Saturday, November 02, 2019

A Twelve-Year Night | 2018 | Uruguay | இயக்குநர் - Álvaro Brechner








அயல் திரை  - 9


பன்னிரெண்டு வருட தனிமை



அதுவொரு தனிமைச்சிறை. சக மனிதர்கள் எவரையும் அவர்கள் பார்க்க முடியாது. காற்றும் வெளிச்சமும் கூட அனுமதிக்கப்பட்ட துளைகளின் வழியாக மட்டுமே வரும். அந்த மூவரையும் உடனே கொல்வது எதிரிகளின் நோக்கமில்லை. தனிமையின் உக்கிரத்தில் அவர்கள் மனம் பிறழ்ந்து மெல்ல சாக வேண்டுமென்பதுதான். இப்படியாக ஒரு வருடமல்ல, இரண்டு வருடமல்ல, ஏறத்தாழ பன்னிரெண்டு வருடங்கள் அவர்கள் அடைபட்டிருந்தார்கள். தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சித்திரவதைகளை மனஉறுதியுடனும் சகிப்புத்தன்மையுடனும் எதிர்கொண்டார்கள்.

பிறகு அரசியல் மேகங்கள் இடம் மாறின. பொதுமன்னிப்பின் பேரில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் பின்னாளில் அந்த தேசத்தின் பிரதமர் ஆனார்.

A Twelve-Year Night – சமீபத்தில் நிகழ்ந்த சென்னை சர்வதேச திரைவிழாவில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம், திரைப்பட ஆர்வலர்களின் பரவலான வரவேற்பைப் பெற்றது. உருகுவே நாட்டின் சார்பில் ஆஸ்கர் விருதிற்காக அனுப்பப்பட்டது. கெய்ரோ சர்வதேச திரைவிழாவில் ‘கோல்டன் பிரமிட்’ விருது பெற்றது.

**

வருடம் 1973. உருகுவே தேசத்தின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியிருந்தது. எனவே அது தொடர்பான சர்வாதிகார நிகழ்வுகள் தினம் தினம் நிகழ்ந்தன. MLN-T என்பது இடதுசாரிகளின் கொரில்லா அமைப்பு. ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்த இவர்களை தேடித் தேடி கொன்றொழித்தது ராணுவம். அவ்வாறான தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்டவர்கள் மூவர். José Mujica, Mauricio Rosencof மற்றும் Eleuterio Fernández Huidobro. சம்பந்தப்பட்ட இயக்கத்தின் முன்னணியில் இருப்பவர்கள்.

இவர்களை சட்டவிரோதமாக தனித்தனியான தனிமைச்சிறையில் அடைக்கும் ராணுவம், ‘எவரிடமும் பேசக்கூடாது’ என்பது உள்ளிட்ட பல வதைகளைச் செய்கிறது. பெரும்பாலும் முகமூடி அணிய வைக்கப்பட்டிருக்கும் இவர்கள், அவ்வப்போது இடம் மாற்றப்பட்டாலும் வெளிஉலகை பார்க்கவே முடியாது. 1973 முதல் 1985-ம் ஆண்டு வரை இவ்வாறாக பல்வேறு துன்பங்களுக்கு அவர்கள் ஆளாகிறார்கள்.

உண்மைச்சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம், அவர்கள் அனுபவிக்கும் அதே மூச்சு முட்டும் அனுபவத்தை நமக்கும் கடத்தும் வகையில் உண்மைக்கு நெருக்கமாக பயணிக்கிறது. இரும்புக் கதவுகள் ஒங்கி சாத்தப்படும் ஓசை, பூட்ஸ் கால்களின் ஒலி, கைவிலங்குகள் மாட்டப்படும் சத்தம் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட சப்தங்கள் மட்டுமே இந்த திரைப்படத்தில் பதிவாகியிருக்கின்றன.

ஆனால், மூச்சு முட்டும் இந்த கொடுமையான அனுபவத்திற்கு இடையேயும் தங்களின் சிறிய விடுதலையை எவ்வாறு அவர்கள் தேடிக் கொள்கின்றனர் என்பது நெகிழ்வூட்டும் காட்சிகளாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நவீன கால மனிதனை கற்கால உலகத்தின் தனிமையில் தள்ளினாலும் அவன் மீண்டும் ஒரு புதிய மொழியையும் தொடர்பையும் உருவாக்கி விடுவான். இந்த உண்மை இந்த திரைப்படத்தில் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் முட்டியால் சுவற்றைத் தட்டி ஒலியெழுப்புவதின் மூலம் தங்களுக்கு என ஒரு அகராதியை உருவாக்கிக் கொண்டு உரையாடுகிறார்கள். செஸ் விளையாடுகிறார்கள்; கவிதைகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்; சாமர்த்தியமாக கொண்டுவரப்படும் செய்தித்தாள்களின் மூலம் சமகால செய்திகளை உற்சாகமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். குறிப்பாக கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற செய்தியைக் கேட்டு இவர்கள் மகிழ்ச்சியடையும் காட்சி, அவர்களின் ரத்தத்திலேயே அந்த விளையாட்டு ஊறிப்போயிருக்கும் கலாசாரப் பெருமிதத்தை முன்வைக்கிறது.

**

இந்த மூவரில் Mauricio கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். தனது அபாரமான எழுத்தின் மூலம் சிறைக்காவலர்களுக்கு கடிதம் எழுதித் தந்து அவர்களின் அந்தரங்கமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் அதன் மூலம் சில சலுகைகளைப் பெறுவதும் மிக சுவாரசியமான காட்சிகள். மனப்பிறழ்வு கட்டத்தை அவர்கள் நெருங்கும் காட்சிகளில் Eleuterio பாத்திரத்தில் நடித்த Alfonso Tort சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார். கழிவறையில் இவருக்கு நேரும் அற்பமான சிக்கலுக்காக ஒட்டுமொத்த ராணுவமே விவாதிப்பது அவல நகைச்சுவைக்கு சிறந்த உதாரண காட்சி.

இந்த மூவரின் உறவினர்களைக் காண மிகச் சொற்ப நேரமே அனுமதிக்கப்படுகிறது. அந்தக் குறைந்த நேரத்தில் தன் மகளிடம் கதை சொல்லும் Alfonso Tort நெகிழ வைக்கிறார். José Mujica-ன் தாயாருக்கு அவர் இருக்கும் தகவல் மறைக்கப்பட்டு கொட்டும் மழையில் காக்க வைத்து அவரைத் திருப்பியனுப்பும் அவலமும் நடக்கிறது. தங்களின் உறவினர்களையும் வெளியுலகத்தின் இயற்கை காட்சிகளையும் தங்களின் மனக்கண்ணில் கண்டு தங்களைத் தேற்றிக் கொள்ளும் காட்சிகள் உருக வைக்கின்றன.

மிக இருண்மையான, துயரமான அம்சத்தைக் கொண்டிருந்தாலும் இந்த திரைப்படம் எந்த இடத்திலும் சுவாரசியம் குன்றுவதில்லை. அந்தளவிற்கான அபாரமான திரைக்கதை. Alfonso Tort மனம் குழம்பும் காட்சிகள் நான்-லீனியர் பாணியில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

**

அரசியல் சூழல் மாறி ராணுவ சர்வாதிகாரம் மறைந்து ஜனநாயகம் மலரும் போது இது போல் கைது செய்யப்பட்ட பலரும் 12 வருடங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்படுகின்றனர். உறவினர்களும் பொதுமக்களும் இவர்களுடைய வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். மிக அற்புதமான காட்சி இது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிறகும் தங்களின் தேசத்திற்காக துயரப்பட்டவர்களை மக்கள் மறப்பதில்லை என்பது நெகிழ்வூட்டுகிறது.  இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பல தலைவர்கள் குறுகிய காலத்திலேயே மறக்கப்பட்டதை ஒப்பிட்டு பெருமூச்சு விடவே தோன்றுகிறது.

Carlos Catalán-ன் சிறப்பான ஒளிப்பதிவு இந்தப் படைப்பின் குறிப்பிடத்தக்க அம்சம். நாமே அந்த தனிமைச் சூழலில் மாட்டிக் கொண்ட உணர்வை தன்னுடைய அபாரமான ஒளிப்பதிவின் மூலம் ஏற்படுத்தி விடுகிறார். Federico Jusid-ன் பின்னணி இசையும் அற்புதமானது. மிக அவசியமான இடங்களில் மட்டுமே ஒலிக்கும் இசை, காட்சியின் தன்மையை வலுவாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

வெளியேறவே முடியாத சூழலாக இருந்தாலும் பிரதான பாத்திரங்கள் தன் நம்பிக்கையும் மனஉறுதியையும் கைவிடாத இந்த திரைப்படம், The Shawshank Redemption, Papillon போன்ற முந்தைய உன்னதமான முயற்சிகளையும் நினைவுப்படுத்துகிறது. தமிழ்ச் சூழலோடு ஒப்பிடும் போது முன்னாள் பிரதமரின் கொலைவழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் எழுவரையும் தன் மகனின் விடுதலைக்காக பல போராட்டங்களை நிகழ்த்தி வரும் அற்புதம்மாளையும் இந்த திரைப்படம் உருக்கத்துடன் நினைவுப்படுத்துகிறது.

உண்மைக்கு மிக நெருக்கமாக இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் Álvaro Brechner. ஒரு பக்கம் தனிமைச் சிறையில் அவதிப்படும் இவர்களின் துயரம் வலுவாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் MLN-T இயக்கம் நிகழ்த்திய வன்முறைகளின் மீதான விமர்சனங்களும் இன்னொரு புறம் இருக்கின்றன.

தவறவிடக்கூடாத திரைப்படம். 

(குமுதம் தீராநதி -  பிப்ரவரி  2019 இதழில் பிரசுரமானது)  

suresh kannan

1 comment:

ஹரி நிவாஸ் said...

welcome back your i cannot comment on your face book account and for me blog is much more closer than FB nice that you are back on track and good to know films , i got to reaD YOUR BLOG WAY BACK IN 2013 AND FROM THEN IAM FOLLOWING YOUR BLOG BUT IN BETWEEN THERE WHERE NO POSTS HMM GOOD TO SEE ALL THE STUFF BACK KEEP POSTING MY FRINED .....