Sunday, March 16, 2014

பலேரி மாணிக்கம் கொலை வழக்கு1950களின் இறுதிக் காலகட்டம். கேரளத்தில் ஈஎம்எஸ் தனது முதல் மந்திரிசபையை அமைத்ததற்கு பிற்பாடு  'பதிவு செய்யப்பட்ட' முதல் கொலை வழக்காக கருதப்படும் 'பலேரி மாணிக்கம் கொலைவழக்கு'  மிகுந்த பரபரப்பை அப்போது ஏற்படுத்தியது. சேட்டன்மார்கள் திண்ணையில் சாவகாசமாக அமர்ந்து சுவாரசியமாக பேசும் 'கதைகளுக்கான' கருப்பொருள்களில் ஒன்றாக இந்த வழக்கு விவரங்கள் அந்தச் சமயத்தில் இருந்தன.

அழகான இளம்பெண்ணான மாணிக்கம் பலேரி கிராமத்திலுள்ள பொக்கன் என்கிற அசடனுக்கு வாழ்க்கைப்பட்டு திருமணமான பதினோரு நாட்களிலிலேயே மர்மமான முறையில் இறந்து போனார். கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட மாணிக்கத்தின் இந்த கொலைவழக்கு தொடர்பாக நடந்த நீண்ட விசாரணைகளிலும் சாட்சியங்களிலும் கொலையாளி யாரென அறியப்படாமலே போயிற்று.  உண்மை என்கிற வஸ்து  விசாரணைகளின் இருளிலும் பலேரி கிராமத்தின் உயர்சாதிக்காரர்களின் சதிச்செயல்களிலும் புதைந்து போயின.

இதே கிராமத்தில் பிறநத கவிஞரும் எழுத்தாளருமான T.P.ராஜீவன் இந்த கொலை விவகார சம்பவங்களையொட்டி  மாத்ருபூமி வார இதழில்  'பலேரி மாணிக்கம்: ஒரு பாதிரா கொலபாதகத்திண்டே கதா' என்கிற புதினத்தை தொடராக எழுதினார். மலையாளத் திரையின் இளம் இயக்குநர்களில் கவனிக்கப்படத்தக்க திரைப்படங்களை உருவாக்கிய ரஞ்சித் இந்த நாவலின் அடிப்படையில் அதே தலைப்பில் உருவாக்கிய திரைப்படத்தைப் பார்த்தேன்.

கானா பிரபா எழுதிய இந்தப் பதிவின் மூலம் இத்திரைப்படத்தின் அறிமுகமும் பார்க்க விரும்பும் சுவாரசியமும் எனக்கு வாய்த்தது.

***

அப்பாவி இளம்பெண்ணனான மாணிக்கத்தை யார் இப்படி கொடூரமாக கொன்றிருப்பார்கள், எதற்காக? கொலையாளிகள் ஏன் சட்டத்தின் பிடியில் சிக்கவில்லை?

புதுடெல்லியில் புலனாய்வாளாராக இருக்கும் ஹரிதாஸை (மம்முட்டி) இந்தக் கேள்விகள் துரத்திக் கொண்டேயிருக்கின்றன. மாணிக்கத்தின் அழுகையும் கூக்குரலும் அவரது கனவுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. இச்சம்பவம் ஒரு கொடுங்கனவாக உறங்க விடாமல் அவரை வதைத்துக் கொண்டிருக்கிறது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த பலேரி மாணிக்கத்தின் மரணத்திற்காக ஹரிதாஸ் ஏன் துன்பப்பட வேண்டும்? அதைப் பற்றி தனிப்பட்ட முறையில் விசாரணை செய்வதற்காக ஏன் பலேரிக்கு அவர் பயணப்பட வேண்டும்? அவரும் பலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதாலா? அவர் பிறந்த அதே நாளில்தான் மாணிக்கத்தின் மரணமும் நிகழ்ந்த தற்செயலின் காரணத்தினாலா? இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான கதைகளை கேட்டு வளர்ந்தவர் என்பதாலா?

இதற்கான காரணத்தை மிகப் பொருத்தமானதொரு கணத்தில் திரைக்கதையில் இணைத்திருக்கிறார் ரஞ்சித். அவர் ஒரு சிறந்த திரைக்கதையாசிரியர் என்பதற்கான அடையாளம் இதன் மூலம் நிரூபணமாகிறது. அதிர்ச்சியளித்து முனைப்புடன் கவனிக்க வைக்கும் தடதடவென்ற பின்னணி இசையுடனோ மிகப் பெரிய ரகசியத்தை சொல்லப் போகும் முன்னெடுப்புகளுடனோ அல்லாமல் மிகச் சாதாரணமாக இந்தக் காட்சியை கடந்து போக வைக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

இந்தியாவிலுள்ள மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் 'மம்முட்டி' என்பதே சாதாரண வாக்கியம். புலனாய்வு திரைப்படங்களில் அவரை பார்ப்பது நமக்கு புதிதல்ல என்றாலும் ஹரிதாஸ் எனும் அந்த வழக்கமான பாத்திரத்தை விட அஹ்மது ஹாஜி எனும் பாத்திரம் உடனே வசீகரிக்கிறது. அடித்தட்டு மக்களிடமிருந்து உழைப்புச் சுரண்டலையும் பெண் தொழிலாளிகளிடமிருந்து பாலியல் சுரண்டலையும் செய்யும் அந்த மோசமான நிலச்சுவான்தார் பாத்திரத்தை நுட்பமாக கையாண்டிருக்கிறார் மம்முட்டி. இறுதிப் பகுதியில் வரும் இன்னொரு பாத்திரமான காலித் அஹ்மது பொருந்தாமல் சற்று நகைச்சுவையாகவே இருக்கிறது.

கம்யூனிஸ்டுகளின் மீதான அழுத்தமான விமர்சனங்கள் இத்திரைப்படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன. சிகையலங்கார தொழிலாளியாக வரும் சீனிவாசன் பாத்திரம் ஒரு காட்சியில் சொல்கிறது. "நான் கம்யூனிஸ்டும் அல்ல, விசுவாசியும் அல்ல, வெறும் பார்பர் மாத்திரமே". இளம்பருவத்துக்கேயுரிய லட்சியவாத ஆர்வங்களுடன் ஓர் அமைப்பில் நம்பிக்கை கொண்டிருக்கும் இளைஞனின் மனது அதிலுள்ள சறுக்கல்களையும் முரண்களையும் கண்டு நொந்து விலகும் ஒரு கச்சிதமான சித்திரத்தில் சீனிவாசன் நன்றாகப் பொருந்தியிருந்தார்.

1957-ல் ஈஎம்எஸ் பதவியேற்றதைக் கொண்டாடும் வகையிலும் சாதியச் சிடுக்குகள் அகன்று நவீன கேரளத்தை நோக்கி நகரக்கூடிய வெளிச்சத்தின் மீதான நம்பிக்கையிலும்  தன்னுடைய சிகையலங்காரக் கடைக்கு அந்த நாளில்  மகிழ்ச்சியோடு விடுமுறை அளிக்கிறார் சீனிவாசன். ஆனால் உயர்சாதிய திமிரோடு அவரை அன்று முடிதிருத்தம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவது பார்ட்டி மெம்பராக இருக்கும் அவரது "தோழர்" ஒருவர்தான். பழமையில் ஊறிப்போன ஒரு சனாதன மனதை, நவீன சிந்தனைகளும் கொள்கைளும் அத்தனை எளிதில் மாற்றி விட முடியாது என்பது நிருபணமாகிறது. மாணிக்கம் கொலைவழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் அஹ்மது ஹாஜி இதே தோழர்தான் பாதுகாத்து வைத்திருக்கிறார். ஹாஜியின் சில ஏக்கர் நிலங்களை பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தானம் பெறுவதன் மூலம் அவர் பாவத்தை கழுவுவதற்கு உதவிகரமாய் இருக்கிறார்கள் 'சகா'க்கள்.

***

50 வருடங்களுக்கு முந்தைய இந்த கொலைச் சம்பவத்தை பின்னாலுள்ள உண்மைகளை அறியப் பயணப்படும் ஹரிதாஸிற்கு அது எத்தனை எளிதாய் இருப்பதில்லை. சம்பவத்தில் தொடர்புடைய பலர் இறந்தும் மறந்தும் போயிருப்பதால் இடியாப்பச் சிக்கலுடன் புகைமூட்டமான உண்மை மாத்திரமே பாக்கியிருக்கிறது. பல கதவுகள் மூடுகின்றன. சில கதவுகள் திறக்கின்றன. ரஷோமான் திரைக்கதை போன்று தான் காண்கிற அல்லது உருவாக்குகிற 'உண்மை'களையே அவரவர்கள் முன்வைக்கின்றனர். இதிலிருந்து உண்மையை சல்லித்து எடுக்கும் சவாலை ஹரிதாஸ் சந்திக்கிறார்.

1950-களின் காட்சிப் பின்னணிகள் உத்தேசமாக அமைந்திருந்தாலும், ரஞ்சித்தின் அற்புதமான திரைக்கதையும் மம்முட்டியின் சிறப்பான நடிப்பும் இந்தப் படத்தின் சுவாரசியத்திற்கு அடித்தளமாக இருக்கின்றன. இத்திரைப்படத்தின் பல துணைநடிகர்கள் நாடகக்குழுக்களிலிருந்து கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். 'ஒரு குற்றவாளி எத்தனை வருடங்களையும் யுகங்களையும் கடந்தாலும் பாவத்திற்கான தண்டனையை எதிர்கொண்டேயாக வேண்டும்,இதுவே இயற்கையின் நியதி' என்கிற நீதியுடன் திரைப்படம் நிறைவுறுகிறது.


suresh kannan

No comments: