Thursday, February 13, 2014

அஞ்சலி: பாலுமகேந்திரா


என்னளவில் நான் எப்போதுமே குறிப்பிடுவது இதைத்தான். தமிழ் சினிமாவில் சர்வதேச தரத்திற்கான படைப்புகளை  நெருங்கிய படைப்பாளிகள் இருவர்தான். ஒருவர் மகேந்திரன், இன்னொருவர் பாலுமகேந்திரா. அவருடைய மறைவு அதிர்ச்சியடைய வைக்கவில்லையெனினும் நிச்சயம் வருத்தப்பட வைக்கிறது. தமிழ் சினிமா சாதனையாளர்களின் குறிப்பாக மாற்று சினிமாவின் முன்னோடிகளின் பட்டியலில் பாலு மகேந்திராவின் பெயர் நிரந்தரமாக இருக்கும்.

ஒரு சினிமா படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க நேர்நத போது அங்கிருந்த இயக்குநர் (டேவிட் லீன்) மழை என்று உத்தரவு போட்டவுடன் மழை பெய்த அதிசயத்தை பார்த்து அதிலிருந்த கடவுளுக்கு நிகரான தன்மையை வியந்த சம்பவத்தில்தான் பாலுமகேந்திரா பின்னாளில் சினிமா இயக்குநர் ஆவதற்கான விதை இருந்ததை அவரே பல நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக உருமாறிய படைப்பாளிகளில் பாலுமகேந்திரா முக்கியமானவர். முள்ளும் மலரும் திரைப்படத்தின் ஒரு பாடலில் காட்சியில் இலைகளின் ஊடாக சூரியனை காமிரா தொடரும் ஒரு காட்சி காண்பதற்கு இன்றைக்கும் பரவசம் ஊட்டக்கூடியது. விடியற்காலைகளையும் அந்தி வானத்தையும் பாலுவின் கேமராவைப் போல வேறு எவராலும் அத்தனை அழகுணர்ச்சியுடன் பதிவு செய்ய முடியவில்லை. மலைப்பிரதேசங்களின் அழகையும் குளிர்ச்சியையும் பார்வையாளர்களின் மனங்களுக்கும் வெற்றிகரமாக கடத்தியவர் பாலு. இயற்கை என்பது ஒரு முக்கியமான கவித்துவ  பாத்திரமாகவே அவரது படங்களில் தொடர்ந்து வந்திருக்கிறது.

காட்சிகளை அழகுணர்ச்சியுடன் பதிவு செய்தவர் என்பதையும் தாண்டி இயக்குநராகவும் தமிழ் சினிமாவிற்கு அவரின் பங்களிப்பு முக்கியமானது. தனிநபர்களுக்கான அகச்சிக்கல்களை மிகுந்த நுண்ணுணர்வுத்தன்மையுடன் அவரது படம் ஆராய்ந்திருக்கிறது. ஒரு கலைஞனின் அடிப்படையான அடையாளமான சமூகப் பொறுப்பையும் அவரது படங்கள் புறக்கணிக்கவில்லை. இன்றைக்கும் கூட மத்திய தர வர்க்க மனிதர்களின் மிகப் பெரிய கனவாகவும்  லட்சியமாகவும் திகழும் 'சொந்த வீடு' என்கிற விஷயத்தை அடைய ஓர் எளிய குடும்பம் சிறுக சிறுக பல போராட்டங்களுக்கு இடையே முன்னேறுவதையும் அதிகாரம் எனும் ஆலமரம் அந்தக் கனவை ஒரு நொடியில் கலைத்துப் போடும் அராஜகத்தையும் அற்புதமான முறையில் பதிவு செய்தது 'வீடு' திரைப்படம். உழைத்து உழைத்து பழசாகி பின்பு வெளியே எறியப்படும் வீட்டுப் பொருட்களை போலவே மனிதர்களும் அவர்களின் அந்திமக்காலத்தில் உதவாத சுமைகளாக இந்தச் சமூகம் அணுகும் அனுதாபத்தை 'சந்தியா ராகம்' பதிவு செய்தது.  இளையராஜாவுடனான கூட்டணிகளின் போது பாலுவின் திரைப்படங்கள் பிரத்யேகமான வண்ணங்களுடன் உருவானது இரு மேதைகளுடைய திறமைக்கான அடையாளம்.

இரு துணைகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் ஓர் ஆண்மனதை பாலுவின் படங்கள் தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கின்றன. 'மறுபடியும்' திரைப்படம் இதை தீவிரமான தொனியில் அணுகியதென்றால் 'ரெட்டை வால் குருவி'யும் சதிலீவாதியும் இதை நகைச்சுவைத் தொனியுடன் அணுகியது. ஒரு கலைஞனையும் அவனது படைப்புகளையும் பிரித்துப் பார்க்க முடியாது என்கிற நிலையில் அவரது இந்த திரைப்படங்களை அவரது வாழ்க்கையுடனும் ஒரு நாகரிகமான விமர்சன எல்லையில் பொருத்திப் பார்க்க முடியும். ஷோபாவின் தற்கொலையின் போதும் 'என் துணைவி' என்று மெளனிகாவை அவர் பொதுவெளியில் அறிவிக்கும் போதும் அதிகமான விமர்சனத்துக்கு உள்ளானவர் பாலு. கலைஞனுக்கே உரித்தான அலையுறும் சிக்கலான மனம்தான் அவரைச்செலுத்துகிறது என்கிற புரிதலுடன்தான் இந்தப் புகார்களையும் சர்ச்சைகளையும் கடந்து வர முடியும். இந்தச் சங்கடமான வேலிக்குள் அவரை நிறுத்தி வைத்துப் பார்ப்பது முறையற்றது. ஒரு கலைஞனுக்குள்ள மரியாதையை இம்மாதிரியான லெளகீகச் சிக்கல்கள் குலைத்து விடாது என்பதிலிருந்தும் குலைத்து விடவில்லை என்பதிலிருந்தும் பாலுவின் மேதமையின் வீர்யத்தை அனுமானித்து விட முடியும்.

அவரது கடைசி திரைப்படமான 'தலைமுறைகளை' நான் இன்றளவும் பார்க்கவில்லை. பார்க்க விரும்பவில்லை என்பது இன்னொரு காரணம். அத்திரைப்படத்தைப் பற்றி என் அலைவரிசையை ஒத்த நண்பர்களின் உரையாடல்களும் அபிப்ராயங்களும் எனக்கு அத்தனை உவப்பாயில்லை. எனக்குள் பிரம்மாண்டமாக நிற்கும் பாலுவின் பிம்பத்தை நான் கலைத்துக் கொள்ள விரும்பவில்லை.

தீவிரமான இலக்கிய வாசகரான பாலுமகேந்திரா, தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் சினிமாவிற்கும் ஓரு பாலத்தை ஏற்படுத்தி விடவேண்டும் என்பதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளும் கனவுகளும் வேறு எந்த முன்னோடி இயக்குநரும் அதிக அளவில் முயற்சிக்காதது. எந்தவொரு இளைஞரும் உதவி இயக்குநர் பணிக்காக அவர் முன் நிற்கும் போது அவர் கேட்கும் கேள்வி 'தமிழ் இலக்கியத்தில் என்னென்ன படித்திருக்கிறீர்கள்?' என்பதாகத்தான் இருக்குமாம். தமிழின் சிறந்த சிறுகதைகளை தனது உதவியாளர்களுக்கு தொடர்ந்து பரிந்துரைப்பதும் அதைப் பற்றி உரையாடுவதும் திரைக்கதைப் பயிற்சிக்காக தமிழ் சிறுகதைகளை யோசிப்பதும் அவருக்கிருந்த நியாயமான இலக்கிய தாகத்தைக் காட்டுகிறது. பெரிய திரையில் அதிகம் சாத்தியப்படாவிட்டாலும் சிறந்த சிறுகதைகளை படமாக்கும் தனது தாகத்தை 'கதை நேரம்' மூலம் தணித்துக் கொள்ள முயன்றார் என்றுதான் தோன்றுகிறது.

சினிமா குறித்து தனக்கிருந்த பாண்டியத்தை தனது 'சினிமாப் பட்டறை' மூலம் வருங்கால இளைஞர்களுக்கு கற்றுத்தருவதற்காக வயது முதிர்ந்த நிலையிலும் அவர் எடுத்திருந்த முயற்சிகள் நெகிழ வைப்பது.

ஈழப் போராட்டத்தை, அது தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி ஒரு திரைப்படம் உருவாக்கி விட வேண்டும் என்பது அவரின் நீண்டநாள் கனவாக இருந்தது. அது நிறைவேறாத நிலையிலேயே அவர் மறைந்தது மிகவும் துயரகரமானது. அவரது திரைப்படங்களை ஆவணப்படுத்தி வைக்கவும் பாதுகாக்கவும் இயலவில்லை என்பதற்காக அவர் அடைந்த துயரத்தையும் வேதனையையும் உண்மையில் இச்சமூகம்தான் அடைந்திருக்க வேண்டும். கடந்து போகும் வரலாறுகளையும் சாதனைகளையும் பதிவு செய்வதிலும் பாதுகாத்து வைப்பதிலும் நாம் காட்டும் அலட்சியமும் புறக்கணிப்பும் அவமானகரமானது. எதிர்கால சந்ததி இதற்காக நம்மை மன்னிக்கப் போவதேயில்லை.

'திரைப்பட ரசனையை பாடக் கல்வித்திட்டத்தில் இணைக்க வேண்டும்' என்று தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்தே ஒற்றைக்குரல் பாலுமகேந்திரா வுடையதுதான். நம்மை ஆள்பவர்களையே சினிமாத்துறையில் இருந்து தோந்தெடுக்கும் அளவிற்கு வலிமையான ஊடகமாக இருந்த சினிமாவை உணர்ச்சிப்பூர்வமாக அல்லாமல் அறிவுப்பூர்வமாக மக்கள் அணுக வேண்டியதின் அவசியத்தை வலுவாக உணர்ந்திருந்த ஒரே இயக்குநர் பாலுமகேந்திராதான். அவரின் குரலை எதிரொலிக்க தமிழ் சினிமாவில் எவருமில்லை என்கிற நிலை, அதிகாரத்தின் அடிமைகள் எல்லாத்துறையிலும் இருப்பதைப் போலவே கலைத்துறையிலும் நிறைந்திருப்பதைத்தான் காட்டுகிறது. அவரின் நிறைவுறாத இந்த வேண்டுகோளை தீப்பந்தமாக எடுத்துச் செல்லும் அடுத்த கலைஞனின் தேவைதான் இப்போது அவசியமானது. பாலுவின் பிரத்யேக அடையாளத்துடன் அதன் தொடர்ச்சியாக வேறு எந்த இயக்குநரும் உருவாகவில்லை என்பதே பாலுவின் தனித்தன்மைக்குச் சான்று.

பாலுமகேந்திரா எனும் உன்னதமான கலைஞனுக்கு ஓர் எளிய பார்வையாளனின் மனப்பூர்வமான அஞசலி. 


suresh kannan

2 comments:

enRenRum-anbudan.BALA said...

என்ன சொல்றது, சுரேஷ் கண்ணன்! எதிர்பார்த்தது போலவே, அந்த அற்புதக் கலைஞனின் முக்கியப் புள்ளிகளை உங்கள் அஞ்சலி தொட்டுச் சென்றுள்ளது!

“அழியாத கோலங்கள்” பற்றி கொஞ்சம் எழுதியிருக்கலாம், உங்கள் பார்வையில்!

அன்புடன்
பாலா

நா.கார்த்திகேயன் said...

அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்...

Rest in Peace Balu sir...