Friday, January 10, 2020

காளிதாஸ் (2019)-ம் மற்றும் தமிழ் சினிமாவின் புதிய அலையும்



காளிதாஸ் – தமிழ் சினிமாவின் முதல் பேசும் படத்தின் அதே தலைப்பைக் கொண்டு 2019-ல் வெளியாகியிருக்கும் இந்த க்ரைம் திரில்லர், இந்த வருடத்தின் கவனத்திற்குரிய திரைப்படங்களின் பட்டியலில் இறுதியாக இணைந்திருக்கிறது.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியின் சீஸன்கள் ஒன்றில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீ செந்தில் இந்தத் திரைப்படத்தை இயக்கி பலரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கிறார். தமிழ் சினிமாவின் புதிய அலையை இது போன்ற இயக்குநர்கள்தான் இப்போது உருவாக்கி வருகிறார்கள். இது சார்ந்த பின்னணியை சற்று பார்த்து விட்டு திரைப்படத்தைப் பற்றிய விஷயத்திற்கு செல்வோம்.

ஒரு தமிழ் தொலைக்காட்சியில் ஒரு கான்செப்ட் வெற்றி பெற்றால் (இவை பெரும்பாலும் அமெரிக்கா போன்று மேற்கத்திய தொலைக்காட்சிகளைப் பார்த்து நகலெடுத்ததாகத்தான் இருக்கும்) இதர தமிழ் சானல்களும் அதையே சற்று கரம் மசாலா கலந்து காப்பிடியடிக்கும் போது, தமிழ் சினிமாவின் வருங்கால நம்பிக்கைகளை தேடிக் கண்டுபிடிக்கும் ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியை வேறு தமிழ் சானல்கள் ஏனோ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

முன்பு போல, வெற்றி பெற்ற ஒரு இயக்குநரின் அலுவலகம் மற்றும் வீட்டின் முன்பாக தவம் கிடந்து பின்பு அவரின் ஓரக்கண் பார்வை ஒருநாள் தெய்வாதீனமாக பட்டு, பத்தோடு பதினொன்றாக உதவியாளராக இணைந்து பல்வேறு முறைவாசல்கள், அவமானங்களைத் தொடர்ந்து ஒவ்வொரு படிநிலையாக முன்னேறி ‘குருகுல’ வாசம் செய்யும் அவசியங்கள் இப்போது உதவி இயக்குநர்களுக்கு இல்லை.

சினிமா பற்றிய அடிப்படை ஆர்வமும் தேடலும் ரசனையும் உள்ளவர்கள் குறும்படங்களை இயக்கி யூட்யூப்பில் வெளியிட்டு அதையே தனக்கான விசிட்டிங் கார்டாக வைத்து வெள்ளித் திரையிலும் முன்னேறலாம். இது போன்ற இளைஞர்களுக்கான கதவுகள் இப்போது அகல திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் தயாரிப்பாளர்களை அணுகுவது எளிதாகி விட்டிருக்கிறது. பாலாஜி மோகன் துவங்கி.. கார்த்திக் சுப்புராஜ் என்று இந்த வரிசை பெரிதாக நீள்கிறது. தமிழ் சினிமாவின் புதிய அலையைத் தோற்றுவிப்பதில் இவர்களே முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் ஸ்ரீ செந்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி.

ஆனால் சினிமா என்கிற கலையின் மீது உண்மையான ஆர்வம் உள்ளவர்களே இந்தத் துறையில் நுழைய வேண்டும். சினிமா தரும் பணம், புகழ், செல்வாக்கு, கவனம் போன்ற காரணங்களுக்காக பல இளைஞர்கள் இன்று தங்களின் பட்டப்படிப்புகளைத் துறந்து சினிமாவில் நுழைகிறார்கள். அதற்குக் காரணம் சமூகத்தில் சினிமா பெற்றிருக்கும் அதீதமான கவனம்.

அல்வா கிளறும் சமையல் போட்டி முதல் அணுகுண்டு பற்றி கருத்து சொல்வது வரை பிரபலமான முகங்களைத்தான் ஊடகங்கள் தேடுகின்றன. ஒரு தீவிரமான பிரச்சினை பற்றி சொல்வதற்கு அவர்களுக்கு அறிவோ தகுதியோ இருக்கிறதா என்பது பற்றி எவருக்கும் கவலையில்லை. இதனாலேயே பல இளைஞர்களின் கனவாக ‘சினிமா’ மாற்றப்பட்டிருக்கிறது. மிகுந்த செலவில் தாங்கள் படித்த படிப்பைக் கூட உதறி விட்டு சினிமாத்துறையில் நுழைய முட்டி மோதி சிரமப்படுகிறார்கள்.

சினிமா என்பது சமூகத்தின் ஒரு அங்கம் மட்டுமே. கல்வி, மருத்துவம், அறிவியல் என்று சமூகத்தில் பல மதிப்பு மிக்க அங்கங்கள் உள்ளன. ஆனால் ஒரு சினிமா நடிகருக்குள்ள புகழ் மற்றும் மதிப்பில் நூற்றில் ஒரு சதவீதம் கூட ஓர் அறிவியல் அறிஞருக்கோ, மருத்துவருக்கோ, எழுத்தாளருக்கோ இங்கு இல்லை.

சினிமாவில் நுழைவதற்காக இவர்கள் உதறித்தள்ளும் படிப்பு என்பது இன்னொருவரின் ஆதாரமான கனவு என்பதை இது போன்ற மாணவர்கள் உணர வேண்டும். பட்டப்படிப்பிற்கு முன்பே தாங்கள் செல்லப் போகும் திசை என்ன என்பதை தெளிவாக அறிய வேண்டும். தங்களின் உள்மனது சொல்லும் செய்தி என்ன என்பதை உணர வேண்டும். சினிமா போன்ற புகழ் வெளிச்சம் திசைகளை நோக்கி ஆட்டு மந்தைகளைப் போல ஓடக்கூடாது. இதில் பெற்றோர்களின் பங்கும் பிரதானமாக உள்ளது. பொருளியல் வாய்ப்பு அதிகமுள்ள துறைகளைத் தேர்வு செய்து பிள்ளைகளைத் திணிக்கக்கூடாது. அவர்களின் கனவும் ஆதாரமான தேடலும் என்ன என்பதை கண்டறிய வேண்டிய மகத்தான பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக விரிவாக எழுதப்பட்டு, உயிர்மை இதழில் வெளியான பதிவை இங்கு வாசியுங்கள்.

குருகுல வாசத்தைத் தவிர்த்து தங்களின் நவீன திறமைகளின் மூலம் சினிமாத் துறையில் நுழையும் இளைஞர்களின் மீது மூத்த இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ஓர் எள்ளலான பார்வையுள்ளது. ‘நாலு சினிமாவைப் பார்த்து ஷார்ட் பிலிம் எடுத்து விட்டால், இவர்களுக்கு எல்லாம் தெரிந்து விடுமா? ஒரு படப்பிடிப்பை அங்குள்ள நூறு நபர்களை கையாளும் திறமையோ, தகுதியோ இவர்களுக்கு இருக்கிறதா? ஒரு திரைப்படத்தின் பட்ஜெட்டை தீர்மானித்து அதற்குள் படத்தை உருவாக்கும் பயிற்சி இருக்கிறதா? இவற்றிற்கு நடைமுறை அறிவு வேண்டாமா?’ என்றெல்லாம் கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைக்கிறார்கள்.

இந்த விமர்சனங்களை முழுதும் புறந்தள்ளி விட முடியாது. கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்படும் சினிமா என்னும் வணிகத்தில் அதன் நடைமுறை சார்ந்த பல்வேறு அறிவுகளை ஓர் இளம் இயக்குநர் பெறுவது அவசியமானது. ஒரு மூத்த இயக்குநரிடம் இது போன்ற அனுபவங்களை சில காலத்திற்கு அவர் பெறலாம் அல்லது அனுபவம் உள்ள தயாரிப்பு நிர்வாகி, ஒளிப்பதிவு இயக்குநர் போன்றவர்களின் உதவியுடன் இந்தத் தடையைத் தாண்டி வரலாம்.

**

ஓகே. ‘காளிதாஸ்’ சினிமா பற்றிய பார்வைக்குள் வருவோம்.

சென்னை நகரில், ஒரு குறிப்பிட்ட ஏரியாவிற்குள்  குடியிருப்புக் கட்டிடங்களில் சில மரணங்கள் நிகழ்கின்றன. சில பெண்கள் மாடியில் இருந்து விழுந்து இறக்கிறார்கள். அந்த ஏரியாவின் இன்ஸ்பெக்டரான பரத் அவை தற்கொலை என்று கருதுகிறார். சூழல்களும் சாட்சியங்களும் அப்படித்தான் கருத வைக்கின்றன.

பரத்திற்கும் அவரது இளம் மனைவிக்கும் இடையே சண்டையும் பிறாண்டலும் தினசரி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. பரத் தன் காவல்துறை பணியில் அதிகம் கவனம் செலுத்துவதால் வீட்டிற்கு நேரம் ஒதுக்க முடியாத சூழல். எனவே அது சார்ந்த மனஉளைச்சலில் மனைவி இருக்கிறார்.

தற்கொலையா அல்லது கொலையா என்று காவல்துறை குழம்ப வைக்கும் மரணங்கள் தொடர்கின்றன. பரத்தின் வீட்டிற்கு புதிதாக ஓர் இளைஞன் குடிவருகிறான். அவருடைய மனைவியிடம் இனிமையான வார்த்தைகள் பேசி அவரை ஈர்க்கிறான்.

மரணங்கள் தொடரவே மூத்த அதிகாரியான சுரேஷ் மேனன் இந்த விசாரணையில் பரத்துடன் இணைகிறார்.

சில சம்பவங்கள் மற்றும் திருப்பங்கள் மூலம் ‘கொலையாளி யார்?’ என்கிற சுவாரசியமான கேள்வியை பார்வையாளர்களின் முன் வைக்கிறார் இயக்குநர். வீட்டிற்கு புதிதாக குடி வந்திருக்கும் இளைஞன் முதல் சுரேஷ் மேனன் வரை பலர் மீதும் நமக்கு சந்தேகம் வருகிறது. ஏன் நாயகனான பரத்தின் மீதே ஒரு கட்டத்தில் சந்தேகம் வருவது போல் சுவாரசியமான திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர்.

‘கொலையாளி யார்?” என்கிற அதிரடியான திருப்பத்தோடு படம் நிறைவுறுகிறது.

**

ஒரு இன்ஸ்பெக்டராக பரத்தை ஏற்றுக் கொள்ள நெருடலாக இருக்கிறது. உடற்பயிற்சியின் மூலம் அவர் பெற்றிருக்கும் கட்டுடல் பொருத்தமாக இருந்தாலும் அவரின் உயரம் தடையாக இருக்கிறது. நாடகத்தில் வரும் இன்ஸ்பெக்டர் வேடம் போலவே பல சமயங்களில் தோன்றுகிறது.

நல்லவேளையாக, மூத்த அதிகாரியாக சுரேஷ் மேனனும் பல காட்சிகளில் பரத்துடன் கூடவே வருவதால் இந்த நெருடல் அதிகம் வருவதில்லை. ‘தானா சேர்ந்த கூட்டம்’ ‘ஜூங்கா’ என்று அரிதாக தலை காட்டும் சுரேஷ் மேனன், இந்தத் திரைப்படத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளார். ‘நீ எப்படி சாக விரும்பறே?” என்று பரத்திடம் சினிக்கலாக கேள்வி கேட்பது முதல் ஒவ்வொருவரையும் கூர்மையாக கவனிப்பது வரை தன் பங்களிப்பைச் சிறப்பாக தந்துள்ளார். கிளைமாக்ஸ் பதில்கள் இவரின் மூலமாகத்தான் வெளிவருகின்றன.

நாயகியாக ஆன் ஷீத்தல். ‘எனக்குப் பிடிக்காத ஒரு பெண்மணியின்’ முகச்சாயலை இவர் கொண்டிருந்ததால் இவரின் தோற்றம் ஆரம்பம் முதலே எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது. அதிலும் எக்ஸ்ட்ராவாக ஒட்ட வைத்தது போல் முன்னால் நீட்டிக் கொண்டிருந்த குடைமிளகாய் மூக்கு வேறு அதிக நெருடலை ஏற்படுத்தியது. (பிரபுதேவா பாணியில் சொன்னால் ‘பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கலாம்). இவர் முன்னர் நடித்திருந்த திரைப்படங்களின் விவரங்களைப் பின்னர் தேடிப் பார்த்தேன். மலையாள ‘Ishq’வில் இவரைப் பார்த்த போது எவ்வித சங்கடமும் ஏற்படவில்லை. மாறாக அதில் இவரின் நடிப்பு அத்தனை அட்டகாசமாக இருந்தது. ‘காளிதாஸில்’ இவரின் பங்களிப்பு சுமார்தான்.

இது போன்ற திரில்லர் திரைப்படங்களுக்கு பாடல்கள் நிச்சயம் அநாவசியம். சாதாரண திரைப்படங்களில் பாடல் காட்சிகள் வந்தாலே எழுந்து செல்லும் பார்வையாளன், இது போன்று பரபரப்பாக நகரும் காட்சிகளின் இடையே கட்டையைப் போடுவது போல பாடல்கள் நுழையும் போது எத்தனை எரிச்சலுறுவான் என்பது இயக்குநர்களுக்குத் தெரியாதா? தமிழ் சினிமா தனது அபத்தமான சம்பிரதாயங்களை ஏன்தான் பிடிவாதமாக இன்னமும் வைத்துக் கொண்டிருக்கிறதோ என்று தெரியவில்லை. பரபரப்பாக நகரும் திரைக்கதையில் ஸ்பீட் பிரேக்கர் போல எரிச்சலூட்டும் பாடல்கள். தனி வீடியோவாக இருந்தாலாவது தள்ளி விட்டுப் பார்க்கலாம். தியேட்டரில் என்ன செய்வது? இந்த நோக்கில் விஷால் சந்திரசேகரின் உழைப்பு வீண். ஆனால் பின்னணி இசையில் தன் பங்களிப்பை அட்டகாசமாகத் தந்துள்ளார்.

WARNING: Spoilers Ahead: (படத்தைப் பார்க்காதவர்கள் இங்கு விலகிக் கொள்ளலாம்).

படத்தில் நிகழும் கொலைகளுக்கு இறுதியில் விடை கிடைக்கிறது. அது யூகிக்க முடியாத விதமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதில் ஒரு பிரச்சினை.

Schizophrenia போன்ற மனநல பாதிப்பு உள்ளவர்களை, கொடூரமான வன்முறை செய்பவர்களாக தமிழ் சினிமா தொடர்ந்து சித்தரிப்பது ஆபத்தான போக்கு. ‘சிவப்பு ரோஜாக்கள்’ முதல்  அந்நியன், ஆளவந்தான் என்று ஏராளமான திரைப்படங்கள், மனநல பாதிப்பு உள்ளவர்களை கொடூரமான கொலைகாரர்களாக சித்தரிக்கின்றன. சிகிச்சை அளிக்கப்படாத சிலர் அப்படிப்பட்டவர்களாக இருக்கக்கூடும். ஆனால் இவர்கள் அனுதாபத்திற்கு ஆளாக வேண்டியவர்கள். உடனடியாக உளநல மருத்துவத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள். இது சார்ந்த அக்கறையும் கரிசனத்தையும் தமிழ் சினிமா இயக்குநர்கள் கவனத்தில் கொள்வது நல்லது.

மனைவியின் கூடவே இருக்கும் பரத்திற்கு மனைவியின் உளநல பாதிப்பின் சமிக்ஞைகள் சிறிது கூடவா தெரியாமல் போயிருக்கும்? (அதிலும் நாயகியின் தோழி ஒரு மனநல மருத்துவராக வேறு காட்டப்படுகிறார்) ஒரு பெண்ணால் எப்படி இந்தக் தொடர் கொலைகளை – அதிலும் அந்த பேட்டர்ன் மாறாமல் – செய்ய முடியும்? மாடியில் தங்கியிருக்கும் ‘tenant’ (?!) ஐ ஒருமுறை கூடவா பரத் சென்று பார்த்திருக்க மாட்டார்? என்று லாஜிக் தொடர்பாக பல கேள்விகள் எழுகின்றன.

மிக முக்கியமான கேள்வியாக, ‘கணவனாக நாயகி கற்பனை செய்து வைத்திருக்கும் உருவம். எப்படி அவளையே கொல்ல முன்வரும்?”

கணவனின் அன்பு கிடைக்காமல் போவதுதான் நாயகிக்கு மனபாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏறத்தாழ இதே விஷயம், கரு.பழனியப்பன் இயக்கிய ‘பிரிவோம்.சந்திப்போம்’ திரைப்படத்தில் இயல்பாக, யதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கும்.

இப்படி சில லாஜிக் பிழைகள் இருந்தாலும் ஆரம்பம் முதல் இறுதிவரை சுவாரசியத்தையும் பரபரப்பையும் தக்க வைத்திருப்பதில் ‘காளிதாஸ்’ வெற்றி பெறுகிறார்.



suresh kannan

2 comments:

வரதராஜலு .பூ said...

// ‘கணவனாக நாயகி கற்பனை செய்து வைத்திருக்கும் உருவம். எப்படி அவளையே கொல்ல முன்வரும்?”//

கொல்வதாக நாயகி கற்பனை செய்துக் கொள்கிறார். அப்படிதான் முடித்திருக்கிறார்கள்.

சரிதானே?

Yaathoramani.blogspot.com said...

அருமையான விரிவான விமர்சனம் படத்தைப் பார்க்க வேண்டும் எண்ணத்தை தூண்டிப் போகிறது...வாழ்த்துக்களுடன்..