Monday, February 24, 2014

புதுமைப்பித்தன் சிறுகதைகள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கம்இளநிலைபட்டதாரிகளுக்கான தமிழ்ப் பாடத்திட்டத்திலிருந்து புதுமைப்பித்தனின் இரண்டு சிறுகதைகளை நீக்கியிருக்கிறது சென்னை பல்கலைக்கழகம். 'தலித் சமூகத்தை தவறாக சித்தரிக்கிறது' என்றெழுந்த புகாரின் அடிப்படையில் 'துன்பக்கேணி' சிறுகதையையும், வறுமை காரணமாக தன் உடலை விற்கும் ஏழைப் பெண்மணியின் கதையான 'பொன்னரகம்' சிறுகதையையும் நீக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

'கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இதுதானய்யா பொன்னகரம்' என்று அந்தக் கதையை பாசாங்கு சமூகத்தின் செவிட்டில் அறைவது போல் முடித்திருப்பார் புதுமைப்பித்தன். எழுதப்பட்டு இத்தனை ஆண்டுகளாகியும் அந்த அறையின் பின்னுள்ள சமூகக் கோபம் நமது கல்வியாளர்களுக்கும் புகார் அளித்தவர்களுக்கும் புரியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு படைப்பில் சாதியத்தைப் பற்றிய பின்னணியும் குறிப்புகளும் வரும் போது அவை எந்த நோக்கில், கருத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை நுண்ணுணர்வுடன் வாசித்து மாணவர்களுக்கும் அதை விளக்குவது ஆசிரியர்களின் கடமை. ஏன் மாணவர்களுக்கே கூட அந்த முதிர்ச்சியிருக்க வேண்டும். சாதியத்தைப் பற்றி உரையாடினாலே அது சாதிக்கு எதிரானது என்கிற முன்முடிவுடன் அணுகும் 'அறிவாளிகளை' என்ன செய்வது?  இப்படி ஒவ்வொரு படைப்பையும் பல்வேறு எதிர்ப்புகளுக்காக நீக்கிக் கொண்டேயிருந்தால் மிஞ்சப் போவது அம்புலிமாமா கதைகளாகத்தான் இருக்க முடியும்.

***

'பொன்னகரம்' கதை நீக்கப்பட்டதற்கு பதிலாக 'ஒரு நாள் கழிந்தது' சிறுகதையை ஆறுதலுக்காக இணைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. இந்தச் சிறுகதை  நான் படிக்கும் போதே +2 -ல் பாடமாக வந்த நினைவிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு +2  பாடத்திட்டத்தில் வந்த ஒரு சிறுகதையை, இப்போது இளநிலை கல்வியில் இணைப்பதின் மூலம் நாம் என்ன புரிந்து கொள்வது? நம் பாடத்திட்டங்களும் கல்வி முறையும் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்றா?

இந்தச் சர்ச்சையின் புண்ணியத்தில் 'ஒரு நாள் கழிந்தது' சிறுகதையை சில வருடங்களுக்குப் பிறகு இன்று வாசித்துப் பார்த்தேன். எத்தனை அற்புதமான சுயஎள்ளல். இந்த ஒரு சிறுகதையில் மாத்திரம் எத்தனை உள்அடுக்குகளாக தனிநபர்களின், சமூகத்தின் மீதான விமர்சனங்களையும் அதன் மீதான நையாண்டிகளையும் புதுமைப்பித்தன் வைத்திருக்கிறார் என்பதை வாசித்துப்பார்த்தால் தெரியும். அன்றைய நாளை எப்படியாவது கடந்து  தப்பித்தல் மனோபாவத்துடன் இயங்கும் நடுத்தர வர்க்க வாழ்க்கையையும் அதனுள் இருக்கும் வறுமை கலந்த சோகத்தையும் இதை விட சிறப்பாக விளக்கும் சிறுகதையை இனிமேல்தான் வாசிக்கப் போகிறேன்.

இப்போது எனக்கு எழும் சந்தேகம் என்னவெனில் இச்சிறுகதையை யொட்டி 'எப்படி எங்களை கடன்காரர்களாகவும் ஓட்டாண்டிகளாகவும்' சித்தரிக்கலாம் என்று 'பிள்ளைமார் சமூகம்' புகாருடன் கிளம்பப் போகிறதே என்பதுதான்.

இந்து செய்தி

ஒருநாள் கழிந்தது சிறுகதையை வாசிக்க

suresh kannan

2 comments:

கார்த்திகேயன் said...

THUNBAKKENI is one of the masterpiece of pudhumaipithan. This story is just like tamil movie paradesi.

கார்த்திகேயன் said...

THUNBAKKENI is one of the masterpiece of pudhumaipithan. This story is just like tamil movie paradesi.