Tuesday, November 05, 2019

De dirigent | 2018 | Netherlands | இயக்குநர் - Maria Peters



அயல் திரை  - 11
 
இசையைத் தேடும் பறவை



பல்வேறு துறைகளில் பெண்கள் அடைந்திருக்கும் முன்னோடியான வரலாற்றுச் சாதனைகளைப் பற்றி பேசும் போது ‘உலகின் முதல்….” என்பது போல் அவற்றை பொது அறிவுக் கேள்விக்கான விடையாக மட்டும் எளிதில் கடந்து விடுகிறோம். ஆனால் அவர்கள் அந்த நிலையை அடைந்த பாதை என்பது எளிமையாக இருந்திருக்கவில்லை. ஆணாதிக்க உலகின் பல அநீதிகளையும் தடைகளையும் அவர்கள் எதிர்கொண்டு முன்னகர வேண்டியிருந்தது. அகம் மற்றும் புறம் சார்ந்த வன்முறை, குடும்ப எதிர்ப்பு, பாலியல் துன்புறுத்தல்கள், மிரட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு அழுத்தங்களை அவர்கள் கடக்க வேண்டியிருந்தது. இது போன்றவற்றையெல்லாம் கடந்து இசைத்துறையில் சாதித்த ஒரு பெண்மணியைப் பற்றிய திரைப்படம் இது.

**

1920-களின் காலக்கட்டம். நெதர்லாந்திலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த டச்சு குடும்பத்தின் ஒரே மகளான வில்லி வால்டர்ஸூக்கு பியானோ கற்றுக் கொள்வது என்பது இளம்வயது விருப்பமாக இருந்தது. வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் ஆர்வம் காரணமாக தன் தேடலைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறாள்.  பொது மக்களுக்கான இசை நிகழ்ச்சியை நடத்தும் கோல்ட்ஸ்மித் என்பவரிடம் பியானோ கற்றுத்தரச் சொல்லி வேண்டுகிறாள். முதலில் மறுக்கும் அவர், பணத்திற்காக சொல்லித்தர சம்மதிக்கிறார்.

பியானா வகுப்பிற்கு பணம் தருவதற்காக பல இடங்களில் வேலை தேடுகிறாள் வில்லி. எங்கும் கிடைப்பதில்லை. ஒரு கேளிக்கை விடுதியில் பியானா வாசிப்பவளாக சேர்கிறாள். ராபின் என்கிற நபர் இவளுக்கு உதவுகிறார். பியானா வகுப்பு மும்முரமாகச் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் கோல்ட்ஸ்மித் இவளை பாலியல் நோக்கத்தில் அணுக, அவரை கடுமையாக எச்சரித்து அங்கிருந்து வெளியேறுகிறாள். அதற்குப் பழிவாங்கும் விதமாக இவளது பயிற்சி தடைபடுகிறது.

தன்னுடைய சுயஆர்வத்தினாலும்  முயற்சியாலும் இசையில் தேர்ச்சி பெறும் வில்லி வால்டா்ஸின் அடுத்த இலட்சியக் கனவு ‘இசை நடத்துனராக’ (Music Conductor) ஆக வேண்டும் என்பது. ஆனால் அது எத்தனை எளிதானதாக இல்லை. ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த அந்த இடத்தில் ஒரு பெண் எப்படி வர முடியும் என்கிற எள்ளல்களையும் நிராகரிப்புகளையும் எதிர்கொள்கிறாள். தான் பிரமித்து நோக்கும் ஓர் இசை நடத்துனரை விடாப்பிடியாக நச்சரிக்க, அவரோ முக் என்கிற இன்னொரு ஆசாமியை கைகாட்டுகிறார். இதற்காக பெர்லினுக்கு பயணமாகிறாள் வில்லி.

அமெரிக்கா என்கிற பெயரைக் கேட்டாலே வெறுப்புறும் முக், வில்லியை அவமதித்து துரத்த முயற்சிக்கிறார். ஆனால் விடாப்பிடியாக அவருடன் வாதம் செய்கிறாள் வில்லி. இவளது அசாத்தியமான பிடிவாதத்தைக் காணும் அவர், இசை நடத்துனருக்கான பயிற்சியைத் தர சம்மதிக்கிறார்.  தீவிரமாக உழைத்து அதில் தேர்வாகிறாள் வில்லி. இவள் நிகழ்த்தும் முதல் நிகழ்ச்சி பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்படுகிறது. பலரின் பாராட்டுக்களும் கிடைக்கின்றன.

என்றாலும் அமெரிக்கா திரும்பும் வில்லிக்கு போதிய வரவேற்பு கிடைப்பதில்லை. ஒரு பெண் நடத்தும் நிகழ்ச்சிக்கு எப்படி பார்வையாளர்கள் வருவார்கள் என்கிற கேள்வி எழுகிறது. இதர ஆண் இசைக்கலைஞர்கள் கூட உதவ முன்வருவதில்லை. இது மட்டுமல்லாமல், ஆண் வாத்தியக்கலைஞர்களில் சிலர்  கூட ஒரு பெண்ணின் வழிகாட்டுதலிலும் தலைமையிலும் இசையை வாசிக்க விரும்புவதில்லை. இதனால் பெண்கள் மட்டுமே உள்ள ஓர் இசைக்குழுவை உருவாக்குகிறாள் வில்லி. பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள செல்வாக்குள்ள ஒரு பெண்மணி வில்லிக்கு ஆதரவளிக்க முன்வருகிறார். எனவே இவளது நிகழ்ச்சிக்கு வரவேற்பு பெருகுகிறது. எதிரிகளின் சதியை முறியடிப்பதற்காக இலவசமாகவே தன் நிகழ்ச்சியை நடத்துகிறாள். தன் கனவுப் பயணத்தை வில்லி வெற்றிகரமாக தொடரும் நெகிழ்வான காட்சியோடு படம் நிறைகிறது.

**

Antonia Brico என்கிற உண்மையான இசைக்கலைஞரின் வாழ்க்கையொட்டி எடுக்கப்பட்ட திரைப்படம் இது. நியூயார்க் பில்ஹார்மோனிக் இசைக்குழுவின் முதல் பெண் இசை நடத்துனர் என்கிற பெருமையைப் பெற்ற அன்டோனியாவின் வாழ்க்கையைப் பற்றி ‘Antonia: A Portrait of the Woman’ என்கிற ஆவணப்படமும் உருவாக்கப்பட்டுள்ளது.

அன்டோனியாவின் சொந்த வாழ்க்கை மிகவும் பரிதாபமானது. அமெரிக்காவில் அவளை வளர்க்கும் பெற்றோர், அவளது உண்மையான பெற்றோர்கள் இல்லை. நெதர்லாந்திலிருந்து தத்தெடுத்துக் கொண்டு வந்து வளர்க்கிறார்கள். திரைப்படத்தில் சித்தரிக்கப்படும் காட்சிகளின் படி, அன்டோனியாவின் தாய், அவளை பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக பயன்படுத்துகிறார். இது தொடர்பான வாக்குவாதத்தில் வீட்டை விட்டே வில்லி வெளியேற வேண்டியிருக்கிறது. ஒரு கேளிக்கை விடுதியில் இசை நிகழ்ச்சி நடத்தும் ராபின் என்பவர் இவளுக்கு ஆதரவளிக்கிறார். ராபின் மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர். அன்டோனியா பெண்களை பிரத்யேமாகக் கொண்டு ஓர் இசைக்குழுவை தயாராக்கும் போது பெண் வேடத்தில் வந்து உதவுவது நெகிழ வைக்கும் காட்சி.

தன் தாய் கை விட்டதை எண்ணி கலங்கும் வில்லி, தன் பூர்வீகத்தை தேடிப் பயணிக்கும் காட்சிகளும் தன்னுடைய தாயின் நல்லியல்புகளை அறிந்து அவர் இவள் மீது வைத்திருந்த அன்பையும் அறிந்து கலங்கும் காட்சி நெகிழ்வானது.

பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஃபிராங்க் என்கிற இளைஞன், வில்லியை காதலிக்கிறான். ஒரு மோதலில்தான் இவர்களின் அறிமுகம் நிகழ்கிறது. ஆனால் இவளிடமுள்ள இசைத்திறமையையும் ஆர்வத்தையும் ஃபிராங்க் பிறகு புரிந்து கொள்கிறான். அதற்காக உதவுகிறான். வில்லியும் அவனுடைய அன்பை ஏற்றுக் கொள்கிறாள். ஃபிராங்க் திருமண உத்சேத்தை தெரிவிக்கும் போது அதில் இசைப்பயணத்தை தொடர்வதற்கான தடையும் மறைமுகமாக இருக்கிறது. அந்தக் கால ஆண் மனோபாவத்தின் படி, ‘வில்லி ஒரு குடும்பப் பெண்ணாக இருந்தால் போதும்’ என்று மறைமுகமாக வலியுறுத்துகிறான். ‘காதல் பெரியதா, தன் இசைக்கனவு பெரியதா?’ என்கிற போராட்டத்தில் இரண்டாவதையே மனஉறுதியுடன் தேர்வு செய்கிறாள் வில்லி.

வேறொரு பெண்ணை ஃபிராங்க் திருமணம் செய்து கொண்டாலும் வில்லியின் மீதான அன்பு அப்படியே இருக்கிறது. இவள் நிகழ்த்தும் இசைக்கச்சேரியை முதல் இருக்கையில் அமர்ந்து கேட்கும் இறுதிக்காட்சி அற்புதமானது.

**

அன்டோனியா பிரிக்கோ என்கிற இசைக்கலைஞர் பாத்திரத்தில் Christanne de Bruijn என்கிற நடிகை அற்புதமாக நடித்துள்ளார். ஆணாதிக்க உலகின் பல தடைகளை உறுதியுடன் போராடி நீந்தி வரும் சித்திரத்தை ஒவ்வொரு காட்சியிலும் அற்புதமாக பிரதிபலித்துள்ளார். Maria Peters என்கிற நெதர்லாந்து தேசத்தைச் சேர்ந்த பெண்மணி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.
படத்தை இயக்கியவரும் ஒரு பெண்தான் என்பதால் பல காட்சிகள் நம்பகத்தன்மையுடனும் உயிர்ப்புடனும் பதிவாகியிருக்கின்றன. 

1920-களின் காலக்கட்டத்தில் நிகழ்வதாக இந்த திரைப்படத்தின் காட்சியமைப்புகள் உள்ளன. . ஆனால் சமகாலத்திலும் இந்த நிலைமையில் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை என்பது துரதிர்ஷடமானது. எந்தவொரு துறையிலும் ஆணுக்கு நிகராகவும் அதற்கு மேலாகவும் ஒரு பெண்ணால் பிரகாசிக்க முடியும் என்பதையும் ஆணாதிக்க மனங்கள் அவர்களுக்கு தடைகளை ஏற்படுத்துவதை கைவிட்டு, முழுமனதுடன் வரவேற்று ஆதரவளிக்க வேண்டும் என்கிற செய்தியை மிக அற்புதமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்கிறது இந்த திரைப்படம்.


(குமுதம் தீராநதி -  May  2019 இதழில் பிரசுரமானது) 


 
suresh kannan

No comments: