Saturday, February 15, 2014

கல்யாண சமையல் சாதம் - ஆண்மையின் அடையாளச் சிதைவு


பாலியல் தொடர்பான விஷயங்களைப் பற்றி உரையாடுவதும் அதற்கான காட்சிகளைப் பார்ப்பதும் ஆபாசம் என்றிருக்கும் தமிழ்ச் சூழலில் திரைப்படங்களிலும் கலாசார ஜாக்கிரதையுடன் அது இலைமறை காய்மறையாகவே நெடுங்காலமாகவே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. 'கைக்கு அடக்கமா எடுத்துத் தின்ன வாட்டமா' என்றிருந்த 'எலந்தபயம்', 'மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி' வாக மாறி அதற்கு மேல் நகராமல் ஒரே இடத்தை சுற்றி வந்தது. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் வரும் நாயகிகள் அவருக்காக கவர்ச்சியாக மிகையாக உருகுவார்கள். எம்.ஜி.ஆர் திரைப்படங்களின் வெற்றிக்கு இந்தக் கவர்ச்சியும் ஒரு முக்கியமான காரணியாக இருந்தது. கடத்தல்காரர்கள் தங்களின் பிஸினஸ் டீலை வெற்றிகரமாக முடித்து மதுபானங்களை கையில் எடுத்தவுடன்  ஜெயமாலினிகளும் அனுராதாக்களும் 'கச்சத்தீவில் கை வெச்சுப் பாரு' என்கிற மறைமுக அழைப்புகளோடு அவர்களை உற்சாகமாக்குவார்கள். அவ்வளவுதான்.

இப்படி பாலியல் காட்சிகளை கேளிக்கைககாகவும் வணிகக் காரணங்களுக்காகவும் மலினமான முறையில் பயன்படுத்தியதை தவிர  நம் வாழ்வியலின் மிக முக்கியமானதும் அடிப்படையானதுமான காமம் என்கிற விஷயத்தைப் பற்றியும் அதன் அகரீதியான சிக்கல்கள் பற்றியும் தீவிரமாக உரையாடிய தமிழ் திரைப்படம் ஏதேனும் இருக்கிறதா என்று தேட வேண்டியிருக்கிறது. செக்ஸ் காமெடி என்கிற வகைமையை ஒரு பகுதியாக தன் திரைப்படங்களில் வெற்றிகரமாக பயன்படுத்தியவர் பாக்யராஜ். தமிழ் திரைப்படங்களின் பிரத்யேக வார்ப்பில் மையக்கதையோடு அதற்குத் துணையாக பாலியல் நகைச்சுவையை பயன்படுத்தி அதை தனக்கான பிரத்யேக அடையாளமாக மாற்றிக் கொண்டவர் என்றாலும் இவரும் அதை மலினமான முறையில் படத்தின் வணிக வெற்றிக்கு உபயோகப்படுத்திக் கொண்டாரே தவிர அந்தச் சிக்கல்களை தன் திரைக்கதையில் பிரத்யேகமாகவும் பிரதானமாகவும் உரையாடவில்லை.

அந்த வகையில், ஒர் ஆணுக்கு திருமணத்திற்கு முன்பு நிகழும் இயல்பான பாலியல் சிச்கலை, இயல்பான நகைச்சுவையோடு உரையாடிய, சமீபத்தில் வெளிவந்த 'கல்யாண சமையல் சாதம்' திரைப்படத்தை தமிழில் வெளிவந்திருக்கும் முதல் Sex Comedy எனக்கூறலாம் என கருதுகிறேன்.

இத்திரைப்படத்தின் நாயகனான ரகு திருமணம் நிச்சயமானவுடன் மணப்பெண்ணான மீராவுடன் ஏற்படும் நெருக்கத்தில் ஓர் அந்தரங்கமான தருணத்தில் பாலுறவிற்காக முயல்கிறான். ஆனால் அந்த முயற்சி வெற்றிகரமாக தோற்றுப் போகிறது. தான் ஆண்மைக்குறைவுள்ளவனோ என்கிற தீராத சந்தேகத்திலிருக்கும் ரகு அதிலிருந்து மீள்வதற்கான உபாயங்களைத் தேடுவதை ஆபாசமான காட்சிகள் எதுவுமின்றி ஜாக்கிரதையாக தமிழ் கலாசார சூழலின் எல்லைக்குள் நின்று உறுத்தாத நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிரசன்னா.

பொதுவாக பெரும்பான்மையான சதவீத ஆண்கள் பாலியல் தொடர்பான விஷயங்களை இலைமறைகாய்மறையாக தாம் அறிந்ததை புகைப்படங்களிலும் தியரியாகவும் பார்த்த சமாச்சாரத்தை யதார்தத்தில் அணுகும் போது அதற்கான பதற்றத்திலேயே தோற்றுப் போவார்கள்.  சுஜாதா எழுதிய 'பிலிமோத்ஸவ்' எ்னகிற சிறுகதையுண்டு. சர்வதேச திரைவிழாக்களில் uncensored ஆக வெளியிடப்படும் பாலியல் காட்சிகளைக் காண்பதற்காக மிக துடியாய்த் துடிக்கும் ஒரு சாதாரண இளைஞன் அதற்கான அதிர்ஷ்டமற்று விரக்தியுடன் திரும்பும் போது யதார்த்தத்தில் ஒரு பெண்ணை அணுகுவதற்கான  வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அவனோ பயந்து விலகிப் போய் விடுவான். வெறும் பிம்பங்களைக் காண ஆர்வமாய் இருப்பவன் நிஜத்தில் அதை எதிர்கொள்ளும் துணிச்சலற்றுப் போகிறான்.  நம் கலாசாரத்தில் அடிப்படையாக இருக்கும் போலித்தனமான முரணையும் பாசாங்கையும் நையாண்டி செய்யும் சிறுகதையது. மேலும் இங்கு பாலியல் இயக்கத்தில் பெரும்பாலும் ஆணே active partner ஆக இருக்கிறான். பெண்ணுக்கு அதற்கான வாய்ப்பு குறைவு. ஆணே பாலியல் விஷயங்களைப் பற்றி உரையாட சங்கடம் கொள்ளும் சூழல் நிலவும் போது பெண் அதைப் பற்றி பேசுவதோ, கலவியில் உற்சாகமாக எதிர்வினையாற்றுவதோ இயக்கத்தில் தான் ஆதிக்கம் செய்வதோ கலாசாரத்திற்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. பாலியல் விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக உரையாடும் பெண் 'முன்அனுபவம்' கொண்டவளாக இருப்பாளோ என்கிற சந்தேகத்தை ஆணிடம் ஏற்படுத்துவது என்பது ஒருபுறமும் அதைப் பற்றி பெரிதாக ஏதும் அறியாத Orgasm என்கிற விஷயத்தை அறியவோ உணரவோ அல்லாத பெண்களின் சதவீதம் ஒருபுறமுமாக இரண்டு எதிர்முனைகளில்தான் பெண்களின் நிலை இருக்கிறது.

திருமணத்திற்கு முன் சராசரியாக முன்அனுபவமில்லா அனைத்து அப்பாவி சராசரி இளைஞர்களும் மனஅழுத்தம் காரணமாக எதிர்கொள்ள நேரும் Erectile dysfunction எனும் ஆண்குறி விறைப்புறாத தற்காலிக சிக்கலில் அவதிப்படும் இளைஞராக நடித்திருக்கும் பிரசன்னாவின் துணிச்சலை நிச்சயமாக பாராட்ட வேண்டும். மிக அடிப்படையான இந்த உளவியல் பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கே தமிழ் சினிமா இத்தனை ஆண்டுகளைக் கடந்து வரவேண்டியிருக்கிறது. தமிழ் சினிமாவின் நாயகன் பொதுவாக எல்லாவிதத்திலும் தகுதியுள்ளவனாக வெற்றிகரமானவனாக இருப்பான். வேறு சில கதைப் போக்குகளில் உடற்குறையுள்ளவனாக இருந்தாலும் 'அந்த' விஷயத்தில் குறையேதுமிருக்க இயக்குநர்களும் நடிகர்களும் ஏன் ரசிகர்களுமே விரும்புவதில்லை.

ஆண்மையின் அடையாளத்தை ஆண்குறியின் வெற்றிகரமான இயக்கத்துடன் தொடர்புப்படுத்தி அபத்தமாகச் சிந்திக்கும் சமூகத்தில் தமிழ் சினிமாவும் அதற்கு விதிவிலக்கில்லை. பொதுவாக 'பிட்டுப்' படங்களின கதைப் போக்கை உருவாக்குவதற்கு எளிமையாகவும் ஆதாரமாகவும் உதவும் ஆண்மை தொடர்பான சிக்கல்களை பிரதானமாகக் கொண்டு அபூர்வமாக மிகச் சில திரைப்படங்களே வந்திருக்கின்றன. முத்துராமன்,மஞ்சுளா ஆகியோர் நடித்த மறுபிறவி'. ஒடிபஸ் காம்ப்ளெக்ஸ் வகைமையைச் சார்ந்தது. தன்னுடைய காதல் மனைவியுடன் உறவு கொள்ள முடியாமல் தவிக்கும் ஓர் இளைஞனை உளவியல் சிகிச்சைக்கு உட்படுத்திய பிறகு, மனைவியின் முகம், இளவயதில் இறந்த போன அவனுடைய தாயை நினைவுப்படுத்துவதாக அமைந்திருப்பதால் ஏற்படும் சிக்கல் இது என்பதாக கதைப்போக்கு விரியும். பிரேம்நசீரும்  ஜெயபாரதியும் நடித்த 'புனர்ஜென்மம்' என்கிற மலையாளப்படத்தின் மறுஉருவாக்கம் இது. பாக்யராஜ் கதையெழுதிய 'கன்னிப்பருவத்திலே' வின் நாயகன் ராஜேஷ் ஆண்மையற்றவனாக இருந்தாலும் மாடுமுட்டிய ஒரு விபத்தில்தான் அப்படி ஆகிறான் என்கிற நாயகத்தன்மைக்கு பங்கமேற்படாத அனுதாபத்தை ஏற்படுத்தும் பாதுகாப்பான நிலையில்தான் படம் இயங்கும். வசந்த் இயக்கத்தில் வெளிவந்த 'சத்தம் போடாதே' நாயகனும் ஆண்மையற்றவனாக இருப்பான என்றாலும் அதற்காக தன் மனைவியை பழிவாங்கும் சைக்கோவாக இருப்பான்.

'கல்யாண சமையல் சாதம்' திரைப்படத்தில் ஆண் அவனுக்கான சிக்கலில் தவிக்கும் போது பெண் இதை மிக யதார்த்தமாகவும் இயல்பாகவும் எதிர்கொள்கிறாள். பதற்றத்தின் காரணமாக ஏற்படும் தற்காலிக வீழ்ச்சியே இது என்பது அவளுக்குத் தெரிந்திருக்கிறது. மாறாக நாயகனின் நண்பர்கள் இதற்காக அபத்தமான தீர்வுகளுக்கு வழிகாண்பிக்கிறார்கள். புதிய தலைமுறைகளின் அடையாளமாக பாலியலைப் பற்றி பெண் வெளிப்படையாக பேசுவதும் அபூர்வமான ஒன்றாக இதில் பதிவாகியிருக்கிறது. 'கன்னிப்பருவத்திலே' நாயகி ஆணின் இயலாமையை  ஒரு தியாக மனப்பான்மையோடு ஏற்றுக் கொள்ள, இத்திரைப்படத்தின் நாயகியும் அதே மனோபாவத்தோடு இயங்கினாலும் 'செக்ஸ் இல்லைன்னா கஷ்டமாத்தான் இருக்கும்' என்று வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கிறாள். 'ஒரு ஆண் கணவனாக இருப்பதைக் காட்டிலும் நண்பனாக இருப்பதையே ஒவ்வொரு பெண்ணும் விரும்புகிறாள்' என்கிற பெண்களின் எதிர்பார்ப்பை இத்திரைப்படத்தின் நாயகியும் எதிரொலிக்கிறாள்.

இத்திரைப்படம் முழுக்க முழுக்க பிராமண சூழலையும் பாத்திரங்களையும் கொண்டு 'பிராமணத்தன்மை' கொண்டதாக இருக்கிறது என்பதையே ஒரு குறையாக சில நண்பர்கள் சொன்னார்கள். அபத்தமான சுட்டிக்காட்டல் இது. அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் முன்னர் ஏற்படுத்தப்பட்ட வெறுப்பு அரசியலின் காரணமாக எழுந்த எதிர்வினை இது. கடந்தகால வரலாற்றுத் தவறுகளுக்காக அதன் பகைமையையும் கசப்பையும் நிகழ்கால சமூகத்தின் மீது தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருப்பது சரியானதல்ல. பல்வேறு இனக்குழுமங்கள் இணைந்து வாழும் ஒரு சமூகத்தில், கலைப்படைப்புகளும் அதனதன் பங்கில் எதிரொலிப்பதுதான் நியாயமானதாக இருக்கும். இடைநிலைச் சாதிகளின் பெருமையைப் பேசும் திரைப்படங்கள் பொதுத்தளத்தில் அதிக உறுத்தலின்றி இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படும் போது பிராமணத்தன்மை கொண்டிருக்கும் படங்கள் அந்தக் காரணத்திற்காகவே எதிர்க்கப்படுவது முறையற்ற ஒன்று.ஒருவேளை இத்திரைப்படம் பிராமண சமூகத்தை உயர்த்தியும் மற்ற சமூகங்களை தாழ்த்தியுமான கதைப்போக்கையும் காட்சிகளையும் கொண்டிருந்தால் அந்தக் காரணத்திற்காக நிச்சயம் எதிர்க்கப்பட வேண்டியதுதான். கருத்த உருவத்துடன் பெரிய மீசை வைத்திருக்கும் சமையல் காண்டிராக்ட்டரை, ஒரு பிராமணப் பெண் முகச்சுளிப்புடன் பார்ப்பது போன்ற சில காட்சிகள் தவிர்த்து, இத்திரைப்படத்தில் பெரிதாக எந்தவொரு பிரச்சினையிலும் இல்லை.

நம்முடைய புறரீதியான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது மனம் என்கிற அகம் எனும் போது மனதில் ஏற்படும் அத்தனை பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் மூலக்காரணியாக விளங்குவது காமம் என்பது உளவியலாளர்களின் கருத்தாக்கம். இப்படி அடிப்படையானதொரு விஷயத்தைப் பற்றி அதன் கவர்ச்சிகரமான அம்சங்களைத் தாண்டி வெளிப்படையாகவும் அறிவியல் மற்றும் உளவியல்பூர்வமாக உரையாட தயக்கம் கொண்டிருக்கும் சமூகத்தின் அதே நிலையையே திரைப்படங்களும் பிரதிபலிக்கின்றன. இந்தச் சூழலின் மாற்றாக, திருமணமாகப் போகும் இளைஞனின் அபத்தமான புரிதலையும் மனத்தடையையும் பற்றி பிரத்யேகமான கதைப்போக்குடனும் இயல்பான நகைச்சுவையுடனும் உரையாடிய 'கல்யாண சமையல் சாதம்', வழக்கமான தமிழ் திரைப்படங்களின் வடிவமைப்பைக் கொண்டிருந்தாலும் இவ்வகைமையின் துவக்கப்புள்ளி எனலாம். இந்த துவக்கப் புள்ளியிலிருந்து இன்னும் நகர்ந்து இதைப் பற்றி தீவிரமாக உரையாடும் தமிழ் திரைப்படங்கள் வெளிவருவது மேலதிகமாக தொடர வேண்டும். 


(காட்சிப் பிழை, பிப்ரவரி  2014-ல் வெளியான கட்டுரை - நன்றி: காட்சிப் பிழை)  
suresh kannan

2 comments:

Anonymous said...

Sreedharan from chennai said,

Adhigaprasangam!!

saamaaniyan said...

பாலியல் காட்சிகள் மலிவான வணிக உத்திகளாக மட்டுமே தமிழ் சினிமாவின் தொடர்கிறது என்ற உங்களின் கருத்து முற்றிலும் உண்மை. பாதுகாப்பான செக்ஸ் பற்றி பேசினால் கற்புக்கு களங்கம் என பதறும் சமுதாயத்தில் " கல்யாண சமையல் சாதம் " புதிய, தைரியமான முயற்சிதான்.

எனது வலைப்பூ saamaaniyan.blogspot.fr ல் பாலியல் அறிவு பற்றிய எனது " பாலியல் புரிதலற்று புழுத்துபோகும் சமூகம் ! " கட்டுரையில் பாலியல் சீரழிவுகளில் சினிமாவின் பங்கினை பற்றி குறிப்பிட்டுள்ளேன். படித்துவிட்டு தங்களின் கருத்துகளை பதிக்கவும். நன்றி