Friday, April 18, 2014

ஓநாய்களின் தர்மம் - The Wolf of Wall Street




நடிகர் எம்.ஆர்.ராதாவின் வாழ்வில் நிகழ்ந்ததாக சொல்லப்படும் சம்பவம் ஒன்றுண்டு.  இதன் நம்பகத்தன்மை பற்றி தெரியவில்லை என்றாலும் சுவாரசியமானது. ஒரு முறை அவரது கார் மிக வேகமாக சென்று கொண்டிருந்ததாம். போக்குவரத்து காவலர் அதை நிறுத்தி 'ஏன் இத்தனை வேகமாக செல்கிறீர்கள்?' என கேள்வி எழுப்பினாராம். ராதா அவருக்கேயுரிய பிரத்யேக பாணியில் 'இன்னா மேன்.. நீ... வேகமா போறதுக்குதான்னே கார் இருக்கு. அதுக்குதான்னே... அதை கண்டுபிடிச்சிருக்கான். அதை நீ ஸ்டாப் பண்றியே.. அறிவில்லே.. நான்சென்ஸ்' என்றாராம். பொதுவாகவே கலகத்தன்மையோடு செயல்படுகிறவர்களைப் பற்றி உண்மையான தகவல்களோடு சுவாரசியமான பொய்களும் கூடவே கலந்து வரும். அப்படியொரு தகவல் இது. உண்மையா என தெரியவில்லை.

ராதா ஒருவேளை எழுப்பிய அந்தக் கேள்வி தார்மீக ரீதியாக அராஜகத்தன்மையுடையது என்று தோன்றினாலும்   தர்க்க ரீதியாக ஒருவகையில் அது சரியானது. விஞ்ஞான கண்டுபிடிப்புகளினால் ஏற்பட்ட தொடர்ந்த வளர்ச்சிகளின் மூலம் மனித குலம் காலத்தையும் தூரத்தையும் மிக வேகமாக இன்று கடக்க முடியும். முன்பு கால்நடையாக ஒருமணி நேரம் கடந்த தூரத்தை வாகனத்தின் தன்மைக்கும் வேகத்திற்கும் ஏற்ப இன்று சுமார் ஐந்து நிமிடத்தில் கடந்து விடலாம். வேகமே வாகனத்தின் அடையாளமும் நோக்கமும். அதற்காகவே அதிவேக வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தூரத்தை வேகமாக கடப்பதற்கே வாகனத்தை பயன்படுத்துகிறோம் எனும் போது வேகத்தை தடைப்படுத்தச் சொல்வது முறையா என்று ராதாவின் கேள்வியை ஒருவகையில் நியாயப்படுத்தலாம்.

மனித குலம் தோன்றி வளர்ந்து கூடிவாழக் கற்கத் துவங்கிய கற்காலத்தில் உடல் வலிமை கொண்டவனே அதிகபட்ச தேவையை அடைய முடியும். 'வலிமையுள்ளது எஞ்சும்' என்பதே அப்போதைய ஆதார விதி. மனிதன் சிந்திக்கத் துவங்கி, தன் விலங்குத் தன்மைகளை ஒழுங்குபடுத்தி  நாகரிக உலகை அமைக்க முயலும் போது அதற்கான விதிகளும் வழிமுறைகளும் உண்டாக்கப்பட்டன. மதம், திருமணம், குடும்பம், அரசு, காவல், சட்டம் போன்ற நிறுவனங்கள் உருவாகின. அறம், நேர்மை, கருணை, பணிவு போன்ற விழுமியங்கள் கற்பிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சிகளுள் ஒன்றுதான் போக்குவரத்து விதிகளும். வாகனம் வேகமாக செல்லக்கூடியதுதான் என்றாலும் மற்றவர்களுக்கும் உபயோகிப்போருக்குமே கூட ஆபத்தோ விபத்தோ ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான் இந்த விதியின் அடிப்படை. இந்த அடிப்படையில் ராதாவின் கேள்வி நியாயமற்றது, அந்த விதிகளுக்குப் புறம்பானது.

சராசரியான மனிதனின் நலத்தையும் செளகரியத்தையும் கருத்தில் கொண்டே மேற்குறிப்பிட்ட விழுமியங்களும் விதிகளும் உண்டாக்கப்பட்டன. ஆனால் ஒவ்வொரு சராசரியான மனிதனும் தான் உருவாக்கிய விதிகளை  வெளிப்படையாகவோ ரகசியமாகவோ தானே மீற விரும்புகிறான் என்பது ஒரு சுவாரசியமான முரண்நகை. சிவில் சமூகத்தின் ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் அந்த கற்கால மனிதன் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறான். இந்த விதிகளை உடைத்துக் கொண்டு சமூகத்தின் மீது போர் தொடுக்க எப்போதும் அவன் தயாராகவே இருக்கிறான். என்றாலும் நாகரிக சமூகம் பல்வேறு விதிமுறைகளை மாற்றியமைத்துக் கொண்டேயிருப்பதின் மூலமும் விழுமியங்களை ஆழ்மனதில் போதித்துக் கொண்டேயிருப்பதின் மூலமும் இந்தக் கற்கால மனிதனை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. இந்த மனிதனை உள்ளுக்குள் ரகசியமாக புதைத்து வைத்திருக்கும் பெரும்பான்மையினர் நாகரிக கனவான்களாகவும் வெளிப்படுத்தி அல்லது மறைக்க முயன்று மாட்டிக் கொள்ளும் சிறுபான்மையினர் குற்றவாளிகளாகவும் அறியப்படுகின்றனர்.  இந்தச் சிறுபான்மை சமூகம் பெருகாமலிருப்பதில்தான் நாகரிக சமூகத்தின் சமநிலையும் பாதுகாப்பும் பாதிக்கப்படாமலிருக்க முடியும்.

***

இப்படியொரு சிறுபான்மை சமூகத்தின் சுவாரசியமான பிரதிநிதிதான் ஜோர்டான் பெல்போர்ட். அமெரிக்க பங்குச் சந்தையில் மிகப்பெரிய மோசடிகளை நிகழ்த்தி பிறகு சிறைப்பட்டு விடுதலையாகி தற்போது ஊக்கமூட்டும் பேச்சாளராக இருக்கும் ஜோர்டானின் வாழ்க்கை பிரபல அமெரிக்க இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸியினால் திரைப்படமாகியிருக்கிறது. 'The Wolf of Wall Street' என்கிற ஜோர்டானின் தன்வரலாற்று நூல்தான் இத்திரைப்படத்திற்கு அடிப்படை.

பிறப்பால் யூதரான ஜோர்டானின் பெற்றோர் இருவருமே கணக்காளர்கள். அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடிக்கும் ஜோர்டானுக்கு பல் மருத்துவத்திற்கான வகுப்பில் ஆசிரியரின் உபதேசம். 'நீ அதிகம் பணம் சம்பாதிக்க விரும்பினால் உன் இடம் இதுவல்ல'. பிரபலமான பங்குச் சந்தை நிறுவனமொன்றில் பணிபுரியத் துவங்கி அதன் நுணுக்கங்களையும் முறைகேடுகளையும் ஓட்டைகளையும் கற்றுத் தேர்ந்து சான்றிதழ் பெற்ற ஒரு தரகராக தன் தொழிலைத் துவங்கும் ஜோர்டானுக்கு  முதல் நாளே மோசமானதாக இருக்கிறது. பங்குச் சந்தை உலகில் மிகப் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்திய நாளான அக்டோபர்,19, 1987, 'கறுப்புத் திங்கள்' என்று அழைக்கப்படுகிறது.  அதன் காரணமாக பணியை இழந்து சோர்வுறும் ஜோர்டான் தன் தொழிலையே மாற்றிக் கொள்ள முடிவு செய்யும் போது அவனுடைய மனைவி ஊக்கப்படுத்தி சிறுநிறுவனங்களின் பங்குகளை விற்கும் நிறுவனத்தில் சேரச் சொல்கிறார். பெரு நிறுவனங்களின் பங்குகளை வாங்க முடியாத நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களிடம் தன்னுடைய விற்பனை சாதுர்யத்தினால் அவர்களின் கனவுகளையும் ஆசைகளையும் ஊதிப்பெருக்கி தவறாக வழிநடத்தி முறைகேடான வழியில் அதிகம் சம்பாதிக்கத் துவங்குகிறார் ஜோர்டான்.

பிறகு தன் சொந்த நிறுவனத்தைத் துவங்கி பங்குச் சந்தை குறித்து எவ்வித அனுபவமும் அல்லாத ஆனால் விற்பனையில் ஆர்வமுள்ள சாதாரண மனிதர்களை இணைத்துக் கொண்டு தன்னுடைய சாதுர்யங்களை மெல்ல அவர்களுக்குப் புகட்டி நிறுவனத்தை அசுர வேகத்தில் வளரச் செய்கிறார். தன்னுடைய குருவிடமிருந்து கற்றுக் கொண்டதின் படி கடுமையான பணியிலிருந்து இளைப்பாறுவதற்காக தான் ஈடுபடும் போதைப் பழக்கத்தையும் பாலியல் சுகத்தையும் தன்னுடைய பணியாளர்களுக்கும் விஸ்தரிக்கிறார். அதிகமான பணம், போதை மற்றும் செக்ஸ். எல்லாமே அதிகம். இளைஞர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிவதற்காக அலைமோதுகின்றனர். அவரது அலுவலகமே பணவெறியும் காமவெறியும்  பிடித்த மனநோயாளர்களின் விடுதி போலவே இயங்குகிறது. எவ்வித மென்உணர்வுகளுக்கும் இடம்தராமல் பணம் ஒன்றே குறியாக தொடர்ந்து கடுமையாக பணிபுரிந்து கொண்டேயிருப்பவர்கள்தான் அங்கு தாக்குப் பிடிக்க முடியும். எனவே நிறுவனத்திற்கு பல்வேறு முறைகேடுகளின் மூலமாக பணம் வெள்ளமாகப் பாய்கிறது. பங்குச் சந்தையுலகில் இந்த நிறுவனம் அதிகம் கவனிக்கப்படுவதாக மாறுகிறது. இதனால் FBI  இந்நிறுவனத்தின் நடவடிக்கைளை கண்காணிக்கத் துவங்குகிறது.

ராஜ வாழ்க்கை என்று சொல்வார்களே .. அதை வாழ்கிறார் ஜோர்டான். அரண்மனை மாதிரியான வீடு, கார், சொகுசுக் கப்பல். மனைவியை விட்டு விட்டு மாடல் அழகியுடன் திருமணம். போதை, செக்ஸ், மீண்டும் போதை, அதைவிடவும் அதிக போதையை தரும் பணம். அதைப் பதுக்குவதற்காக செய்யும் தகிடுதத்தங்கள். இப்படியாக பரமபத ஏணியில் நேரடியாக உயர்த்திற்கு ஏறும் அவரது கிராஃப் ஒரு மங்கலமான நன்னாளில் சட்டம் எனும் பாம்பின் வழியாக அதே வேகத்தில் கீழே இறங்குகிறது. அவரது முறைகேடுகள் விசாரிக்கப்படுகின்றன. தன்னைப் பாதுகாக்க சகலரையும் காட்டிக் கொடுக்கிறார். முறைகேடாக ஈட்டிய செல்வத்தின் பெரும்பகுதியை இழக்க நேர்கிறது அவரிடம் மிச்சமிருப்பது அறிவு மாத்திரமே. விற்பனைத் தந்திரங்களும். அதைக் கொண்டு சுயமுன்னேற்ற பேச்சாளராகிறார் ஜோர்டான் பெல்போர்ட். அதுதான் அவரது இப்போதைய வாழ்க்கை.

பங்குச் சந்தையின் 'கறுப்புத்தின திங்கள்' நாளின் துவக்கத்தைப் போலவே வெகுவேகமாக வளர்ந்த ஜோர்டானின் வெற்றியும் அசுர வேக இறக்கத்துடன் அமைந்தது ஒரு முரண்நகை.

***

மார்ட்டின் ஸ்கார்செஸியின் முந்தைய திரைப்படங்களை அறிந்தவர்களுக்கு அவரது திரைப்படங்களின் உள்ளடக்கத்தையும் உத்திகளையும்  அவை இயங்கும் விதத்தையும் பற்றி தெரிந்திருக்கும். நிழல்உலக மனிதர்களின் வாழ்வியலையும் குற்றவுலகின் வன்முறைக் குரூரத்தையும் மிக யதார்த்தமாகவும் கலைத்தன்மையுடனும் தன் படைப்புகளில் கையாண்டவர் ஸ்கோர்செஸி. சுருங்கக் கூறின் வன்முறையின் அழகியலை அதன் உளவியல் பின்னணியோடு தன் பெரும்பாலான திரைப்படங்களில் அற்புதமாக கையாண்டவர் ஸ்கார்செஸி. மென்னுணர்வுகளை சித்தரிப்பதும் அறவுணர்ச்சிகளைப் போதிப்பதுமே சிறந்த கலை என்றாகி விடாது. சூழல்களினால் குற்றவாளிகளாக நேரும் மனிதர்களையும் உள்ளடக்கியதுதான் இச்சமூகம். அவர்களின் உலகம் நீதியுணர்ச்சியுடன் புறக்கணிக்கப்பட வேண்டியதல்ல. கருணையுணர்ச்சியுடன் ஆராயப்பட வேண்டியது. குற்றங்களின் ஊற்றுக்கண்களின் மீதும் அதன் இருண்மைகளின் மீதும் வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டியது கலையின் கடமை. ஸ்கார்செஸியின் திரைப்படங்கள் மிகுந்த வன்முறையையும் குரூரத்தையும் கொண்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டுண்டு. ஆனால் ஒரு திரைப்படத்தின் மையம் எதை நோக்கி இயங்குகிறது என்பதையும் நுண்ணுணர்வு கொண்ட ஒரு பார்வையாளனுக்கு அது எதை உணர்த்துகிறது என்பதையும்  கொண்டே அத்திரைப்படத்தின் மீதான மதிப்பீடும் பார்வையும் அமைய வேண்டும்.

உதாரணத்திற்கு நம்மூர் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய 'குரு' திரைப்படத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏறக்குறைய அதன் திரைக்கதை ஜோர்டானின் சுயசரிதத்திற்கு ஒப்பானது. தொழிலதிபர் அம்பானியின் வாழ்க்கை. ஸ்கார்செஸிக்கும் மணிரத்னத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் 'குரு' திரைப்படத்தில் அம்பானியை ஒரு ஹீரோ போலவே சித்தரித்திருப்பார் மணிரத்னம். பழமையான இந்தியாவின் தேவையில்லாத கட்டுப்பெட்டியான சட்டதிட்டங்களை உதைத்துக் கொண்டு முன்னேறிய ஒரு கடுமையான உழைப்பாளியின் கதை என்பது போலவே அதன் திரைக்கதை அமைந்திருக்கும். அதன் நாயகன் 'மய்யா மய்யா' என்று அரைகுறை ஆடையுடன் நடனமாடும் ஒரு நங்கையை வேடிக்கை பார்த்தாலும் தன் மனைவியை மாத்திரமே நேசிக்கும் 'ராமனாக' இருப்பான். தொழில்சார்ந்து அவன் ஆயிரம் முறைகேடுகளை செய்திருந்தாலும் "உங்க ஷேர்களை வித்துத்தான் என் மூணு பொண்ணுங்களுக்கு கல்யாணம் செஞ்சேன்' என்று கண்கலங்கும் பக்தர்களைப் பெற்றிருக்கும் கடவுளின் சித்திரமாக இருப்பான். தனது முறைகேடுகளை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளரை ஆள் வைத்து தாக்காமல் கருணையுடன் அணுகும் கனவானாக இருப்பான். ஒவ்வொருமே அம்பானியாக மாறினால் இந்தியா வல்லரசாகி விடும் என்கிற முதலாளித்துவக் கனவை ஒவ்வொரு பார்வையாளனுக்கும் விதைக்கும்  பேராசையே அத்திரைப்படத்தின் நீதியாக இருக்கும். இந்த முதலாளித்துவ ஆலமரங்களின் கீழ் தங்களின் உழைப்பெல்லாம் உறிஞ்சப்பட்டு சக்கையாகி விழுந்து மடியும் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பற்றி ஒரு கரிசனமும் இருக்காது. இதுவே மணிரத்னத்தின் பார்வை.

ஸ்கார்செஸியின் திரைப்படத்தில் நாயகனின் பிம்பத்தை நேர்மையானவனாக கட்டியெழுப்பும் சாகசங்களோ  தீமையின் மழுப்பல்களோ அறவுணர்வை நேரடியாகப் போதிக்கும் அசட்டுத்தனங்களோ இருக்காது. அவரது திரைப்படத்தின் நாயகன் கடுமையான அயோக்கியன் என்றால் அவனது அயோக்கியத்தனங்கள் ஏறக்குறைய அப்படியே நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அதன் குரூரத்தோடு பதிவாகியிருக்கும். ஒன்று அவனை கடுமையாக வெறுப்பீர்கள் அல்லது விரும்பத் துவங்கி விடுவீர்கள். பொதுவாக நம்மூர் இயக்குநர்களின் அந்திமக் காலத் திரைப்படங்கள், எல்லாப் புதுமைகளையும் கலைத்திறனையும் இழந்து காலி பெருங்காய டப்பா போல வெறும் சக்கையாகவே உருவாகும். ஆனால் சுமார் 87 வயதாகும் ஸ்கார்செஸியின் 'The Wolf of Wall Street'  திரைப்படம் அவரது முந்தைய திரைப்படங்களை விடவும் அதியிளமையாக சிறப்பானதாக அமைந்துள்ளது என்பதே அவருடைய மேதமைக்குச் சான்றாக இருக்கிறது.

ஸ்கார்செஸியின் நெருங்கிய நண்பரான நடிகர் ராபாட் டி நிரோ அதிகபட்சமாக அவரது ஏழு படங்களில் நாயகனாக நடித்துள்ளார். அதற்குப் பிறகு லியோனார்டோ டிகாப்ரியோவுடனான கூட்டணி. ஐந்து படங்கள். ஜோர்டான் பெல்போர்ட்டாக டிகாப்ரியோ சிறப்பாக நடித்திருக்கிறார் என்றால் அதுதான் இந்த வருடத்தின் மிகப் பெரிய குறைமதிப்பு வாக்கியமாக இருக்கும். 'ஜோர்டான் பெல்போர்ட்டா' டாகவே வாழந்திருக்கிறார் என்றால் அதுவும் சம்பிதாயமான தேய்வழக்கு பாராட்டாக இருக்கும். மிகச் சிறப்பான பங்களிப்பின் மூலம் சொற்களினால் விளக்க முடியாத அத்தகையதொரு நியாயத்தை தனது பாத்திரத்திற்கு வழங்கியிருக்கிறார் டிகாப்ரியோ. . இதற்கு முழு முதற்காரணம் ஸ்கார்செஸி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனவேதான் டிகாப்ரியோ, கடுமையான போட்டிக்கு இடையே பெல்போர்ட்டின் சுயசரிதத்தை படமாக்கும் உரிமையைப் பெற்று அதை இயக்க ஸ்கார்செஸியை வேண்டுகிறார். எனவேதான் அகாதமி விருதின் சிறந்த நடிகருக்கான பரிந்துரைப்பட்டியலில் இவரின் பெயர் பெரியதொரு எதிர்பார்ப்புடன் இருந்தது.  இதுவரை சிறந்த நடிகருக்கான அகாதமி விருதை பெறாத டிகாப்ரியோவிற்கு இந்த வருடமும்  அதிர்ஷ்டம் அடிக்கவில்லை என்பது ஒரு சோகமான விஷயம்தான்.

டிகாப்ரியோவின் சிறந்த நடிப்பிற்கு உதாரணமாக ஒரு காட்சியை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜோர்டான், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காக செய்யப்படும் பரிமாற்றங்களில் பெருந்தொகையொன்று காவல்துறையிடம் சிக்கிவிடும்.அவரது வீடு முழுக்க காவல்துறையால் ஒட்டுகேட்கப்பட்டுக் கொண்டிருக்கும். இந்த தகவல்களையெல்லாம் அறியாத ஜோர்டான் தன் கூட்டாளி நண்பருடன் இணைந்து  மனஅமைதிக்காக உட்கொள்ளப்படும் அதிவீர்யமுள்ள மருந்தை சாப்பிட்டுக் கொண்டிருப்பார். முதல் மாத்திரையில் எவ்வித எதிர்வினையும் தெரியாமல் போகவே மேலதிக மருந்தை உட்கொண்டு அமர்ந்திருப்பார். அந்த நேரத்தில் அவரது தனிப்பட்ட ஆலோசகர் தொலைபேசியில் அழைத்து அவரை உடனே வெளியே வந்து பொதுதொலைபேசியில் இருந்து அழைக்கச் சொல்வார். (முட்டாள்.. எதுவும் பேசாதே..உன் வீட்டை FBI கண்காணித்துக் கொண்டிருக்கிறது)  ஜோர்டான் அது போலவே வெளியே வந்து பொது தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது அதிகமாக உட்கொண்ட மருந்து பணியாற்றத் துவங்கி வாய் குழறி உடல் செயலிழந்து ஏறக்குறைய பக்கவாத நிலைக்குச் சென்று விடுவார்.

இப்போது அவர் தனது காரில் சிறிது தூரமுள்ள தன் வீ்ட்டிற்கு  திரும்பிச் சென்றாக வேண்டும். படிக்கட்டுகளில் உருண்டு எழுந்து எப்படியோ காரை அடைந்த பிறகு இன்னொரு சோதனை காத்திருக்கும். அதே மருந்து மயக்கத்திலிருக்கும் அவரது கூட்டாளி நண்பர் சுவிஸ் வங்கி நபரிடம் போனில் ஏதோ பேசி ரகளை கொண்டிருக்கிறார் என்கிற தகவல் அவரது மனைவியிடமிருந்து வரும். 'அவனை நிறுத்து' என்ற  இவர் உளறுவது அவரது மனைவிக்குப் புரியாது. எனவே ஜோர்டான் இப்போது எப்படியாவது  விரைந்து சென்று அவரது தொலைபேசி நண்பரை தடுத்து நிறுத்த வேண்டும்.

சுமார் 15 நிமிடங்கள் வரும் இந்த காட்சிக்கோர்வை ரகளையாக இருக்கும்.  பொது தொலைபேசியில் உளறத் துவங்குவது வரை காரில் சென்று தனது நண்பரை தடுத்து நிறுத்தும் காட்சிகள் வரை டிகாப்ரியோ செய்யும் ரகளைகளையும் அற்புதமான நடிப்பையும் படத்தில் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கிடையில் இந்தப் பகுதியிலான திரைக்கதையில் ஸ்கார்செஸி செய்து வைத்திருக்கும் அற்புதத்தையும் சொல்லாமல் இந்த விவரிப்பு  முழுமையுறாது. வாய்ஸ்ஓவரில் விவரிக்கப்படும் (ஸ்கார்செஸியின் வழக்கமான உத்தி இது) இந்தக் காட்சியில் ஜோர்டான் மருந்தின் மயக்கத்தில் இருந்தாலும் தனது காரை ஒரு கீறலும் அல்லாமல் பத்திரமாக எடுத்து வந்து விட்டதாக சொல்லுவான். அதற்கேற்ப வாகனமும் பளபளப்பாக சேதமில்லாமல் காட்டப்படும்.

ஆனால் மறுநாள் காலையில் காவல்துறையினர் வந்து அழைக்கும் போது 'என்ன தவறு செய்தேன்' என்று அவனுக்குப் புரியாது. வீட்டிற்கு வெளியே அவனை அழைத்து வந்து காட்டுவார்கள். கார் அப்பளமாக நொறுங்கி நசுங்கி சிதைந்திருக்கும். இப்போது ஜோர்டான் வீட்டிற்குத் திரும்பிய வழியில் உள்ள எல்லா வாகனத்தையும் இடித்துத் தள்ளி விட்டு வரும் முந்தைய காட்சிகள் காட்டப்படும். திரைக்கதையை எத்தனை சுவாரசியமாக உருவாக்குவது, காட்சிப்படுத்துவது, எடிட்டிங்கினால் மெருகேற்றுவது என்பதற்கான உதாரண காட்சிக் கோர்வையிது.

***

ஒரு பணமோசடி நாயகனின் வாழ்க்கையை ஏன் திரைப்படமாக்க வேண்டும்? பணமும் செக்ஸூம் போதையுமாய் வாழ்ந்த ஒருவனை என்னதான் சிறப்பாய் காட்சிப்படுத்தியிருந்தாலும் அதன் மூலம் ஸ்கார்செஸியை சிறந்த இயக்குநராக ஏற்றுக் கொள்ள முடியுமா என்கிற கேள்விகள் தோன்றலாம். ஏற்கெனவே குறிப்பிட்டபடி சமூகத்தின் இருண்மையான பகுதிகளும் மனிதர்களும் அந்த எதிர்மறையான காரணங்களுக்காகவே புறக்கணிக்கப்பட தேவையில்லாதவர்கள். அவர்களும் இணைந்ததுதான் இச்சமூகம். இம்மாதிரியான விளிம்புநிலை மனிதர்களை பற்றி உரையாட,அவர்களின் கோணங்களை கரிசனத்தோடு ஆராய, பதிவாக்க சில கலைஞர்கள்தான் முயல்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இயக்குநர் ஸ்கார்செஸி.

ஜோர்டானுக்கு சிறுவயதிலிருந்தே பணம் சேர்க்கும் ஆவலிருக்கிறது. முட்டி மோதியாவது சமூகத்தின் உயர்ந்த நிலையை அடைய ஆசைப்படுகிறான். அதற்காக கடுமையாக உழைக்கிறான். இம்மாதிரியானவர்களுக்கு அவர்கள் அடையும் வெற்றி மாத்திரம்தான் கண்ணில் தெரியும். சமூகத்தில் பின்தங்கியிருக்கும் மக்கள், அவர்களின் வறுமை, அதற்கான சமூகக் காரணங்கள், அதன் அரசியல், தனிநபரின் தார்மீக பொறுப்பு  போன்ற மனச்சாட்சியை உறுத்தும் விஷயங்களெல்லாம் அவர்களின் பிரக்ஞையிலேயே இருக்காது. வேகமாக ஓடத் தெரிந்த, அதிவேகமாக மரம் ஏறித் தெரிந்தவன் அதிக கனிகளை சொந்தமாக்கிக் கொள்ளும் கற்கால மனிதனின் களிப்பே அவர்களுக்கு முக்கியம். மரம் ஏறத் தெரியவாதவர்கள் பற்றியோ மரத்தில் ஏற முடியாமல் ஊனமடைந்திருப்பவர்கள் பற்றியோ அவர்களுக்கு கவலை கிடையாது. எவனால் எடுத்துக் கொள்ள முடிகிறதோ எடுத்துக் கொள்ளுங்கள், என்னால் அதிகம் எடுத்துக் கொள்ள முடிகிறது, இயலாத நீங்கள் ஏன் அதைக் கண்டு பொறாமை கொள்கிறீர்கள், எரிச்சலடைகிறீர்கள், தடை செய்கிறீர்கள் என்பதுதான் இவர்களின் எண்ணமாக இருக்கும். இதற்காக குறுக்கே நிற்கும் எதையும் தாண்டிச் செல்லும் திறமையையும் வலிமையையும் சாதுர்யத்தையும் இவர்கள் பெற்றிருப்பார்கள்.

குறுகிய காலத்தில் அதிக பணத்தைச் சம்பாதிக்க ஜோர்டானுக்கு முன்னாலிருக்கும் வழிகளுள் ஒன்று பங்குச்சந்தை. இயல்பாகவே விற்பனைக் கலையில் சிறந்த அவன், அதிலுள்ள குறுக்கு வழிகளை மற்றவர்களை விட திறமையாக பயன்படுத்தி சம்பாதிக்கிறான், அனுபவிக்கிறான். யோசித்துப் பாருங்கள். அவன் யாரிடமும் வழிப்பறி செய்வதில்லை. திருடவில்லை. பத்து ரூபாயாக போடப்படும் முதலீடு ஆயிரம் ரூபாயாக திரும்பி விடாதா என்கிற பேராசையுடன் பங்குச் சந்தை எனும் சூதாட்டத்தில் விளையாட வருபவர்களைத்தான் அவன் ஏமாற்றுகிறான். இப்படிச் சேர்த்ததை யாருக்குள் பங்களிக்காமல் பாதுகாக்க நினைக்கிறான். அவனுடைய வணிகத்தில் நோக்கில் இதுவே தர்மம். ஏமாற்றப்படுவர்களின் நோக்கில் இந்த தர்மம் வேறு நோக்கில் தெரியலாம். இப்படிப் பார்த்தால் அனைத்துமே தர்மமும் அதர்முமமாக ஆகிறது.

எனில் இவ்வுலகத்தில் அறத்திற்கும் நீதிக்கும் நேர்மைக்கும் மதிப்பே இல்லையா? சிறந்த கலைஞனுக்கென்று சமூகப் பொறுப்போ தார்மீக நியாயவுணர்ச்சியோ இருக்கத் தேவையில்லையா என்கிற கேள்வி எழலாம். படத்தின் இறுதியில் தோன்றும் சிறு காட்சிக் கோர்வையில் அனைத்திற்குமான விடையை ஸ்கார்செஸி வைத்திருக்கிறார்.

ஜோர்டானின் பங்கு வியாபார நிறுவனம் முறைகேடுகளில் ஈடுபடுவதாக செய்திகள் கசியும் ஆரம்பக் காலத்திலிருந்து அதை FBI அதிகாரியொருவர் கண்காணித்து வருவார். இந்த ரகசிய தகவலை ஆலோசகர் ஒருவர் ஜோர்டானிடம் சொல்லி எச்சரிப்பார். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் FBI அதிகாரியிடம் இது குறித்து பேரம் பேச வேண்டாம் என்றும் எச்சரிப்பார். ஆனால் ஜோர்டான் தன்னிடமுள்ள விவாத சாதுர்யத்தின் மீதுள்ள தன்னம்பிக்கையினால் FBI அதிகாரியை பேச்சு வார்த்தைக்கு அழைத்து பணம், பெண்கள் ஆகியவற்றின் மூலம் வலை வீச முயல்வார். ஆனால் அந்த FBI அதிகாரி இதற்கெல்லாம் மசியாமல் தொடர்ந்து நிகழ்த்தும் விசாரணைகள் மூலம் ஜோர்டான் கைதாகி, அவருடைய பணத்தையெல்லாம் திரும்பத் தருவதற்கும் கூட்டாளிகள் பற்றியும் ரகசிய பணப்பரிமாற்றங்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கும் ஜோர்டானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைப்பதற்கும் காரணமாக இருப்பார்.

ஜோர்டானின் கைதுச் செய்தியை பத்திரிகையில் வாசித்தபடி அந்த FBI அதிகாரி ஒரு மின்வண்டியில் பயணம் செய்வதாக இறுதியில் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அவருக்கு எதிரே நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு வயதான ஜப்பானிய தம்பதியை சாவகாசமாய் அவர் பார்த்துக் கொண்டிருப்பதோடு அந்தக் காட்சி முடியும். அந்த FBI அதிகாரி நினைத்திருந்தால் ஜோர்டானிடம் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொண்டு விலையுயர்ந்த காரில் பயணித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் உழைப்பிற்கு பெயர் போன அந்த ஜப்பான் தேசத்து வயதான தம்பதியினரைப் போல் நிம்மதியாய் உறங்க முடியாது. மனஉளைச்சலுடனும் குற்றவுணர்வுடன்தான் காலந்தள்ள வேண்டியிருக்கும். அறத்திற்கான, நேர்மைக்கான மதிப்பு படத்தின் இறுதியில் தோன்றும் இந்தக் காட்சியில் மறைமுகமாக ஆனால் அழுத்தமாக வெளிப்படுகிறது. இதுவே ஸ்கார்செஸி சொல்ல முயன்ற நீதியாக இருக்கும்.

அம்பானியை நாயகனாக முன்நிறுத்தும் மணிரத்னமும் FBI அதிகாரியின் நேர்மையின் மூலமாக மறைமுக நீதி சொல்லும் ஸ்கார்செஸியும் மாறுபடும் முக்கியமான புள்ளி இதுவே.
  
- உயிர்மை - ஏப்ரல் 2014-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)
     
suresh kannan

4 comments:

Vadakkupatti Raamsami said...

அற்புதமான விமர்சனம்.குறிப்பாக சிறந்த நடிப்பிற்கு காட்சிகள் மூலம் நீங்கள் தந்த விளக்கம் அருமை.ஸ்கார்சீஸ் Cape Fear படத்தை டி நிரோ கொண்டு ரீமேக் செய்தார்.பழைய கேப் ஃபியர் படத்தில் இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்ற polarization தெளிவாக வரையறுக்கபட்டிருக்கும்.ஆனால் இந்த ரீமேக்கில் அந்த வரையறைக்கான கோடுகளை ஸ்கார்சீஸ் அழித்திருப்பார்.உதாரணமாக இந்தப்படத்தில் சேமின் மகள் டேனியேல் கதாபாத்திரம் ஒரிஜினல் படத்தில் எந்தவித தவறுக்கும் உட்படுத்த முடியாத ஒரு சிறுமியாக காட்டியிருப்பதை இந்த ரீமேக்கில் எந்த ஒரு தவறையும் ஒருமுறை செய்து பார்த்தால் தான் என்ன?என்னும் சிறு ஆவல் கொண்ட ஒரு பதின்ம வயது சிறுமியாக காட்டியிருப்பார்.அதாவது சுத்த நல்லவன் சுத்த கெட்டவன் என்று யாரும் இல்லை.சந்தர்ப்பம் கிடைக்காதவரை நல்லவனாக இருப்பவர்கள் பல கோடி பேர் இவ்வுலகில் உண்டு.இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை.ஆனால் நன்றாக இருக்கும் என்பது உங்கள் விமர்சனம் மூலம் தெரிகிறது.நன்றி.

Anonymous said...

***ஆனால் சுமார் 87 வயதாகும் ஸ்கார்செஸியின்*** சார் ஸ்கார்செஸியின் வயது 71 தான் - (http://en.wikipedia.org/wiki/Martin_Scorsese)

உங்களுள் ஒருவன் said...

super... nalla vimarsanam panni irukinga.... kitta thita nanum intha padam parkkum pothu ithutan thonriyathu...

சிந்திப்பவன். said...

சுரேஷ்,
சிலரின் எழுத்துக்கள் படிப்பவரை மகிழ்விக்கும்
சிலரின் எழுத்துக்கள் படிப்பவரை சிந்திக்கவைக்கும்
சிலரின் எழுத்துக்கள் படிப்பவரை பெருமைபடுத்தும்.
ஆனால் உங்கள் எழுத்துக்கள்...
படிப்பவரை,மகிழ்வித்து,சிந்திக்க வைத்து,பெருமைபடுத்துகின்றன.
வாழ்த்துக்கள்.