திரப் போராட்டக் காலத்தில் இயங்கிய ஆளுமைகளைப் பற்றிய சித்திரங்கள் மிகையுணர்ச்சியோடும் போற்றிப் பாடும் தன்மையோடும் இருக்கும். அவற்றில் உள்ள எதிர்மறைத்தன்மை, விமர்சனம், சறுக்கல் போன்றவற்றோடு சமநிலையான வடிவத்தில் இங்கு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களை உருவாக்கி விடவே முடியாது. சகிப்புத்தன்மையும் மனமுதிர்ச்சியும் குறைவாக இருக்கும் சூழலில் மிக எளிதில் உக்கிரமான எதிர்ப்புக்குரல்களும் சர்ச்சைகளும் கிளம்பி விடும். எனவே இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அவ்வாறான படைப்புகளை இங்கு உருவாக்கத் தயங்குகிறார்கள்.

கடந்த கால தலைவர்களைப் பற்றியே திரைப்படங்களை உருவாக்கி விட முடியாது என்கிற சூழல் இருக்கிற போது சமீபத்திய தலைவர்களைப் பற்றிய படைப்புகளை நம்மால் எண்ணிக் கூடப் பார்க்க முடியாது. சர்ச்சைகள் ஏதும் இல்லாமல் போற்றிப் புகழும் விதமாக உருவாக்குவது வேண்டுமானால் சாத்தியப்படும்.

‘இரும்பு பெண்மணி’ “புரட்சித்தலைவி’ போன்ற அடைமொழிகளோடு பல பாராட்டுக்களைப் பெற்றதற்கு நிகராக  சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்தவர், தென்னிந்திய நடிகையும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா. திரைப்படமாக உருவாக்கப்படுவதற்கு மிக கச்சிதமான ஆளுமைகளுள் ஒருவர். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, பல உயரங்களையும் வீழ்ச்சிகளையும் சந்தித்தவர். இவரின் மறைவிற்குப் பிறகு இவரைப் பற்றி உருவாக்கப்படவிருப்பதாக இருந்த சில திரைப்பட திட்டங்கள் தோன்றி சில காரணங்களால் மறைந்து போயின. இதற்கு முன்னால் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ திரைப்படத்தில் இவரின் சாயலையொட்டிய பாத்திரத்தை ஐஸ்வர்யா ராய் சிறப்பாக கையாண்டிருந்தார்.

இந்தச் சூழலில் கெளதம் வாசுதேவ மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் (கிடாரி திரைப்படத்தை இயக்கியவர்) ஆகியோர்களின் இயக்கத்தில் ‘Queen’ என்கிற வெப்சீரிஸ் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அனிதா சிவகுமாரன் எழுதிய ‘The Queen’ என்கிற நாவலையொட்டி இந்தத் தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதாவின் வாழ்க்கையையொட்டிய நெருக்கமான அடையாளங்களையும் பெயர்களையும் சம்பவங்களையும் இந்தத் தொடர் கொண்டிருந்தாலும் ‘இது எந்தவொரு தனிநபரைப் பற்றிய படைப்பும் அல்ல’ என்கிற முன்ஜாக்கிரதை குறிப்புடன்  ‘புனைவு’ என்கிற ஆதாரமான பாவனையில் பயணிக்கிறது. நெருப்பின் அருகில் செல்லாமலும் அதே சமயத்தில் அதிகம் விலகாமலும் ‘குளிர் காய்வது’ போன்ற கவனத்துடன் அவர் தொடர்பான அடையாளங்கள் தென்படுகின்றன. 

அவர் சம்பந்தப்பட்ட பல பெயர்கள் சற்றே மாறுதலுடன் இதில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஜிஎம்ஆர் என்பது ஒரு பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதியின் பாத்திரத்தின் பெயர். இது யார் என்பதை எளிதில் யூகித்து விடலாம். சர்ச்சைகளையும் சட்டச் சிக்கல்களையும் தவிர்ப்பதற்காக இந்த உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும்.

ஒரு நடிகை மற்றும் அரசியல்வாதி தொடர்பான படைப்பு என்கிற அடையாளத்தைக் கழற்றி வைத்து விட்டும் இந்தத் தொடரை ரசித்துப் பார்ககலாம். (அவ்வாறு தவிர்ப்பது சிரமமானது என்றாலும்).

பெண்களுக்கு பல அடிப்படையான சுதந்திரங்களும் உரிமைகளும் இன்றும் கூட மறுக்கப்படுகிற சூழலில் நாற்பதுகளில் பிறந்து நடுத்தர வர்க்க பின்னணியில் வளர்கிற ஒரு பெண்ணுக்கு அவளுடைய கனவுச் சிறகுகள் எப்படியெல்லாம் ஒடிக்கப்படுகின்றன என்பதை இந்தத் தொடர் மிக நுட்பமாகவும் ஆழமாகவும் விவரித்துச் செல்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ‘ஆணாதிக்கம்’ என்னும் சுவரில் முட்டி தோல்வியோடு திரும்பும் அவலம் பெண் சமூகத்திற்கு இருப்பதையும் ஆதாரமான விஷயங்களுக்கு கூட அவர்கள் போராடிப் பெற வேண்டிய அவலத்தையும் மிகையுணர்ச்சி இல்லாமல் சித்தரிக்கிறது.

**

இந்தி நடிகையான சிமி அகர்வால் ‘Rendezvous with…’ என்கிற தலைப்பில் பிரபலமான ஆளுமைகளைச் சந்தித்து நேர்காணல் நிகழ்த்தினார். அந்த வரிசையில் 1999-ம் ஆண்டு அவர் ஜெயலலிதாவை சந்தித்தார். அந்த நேர்காணலில் தன் வாழ்க்கை தொடர்பான பல தனிப்பட்ட தகவல்களை சொன்னார் ஜெயலலிதா.

அப்படியொரு நேர்காணல் தொடர்பான காட்சிகளோடு இந்தத் தொடர் ஆரம்பிக்கிறது. ஏறத்தாழ அதே மாதிரியான காமிரா கோணங்கள். நிதானமான தொனி, மெல்லிய சிரிப்பு என்று ஜெயலலிதாவின் உடல்மொழியை நன்கு நகலெடுத்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். அவர் தன் கடந்த கால வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களை நினைவுகூரும் விதமாக ‘பிளாஷ்பேக்’ உத்தியில் காட்சிகள் விரிகின்றன.

சக்தி சேஷாத்ரி – ஆம், அதுதான் இதில் ஜெயலலிதாவின் புனைவுப் பெயர். அவரின் வாழ்க்கை மூன்று படிநிலைகளில் வெவ்வேறு வயதுகளில் சொல்லப்படுகிறது. பள்ளிச் சிறுமியாக அனிகா, இளம் வயது நடிகையாக அஞ்சனா, அரசியல்வாதியாக ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

சக்தியின் வாழ்க்கையில் பெரும்பான்மையான செல்வாக்கை செலுத்தியவர்கள் என்று இரு நபர்களைச் சொல்ல முடியும். ஒன்று அவரின் தாய் ரங்கநாயகி. இன்னொருவர் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான ஜிஎம்ஆர். இருவரின் மீதும் ஒருவகையான love & hate உறவை வைத்திருக்கிறார் சக்தி. அதற்கான பல பின்னணிக் காரணங்கள் இந்தத் தொடரில் இருக்கின்றன.

இளம் வயதில், படிப்பில் சிறந்து விளங்கும் சக்திக்கு மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று நிறைய ஆசை இருக்கிறது. அதிலும் நகரின் சிறந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது அவருடைய பெரும் கனவாகவும் லட்சியமாகவும் இருக்கிறது. “அது நடக்காது சக்தி. நீ வேலைக்கு போயாக வேண்டும். நம் குடும்பம் வறுமையில் மூழ்கிக் கொண்டிருக்கிறது” என்றொரு குண்டைப் போடுகிறார் சக்தியின் தாய்.

சக்தியின் தாத்தா அரண்மனையில் பணிபுரிந்தவர். செல்வாக்கான குடும்பம். ஆனால் சக்தியின் தந்தை ஊதாரித்தனமாக பெரும்பாலானவற்றை செலவு செய்து விட்டு மறைந்து விடுவதால் குடும்பம் தத்தளிக்கத் துவங்குகிறது. சக்தியின் தாய் சினிமாத்துறையில் துணை நடிகையாக இருப்பவர். இந்தக் குறைகள் பெரிதும் தெரியாமல் குடும்பத்தை நடத்திச் செல்கிறார். ஆனால் சினிமா வாய்ப்புகள் மங்கத் துவங்குகின்றன. வறுமை மெல்ல மெல்ல நெருங்குகிறது. எனவே தன் மகளை சினிமாவில் கதாநாயகியாக்குவதன் மூலம் குடும்பத்தை கரையேற்ற முயல்கிறார்.

கல்லூரி கனவில் இருந்த சக்திக்கு இது பெரிய இடியாக இருந்தாலும் குடும்பத்தின் வறுமை தொடர்பான நிதர்சனத்தை உணர்ந்தவுடன் ‘ஒரேயொரு படத்தில் நடிக்கிறேன்’ என்று ஒப்புக் கொள்கிறார். வேண்டா வெறுப்பாக திரைத்துறையில் இறங்கினாலும் அவர் மனம் முழுதும் கல்லூரி கனவிலேயே இருக்கிறது. ஆனால் அது நிஜமாவதில்லை. சினிமாவிலேயே அவர் நீடிக்க வேண்டியிருக்கிறது.

“என் படத்தில் கதாநாயகியாக நீ நடிக்கிறாயா?” – தமிழ் சினிமாவின் பிரபலமான மற்றும் செல்வாக்கு மிகுந்த உச்ச நடிகரான ஜிஎம்ஆர், சக்தியின் வீட்டிற்கே வந்து அவரிடம் கேட்கிறார். ஜிஎம்ஆரின் படங்களை சிறுவயதில் கண்டு அந்தக் காட்சிகளை தன் சகோதரனுடன் விளையாட்டாக நடித்துப் பார்த்திருக்கும் சக்திக்கு, தன் கனவு நாயகனை நேரில் சந்திக்கும் அனுபவம் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது. திரையில் கண்டு பிரமித்த ஒரு நாயகனை நேரில் காண்பதும் அவருக்கு இணையாக நாயகியாக நடிக்கும் வாய்ப்பும் சக்தியை வாயடைத்துப் போகச் செய்கின்றன. அவர் மீதுள்ள பிரேமையும் அவர் கண்ணை மறைத்து விடுகிறது.

“முடியாது. நடிக்க மாட்டேன்” என்று அந்தச் சமயத்தில் சொல்லியிருந்தால் என் வாழ்க்கை வேறு மாதிரியாக திசை மாறியிருக்கும்” என்பது போல் நேர்காணலில் சொல்கிறார் சக்தி. வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களில் தடுமாறாமல் உறுதியான முடிவுகளை எடுக்காவிட்டால் ஒருவரின் வாழ்க்கை எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படும் என்பதற்கான உதாரணக்காட்சி இது.

ஜிஎம்ஆரின் படங்களில் தொடர்ந்து நாயகியாக நடிக்கிறார் சக்தி. இதற்கிடையில் ஒரு இந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வருகிறது. சக்திக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக அது அமைகிறது. அதன் ஹீரோ சக்திக்கு மிகவும் பிடித்தவர். ஆனால் ஜிஎம்ஆரின் தொடர் ஒப்பந்தத்தில் இருப்பதால் அது நிகழ்வதில்லை. ஜிஎம்ஆரின் மறைமுகத் தடை ஒரு காரணமாக அமைகிறது.

உயர்தர கான்வென்ட் பள்ளி, ஆங்கிலத் திரைப்படங்கள், நாவல்கள் என்று ஐரோப்பிய மனநிலையிலான சூழலில் வளர்ந்த சக்திக்கு தமிழ் சினிமாவின் அபத்தமான உருவாக்கங்கள் பிடிப்பதில்லை. தன் நடிப்புத் திறனிற்கு தீனி போடும் வகையிலான வாய்ப்புகளுக்காக ஏங்கத் துவங்குகிறார். தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக அறியப்படும் ஒரு நடிகரின் திரைப்படத்தில் நாயகியாக வரும் வாய்ப்பை விரும்பி ஏற்றுக் கொள்கிறார். ஆனால் ஜிஎம்ஆரின் மறைமுகமான குறுக்கீட்டினால் அதுவும் தட்டிப் போகிறது. தான் ஜிஎம்ஆரின் கட்டுப்பாட்டில் இருப்பதை கசப்புடன் உணர்கிறார் சக்தி. எனவே அவருடன் முரண்டு பிடிக்கத் துவங்குகிறார்.

ஜிஎம்ஆரின் திரைப்படங்களில் வேறு இளம் நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள். ‘தானும் இந்த வரிசையில் ஒருவராக இருந்தோம்’ என்கிற நிதர்சனத்தை சக்தியின் ஈகோ ஏற்பதில்லை. தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டு ஒருவழியாக ஜிஎம்ஆரின் பிடியிலிருந்து அப்போதைக்கு விலகுகிறார்.

தெலுங்குத் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறது. அதன் இயக்குநரான சைதன்யா ரெட்டியின் கண்ணியமான அணுகுமுறையால் வசீகரிக்கப்படுகிறார் சக்தி. இருவரும் நெருங்கிப் பழகுகிறார்கள். திருமணம் செய்து கொள்ளும் முடிவை நோக்கி நகர்கிறார்கள். ஆனால் திருமண நாளன்று சைதன்யா வர முடியாத சூழல் ஏற்படுகிறது. ‘ஏற்படுத்தப்படுகிறது’ என்றும் சொல்லலாம். இந்தித் திரைப்படம் இயக்கும் வாய்ப்பு சைதன்யாவிற்கு வருவதால் திருமணத்தை விட்டு விலகிப் போகிறார். இதற்குப் பின்னாலும் ஜிஎம்ஆரின் அசைவுகள் இருப்பதை பிறகு அறிந்து நொந்து போகிறார் சக்தி.

தாயைப் போலவே சக்திக்கும் சினிமா வாய்ப்புகள் மங்கத் துவங்குகின்றன. தாயின் மரணமும் அவரை தனிமையில் ஆழ்த்துகிறது. அரசியலில் வெற்றி பெற்று முதல்வராகியிருக்கும் ஜிஎம்ஆர் அரசியல் பணிகளில் ஈடுபட சக்திக்கு அழைப்பு விடுகிறார். உறுதியாக ‘நோ’ சொல்வதற்கான இன்னொரு தருணம். 

முதலில் மறுத்தாலும் மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை மறுக்க வேண்டாமே என்று ஏற்றுக் கொள்கிறார் சக்தி.  ஒரு நடிகையின் இந்த அரசியல் நுழைவு, முதல்வரைச் சுற்றி இருப்பவர்களுக்கு பிடிப்பதில்லை. இதனால் பல்வேறு அவமானங்களைச் சந்திக்கிறார் சக்தி. பொதுவெளியில் நுழையும் ஒரு பெண் சந்திக்கக்கூடிய பிரத்யேகமான அவமானங்களை எதிர்கொள்கிறார். சக்தி ஒரு நடிகையும் என்பதால் அது தொடர்பான கூடுதல் அவதூறுகள் சொல்லப்படுகின்றன.

இதற்கிடையில் ஜிஎம்ஆரின் மரணம் நிகழ்கிறது. தாயின் மறைவிற்குப் பிறகு இன்னொரு அதிர்ச்சியான செய்தி இது. அரசியல் ஆசானின் இழப்பின் சூடு அடங்குவதற்குள் எதிர்ப்பாளர்களின் கூக்குரல்கள் உக்கிரமாகின்றன. அரசியலை விட்டு விலகி விடலாமா என்று கூட சக்திக்கு தோன்றுகிறது.

ஆனால் தனக்கு ஏற்பட்ட அவமானங்களையும் அவதூறுகளையும் படிக்கட்டாகக் கொண்டு தன்னம்பிக்கையுடன் முன்னே நகர்வதாக சக்தி முடிவு செய்யும் காட்சியோடு இந்தத் தொடர் நிறைவுறுகிறது. நேர்காணலின் மூலம் அவர் தமிழகத்தின் முதல்வராக இருப்பதையும் அறிந்து கொள்கிறோம்.

**

இந்தத் தொடரில் மொத்தம் பதினோரு எபிஸோட்கள் உள்ளன. ஒவ்வொன்றும் சுமார் ஐம்பது நிமிடங்களுக்கு நீடிக்கக்கூடியது. ‘This is a beginning’ என்று சக்தி சொல்லும் வசனத்தை வைத்துப் பார்க்கும் போது இதன் இரண்டாவது சீசன் விரைவில் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. சக்தி சந்தித்த அரசியல் போராட்டங்கள், வளர்ச்சிகள், வீழ்ச்சிகள் தொடர்பான காட்சிகள் அதில் விவரிக்கப்படலாம்.

சிறுவயது சக்தியாக அனிகா சிறப்பாக நடித்திருக்கிறார். தாமதமாக பள்ளிக்கு வரும் மாணவிகளை பள்ளியின் கேப்டனான அவர் கனிவும் கறாருமாக கண்டிக்கும் காட்சியுடன் இந்தத் தொடர் துவங்குகிறது. தன் கல்லூரி கனவு நொறுங்கிப் போவதை அறிந்து உடைந்து அழும் காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் அனிகாவின் சிறப்பான நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது.

சக்தியின் தாயாக சோனியா அகர்வால் தனது மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். அடக்கமான, அழுத்தமான குரலில் நிதானத்துடன் வாழ்க்கையின் நிதர்சனத்தை சக்திக்கு புரிய வைக்கும் காட்சிகள் நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளன. இவரது பாத்திரம் துவக்கத்தில் ‘வில்லி’ போன்று எதிர்மறைத்தன்மையுடன் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் தொடரின் பிற்பாதியில் இவரது கையறு நிலையும் நெகிழ்ச்சியாக பதிவாகியிருக்கிறது. ஆணாதிக்க உலகில் பலியாகும் இன்னொரு பெண் இவர் என்பது சக்திக்கும் புரிய நேர்வதால் அனுதாபம் ஏற்படுகிறது.

ஜிஎம்ஆராக மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் நடித்துள்ளார். தோற்றப் பொருத்தமும் உடல்மொழியும் குறை சொல்ல முடியாத வகையில் வெளிப்பட்டுள்ளது. கையை அடிக்கடி உயர்த்துவது, துள்ளிக் குதித்து நடப்பது போன்ற எம்.ஜி.ஆரின் வழக்கமான ஆரவாரங்கள் அல்லாமல் திரையில் நாம் பார்க்காத, நடைமுறையில் இருக்கக்கூடிய நிதானமான உடல்மொழியை இந்திரஜித் கடைப்பிடித்துள்ளது இயல்பாக உள்ளது. எதிராளியை எடை போடும் வகையில் கூர்மையாக கவனிப்பது, தன்னுடைய அதிகாரத்தையும் ஆக்கிரமிப்பையும் உறுத்தாத வகையில் ஆனால் அழுத்தமாக செலுத்துவது என்று இவரது பாத்திர வடிவமைப்பு சுவாரசியமாக அமைந்துள்ளது.

நடிகையாக மலரும் இளம் பருவத்தின் பாத்திரத்தை அஞ்சனா ஜெயப்பிரகாஷ் ஏற்றுள்ளார். இவர் அதிகம் பிரபலமில்லாதவராக இருந்தாலும் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். இவருக்கும் தெலுங்கு நடிகருக்கும் இடையில் மலரும் காதல் தொடர்பான காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. இந்த முதல் சீஸனில் அஞ்சனா நடிக்கும் காட்சிகள்தான் அதிகம் உள்ளன.

சக்தியின் நெருக்கமான தோழி சசிகலாவாக விஜி சந்திரசேகர், ஆலோசனைகள் சொல்லும் பத்திரிகையாளர், (சோ ராமசாமி) சக்தி நடிக்கும் முதல் திரைப்படத்தின் இயக்குநராக, கெளதம் வாசுதேவ மேனன், (ஸ்ரீதர்) ஆகிய பல துணைப் பாத்திரங்கள் இந்தத் தொடரில் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ஜிஎம்ஆரின் நிழல் அடியாளாக, பிரதீபன் என்கிற பாத்திரத்தில் நடிப்பவர் தனித்துத் தெரிகிறார். சக்தியை முதலில் இருந்தே வெறுக்கும் இவர் அதற்காக பல உள்ளடி வேலைகளைச் செய்கிறார். தொடரின் இறுதிப்பகுதியில் இவருக்கும் சக்திக்கும் நிகழும் உரையாடல் சற்று நாடகத்தனமாக தெரிந்தாலும் சிறப்பாக அமைந்துள்ளது.

**

இந்தத் தொடரின் தொழில்நுட்பக் குழுவில் கலை இயக்குநரின் பங்கை (குமார் கங்கப்பன்) பிரத்யேகமாக குறிப்பிட வேண்டும். அந்தக் காலத்தின் மாநகர பேருந்து, திரைத்துறை வண்டி, வார இதழ்கள், உள்ளரங்கப் பொருட்கள் போன்றவற்றை மிகுந்த மெனக்கெடலுடன் சிறப்பாக உருவாக்கியுள்ளார்கள். காட்சிகளின் நம்பகத்தன்மைக்கு இது பெருமளவு உதவியுள்ளது. போலவே ஆடை வடிவமைப்புத் துறையைச் சேர்ந்தவர்களும் சிரத்தையாக உழைத்துள்ளார்கள்.

எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக அமைந்துள்ளது. ஜிஎம்ஆரின் மூக்குக் கண்ணாடியின் ‘க்ளோசப்’ வழியாக தொடரும் காட்சி ஒரு சிறந்த உதாரணம். சக்தியின் நேர்காணல் வழியாக பின்னோக்கி நகரும் பிளாஷ்பேக் காட்சிகளை சிறப்பாக தொகுத்துள்ளார் எடிட்டர் பிரவீன் ஆண்டனி.

இந்தத் தொழில்நுட்ப கூட்டணியில் வசனகர்த்தா ரேஷ்மா கட்டாலாவின் பங்கை தனித்துக் குறிப்பிட வேண்டும். ஒரு நாவலையொட்டி உருவாக்கிய தொடராக இருந்தாலும் ரேஷ்மாவின் கூர்மையான வசனங்கள் சூழலுடன் கச்சிதமாகப் பொருந்திப் போகும் அளவிற்கு சிறப்பாகவும் தனித்துவமாகவும் எழுதப்பட்டுள்ளது.

“நீங்கள் ஜிஎம்ஆரை காதலித்தீர்கள், அல்லவா?” என்று நேர்காணல் செய்பவர் சக்தியைக் கேட்கிறார். அதற்கான பதிலை சக்தி சொல்கிறார். “Everybody loved him’ சற்று இடைவெளி விட்டு நிதானத்துடன்  “But I am not everybody” என்று சக்தி சொல்லும் இந்த இரண்டு வரி வசனத்தின் வழியாக இந்தத் தொடரின் ஒட்டுமொத்த மையமும் வந்து விட்டதாகத் தோன்றுகிறது.

தனக்கான பிரத்யேக அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் ஆணாதிக்க உலகில் தொடர்ந்து தேடியலையும் சக்தியின் பிடிவாதமும் மனஉறுதியும் பல காட்சிகளில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. சினிமா கதை தொடர்பான ஒரு விவாதத்தில் சக்தி தானாக முன்வந்து சொல்லும் ஒரு திருத்தம் அனுமதிக்கப்படும் போது “என் புத்திசாலித்தனத்திற்காக முதன்முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்’ என்கிறார் ‘முதல்வர்’ சக்தி. இப்படி பல கூர்மையான வசனங்கள்.

இதில் சித்தரிக்கப்பட்டுள்ள ‘சக்தி’ என்னும் புனைவுப் பாத்திரம், நிஜத்தில் பெண்களுக்கான முன்னுதாரணம், நேர்மறைத்தன்மை போன்றவற்றைக் கொண்டிருந்தாலும் அதன் கூடவே அகங்காரம், ஊழல், பழிவாங்கும் உணர்ச்சி…என்று பல எதிர்மறைத்தன்மைகளையும் கொண்டதாக இருந்தது. இது தமிழ் சமூகம் அறிந்த விஷயம்தான். ஆனால் இவை இந்தத் தொடரில், சர்ச்சை கருதியோ என்னவோ, அறவே தவிர்க்கப்பட்டிருக்கிறது. ‘தனக்கான அடையாளத்தை நோக்கிப் போராடும் ஒரு பெண்’ என்கிற சித்திரமே பெரிதும் வெளிப்பட்டுள்ளது.

ஒருவரின் இளம் வயது சூழல், அனுபவம் போன்றவைதான் அவரது பிற்கால ஆளுமையையும் குணாதிசயங்களையும் தீர்மானிக்கிறது என்கிறார்கள், உளவியல் வல்லுநர்கள். தாயிடமிருந்து சிறிது மட்டுமே கிடைத்த அன்பு, ஆசைப்பட்ட கல்வியை படிக்க முடியாத தடை, தனக்குப் பிடிக்காத திரைத்துறையில் தள்ளிவிடப்பட்ட சூழல், ஆண்களின் அகங்கார உலகில் சிறைப்பட்ட அவலம், அடைந்த அவமானங்கள், வீழ்ச்சிகள் போன்றவை, பின்னர் வெளிப்பட்ட சக்தியின் எதிர்மறைத்தன்மைகளுக்கு ஒருவகையில் காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கத் தோன்றுகிறது. ஆனால் எந்தவகையிலும் அந்த எதிர்மறைத்தன்மைகளை நியாயப்படுத்தி விடவும் முடியாது.

MX Player என்கிற நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் தொடரை இணையத்தில் இலவசமாக பார்க்கலாம். ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும் தமிழ், தெலுங்கு, வங்காளம் போன்ற மொழிகளின் ‘மொழிமாற்ற’ தேர்வுகளும் இதில் உள்ளன. ஆனால் தமிழ் வடிவத்தில் பார்த்தால் ‘டப்பிங் படத்தைப்’ பார்ப்பது போலவே நெருடலாக இருக்கும். இதற்கு மாற்றாக ‘Tamil – English’ என்றுள்ள தேர்வில் பார்ப்பது சிறந்தது. தமிழ் வசனங்கள் தமிழிலும் ஆங்கில வசனங்கள் ஆங்கிலத்திலும் ஒலிப்பதால் ‘டப்பிங்’ நெருடலைத் தாண்டி வர முடியும். சப்டைட்டிலும் உள்ளதால் வசனங்களை எளிதாகப் புரிந்து கொள்ளவும் முடிகிறது.

திருமணம், குடும்பம், குழந்தைகள் என்று சக்தி ஆசைப்பட்டது ஒரு சாதாரண பெண்ணின் வாழ்க்கையையே. ஆனால் காலமும் சூழலும் அவரை விரும்பாத பல திசைகளில் நகர்த்திச் சென்றது. அந்த வகையில் பல பெண் பிரபலங்களின் வாழ்க்கை போராட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்பாக இந்தத் தொடரை பார்க்க முடியும். அடுத்த சீஸன் எப்போது வெளியாகும் என்கிற ஆவலை இந்த முதல் சீஸன் ஏற்படுத்தியுள்ளது. 


(பேசும் புதிய சக்தி -  ஜனவரி 2020 இதழில் பிரசுரமானது)
suresh kannan

No comments: