Friday, November 22, 2019

'கபாலி'யின் வணிக அரசியல்







அதுவரை இரண்டு  திரைப்படங்களை மட்டும் இயக்கியுள்ள ஓர் இளம் இயக்குநரிடம் தம்மை இயக்குவதற்கான படவாய்ப்பை ரஜினிகாந்த் தந்திருக்கிறார் என்ற செய்தி வெளியானவுடன் தமிழ் திரையுலகில் மட்டுமல்ல ரசிகர்களிடையேயும் பரபரப்பு கூடியது.

வில்லன் நடிகராக தம் நடிப்பை துவங்கிய ரஜினிகாந்த் பிறகு குணச்சித்திர நடிகராக பரிணமித்து பின்பு நாயகனாக உயர்ந்தார். ஒரு கட்டத்திற்குப் பிறகு அவரை வைத்து வெகுசன மசாலாக்களை மட்டுமே உருவாக்க முடியும் என்கிற சூழலாக அது மாறியது. குறிப்பாக 'பாட்ஷா' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரது வணிக மதிப்பும் சந்தையும் ஏற்றம் பெற்றது. அந்தச் சூழலில் நிகழ்ந்த அரசியல் சர்ச்சையையும் திரைப்படத்திற்கான  வெற்றிகரமான கச்சாப்பொருளாக ரஜினியும் அவரது திரைப்பட இயக்குநர்களும் பயன்படுத்திக் கொண்டார்கள். தம் அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்காமல் 'சரியான நேரத்துல வருவேன், அல்லது 'வரமாட்டேன்' என்கிற கண்ணாமூச்சி ஆட்டத்தை சில காலம் நிகழ்த்தினார்.

திரையில் அடித்தட்டு மக்களுக்காக உதவும் பாவனையில் இயங்கும் அவதார நாயகர்களை நிஜத்திலும் நம்பி 'இவராவது நம்மை காப்பாற்ற மாட்டாரா' என்கிற ஏக்கத்தில் நடிகர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்த அனுபவமுள்ள தமிழ் சமூகத்திற்கு இவரும் ஒரு நம்பிக்கையான அடையாளமாகத் தெரிந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு அவரது  அரசியல் விளையாட்டு   சலித்துப் போய் எரிச்சலையூட்டியது. ஏறத்தாழ இதே காலக்கட்டத்தில்  ஒரே மாதிரியான தேய்வழக்கு வடிவமைப்பில் அமைந்த இவரது மசாலா திரைப்படங்களும் சலிப்பூட்டத் துவங்கின. கடந்த சில ஆண்டுகளாகவே அவரது சூப்பர் ஸ்டார் எனும் கிரீடத்தில் மெல்ல விரிசல் விடத் துவங்கியது. போதாக்குறைக்கு  இதர மசாலா மன்னர்களான விஜய், அஜித் போன்றவர்களின் வணிக மதிப்பு உயரத் துவங்கியதும் உப காரணங்களில் ஒன்று.

பாபா திரைப்படத்தின் அப்பட்டமான வணிக தோல்வி அந்த வீழ்ச்சியின் முதல் சமிக்ஞை. மோசமான திரைக்கதையாக இருந்தால் ரஜினிகாந்த்தின் திரைப்படங்களும் தோற்கும் என்கிற முக்கியமான செய்தியை மக்கள் சமர்ப்பித்தார்கள். பின்பு உருவான சந்திரமுகி, எந்திரன் போன்றவைகளின் மூலமாக அவர் மீண்டும் மேலெழ முடிந்ததென்றாலும் பரமபத பாம்பில் சறுக்குவது போல குசேலன், கோச்சடையானில் மறுபடியும் சறுக்கி விழ நேர்ந்தது. ஹாலிவுட் திரைப்படங்களைப் போல அனிமேஷன் திரைப்படங்களுக்கென ஒரு சந்தையை தமிழிலும் உருவாக்கக்கூடிய சாத்தியத்தை, முறையற்ற ஒருங்கிணைப்பினாலும்  மோசமான உருவாக்கத்தினாலும் கோச்சடையான் இழந்தது. அதன் பிறகு வெளியான 'லிங்கா' திரைப்படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

ரஜனிகாந்த் உச்ச நட்சத்திரமாக உயர்ந்த பிறகு அவரை வெகுசன மசாலா இயக்குநர்கள் மட்டுமே கையாண்டு கொண்டிருந்தனர். ஆனால் துவக்க கால திரைப்படங்களில் வெளிப்பட்ட ரஜினி எனும் இயல்பான நடிகனை மீண்டும் காணும் விருப்பம் ஏறத்தாழ எல்லோரிடமும் இருந்தது. வடக்கில் சூப்பர் ஸ்டாராக இருந்த அமிதாப் பச்சன், ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு தனது வயதுக்கேற்ற பாத்திரங்களிலும் இளம்  இயக்குநர்களிடம் தம்மை ஒப்படைத்துக் கொண்டு வித்தியாசமான படங்களில் நடிப்பதைப் போன்று ஏன் ரஜினியும் அதைப் பின்பற்றக் கூடாது என்கிற பொதுவான எதிர்பார்ப்பு, அவரது ரசிகர்கள் உட்பட்டு பெரும்பாலோனோரிடம் இருந்தது. ஷாரூக்கான், சல்மான்கான் என்று இதர நடிகர்களின் செல்வாக்கு உயர்வினால் அமிதாப் தன் வணிக மதிப்பை இழந்தனின் காரணமாகவே வேறுவழியில்லாமல் இவ்வாறான மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்தார் என்பது ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் ஏறத்தாழ ரஜினியும் இங்கு அந்தப் பாதையில்தான் சென்று கொண்டிருந்தார் என்பதை கவனிக்க வேண்டும்.

வழக்கமான இயக்குநர்களிடமிருந்து விலகி ஒரு புதிதான இளம் படைப்பாளியிடம் தம்மை ஒப்படைப்பதின் மூலம் அந்தப் பாதையை செப்பனிட வேண்டிய நெருக்கடியும் கட்டாயமும் ரஜினியின் தரப்பிற்கு ஏற்படுகிறது.  இந்த நிலையில் ரஜினி மற்றும் பா.ரஞ்சித் கூட்டணியின் அறிவிப்பு வெளிவந்த போது அதில் தென்பட்ட புத்துணர்ச்சி காரணமாகவே அது  பரவலாக வரவேற்கப்பட்டது. 'அட்டகத்தி' 'மெட்ராஸ்' எனும் இரண்டு திரைப்படங்களின் மூலம் கவனிக்கத்தக்க ஓர் இயக்குநராக ரஞ்சித்த இருந்ததால் இந்தக் கூட்டணியின் மீது நம்பிக்கையும் ஆர்வமும் ஏற்பட்டதில் வியப்பில்லை. மட்டுமல்லாமல் 'முள்ளும் மலரும்' காளி போன்று ஒரு கதாபாத்திரத்தில் ரஜினியை தாம் சித்தரிக்க விரும்புவதாக ரஞ்சித் நேர்காணல்களில் தெரிவித்தது இந்த ஆர்வத்தைக் கூட்டியது.

***

தம் திரைப்படங்களில் மிக நுட்பமாக தலித் அரசியலை உரையாடுபவர் என்கிற கூடுதலான படிமம் இயக்குநர் ரஞ்சித்தின் மேல் உள்ளது. இதுவுமே கபாலி திரைப்படத்தின் மீதான  ஆர்வம் பெருக ஒரு காரணமாக இருந்தது. அதுவரை வில்லனின் அடியாளாகவும்  விளிம்புநிலைச் சமூகத்தின் அடையாளப் பெயராகவும் சினிமாவில் சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருந்த 'கபாலி' எனும் பெயரை நாயக அந்தஸ்திற்கு மேல்நிலையாக்கம் செய்தது குறிப்பிடத்தகுந்த விஷயம். ஆனால் 'கோட் அணிவது" போன்ற சில புற அடையாளங்களைத் தவிர்த்து கபாலி திரைப்படத்தின் மையம் தலித் அரசியல் சார்ந்த கருத்தியலை வலுவாக முன்வைக்கிறதா?

இரண்டே திரைப்படங்களை வைத்து ஒரு இயக்குநரின் படைப்புலகை அவதானிக்க முயல்வது சரியல்லதான் என்றாலும் தலித் சினிமா இயக்குநர் என்கிறற அடையாளம் ரஞ்சித்தின் மேல் உள்ளதால்  இதைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது. ரஞ்சித்தின் முதல் திரைப்படமான 'அட்டகத்தி' சில விமர்சகர்கள் கூறுவது போல் தலித் சினிமா அல்ல என்பதை தெளிவுப்படுத்த வேண்டியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்து இளைஞனின் பின்னணியையும் அதன் வாழ்வியல் கூறுகளையும் அத்திரைப்படம் கொண்டிருந்தாலும் அது பிரதானமாக உரையாடுவது, ஒரு இளைஞன் ஒரு பெண்ணின் காதலை அடைவதென்பது பார்வையற்றவன் ஒரு வண்ணத்துப்பூச்சியை பிடிப்பது போன்று சிரமமான காரியம் என்பதை இயல்பான நகைச்சுவையில் விவரிக்கிற திரைப்படம். ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காதல் தாபத்தோடு நாயகனை துரத்துகிற தமிழ் சினிமாக்களின் போலியான சித்தரிப்புகளை உடைத்துப் போட்டு ஒரு இளைஞன் காதலை சம்பாதிப்பதற்கு எப்படியெல்லாம் லோல்பட வேண்டியிருக்கிறது என்கிற யதார்த்தத்தை பேசிய திரைப்படம். மட்டுமல்லாமல் ஒருவனின் வாழ்வில் ஒரு காதல்தான் பூக்கும் அல்லது பூக்க வேண்டும் என்கிற விழுமியம் சார்ந்த கற்பித பிம்பங்களை உடைத்து ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வேறு வேறு காதல்களின் மீது உண்டாகும் இயல்பை முன்வைத்தது.

அடுத்த வந்த 'மெட்ராஸ்' திரைப்படத்தில் இயக்குநர் தம் அரசியல் சார்ந்த அடையாளத்தை இன்னமும் சற்று முன்னகர்த்தி உரையாட முயன்றார் என்றாலும் அது பூடகமான உரையாடலாகத்தான் இருந்தது. சென்னை போன்ற ஒரு தொன்மையான பிரதேசத்தின் அடித்தட்டு மக்கள் எவ்வாறு நெடுங்காலமாக ஆதிக்க அரசியல் சக்திகளால்  சுரண்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள் என்கிற உண்மையை 'மெட்ராஸ்' பேசினாலும் அது தலித் சினிமாவிற்கான துல்லியமான அடையாளமாக இல்லை.

பொதுவான மைய நீரோட்ட சினிமா வடிவமைப்பிற்கு இடையில் சாத்தியமான எல்லையில் நின்று தம் அரசியல் குரலை ஒலிக்க விடுவதை மட்டும்தான் இயக்குநர் தம்முடைய பாணியாக பின்பற்றுகிறார் என்பதை அவதானிக்க முடிகிறது.  இது புரிந்து கொள்ளக்கூடிய இயல்பான விஷயம்தான். சினிமா  என்பது பெரும் முதலீட்டில் உருவாகும் படைப்பு எனும் போது அதற்கேற்ற சமரசங்களோடுதான் அதில் இயங்க முடியும். ரஞ்சித் வெளிப்படையான அரசியல் உரையாடலாளரா அல்லவா என்கிற விவாதத்தைத் தாண்டி  நுண்ணுணர்வுள்ள காட்சிகளை உருவாக்குவதின் மூலம் தாம் ஒரு சிறந்த சினிமா படைப்பாளி என்கிற தகுதியை மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் அவர் நிறுவிக் கொண்டார்.

என்றாலும் கூட ரஞ்சித் என்கிற இயக்குநர் தலித் சமூகத்தின் சினிமாக் குரலாக ஆரவாரமாகவும் உற்சாகமாகவும் அடையாளம் காணப்படுவதில் கலாசார ரீதியிலான நியாயமுண்டு.  தமிழ் சினிமா துவக்கத்தில் உயர்சாதிகளாக கருதப்பட்டவர்களின் பங்களிப்பில் உருவானது. திராவிட இயக்க அரசியலுக்குப் பிறகு அது மெல்ல ஓய்ந்து இடைநிலைச்சாதிகள் தங்களின் சாதியப் பெருமிதங்களை சித்தரிக்கும் வெளியாக உருமாறியது. தமிழ் எழுத்துலகில் தொன்னூறுகளில் தலித் இலக்கியம் என்கிற வகைமை உருவானது போல், சில மெல்லிய விதிவிலக்குகளைத் தவிர்த்து, தலித் சமூகத்தின் கலாசாரக் கூறுகளை, அதன் துயரத்தை, வலியை, கலகத்தை அழுத்தமாக பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பிரத்யேகமான தலித் சினிமா கூட இதுவரை உருவாகவில்லை. இந்த சூழலில் ரஞ்சித்தின் துவக்க கால முயற்சிகள் அதன் ஆரவாரத்தோடு வரவேற்கப்படுவதில்  உள்ள சமூக நியாயத்தை புரிந்து கொள்ளலாம். தொடர்ந்து தலித் சினிமா என்கிற வகைமை பரவலாக உருவாகும் வகையில் இதன் பின்னால்  நிறைய படைப்பாளிகள் வரக்கூடும். ரஞ்சித் என்கிற முன்னோடி இதற்கு காரணமாக அமைவார்.

***

ரஞ்சித்தின் மற்ற இரண்டு திரைப்படங்களைப் போலவே கபாலி திரைப்படம் தொடர்பான பாடல் வரிகளிலும் முன்னோட்டக் காட்சிகளிலும் அதிகாரத்தால்  நசுக்கப்பட்ட சமூகத்தின் எதிர்ப்பையும் கலகத்தையும் வெளிப்படுத்தும் குரல்கள் இருந்தன. ஆனால் திரைப்படம் வெளிவரும் போது அது வழக்கமான ரஞ்சித்தின் பாணியைக் கொண்டிருந்தது. மைய நீரோட்ட சினிமாவின் வடிவிற்குள் சாத்தியமான அளவில் மேலோட்டமாக சில முற்போக்கு தீற்றல்கள் மட்டுமே அதில் வரையப்பட்டிருந்தன. முள்ளும் மலரும் போன்ற ஒரு சிறந்த ரஜினியைக் கொண்டு வருவேன் என்கிற இயக்குநரின் வாக்குறுதியும் என்ன காரணத்தினாலோ காப்பாற்றப்படவில்லை.

வழக்கமான ரஜினி படங்களில் உள்ள தேய்வழக்குகள், வணிக அபத்தங்கள் இதில் இல்லையென்றாலும் கூட, ரஜினி சில காட்சிகளில் அற்புதமாக நடிக்க முயன்றிருந்தாலும் கூட ஒட்டுமொத்த நோக்கில் இதுவொரு சிறந்த சினிமாவாக உருவாகவில்லை. ரஞ்சித்திற்காக ரஜினி பல படிகள் இறங்கி வந்திருந்தார் என்றாலும் ரஜினிற்காக ரஞ்சித் அதையும் விட பல படிகள் தாண்டி இறங்கிச் சென்று விட்டாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இது வழக்கமான ரஜினி படமாகவும் இருந்து தொலைக்காமல், இயக்குநர் முன்பு அளித்த வாக்குறுதியின் படி 'முள்ளும் மலரும்' வகையிலான யதார்த்தப்படமாகவும் அல்லாமல் இரண்டும்கெட்டானாக அமைந்ததுதான் சோதனை.

கபாலி என்ன மாதிரியான திரைப்படம்? கேங்க்ஸ்டர் வகையிலான படமா? தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து அயல் பிரதேசங்களில் பல ஆண்டுகளாக  குடிமக்களாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் இன அரசியலால் இரண்டாம் தர பிரிவினராக நடத்தப்படும் சமூகத்திலிருந்து வீறுகொண்டு எழும் ஒரு தலைவனைப் பற்றிய படமா? தன்னுடைய வன்முறை வாழ்க்கையினால் மனைவியைப் பிரிந்து சிறைக்குச் சென்று நடுத்தர வயதிற்குப் பின்னான ஒரு காலத்தில் அவளைத் தேடும் ஒரு அன்பான கணவனைப் பற்றிய படமா? இதன் திரைக்கதை ஒத்திசைவான தன்மையில்லாமல் துண்டு துண்டான சித்தரிப்புகளுடன் அலைபாய்வதால் கோர்வையற்ற படைப்பாகி சலிப்பூட்டுகிறது. ரஜினி என்கிற பிரம்மாண்டமான வணிக பிம்பத்தை சற்று வளைக்க முயன்ற சாதனையைத் தவிர வேறு எதையும் இயக்குநரால் சாதிக்க முடியவில்லை.

காட்பாதரின் அழுத்தமான தழுவலாக இருந்தாலும் இந்த நோக்கில் மணிரத்னம் உருவாக்கிய 'நாயகன்' திரைப்படத்தின் செய்நேர்த்தியை இங்கு நினைவுகூரலாம். வேலு நாயக்கர் என்கிற நபரின் துவக்க காலம் முதல் மரணம் வரையான வாழ்க்கை ஒரு தெளிவான நேர்க்கோட்டில் நம்பகத்தன்மையுடனான காட்சிகளுடன் சொல்லப்படுகிறது. சந்தர்ப்பச் சூழல் காரணமாக பம்பாயின் வன்முறை வாழ்க்கைக்குள் விழுந்த இளைஞனான வேலு அங்குள்ள தமிழர்களின் தலைவனாக எப்படி உருமாறுகிறார், அவருடைய நிழலான காரியங்கள், அதன் பின்னணி, சக மாஃபியா கும்பலுடனான மோதல்கள், அதிகார தரப்பினுடனான உரசல்கள், சமரசங்கள் போன்றவை துல்லியமான சித்திரங்களால் நிரப்பப்பட்டிருந்தன.


கபாலியில் அப்படியாக எதுவும் நிகழவில்லை. ஒரு மாஃபியா டான் 'ஆண்டவன் நம்மளை காப்பாற்றுவான்' என்று பொருந்தாத விதத்தில் பாட்சா படத்தில் சொல்வது போல ஒரு பரிசுத்தமான டானாகவே இதிலும் காட்டப்படுகிறார். நெருக்கடியான சூழலில் சிறைக்குச் சென்றாலும் கூட  தலைமைப்பண்புள்ள ஒரு கேங்க்ஸ்டரால் சிறையில் இருந்தபடியே தம் செல்வாக்கைப் பயன்படுத்தியபடி தம்முடைய நிறுவனங்களை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் முடியும் என்பதை யதார்த்தத்தில் அறிகிறோம். ஆனால் இருபது வருடங்களுக்கும் மேலாக தம்மை துண்டித்துக் கொண்டு ஏதும் அறியாமல் வெளியே வரும் அப்பாவியை ஒரு டானாக எப்படிப் புரிந்து கொள்வது? மட்டுமல்லாமல் எந்தவொரு சூழ்நிலையையும் கருத்தில் கொள்ளாமல் அதற்கான யூகங்களை வகுக்காமல் சிறையிலிருந்து வெளியே வந்தவுடனேயே பேட்டை ரவுடி போல இன்னொரு கூட்டத்தினரின் ஆட்களை தாக்கச் செல்வது எந்த வகையில் புத்திசாலித்தனமானது? மனைவியைத் தேடும் பயணம் ஏன் தேவையின்றி அத்தனை இழுவையான காட்சிகளோடு அமைந்திருந்தன?

இப்படி பல நெருடலான கேள்விகள் கிளம்பிக் கொண்டேயிருப்பதுதான் இத்திரைப்படத்தின் பிரதானமான பலவீன அம்சம். மெட்ராஸ் திரைப்படத்தில் பணியாற்றிய அதே குழுவை விசுவாசத்துடன் உபயோகிக்க முயன்ற இயக்குநரின் நல்லியல்பை புரிந்து கொள்ள முயன்றாலும், பழைய காலத்தில் நாடகக்குழுவினரே மாற்றி மாற்றி சில வேடங்களில் வருவது போன்று இதிலும் சில நடிகர்களின் நல்ல நடிப்புகளைத் தவிர்த்து திணிக்கப்பட்டது போல 'மெட்ராஸ்' குழுவினர் வந்து கொண்டேயிருந்தது பொருத்தமாக இல்லை. மலேசிய அரசியலின் இனவாத சிக்கல்கள், கலாசார nuances நன்றாக பதிவாகியிருப்பதாக அந்தச் சூழலை அறிந்தவர்கள் சொன்னாலும் சுமாரான திரைக்கதைக்கு இவ்வகையான நுண்மைகளின் பங்கு எவ்வாறு உதவக்கூடும்?

மற்றபடி ரஜினி என்கிற நடிகரின் கவர்ந்திழுக்கும் வசீகரம் அதன் துவக்க காட்சிகளில் குறையாமலிருப்பதைக் காண.... மகிழ்ச்சி. இந்தப் பாதையில் அவர் தொடர்ந்து செல்ல முடிவு செய்வாராயின் கூடுதல் மகிழ்ச்சி ஏற்படும்.

மராத்தி இயக்குநர் நாகராஜ் மஞ்சுளேவையும் ரஞ்சித்தையும் ஒரு இணைக் கோட்டில் நிறுத்திப் பார்க்கலாம். நாகராஜின் முதல் திரைப்படமான 'ஃபன்றி' சமரசங்கள் அதிகமில்லாத ஒரு மாற்று சினிமா. வளரிளம் பருவத்தில் உள்ள ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்து சிறுவன் தன் சக வயதில் உள்ள பெண்ணின் மீது கொள்ளும் காதல் சொல்லப்பட இயலாமலேயே தோற்றுப் போகும் துயரத்தை சொல்லுகிறது. சாதிய பாகுபாடு என்னும் பிரம்மாண்டமான சுவர் இருப்பதே காரணம். இத்திரைப்படம் சர்வதேச விருதுகளயும் பெற்றது. அட்டகத்தியையும் இத்திரைப்படத்தையும் ஒருவகையில் ஒப்பிட முடியும் என்றாலும் தலித் சினிமாவிற்கான பிரதானமான கூறுகளை ஃபன்றி அழுத்தமாக கொண்டிருந்தது.

நாகராஜின் அடுத்த திரைப்படமான சய்ராட் வெகுசன திரைப்படத்திற்கான வடிமைப்பைக் கொண்டிருந்தாலும் அதன் அடிநாதமாக தலித் அரசியலை தெளிவாகவே பேசியது. முக்கியமாக அதிர வைக்கும் அதன் உச்சக்காட்சியின் மூலம் அதன் அடையாளம் துல்லியமாக தெளிவாகியது. ரஞ்சித்தின் படைப்புலகமும் வெகுசன வடிவத்திற்குள்ளாக  தாழ்த்தப்பட்ட சமூகத்தின் கலக அடையாளங்களைக் கொண்டிருந்தாலும்  அது திணிக்கப்பட்டதாக அல்லது பொருத்தமற்றதாக ஆகிப்போகும் விபத்தை கவனிக்க வேண்டும். ஏறத்தாழ ஒரே கோட்டில் பயணித்தாலும் நாகராஜின் படைப்பு மேலானதாகவும், ரஞ்சித்தின் படைப்பு விலகிச் செல்வதும் இந்தப் புள்ளியில்தான் நிகழ்வதாக தோன்றுகிறது.

***

கபாலி திரைப்படத்தை தாண்டி இதன் வெளியீட்டின் போது நடந்த புற விஷயங்களைப் பற்றி முக்கியமாக உரையாட  வேண்டும்.

ரஞ்சித்தின் திரைப்படம் என்பதால் துவக்கத்தில் இதன் மீது எனக்கும் ஆர்வம் இருந்தது. ஆனால் படம் வெளியாகும் சமயத்தில் இதன் தயாரிப்பு தரப்பு உருவாக்கிய பல்வேறு சந்தைப்படுத்துதல் உத்திகளும் வணிக மாய்மாலங்களும் தந்திரங்களும் இத்திரைப்படத்தின் மீது ஒவ்வாமையை உருவாக்கின. கடந்த சில ஆண்டுகளாக திரைத்துறையில் உருவாகியிருக்கும் போக்கின் படி இவை வழக்கமான விஷயங்கள்தான்.  ஸ்டார் நடிகர்களின் திரைப்பட வெளியீடுகளின் போதெல்லாம் அதைப் பற்றிய மிகையான சித்திரத்தை உருவாக்கி அதை முதல் நாளே பார்த்தாக வேண்டும் என்கிற மனநெருக்கடிக்கு பார்வையாளர்கள் பலியாவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஒரு திரைப்படத்தைப் பற்றிய பார்வையாளர்களின் கருத்து வாய்மொழியாக பரவுவதற்குள்ளாக ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான அரங்கங்களில் இதை வெளியிட்டு அவர்கள் விழிப்படைவதற்குள் அவர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கி விடும் நோக்கத்தில் இந்த வணிக தந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன.

கபாலியும் இந்த வணிக மாய்மால வரிசையில் இணைந்ததில் பெரிதாக ஆச்சரியமொன்றும் இல்லைதான் என்றாலும் ஆண்டைகளுக்கு எதிராக அடிமைகளின் கலகக்குரலாக இருக்கும் என நம்பப்பட்ட, அதற்கான முன்னோட்ட அடையாளங்களைக் கொண்டிருந்த ஒரு திரைப்படமும் இந்த வணிகத் தந்திரங்களை எரிச்சலூட்டும் வகையில் மிகையாக முன்வைத்தது ஒரு தன்னிச்சையான  நெருடலை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.

உள்ளே திரையில் அநீதி இழைக்கப்படும் ஏழைகளுக்காக ஆவேசமாக குரல் கொடுத்துக் கொண்டிருப்பான் நாயகன். ஆனால் அந்த ஏழை சமூகம் அநியாயமான வணிகச் சுரண்டலுக்கு ஆளாகிய பின்தான் திரைக்குள் நுழைய முடியும். மட்டுமல்ல நாயகனின் குரலைக்கேட்டு catharsis உணர்வுடன் ஆசுவாசமடையும், அவனை வழிபட ஆரம்பிக்கும். ஒரு மாதிரியான வரலாற்று முரண் நகை இது. நாயகனை மையமாகக் கொண்ட வணிகம் இந்தச் சூழலை மேலதிகமாக பயன்படுத்திக் கொண்டு இன்னமும் அவர்களை சுரண்டிக் கொண்டேயிருக்கும்.எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் நடைமுறைதான் இது.

கபாலி வெளியீட்டின் போது இந்த வணிகச்சுரண்டல் அதை உச்சத்தை அடைந்தது. பொதுவாக ரஜினி திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அதன் ரசிகர் மன்ற நபர்களுக்குத்தான் துவக்க நாட்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்கிறார்கள். ஆனால் இந்த முறை அதற்கு மாறாக துவக்க காட்சிகளின் அனுமதிச்சீட்டுகள் மொத்தமும் மென்பொருள் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது.  அது எந்தவொரு ஆட்சியாக இருந்தாலும் அதிகாரத்தின் ஆக்டோபஸ் கரங்கள், பல கோடிகள் லாபமீட்டும் திரைத்துறையையும் விட்டு வைப்பதில்லை. குறைந்தபட்ச கட்டண நிர்ணயம் உள்ளிட்ட பல விதிகள் நீதிமன்றம் தலையிட்டும் கூட நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை.

'பல வருஷமா ரசிகனா இருக்கேன்..ஸ்டார், தோரணம் கட்டியிருக்கேன்.. நான் ஆட்டோ டிரைவரா இருந்தும் நெறைய செலவு செஞ்சிருக்கேன்.. என்னால படம் பார்க்க முடியல. ஆனா சம்பந்தமேயில்லாத ஐ.டிகாரன் சொகுசா உள்ள போறான்..சார்.." என்று ஆவேசமாக ஒலிக்கிற சமகால விளிம்புநிலைக்குரல் அபத்தமான காரணத்திற்காக அறச்சீற்றம் கொண்டிருந்தாலும் அதிலிருக்கும் முரணை நாம் பரிசிலீத்துதான் ஆக வேண்டும்.

''சீனர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரே மாதிரியான கூலியை நிர்ணயுங்கள்' என்று திரையின் உள்ளே நாயகன் சொல்லிக் கொண்டிருக்கும் போது அதற்கு முரணான விஷயம் வெளியே நடந்து கொண்டிருக்கிறது.  இது போன்ற முறைகேடுகளைப் பற்றி நடிகரின் தரப்பிலிருந்தோ, தயாரிப்பாளரின் தரப்பிலிருந்தோ எந்த விளக்கமும் சொல்லப்படுவதில்லை. கள்ள மெளனத்தின் மூலம் இதைக் கடந்து செல்கிறார்கள்.

மலேசிய தமிழர்கள்  இரண்டாம் தர குடிமக்களாக சித்தரிப்பதைப் பற்றிய திரைப்படங்கள் வெளியாவது அவசியம்தான். அதே நேரத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில், வடமாநிலங்களிலிருந்து வறுமை காரணமாக புலம் பெயர்ந்திருக்கும் நபர்கள், இரண்டாம் தர குடிமக்களாக கூட அல்ல, அதனினும் கீழாக கையாளப்படும், மிக மோசமான உழைப்புச்சுரண்டல்களையும் அவமதிப்புகளையும் எதிர்கொள்வதைப் பற்றிய உரையாடலும் சினிமாவும்  கூட இங்கு  அவசியமானது. மலேசிய இனவாதத்தைப் பற்றி உரையாடுவது இங்கு சாத்தியமாகும்  போது இலங்கையின் இனவாதத்தைப் பற்றி மறைமுகமாக கூட தமிழ் சினிமாவால் ஏன் இங்கு உரையாட முடியவில்லை என்பதுயும் இணைத்துப் பார்க்கலாம்.

தலித் என்கிற சொல்லாடல் பொதுவாக இங்கு சாதிய நோக்கிலான சொல்லாகவே  பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வர்க்க அரசியலுடனும் தொடர்புள்ளது அது. சாதிய படிநிலை மட்டுமல்லாது, பொருளாதார படி நிலையிலும் கீழேயுள்ள மக்கள், அதிகார வலுவற்ற சமூகம், விளிம்பு நிலையிலுள்ளவர்கள் என்று ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் குறிக்கும் சொல்லாக உள்ள மதிப்பு இங்கு உணரப்படவில்லை. மராத்தியில் உருவான இந்தச் சொல்லுக்கு அழுத்தப்பட்டவர்கள் என்கிற பொருளே உண்டு. அது பற்றிய கலை. இலக்கியங்கள் மேலதிகமாக உருவாக வேண்டிய அவசியம் இருக்கிறது. அதே சமயத்தில் தலித் என்கிற கருத்தாக்கம் ஒரு வணிகப்பண்டமாக மாறி விடாதபடியான கண்காணிப்புச் சூழலும் உருவாக வேண்டியது அவசியம்.


(உயிர்மை இதழில் பிரசுரமானது)
 

suresh kannan

No comments: