“அடப்பாவி.. என் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுட்டியே.. படத்துல வசனமே இல்லை…. அங்க ஒண்ணு.. இங்க ஒண்ணுதான் வசனம் வருது. படமா எடுத்திருக்கே படம்!”
‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மகேந்திரனை ஏசிய உரையாடல் இது. இளைராஜாவின் இசைக்கோர்ப்பு சேர்க்கப்படுவதற்கு முந்தைய வடிவத்தைப் பார்த்த தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். ‘தங்கப்பதக்கம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களின் மூலம் நல்ல வசனகர்த்தாவாக அறியப்பட்டவர் மகேந்திரன். அவர் இயக்கிய முதல் திரைப்படத்தில் ‘அனல் பறக்கும் உணர்ச்சிகரமான வசனங்கள் நிரம்பி வழியும். அண்ணன் –தங்கை கதை வேறு. நல்ல வசூலை அள்ளி விடலாம்” என்ற ஆசையுடன் வந்திருந்த தயாரிப்பாளர் ஏமாற்றம் அடைந்தது இயல்புதான். ஆனால் முதல் சில வாரத்திற்குப் பிறகு பார்வையாளர்களின் வாய்மொழி பரவியதால் தொடர்ந்து பல வாரங்களுக்குப் பிறகு வெற்றியையும் வசூலையும் வாரிக்குவித்தது ‘முள்ளும் மலரும்’.
இந்த வெற்றிக்குப் பிறகு, உணர்ச்சிவசப்பட்டு முன்னர் ஏசிய தயாரிப்பாளரே ‘மகேந்திரா.. என்னை மன்னிச்சிருப்பா.. இந்தா பிளாங்க் செக். எவ்வளவு வேணுமின்னாலும் ஃபில்லப் பண்ணிக்க’ என்று தழுதழுத்ததை மகேந்திரன் அன்புடன் மறுத்திருக்கிறார்.
பல வருடங்களுக்குப் பிறகு ஒரு திரைவிழா மேடையில் இயக்குநர் பாலச்சந்தர், ரஜினிகாந்த்தை நேர்காணல் செய்த போது ‘நீ நடித்ததில் பிடித்த திரைப்படம் எது?, பிடித்த இயக்குநர் யார்’ என்று கேட்டார். “பிடித்த திரைப்படம் - முள்ளும் மலரும்’, பிடித்த இயக்குநர் ‘மகேந்திரன்” என்று தன்னை அறிமுகம் செய்த இயக்குநர் பாலச்சந்திரிடமே நேர்மையாக பதில் சொன்னார் ரஜினி. அந்த அளவிற்கு ரஜினியிடம் இருந்த பிரத்யேகமான நடிப்புத்திறனை வெளிப்படுத்திய முதல் திரைப்படம் ‘முள்ளும் மலரும்’.
வசனங்கள், பாடல்கள், மிகையுணர்ச்சி போன்ற தேய்வழக்குகளால் நிரம்பியிருந்த தமிழ் சினிமாவின் மீது ஒவ்வாமையும் கடுமையான விமர்சனங்களும் கொண்டிருந்த மகேந்திரன், பின்னாளில் அதே வகையான சினிமாக்களில் ஒரு வசனகர்த்தாவாக மாற நேர்ந்தது சுவாரசியமான நகைமுரண்.
**
1939-ல் பிறந்த, ஜான் அலெக்சாண்டர் என்னும் இயற்பெயர் கொண்ட அந்த இளைஞன், இளம் வயதில் தன்னிடமிருந்த தாழ்வு மனப்பான்மையைக் கடந்து வர விடாமுயற்சியுடன் பயிற்சி பெற்று கல்லூரி ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கினார். இதே துறையில் ‘ஃபிளையிங் மகேந்திரன்’ என்ற பட்டப்பெயருடன் புகழ்பெற்றிருந்த சீனியர் மாணவரின் மீதுள்ள ஆதர்சம் காரணமாக தன் பெயரை ‘மகேந்திரன்’ என்று மாற்றிக் கொண்டார். இந்தப் பெயரே கடைசி வரை மகேந்திரனின் அடையாளமாக மாறியது.
அனைத்து சராசரி இளைஞர்களையும் போல அந்தக் காலக்கட்டத்தின் தமிழ் சினிமாக்களை ரசித்துக் கொண்டிருந்த மகேந்திரனை, அவரது மாமா ஆங்கிலத் திரைப்படங்களுக்கு அழைத்துச் சென்றார். அந்தத் திரைப்படங்களில் இருந்த கச்சிதம், செய்நேர்த்தி, மிகையற்ற தன்மை போன்ற அம்சங்கள் மகேந்திரனை பெரிதும் கவர்ந்தன. அதற்கு மாறாக தமிழ் சினிமாக்களில் நிறைந்திருந்த பாடல்கள், வசனங்கள், மிகையுணர்ச்சி போன்ற பல செயற்கையான விஷயங்கள் கேள்விகளை எழுப்பின. தமிழ் சினிமாவின் அபத்தங்களைக் குறித்து பல ஆவேசமான விமர்சனங்களை தனக்குள் எழுப்பிக் கொண்டார் மகேந்திரன்.
எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’ வெளியாகி பிரம்மாண்ட வெற்றியடைந்து பல இடங்களில் பாராட்டுக்கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அது. மகேந்திரன் கல்லூரி மாணவராக இருந்த, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும் எம்.ஜி.ஆருக்காக ஒரு பாராட்டுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மூன்று மாணவர்களில் மகேந்திரனும் ஒருவர். அவருக்குத் தரப்பட்டிருந்த தலைப்பு ‘தமிழ் சினிமா’. ‘சில வார்த்தைகளாவது பேச மாட்டாரா?” என்று எம்.ஜி.ஆருக்காக ஆவலாக காத்திருந்த மாணவர் கூட்டம் பலத்த கூச்சலை எழுப்பியது. இதனால் இதர இரண்டு மாணவர்களும் பயந்து தடுமாறி ஓடிப் போயினர்.
மகேந்திரன் சமயோசிதமாக ஒரு காரியம் செய்தார். கல்லூரியில் இருந்த ஒரு காதல் ஜோடிக்கு நிர்வாகம் அப்போது தண்டனை கொடுத்திருந்தது. சட்டென்று தன் பேச்சின் துவக்க விஷயமாக அதை மாற்றிக் கொண்டார். “நிஜத்தில் காதல் செய்தால் தண்டிக்கிறார்கள். ஆனால் பாருங்கள்.. இதோ அமர்ந்திருக்கிறாரே..எம்.ஜி.ஆர்… இவர் திரைப்படங்களில் விதம் விதமாக காதல் செய்கிறார். கைத்தட்டி ரசிக்கிறார்கள்” என்று தன் பேச்சைத் துவங்க ஒரே கணத்தில் மகேந்திரனுக்கு ஆதரவாக கூட்டம் மாறுகிறது.
பிறகு தன் பேச்சைத் தொடர்ந்த மகேந்திரன், தமிழ் சினிமாவில் நிறைந்திருந்த அபத்தங்களை ஆவேசத்துடன் பட்டியலிட கூட்டம் ஆரவாரமான வரவேற்பு அளித்தது. இதைக் கவனித்த எம்.ஜி.ஆர் மேலும் பேசும்படி சைகையால் ஊக்கம் அளித்தார். பதினைந்து நிமிடங்களுக்கு மட்டுமே பேச வேண்டியிருந்த மகேந்திரன், ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசி தமிழ் சினிமாவின் மீது தன்னிடமிருந்த ஆதங்கங்களை அருவியாக கொட்டித் தீர்த்தார்.
எம்.ஜி.ஆர் நினைத்திருந்தால், தமிழ் சினிமாக்களின் மீதும் தன் மீதும் வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களையொட்டி மகேந்திரனின் பேச்சை நிறுத்தச் சொல்லியிருக்கலாம். மாறாக ஊக்கப்படுத்தியது அவரது பெருந்தன்மையை மட்டுமல்ல, அவருக்கும் அவ்விதமான விமர்சனங்கள் மீது உடன்பாடுண்டு என்பதைக் காட்டுகிறது. ‘நன்றாகப் பேசினீர்கள்’ என்று மகேந்திரனை மனமார பாராட்டுகிற எம்.ஜி.ஆர், தன் கைப்பட எழுதிய ஒரு வாழ்த்துக் கடிதத்தையும் அளித்து விட்டுச் செல்கிறார்.
மகேந்திரனின் திரைப்பட நுழைவிற்கு பிறகு எம்.ஜி.ஆரே அடிப்படையான காரணமாக இருந்தார். இந்த நன்றியை கடைசி வரையிலும் மகேந்திரன் மறக்கவில்லை. இவருக்குள் இருந்த திறமையை எம்.ஜி.ஆர் அப்போதே கண்டுகொண்டார். ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்திற்காக மகேந்திரன் தேசிய விருது பெற்ற போது ‘என் கணிப்பை உண்மையாக்கி விட்டாய். மகிழ்ச்சி” என்று மகேந்திரனை உளமாறப் பாராட்டியிருக்கிறார்.
கல்லூரி வாசம் முடிந்து சட்டம் படிப்பதற்காக சென்னை வந்த மகேந்திரன், அதைத் தொடர இயலாத நிலையில் ஊருக்குத் திரும்ப முடிவு செய்கிறார். அப்போது ‘இனமுழக்கம்’ என்கிற திராவிடப் பத்திரிகையில் ‘சினிமா விமர்சனம்’ எழுதும் பணி தற்செயலாக கிடைக்கிறது. தமிழ் சினிமா குறித்து ஏற்கெனவே பல விமர்சனங்களைக் கொண்டிருந்த மகேந்திரனுக்கு இந்தப் பணி மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் பணி தொடர்பாக ஒருமுறை எம்.ஜி.ஆரை சந்திக்க நேர்கிறது. பல வருடங்கள் கழிந்திருந்தாலும் மகேந்திரனை சரியாக நினைவு வைத்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்று தங்க வைத்து ‘பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு திரைக்கதை எழுதச் சொல்கிறார்.
மகேந்திரன் திரைக்கதையை எழுதி முடித்து விட்டாலும் அந்த முயற்சி சாத்தியமாகவில்லை. எம்.ஜி.ஆர் நாடக மன்றத்திற்காக ‘அநாதைகள்’ என்ற நாடகத்தை எழுதித் தருகிறார் மகேந்திரன். அது பிறகு ‘வாழ்வே வா’ என்கிற தலைப்பில் திரைப்படமாக்கப்படும் முயற்சிகள் ஆரம்பமாகி அதுவும் நிறைவேறாமல் போகிறது. இது போன்ற காரணங்களால் சலிப்புற்று ஊருக்குத் திரும்புகிறார் மகேந்திரன். அவர் பல முறை விலகிச் சென்றாலும் தமிழ் சினிமா அவரைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது.
‘நாம் மூவர்’ என்பதுதான் தமிழ் சினிமாவிற்காக மகேந்திரன் எழுதிய முதல் கதை. ‘இந்தக் கதை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது” என்று அஞ்சிய இயக்குநர் அந்த திரைப்படத்தில் இருந்து விலகி விட, தயாரிப்பாளர் கே.ஆர்.பாலனின் வேண்டுகோளுக்கு இணங்க கதையில் சில மாற்றங்களைச் செய்கிறார் மகேந்திரன். அதன் பிறகு ‘சபாஷ் தம்பி’ ‘பணக்காரப் பிள்ளை’ போன்ற திரைப்படங்களுக்கும் கதை எழுத அவையும் வெளியாகி வெற்றி பெறுகின்றன. எந்த வகையான சினிமா குறித்து தாம் கடுமையாக விமர்சனங்களைக் கொண்டிருந்தோமோ, அந்த வகையான சூழலிலேயே சிக்கிக் கொள்ள நேர்ந்தது மகேந்திரனுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மீண்டும் சென்னையை விட்டு விலக முடிவு செய்கிறார்.
என்றாலும் ‘துக்ளக்’ பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதும் பணி கிடைக்கிறது. தன் வாழ்க்கையிலேயே பத்திரிகை சார்ந்த இந்தப் பணிதான் மிகவும் நிறைவளித்தாக குறிப்பிடுகிறார் மகேந்திரன். சினிமா விமர்சனங்கள் மட்டுமல்லாது சமூகத்தின் எளிய மக்களைச் சந்தித்து நேர்காணல்களையும் பதிவு செய்கிறார். இந்தச் சூழலில், ‘துக்ளக்’ ஆசிரியர் ‘சோ’வைச் சந்திக்க நடிகர் செந்தாமரை வருகிறார். காத்திருக்க வேண்டிய நேரத்தில் ‘நீங்கள் எங்கள் நாடக மன்றத்திற்கு ஏதாவது கதை எழுதித் தாருங்கள்’ என்று மகேந்திரனிடம் கேட்க, அப்படி கதை எதுவும் தயாராக இல்லாத நிலை.
என்றாலும் சற்று முன் ஆங்கிலப் பத்திரிகையில் பார்த்த ஒரு கம்பீரமான காவல் அதிகாரியின் புகைப்படத்தையொட்டி உடனடியாக ஒரு கற்பனையைத் தட்டி விடுகிறார் மகேந்திரன். அது பிறகு வெற்றிகரமான நாடகமாகி, பின்னாளில் ‘தங்கப் பதக்கம்’ என்கிற சினிமாவாகவும் மாறுகிறது. தனது வாழ்க்கையின் பல விஷயங்கள் இவ்வாறான தற்செயலான நிகழ்வுகளால் நிரம்பியது என்று வியக்கிறார் மகேந்திரன்.
**
‘சினிமாவும் நானும்’ என்ற தலைப்பில் 2004-ல் மகேந்திரன் எழுதிய நூலில் தான் சினிமா இயக்கிய அனுபவங்கள், அவற்றின் பின்னே நடந்த விஷயங்கள், தனிப்பட்ட வாழ்க்கை சம்பவங்கள் உள்ளிட்டு பல விஷயங்களை வெளிப்படையாக எழுதியிருக்கிறார் மகேந்திரன். சினிமாத்துறையில் உள்ள அனைவரும் மட்டுமல்ல, சினிமா மீது ஆர்வமுள்ள ஒவ்வொருவருமே வாசிக்க வேண்டிய நூல் அது.
‘சினிமா என்பது அத்தனை பெரிய விஷயமல்ல. அதற்காக உங்கள் வாழ்க்கையையே தொலைக்காதீர்கள்’ என்பது இளைஞர்களுக்கு அவர் அளிக்கும் உருப்படியான உபதேசம். அப்படியே சினிமாவிற்குள் வர விரும்பினாலும் எந்த அஸ்திவாரமும் இல்லாமல் உள்ளே வந்து தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் முன் கூனிக்குறுகி நிற்காதீர்கள். ஏதாவது ஒரு பணியைத் தேடிக் கொண்டு கம்பீரமாக வாய்ப்பு கேளுங்கள். நிறைய நூல்களைப் படியுங்கள். சிறந்த சினிமாக்களைப் பாருங்கள். அந்தத் தகுதியோடு வாருங்கள்’ என்பதாக மகேந்திரனின் தோழமையான குறிப்புகள் அந்த நூலில் பதிவாகியிருக்கின்றன.
உலகின் பெரும்பாலான உன்னதமான சினிமாக்கள் ஏதாவது ஒரு இலக்கியப் படைப்பிலிருந்துதான் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இந்திய சினிமாத் துறையில் இந்த முக்கியமான விஷயத்தை பெரும்பாலும் கடைப்பிடிப்பது மேற்கு வங்கமும், கேரளாவும் மட்டுமே. தமிழ் சினிமாவில் இந்த விஷயம் அறவே கிடையாது. இலக்கியத்திற்கும் தமிழ் சினிமாவிற்கும் இடைவெளி மிக மிக அதிகம். பிற மொழிகளில் வெற்றியடைந்த திரைப்படங்களை இங்குள்ள சூழலுக்கு ஏற்ப மசாலா உப்புமாவாக கிளறுவதே பெரும்பாலான கதை – வசனகர்த்தாக்களின் பணியாக இருந்தது.
ஆனால் மகேந்திரனின் பெரும்பாலான திரைப்படங்கள் ஏதாவது ஒரு எழுத்துப் படைப்பை அடிப்படையாகக் கொண்டுதான் அமைந்திருக்கும். முள்ளும் மலரும் (உமா சந்திரன்), நண்டு (சிவசங்கரி), சாசனம் (கந்தர்வன்), உதிரிப்பூக்கள் (சிற்றன்னை) போன்று ஒரு நாவலையோ அல்லது சிறுகதையையோ அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும். ஆனால் இதிலுள்ள வியப்பூட்டும் அம்சம் என்னவெனில், அந்தப் படைப்பை வரிக்கு வரி அப்படியே சினிமாவாக்கும் அபத்தத்தை மகேந்திரன் எப்போதும் செய்ததில்லை.
அந்தப் படைப்பின் மையத்தை ஒரு துளி வண்ணமாகத் தொட்டுக் கொண்டு தன் கற்பனை வளத்தால் பிரத்யேகமான ஓவியமாக்கி விடுகிறார். படைப்பிற்கும் அவர் உருவாக்கிய சினிமாவிற்கும் தொடர்பே இருக்காது. ‘முள்ளும் மலரும்’ என்கிற சாதாரண வணிக நாவலை வாசித்தால் மகேந்திரனின் மேதைமை புரியும். இத்தனைக்கும் அந்த நாவலை முழுமையாக கூட மகேந்திரன் வாசிக்கவில்லை. சற்று வாசித்து புத்தகத்தை மூடி விட்டு அங்கிருந்து தன் கற்பனையை விரித்தெடுக்கிறார். ‘காளி’ என்கிற தமிழ் சினிமாவின் மகத்தான பாத்திரம் வளர்ந்து நிற்கிறது. போலவே புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’க்கும் ‘உதிரிப்பூக்களுக்கும்’ தொடர்பேயில்லை. இதை புதுமைப்பித்தனின் மகளே சொல்லி வியந்திருக்கிறார். என்றாலும் ஒரு படைப்பின் துளியால் தான் கவரப்பட்டாலும் அதற்கான அங்கீகாரத்தையும் பொருளியல் சன்மானத்தையும் தருவதற்கு மகேந்திரன் தயங்குவதில்லை. விதம் விதமான முறைகளில் கதைகளை திருடும் இயக்குநர்களின் மத்தியில் இப்படியொரு வித்தியாசமான நபராக இருந்திருக்கிறார் மகேந்திரன்.
ஒரு வசனகர்த்தாகவாக தன்னுடைய பணியில் அதிருப்தியையும் மனநிறைவின்மையையும் மகேந்திரன் பெற்றிருந்தாலும் தனது திரைப்படங்களின் வழியாக ‘யதார்த்த சினிமாவின் அலை’யைத் துவக்கி வைத்த முன்னோடிகளில் ஒருவராக நிற்கிறார். இந்த நோக்கில் இன்னொரு உதாரணமாக இருப்பவர் பாலுமகேந்திரா. எண்பதுகளில் இவர்கள் துவக்கி வைத்த இந்தப் போக்கை வணிகத் திரைப்படங்கள் அடித்துக் கொண்டு போய் விட்டன. இல்லாவிடில் மேற்கு வங்கம், கேரளம் போன்று தமிழ்த் திரையுலகிலும் பல அற்புதமான சினிமாக்கள் நமக்கு கிடைத்திருக்கக்கூடும். இந்தப் போக்கு பெருகியிருந்தால் அருமையான இயக்குநர்களும் வந்திருக்கக்கூடும்.
**
‘முள்ளும் மலரும்’ திரைப்படம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து மகேந்திரன் நினைத்திருந்தால் முன்னணி நாயகர்களை வளைத்துப் போட்டு பல சினிமாக்களை உருவாக்கி பணத்தை குவித்திருக்க முடியும். ஆனால் தன் வாழ்வு முழுக்கவும் சமரசங்கள் இல்லாமல் ‘நல்ல சினிமா’வை மட்டுமே தர வேண்டும் என்று அவர் விரும்பியதால் குறைந்த எண்ணிக்கையிலான திரைப்படங்களை மட்டுமே அளிக்க முடிந்தது.
மகேந்திரனின் திரைப்பயணத்தில் ‘முள்ளும் மலரும்’ ‘உதிரிப்பூக்கள்’ ஆகிய இரண்டு திரைப்படங்களை மட்டுமே உன்னதமான சினிமாக்களாக குறிப்பிட முடியும். இதர முயற்சிகளில் மகேந்திரனின் பிரத்யேகமான தடயங்களும் உணர்வுகளும் அழுத்தமாக பதிவாகியிருந்தாலும் அவை பல குளறுபடிகளைக் கொண்டிருந்தன. காட்சிகளின் தொடர்ச்சியின்மை, நிலவெளி குழப்பம் (மெட்டி), திணிக்கப்பட்ட துள்ளலிசைப் பாடல்கள் போன்று பல இடையூறுகளையும் நெருடல்களையும் உணர முடியும். அவரின் பிற்காலத் திரைப்படங்களில் பல மிகச் சுமாரான முயற்சியாகவே முடிந்திருந்தன. ஆனால் அனைத்தையும் மீறி மகேந்திரனின் ஆளுமையை சில இடங்களில் நாம் தரிசிக்க முடிவதே அந்தத் திரைப்படங்களை விசேஷமாக்குகின்றன.
இந்தக் குளறுபடிகளுக்கு பெரும்பாலும் மகேந்திரனை மட்டுமே குறை சொல்ல முடியாது. சாசனம் திரைப்படத்திற்காக NFDC இவருக்கு இழைத்த அநீதியான அனுபவங்களை வாசித்தால் மனம் நொந்து போகிறது. அரசு இயந்திரத்துடன் இவர் முட்டி மோதியது அனைத்தும் அத்தனை கசப்பான அனுபவங்கள். மகேந்திரனின் தனிப்பட்ட குணாதிசயமும் இதற்குக் காரணமாக இருக்கிறது. பெருந்தன்மை மிகுந்த, எவரையும் கடிந்து கொள்ளத் தெரியாத, மென்மையான மகேந்திரனால் சினிமாவின் பல நடைமுறை விஷயங்களை சாமர்த்தியமாக கையாளத் தெரியவில்லை. முதலில் ஒப்புக் கொள்ளப்படும் விஷயங்கள் வேறாகவும், படப்பிடிப்பு தொடரும் போது நடக்கும் விஷயங்கள் வேறாகவும் இருக்கும். மென்மையும் பெருந்தன்மையும் கொண்டிருந்ததால் இவற்றை எதிர்க்கத் தெரியாத மகேந்திரனின் பல திரைப்படங்கள் அரைகுறைப் பிரசவங்களாகி இருக்கின்றன. முழு சுதந்திரத்துடன் தன் கனவுகளை எட்ட முடியாமல் பலியான ஒரு கலைஞனின் அவஸ்தையாகவே இவற்றைப் பார்க்க வேண்டும்.
இன்னொரு கோணத்தில் தன் திரைப்படங்களின் முழுமையின்மைகளுக்கு மகேந்திரனும் ஒருவகையில் காரணமாகியிருக்கிறார். திரைக்கதையை முன்பே கச்சிதமாகத் திட்டமிட்டுக் கொண்டு படப்பிடிப்பிற்குச் செல்லாமல் ஒரு கதையின் மையத்தை மட்டும் யோசித்துக் கொண்டு பிறகு படப்பிடிப்புத் தளங்களுக்கு சென்று மெருகேற்றுவது, அப்போது தோன்றும் சிந்தனைகளின் படி காட்சிகளை மாற்றுவது போன்ற விஷயங்களால் காட்சிகளின் தொடர்ச்சியின்மை போன்ற குளறுபடிகள் நிகழ்ந்திருக்கின்றன. ‘இப்படியான பாணி முழுக்க முழுக்கத் தவறு. இதை எந்த இயக்குநரும் செய்யவே கூடாது’ என்பதே இவர் இளம் இயக்குநர்களுக்கு கூறும் உபதேசங்களுள் ஒன்று.
ஆனால் இவற்றைத் தாண்டியும் மகேந்திரனிடம் பிரத்யேகமானதொரு திறமை இருந்திருக்கிறது. பொதுவாக எந்தவொரு பிரம்மாண்டமான படைப்பின் சாரத்தையும் ஒற்றை வரியில் அடக்கி விடலாம். அப்படியொரு ஒற்றை வரியை வைத்துக் கொண்டு அதை மெல்ல மெல்ல விரித்தெடுப்பதில் மகேந்திரனுக்கு அபாரமான திறமை இருந்திருக்கிறது.
ஏற்கெனவே ஒரு கதையை தயாரிப்பாளரிடம் சொல்லி ஒப்புதல் வாங்கி அதற்காக மும்பைக்கு பயணிக்கிறார் மகேந்திரன். அங்கு அதிகாலையில் ஓர் இளம் பெண் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவதைக் கவனிக்கிறார். ‘இளம் வயதில் ஆரோக்கியத்திற்காக ஓடும் இந்தப் பெண், வருங்காலத்தில் எதற்கெல்லாம் ஓட வேண்டியிருக்கும்’ என்று தன் கற்பனையை விரிக்கிறார். முந்தைய கதையை ரத்து செய்து விட்டு இந்தக் கற்பனையை திரைப்படமாக்குகிறார். ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ என்கிற அருமையான திரைப்படம் பிறக்கிறது.
**
இன்றும் கூட ஆண் மைய சினிமாக்களும் ‘ரெடிமேட் சட்டைகள்’ போன்று நாயகர்களுக்கேற்ப உருவாக்கப்படும் கதைகளும் குறையாமல் இருக்கும் போது தன்னுடைய திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களை முக்கியத்துவம் உள்ளவர்களாகவும் தனித்தன்மையும் துணிச்சலும் கொண்டவர்களாகவுமே மகேந்திரன் படைத்திருக்கிறார். முள்ளும் மலரும் (கங்கா, வள்ளி), உதிரிப்பூக்கள் (லஷ்மி), பூட்டாத பூட்டுக்கள் (கன்னியம்மா), ஜானி (அர்ச்சனா) நெஞ்சத்தைக் கிள்ளாதே (விஜி), நண்டு (சீதா), மெட்டி (ப்ரீதா), சாசனம் (விசாலாட்சி) என்று பல பாத்திரங்களைச் சொல்லலாம்.
துணிச்சலான பெண் பாத்திரங்கள் ஒருபுறம் இருந்தாலும் ஆணாதிக்க உலகில் சிக்கித் தவிக்கும் பெண்களின் அகவயமான துயரங்களை பதிவு செய்வதிலும் மகேந்திரனின் சினிமாக்கள் நுட்பமாக இயங்கியிருக்கின்றன. ‘உதிரிப்பூக்கள்’ லஷ்மி பாத்திரம் ஒரு மிகச் சிறந்த உதாரணம். இவரது திரைப்படங்களின் எதிர்மறை பாத்திரங்கள் துல்லியமாக பிரிக்கப்பட்ட கறுப்பு – வெள்ளையாக இல்லாமல் இரண்டும் கலந்த குணாதிசயத்துடன்தான் அமைந்திருக்கிறார்கள். ‘உதிரிப்பூக்களின்’ சுந்தரவடிவேலு ஓர் உதாரணம். போலவே பெண்களின் முக்கியத்துவத்தை உயர்த்திக் காட்டுவதற்காக ஆண்களை பயங்கர வில்லன்களாக சித்தரிப்பதில்லை. நல்லியல்புகளும் மென்மைகளும் கொண்ட ஏராளமான ஆண் பாத்திரங்களையும் சித்தரிக்க மகேந்திரன் தவறவில்லை.
**
தமிழ் சினிமாவின் யதார்த்த அலை சினிமாக்களைத் துவங்கி வைத்தவர்களாக மகேந்திரன், பாலுமகேந்திரா ஆகிய இருவரை மட்டுமே முதன்மையாக சொல்ல முடியும். இவர்கள் ஏற்ற முயன்ற வெளிச்சம், வணிக சினிமாக்களின் குறுக்கீட்டால் அணையாமல் போயிருந்தால் இன்று சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற சினிமாக்களை உருவாக்கும் தகுதியை தமிழ் சினிமாத்துறை அடைந்திருக்கக்கூடும். இதற்கு பார்வையாளர்களிடம் இன்னமும் கூட உருவாகாத ரசனை மாற்றமின்மையையே பிரதான காரணமாகச் சொல்ல முடியும்.
இளம் வயதில் ஆங்கில சினிமாக்கள், அதன் பிறகு சத்யஜித்ரே, அகிரா குரசேவா போன்ற சினிமா மேதைகளின் படைப்புகளை மகேந்திரன் பார்த்திருந்தாலும் உலக சினிமாக்களின் பரிச்சயம் அவருக்கு அதிகம் இருந்ததில்லை. தனது ஓய்ந்த காலத்தில்தான் பல உன்னதமான சினிமாக்களைத் தேடித் தேடிப் பார்த்திருக்கிறார். பல சினிமா நூல்களை வாசித்திருக்கிறார். ‘இத்தனை அருமையான படைப்புகளை முன்பே அறிந்து கொள்ளாமல் போனேனே” என்று தான் எழுதிய நூலில் வருந்துகிறார் மகேந்திரன். அவற்றின் தாக்கங்கள் மகேந்திரனிடம் முன்பே உண்டாகியிருந்தால் அவை அவரது சினிமாக்களில் சிறப்பாக பிரதிபலித்திருக்கக்கூடும். அதே சமயத்தில் இவற்றின் பரிச்சயம் இல்லாமலேயே ‘யதார்த்தமான’ சினிமாவைத் தர வேண்டும் என்கிற தன்னிச்சையான ஆர்வமும் தேடலும் கொண்டிருந்த மகேந்திரனை வியக்கவே தோன்றுகிறது.
தன் திரைப்படங்களை அழகு படுத்தியவர்களாக ஒளிப்பதிவாளர்கள் பாலுமகேந்திரா, அசோக்குமார், இசையமைப்பாளர் இளையராஜா, எடிட்டர் லெனின் போன்றவர்களையே மகேந்திரன் சுட்டிக் காட்டுகிறார். இவர்களின் அபாரமான திறமை இணையவில்லையென்றால் தன் திரைப்படங்கள் பிரகாசித்திருக்காது என்று தன்னடக்கத்துடன் அவர்களுக்கான அங்கீகாரத்தைப் பதிவு செய்கிறார்.
இந்தியச் சினிமாக்களுக்கான பிரத்யேக அம்சங்கள் இருந்தாலும், சினிமா என்பது அடிப்படையில் ஒரு ‘காட்சி ஊடகம்’ என்கிற பிரக்ஞையை அழுத்தமாகக் கொண்டிருந்தார் மகேந்திரன். அநாவசியமான வசனங்கள் அப்புறப்படுத்தப்பட்ட கவித்துவமான மெளனம் என்பது அவரது பல திரைப்படங்களில் நிரம்பியிருந்தது. அவர் ஏற்றி வைத்த வெளிச்சத்தை அணையாமல் தொடர்வதே அவருக்கு சினிமாத்துறை செய்யும் மிகச் சிறந்த அஞ்சலியாகவும் அங்கீகாரமாகவும். இருக்கும்.

(குமுதம் தீராநதி - May 2019 இதழில் பிரசுரமானது)
suresh kannan
No comments:
Post a Comment