Sunday, March 23, 2014

ரம்மியும் பத்மினியும் விஜய் சேதுபதியும்



'சிறிய வேடங்களுக்கான வாய்ப்பு கூட தரப்படாமல் மறுக்கப்பட்டேன்' என்று தனது முந்தைய கசப்பை ஒரு நேர்காணலில் நினைவு கூர்கிறார் விஜய் சேதுபதி.

சினிமாவில் நடிகராகும் தன்னுடைய கனவை புறக்கணிக்க முடியாமல், கணக்காளராக துபாயில் பணிபுரிந்ததை உதறித் தள்ளி விட்டு பின்பு கூத்துப் பட்டறையில் இணைந்து தன் திறமையை மெருகேற்றிக் கொண்டு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும் குறும்படங்களிலும் நடித்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு அதிர்ஷ்டக் காற்று 'தென்மேற்கு பருவக்காற்று' மூலமாக அடித்தது. 'பிட்ஸா' எனும் திரில்லர் திரைப்படம் அவருக்கு மேலதிக புகழைச் சேர்த்தது.கடைசியாக அவரது திறமையும் அடையாளங் காணப்பட்டது. தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி இன்று  நம்பிக்கை தரும் நட்சத்திரம். அவரது உருவத்தை திரையில் கண்டவுடனேயே பெரும் உற்சாகக் கூச்சலும் சீழ்க்கையொலியும் எழுப்பும் ரசிகர்களை சம்பாதித்திருக்கிறார்.

வெற்றியை ருசிக்க ஆரம்பித்து விட்டவுடன் சூப்பர் ஸ்டார்களை உருவாக்கும் இயக்குநர்களுடன் இணைந்து 'பஞ்ச்' டயலாக் பேசி அதிகாரத்தை நோக்கி நகர நினைக்கும் அபத்தமான பேராசையெல்லாம் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை என்பதேயே அவர் தேர்வு செய்யும் யதார்த்தமான படங்களும் பாத்திரங்களும் காட்டுகின்றன. 'பிட்ஸா' திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகும் 'சூது கவ்வுமில்' நாற்பது வயதுடைய சில்லறைத் திருடனின் பாத்திரத்தில் நடிக்கத் துணிகிறார். அந்தப் படத்தின் ஸ்கிரிப்டையும் குறிப்பிட்ட பாத்திரத்தின் தனித்தன்மையையும் அறிந்த பிறகு இமேஜைப் பற்றி கவலைப்படாமல் வேறு யாரோ நடிக்கவிருந்த அந்தப் பாத்திரத்தை தான் முன்வந்து ஏற்றிருக்கிறார் என்கிற தகவலே சினிமாவின் மீதுள்ள அவரின் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. அறிமுக இயக்குநர்களுக்கும் சிறந்த கதைகளுக்கும் மாத்திரமே அவர் முன்னுரிமை தருவதாகவும் தெரிகிறது. இதுவே அவரின் மீதான நம்பிக்கையைக் கூட்டுகிறது.

இப்படி சீரானதொரு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் சமீபத்திய திரைப்படங்களைக் கவனிக்கும் போது அவர் படங்களை  தேர்வு செய்வதில் சற்று கவனமாக இருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது. நேர் உரையாடல்களில் திரைக்கதையை மிக சுவாரசியமாக விவரிக்கும் இயக்குநர்கள் அதை திரைப்படமாக உருமாற்றும் போது சறுக்குவதையோ, தன்னுடைய பாத்திரம் திரைக்கதையில் விவரிக்கப்பட்டிருந்த அதே தன்மையுடன் பயணமாகிறதா என்பதையும் நடிகர்கள் கவனத்தில் கொள்வது நல்லது என்பதையே விஜய் சேதுபதியின் சமீபத்திய திரைப்படங்களான 'ரம்மி' மற்றும் 'பண்ணையாரும் பத்மினியும்' ஆகியவை சுட்டிக் காட்டுகின்றன.


'ரம்மி' திரைப்படம் எதனாலேயோ 1980-களின் காலகட்டத்தில்  இயங்குகிறது. இதற்கு எவ்வித அழுத்தமான காரணத்தையோ பின்னணியோ அதன் அவசியத்தையோ திரைப்படத்தில் காணமுடிவதில்லை. 'பீரியட் படம்' என்கிற போலியான பாவனைதான் இதில் காணப்படுகிறது.  அந்தக் காலக்கட்டத்தில் புழங்கிய பொருட்களை அண்மைக் கோணத்தில் சில காட்சிகளில் காட்டி விட்டால் போதும். அது 'பீரியட்' படமாகி விடும். திரைத்துறையினர் துவக்க விழாக்களில் வழக்கமாக கூறும் தேய்வழக்கான  'இது வித்தியாசமான படம்' என்பதைப் போலவே 'பீரியட் படம்' என்பதின் மூலம்  பார்வையாளர்களை ஏமாற்றும் முயற்சியோ என்றும் தோன்றுகிறது.

படத்தின் இயக்குநர் 'சுப்ரமணியபுரம்' திரைப்படத்தின் பாதிப்பில் இந்தப் பின்னணியை யோசித்திருக்கலாம். ரம்மியும் சுப்ரமணியபுரத்தின்' மோசமான நகல் போலவே தெரிகிறது. 80-கள் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியிருந்ததொரு காலக்கட்டம். வேலையும் இலக்கும் இன்றி பொறுப்பற்றுத் திரிந்த இளைஞர்களை அரசியல்வாதிகள் தங்களின் சாதுர்யத்தினால் தொண்டர்களாகவும் அடியாட்களாகவும் பயன்படுத்திக் கொண்ட அரசியல் கலாசாரத்தை 'சுப்ரமணியபுரம்' அதன் அழுத்தத்தோடும் கலைத்தன்மையோடும் கொண்டிருந்த காரணத்தினால் அந்தக் காலத்தின் பின்னணி அதன் திரைக்கதையோடு மிக கச்சிதமாகப் பொருந்தியிருந்தது.

ஆனால் ரம்மி திரைப்படமோ, அவ்வாறான அழுத்தங்களோ மெனக்கெடல்களோ  காட்சிகளில் நம்பகத்தன்மையோ ஏதுமில்லாமல் மொண்ணையாக இருப்பதால் இந்த காலப் பின்னணி பொருந்தாமல் செயற்கையாகத் தெரிகிறது. காதல் தொடர்பாக சமூகத்தில் ஏற்படும் சாதிய வன்முறைகளும் கெளரவக் கொலைகளும் சமகாலத்திலும் ஓய்ந்துவிடவில்லை என்பதால் 80-களின் காலப்பின்னணி அவசியமானதாக தெரியவில்லை.

இரண்டு காதல் ஜோடிகள். சாதிமத வேறுபாட்டின் மீது அமைந்த காதல் மீதான எதிர்ப்பின் காரணமாக ஒரு ஜோடியில்  உள்ள ஆண் கொல்லப்படுகிறான்.  இந்த கெளரவக் கொலையின் பின்னணியில் இருப்பது அவன் காதலித்த பெண்ணின் தந்தை. கெளரவத்திற்காக தன்னையும் கொல்லத் துணியும் தந்தையைக் கொன்று இன்னொரு ஜோடியை இணைத்து வைக்கிறாள் அந்தப் பெண். இதுதான் ரம்மி திரைப்படத்தின் கதை.

இதை அசட்டுத்தனமான நகைச்சுவைகளோடும் நுண்ணுணர்வற்ற காட்சிகளுடனும் பலவீனமான திரைக்கதையுடனும் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். பார்வையாளர்களுக்கு திகைப்பை உண்டாக்குகிறேன் பேர்வழி என்று திரைக்கதையில் அவர் உருவாக்கி வைத்திருக்கும் செயற்கையான திருப்பங்கள் எரிச்சலையே உண்டாக்குகின்றன. பாத்திரத்தின் வடிவமைப்பிலும் நம்பகத்தன்மையில்லை. விஜய் சேதுபதி காதலிக்கும் பெண் 'ஊர் பெரியவரின் மகள்' என்கிற விஷயமே ஏறக்குறைய படம் நிறைவதற்கு முன்புதான் தெரியவருகிறது. ஆனால் அந்தப் பெண்ணின் தோற்றமோ விவசாயக் கூலி போல ஏழ்மையான தோற்றத்துடன் இருக்கிறது. ஆனால் ஊர் பெரியவரின் சகோதரருடைய மகளுடைய தோற்றம் பணக்காரத்தனமாய் இருக்கிறது.

விஜய் சேதுபதி காதலிக்கும் பெண் 'ஊர் பெரியவரின் மகள்' என்கிற அடையாளத்தை திரைக்கதை திருப்பம் என்கிற காரணத்திற்காகத்தான் இயக்குநர் 'மறைக்க' முயன்றிருக்கிறார் என்றால் அதில் அவர் தோல்வியடைந்திருக்கிறார் என்றே பொருள். கதையின் பிரதான பாத்திரங்களின் உறவை முதலில் தொடர்பேயில்லாதது போல் சித்தரித்து விட்டு இறுதியில் அந்தத் தொடர்பை நிறுவ முயன்றால் அது நம்பகத்தன்மையைப் பாதிப்பதோடு பார்வையாளனை எரிச்சலடையவே வைக்கும். மேலும் இந்த உத்தி திரைக்கதையின் சுவாரசியத்திற்கு எவ்விதத்திலும் உதவவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

கிட்டத்தட்ட துணை நடிக பாத்திரத்தைப் போலவே ஓரமாய் வந்து போகிறார் விஜய் சேதுபதி. சிறிய வேடமென்றாலும் வலுவாக சித்தரிக்கப்பட்ட பாத்திரமென்றால் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. அப்படியும் அல்லாமல் அவரது பாத்திரம் மிக சாதாரணமாகவே இருக்கிறது. காதலுக்கு வில்லர்களாக சித்தரிக்கப்படும் ஊர் பெரியவரும் அவரது முரட்டு அடியாளும் இன்னொரு காமெடி. அவர்களின் பாத்திர சித்தரிப்பை பார்த்தால் காதலர்களை மிரட்டுவதுதான் அவர்களின் முழு நேர பணி என்பதாகத் தோன்றும் அளவிற்கு அதே வேலையையே படம் முழுவதும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பழைய திரைப்படங்களில் நாயகனின் சாகசத்தையும் பெருமையையும் நிலைநாட்டுவதற்கும் அடிவாங்குவதற்கும் இறுதியில் முழுமையாக வீழ்த்துவதற்கு அல்லது திருத்தப்படுவதற்கு வில்லன் எனப்படும் எதிர்நாயகத்தன்மை கொண்டதொரு பாத்திரம் தேவைப்படும். அவ்வளவுதான். அந்தப் பாத்திரத்திற்கான  பிரத்யேக பின்னணியோ பின்புலமோ குடும்ப விவரங்களோ தனித்தன்மைகளோ விளக்கப்பட மாட்டாது. ஆனால் இதெல்லாம் பழைய கால திரைப்படங்களில்தான். இப்போது பார்வையாளர்கள் முன்னேறியிருக்கிறார்கள். யதார்தத்திலிருந்து மிக விலகியோ அல்லது நம்பகத்தன்மையற்றோ பாத்திரங்கள் உருவாக்கப்பட்டால் சிரித்து விட்டோ எரிச்சலடைந்தோ அதைப் புறக்கணித்து விடுகிறார்கள். காதலுக்கு எதிராக இயங்கும் நபரின் பழமைவாத மனதின் பின்னணி முதற்கொண்டு பிரதான பாத்திரங்கள் ஒவ்வொன்றின் தனித்தன்மையையும் துல்லியமான காட்சிப் பின்னணிகளையும் அதன் நுண்விவரங்களையும் இன்று பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

'கூட விழுந்துடுச்சி' 'கூடவே விழுந்துடாத' போன்ற வசனங்கள் டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவில் செயலாக இல்லாத குறையைப் போக்குகின்றன. இத்திரைப்படத்தின் காலப் பின்னணியைப் போலவே இதுவும்  80-களின் வணிக சினிமாக்களின் உருவாக்கத்தைப் போலவே பழமையானதாக இருக்கிறது என்பதே இதன்  பெரிய குறை.


எழுத்தாளராக ஆக விரும்புபவர்கள் பொதுவாக முதலில் கவிதையிலிருந்து துவங்குவதைப் போல திரைப்பட இயக்குநர்களாக ஆக விரும்புபவர்கள் இன்று முதலில் குறும்படங்களை உருவாக்கத் துவங்கி விடுகிறார்கள். முன்பு போல் பிரபல இயக்குநர்களிடம் உதவியாளர்களாக இருந்து அவதிப்பட்டு குருமார்கள் மூளையில் திணித்த விஷயங்களின் பாதிப்பில் வெளிவந்து தயாரிப்பாளர்களைத் தேடி அலைய வேண்டிய அவசியமெல்லாம் இன்றில்லை. அறிமுகச் சீட்டு போல மிகச் சிறந்த குறும்படங்களை உருவாக்கத் தெரிந்தால் போதும். அவர்களுக்கான திரைப்பட வாய்ப்பு பெருகி வருகிறது. குறும்படங்களுக்கான பிரத்யேக விருது நிகழ்ச்சிகளும் சந்தை வாய்ப்புகளும் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. தொலைக்காட்சி நிறுவனங்களும் இதற்கான நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இதில் சில குறும்படங்கள், முழு நீள திரைப்படங்களை விடவும் மிக அற்புதமானவைகளாகவும் சுவாரசியமானவைகளாகவும் உள்ளன, இப்படியாக வெற்றி பெற்றதொரு குறும்படம்தான் 'பண்ணையாரும் பத்மினியும்'. இதுவே சில கூடுதல் மாற்றங்களுடன் முழு நீள திரைப்படமாக வெளிவந்திருக்கிறது.

ஒரு குறும்படத்தை முழு நீள திரைப்படமாக உருமாற்றுவது என்பது ஒரு சிறுகதையை குறுநாவலாகவோ அல்லது நாவலாகவோ விரித்து எழுதுவதைப் போன்றது. அதற்குண்டான அடர்த்தி மூல கருப்பொருளில் இருக்க வேண்டும். அல்லாவிடில் அது நீர்த்துப் போன, தொய்வான உருவாக்கமாக ஆகி விடும் அபாயமுண்டு.

பொதுவாக கலையாளுமை கொண்ட மிகச் சிறந்த இயக்குநர்களுக்கு இந்தப் பிரச்சினையிருக்காது. அவர்களுக்கு உத்வேகம் ஏற்படுத்தும்படி ஒரு துளி மை கிடைத்தால் கூட தங்களின் கற்பனைத் திறனால் அதைப் பெருக்கி பெரியதொரு கோலத்தைப் படைத்து விடுவார்கள். இயக்குநர் மகேந்திரன் அவரது 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' திரைப்படம் உருவான பின்னணியைப் பற்றி கூறும் போது இவ்வாறு விளக்குகிறார். அதிகாலையில் ஓர் இளம் பெண் உடற்பயிற்சிக்காக ஓடுவதைப் பார்க்கிறார். 'அந்தப் பெண்ணின் பின்னணி என்னவாக இருக்கும், அவளுடைய வாழ்வில் காதல் நுழைந்தால் என்னவாகும்' உள்ளிட்ட பல விஷயங்களை யூகிக்கிறார். 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' உருவாகிறது. இயக்குநர் பார்த்திபனும் தன்னுடைய 'புதிய பாதை' திரைப்படத்தைப் பற்றி பேசும் போது 'குடிசைகள்  தீப்பற்றி எரிந்து மக்கள் அலறிக் கொண்டிருக்கும் போது அந்த நெருப்பில் ஒருவன் பீடி பற்ற வைத்தால் எப்படியிருக்கும்?' என்கிற ஒற்றை வரியிலிருந்துதான் அதன் திரைக்கதை உருவானது என்கிறார்.

குறும்படத்திலிருந்து முழுநீள திரைப்படமாக உருமாறின முந்தைய மற்றும் துவக்க உதாரணம் பாலாஜி மோகனின் 'காதலில் சொதப்புவது எப்படி?' குறும்பட வடிவத்தில் ஓரளவிற்கு சுவாரசியமாக இருந்த அந்தப் படைப்பு திரைப்படமாக்கப்படுவதற்காக இழுக்கப்பட்ட திரைக்கதையின் மூலம் அந்த சுவாரசியம் குறைந்து போனது. 'பண்ணையாரும் பத்மினியும்' திரைப்படத்திற்கும் ஏறக்குறைய அதே விபத்து நிகழ்ந்துள்ளது.

அஃறிணைப் பொருட்களின் மீது உருவாகும் பாசத்தையும் உரிமையுடைமை மனோபாவத்தையும் மையமாகக் கொண்டு இதன் திரைக்கதை அமைந்துள்ளது. பழைய மாடல் காரான பத்மினியை உடமையாக்கிக் கொள்ள விரும்பும் ஒரு  பண்ணையார்.  பிறகு வந்து சேரும் ஒரு வாகன ஓட்டுநர். இருவருக்குமே அந்த வாகனத்தின் மீது பிணைப்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் அதை இழக்க நேர்வதும் இறுதியில் திரும்பப் பெறுவதான கதைச் சரடை மெல்லிய உணர்வுகளுடனும் நகைச்சுவையுடனும் சொல்லப்பட்டதுதான் அந்தக் குறும்படம்,

இதுவே திரைப்படமாகும் போது பண்ணையாருக்கும் அவரது மனைவிக்கும் இடையேயான முதுமைக் காதலையும், வாகன ஓட்டுநருக்கும் ஓர் இளம் பெண்ணுக்கும் ஏற்படும் காதலையும் இன்னபிற விஷயங்களையும் இணைத்துச் சொல்லப்பட வேண்டிய கட்டாயத்தில் விழும் போது தொய்வடைந்து போவதை இயக்குநரால் கட்டுப்படுத்த முடியவில்லை. என்றாலும் திணிக்கப்பட்ட வன்முறைக் காட்சிகளாலும் ஆபாசங்களாலும் நிறைந்திருக்கும் தமிழ்த் திரைப்படங்களுக்கிடையே, அகரீதியான மென்உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவும் மையத்திலிருந்து பெரிதும் விலகாத திரைக்கதையுடனும் ஒரு படைப்பை உருவாக்கியிருக்கும் அறிமுக இயக்குநரான அருண்குமாரை நிச்சயம் பாராட்டலாம்.

'படிக்காதவன்' என்றொரு ரஜினிகாந்த் திரைப்படம். அதில் டாக்ஸி டிரைவராக நடித்திருக்கும் ரஜினி தனது காருக்கு 'லட்சுமி' எனப் பெயரிட்டு மிக பாசத்துடன் பழகுவார். வாகனமும் அதற்கு எதிர்வினை செய்யும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். தவறான நோக்கத்துடன் அதில் ஏறும் எவரையும் அது அனுமதிக்காது. அவசரமான ஒரு தருணத்தில் கார் கிளம்ப மறுக்க கோபத்தில் காரை பயங்கரமாக அடித்து (?!) விடுவார் ரஜினி. பிறகு அதற்கான நியாயமான காரணத்தை உணரும் போது அதற்காக வருந்தி அழுவார். காரை அவர் நிரந்தரமாக பிரிய நேரும் காட்சியொன்றில் அது அவரை தடுத்து நிறுத்த முயற்சிக்கும்.

மனிதர்களுக்கு இணையான நுண்ணறிவுடன் விலங்குகளை சித்தரித்த 'சின்னப்பா தேவர்' திரைப்படங்களைப் போன்று மிகையான நாடகத்தனத்தை இந்தக் காட்சிகள் கொண்டிருந்தாலும் ஓர் அஃறிணைக்கும் உயர்திணைக்குமான உறவும் பாசமும் அத்திரைப்படத்தில் பார்வையாளர்கள் மனவெழுச்சி கொள்ளும்படி அமைந்திருந்தன. மிக குறிப்பாக அந்த வாகனமும் ஓர் உயிருள்ள பாத்திரம் போலவே சித்தரிக்கப்பட்டிருக்கும். இத்தனைக்கும் காருக்கும் மனிதனுக்குமான உறவு அத்திரைப்படத்தின் ஒரு பகுதியே. ஆனால் அதையே தனது மையமாகக் கொண்டிருக்கும் 'பண்ணையாரும் பத்மினியும்' திரைப்படத்தில் நாடகத்தனமாக தேவையில்லையென்றாலும் இயல்பாக கூட இந்த மனவெழுச்சி பார்வையாளர்களி்டம் பதிவாகாகும் படியான காட்சிகள் அல்லாதது ஒரு குறையே.

வாகனத்தின் மீது பண்ணையாரும் ஓட்டுநரும் கொள்ளும் பிணைப்பு மறுமறுபடி நீளமான காட்சிகளால் விவரிக்கப்பட்டுக் கொண்டே இருந்தாலும் அது சரியாக முதலிலேயே நிறுவப்படாததால் அவர்களின் உணர்வுகளுடன் பார்வையாளனால் முழுமையாக ஒன்ற முடிவில்லை. மறுபடியும் மறுபடியும் கார் தொடர்பான ''சென்டிமென்ட்' காட்சிகளே தொடர்வது சலிப்பை ஏற்படுத்துகின்றன. அது போலவே வயதான பண்ணையார் தம்பதியினரின்  ரொமான்ஸூம்.  இது போன்ற தேய்வழக்கு காதல் காட்சிகளையெல்லாம் தனது ஆளுமையின் வீழ்ச்சிக் கால திரைப்படங்களில் சிவாஜி கணேசன் ஏற்கெனவே நிறைய செய்து தீர்த்து விட்டார். எனவே இந்த வகைமையில் வேறு மாதிரியான இயல்பான காட்சிகளை இயக்குநர் யோசித்திருக்கலாம். பிரெஞ்சு திரைப்படமான Amour சட்டென்று நினைவில் வந்து போகிறது.

காரின் முன் இருக்கையில் அமர்வதற்காக ஆசைப்படும் ஒரு சிறுவன் அதற்காக சிறுகச் சிறுக காசு சேர்ப்பதும் பின்பு வளர்ந்து பெரியவனாகி சொந்தமாக ஒரு காரை வாங்கிய பிறகும் இன்னமும் நிறைவேறாமலிருக்கும் அந்த ஆசையை பொத்தி வைத்திருப்பதுமான, குறும்படத்தில் அல்லாத ஒரு கிளைக்கதை சுவாரசியமாக இருக்கிறது. இப்படியான சில கிளைக்கதைகளுடன் திரைக்கதையை விரித்து மேலே குறிப்பிட்டிருக்கும் அந்த சலிப்புணர்வை போக்கியிருக்கலாம். குறும்படத்தில் வாகன ஓட்டுநராக நடித்திருந்த நடிகர், திரைப்படத்தில் சற்று பதவிஇறக்கத்துடன் விஜய் சேதுபதிக்கு உதவியாளராக நடித்திருக்கிறார். இவர் பாத்திரம் மூலமாக நகைச்சுவை என்ற பெயரில் மூடத்தனத்தை விவரித்திருப்பதையும் இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.

இத்திரைப்படத்தின் நடிகர் தேர்வு அற்புதமாக அமைந்திருக்கிறது. பிரதான பாத்திரமான பண்ணையாராக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ் முதல் மெக்கானிக்காக வரும் நபர் வரை மிக இயல்பான முகங்கள் திரையில் தோன்றுகின்றன. பண்ணையாரின் மனைவியாக நடித்திருக்கும் துளசியும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். பண்ணையார் வாகனத்தின் மீது ஆவல் கொள்வதும் அதை உடமையாக்கிக் கொள்ள விரும்புவதும் நிலப்பிரபுத்துவ மனோபாவத்தின் நீட்சி  என்பதும் இயந்திரத்தை இயக்குபவனுக்கும் இயந்திரத்திற்கும் தன்னிச்சையாக நேரும் தோழமை என்கிற வகையில் விஜய் சேதுபதிக்கும் வாகனத்திற்கும் ஏற்படும் நேசமும் புரிந்து கொள்ளக்கூடியது. அது போலவே பண்ணையார் கார் ஓட்டக் கற்றுக் கொண்டால் தன்னுடைய பணியை இழந்து அதன் மூலம் ஏற்படக்கூடிய பொருளாதார பாதுகாப்பற்ற மனநிலையோடு விஜய் சேதுபதி கவலைப்படுகிறாரா அல்லது காரைப் பிரிய நேர்கிற பாசத்தோடு கவலைப்படுகிறாரா என்பது தெளிவாக பதிவாகவில்லை.

இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய ஒரு படைப்பாளியாக தெரிகிறார். 'உனக்காக பிறந்தேனே எனதழகா' என்கிற பாடலில் கடந்த கால, எம்.எஸ்.வி பாணி மெல்லிசையின் சாயல்கள் அழுத்தமாக விழுந்து அந்தக் காலக் கட்டத்து இசையை மீள்நினைவு செய்வதாக அமைந்திருக்கிறது.

***

'ஆண்பாவம்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் பாண்டியராஜனுக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. படத்தின் துவக்க விழாவிற்கான அரைப்பக்கமும் முழுப்பக்கமுமான நிறைய விளம்பரங்களை அந்தக் காலக் கட்டத்தில் பத்திரிகைகளில் பார்த்த கவனமிருக்கிறது. அவற்றில் பல திரைப்படங்கள் பிறகு வெளிவரவேயில்லை. சிரமப்பட்டு அடைந்த நிலையை தக்க வைத்துக் கொள்ள கூடுதல் கவனமும் நிதானமும் தேவைப்படுகிறது. வருகின்ற எல்லா வாய்ப்பையும் ஏற்றுக் கொண்டு எதிலும் முழு கவனம் செலுத்த முடியாமல் சுயமாக படம் எடுத்து அதில் கடன்பட்டு பிறகு  'கோபாலா கோபாலா' மூலமாகத்தான் பாண்டியராஜன் மீண்டும் சற்று நிலை கொள்ள முடிந்தது. இதே போல் தொலைந்து போனவர்களில் ராமராஜனும் ஒருவர். விஜய் சேதுபதி இந்த முன்னோடிகளின் தவறுகளை நினைவில் வைத்துக் கொள்வது நல்லதென்று தோன்றுகிறது.

(காட்சிப் பிழை, மார்ச்  2014-ல் வெளியான கட்டுரை - நன்றி: காட்சிப் பிழை)   

suresh kannan

2 comments:

Anonymous said...

கமலின் மும்பை எக்ஸ்பிரசை பட்டி டிங்கரிங் பார்த்து ரிலீஸ் பண்ணப்பட்ட படம் தான் சூது கவ்வும்.ஆனால் இந்த தகவலை பற்றி எந்த உலக விமர்சகரும் அறச்சீற்றம் காட்டவில்லை என்பது புதிராக இருக்கே!

surya said...

good guidance to VS