சுமார் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க இந்தியப் பெண். (சங்க இலக்கியத்தின் படி ‘அரிவை’ பருவத்தில் உள்ளவர்) நடைமுறை சார்ந்த கொச்சை மொழியில் ‘ஆண்ட்டி’ என்றோ, கெழவி என்றோ, ‘பெரிசு” என்றோ அழைக்கப்படுவதற்கான சாத்தியமுள்ளவர். கணவனை இழந்த பெண். எனவே விதவை.
இது போன்ற பெண்மணிகள் பொதுவாக என்னவெல்லாம் செய்ய வேண்டும், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என இந்த சமூகம் எதிர்பார்க்கும்?. வேளா வேளைக்கு கோயில் குளத்திற்குச் செல்லலாம், தொலைக்காட்சித் தொடர்களில் வரும் வில்லிகளைத் திட்டலாம், பொழுது போகவில்லையென்றால் மருமகளை சிறுமைப்படுத்திக் கொண்டே தன் அதிகாரத்தை நிறுவிக் கொண்டிருக்கலாம்
இவற்றையெல்லாம் அவர் செய்து கொண்டிருந்தால் இயல்பாக இயங்குகிறார் எனப் பொருள். … இல்லையா?..
ஆனால். இதற்கு மாறாக.. 55 வயது இந்தியப் பெண் ஒருவர் பொலிகாளை போன்ற இளைஞனுடன் தொலைபேசியில் காமரசம் சொட்ட பேசிக் கொண்டே சுயமைதுனம் செய்து கொண்டிருந்தால் அந்தக் காட்சி எவ்வாறான அதிர்வுகளை ஏற்படுத்தும்?
சே… என்ன ஒரு ஆபாசம்.. என்கிறீர்கள் என்றால் இது நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம். ஒரு முதிய ஆண் இளம் பெண்ணிடம் சரசம் செய்வதையும் திருமணம் செய்வதையும் கூட ஒருவகையில் இயல்பாக கொள்ளும் இந்தச் சமூகம் வயதான பெண்ணொருவர் இளம் ஆணிடம் தன் பாலியல் விழைவுகளை வெளிப்படுத்தினால் அதை விரசமாகவும் நகைச்சுவையாகவும் மட்டுமே பார்க்கிறது. முதியவர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு பாலியல் சார்ந்து தீராத ஏக்கமும் அதுசார்ந்த மனவுளைச்சலும் இருக்கிறது என்பதை நுட்பமான காட்சிகளின் வழியாக அழுத்தமாகச் சொன்ன திரைப்படம் - Lipstick Under My Burkha.
இத்திரைப்படத்தில் சித்தரிக்கப்படும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை மட்டுமே இது. இன்னமும் முடியவில்லை. வேறு மூன்று பெண்களைப் பற்றிய கதைகளின் இழைகளும் கலந்திருக்கின்றன. வயதான பெண்ணின் பாலியல் விழைவை சித்தரிக்கும் பாத்திரத்தில் ரத்னா பதக் (நஸ்ரூதின் ஷாவின் மனைவி) துணிச்சலான காட்சிகளில் அற்புதமாக நடித்துள்ளார்.
**
உலகமயமாக்கலுக்குப் பிறகு, பொருளியல் சுதந்திரம், அது சார்ந்த தன்னம்பிக்கை உள்ளிட்டு பல்வேறு விஷயங்களை நோக்கி பெண்ணுலகம் நகரத் துவங்கியிருக்கிறது. இது சார்ந்த சுயஅடையாளமும் தன்னிறைவும் பெண்களுக்கு ஏற்படத் துவங்கியிருக்கின்றன. இவ்வாறான போக்கு ஆணுலகத்திற்கு அச்சத்தையும் பதட்டத்தையும் தருகிறது. தங்களின் இதுவரையான அதிகாரம் மெல்ல கைநழுவிப் போவதை சகிக்க முடியாமல் இரும்புக்கரம் கொண்டாவது நசுக்கத் துடிக்கிறார்கள்.
மதம், ஆணாதிக்கம், பழமைவாதம், நவீனத்திற்கு நகர்தல், முதிர்வயதில் நிறைவேறாத பாலியல் ஏக்கம் உள்ளிட்ட காரணங்களால் அவதிப்படும் நான்கு பெண்களைப் பற்றிய திரைப்படம் இது. வெவ்வேறு வயதுகளில் உள்ள இந்த நான்கு பெண்களும் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றிய பெண்(கள்) மையத் திரைப்படம் இதுவென்று சொல்லலாம். ‘புர்கா’விற்குள் உதட்டுச்சாயம் என்கிற படத்தின் தலைப்பே நவீனத்திற்கும் பழமைவாதத்திற்கும் இடையிலான பெண்களின் கலாசார தத்தளிப்பை அழுத்தமாக சுட்டிக்காட்டி விடுகிறது.
Alankrita Shrivastava என்கிற பெண் இயக்குநர் உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைவிழாக்களில் திரையிடப்பட்டதோடு ‘பெண் சமத்துவம் பேசும் படைப்பு’ என்கிற பிரிவில் விருதுகளையும் பெற்றுள்ளது.
துவக்க கட்டத்தில், இந்தியாவில் இந்தப் படைப்பை திரையிடுவதற்கான அனுமதியை சென்சார் போர்டு தர மறுத்து விட்டது. ‘அதீதமான பாலியல் காட்சிகள், ஆட்சேபகரமான வார்த்தைகள், Phone Sex, இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த பெண் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம்’ போன்றவை சமூகத்தில் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. மேல் முறையீட்டிற்குப் பின், ஆட்சேபகரமான இடங்களில் காட்சிகளும் வசனங்களும் நீக்கப்பட்ட பிறகே இங்கு வெளியாகும் அனுமதி கிடைத்தது. இயக்குநரும் தயாரிப்பாளரும் தணிக்கைத்துறையுடன் மிக நீண்டதொரு போராட்டத்தை இதற்காக நிகழ்த்த வேண்டியிருந்தது.
பாலியல் சார்ந்த மனப்புழுக்கங்களும் பெருமூச்சுகளும் குற்றங்களும் நிறைந்திருக்கும் இந்தியா போன்ற தேசங்களில் அவர்களைப் பற்றிய சரியான சித்திரங்களின் நகல்களை திரையில் காட்டுவதற்கான சூழல் கூட இல்லாதபடியான கண்காணிப்பும், பழமைவாத மனோபாவமும் நிறைந்துள்ள சமூகப் போக்கு துரதிர்ஷ்டமானது.
‘A’ சான்றிதழ் என்பது வயது முதிர்ச்சியை மாத்திரம் சுட்டவில்லை, அதனுடன் இணைந்து வளர்ந்திருக்க வேண்டிய மனமுதிர்ச்சியையே பிரதானமாக சுட்டுகிறது. ஆனால் அவ்வாறான அகமுதிர்ச்சியைக் கொண்ட மக்களின் சதவீதம் என்பது இந்தியாவில் குறைவு. பொதுச்சமூகத்தில் மட்டுமல்ல, தணிக்கைத் துறையில் இருப்பவர்களுக்கு கூட இது சார்ந்த முதிர்ச்சி குறைவு என்பதையே இது போன்ற தணிக்கை நடவடிக்கைகள் காட்டுகின்றன.
**
போபால் நகரம். நெரிசலான சாலையில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடம் ‘Hawai Manzil’. அந்தக் கட்டிடத்தில் குடியிருக்கும் வெவ்வேறு குடும்பங்களைச் சார்ந்த, வெவ்வேறு வயதுகளில் உள்ள நான்கு பெண்களின் கதை இது. கட்டிடத்தின் உரிமையாளர் ‘Usha Buaji. 55 வயதான பெண்மணி. விதவை. ஆன்மீகப் புத்தகத்தின் உள்ளே பாலியல் கதைப் புத்தகங்களை ஒளித்து வைத்து படிப்பவர். இவர் வாசிக்கும் பாலியல் கதைகளின் நாயகி ‘ரோஸி’. கதைகளில் விவரிக்கப்படும் பாலியல் விவரணைகளின் வழியாக தன்னையே அந்த ரோஸியாக நினைத்துக் கொள்கிறார் உஷா. இவரின் இந்த முகம் எவரும் அறியாதது.
பேரனை நீச்சல் வகுப்பிற்கு அழைத்துச் செல்லும் போதுதான் கட்டழகுடன் இருக்கும் நீச்சல் பயிற்சிதரும் அந்த இளைஞனைப் பார்க்கிறார். தான் வாசிக்கும் கதைகளில் வரும் நாயகனைப் போலவே அவன் இருக்கிறான். எனவே தானும் நீச்சல் வகுப்பில் சேர்கிறார். அவன் மீதுள்ள ஈர்ப்பைச் சொல்ல உள்ளூற தயக்கம். இந்தியப் பெண்களுக்கே உள்ள ஆசாரமனம் சார்ந்த அச்சமும் வெட்கமும் அவரைத் தடுக்கிறது.
எனவே ஓர் உபாயம் செய்கிறார். கதையில் வரும் நாயகியான ‘ரோஸி’ என்கிற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டு இளைஞனுடன் தினமும் தொலைபேசியில் பேசுகிறார். ‘யாரோ ஒரு இளம்பெண்’ என நினைத்துக் கொண்டு அவனும் பேசுகிறான். ஏக்கப் பெருமூச்சுகளை வரவழைக்கும் பாலியல் சார்ந்த உரையாடல்கள்.
கடைசியில் குட்டு அம்பலப்பட்டு உஷா. தனது குடும்பத்தாரால் சாலையின் நடுவே தள்ளப்படுகிறார். “கிழவி.. இதெல்லாம் உனக்குத் தேவையா?’ ஆசாரப் பெண்மணியாக இருந்த சமயத்தில் கட்டிடத்தை விற்கலாமா வேண்டாமா என்கிற முக்கியமான முடிவு முதற்கொண்டு உஷாதான் எல்லாவற்றையும் தீர்மானம் செய்வார். கடினமான சிக்கல்களைக் கூட துணிவுடன் எதிர்த்து நிற்பார். இவரின் பிள்ளைகள் இவர் சொல்லுக்கு மறுசொல் பேச முடியாமல் திகைத்து நிற்பார்கள்.
ஆனால் இவருடைய பாலியல் விழைவு விஷயம் தெரிய வந்த ஒரே கணத்தில் இவரின் நிலைமை தலைகீழாகி விடுகிறது. மகன்கள் இழிவாகப் பேசுகின்றனர் மருமகள்கள் வெறுப்பாக பார்க்கின்றனர். நீச்சல் பயிற்சி இளைஞனும், தான் ஏமாந்த வெறுப்போடு … கிழவி.. உன் குரலைக் கேட்டா ஏமாந்தேன்?’ என்று அருவருப்பாக பார்க்கிறான். அவள் வாசித்த பாலியல் கதைப்புத்தகங்கள் கிழித்து வெளியே எறியப்படுகின்றன. அவரும் வீட்டிற்கு வெளியே தள்ளப்படுகிறார். அதுவரை மூடி வைக்கப்பட்ட உஷாவின் ரகசிய ஆசைகளைப் போலவே கிழித்தெறியப்பட்ட தாள்களும் காற்றில் நிர்வாணமாக பறக்கின்றன.
தன் ஆதாரமான இச்சைகளை அடக்கிக் கொண்டு, ஆணாதிக்க கருத்தாக்கமான ‘கற்பு’ எனும் நெறியை பின்பற்றும் வரைதான் ஓர் இந்திய பெண்ணின் மதிப்பும் செல்வாக்கும் நீடிக்கிறது. அது விதவையானாலும் சரி, திருமணம் ஆகாத முதிர்கன்னிகளாக இருந்தாலும் சரி, பாலியல் சார்ந்த ஏக்கங்களை மறைத்துக் கொள்ளும் வரைதான் ஆண்கள் உலகம் அவர்களை சிலை வைத்து வழிபடுகிறது. அவைகளில் இருந்து ஒரு துளி பிசகினாலும் குப்பைத் தொட்டியில் எடுத்து வீசுகிறது. கற்புதான் ஒரு பெண்ணின் மதிப்பிற்கான அளவுகோலா என்கிற அழுத்தமான கேள்வியை இந்தப் பகுதி உணர்த்துகிறது. முதியவர்களின் காமம் ஏன் நகைச்சுவையாகவும் தகாததாகவும் பார்க்கப்படுகிறது என்கிற கேள்வியும்.
உஷாவின் அதே வயதுள்ள ஓர் ஆண் தன் துணையை இழந்தவுடன் இரண்டாம் திருமணம் பற்றிய பேச்சு இயல்பாக வருகிறது. ஆனால் வயதான பெண்ணுக்கு திருமணம் என்றாலோ துணை என்றாலோ முகஞ்சுளிக்கும் நிலைமைதான் நீடிக்கிறது.
**
நீச்சல் வகுப்பில் சேர்வதற்காக தனக்கேற்ற நீச்சல் உடை ஒன்றை அச்சமும் திகைப்புமாக உஷா வாங்கும் காட்சியொன்று வருகிறது. ஆனால் அது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல என்பதை தொடர்புள்ள காட்சிகள் அவல நகைச்சுவையுடன் விவரிக்கின்றன. இதற்குத் தொடர்பாக தமிழ் திரைப்படத்தின் காட்சியொன்றும் எனக்கு நினைவிற்கு வருகிறது. ‘காஞ்சனா’ திரைப்படத்தில், நாயகனின் தாயான கோவை சரளா, இளம்பெண் அணியும் ஸ்விம் சூட் ஒன்றைப் பார்த்து “இதை நான் அணிந்தால் எப்படியிருக்கும்?” என்று கேட்கிறார். உடனே பழைய திரையிசைப்பாட்டு ஒன்று பின்னணியில் ஒலிக்க, அவர் அந்த உடையுடன் நீச்சல் குளத்தில் நீந்துவது போன்ற காட்சி நகைச்சுவை நோக்கில் காட்டப்படுகிறது.
மேல்தட்டு வர்க்கத்தினர் அல்லாமல் இதர சமூகத்தின் பெண்கள் நீச்சல் பழக வேண்டுமெனில் அது சார்ந்த வெளியோ, கலாசாரமோ இங்கு இல்லை. ஒரு சராசரியான இந்தியப் பெண்மணி நீச்சல் கற்றுக் கொள்வதற்கான அவசியமே இங்கு இல்லையா? இப்படியான அடிப்படையான விருப்பங்கள் கூட ஏன் மறுக்கப்படுகின்றன? ஏன் அவை நகைச்சுவையுடன் பார்க்கப்படுகிறது? புடவையுடன் நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா என்ன?
இப்படி பல கேள்விகளை இது தொடர்பான காட்சிகள் எழுப்புகின்றன.
**
Rehana Abidi ஒரு கல்லூரி மாணவி. இஸ்லாமியக் குடும்பம். கல்லூரி நேரம் முடிந்ததும் தந்தை நடத்தும் கடையில் வந்து மாங்கு மாங்கென்று ‘புர்கா’ தைக்க வேண்டும். தையல் கடையின் மூலம்தான் குடும்ப வருமானம். இஸ்லாமியச் சமூகத்திற்கென்று உள்ள பிரத்யேகமான கட்டுப்பாடுகள் உள்ள ரெஹ்னாவிற்கு ரகசியமான ஆசைகள் பல உள்ளன.
அவள் மனதிற்குள் வாழ்வது வேறு உலகத்தில். மேற்கத்திய கலாசாரத்தைச் சார்ந்த உலகம். அமெரிக்கப் பாடகி Miley Cyrus தான் அவளுடைய ஆதர்சம். அதைப் போலவே தானும் ஒரு இசைப்பாடகி ஆட வேண்டுமென்று விருப்பம். கல்லூரிக்குச் செல்லும் வழியில் தான் அணிந்திருக்கும் புர்காவை கழற்றி விட்டு ஜீன்ஸ் உள்ளிட்ட நவீன ஆடைகளை அணிந்து கொள்வாள்.
வீட்டாரிடம் இப்படியான பொருட்களை வாங்கித் தர கேட்க முடியாது என்பதால் ஷாப்பிங் மால் சென்று லிப்ஸ்ட்டிக் உள்ளிட்ட பொருட்களை களவாடுகிறாள். மேல்தட்டு வர்க்கத்தைச் சார்ந்த மாணவர்களிடம் சிரமப்பட்டு தன்னைப் பொருத்திக் கொள்ள நினைக்கிறாள். ‘இத்தனை சின்ன ஊரில் Miley Cyrus பற்றி அறிந்த ஒருத்தி இருப்பாள் என்பதே எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது’ என்கிற ஆண் நண்பனால் ஈர்க்கப்படுகிறாள்.
புகைப்பிடிக்கவும் மதுவருந்தவும் கற்றுக் கொள்கிறாள். கல்லூரியில் ஜீன்ஸிற்கு தடைவிதிக்கும் போது அது சார்ந்த போராட்டத்தில் சென்று சிறைக்குச் செல்கிறாள். கோபமடையும் தகப்பனிடம் எப்படியோ சமாளித்தாலும் வீட்டில் சிறை வைக்கப்படுகிறாள். தன் ஆண் நண்பனால் கலைக்கப்படுவதற்கு முன்பு சட்டென்று விழித்துக் கொண்டு வீடு திரும்புகிறாள்.
பெற்றோரால் அறைக்குள் தள்ளப்பட்டதும் பின்னணி இசையே இல்லாமல் ஆவேசமாக இவள் நடனமாடும் காட்சி ஒன்றே, இவளது பாத்திரத்தை வலிமையாக நிறுவுகிறது. ரெஹ்னாவாக Plabita Borthakur அற்புதமாக நடித்துள்ளார்.
**
மூன்றாவது பெண் லீலா. தந்தையால் கைவிடப்பட்ட குடும்பம். தாய் ஓவியக்கல்லூரியில் நிர்வாண மாடல். லீலாவிற்கு அந்த சிறிய நகரத்திற்குள் அடைபட்டிருப்பது பிடிக்கவில்லை. டெல்லிதான் அவளது கனவு. திருமண நிறுவனம் ஒன்றைத் துவங்கி வெற்றியடைய வேண்டும் என்று போராடுகிறாள். ஹனிமூன் செல்லும் தம்பதிகளுடன் கூடவே சென்று சிறந்த ஒப்பனையுடன் அவர்களை புகைப்படம் எடுத்து தரும் அவளுடைய புதுமையான திட்டம் அத்தனை வரவேற்கப்படுவதில்லை.
தன்னுடைய ஆண் நண்பனும் வணிக கூட்டாளியுமான ஹர்ஷத் என்கிற புகைப்படக்காரனுடன் அவளுக்கு உடல்ரீதியான தொடர்பும் உண்டு. ஆனால் வீட்டில் வேறு இடத்தில் திருமணம் நிச்சயித்து விடுகிறார்கள். நிச்சய நாள் அன்று புது மணமகன் வீட்டின் ஒருபுறம் அமர்ந்திருக்க, இன்னொரு இருட்டு மூலையில் காதலனுடன் உறவு கொள்கிறாள். அதனை வீடியோவும் எடுத்து வைத்துக் கொள்கிறாள். ‘மவனே.. என்னை விட்டுட்டுப் போயிடலாம்’னு நெனச்சே’ இதுதான் சாட்சி. பார்த்துக்கோ’
ஒருபுறம் திருமண ஏற்பாடுகள் நடந்தாலும் தன் காதலனுடன் ரகசியமாக டெல்லிக்கு ஓடிச் சென்று புது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது அவளுடைய ஏற்பாடு. ஆனால் இருவருக்குள் ஏற்படும் சண்டை தடையாக வந்து நிற்கிறது. இவளுடைய தீராத அன்பை புரிந்து கொள்ளாத அவன், ‘உனக்கு செக்ஸ்தான் முக்கியமா?’ என்று கேட்டு அவமானப்படுத்தி விடுகிறான். வேறு வழியில்லாமல் நிச்சயிக்கப்பட்ட மணமகன் பக்கம் வந்து நிற்கிறாள். ஆனால் காதலன் மீண்டும் வந்து அழைக்கிறான். இருபக்கமான தத்தளிப்பு வீடியோக்காட்சி வெளிப்படுவதின் மூலம் முடிவிற்கு வருகிறது. லீலாவாக Aahana Kumra துணிச்சலான காட்சிகளில் நடித்துள்ளார்.
**
Shireen Aslam என்கிற இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த குடும்பத்தலைவியாக நடித்துள்ளவர், பிரபல நடிகை கொன்கொனா சென். மூன்று மகன்கள். ஆனால் தாம்பத்யம் என்பதை இவர் முறையாக அனுபவித்தது இல்லை. இவளுடைய கணவன் பாலியல் இயந்திரத்தைப் போலவே இவளைப் பயன்படுத்துவான். வருவான். பிஸ்டன் பம்பு போல இயங்குவான். சென்று விடுவான். அவ்வளவுதான். இவளுடைய தனிப்பட்ட உணர்ச்சிகளைப் பற்றியோ ஆசைகளைப் பற்றியோ அக்கறை கொள்ளாத இந்திய ஆணின் பிரதிநிதி. ஆசையாக முத்தம் கூட கொடுத்தது கிடையாது. முத்தம் கூட இல்லாத கலவி நரகம்தானே? பலமுறை அபார்ஷன் ஆவதால் இவளது உடல்நலம் கெடுகிறது.
கணவன் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிவதாகச் சொன்னாலும் சரியான வேலை கிடையாது. இவள்தான் குடும்பத்தின் செலவை பார்த்துக் கொள்கிறாள். இவள் வீடு வீடாகச் சென்று சேல்ஸ் கேர்ள் வேலை செய்வது கணவனுக்குத் தெரியாது. கிளினிக்கில் பணிபுரிவதாகச் சொல்லி வைத்திருக்கிறாள்.
கணவனாகப்பட்ட ஆசாமி பிள்ளைகளிடம் கூட சிரித்துப் பேச மாட்டான். சட்டென்று எரிந்து விழுவான். எந்த நேரத்தில் கோபப்படுவான் என்று தெரியாமல் வெடிகுண்டுடன் பழகுவது போலவே அவனுடன் இருக்க வேண்டும். அழைத்த நேரத்தில் படுக்கையில் தயாராக இருக்க வேண்டும். இவளுடைய பதவி உயர்வு பற்றிக் கூட அவனிடம் சொல்லத் தயக்கமாக இருக்கிறது. நிச்சயம் கோபப்படுவான்.
ஒரு சராசரியான இந்தியப் பெண் படும் அத்தனை அவலங்களையும் இவருடைய பாத்திரம் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது. தனக்குத் தெரியாமல் கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைய நேர்கிறது. அதற்கும் கலங்காமல் தன் சமயோசித புத்தியால் அந்தச் சிக்கலைத் தீர்க்கிறாள். தன் சொந்த பிரச்சினையில் தலையிட்டது, பதவி உயர்வின் மூலம் தன்னை விடவும் அதிகம் சம்பாதிப்பது ஆகிய இரண்டு தவறுகளுக்காகவும் கணவன் இவளுக்குத் தண்டனை தருகிறான். எப்படி? அதே கொடூரமான வன்கலவி.
**
இது பெண் மையத்திரைப்படம்தான் என்றாலும் அது சார்ந்த உரத்த அழுகைகளோ, கேவல்களோ, மிகையான சித்திரங்களோ என்று எதுவுமே இந்த திரைப்படத்தில் கிடையாது. விதம் விதமான நான்கு பெண் பாத்திரங்களையும் அவர்களின் பிரத்யேகமான, இயல்பான உலகில் இயங்க வைப்பதின் மூலமாக ஒட்டுமொத்த இந்தியப் பெண்களின் சித்திரத்தை சரியாக வரைந்து விடுகிறார் இயக்குநர்.
பொதுவாக பெண் மையத் திரைப்படங்கள் என்றால் அவர்கள் ஆணுலகத்தால் விதம் விதமாக கொடுமைப்படுத்தப்படுவதான காட்சிகளும், பெண்களின் மீது பார்வையாளர்களின் அனுதாபத்தை கோருவதான காட்சிகளும் அமைந்திருக்கும். ஆனால் இதில் சித்தரிக்கப்படும் பெண்களின் ஆசைகளும் கனவுகளும் இந்தியக் கலாசாரத்தின் நோக்கிலும் ஆண்களின் பார்வையிலும் ஆபாசமானவை, பொருந்தாதவை. ‘இதெல்லாம் தேவையா, கொழுப்புதானே?’ என்று ஆணுலகை கேட்க வைப்பவை. ஏன் பழமைவாத அறியாமையில் ஊறிப் போயிருக்கும் பெண்கள் கூட ஆட்சேபிப்பவைதான். ஆனால் ஆண்கள் மிக இயல்பாக அனுபவித்துக் கொண்டிருக்கும் விஷயங்கள்தான் அவை.
இப்படியான கனவுகளை சித்தரிப்பதின் மூலம் இயக்குநரும் அதையேதான் பார்வையாளர்களை கேட்க முயல்கிறார். ஆண்களின் உலகம் சில ஆதாரமான இச்சைகளை, விருப்பங்களை தன்னியல்பாகவும் சுதந்திரமாகவும் அடையும் போது அதே போன்ற ஆசைகள், கனவுகள் பெண்களுக்கு மட்டும் மறுக்கப்படுவது ஏன்?
லிப்ஸ்டிக், ஜீன்ஸ் போட்டுக் கொள்வது, தனக்குப் பிடித்தமான இளைஞனோடு பெருநகரத்தில் வாழ நினைப்பது, முதிர்வயது காமத்தை இயல்பாக அடைய நினைப்பது, முரட்டுக் கணவனை சாராமல் பொருளாதார சுதந்திரத்துடன் இருப்பது, எவ்வித தொந்தரவுகளும் இன்றி கட்டிலில் நிம்மதியாக தூங்குவது, திருமணம் என்கிற பெயரில் தன் உடல் மீது நிகழ்த்தப்படும் பலாத்காரத்தில் இருந்து தப்பிப்பது, இசைப்பாடகியாவது ..
என்று பெண்களுக்கு பல அடிப்படையான கனவுகள் இருக்கின்றன. ஆனால் ஆணாதிக்கம் விதித்திருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளால், அவர்களின் ஒவ்வொரு சிறிய கனவும் மிதிக்கப்பட்டு நசுக்கப்படுகின்றன. எனில் தனக்காக வாழாமல் அனைத்து ஆசைகளையும் அடக்கிக் கொண்டு ஆண்களால் அனுமதிக்கப்பட்ட சிறிய உலகில் வாழ்ந்து மடிய வேண்டுமா என்கிற ஆதாரமான கேள்வியை இத்திரைப்படம் வலிமையாக எழுப்புகிறது.
இயக்குநர் Alankrita Shrivastava இந்தக் கேள்விகளை நேரடியாக எந்தவொரு இடத்திலும் எழுப்பவில்லை. ஆனால் பார்க்கும் ஆண்களின் சமூகம் மனம் கூசி தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ளும் வகையில் இத்திரைப்படத்தை இயல்பான காட்சிகளுடன் உருவாக்கியுள்ளார். தங்களின் அடிப்படையான கனவுகள், விருப்பங்கள் பறிபோவதைப் பற்றிக் கூட அறியாமையுடன் இருக்கும் பெண்கள், ‘அட ஆமாம்ல’ என்று தான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை வியக்கும் காட்சிகளும் இருக்கின்றன.
ஆண்களின் உலகத்தால் தங்களின் கனவுகள் நசுக்கப்பட்ட நான்கு பெண்களும் இணைந்து கிழித்து எறியப்பட்ட பாலியல் கதைப்புத்தகத்தின் பக்கங்களை புகைப்பிடித்துக் கொண்டே வாசிப்பதுடன் படம் நிறைகிறது. அவர்கள் ஊதும் புகை, ஓர் எள்ளலாக ஆணுலகத்தின் மீது சென்று விழுகிறது.
ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என்று நேர்த்தியான தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணியுடன் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. திணிக்கப்பட்ட ஆபாசம் என்று எதுவுமில்லை. பார்வையாளர்களை அதிர்ச்சியடையச் செய்யும் கோளாறான உத்திகளும் இல்லை. பின் எதற்காக தணிக்கைத் துறை அதிர்ச்சியடைந்து இதைச் தடை செய்யவும், 16 இடங்களை வெட்டிய பிறகு காட்சிப்படுத்தவும் அனுமதி தந்தது?
தணிக்கைத் துறையில் இருப்பவர்களும் பெரும்பாலும் ஆண்கள்தானே. நிச்சயம் உள்ளூற பதட்டமும் அதிர்ச்சியும் அடைந்திருப்பார்கள். அதுவே ஒருவகையில் இத்திரைப்படத்தின் வெற்றி.

suresh kannan
1 comment:
Very Good Analysis....This one is the real feminine movie. Not movies like 90ml!!!!
Post a Comment