Sunday, November 10, 2019

Alpha | 2018 | United States | இயக்குநர் - Albert Hughes






அயல் திரை  - 14
 
ஞமலியுடன் ஒரு முதல் கைகுலுக்கல்


மனிதனின் செல்லப் பிராணிகளுள் முக்கியமானது நாய். கற்காலம் துவங்கி இன்று வரை மனிதனுடன் உறவைத் தொடரும் விலங்கினம் என்றால் அது நாய்தான்.  பாசமிகு தோழன், விசுவாசம் மிக்க காவலன் என்று இந்த விலங்கிற்கு பல பரிமாணங்கள் உண்டு. புத்திக்கூர்மையுள்ள இந்த விலங்கினத்தை தங்கள் வீட்டு குழந்தையாகவே கருதி பாசம் பொழிபவர்களும் உண்டு. இதன் மறுமுனையில் உணவிற்காக கொல்பவர்களும் உண்டு.

வெடிகுண்டு, போதைப் பொருள், குற்றத் தடயங்கள் போன்றவைகளைக் கண்டுபிடிப்பதற்கு நாயின் அசாதாரணமான மோப்ப சக்தி பயன்படுவதால் இவற்றை காவல்துறையிலும் ராணுவத்திலும் பயன்படுத்துகிறார்கள். வேட்டையாடுதல், ஆட்டு மந்தைகளை ஒழுங்குப்படுத்துதல் போன்ற விஷயங்களுக்காகவும் நாய்கள் முன்பு பழக்கப்படுத்தப்பட்டிருந்தன. பல தொன்மங்களில் நாயைப் பற்றிய குறிப்புகள் பதிவாகியுள்ளன.

நாய்க்கும் மனித குலத்திற்குமான இந்த நெடும் உறவு எப்போது, எப்படி துவங்கியிருக்கும்? லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பேயே இது துவங்கி விட்டதாக சொல்கிறார்கள். மனிதன், ஓநாய்களைப் பழக்கியதில் அவை காலப்போக்கில் பல்வேறு நாயினங்களாக பரிணாம வளர்ச்சியை அடைந்தன என்றும் சொல்லப்படுகிறது. இந்தப் பரிணாம வளர்ச்சியின் முதல் புள்ளியை இந்தத் திரைப்படம் கற்பனையாக உருவாக்கிக் காட்டுகிறது.

**

பழைய கற்காலம். இருபதாயிரம் வருடங்களுக்கு முந்தைய ஐரோப்பா. அதுவொரு இனக்குழு. குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் உணவைச் சேமிக்க வேண்டிய நேரம் வருகிறது. விலங்குகளை வேட்டையாடிக் கொண்டு வருவதற்காக சிலர் கிளம்புகிறார்கள். ஆனால் அதுவொரு ஆபத்தான பயணம். கொடிய விலங்குகளால் சிலர் மரணம் அடையக்கூடும். ஆனால் வேறு வழியில்லை.

வேட்டைக்குத் தகுதி வாய்ந்தவர்களை தேர்ந்தெடுத்து கிளம்புகிறான் குழுவின் தலைவன். கூட அவனுடைய மகன் கேடா. கேடாவிற்கு கூர்மையான ஆயுதங்களை உருவாக்கும் திறமை இருக்கிறதே ஒழிய, அதைப் பயன்படுத்தும் துணிச்சல் இல்லை. ஒரு மிருகத்தைக் கொல்ல முடியாமல் அவனுடைய இரக்கவுணர்ச்சி தடுக்கிறது. ‘ஆபத்தான பயணமாயிற்றே’ என்று கலங்குகிற  தன்னுடைய மனைவியின் வேண்டுகோளை நிராகரித்து மகனை அழைத்துச் செல்கிறான் குழுவின் தலைவன். இப்படித்தான் வாழ்க்கை முறையை மகன் கற்றுக் கொள்ள முடியும், அவன் வருங்கால தலைவன் ஆவதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள முடியும் என்று தந்தைக்குத் தெரியும்.

முன்னோர்கள் வைத்திருக்கும் தடயங்களின் உதவியுடன் நெடுந்தொலைவு பயணிக்கிறார்கள். வழியில் ஒருவனை புலி அடித்துச் செல்கிறது. கடந்து செல்கிறார்கள்.  காட்டெருமைகளின் கூட்டம் ஒன்று கண்ணில்படுகிறது. அந்தக் கூட்டத்தை தாக்குவதற்காக இவர்களின் குழு தயாராகிறது. இதில் நடக்கும் களேபரத்தில் ஒரு காட்டெருமை கேடாவை நோக்கி ஆவேசமாக வருகிறது. தனியாக மாட்டிக் கொள்ளும் கேடா, அதனால் தாக்கப்பட்டு ஒரு பெரிய பள்ளத்தாக்கிற்கு சற்று கீழேயிருக்கும் முகட்டில் மயக்கமடைந்து விழுகிறான்.

தன் மகன் தாக்கப்பட்டதைக் கண்ட குழுத்தலைவன் அலறியடித்துக் கொண்டு பள்ளத்தாக்கில் இறங்க முயற்சிக்க, மற்றவர்கள் தடுத்து விடுகிறார்கள். சுயநினைவின்றி இருக்கும் அவனை, ‘இறந்து விட்டான்’ என்று கருதி சென்று விடுகிறார்கள். குழுத்தலைவனும் கலங்கியபடி சென்று விடுகிறான்.

கேடாவை பிணந்தின்னும் கழுகு ஒன்று கொத்தித் தின்ன வரும் போதுதான் அவனுக்கு சுயநினைவு திரும்புகிறது. மிகப் பெரிய பள்ளத்தாக்கு கீழே இருப்பதைப் பார்த்து அலறும் அவன், பரிதாபத்துடன் ‘அப்பா.. அப்பா’ என்று அழைத்துப் பார்க்கிறான். பிறகு தன்னைத் தேற்றிக் கொண்டு எப்படியோ அந்தச் சூழலில் இருந்து தப்பிக்கிறான். காலில் எலும்புமுறிவு ஏற்பட்டிருப்பதற்கு சுயவைத்தியம் பார்த்துக் கொள்ளும் அவன், தடயங்களை வைத்து வீடு திரும்ப முயற்சிக்கிறான். ஆனால் அந்தப் பயணம் அத்தனை எளிதாக இல்லை. “அவன் துணிச்சலானவன்” என்று ஒருமுறை தந்தை இவனைப் பற்றியிருக்கிற வாக்கியம் நினைவிற்கு வர, அதை உத்வேகமாகப் பற்றிக் கொண்டு முன்னர்கிறான்.

ஓநாய்களின் கூட்டம் ஒன்று இவனைத் துரத்துகிறது. மரத்தில் ஏறி தப்பிக்கும் இவன் அதில் ஓர் ஓநாயை தன்னிச்சையாக காயப்படுத்தி விடுகிறான். உயிர் தப்பிக்கும் வேகத்தில் அதைச் செய்து விட்டாலும் இவனுக்குள் சுரக்கும் இரக்கவுணர்ச்சி காரணமாக அதற்கு உதவி செய்ய முனைகிறான். காயமுற்றிருந்தாலும் தன்னை நெருங்கும் மனிதனைக் கண்டு பல்லைக் காட்டி உறுமுகிறது அந்த ஓநாய். அதன் வாயைக் கட்டி அதற்கு மருத்துவம் செய்கிறான் கேடா.

ஓநாயும் அந்த மனிதனும் மெல்ல மெல்ல ஒருவரையொருவர் அறிந்து கொள்கிறார்கள். ‘இவன் தனக்கு நண்பன்’ என்கிற செய்தியை ஓநாய் மெல்ல அறிந்து கொள்கிறது. இருவரின் காயங்களும் சற்று ஆறியவுடன் கேடா வீடு செல்லும் திசையை நோக்கி நடக்கத் துவங்குகிறான். ஓநாய் இவனுடைய பின்னாலேயே வருகிறது. ‘போ’ என்று துரத்தினாலும் அது கேட்பதாயில்லை.

‘ஆல்பா’ என்று இவன் பெயர் வைத்து அழைக்கும் அந்த ஓநாயும் கேடாவும் மெல்ல மெல்ல அந்தப் பயணத்தின் வழியாக நெருக்கமாகிறார்கள். அவர்கள் திரும்புவது பனிக்காலம் என்பதால் பாதைகள் அடைபடுகின்றன. தடங்கள் மறைகின்றன. வழியில் ஏற்படும் ஆபத்துக்களை இருவரும் இணைந்து சமாளிக்கிறார்கள். ஒருமுறை கேடாவிற்கு ஏற்படும் உயிர் போகும் ஆபத்திலிருந்து ஆல்பா காப்பாற்றுகிறது. கேடா சொன்னதின் பேரில் தன் கூட்டத்துடன் இணைந்து பிறகு இவனுடன் மீண்டும் வந்து இணைகிறது ஆல்பா.

புலியின் தாக்குதலில் படுகாயமுறும் ஆல்பாவைச் சுமந்து கொண்டு ஊர்ந்து ஊர்ந்து தன் வீடு இருக்கும் திசை நோக்கி முன்னேறுகிறான் கேடா. இறந்து விட்டதாக கருதப்பட்ட மகன், குற்றுயிரும் குலையுறுமாக வீடு திரும்பியதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறான் குழுவின் தலைவன். தங்களின் மகனைக் காப்பாற்றிய அந்த ஓநாயை குழு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு மருத்துவம் அளித்து காப்பாற்றுகிறது. அப்போதுதான் அந்த ஓநாய் கர்ப்பமுற்றிருப்பது தெரிகிறது. நான்கைந்து குட்டிகளை ஈனுகிறது.

சில மாதங்களுக்குப் பிறகு, பழக்கப்படுத்தப்பட்ட ஓநாய் படையுடன் அந்தக்குழு மறுபடியும் வேட்டைக்குப் புறப்படும் காட்சியோடு படம் நிறைவுறுகிறது.

**

இந்தத் திரைப்படத்தின் மையமே, மனிதனும் ஓநாயும் பரஸ்பரம் தங்களைப் புரிந்து கொள்ளும் காட்சிகள்தான். ஐந்தறிவும் ஆறிறிவும் தங்களின் ஆதாரமான உணர்வுகளின் தீண்டல்களால் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் காட்சிகள் மிக சாவகாசமாகவும் நம்பகத்தன்மையுடனும் உருவாக்கப்பட்டுள்ளன. மானிடனுக்கும் நாய்க்கும் பிறகு உருவாகவிருக்கும் நெடுங்காலப் பினைணப்பிற்கான முதற்புள்ளி.

கேடா காட்டெருமையால் தாக்கப்படுவது, பள்ளத்தாக்கின் முனையிலிருந்து அவன் தப்பிப்பது போன்ற காட்சிகள் அருமையாக உருவாக்கப்பட்டுள்ளன. மிக குறிப்பாக பனித்தரையின் உள்ளே மாட்டிக் கொண்டு உயிருக்குப் போராடும் கேடாவை, ஆல்பா காப்பாற்ற முயலும் காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் Martin Gschlacht-ன் ஒளிப்பதிவின் பின்னேயிருக்கும் அசாதாரணமான உழைப்பைக் காண முடிகிறது.

இன்ன பிற விலங்குகள் வரைகலை உத்தியின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் ஆல்பாவிற்காக அசலான ஓநாயையே பயன்படுத்தியுள்ளார்கள். தன் மகனுக்கு ஓநாய் கூட்டத்தின் தலைவனைப் பற்றி சொல்கிறான் குழுத்தலைவன். ஆல்பா என்பதுதான் அதன் அடையாளம். அந்த ஆல்பாதான் நன்றியுணர்ச்சி காரணமாக தன் குழுவை விட்டு விட்டு கேடாவின் பின்னால் செல்கிறது.

இந்த இனக்குழு பேசும் மொழி, இந்தத் திரைப்படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளின் மெலிதான சாயல்களை இந்த உரையாடல்களில் காண முடிகிறது. கேடா என்கிற இளைஞனாக Kodi Smit-McPhee நன்கு நடித்துள்ளான். வேட்டைக்காக தாக்கப்பட்ட ஒரு மிருகத்தை கொல்லக் கூட முடியாமல் தவிக்கும் அப்பாவியான இவன், தனித்து விடப்பட்ட வனத்தில் இருந்து தன்னந்தனியாக ஒவ்வொரு தடையையும் தாண்டும் முதிர்ச்சியை அந்தப் பயணத்தில் கற்றுக் கொள்கிறான்.

Albert Hughes அற்புதமாக இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படம், சிறார்கள், பெரியவர்கள் பார்க்க வேண்டிய திரைப்படமாகும். இந்தப் பூமி என்பது மனித குலத்திற்காக மட்டும் படைக்கப்பட்டதில்லை, இது அனைத்து உயிரினங்களுக்கானது, அனைத்துமே ஒன்றிணைந்து நட்புடன் வாழ்வது அவசியமானது என்பதை இந்த திரைப்படம் வலுவாக உணர்த்துகிறது.

நாயைப் போலவே மனிதனின் இதர செல்லப்பிராணிகளுடனான முதல் உறவு எவ்வாறு உருவாகியிருக்கும் என்கிற கற்பனையை அதிகப்படுத்தும் விதையாக இந்த திரைப்படம் உள்ளது. இந்த நோக்கில் பல திரைப்படங்கள் உருவாகினால் நன்றாக இருக்கும் என்கிற ஆவலை ஏற்படுத்தியுள்ளது ‘ஆல்பா’.


(குமுதம் தீராநதி -  AUGUST  2019 இதழில் பிரசுரமானது)
 

suresh kannan

No comments: