Monday, February 10, 2014

மணிரத்னம் = திரையுலக சுஜாதா
1987-ம் ஆண்டு அது.

 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று பரிச்சயமாகியிருந்தாலும் நான் அந்த திரைப்படத்தைக் காணச் சென்றது கமல்ஹாசனுக்காகத்தான். பெரிதான முன்முடிவுகளோ எதிர்பார்ப்புகளோ இல்லாமல் சென்றிருந்தேன். ஆனால் அந்தத் திரைப்படம் ஒரு புயல் போல் என்னைத் தாக்கியது. நான் அதுவரை பார்த்திருந்த அத்தனை தமிழ் திரைப்படங்களைப் பற்றின மனப்பதிவுகளையும் ஆச்சரியங்களையும் தூள்தூளாக்கி தலை கீழாக்கி புரட்டிப் போட்டது . உலக சினிமாவோ, ஏன் ஆங்கில சினிமாக்கள் பற்றிய பரிச்சயமெல்லாம் கூட அப்போது இல்லையென்றாலும் 'இதுவரை பார்த்த தமிழ் சினிமாக்கள் வேறு. இது வேறு வகை' என்கிற உள்ளுணர்வு மிக அழுத்தமாக அந்தப் பதின்ம வயதில் பதிந்து போனது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த இரவுக்காட்சி முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. நான் மழைக்காக எங்கும் ஒதுங்கக் கூடத் தோன்றாமல் திக்பிரமையடைந்தவன் போல் மழையில் நனைந்து கொண்டே வந்தேன். என் மனம் முழுக்க வேலு நாயக்கரே நிரம்பியிருந்தார். சொல்லப் போனால் என்னையே நான் வேலு நாயக்கராகத்தான் அப்போது நினைத்துக் கொண்டேன். என்னைப் போலவே பல இளைஞர்களையும் பிற்கால தமிழ் இயக்குநர்களையும் அந்தப் படம் மிகப் பலமாக தாக்கப் போகிறது என்பதும், அந்த இயக்குநர், திரையுலகில் நுழைய விரும்பும் பல இளைஞர்களுக்கு ஆதர்சமாக மாறப் போகிறார் என்பதும் அப்போது எனக்குத் தெரியாது.

தமிழ் சினிமாவின் வரலாற்றையே 'நாயகனுக்கு முன் - நாயகனுக்கு பின்' என்று எழுதலாம் என்று சொன்னால் சிலருக்கு மிகையாகத் தோன்றலாம். ஆனால் அத்திரைப்படம் அந்த அளவிற்கு பிற்கால தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியதற்கு மிகப் பெரிய முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. அதுவரையிலான அத்தனை திரைப்படங்களின் திரைமொழி, வசனம், ஒளிப்பதிவு, ஒப்பனை, சண்டைக்காட்சி, ஆகிய இன்னபிற பலவற்றையும் மிகப் பழமையானதாக தோற்றமளிக்கச் செய்து விடுமளவிற்கு ஒரே படத்திலேயே  மிக கணிசமான குறிப்பிடத்தகுந்த வித்தியாசத்துடன்  புதுமையான பாணியில் அமைந்திருந்தது 'நாயகன்'.

அதற்கு முன்னரே 'மெளனராகம்' என்கிற கவனிக்கத்தக்க திரைப்படத்தை மணிரத்னம் உருவாக்கியிருந்தாலும் 'நாயகன்' தான் அவருடைய மிகச்சிறந்த அறிமுகம். தமிழ்நாட்டின், ஒரு தலைமுறையையே குறிப்பாக நடுத்தரவர்க்க இளைஞர்களின் மனநிலையை அதிகமாக பாதித்தவராக மணிரத்தினம் அப்போது இருந்தார். எந்தவொரு இளம் பெண்ணை பார்த்தாலும் 'ஓடிப் போயிடலாமா' என்று குறும்புத்தனமாக கேட்க வைக்குமளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியது அவரது துள்ளலான பாணி திரைப்படங்கள்.

அந்த காலகட்டத்தில் சலித்துப் போன பாணியிலேயே உழன்று கொண்டிருந்த தமிழ் சினிமாவில் உற்சாகமான புதிய சுவாசக்காற்றை ஏற்படுத்தியதுதான் மணிரத்னத்தின் சாதனை. மற்றபடி தமிழ் திரைப்படங்களின் வழக்கமான வார்ப்பிலிருந்து பெரிதும் விலகாத கட்டமைப்பில் சுவாரசியமான திரைக்கதையுடனும் சாத்திய அளவிலான நுண்ணுணர்வுத் தன்மையுடனும்  குறிப்பாக உயர்தொழில்நுட்பத்துடன் உருவாக்கியதே இயக்குநராக அவரின் அடையாளம். இந்த வகையில் அவரை 'ஓர் உயர்வகை கே.பாலசந்தர்' எனலாம். எழுத்தாளர் சுஜாதா, சில நல்ல சிறுகதைகளை எழுதியிருநதாலும் ஒட்டுமொத்த இலக்கிய மதிப்பில் அவர் வெகுஜன எழுத்தாளராத்தான் அறியப்படுகிறார். அவ்வாறே மணிரத்னத்தின திரைப்ப்படங்களுக்குள் அரிதாக மிகச்சிறந்த தருணங்களும் காட்சிகளும் இருந்தாலும் ஒட்டுமொத்த  பார்வையில் அவரது திரைப்டங்களை நோக்கும் போது திரையுலக சுஜாதாவாகத்தான் காணப்படுகிறார். வெகுசன திரைப்படங்களின் இயக்குநர்களில் மிக உயர்ந்த இடத்தில் அவர் இருக்கிறார். ஆனால் ஒரு நேர்மையான கலைஞனுக்கு இருக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கவில்லை. அவருடைய எந்தவொரு திரைப்படத்திலும் கலைக்கான ஆன்மாவையே அதற்கான தேடலையோ காண முடியாது. வெகுசனத்தன்மைக்கும் கலைத்தன்மைக்கும் இடையிலான வசீகர சாகசங்களே அவருடைய திரைப்படங்கள்.

நாயகன் திரைப்படத்தை முன்வைத்து தமிழ் திரைவரலாற்றை பிரிக்கக்கூடியது போலவே மணிரத்னத்தின் திரைவரலாற்றையும் ரோஜாவிற்கு முன் - ரோஜாவிற்கு பின் என்று பிரித்துப் பார்க்கலாம். சில படங்களைத் தவிர்த்து அதுவரை 'தமிழ்' திரைப்படங்களையே உருவாக்கிக் கொண்டிருந்த மணிரத்னம் தற்செயலாக தேசிய பிரச்சினையொன்றை உள்ளடக்கமாக உருவாக்கி  இந்தியப் புகழ் பெற்று விட்டார். அவரது திரைப்படங்களின் வணிகத்தை தமிழையும் தாண்டி விஸ்தரிக்க அது ஒரு காரணமாயும் அமைந்தது. ரோஜா திரைப்படத்தின் மூலம் தேசிய நீரோட்டத்தில் கலந்த பிறகு அதுவரையிலான புராணக் கதையாடல்களின் மீள்உருவாக்கம் என்கிற வடிவமைப்பைத் தவிர, தீவிரவாதம்+காதல் எனும் வடிவமைப்பும் அவரது பாணியில் இணைந்தது. இந்தியாவின் முக்கியமான அரசியல் பிரச்சினைகளைப் பற்றி ஆழமான விசாரணை ஏதுமில்லாமல் அவற்றை வணிகத்திரைப்பட உத்திகளுடன் மலினமான முறையில் romanticize செய்ததுதான் அவரை ஓர் உன்னதமான சினிமா கலைஞனாக அடையாளப்படுத்த முடியாமல் தடுக்கும் விஷயமாக அமைகிறது. அவரும் அதைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. தன்னை ஒரு 'மெயின்ஸ்டிரீம் இயக்குநர்' என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

()

ஆங்கில திரைவிமர்சகர் பரத்வாஜ் ரங்கன், மணிரத்னத்தை சந்தித்து அவரது அனைத்து திரைப்படங்களைப் பற்றியும் அவற்றின் உருவாக்க பின்னணிகளைப் பற்றியும் தொழில்நுட்ப விஷயங்கள் பற்றியும் அவருக்குள்ள சந்தேகங்கள், யூகங்கள் ஆகியவற்றை கேள்விகளாக முன்வைத்தும் ஓர் உரையாடல் தொகுப்பாக 'Conversation with Mani Ratnam' என்ற தலைப்பில் ஆங்கில நூலாக கடந்து வருடத்தில் வெளியிட்டார். அதன் தமிழ்வடிம் 'மணிரத்னம் படைப்புகள் - ஓர் உரையாடல்' என்கிற தலைப்பில் இப்போது வெளியாகியுள்ளது. இந்தத் தலைப்பே ஒருவகையில் Oxymoron. மணிரத்னம் x உரையாடல். பொதுவெளியில் தன்னைப் பற்றியும் தன் படங்களைப் பற்றியும் அதிகம் உரையாடாதவர் என்று அறியப்படும் மணிரத்னத்திடம் இத்தனை பெரிய உரையாடலை சாத்தியமாக்கியதே பரத்வாஜ் ரங்கனின் சாதனை.

எந்த இயக்குநரிடமும் உதவியாளராக அல்லாமல் நேரடியாகவே இயக்குநராக நுழைந்தவர் மணிரத்னம் என்பது பலரும் அறிந்த செய்தி. அதனால்தான் தமிழ் சினிமாவில் அதுவரையான இயக்குநர்கள் எவருடைய பாதிப்புமில்லாமல் புதிய திசையிலும் வெளிச்சத்திலும் மணிரத்னம் பயணிக்க முடிந்தது என்று கருதுகிறேன். சினிமாவை தயாரிக்கும் குடும்பப் பின்னணியில் இருந்து அவர் வந்திருந்தாலும் அதிகம் சினிமா பார்க்க முடிந்திராத இளமைப் பருவத்தோடும்  அதற்கான பின்னணியோடும் முதல் அத்தியாயம் துவங்குகிறது. தன்னுடைய திரைக்கதையை வைத்துக் கொண்டு ஒளிப்பதிவாளர் ஸ்ரீராமுடன் ஒவ்வொரு திரைப்பட அலுவலகமாக அலைந்த கதையையும் அதற்குப் பிறகு சுயமுயற்சியில் இருந்து சாத்தியமான, தற்செயலாக கன்னடத்தில் இருந்து துவங்கிய அவரது பயணமான 'பல்லவி,அனுபல்லவி'யில் இருந்து திரைப்படங்களைப் பற்றின உரையாடல் துவங்குகிறது.

அதற்காக ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறி்ப்பிட்ட திரைப்படத்தைப் பற்றி மாத்திரம் உரையாடாமல் குறிப்பிட்ட உத்தி அல்லது காட்சி அவரது வேறு எந்த திரைப்படத்திலும் பதிவாகியிருந்தால் அதைப் பற்றியுமான உரையாடலாக குறுக்கும் நெடுக்குமாக செல்கிறது.

திரைப்படத்தை உருவாக்குபவர்களுக்கும் அதை தீவிரமாக பார்த்து ரசிப்பவர்களுக்கும் என இருவழிகளிலும் உபயோகமுள்ளதாக இந்த நூல் அமைந்திருக்கிறது.

வருங்கால இயக்குநர்களுக்கு என்றல்லாமல் சமகால இயக்குநர்களுக்கே உபயோகமான பல தகவல்கள் இந்த உரையாடல்களில் வெளிப்படுகின்றன. ஒரு கதையை அல்லது சம்பவத்தை எப்படி திரைக்கதையாக வளர்த்தெடுப்பது, அதைக் காட்சிப்படுத்துதல்களில் உள்ள சிக்கல்கள், அதற்கான முன்கூட்டியே கச்சிதமாக திட்டமிட வேண்டிய விஷயங்கள், திரைக்கதையை இறுக்கமாக்க தேவையான பயிற்சிகள்,சரியான நடிகர்களை, தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுப்பது அவர்களை சுதந்திரமாக அனுமதித்தாலும் தன்னுடைய திட்டத்திற்கேற்ப செலுத்தி வேலை வாங்குவது... என்று பல முக்கிய தகவல்கள் இந்த உரையாடலின் மூலம் வெளிப்படுகின்றன. மணிரத்னம் நிர்வாக பட்டதாரி என்பதால் பட்ஜெட் முதற்கொண்டு ஒவ்வொரு விஷயத்தை கச்சிதமாக திட்டமிடுகிறார். அதற்காக அவருக்குள் இருக்கும் கலைஞனையும் அவர் விட்டுக் கொடுப்பதில்லை என்பதுதான் விசேஷம். தன்னுடைய சறுக்கல்கள், தோல்விகள், படங்களிலுள்ள குறைபாடுகள் ஆகியவற்றையும் சற்று நேர்மையாக ஒப்புக் கொள்வது உரையாடலை சிறப்பானதாக ஆக்குகிறது.

பரத்வாஜ் ரங்கன் சில காட்சிகளுக்கு அல்லது வசனங்களுக்கு குறியீட்டுத்தன்மையை கண்டுபிடித்து விளக்கம் கேட்கும் போது 'உங்களின் இண்டலெக்சுவல் சாயத்தை அதன் மீது பூசாதீர்கள், உங்களின் கருத்தை என் மீது ஏற்றாதீர்கள்' என்றும் அவை அந்த மாதிரியான நோக்கங்களில் உருவாக்கப்படவில்லை' என்பதை இயல்பாகவும் நேர்மையாகவும் ஒப்புக் கொள்கிறார். அது போல் தன்னுடைய திரைப்படங்களின் வணிகரீதியான தோல்விகளையும் ஏற்றுக் கொள்கிறார். யார்மீதும் அதற்கான குறைகளையோ புகார்களையோ கைமாற்றி விடுவதில்லை.

ஆனால் பல கேள்விகளுக்கு மணிரத்னம் மிகுந்த ஜாக்கிரதையுணர்ச்சியாகவும் தன்னுணர்வுடனும் எச்சரிக்கையாகவும் பதிலளித்திருப்பது இந்த உரையாடலுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்துகிறது. தம்முடைய படைப்புகளின் மீது நிகழும் அறுவைச்சிகிச்சையை அவர் விரும்பவில்லையோ என்று தோன்றுகிறது. சில கேள்விகளுக்கு சர்ச்சையைத் தவிர்க்க வேண்டி அவற்றை நாகரிமாக தாண்டிச் செல்கிறார்.

வெகுசன திரைப்படம்தானே என்று நாம் அலட்சியமாக கடந்து போகும் காட்சிகள், பாடல்கள் ஆகியவற்றிற்குப் பின் எத்தனை திட்டமிடல்களும் உழைப்பும் இருக்கின்றன என்பதை இயக்குநர் மூலமாகவே அறியும்போது மிக ஆச்சரியமாக இருக்கிறது.அவற்றில் அசட்டையாக இருந்து விட்டோமோ என்று குற்றவுணர்வாகவும் இருக்கிறது. உதாரணமாக 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்தில் வரும் 'ஒரு தெய்வம் வந்த பூவே' பாடலைப் பற்றிய பின்னணிகளையும் அதன் காட்சிகளின் பின்னணியில் இருக்கும் props பற்றின கறாரான திட்டமிடல்களையும் பற்றி அறிய நேரும் சற்று பிரமிப்பாகவே இருக்கிறது.

()

விமர்சகராக அல்லாமல் தன் கடவுளைக் கண்டு விட்ட உபாசகனாக மிகுந்த பரவசத்துடன்தான் ரங்கன் உரையாடியதாக தோன்றுகிறது. இதை தன்னுடைய நீண்ட முன்னுரையிலேயே தெளிவாகச் சொல்லி வாசகர்களைத் தயார்ப்படுத்தி விடுகிறார் ரங்கன். அதற்காக விமர்சகராக தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழிக்கவுமில்லை. உரையாடல் சென்று கொண்டிருக்கும் போதே ஒரு நுண்ணுணர்வுள்ள பார்வையாளனுக்கு என்ன சந்தேகமும் கேள்வியும் எழுமோ, அதையே ரங்கனும் தன்னுடைய கேள்வியாக முன்வைப்பது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதையும் தாண்டின கேள்விகளும் பதில்களும் வாசகனுக்கு புதிய வெளிச்சத்தை அளிக்கின்றன.  இந்த உரையாடலுக்காக ரங்கன் நிறைய உழைத்திருக்கிறார் என தெரிகிறது. மணிரத்னத்தின் ஒவ்வொரு திரைப்படத்தையும் மிக ஆழமாக பார்த்து அவற்றை மற்ற திரைப்படங்களுடன் ஒப்பிட்டு அலசி ஆராய்ந்து நிறைய கேள்விகளை முன் வைத்திருக்கிறார்.

மணிரத்னத்தின் திரைப்படங்களின் பார்வையாளர்களுக்கு மட்டுமன்றி பொதுவான திரைப்படப் பார்வையாளர்களுக்கும் உருவாக்குபவர்களுக்கும் மிக உபயோகமாக இருக்கும் படியும் சுவாரசியமானதாகவும் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது  தமிழ் திரையில் வேறு எந்த இயக்குநருக்கும் இது சாத்தியமாகவில்லை என்பதே இதன் சிறப்பு. மணிரத்னத்தின் அனைத்து திரைப்படங்களையும் மீண்டுமொருமுறை பார்த்து இந்த உரையாடலுடன் ஒப்பிட்டுக் கொள்ள வேண்டும் என்று வாசகனை தீவிரமாக எண்ண வைப்பதே இந்த நூலின் வெற்றி எனலாம்.

இதை மிக தோழமையான தமிழில் கச்சிதமாக மொழிபெயர்த்திருக்கும் அரவிந்த்குமார் சச்சிதானந்தமின் உழைப்பு பாராட்டத்தக்கது. நூலின் வடிவமைப்பும் சிறப்பான முறையில் அமைந்துள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் அற்புதமான முன்னுரை ஓர் ஆச்சரிய போனஸ்.

()


'மணிரத்னம் படைப்புகள் - ஓர் உரையாடல்
-பரத்வாஜ் ரங்கன் (தமிழில்: அரவிந்த்குமார் சச்சிதானந்தம்)
கிழக்கு பதிப்பகம், ISBN:978-93-5135-157-3
480 பக்கங்கள், விலை. ரூ.500/-

(காட்சிப் பிழை, பிப்ரவரி  2014-ல் வெளியான கட்டுரை - நன்றி: காட்சிப் பிழை)  

suresh kannan

1 comment:

Anonymous said...

மணிரத்னத்தின் படங்கள் பற்றி அவரோடு நீண்ட உரையாடல்கள் நடத்தி, Conversations with Mani Ratnam புத்தகத்தை எழுதி இருப்பவர் ஹிந்து நாளிதழின் துணை ஆசிரியரான பரத்வாஜ் ரங்கன். சினிமா தொடர்பான ஆழமான கட்டுரைகள் பல எழுதியவர். பரத்வாஜ் ரங்கன் பேசுகிறார்:

நான் மணிரத்னத்தின் படங்களைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையைப் படித்து விட்டு, என்னை ஒரு புத்தகம் எழுதும்படி பெங்குயின் நிறுவனம் கேட்டது. ஒரு பத்திரிகையாளராக அவரைச் சந்தித்துப் பேட்டி காண்பதற்கான எனது முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்பதால், மணிரத்னத்தின் ஒவ்வொரு படமாக எடுத்துக் கொண்டு அலசி, ஒரு புத்தகம் எழுத நினைத்தேன். அதற்கு முன்பாக, மரியாதை நிமித்தம் அவரைச் சந்தித்தேன். அவரோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான், ஒவ்வொரு படம் பற்றியும் அவரோடு உரையாடி புத்தகத்தையும் உரையாடல்களின் தொகுப்பாகவே எழுதுவது என்பது முடிவானது.

ஒரு சந்திப்பில் இரண்டு மணி நேரம் பேசுவோம். இதுபோல 50 தடவைகள் சுமார் 100 மணிநேரம் பேசி இருப்போம். என் கேள்விகள், அவை எரிச்சலூட்டும்படி இருந்தாலும் அவர் கோபப்படாமல், தம் கருத்தை அழுத்தமாகத் தெரிவித்தார். அவரது பேச்சில் நேர்மை இருக்கும். ‘ராவணன்’ படம் முடிந்து சுமார் மூன்று மாதங்கள் கழித்து ஆரம்பித்தோம். அவரோடு பேசிய அனைத்தையும் எழுதியிருந்தால், இந்தப் புத்தகம் 300 பக்கங்களுக்குப் பதிலாக 600 பக்கங்கள் வந்திருக்கும். மணிரத்னம் நேரத்தைப் பொன்னாக மதிப்பவர். சந்திப்புக்கு நேரம் கொடுத்துவிட்டார் என்றால், அந்த நேரத்தில் ரெடியாக இருப்பார்.

ஒரு சந்திப்பில் அவர் சொன்ன விஷயங்களை, அடுத்த முறை சந்திப்பதற்கு முன்னால் எழுதிவிடுவேன். ஒவ்வொரு படத்தின் கதை, கதாபாத்திர உருவாக்கம், நடிகர்கள், வசனம் போன்றவற்றோடு கேமரா, எடிட்டிங், மியூசிக் போன்ற டெக்னிக்கல் விஷயங்களைப் பற்றியும் நிறைய பேசினோம். ஆனால், எல்லோருக்கும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்படி புத்தகம் அமைய வேண்டும் என்பதிலும் குறியாக இருந்தேன்.”