Sunday, November 03, 2019

Green Book | 2018 | United States | இயக்குநர் - Peter Farrelly





அயல் திரை  - 10


நிறங்களின் பயணம்




ஒரு வகையில் ‘வரலாற்றை தலைகீழாக்கம் செய்த திரைப்படம்’ என்று இதைச் சொல்லலாம். இந்தச் சாயலில் முன்னரே சில திரைப்படங்கள் வந்துள்ளன என்றாலும் அதில் கூடுதல் சுவையைச் சேர்த்திருக்கிறது ‘Green Book’. வெள்ளையர்கள்தான் கருப்பினத்தவர்களை காட்டிலிருந்து நகரத்திற்குள் கொண்டு வந்து மெல்ல மெல்ல ‘நாகரிகப்படுத்தியவர்கள்’ என்கிறதொரு வரலாற்று கற்பிதம் உண்டு. இயற்கை வளங்களைச் சுரண்டும் நோக்கில் பழங்குடிகளை அவர்களின் பூர்வீக வசிப்பிடங்களில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி அவர்களை தங்களின் ஏவல் அடிமைகளாக மாற்றுவதற்குப் பெயர் நிச்சயம் ‘நாகரிகம்’ அல்ல. என்றாலும் உயர்வுமனப்பான்மை கொண்ட சமூகம், அப்படியொரு போலியான கருத்தாக்கத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. அறியாமை காரணமாக அது பலரால் நம்பவும் படுகிறது.

ஆனால், இந்த திரைப்படத்தில் கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு வெள்ளையருக்கு (இத்தாலிய அமெரிக்கர்) அடிப்படையான நாகரிகத்தையும் கலாசாரத்தையும் கற்பிக்கிறார். இந்த அம்சமே இந்த திரைப்படத்தை பிரத்யேகமாக கவனிக்கத் தூண்டுகிறது. அவரும் வெள்ளையரிடமிருந்து சிலவற்றைக் கற்றுக் கொள்கிறார். ஒரு நீண்ட சாலைப் பயணத்தில் பரஸ்பரம் இருவருக்கு இடையே நேரும் சுவாரசியமான அனுபவங்களையும் நெகிழ்வான நிகழ்வுகளையும் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது. உண்மையான நபர்களையும் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டது.

**
அறுபதுகளின் காலக்கட்டம். நியூயார்க்கில் உள்ள ஒரு கிளப்பில் பணிபுரிபவர் டோனி. குடித்து விட்டு தகராறு செய்பவர்களை அநாயசமாக வெளியே தூக்கிப் போடும் திடகாத்திரர். கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி காரணமாக கிளப் இரண்டு மாதங்களுக்கு மூடப்படுகிறது. அதுவரை பணத்திற்கு என்ன செய்வது என்று தவிக்கிறார் டோனி. வாடகை, பால் பாக்கி என்று லெளகீகச் சிக்கல்கள் வேறு. அந்தச் சமயத்தில் ஒரு வாய்ப்பு தேடி வருகிறது.

டாக்டர் ஒருவருக்கு டிரைவர் தேவைப்படுகிறது. போய் நிற்கிறார் டோனி. அவர் டாக்டர் அல்ல. டாக்டரேட் பெற்ற இசைக்கலைஞர். டான் ஷிர்லே ஒரு கருப்பின இளைஞர். தன்னுடைய அபாரமான இசைத்திறமை காரணமாக உயர்வர்க்க சூழலை வந்தடைந்திருக்கிறார். பல்வேறு மாவட்டங்களில், இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் இசை நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறார் ஷிர்லே. அதற்கான வாகன ஓட்டுநர் பணிக்காகத்தான் ஆள் தேவைப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்படும் நபர் வெறும் டிரைவராக இருந்தால் மட்டும் போதாது. செல்லும் வழியில் சச்சரவுகள் ஏற்பட்டால் அதை சமாளிக்கவும் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

சமகாலத்தை விடவும் நிறவெறி அதிகமாக இருந்த காலக்கட்டம் அது. கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் எளிதில் தாக்குதல் மற்றும் வழிப்பறிக்கு ஆளாக வேண்டிய சூழல் நேரக்கூடும். டோனி போன்ற திடகாத்திர்களால்தான் இதைச் சமாளிக்க முடியும். நேரெதிர் குணாதிசயங்களைக் கொண்ட இந்த இரண்டு நபர்கள் மேற்கொள்ளும் இந்தப் பயணத்தில் பல சுவாரசியமான, நெகிழ வைக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. நிறம், இனம், வர்க்கம் போன்ற கற்பிதங்களைத் தாண்டி சகமனிதனின் மீதான அன்பு மட்டுமே உண்மையானது என்பதை பல காட்சிகள் அழுத்தமாகத் தெரிவிக்கின்றன. கடைசிக்காட்சியைப் பார்த்து நெகிழாமல் இருக்கவே முடியாது.

**

இயக்குநர் பீட்டர் ஜான், இந்த இரண்டு பிரதான பாத்திரங்களையும் மிக சுவாரசியமாக வடிவமைத்திருக்கிறார். டோனி திடகாத்திரன். எளிதில் கோபப்படுபவன். ஆனால் தனது குடும்பத்தாரிடம் பொங்கி வழியும் அன்பைச் செலுத்துபவன். பணத்திற்காக சில ஜாலியான உதிரிக்குற்றங்களைச் செய்பவன். ஆனால் சுயமரியாதை உள்ளவன். அவனாக விரும்பி ஒரு பணியை மேற்கொண்டால்தான் உண்டு. விலைக்கு வாங்கி விட முடியாது. கருப்பினத்தவர்களின் மேல் மனவிலகல் கொண்டவன். என்றாலும் குடும்பச் சூழல் காரணமாக, கருப்பினத்தைச் சேர்ந்த ஷிர்லேவிடம் பணிக்குச் சேர்கிறான்.

டோனி என்கிற இந்த அற்புதமான பாத்திரத்தை, Viggo Mortensen மிகத்திறம்பட கையாண்டிருக்கிறார். அலட்சியமான உடல்மொழி, பாமரத்தனமான நடவடிக்கைகள், அவற்றில் இருக்கும் அடிப்படையான நேர்மை என்று பல காட்சிகளில் தன் பாத்திரத்தை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆஸ்கர் விருதிற்காக ‘மிகச்சிறந்த நடிகர்’ பட்டியலில் நாமினேட் ஆகியிருக்கிறார்.

இதைப் போலவேதான் ஷிர்லே பாத்திரமும். Mahershala Ali என்கிற இளம் நடிகர் இதில் அசத்தியிருக்கிறார். உயர்குடிகளுக்கான நாசூக்கான உடல்மொழியை படம் முழுவதும் கச்சிதமாகப் பின்பற்றியிருக்கிறார். தன் இனத்தைச் சேர்ந்த அடித்தட்டு மக்களிடமும் இணைய முடியாமல் அதே சமயத்தில் கருப்பர் என்கிற காரணத்திற்காகவே வெள்ளையர்களின் நிராகரிப்பையும் எதிர்கொள்ளும் மனத்தத்தளிப்பை அடக்கமான தொனியில் பல காட்சிகளில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தில் ஓர் அழகான காட்சி வருகிறது. முக்கியமானதும் கூட. வாகனம் பழுதடைவதால் ஓரிடத்தில் நிற்கிறது. அதைக் கிளப்புவதற்கான முயற்சிகளை  டிரைவர் டோனி மேற்கொள்கிறார். எதிரேயுள்ள ஒரு வயல்வெளியில் கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகிறார்கள். ஒரு கருப்பருக்கு, வெள்ளையர் பணிபுரியும் காட்சியை அவர்கள் வியப்பும் திகைப்புமாக பார்க்கிறார்கள். ‘நீங்கள் அடிமைகள்’ என்பது மறுபடியும் மறுபடியும் அவர்களிடம் விதைக்கப்பட்டிருக்கும் சூழலில், இப்படியொரு காட்சியை அவர்களால் நம்ப முடிவதில்லை. வசனம் எதுவுமில்லாமல் மெளனமாக கடக்கும் இந்தக் காட்சி பல ஆழமான செய்திகளைச் சொல்கிறது.

இந்தப் பயணத்தில், கருப்பினத்தவர்கள் வழக்கமாக எதிர்கொள்ளும் பல அவமதிப்புகளை ஷிர்லேவும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. விரும்பும் ஆடையை வாங்க முடிவதில்லை. அவசரத்திற்கு கழிவறையை உபயோகப்படுத்த முடிவதில்லை. உணவகத்தில் நுழைய அனுமதியில்லை. அவரது இசைத்திறமையையும் உயர்குடிகளுக்கான சங்கீதத்தையும் நுகரும் வெள்ளையர் சமூகம், மற்ற சமயங்களில் இவரைக் கருப்பராக ஒதுக்கி வைக்கிறது. ஆனால் அத்தனை அவமதிப்புகளையும் சகிப்புத்தன்மையுடன் கடக்கிறார் ஷிர்லே. ‘எந்தவொரு சூழலிலும் தனது நாகரிகத்தை ஒரு மனிதன் கைவிடக்கூடாது’ என்பது அவரது கொள்கை. தகராறில் ஈடுபடும் டோனிக்கும் இதையே உபதேசிக்கிறார்.

‘இந்த ஆசாமி ஏன் இத்தனை அவமதிப்புகளை தாங்கிக் கொண்டு இது போன்ற பகுதிகளுக்கெல்லாம் பயணம் மேற்கொள்ள வேண்டும்?” என்று டோனிக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ‘தன் சொந்த ஊரில் அவரால் இதைவிடவும் அதிகமாக சம்பாதிக்க முடியும். ஆனால் உழைப்பு மற்றும் திறமை காரணமாக ஒரு கருப்பரால் இந்த அளவிற்கு உயர முடியும் என்பதை வெள்ளையர்களுக்கு மறைமுகமாகச் சொல்வதே அவருடைய நோக்கம்” என்கிறார்கள் இதர இசைக்கலைஞர்கள். அதைக் கேட்டு நெகிழ்ந்து போகிறார் டோனி.

**

இந்த திரைப்படத்தை ஒரு வகையில் ‘Road Movie’ எனலாம். இந்தப் பயணத்தில் டோனிக்கும் ஷிர்லேவிற்கும் இடையே நிகழும் உரையாடல்களும் உரசல்களும் சுவாரசியமாக இருக்கின்றன. சாலையோர விற்பனைக் கடையின் அருகே கீழே விழுந்து கிடக்கும் ஒரு ராசிக்கல்லை ஜாலியாக எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார் டோனி. “அதை விலை கொடுத்து வாங்கு அல்லது எடுத்த இடத்தில் வைத்து விடு. அப்படிச் செய்யாவிட்டால் இந்தப் பயணம் தொடராது” என்று கறாராகச் சொல்கிறார் ஷிர்லே. ‘இதெல்லாம் ஒரு விஷயமா?” என்று வாக்குவாதம் செய்தாலும் வேண்டாவெறுப்பாக அதைப் பின்பற்றுகிறார் டோனி.

வறுத்த கோழியை சாப்பிட்டு பழக்கமில்லாத ஷிர்லேவிற்கு ‘கென்ட்டகி வந்துட்டு வறுத்த கோழி சாப்பிடாம போறவன் ஒரு மனுஷனா?” என்கிற அதட்டலுடன்  ஒருகோழித்துண்டை அளிக்கிறார் டோனி. முதலில் மறுக்கும் ஷிர்லே, டோனியின் பிடிவாதத்தைக் கண்டு ‘காரில் சாப்பிடுவதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லையே?” என்று சம்பிரதாயத்தை எதிர்பார்க்க, ‘அப்படியே கையில் வெச்சு சாப்பிடுங்க.. இதெல்லாம் ஒரு விஷயமா?” என்று டோனி சொல்வதை அதன் பின்னிருக்கும் இயல்பான அன்பு காரணமாக ஏற்றுக் கொள்கிறார் ஷிர்லே.

ஷிர்லேவிற்கு நிகழும் அவமதிப்புகளை டோனியால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. அதற்காக பல இடங்களில் போராடுகிறார். கைகலப்பில் ஈடுபடுகிறார். துவக்கத்தில் ஷிர்லேயின் மீது அவருக்கு எந்தவொரு ஈடுபாடு இல்லாவிட்டாலும் மெல்ல மெல்ல அவரது இசைத்திறமையையும் நல்லியல்புகளையும் புரிந்து கொள்கிறார். ‘ஷிர்லே ஒரு மேதை’ என்று தன் மனைவிக்கு எழுதும் கடிதத்தில் குறிப்பிடுகிறார். இவர் மனைவிக்கு காட்டுமிராண்டித்தனமான மொழியில் எழுதும் கடிதங்களை ஒரு கட்டத்தில் ஷிர்லே திருத்தி கவிதைத்தனமான வாக்கியங்களைக் கற்றுத்தருவதும் அதை வாசிக்கும் டோனியின் மனைவி அகம் மகிழ்வதும், பிறகு டோனியே அது போன்று எழுதும் நிலைக்கு மேம்படுவதும் அற்புதமான காட்சிகள்.

ஓர் உணர்ச்சிகரமான சூழலில் டோனிக்கும் ஷிர்லேவிற்கும் இடையே சூடான வாக்குவாதம் ஏற்படுகிறது. “கருப்பினத்தவர் என்பதால் நீங்கள் மட்டும் பல அவமதிப்புகளைச் சந்திக்கவில்லை. நான் வெள்ளை நிறத்தவன்தான். ஆனால் பெரும்பாலான கருப்பர்களைப் போலவே நானும் விளிம்புநிலைச் சமூகத்தைச் சேர்ந்தவன். நியூயார்க் நகரத்தின் சேரிகளிலும் சாலையோரங்களிலும் அவதிப்பட்டவன். இத்தாலியிலிருந்து வந்தவன் என்கிற காரணத்திற்காக அது சார்ந்த அவமதிப்புகளைச் சந்திக்கிறவன்” என்று வெடிக்கிறார் டோனி. “என்னால் அடித்தட்டு கருப்பர்களுடன் ஒன்ற முடியவில்லை. என் இசையை மட்டும் நுகரும் வெள்ளையர் சமூகம் இதர சமயங்களில் என்னை கருப்பன் என்கிற முத்திரையோடு வெளியே துரத்தி விடுகிறது. இரண்டிலும் இணைய முடியாமல் தனிமையுணர்ச்சி என்னைக் கொல்வதைப் பற்றி உனக்குத் தெரியுமா?” என்று பதிலுக்கு வெடிக்கிறார் ஷிர்லே. மிக உணர்ச்சிகரமான காட்சி இது.

**

டான் ஷிர்லேவின் பாத்திரம் உண்மையானது. இவர் ஒரு அமெரிக்க இசைக்கலைஞர். ஜாஸ் இசையை செவ்வியல் தன்மையில் இசைத்து உயர்குடியினரிடம் புகழ் பெற்றவர். இந்த திரைப்படத்தில் ஒரு காட்சி வருகிறது. “நீங்கள் கருப்பினத்தவர்கள் உருவாக்கும் வெகுசன இசை ஆல்பங்களைக் கேட்டதில்லையா?” என்று கேட்கிறார் டோனி. தன்னை உயர்வர்க்கத்தினரிடம் மட்டுமே கவனமாக அடையாளப்படுத்திக் கொள்ளும் ஷிர்லே அதில் அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை.

திரைப்படத்தின் கடைசிப் பகுதியில், வெள்ளையர்களின் சமூகத்தினரால் அவமதிக்கப்படும் ஷிர்லே, ‘எந்தச் சூழலில் இசை நிகழ்ச்சிக்கு பாதிப்பு வரக்கூடாது’ என்கிற தன் கறாரான வழக்கத்திற்கு மாறாக, அந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு கோபத்துடன் கிளம்புகிறார். அடித்தட்டு கருப்பின மக்கள் புழங்கும் ஒரு விடுதிக்கு அவரை அழைத்துச் செல்கிறார் டோனி. வெகுசன மக்கள் விரும்பும் இசையை அங்கு உற்சாகமாக வாசிக்கிறார் ஷிர்லே. மக்கள் அவரைப் பாராட்டி மகிழ்கிறார்கள். இசை என்பது உயர்குடிகளுக்கானது மட்டுமல்ல என்கிற பாடத்தை டோனியின் வழியாக கற்கிறார் ஷிர்லே.

ஏற்கெனவே பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றிருக்கும் ‘Green Book’, ‘சிறந்த திரைப்படம்” ‘சிறந்த நடிகர்” ‘சிறந்த துணைநடிகர்’ என்று மூன்று ஆஸ்கர் நாமினேஷன்களைப் பெற்றுள்ளது. டான் ஷிர்லேவாக நடித்திருக்கும் Mahershala Ali, 2006-ல் வெளியான ‘Moonlight’ என்கிற திரைப்படத்திற்காக ‘சிறந்த துணைநடிகர்’ பிரிவிற்கான ஆஸ்கர் விருதை ஏற்கெனவே பெற்றுள்ளார். இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த ஒருவர், இந்தப் பிரிவிற்கான விருதைப் பெற்றது அதுவே முதன்முறை. இந்த திரைப்படத்திற்காகவும் அதே விருதை Mahershala Ali மீண்டும் பெறக்கூடும்.

கருப்பினத்தவர்கள் தங்கக்கூடிய விடுதிகள், பாதைகள் போன்ற பயண விவரங்களைக் கொண்டதுதான் ‘கிரீன் புக்’. மானுட சமத்துவத்திற்கு எதிரான இது போன்ற அடையாளங்களும் கற்பிதங்களும் பாகுபாடுகளும் வருங்காலத்திலாவது கணிசமாக குறைய வேண்டும். அதற்கான வெளிச்சத்தின் பாதையை அற்புதமாக ஏற்றி வைத்திருக்கிறது இந்த திரைப்படம்.  


(குமுதம் தீராநதி -  மார்ச்  2019 இதழில் பிரசுரமானது)  


suresh kannan

No comments: