Thursday, November 14, 2019

லென்ஸ்: அந்தரங்கம் என்னும் கற்பிதம்
தமிழில் வெளிவந்த திரைப்படங்களில்.  பரிசோதனை முயற்சியில் அமைந்த ஒரு படைப்பு பலரின் கவனத்தைக் கவர்ந்தது. பல சர்வதேச திரையிடல்களில் கலந்து விருது பெற்ற அந்த திரைப்படம் - 'லென்ஸ்'. தமிழ்,மலையாளம் ஆகிய இருமொழிகளில் உருவாகிய  bilingual திரைப்படம். மற்றவர்களின் அந்தரங்கமான தருணங்களை கண்டு ரசிக்கும், காட்சிகளாக பதிவு செய்து மற்றவர்களுக்கும் பரப்பும் வக்கிர மனங்களை  குறுக்கு விசாரணை செய்வதே இதன் மையம். மனைவியை புறக்கணித்து விட்டு, வீடியோ செக்ஸ் சாட் செய்வதையே வேலையாக வைத்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு, பூமராங் போன்று அதே வகையான ஆயுதம் திரும்பி வந்து தாக்குகிறது. இரண்டு நபர்களுக்குள் நிகழும் வீடியோ உரையாடல்களைக் கொண்டே இதன் பெரும்பாலான காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பது நல்ல பரிசோதனை முயற்சி.

2010-ம் ஆண்டு Love, Sex Aur Dhokha என்றொரு இந்தி திரைப்படம் வெளிவந்தது. You are being watched என்பது இதன் டேக் லைன்.  தனது ப்ராக்ஜக்ட்டிற்காக படமெடுக்கும் ஒரு திரைப்படக்கல்லூரி மாணவனின் காதல், சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் ஒருவன் சக பெண் தொழிலாளியுடன் உறவு கொண்டு அதை வைத்து பணம் சம்பாதிக்க முயலும் காமம், பிரபலங்களின் அந்தரங்கங்களை சூடான வீடியோ செய்திகளாக்கும் ஒரு பத்திரிகையாளனின் துரோகம் ஆகிய மூன்று பகுதிகளாக இருந்தது. தனித்தனியான இந்த மூன்று பகுதிகளுக்கும் சுவாரசிய தொடர்பு ஏற்படுத்தும் நுணுக்கத்தில் இயக்குநர் Dibakar Banerjee வெற்றி பெற்றிருந்தார்.

திரைப்படக் கல்லூரி மாணவனின் காம்கார்டரில் பதிவாகும் காட்சிகள், ஷாப்பிங் மாலின் CCTV- காட்சிகள், பத்திரிகையாளனின் ரகசிய காமிரா காட்சிகள் ஆகியவற்றைக் கொண்டே முழுத்திரைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இவ்வகையில் இத்திரைப்படத்தை முதல் நவீன பரிசோதனை சினிமா என்று வகைப்படுத்தலாம்.

அந்தச் சமயத்தில் எழுதிய குறிப்புகள், சமீபத்திய 'லென்ஸ்' திரைப்படத்துடனும் மிகப் பொருத்தமாக இருப்பதால் இங்கு இணைக்கிறேன்.

***

இதுவொரு கற்பனைக் கதை. உண்மையான கதையாகவும் இருக்கக்கூடும்.

மணிமாறன் கணினியைத் திறந்து மின்னஞ்சலை சோதிக்க முயன்ற போது 'TRUE HOT INDIANS' (EXCLUSIVE) என்கிற குறிப்புடன் ஒரு மின்னஞ்சல் சாகசமாக கண்ணைச் சிமிட்டியது. ஸ்பேம் மெயிலோ என்று அழிக்க முயன்றான். ஆனால் அது ஆஸ்திரேலிய நண்பனிடமிருந்து வந்திருந்தது. Networking Site மூலமாக நண்பனானவன். புகைப்படத்தை பரிமாறிக் கொள்ளவில்லையெனினும் ஒத்த அலைவரிசை ரசனையில் ஒரளவிற்கு நெருக்கமான நண்பனாகிப் போனவன். அந்த ரசனை எது என்பதுதான் வில்லங்கமானது. Voyeurism.

மணிமாறன் விரும்பி பார்க்கும் பாலியல் படங்கள் வழக்கமானவைகள் அல்ல. பிரபல நடிகைகள் உடை மாற்றும் ஒளித்துணுக்குகள், டவல் நழுவ குளியலறைக்குச் செல்லும் அந்நிய குடும்பத்துப் பெண்கள், அவர்கள் அறியாமல் படம் பிடிக்கப்படும் ஆதாம் ஆப்பிள் சமாச்சாரங்கள். 'இந்தா எடுத்துக்கோ' என்னும் அப்பட்டமான வீடியோக்களை விட சாவித்துவாரம் வழியாக குறுகுறுப்புடன் ஒளிந்து பார்க்கும் உணர்வைத் தரும் வீடியோக்கள் மணிமாறனுக்கு அதிக கிளர்ச்சியைத் தந்தன. இதில் வெள்ளைக்காரிகளை விட இந்திய குறிப்பாக தென்னிந்திய பெண்களின் வீடியோக்களே தேடலே அதிகம். தேசப்பற்றெல்லாம் ஒன்றுமில்லை. இதை ரசிப்பவர்களின் எண்ணிக்கை கூடி வருவதால் வழக்கமான முறையில் படம்பிடிக்கப்படும் நடிகர்கள் கூட செயற்கையாக இந்த முறையைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால் அசலானது எது என்பதை கண்டுபிடிப்பது கூட ஒரு சுவாரசியமான விளையாட்டாகி விட்டது.

ஆஸ்திரேலிய நண்பன், கட்டணம் செலுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளும் தளத்திலிருந்த ஒரு லிங்க்கை வழக்கம் போல் மணிமாறனுக்கு அனுப்பியிருந்தான். குறுகுறுப்புடன் அதை தரவிறக்கம் செய்த இவன் அதை ரகசிய போல்டரில் போட்டு வைத்திருந்தான். அன்று முழுவதும் அதைப் பார்க்கப் போகிற தவிப்பு பல தருணங்களில் மூளையில் வியாபித்து வெளிப்பட்டது. அன்றிரவு செயற்கையான தனிமையை ஏற்படுத்திக் கொண்டு வீடியோவை பார்க்க ஆரம்பித்தான். முற்றிலும் அந்நிய சூழ்நிலையில் இருந்த அந்த இருவரும் யாரோ என்று பார்க்க ஆரம்பித்தவனுக்கு சில நொடிகளிலேயே தலையில் இடி இறங்கினாற் போல இருந்தது.

ஒரு வருடத்திற்கு முன்பு மணிமாறனுக்கு திருமணமாகி தேனிலவிற்காக பெரும்பாலோர் செல்லும் அந்த மலை வாசஸ் தலத்திற்குச் சென்றிருந்தான். தங்கியிருந்த ஓட்டலின் பெயர் கூட மறந்துவிட்டது.

***

மணிமாறனுக்கு நேர்ந்த அந்த அவல நகைச்சுவை விபத்து யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். நாம் இன்று கண்காணிப்பு சமுதாயத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். டிராபிக் சிக்னலில் இருந்து ஷாப்பிங் மால்கள், மருத்துவமனைகள், ஹை-டெக் அலுவலகங்கள், ரயில்வே நிலையங்கள்.. என்று பல இடங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் காமிராக்கள் நம்மை தொடர்ந்து பதிவு செய்து கொண்டேயிருக்கின்றன. இவற்றின் மூலம் ஒருவரின் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை கண்காணித்து அவரைப் பற்றின பல தகவல்களைத் தொகுக்க முடியும்.

குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்க இவை செயல்படுவது ஒருபுறமென்றால் ஒருவரை வேவு பார்க்கவும், பாலியல் செய்கைகளை படம்பிடித்து பணம் பறிக்கவோ, பார்த்து ரசித்து மகிழவோ செயல்படுத்தப்படும் பல ரகசிய கேமிராக்கள் ஒரு தனிமனிதனின் அந்தரங்க வெளியை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன. நம்முடைய அந்தரங்கம் பாதுகாப்பாக இருக்கும் உணர்வில் நாம் மற்றவர்களின் அந்தரங்களைப் பற்றி அறிந்து கொள்ள மிக ஆவலாகயிருக்கிறோம்.

இதில் அதிகம் அவதிப்படுவது பிரபலங்கள், குறிப்பாக நடிகைகள், துணை நடிகைகள். படப்பிடிப்புகளுக்காக வெளியூர்களுக்குச் செல்லும் போதும் குளியலறையிலோ, உடைமாற்றும் வசதியில்லாத சூழ்நிலையில் தற்காலிக ஏற்பாடுகளின் போதோ காமிரா ஏதாவது தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறதா. என்கிற பதட்டம் தருகிற மன உளைச்சல் சொல்லில் அடங்காதது. 'ஒரு கிராமத்தில் நடந்த படப்பிடிப்பின் போது மறைவானதொரு இடத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றதை மேலிருந்து ஒரு குழுவான நபர்கள் வெறிக்க பார்த்துக் கொண்டிருந்ததை எண்ணி பல இரவுகள் அழுதிருக்கிறேன்' என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார் நடிகை சில்க் ஸ்மிதா.

ஒருவரின் அந்தரங்க வெளிக்குள் நுழையும் உரிமையை 'இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம்' என்கிற போர்வையில் இன்று தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்ற ஊடகங்களும் கையில் எடுத்துள்ளன. லஞ்ச ஊழல்களை வெளிப்படுத்தும் ஊடகங்கள் ஒருபுறமிருக்க பாலியல் செய்கைகளை படம்பிடித்து அவற்றை வைத்து பணம் பறிக்கும், பேரம் படியாவிடில் அதை வெளிப்படுத்தி அதன் மூலமும் கூட சம்பாதிக்கத் துணியும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன. கற்பனையாக மேலே குறிப்பிட்ட மணிமாறன்களைப் போல பல தனிநபர்கள் மற்றவர்களின் அந்தரங்களைக் காண எதையும் செலவு செய்ய தயாராக இருப்பதால் இவர்களுக்காக இணையத்தில் பல தளங்கள் தங்கள் பொருட்களை விற்பனைக்காக வைத்துள்ளன.

முன்பே குறிப்பிட்டது போல காமிராக்களால் தொடர்ந்து மறைமுகமாக கவனிக்கப்படும் காட்சிகளை வைத்து ஒருவரின் வாழ்க்கை பற்றிய திரைப்படத்தைக் கூட உருவாக்கிவிட முடியும். ஜிம்கேரி நடித்து 1998-ல் வெளிவந்த The Truman show இதையே அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. சில பரிசோதனை திரைப்படங்களில் இவ்வாறான வீடியோ பதிவுகளை ஒரு உத்தியாகவே பயன்படுத்துகிறார்கள். Cloverfield (2008) ஒரு அமெச்சூர் வீடியோகிராபர் எடுக்கிற தொடர்ச்சியான குழப்பமான காட்சிகளைக் கொண்டே முழுத்திரைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் 'லென்ஸ்' திரைப்படம் ஒரு சிறந்த முயற்சியாக அமைந்துள்ளது.***

'அந்தரங்கம் புனிதமானது' என்றொரு சிறுகதை எழுதினார் ஜெயகாந்தன். தாயைத் தவிர தன்னுடைய தந்தை,  இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை தற்செயலாக அறியும் மகன் கொதிக்கிறான். தாயுடன் அந்த விஷயத்தைப் பற்றி கோபமாக விவாதிக்கிறான். தந்தையுடன் இது பற்றி பேசத் தயங்குகிறான். அவரே அவனைக் கூப்பிட்டு இது பற்றி பேசுகிறார். 'ஒருவரின் அந்தரங்கமான விஷயம் எத்தனை முக்கி்யமானது என்பதையும் அதைக் கண்காணிப்பது அநாகரிகமானது என்பது குறித்தும் உபதேசிக்கிறார். தனிநபர்வாதம் எனும் கருத்தாக்கத்தை அழுத்தமாக பதிவு செய்கிறது இந்த அபாரமான சிறுகதை. இன்றைய படித்த சமூகம் கூட ஜீரணிக்கத் தயங்கும் முற்போக்கான படைப்பை பல வருடங்களுக்கு முன்பே எழுதிய ஜெயகாந்தனை வியக்கத் தோன்றுகிறது.

ஆனால் அந்தரங்கம் எனும் தனிவெளி இன்று இருக்கிறதா என்கிற கேள்வியெழுகிறது. அந்தளவிற்கான கண்காணிப்பு சமூகத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கணினி, கைபேசி என்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்னணுக் கருவிகள் நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்கின்றன; பதிவு செய்து வைத்துக் கொள்கின்றன. மறைவான இடங்களில் ஆயிரம் கண்கள் நம்மை விழித்துப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றன.

'லென்ஸ்' திரைப்படத்தில் நிகழ்வது என்ன?

மெய்நிகர் உலகின் வழியாக அநாமதேயப் பெண்களுடன் பாலியல் உரையாடல்களை மேற்கொண்டு மகிழும் ஒருவன், ஒரு பெண்ணின் அழைப்பில் மயங்கி தனிவழி வீடியோவில் நுழைகிறான். ஆனால் வந்தவன் ஓர் ஆண். 'நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். அதை நீ நேரடியாகப் பார்க்க வேண்டும்' என்கிறான். பதறிப் போகும் இவன் 'நீ லூசாய்யா" என்று இணைப்பைத் துண்டித்து விடுகிறான். ஆனால் தொடர்ந்து அவ்வாறு இருக்க முடிவதில்லை. அடுத்த வீடியோ உரையாடலில் திரையில் தோன்றுவது மயக்க நிலையில் இவனுடைய மனைவி. எதிராளி கடத்தி வைத்திருக்கிறான்.

இந்த இரண்டு தரப்பிற்கும் இடையிலான உரையாடலின் மூலமாக மனிதனின் கீழ்மைகள், வக்கிரங்கள், குற்றவுணர்ச்சிகள் போன்றவை வெளிவருகின்றன. இணையத்தில் இன்று ஏராளமான பாலியல் காட்சிகள் தடையின்றிக் காணக் கிடைக்கின்றன. அதில் பொதுவாக இரண்டு வகையுள்ளது. ஒன்று, தொழில்முறை நடிகர்களால் அவர்களாகவே முன்வந்து நடித்து பதிவு செய்யப்படும் காணொளிகள். இதில் 'அவர்களாகவே முன்வந்து' என்கிற சொல்லாடல் ஒரு சம்பிதாயமே. Porn Industry என்பது பல கோடி ரூபாய்கள் புழங்கும் ஒரு வணிகம். இதற்கான வணிகப்பின்னல் உலகெங்கிலும் நிறைந்துள்ளது. இதில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் பெரும்பாலும் கடத்தி வரப்பட்டு பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்டவர்கள். இயல்பான வாழ்க்கை மறுக்கப்பட்டு பல்வேறு வன்முறைகளின் மூலம் வேறு வழியின்றி இந்தத் தொழிலை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்தப்படுத்தப்பட்டவர்கள். ஒரு கட்டத்தில் மரத்துப் போய் தங்களின் நிராதரவான வாழ்வை ஏற்றுக் கொள்கிறார்கள்.  இவ்வகையான பலியாள்களின் உழைப்புச் சுரண்டலில் உருவாகும் பாலியல் காட்சிகளைக் கண்டு இன்புறுவதின் மூலம் இந்தத் தொழிலில் நிகழும் அநீதிகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் கயவாளிகளின் வணிக லாபத்திற்கும் நாமும் ஒருவகையில் காரணமாக இருக்கிறோம்.

***


பாலியல் திரைப்படங்களில் நடிப்பவர்களுக்காக முறையான சட்டங்கள், விதிமுறைகள் போன்றவை மேற்கத்திய நாடுகளில் இருக்கின்றன என்று நம்பப்படுவது கூட ஒருவகையில் பொய்யே. 'I am Jane Doe' என்கிற ஆவணப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். சில அமெரிக்கத் தாய்மார்களுக்கும் ஓர் இணையத்தளத்திற்கும் இடையே பல வருடங்களாக நிகழ்ந்த ஒரு வழக்கின் பயணத்தை விவரிக்கும் ஆவணப்படம் அது. சராசரி குடும்பத்தைச் சார்ந்த அவர்களுடைய அப்பாவி மகள்கள் பாலியல் கும்பலால் கடத்தப்படுகிறார்கள். கடத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குள் அவர்களின் புகைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தில் கண்சிமிட்டல்களுடன் காட்டப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் உடனே அதிலுள்ள தொடர்பு எண்களை ஆவலுடன் குறித்துக் கொள்கிறார்கள். மறைமுகமாக பாலியல் வணிகத்திற்கு அந்த இணையத்தளம் துணைபோகிறது. வருமானம் டாலர்களில் கொட்டுகிறது.

அந்த இணையத்தளத்தை தடை செய்யச் சொல்லி நீதிமன்றத்தை நாடுகிறார்கள் பெற்றோர்கள். வெளிப்படையாகவே தெரியும் அநீதிதான். ஆனால் நீதிமன்றம் தனது கண்களை இறுக மூடிக் கொண்டு சட்டப்புத்தகத்தை விரல்களால் தடவிப்பார்த்து விட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறது. ஏனெனில் அந்த இணையத்தளத்தின் வாடிக்கையாளர்களில் நீதிபதிகள் முதற்கொண்டு மதகுருமார்கள், அரசு அதிகாரிகள் வரை பல பெரியமனிதர்கள் இருக்கிறார்கள். அரசியல் சட்டத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவின் துணை கொண்டு இணையத்தளத்தால் மிக துணிச்சலுடன் தன் அராஜகத்தை தடங்கல் ஏதுமின்றி தொடர முடிகிறது. பல வருடமாக நீளும் சட்டப் போராட்டங்களுக்குப் பின்பே அந்த இணையத் தளத்தை முடக்க முடிகிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்கள், சமூகநீதி ஆர்வலர்கள், பாலியல் மாஃபியா கும்பலை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மனச்சாட்சியுள்ள வழக்கறிஞர்கள் ஆகிய பல நபர்களின் உழைப்பிற்குப் பின்புதான் நீதி மெலிதாக கண்விழித்து பார்க்கிறது.

தனிநபர்களுக்கான சட்டங்கள் முறையாக பின்பற்றப்படுவதாக நம்பப்படும் மேற்கத்திய நாடுகளிலேயே இந்த நிலைமை என்றால் இந்தியா மூன்றாம் உலக நாடுகளின் நிலைமை என்ன? இங்கு நிகழும் பாலியல் வணிகம் என்பது ஏறத்தாழ இறைச்சிக்காக அடிமாடுகளை வண்டியில் நெருக்கி ஏற்றிச் செல்வது போன்ற பரிதாபமான வணிகம்தான்.  கேள்வி கேட்பவர்களே கிடையாது. பல கோடி ரூபாய் புழங்கும் இந்த வணிகத்தை அரசு, நீதி, காவல் என்று எல்லாத்துறைகளும் கண்டும் காணாமலும் இருக்கின்றன. மறைமுகமாக இதன் கூட்டாளிகளே இருப்பவர்களும் இவர்களே. மிகப் பிரதானமாக இதன் வாடிக்கையாளர்களும். அதாவது பொதுசமூகத்தின் பெரும்பகுதி.

மேற்குறிப்பிட்ட வகையில் இன்னொன்று இதனினும் மோசமானது.  அப்பாவியான நபர்களின் அந்தரங்கமான தருணங்கள், குளியலறைக் காட்சிகள், உடைமாற்றும் காட்சிகள் போன்றவற்றை அவர்கள் அறியாமல் காட்சிகளாக பதிவு செய்து இணையத்தில் பரப்பும் அயோக்கியத்தனம். தொழில்முறை நடிகர்களுக்காவது தங்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதி குறித்து முன்பே தெரியும். ஆனால் இது போன்ற அப்பாவியான  பலியாள்களுக்கு, அந்தக் காட்சிகளின் புகழ் பரவி, பலர் கண்களுக்கும் விருந்தாகிய பிறகுதான் அறிய வருகிறது. எந்தக் குற்றமும் செய்யாமலேயே மிகப் பெரிய தண்டனை.

மற்றவர்களின் சிறுசிறு அந்தரங்கமான தருணங்களை ஒளிந்திருந்து ரசிக்க விரும்பும் நம்முடைய கீழ்மையான குணங்களின் காரணமாகவே இம்மாதிரியான அநீதிச் செயல்களும் மிகப் பெரிய வரவேற்பு கிடைக்கின்றன. பாதிக்கப்படும் அப்பாவிகளைப் பற்றிய குற்றவுணர்வோ, சிந்தனையோ எதுவும் பெரும்பாலோனோர்க்கு இருப்பதில்லை. இவர்கள் அடைய விரும்பும் சிறிய நேரத்து இன்பத்திற்காக, அப்பாவியான நபர்கள் அவமானம் தாங்காமல் தங்கள் வாழ்நாளையே பலி கொடுக்க நேர்கிறது.

***

'லென்ஸ்' திரைப்படத்தில் நாயகனுடன் எதிர்தரப்பில் உரையாடும் நபருக்கும் அதுதான் நிகழ்கிறது. திருமணத்தின் மூலம் ஒளிரும் அவனுடைய வாழ்க்கை சில நாட்களிலேயே அணைந்து போகிறது. அவர்களின் உறவுக்காட்சிகள் இணையத்தில் ஒளிபரப்பாக, அவமானம் தாங்காமல் அவனுடைய மனைவி தற்கொலை செய்து கொள்கிறாள். அதற்கு முன் மனதளவில் பலமுறை சிறிது சிறிதாக இறந்து போகிறாள். ஆயிரம் கண்கள் தன்னுடைய உடலை வெறித்துப் பார்ப்பதற்கான பிரமையும் அச்சமும் அவளுக்குத் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. வெளிச்சத்தின் சிறுதுளி கூட நுழைய முடியாத அறையில் தன்னை ஒடுக்கிக் கொண்டு 'தாம் கண்காணிக்கப்படுகிறோம்' என்கிற பித்து நிலையில் ஒவ்வொரு நொடியையும் அச்சத்தில் கழிக்கிறாள்.

பாலியல் வக்கிரம் சார்ந்த குறுகுறுப்புடன் மற்றவர்களின் அந்தரங்கங்களை மிக ஆவலாக ரசித்துப் பார்க்கும் நமக்கு, நாமும் ஒருநாள் அவ்வாறாக மற்றவர்களின் கண்களுக்கு பலி விருந்தாக மாறக்கூடும் என்கிற உணர்வை இந்த திரைப்படம் மிக வலுவாக சுட்டிக் காட்டுகிறது. இதர பெண்களின் உறவுக்காட்சிகளை மிக ஆவலாக ரசித்துப் பார்த்த இதன் நாயகன், அதே வகையான பாதிப்பு தன் மனைவிக்கு ஏற்படும் போது தன்னிச்சையாக கதறுகிறான். தன் லீலைகள் வெளிப்படும் போது அவமானத்தில் குறுகுகிறான். இது சார்ந்த குற்றவுணர்வை ஒவ்வொரு பார்வையாளனுக்கும் கச்சிதமாக கடத்துவதே இந்த திரைப்படத்தின் வெற்றி.

மனித மனதின் சில ஆதாரமான இச்சைகள் இயற்கையானவைதான். அதற்கான வழிகளை, வடிகால்களை தேடியமைத்துக் கொள்வதில் பெரிதும் பிழையில்லைதான். ஆனால் அதன் பாதைகள் எவ்வாறாக அமைகின்றன என்பதில்தான் அதன் நீதியும் அநீதியும் அமைந்திருக்கிறது. சகமனிதருக்கு நம்மால் ஒரு துளி துன்பமோ தீங்கோ நிகழ்ந்து விடக்கூடாது என்கிற அறம் சார்ந்த உணர்வும் போக்கும்தான் கீழ்மைகளில் இருந்து விழாமல் நம்மை ஒரளவிற்காகவது காப்பாற்றக்கூடும். மற்றவர்களையும் காப்பாற்றும்.

சுமாராக 110 நிமிடங்கள் ஓடும் 'லென்ஸ்' திரைப்படத்தின் காட்சிகள் பெரும்பாலும் வீடியோ சாட்களாகவே அமைந்துள்ளது நல்ல முயற்சி. இது சார்ந்த சலிப்பு பார்வையாளர்களுக்கு ஏற்படாதவாறு இதன் அபாரமான திரைக்கதை அமைந்துள்ளது. இயல்பான வசனங்கள் பாலியல் வக்கிர மனங்களின் மீது நெருப்புத் துண்டுகளாக விழுகின்றன. திரைப்படத்தை இயக்கி நடித்துள்ள ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனின் பங்களிப்பு அற்புதமாக உள்ளது. பல காட்சிகளில் யதார்த்தத்திற்கு நெருக்கமான மிகையின்றி நடித்துள்ளார். எதிர்முனையில் இவரை மிரட்டும் தரப்பாக நடித்துள்ள ஆனந்த் சாமியின் பங்களிப்பும் கச்சிதமாக நிகழ்ந்துள்ளது. தங்களின் அந்தரங்கம் வெளிப்பட்ட அவமானத்தில் குறுகி மரணமடையும் மணப்பெண்ணாக நடித்துள்ள வினுதா லாலின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது.

Voyeurism எனும் வக்கிரத்தின் மீதான விமர்சனமாக இயங்கும் இத்திரைப்படத்தின் சில காட்சிகளும் அவ்வாறே அமைந்திருக்கும் முரணை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். விபின் சித்தார்த்தின் பின்னணி இசை காட்சிகளுக்கு மிகப் பொருத்தமாக ஒலிக்கிறது. புறாக்களின் உலாவல் உள்ளிட்ட சில குறிப்பிட்ட காட்சிகள் ரசனை சார்ந்த அழகியலுடன் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளன.

கலை என்பது அடிப்படையில் பொழுதுபோக்கிற்காக என்றாலும் மனித வாழ்வின் சில கீழ்மைகளை நுட்பமாக குறுக்கு விசாரணை செய்வது அதன் நோக்கமாக இருக்க வேண்டும். அந்த வகையில் நம்முடைய வக்கிரங்களை உருப்பெருக்கி கண்ணாடி வழியாக நுட்பமாக சித்தரிக்கும்  'லென்ஸ்' வெற்றி பெற்றுள்ளது. தரமான முறையில் உருவாகும் சிறுமுதலீட்டுத் திரைப்படங்களுக்கு உத்தரவாதமாக வெற்றி கிட்டும் என்கிற நடைமுறை உண்மையை இந்த திரைப்படம் நிரூபித்துள்ளது.

(உயிர்மை JUNE 2017 இதழில் பிரசுரமானது)


suresh kannan

No comments: