Sunday, January 19, 2020

சாம்பியன் (2019) சுசீந்திரனின் தொடர் விளையாட்டு



‘கென்னடி கிளப்’ திரைப்படத்தைத் தொடர்ந்து சுசீந்திரனின் சமீபத்திய திரைப்படமான ‘சாம்பியன்’ பார்த்தேன். இதுவும் Sports genre படம்தான். இயக்குநருக்கு இந்த வகைத் திரைப்படங்கள் சற்று நன்றாக இயக்க வருகிறது என்பதற்காக இந்த வகைமையையே தொடர்வது சலிப்பூட்டுகிறது. இந்த ‘விளையாட்டுக்கு’ அவர் சற்று இடைவெளி தரலாம். இது விளையாட்டு சார்ந்த திரைப்படம் என்றாலும் அவை சார்ந்த காட்சிகள் அதிகமில்லை என்பது ஒரு சிறிய வித்தியாசம்.

வெண்ணிலா கபடி குழுவில் சாதிய அரசியல், ஜீவாவில் பிராமண அரசியல், கென்னடி கிளப்பில் வடஇந்திய அரசியல் மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள ஊழல் என்கிற வரிசையில் சித்தரித்த இயக்குநர், இந்தத் திரைப்படத்தில் வறுமைப் பின்னணியில் உள்ள சேரி வாழ் இளைஞர்கள், வன்முறையின் பால் எளிதில் விழுந்து வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வதை கையில் எடுத்திருக்கிறார். (இதுவும் பழைய கருத்தாக்கமே என்றாலும்).

தனது முந்தைய திரைப்படங்கள் ஒன்றில் செய்த பிழைக்கான பரிகாரத்தை இதில் இயக்குநர் செய்திருக்கிறார் என்று இதனை எடுத்துக் கொள்ளலாம். ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் சில எளிய சமூகத்து இளைஞர்கள் கொடூரமான வன்முறையில் ஈடுபடுவதைக் காட்டி அதிர்ச்சியளித்திருந்தார். அவர்கள் அப்படி உருவாகி வருவதின் பின்னணி குறித்த கரிசனமோ, சமூகவியல் பார்வையின் அக்கறையோ அதில் இல்லை. இது பற்றிய விமர்சனங்கள் அப்போது வந்திருந்தன. எனவே அது குறித்தான சுயபரிசீலனையுடன் இவ்வாறானதொரு மையத்தை ‘சாம்பியன்’ திரைப்படத்தில் இயக்குநர் கையாண்டிருக்கலாம் என்பதென் யூகம். எதுவாக இருந்தாலும் இயக்குநருக்கு பாராட்டு.

**

கால்பந்து விளையாட்டுக்கும் எளிய சமூகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு உலகெங்கிலும் உண்டு. அவ்வாறாக கால்பந்து விளையாட்டில் திறமை கொண்ட இளைஞன் ஜோன்ஸ். (விஷ்வா). வடசென்னையில் வசிப்பவன். ஆனால் அவனுடைய அம்மாவோ தன் மகன் விளையாட்டில் செல்லக்கூடாது என்று உறுதியாக தடுக்கிறாள். அதற்கொரு பின்னணிக்காரணம் உண்டு. இப்படியான தடைகள் மற்றும் பொருளாதார ரீதியான சிக்கல்கள் போன்றவற்றைத் தாண்டி தனது கோச் சாந்தா (நரேன்) உதவியுடன் விளையாட்டில் மெல்ல முன்னேறி வருகிறான் ஜோன்ஸ்.

இந்தச் சமயத்தில்தான் தனது தந்தையின் (மனோஜ்) மரணம் தற்செயலானதல்ல, அது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்று அறிகிறான். பழிவாங்க அவன் மனம் துடிக்கிறது. தனது ஆதர்சமான கால்பந்திற்கும் பழிவாங்கும் உணர்ச்சிக்கும் இடையே தத்தளிக்கிறான். அவனது கனவு என்னவானது என்பதை மீதமுள்ள காட்சிகள் விவரிக்கின்றன.

**

இந்தத் திரைப்படத்தின் முன்னணி பாத்திரத்திற்காக ஒரு புதுமுகத்தைத் தேர்ந்தெடுத்தற்காகவே இயக்குநரைப் பாராட்டியாக வேண்டும். பொதுவாக முன்னணி நடிகர்களின் படத்தையே நாம் அதிகம் கவனிக்க விரும்புவோம். நல்ல கதையம்சம், இயக்கம் போன்றவற்றைக்  கொண்டிருந்தாலும் கூட அவை அறிமுகமல்லாத புதுமுகங்களால் நிறைந்திருந்தால் நாம் ஓரக்கண்ணால் மட்டுமே அறிய விரும்புவோம் அல்லது முற்றாகவே கூட புறக்கணித்து விடுவோம்.

இந்தச் சூழலில், ஜோன்ஸ் என்கிற பாத்திரத்திற்கு புதுமுகத்தைத் தேர்ந்தெடுத்தது சிறப்பான அம்சம். ஒருவேளை விஷ்வா என்கிற அந்தப் புதுமுகம், கால்பந்து விளையாட்டில் தேர்ந்தவனாக இருந்தது அவர் தேர்வு செய்யப்பட்டதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் இதுவொரு நல்ல விஷயம்.

இந்தி நடிகர் ‘நவாசுதீன் சித்திக்’கின் தோற்றத்தை நினைவுப்படுத்தும் இளைஞனான விஷ்வா, இந்தத் திரைப்படத்தில் தனது பங்களிப்பை அருமையாகத் தந்துள்ளார். அறிமுகம் இல்லாத பிம்பம் என்பதால் துவக்கத்தில் இவரை அசுவாரஸ்யமாக கவனித்தாலும் போகப் போக தனது பாத்திரத்தில் ஒன்றி நடித்து நம்மையும் ஈர்த்து விடுகிறார். “பழிவாங்கும் உணர்ச்சியில் இருந்து என்னால் வெளியே வரமுடியவில்லை சார்..” என்று கோச்சிடம் அழும் காட்சியில் இவரது நடிப்பு சிறப்பாக இருக்கிறது.

இரண்டு இளம்பெண்கள் இதில் வருகிறார்கள். தமிழ் சினிமாவின் சம்பிரதாய நாயகி போல அவர்களின் பாத்திரம் அமைக்கப்படவில்லை என்பதே பெரிய ஆறுதல். பள்ளிக்கூட தோழி மற்றும் காதலியுமாய் வரும் ‘புஷ்டியான’ பெண்.. (கழுக் மொழுக் என்று ‘ஸெரலேக்’ குழந்தை போல அத்தனை அழகு) ஜோன்ஸின் நலவிரும்பியாக இருக்கிறார். சரியான திசையில் நல்வழிப்படுத்துகிறார். கல்லூரித் தோழியாக வரும் பெண்ணும் அத்தனை அழகு. இவர்களின் உறவு காதலா என்பதை இவர்களே அறிவதற்குள் வர்க்க வேறுபாடு காரணமாக தடை ஏற்பட்டு விடுகிறது.

ஜோன்ஸின் தாயார் ‘ஜெயா’வாக நடித்த வாசுகியின் பங்களிப்பைத் தனித்துக் குறிப்பிட வேண்டும். ஏறத்தாழ ‘அசுரன்’ திரைப்படத்தில் வரும் வயதான தனுஷின் பாத்திரம்தான் இதுவும். தன் மகன் வன்முறையின் பாதையில் சென்று விடக்கூடாது என்பதற்காக பல அவமதிப்புகளைப் பொறுத்துச் செல்கிறாள். “அதைச் சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு. உங்க அப்பாவை கொன்னவன் அவன்தான்” என்று தமிழ் சினிமாவின் வழக்கமான அம்மா போல மகனுக்கு பழிவாங்கும் உணர்ச்சியை வளர்த்தெடுக்காமல் அதை அறிந்திருந்தாலும் அமைதியாக இருப்பது இந்தப் பாத்திரத்தின் இயல்பை மிகையில்லாமல் ஆக்குகிறது.

ஜோன்ஸின் தந்தையாக, பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடித்திருக்கிறார். குறைந்த நேரமே வந்தாலும் அவரது பாத்திரத்தை குறையில்லாமல் செய்திருக்கிறார். ஒரு நல்ல ‘கோச்’சுக்குரிய கண்டிப்பையும் கனிவையும் நரேன் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ‘கைதி’ ‘சாம்பியன்’ என்று குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் நரேன் தொடர்வது நல்ல விஷயம். ‘ஸ்டன்’ சிவா பிரதான வில்லன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘ராஜிவ்காந்தி’ என்கிற பெயரில் வரும் வினோத் சாகரின் அருமையான நடிப்பு தனித்துத் தெரிகிறது.

‘தந்தையின் மரணத்திற்கு பழிவாங்கும்’ வழக்கமான கதைதான் என்றாலும் சுசீந்திரனின் திரைக்கதையாக்கம் குறை சொல்ல முடியாதபடி சிறப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. சில காட்சிகளில் பாத்திரங்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களை பார்வையாளர்களுக்கும் கடத்தி விடும் தனது வழக்கமான பாணியில் வெற்றி பெறுகிறார் சசீந்திரன். குறிப்பாக கால்பந்திற்கும் வன்முறைக்கும் இடையில் ஜோன்ஸ் தத்தளிக்கும் படத்தின் மையம் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. பிளாஷ்பேக் உத்தி மிகப் பொருத்தமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘அரோல் கரோலி’யின் பின்னணி இசை நன்கு அமைந்துள்ளது.

தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு என்றிருந்த காலக்கட்டத்தில், பல அருமையான தலைப்புகள் வெளிவந்தன. (தலைப்பு மட்டும் நன்றாக இருப்பது வேறு விஷயம்). ஆனால் இப்போது இந்தச் சலுகை நின்றவுடன் மறுபடியும் காமா சோமாவென்று தலைப்பு வைக்கிறார்கள். சுசீந்திரன் இந்தத் திரைப்படத்திற்கு தமிழில் ஒரு நல்ல தலைப்பு வைத்திருக்கலாம்.

நிச்சயம் பார்க்கத் தகுந்த திரைப்படம் – சாம்பியன்.


suresh kannan

1 comment:

Yaathoramani.blogspot.com said...

ஒருவகையில் பார்க்கத் தூண்டும் பாசிட்டிவ்வான விமர்சனமே..