Monday, November 18, 2019

'சோ' ராமசாமி - அங்கத நாயகன்

சமீபத்தில் மறைந்த சோ ராமசாமி பன்முக ஆளுமைத்திறன் உள்ளவராக இருந்தார் என்றாலும் இந்தக் கட்டுரையில் சினிமா தொடர்பான அவரது முகத்தைப் பற்றி பிரதானமாக நினைவுகூர உத்தேசம்.  தவிர்க்க முடியாத பட்சத்தில் இதர பரிணாமங்கள் சார்ந்த தகவல்களும் தன்னிச்சையாக வந்து இணையக்கூடும்.

நகைச்சுவையை விரும்பாதவர்கள் பொதுவாக எவருமே இருக்க மாட்டார்கள். எனவே நகைச்சுவை எழுத்தாளர்களை, நிகழ்த்துக் கலைஞர்களை நாம் உடனே விரும்பத் துவங்கி விடுவோம். ஆனால் அவர்களுக்கு பொதுவானதொரு ஆபத்து இருக்கிறது. அந்தக் கணத்தில் நகைச்சுவையை சிரித்து ரசித்தாலும் பொதுச்சமூகத்திடமிருந்து சமூக மதிப்போ, அங்கீகாரமோ அவர்களுக்கு கிடைக்காது. மட்டுமல்ல அவர்கள் எல்லா சூழலிலும் நகைச்சுவையாளர்களாக மட்டுமே பார்க்கப்படுவார்கள். அவர்களின் தனிப்பட்ட வேறுமுகமோ அல்லது தீவிரமான கருத்துகளுமோ கூட  நகைச்சுவையாகவே பார்க்கப்படும் அல்லது  இடது கையால் சிரிப்புடன் நிராகரிக்கப்படும்.

உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம். தமிழ்நாட்டிலுள்ள பெரியவர் முதல் சிறியவர் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. படத்தில் அவர் பேசி நடித்த பல வசனங்கள் அன்றாட நடைமுறையில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டேயிருப்பதைப் பார்க்கிறோம். சில காரணங்களால் இடையில் அவருடைய பங்களிப்பு தமிழ் சினிமாவில் இல்லையென்றாலும் கூட அவருடைய ஆகிருதி பெரிதும் சேதமாகாமல் அப்படியே இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தல் ஒன்றில் ஒரு அரசியல் கட்சிக்காக அவர் பிரச்சாரம் செய்ததை தமிழகம் முழுவதும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ரசித்தார்கள். அவற்றில் பெரும்பான்மையும் வாக்காக மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு கூட பலமாக இருந்தது. ஆனால் நிகழ்ந்தது என்ன என்பது நமக்குத் தெரியும்.

கல்வியறிவின் சதவீதம் உயர்ந்து கொண்டு வந்தாலும் கூட நிஜத்திற்கும் நிழலிற்குமான வேறுபாட்டை பிரித்தறியும் மனோபாவம் நம்மிடம் இன்னமும் வளராமல் இருக்கிறது. கதாநாயகர்களாக நடிப்பவர்கள் அதிகாரத்திற்கான கனவினை தன்னம்பிக்கையுடன் காண முடியும். அதற்கு மக்களின் குறிப்பிட்ட சதவீத ஆதரவும் கூட கிடைக்கும். சினிமாவில் ஏழைகளைக் காக்கும் அவதார நாயகராக இருப்பவர், நிஜத்திலும் அப்படியிருப்பார் என்று பொதுச்சமூகம் தன்னிச்சையாக நம்புகிறது. ஆனால் நகைச்சுவை நடிகர்களுக்கு இவ்வாறான சமூக மதிப்போ, அங்கீகாரமோ பொது மனதில் எழாது. இங்கு எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆக முடியும், ஆனால் நாகேஷால் உள்ளூர் கவுன்சிலர் கூட ஆக முடியாது என்பதே யதார்த்தம். நகைச்சுவை  நடிகர் ஒருவேளை பொதுநல நோக்கும் நல்லியல்பும் அரசியல் அறிவும் இருந்தவராக இருந்தால் கூட மக்களின் மனதில் உறைந்திருக்கும் பிம்பம், அவருடைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். அவர்களை எப்போதும் நகைச்சுவையாளர்களாக  எள்ளலாக பார்ப்பதே பொது மனோபவம். அவர்களை திரைப்படங்களில் கூட கதாநாயகர்களாக தொடர்ந்து ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால் இந்த மரபை உடைத்து ஒரு நகைச்சுவை நடிகரை அறிவுஜீவியாகவும் பார்க்க வைக்க  முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் சோ. இதற்கு முன்னால் இந்த பிம்பம் என்.எஸ்.கிருஷ்ணணுக்கு இருந்தது. உலக அளவில் சார்லி சாப்ளினுக்கு இருந்தது. சோவின் துணிச்சலான கருத்துக்களும் தீர்க்கதரிசனத்துடன் கூடிய அரசியல் பார்வையும் அவருக்கு பிரத்யேகமான சமூக மதிப்பை தந்தன. ஒரு சிக்கலான அரசியல் சூழலில் அவருடைய தரப்பு என்னவாக இருக்கும் என்பதை பொதுச்சமூகம் உட்பட அரசியலில் இருப்பவர்களே கூட ஆர்வமாக கவனித்தார்கள். தேசிய அளவிலும் அவருக்கான முக்கியத்துவம் இருந்தது. இந்த வகையில் தனித்துவமானவராக இருந்தார் சோ.

***

சிலர் மிகுந்த முனைப்புடன்  துவங்கும் காரியங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடியக்கூடும். ஆனால் வேறு சிலர் அலட்சியமாகத் துவங்கும் எல்லா விஷயங்களிலும் வெற்றிகரமாக பிரகாசிப்பார்கள். இதில் இரண்டாம் வகையினராக இருந்தவர் சோ. இதை வெறும் குருட்டு அதிர்ஷ்டம் என்று மட்டும் சொல்லி விட முடியாது. அலட்சியமான துவக்கமாக இருந்தாலும் கூட மிகுந்த உழைப்பும் பிரத்யேகமான அணுகுமுறையும் தனித்துவமான நகைச்சுவையுணர்வும் துணிச்சலும் சோவிடம் இருந்ததாலேயே அவருக்கு வெற்றிகள் குவிந்தன.

நண்பர்களின் வேண்டுதலின் பேரில் நாடகங்கள் எழுதவும் அதில் நடிப்பவராகவுமாக அவருடைய கலைப்பயணம் துவங்கியது. அதுவும் கூட தற்செயலாகத்தான் துவங்கியது. நண்பர்கள் எழுதிய நாடகத்தை  'சோ' கிண்டல் செய்ய 'ஏன்.. நீதான் ஒண்ணு எழுதேன்' என்று  அவர்கள் உசுப்பேற்றி விட  பிறகு அவர் எழுதிய பல நாடகங்கள் பெரும்பாலும் வெற்றியடைந்தன.

யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் குழு நடத்தி, பட்டு எழுதிய 'பெற்றால்தான் பிள்ளையா' என்கிற நாடகம், 'பார் மகளே பார்' என்று சினிமாவாக மாறும் போது நாடகத்தில் சோ ஏற்ற பாத்திரத்தை, சினிமாவிலும் அவரேதான் நடிக்க வேண்டும் என பீம்சிங், சிவாஜிகணேசன் போன்றவர்கள் வற்புறுத்தினார்கள். நாடகத்தில் மெட்ராஸ் பாஷை பேசி நடித்திருந்த அவரின் பங்களிப்பு பிடித்திருந்ததால் சினிமாவிலும் அது வரவேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். சினிமாவில் நடிப்பதை ஒழுக்க மதீப்பீட்டோடு தொடர்புப்படுத்தி நிராகரிக்கும் நம்பிக்கை சார்ந்த பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால் தன் குடும்பத்தினரை நினைத்து சினிமாவில் நுழைவதற்கான தயக்கம் சோவிற்கு இருந்தது. எனவே மறுத்தார். ஆனால் பீம்சிங்கும், சிவாஜியும் வற்புறுத்தவே ஒப்புக் கொண்டார். அந்தப் பாத்திரம் மக்களால் ரசிக்கப்பட்டது. குடும்பத்தினரின் ஆட்சேபத்தால்  பிறகு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியவரை 'நடுஇரவில்' எனும் திரைப்படத்தின் மூலம் வீணை எஸ். பாலச்சந்தர் மீண்டும் வற்புறுத்தி அழைத்து வந்தார்.

நாடகத்தைப் போலவே சினிமாவிலும் அவரது வெற்றி தொடர்ந்தது. நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குநர் என்று அதிலும் முன்னேற்றம். எப்படி தற்செயலாக சினிமாவிற்குள் வந்து விழுந்தாரோ அப்படியே ஒரு கட்டத்தில் 'இனி சினிமாவில் நடிப்பதில்லை' என்கிற மனஉறுதியுடன் அதிலிருந்து வெளியே வந்தார். 'சினிமாவின் மூலம் கிடைக்கும் பிரபலத்தை இழந்து விடுவேனோ என்கிற அற்பத்தனமான அச்சம் கூட எனக்கு இருந்தது' என்பதையும் கூட ஒரு சமயத்தில் வெளிப்படையாகவே பதிவு செய்தார்.

அதன் பிறகு சினிமாவில் நடிக்க  அவர் தாமாகவே முன்வந்த ஒரு சந்தர்ப்பம்  உண்டானது. ஒரு படப்பிடிப்பில் ஏற்பட்ட சர்ச்சையின் தொடர்பாக  தமிழ் சினிமாவில் வேலைநிறுத்தம் ஏற்பட்டது. ஒருதரப்பிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததற்காக கமல்ஹாசன் தனிமைப்படுத்தப்பட்டார். அவருடைய அப்போதைய திரைப்படத்தில் நடிக்க நடிகர்கள் தயங்கினார்கள். இதைக் கேள்விப்பட்ட சோ, கமலுக்கு தன்னுடைய தார்மீக ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்கும் விதமாக தாமே முன்வந்து ஒரு  பாத்திரத்தைக் கேட்டு வாங்கி நடித்தார். அவருக்காகவே அந்தப் பாத்திரம் உருவாக்கப்பட்டது. சோவின் துணி்ச்சலான அணுகுமுறைக்கும் தாம் நம்பும் நிலைப்பாட்டை வெளிப்படையாக ஆதரிக்கும் உறுதிக்கும் இதுவோர் உதாரணம்.

***

நாடகம், சினிமாவைப் போலவே பத்திரிகைத் துறையில் அவர் வரநேர்ந்ததும் தற்செயலே. 'நீயெல்லாம் எழுதினா யார் படிப்பா?" என்று நண்பர்கள் உசுப்பேற்ற, மக்கள் ஆதரவைத்  தெரிந்து கொள்வதற்காக தன் பத்திரிகையின் துவக்கத்தைப் பற்றி பத்திரிகையில் விளம்பரம் செய்ய அமோகமான ஆதரவு. பிறகு 'துக்ளக்' பிறந்தது. சோவின் பரிமாணங்களில் 'துக்ளக்' முக்கியமான முகம்.

பெரும்பாலான ஊடகங்கள் அதிகாரத்தை அண்டி அதற்கு இணக்கமாக நின்று கொண்டிருந்த போது 'இண்டியன் எக்ஸ்பிரஸ்' போன்ற சில பத்திரிகைகள் மட்டுமே துணிச்சலுடன் இயங்கின. இந்த அரிய வரிசையில் 'துக்ளக்'கின் பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தாய் இருந்தது. எமர்ஜென்சி நடவடிக்கையை துணிவுடன் எதிர்த்தார். தணிக்கையாளர்களின் கண்காணிப்பை பல நகைச்சுவையான வழிகளில் சமாளித்து அவற்றை கேலிக்கூத்தாக்கினார். அச்சு ஊடகங்களில் 'புலனாய்வு இதழ்' என்கிற வகைமை இன்னமும் கூட நம்பகத்தன்மையுடன் கூடியதாக உருவாகாத நிலையில், வெற்று பரபரப்புகளையும் கிளர்ச்சிகளையும் அளித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு தரமான, முன்னோடி புலனாய்வு இதழாக 'துக்ளக்' திகழ்ந்தது.

தாம் நம்பும் கருத்துக்களின் பக்கம் நின்று வெளிப்படையாக எழுதும் துணிச்சல் அவருக்கு எப்போதும் இருந்தது. இதற்காக எவரை வேண்டுமானாலும்  விமர்சித்து எழுத  தயாராக இருந்தார். அவருடைய எழுத்தில் நையாண்டியும் ரசிக்கத்தக்க கேலியும் இருக்கும். எதிர் தரப்பை மூர்க்கமாக தாக்கும் வன்மம் இருக்காது. எனவே அவருடைய எழுத்தை எதிராளிகளும் ரசித்து படித்தனர். அவருடைய வெளிப்படைத்தன்மையே அவர் எழுத்தின் மீதான நம்பகத்தன்மையாக மாறியது. அரசியல் போக்குகளை தீர்க்கதரிசனத்துடன் யூகிக்கும் திறமை அவரிடம் இயல்பாக படிந்திருந்தது. அதற்கான காய் நகர்த்தல்களில் அவருடைய பங்களிப்பும் இருந்தது.


***

தாம் ஈடுபட்ட துறைகளில் தன்னம்பிக்கையுடன் கூடிய அலட்சியத்துடன் அவர் இறங்கியதைப் போலவே அவருடைய நடிப்பும் அமைந்திருந்தது. சோ-வை சிறந்த நடிகராக சொல்ல முடியாது. ஆனால் தம்மிடம் இயல்பாக படிந்திருந்த சாதுர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்தார். நாடக மேடையின் அதே நடிப்பையே திரையிலும் அவர் பெரும்பாலும் பிரதிபலித்தார். துவக்க காலக்கட்டத்தில் ஒரு வழக்கமான நகைச்சுவை நடிகருக்கான தோரணையே அவரிடம் இருந்தது. அரசியல் விமர்சகராக அவர் கவனிக்கப்பட்ட பிறகு அது தொடர்பான நகைச்சுவையை அங்கத பாணியில் திரையிலும் பிரதிபலித்தார். அவரே உருவாக்கிக் கொள்ளும் பல வசனங்கள், தொடர்புள்ள திரைப்படத்திற்கு சம்பந்தமேயில்லாமல் வெளியில் நீட்டிக் கொண்டிருந்தன. தமிழ் சினிமாவின் உருவாக்கத்தில் இருந்த பல பலவீனமான அம்சங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. வழக்கம் போல இந்த முரணையும்  இயக்குநர்களும் பார்வையாளர்களும் கணக்கில் கொள்ளவில்லை. அவர் முன்வைக்கும் ஒவ்வொரு கிண்டலையும் பொதுவான அல்லது அப்போதைய அரசியல் சூழலுடன் பொருத்திப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரமாக ஏற்றுக் கொண்டார்கள். இந்த வரவேற்பை சோவும் வலுவாக பயன்படுத்திக் கொண்டார்.

சில திரைப்படங்களில் 'சோ' மெட்ராஸ் பாஷை எனப்படும் வட்டார வழக்கு மொழியை பேசுபவராக நடித்தார். அது சினிமாவிற்கென்று உருவாக்கப்பட்ட நாடகத்தனமான நகலாக இருந்ததே அன்றி அசலான உச்சரிப்பை பின்பற்றவில்லை. 'நம்பிள்கி.. நிம்பிள்கி'.. என்று சேட்டுகள் பேசுவார்கள் என்று தமிழ் சினிமா உருவாக்கிய மலினமான சித்திரத்தை 'சோ'வின் பாணியும் உண்டாக்கியது. சந்திரபாபு, லூஸ் மோகன், கமல்ஹாசன் போன்று இதர சில நடிகர்களும் இந்த மோசமான சித்திரத்தின் பங்களிப்பாளர்களாக இருந்தார்கள்.

சுயபகடி என்பது சோ -வின் முக்கியமான அம்சம். இரக்கமேயில்லாமல் மற்றவர்களை கிண்டலடிப்பது போல தன்னையும் அதே போல் கிண்டலடித்துக் கொள்வார். உறுதியான தன்னம்பிக்கை உள்ளவர்களால்தான் தன்னையே பகடி செய்து கொள்ள முடியும். 'இனி மேல் நமக்கு நிறைய தீனி கிடைக்கும்' என்று இரண்டு கழுதைகள் பேசிக் கொள்வது போலத்தான் 'துக்ளக்'கின் முதல் அட்டைப்படக் கருத்து அமைந்திருந்தது. சோ திரைக்கதை எழுதிய திரைப்படங்களுள் ஒன்று 'நிறைகுடம்'. அதில் பத்திரிகையில் பணிபுரிவராக சோ நடிப்பார். அந்த ஊரின் பிரமுகர் ஒருவர் இறந்து விட்டதாக செய்தி போட்டு விடுவார். சம்பந்தப்பட்ட நபர் ஆத்திரத்துடன் பத்திரிகை அலுவலகத்திற்கு வந்து விசாரிப்பார். பத்திரிகையின் ஆசிரியரும் சோவிடம் விளக்கம் கேட்க, 'நம்ம பத்திரிகையோட பாலிசி என்ன, 'செய்திகளை முந்தித் தருவது'. அதனாலதான் இவர் மரணச் செய்தியை கொஞ்சம் முன்னால போட்டுட்டேன்' என்று நையாண்டித்தனமாக சமாளிப்பார்.

இன்னொரு திரைப்படத்தின் காட்சி. ஒரு ரவுடியிடம் சோ மாட்டிக் கொள்வார். 'அடிச்சிடுவியா' என ரவுடியை நோக்கி ஜம்பமாக கேட்பார். ரவுடி இவர் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட, 'ஏண்டா.. அடிப்பியா.. ன்னுதானே கேட்டேன். ஆமாம்னு சொல்ல வேண்டியதுதானே, ஏண்டா அடிச்சே?'  என்று அழாத குறையாக கேட்பார். பிற்காலத்தில் 'கைப்புள்ள'யாக வடிவேலு பல திரைப்படங்களில் நடித்ததற்கான முன்னோடிக் காட்சியிது.

***

தாம் சார்ந்திருக்கும் துறையைப் பற்றிய விமர்சனங்களை, புகார்களைள வெளியில் தெரிவிக்காமல் பாதுகாப்பாக இருப்பதுதான் பொதுவான வழக்கம். ஆனால் எதிலும் துணிச்சலாக இயங்கும் சோ, தமிழ் சினிமா உருவாக்க முறையின் அபத்தங்கள், அதிலுள்ள நடைமுறை பித்தலாட்டங்கள் போன்றவற்றையும் கூட அத்துறையில் இருந்த சமயத்திலேயே வெளிப்படையாக எழுதினார். 'திரையுலகைத் திரும்பிப் பார்க்கிறேன்' என்று அவர் எழுதிய சிறுநூலில் தமிழ் சினிமா இயங்குவதில்  உள்ள பல விஷயங்களை கேலியாகவும், அவை சீர்திருத்தப்பட வேண்டிய தீவிரமான அக்கறையுடனும் எழுதினார்.

குறுகிய வட்டமாக இருந்தாலும் தம்முடைய நண்பர்களின் மீது சோவிற்கு உறுதியான நம்பிக்கையும் உறவும் இருந்தது. 'ஒருவரின் அணுகுமுறையை, நடவடிக்கையை சில வருடங்களுக்கு மேலாகவும் கூட  நேரம் எடுத்துக் கொண்டு கவனிப்பேன். அவரை நண்பராக்கிக் கொண்ட பிறகு அவரைப் பற்றி எவர் தவறான கருத்துக்களை சொன்னாலும் கூட நம்பி விடமாட்டேன்' என்று தம்முடைய நட்புகளை பேணுவதில் சிறந்த முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். தம்முடைய நாடகங்களில் நண்பர்களைத் தவிர புதியவர்களை இணைத்துக் கொள்வதில்லை என்பது அவருடைய தீவிரமான நிலைப்பாடு. நண்பர்களுக்கு வயதாகி விட்ட பிறகு 'கல்லூரி மாணவர் போன்ற பாத்திரங்கள் அவர்களுக்குப் பொருந்தாது' என்கிற நடைமுறைக் காரணத்திற்காக, தமது நாடகக் குழு வெற்றிகரமாக  இயங்கிய நேரத்திலும் கூட அதைக் கலைத்து விட்டார். அரசியல் தலைவர்களிடம் அவருக்கிருந்த நெருக்கத்தை மனதில் கொண்டு நண்பர்கள் கேட்கும் சில பரிந்துரைகளை உறுதியாக மறுத்து விடும் நேர்மையும் அவரிடம் இருந்தது.

தம்முடைய ஸனாதன நம்பிக்கைகளையும் வலதுசாரித்தனமான கருத்துக்களையும் வெளிப்படையாக முன்வைக்க அவர் தயங்கியதில்லை. ஆனால் அது சார்ந்த இறுக்கமான பிடிப்போ, மூர்க்கமான பிடிவாதமோ அவரிடம் இருந்ததில்லை. 'பிராமணியம் பிறப்பாலல்ல, நடத்தையால் பெறப்படுவது' என்பது போன்ற கருத்துக்களை தயங்காமல் எழுதினார். 'பேசும் கொள்கையொன்று, நிழலாக செய்யும் காரியம் ஒன்று' என்று செயல்படும் பல பெரிய மனிதர்களின், அரசியல்வாதிகளின் மத்தியில் சோவின் இந்த நேர்மை பாராட்டத்தக்கதொன்று.

அவருடைய நிலைப்பாடுகளில், கருத்துகளில் பல சர்ச்சைகள் இருந்தன. அது தொடர்பான, கருத்து வேறுபாடுகளை, விமர்சனங்களை முன்வைப்பதற்கு நிச்சயமாக இடமுண்டு என்றாலும் எதையும் ஒளிக்காமல் வெளிப்படுத்தும் நேர்மை சோ என்கிற ஆளுமையின் பலங்களுள் முக்கியமானதாக இருந்தது. அனைத்து தரப்புகளுக்குமே தாம் நம்பும் கொள்கைகளின், நிலைப்பாடுகளின் பால் சார்ந்து தீவிரமாக இயங்கும் வெளியும் சுதந்திரமும் அனுமதிக்கப்பட்டாக வேண்டும். இந்த முரணியக்கம்தான் ஆரோக்கியமான ஜனநாயக அரசியலின் அடையாளம். அந்த வகையில் தன்னுடைய தரப்பு நம்பிக்கைகள் சார்ந்த துணிச்சலான கருத்துக்களை பத்திரிகை, சினிமா, அரசியல் போன்ற துறைகளில் கூர்மையான அங்கதத்துடன் முன்வைத்த சோ என்கிற ஆளுமையின் இயக்கம் அவரது மறைவின் மூலம் நின்று போனது தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பு. 

CHO SAD. 


(உயிர்மை இதழில் பிரசுரமானது)  
suresh kannan

No comments: