Thursday, November 21, 2019

The Night Manager (TV series)




நண்பர் கார்த்திக் நாகராஜ் பரிந்துரையில் ‘The Night Manager’ என்கிற தொலைக்காட்சித் தொடரைப் பார்த்தேன். மனிதருக்கு ஸ்பை திரில்லர் என்றால் அல்வா மாதிரி. அதிலும் பிரிட்டிஷ் தயாரிப்பு என்றால் திருநவேலி அல்வா மாதிரி. எனவே அது போன்றவற்றைத்தான் பெரும்பாலும் பரிந்துரைப்பார்.

ஹாலிவுட் தயாரிப்புகளைப் போன்று பரபரப்பான காட்சிகளோடு அல்லாமல் நிதானமாக ஆனால் அழுத்தமாக நகரும் தன்மையைக் கொண்டவை பிரிட்டிஷ் தொடர்கள். உயர்தர ஒயினை மெல்ல ருசித்துப் பருகுவது போல. மெல்லத்தான் போதை ஏறும். (நான் சாப்பிட்டதில்லை. கேள்வி ஞானம்தான்).

2011-ல் நிகழ்ந்த எகிப்தியப் புரட்சியோடு இந்தத் தொடர் ஆரம்பிக்கிறது. கெய்ரோவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரவு மேலாளராக பணியாற்றுபவன் ஜோனதன். அங்கு உயர்தர ஸூட்டில் தங்கியிருக்கும் இளம் பெண்ணான ஸோஃபி இவனை அவ்வப்போது சந்திக்கிறாள். கெய்ரோவின் பாதியை வளைத்துப் போட்டிருக்கும் மாஃபியா ஆசாமி அஹமதின் வைப்பாட்டி அவள். பாவப்பட்ட ஜென்மங்களுள் ஒன்று.

நகலெடுக்கச் சொல்லி அவள் தரும் ஆவணத்தை ஓரக்கண்ணால் பார்த்து திகைக்கிறான் ஜோனதன். கனரக ஆயுதங்கள் சப்ளை தொடர்பான ஆவணம் அது. இதன் மூலம் சோஃபி இந்த விஷயத்தை இவனிடம் மறைமுகமாக தெரிவிக்க விரும்புகிறாள் என்றும் புரிந்து கொள்ளலாம். அவளின் உயிருக்கு ஆபத்தும் இருக்கிறது.

இந்த ஆவணத்தை லண்டனில் உள்ள IEA-விற்கு அனுப்புகிறான் ஜோனதன். அவ்வளவுதான் விஷயம் பயங்கரமாக பற்றிக் கொள்கிறது. ஏனெனில் இதன் பின்னிருப்பது ஒரு சர்வதேச கும்பல். பொதுவில் தன்னை தொழிலபதிராகவும் பரோபரகாரியாகவும் காட்டிக் கொள்ளும் ரோப்பர் என்னும் ஆசாமி இந்த வலைப்பின்னலின் தலைமையில் இருக்கிறார். ஆனால் இந்த விஷயம் உளவுத்துறை வட்டாரத்தில் மட்டும் உள்ள ரகசியம். ரோப்பரின் அடையாளமோ, பெயரோ எங்கும் இருக்காது.

லண்டன் IEA-வில் உள்ள ஏன்ஜெலா, ரோப்பரை மோப்பம் பிடிப்பதற்காக பல ஆண்டுகளாக முயன்று கொண்டிருப்பவள். ஜோனதன் அனுப்பும் ஆவணம் அவளுக்கு பயங்கர உற்சாகத்தை அளிக்கிறது. ஜோனதன் மற்றும் ஆன்ஜெலா கூட்டணி ரோப்பரை பின்தொடர்கிறது. ஆனால் இதில் பல அரசியல் குறுக்கீடுகளும் நிகழ்கின்றன.

**

ஸ்பை திரில்லருக்கேயுரிய சில கிளிஷேக்கள் இருந்தாலும், இந்தத் தொடர் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தத் தவறவில்லை. ஒரு எபிஸோட் முடியும் போது அடுத்ததை பார்க்காமல் இருக்க கடுமையான மனவைராக்கியம் இருக்க வேண்டும்.

இந்தத் தொடரில் எனக்குப் பிடித்த நடிப்பாக, Hugh Laurie ஐ சொல்வேன். மனிதர் அமைதியாக ஆனால் அழுத்தமான வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார். இறுதிக்காட்சியில் கூட இவர் காட்டும் தெனாவெட்டு ரசிக்க வைக்கிறது. 

இதற்கு அடுத்தபடியாக ஜோனதன். தொடரின் ஹீரோ. ஆண்களும் பார்த்து பொறாமைப்படும்படியான அழகு மற்றும் உடல் கச்சிதத்துடன் இருக்கிறார். எனவே ஜேம்ஸ் பாண்ட் பாணியில் இவரிடம் பெண்கள் தாமே முன்வந்து தன்னை ஒப்படைக்கிறார்கள். ஏன்ஜெலாவாக நடித்திருக்கும் Olivia Colman-ம் கவர்கிறார்.

உலகில் நடைபெறும் பல்வேறு போர்களுக்குப் பின்னால் இந்த ஆயுத வியாபாரிகள் இருக்கிறார்கள். பல்வேறு மனித உயிர்கள் போவதோ, கை,கால் இழந்து மனிதர்கள் அவதியுறுவதோ. அவர்களின் குடும்பங்கள் சின்னா பின்னாமாவதோ இவர்களை சற்றும் அசைப்பதில்லை. மில்லியன் டாலர்களில் சம்பாதிப்பதே இவர்களுக்கு பிரதானமாக இருக்கிறது. உலகெங்கிலும் உள்ள தீவிரவாதிகள், போராட்டக்குழுக்கள், பயங்கரவாதிகள் போன்ற தொடர்புகளோடு ‘போர்’களை உருவாக்குவதிலும் இவர்களின் விற்பன்னர்களாக இருக்கிறார்கள்.

இந்த ஆயுத வியாபாரிகளோடு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள உயர்மட்ட அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டாக இருக்கிறார்கள். ஆயுத வணிகர்கள் இறைக்கும் மில்லியன்களை வாங்கிக் கொண்டு சொந்த மக்களுக்கே துரோகம் செய்கிறார்கள்.

இந்தத் தொடரின் மேக்கிங்  அட்டகாசமாக இருக்கிறது. ஆயுத வணிகம் எப்படியெல்லாம் உலகம் முழுக்க பரவுகிறது, எவ்வாறு நடைபெறுகிறது, அதன் பின்னணியில் எவரெல்லாம் இருக்கிறார்கள் என்பதின் ஒரு துளியை இந்தத் தொடரின் மூலம் அறிய முடியும்.


suresh kannan

No comments: